வடக்கு – கிழக்கு உயிர்ப் பல்வகைமை : ஓர் அறிமுகம்
Arts
9 நிமிட வாசிப்பு

வடக்கு – கிழக்கு உயிர்ப் பல்வகைமை : ஓர் அறிமுகம்

September 16, 2023 | Ezhuna

எமது சுற்றாடல் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இக் கூறுகளின் ஒருங்கிணைந்த மற்றும் ஒருங்கமைந்த செயற்பாடுகளே சுற்றாடலின் நிலைபேறான அபிவிருத்தியில் பங்காற்றும். மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் சுற்றாடல் பற்றி சரிவர அறிந்துகொள்ளப்படுதலும் சிறப்பான வழிமுறைகளில் பயன்படுத்தலும் இக்கூறுகளை பேணிப்பாதுகாத்தலும் முக்கியமானவைகள். அந்த வகையில் வடக்கு-கிழக்கு அபிவிருத்தியில் உயிர்ப்பல்வகைமையின் பங்களிப்பு பற்றிய பயனுள்ள கருத்துகளை ‘வடக்கு–கிழக்கு பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ எனும் இக் கட்டுரைத் தொடர் தாங்கிவருகின்றது.

கிழக்குக்கரையின் அம்பாறை தொடங்கி வடமேற்குக் கரையின் புத்தளம் வரை கடற்கரையோரங்களை உள்ளடக்கிய நிலம், நீர்நிலைகள், காடு என்பன உள்ளடங்கலாக ஐவகை நிலங்களை உள்ளடக்கியதே வடக்கு – கிழக்குபிரதேசமாகும். பாரம்பரிய வரலாறுகள், நிகழ்வுகள், இடப்பெயர்வுகள், விவசாய அபிவிருத்திகள் என்பனவற்றை உள்ளடக்கி இலங்கையின் அபிவிருத்தியில் பெரும்பங்காற்றிவருகின்றது இந்தப் பிராந்தியம். பூகோள அமைப்பின்படி, கடலோரங்களையும் ஐவகை நிலங்களையும் கொண்ட இப் பாரம்பரிய பிரதேசம் பலநூற்றாண்டுகாலமாக அழிவடையாமல் இருப்பது பெரும்பேறாகும். இயற்கை அனர்த்தங்கள், மனிதச் செயற்பாடுகள், காலநிலைமாற்றங்கள் போன்றனவற்றுக்கு தாங்கிப்பிடித்து தலைநிமிர்ந்து நிற்கிறது இப்பிரதேசம். குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்பவற்றில் இயைபோடு வாழும் இப் பிரதேச உயிரினங்களில் சில அழிவுக்குட்பட்டிருந்தாலும், பல உயிரினங்கள் சூழலுடன் ஒன்றுபட்டுக் காணப்படுதலே இப்பிரதேசத்தின் தனித்துவம். வடக்கு – கிழக்கின் வடமாநிலப் பூவானது வெண்தாமரை (Nymphaea lotus) ஆகும். இப் பிரதேசத்திற்குரிய மரமானது மருதமரம் (Terminalia elliptica) ஆகும். பல்வகைப்பட்ட விலங்கு வகைகள் காணப்பட்டாலும் இப்பிரதேசத்துக்குரிய விலங்காக கண்டறியப்பட்டது புள்ளிமான் ஆகும். சுற்றாடலில் காணப்படும் அழகான குட்டிப் பறவையான புளினியே (Turdoides striatus) இப் பிரதேசத்துக்குரிய பறவையாகும். இது ஆங்கிலத்தில் Seven sisters  என அழைக்கப்படும். ஏனெனில் ஒரு கூட்டப் புளினியில் 7 பறவைகளைக் காணமுடியும். எண்ணற்ற அழகான  வண்ணத்துப்பூச்சிகள் எமது பிரதேசத்தில் காணப்பட்டாலும் பெரிய கொய்யா நீல வண்ணாத்துப்பூச்சிகள் (Virachola perse) எமது பிரதேசத்துக்குரியவை. இவை தனித்துவமானவை ஆகும்.

Regional trees and animals

மன்னார், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறையின் சில பகுதிகள் இவ் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் உள்ளடங்கும். பரந்துபட்ட இப்பிரதேசத்தில் கடற்றொழில், விவசாயம், காடுசார் தொழிற்றுறைகள், குளங்களை அண்டிய குடியேற்றங்கள், ஆறுகளையொட்டிய அபிவிருத்தி என்பனவற்றில் பல்வகைத்தன்மையினைக் காணமுடியும். இம் மாவட்டங்களில் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களிடையில் அநேக விடயங்களில் ஒற்றுமையுண்டு. இருப்பினும் தனித்துவமான வேறுபாடுகளும் உண்டு. உயிர்ப் பல்வகைமையில் மனித சமுதாயம் பெரும்பங்காற்றுகின்றது. இவ் வகையில் எம்மவர்க்கிடையே தனித்துவமான வேறுபாடுகள் நிலவுகின்றன. மொழிவழக்கு, உணவுப் பழக்கவழக்கங்கள், செயலாற்றும் திறன், அறிவாற்றல் போன்றனவற்றில் வேறுபாடுகள் தெளிவானவை.  ஓரிடத்திலிருந்து பிரிந்துசென்று வாழ்ந்து, வெவ்வேறு இடங்களில் குடியேறியிருப்பதாக வரலாறுகள் காட்டிநிற்பினும் அப் பிரதேசங்களுக்கான வேறுபாடுகளை மரபுரீதியாகப் பெற்றிருக்கமுடியும். மனித சமுதாயத்தின் இவ் வகை வேறுபாடுகளை உதாரணமாக்கி பல்வகைமைக்குள் உள்நுழைவோம்.

பல்வகைமை

Batti lagoon

உயிரற்ற, உயிருள்ள எல்லாவற்றினுடைய பல்வகைமையும் வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் அதிகளவிலேயே காணப்படுகிறது. உயிரற்றவைகளின் பல்வகைமையானது மண், கடல், நன்னீர், பாறைகள், கனிமங்கள், மற்றும் காற்றுப் போன்றனவற்றில் வேறுபடுகின்றன. சில ஆறுகளும் வடக்கு – கிழக்கில் அமைந்துள்ளதால் இவற்றோடு அண்டிய பல்வகைமைத் தன்மைகளும் காணப்படுகின்றன. முருகைக்கற்பாறை மற்றும் கல்சியப் பாறை என்பவற்றை உள்ளடக்கிய பல்வேறுவகைப்பட்ட வாழ்விடங்கள் இப் பல்வகைமைத்தன்மையில் பெரும் பங்காற்றுகின்றது. மேடு பள்ளமுள்ள தரை, பழைய கடற்கரை, ஆற்றோரத்தை அண்டிய நீர்நிலைகள், மணல்மேடுகள் மற்றும் சுண்ணக்கற்பாறைகள் என விரிந்துபட்டு செல்கின்றது இப்பல்வகைமை. இவ் உயிரற்ற பொருட்களின் அல்லது உயிரற்ற அமைப்புகளின் சார்பாகவே உயிர்ப்பல்வகைமைகள் வேறுபடுகின்றன. உதாரணமாக, இப்பாறைகளிலிருந்து வழிந்தோடி சேரும் நீர்நிலைகளின் தன்மை வேறுபடுவதால் இந் நீர்நிலைகளில் காணப்படும் உயிரினங்களின் வேறுபாடு கணிசமானதாகும்.

delft

உயிரியல் பல்வகைமை என்பது மக்கள் இயற்கையோடு ஒட்டிய உயிரினங்கள் காடுசார் உயிரினங்கள், அரிதான காடுகள் என்பவற்றில் வாழும் பல்வேறு வகைப்பட்ட உயிரினங்களின் கூட்டுத்தொகையை குறித்து நிற்கும். சர்வதேச உயிரியல் மற்றும் உயிர்ப்பல்வகைமை சம்பந்தமான வரைவிலக்கணத்தின்படி, கடல் மற்றும் நன்னீர் சூழல் தொகுதிகளில் காணப்படும் சிறிய அங்கிகளிலிருந்து பெரிய அங்கிகள் வரை, பரந்துபட்ட வேறுபாடுகளைக் காட்டும் சூழல் தொகுதிகளை உள்ளடக்கியதே உயிர்ப்பல்வகைமை எனப்படுகின்றது. பல்வேறுவகைப்பட்ட வரைவிலக்கணங்கள் உயிர்ப்பல்வகைமை தொடர்பில் உள்ளன. பரம்பரை அலகிலிருந்து இனம் மற்றும் சாகியம் என்பவற்றை உள்ளடக்கிய உயிரியற் தொகுதி பரம்பரையியல் வேறுபாடானது, நிறமூர்த்தங்களின் அடிப்படையில் வேறுபடுகிறது. இனங்களின் வேறுபாடு எனும் போது குறித்த பிரதேசத்தில் வாழும் இனங்களுக்கிடையிலுள்ள வேறுபாட்டை சுட்டி நிற்கிறது. இவ்வினங்களின் எண்ணிக்கையின் தன்மையில் இப் பல்வகைமை அளக்கப்படுகிறது. இன்னொருவகையில் இப்பல்வகைமையின் வகையீட்டு வேறுபாடு மற்றும் அவற்றுக்கிடையிலான தொடர்புகள் என்பனவற்றையும் சுட்டிநிற்கிறது. இப் பல்வேறுவகைப்பட்ட வரைவிலக்கணங்களுக்குள் அடக்கப்படுபவை யாதெனில் உயிரற்ற சடப்பொருள்களுடன் தொடர்புபட்ட உயிரினங்களின் வாழ்வியல் தொகுதிகளில் உண்டாக்கியிருக்கும் பரம்பரை அலகுகளிடமிருந்தும் இனங்களிடமிருந்தும் மற்றும் கணங்களிலிருந்தும் வேறுபட்டு நிற்கும் உயிரிருள்ள பொருள்களின் எண்ணிக்கை, தொடர்பு, சமநிலை என்பன ஆகும்.

இவ்வகையில் சுற்றாடலில் குறித்த வாழ்விடங்களில் காணப்படும் உயிரினங்களின் கூட்டுத்தொகை உயிர்ப்பல்வகைமை என்று கருதப்படுகிறது. பெருவிருட்சங்களிலிருந்து கண்ணுக்குத் தெரியா தாவரங்கள் வரை, மிருகங்களிலிருந்து மிகச்சிறிய பூச்சிகள் வரை கண்ணுக்கெட்டா அளவில் சிறிதாக வாழும் நுண்ணுயிர்கள் உட்பட அனைத்தும் இவ் உயிர்த் தொகுதிக்குள் உள்வாங்கப்படுகின்றது. இப் பெரும் பரம்பலின் பரிணாமம் பற்றிய முழுமையான அறிவை இன்னும் பூரணமாக அறிந்துகொள்ள முடியவில்லை. மாறிக்கொண்டிருக்கும் இப்பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் அகப்படுவது உற்றுநோக்கப்பட வேண்டும். மிகப்பெரிய இரு பிரிவுகளாக இவ் உயிர்த்தொகுதி பிரிக்கப்பட்டுள்ளது. தாவரங்கள், விலங்குகள் என இப்பிரிவுகள் அறியப்பட்டுள்ளன. பச்சையம் உள்ளவை தாவரங்களென்றும் பச்சையம் அற்றவை விலங்குகள் என்றும் ஒரு வகைப்படுத்தலுண்டு. இவை இரு பிரிவுக்கும் உட்படாத நுண்ணுயிர்கள் என இன்னொருவகை உண்டு. தாவரங்களுக்குள்ளும் விலங்குகளுக்குள்ளும் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும் உணர்வுள்ள அங்கிகளும் உண்டு. ஆக எம்மைச்சுற்றி உயிர்வாழும் எல்லா ஜந்துக்களும் ஏதோவொரு வகைப்படுத்தலுக்குள் உள்வாங்கப்படவேண்டும். இதுபற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

mullaitheevu

தலைசிறந்த அதிக எண்ணிக்கையான உயிர்ப்பல்வகைமையை கொண்டிருக்கும் நாடுகளில் முதல் 25 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குகின்றது. உயிர்ப்பல்வகைமை நிறைந்துள்ள இடங்களில் எமது வடக்கு-கிழக்கு பிரதேசம் இலங்கையில் முன்நிற்கின்றது. அதிகளவில் கடற்கரையோரங்களை ஒட்டிய வாழ்விடங்களை வடக்கு – கிழக்கு பிரதேசம் கொண்டிருப்பதால் இவ் உயிர்ப்பல்வகைமையின் நிலையற்றதன்மை குறித்துக்காட்டப்படவேண்டியது அவசியமாகும். உதாரணமாக வாடைக்காற்று, கொண்டல் காற்று மற்றும் சோளகக்காற்று என்பன திசைமாறி வீசுவதால் அவற்றின் தாக்கங்களால் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் முக்கியமானவை. நீர்நிலைகளில் ஏற்படும் மாற்றம், காலநிலைக்கு ஏற்ப நிலத்தடி நீர் குறையும் தன்மை, பருவகாலங்களுக்கு ஏற்ப மாறுபடும் பயிர்களின் தன்மை, இப் பயிர் வளர்ச்சியோடு ஒட்டிய எதிர்ப்பு பூச்சிகள் என்பனவற்றின் பரம்பல் பெரிதும் வேறுபடுகின்றன. மனிதருடைய செயற்பாடுகள் இவ் உயிர்ப் பரம்பலின் தன்மையை பெரிதும் பாதிக்கின்றன. ஏற்கனவே கூறப்பட்டதன் பிரகாரம் வடக்கு – கிழக்கு பிரதேசத்தில் பல்வேறுவகைப்பட்ட பூகோள தரைத்தோற்றங்கள் அவற்றோடு அண்டிய விவசாயம், கைத்தொழில், விலங்கு வேளாண்மை, மீன்பிடி, வர்த்தகம் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளும் உய்தறியப்பட வேண்டியவை. இவற்றின் விளக்கங்களே பல்வகைத்தன்மையினால் ஏற்படுத்தப்படும் அபிவிருத்திப் போக்கை கண்டறிய உதவும். இவ்வாறிருக்க இப் பல்வகைமையை பயனுள்ள வகையில் பயன்படுத்தி அவற்றை அழிந்துவிடாமல் பாதுகாப்பதோடு உச்சப்பயன்பாட்டைப் பெறும் பொறிமுறை ஒன்று எய்தப்படவேண்டும். கைத்தொழில் அபிவிருத்தி, அதிகரித்துவரும் வீதி அபிவிருத்தி, மின்னியல் மற்றும் மின்சாரம் சார் தொழிற்பாடுகள், மண்ணகழ்வு, காடழித்தல் என்பன போன்ற மனித சமுதாயத்தின் அபிவிருத்தியில் இன்றியமையாத செயற்பாடுகள், பல்வகைத்தன்மையை பாதிக்கும் கூடியன. அவற்றை சரியான முறையில் ஒழுங்குபடுத்தி சுற்றாடல் சிநேகமுள்ள தொழிற்பாடுகளாய் மாற்றியமைத்தல் சவாலானவைகளே. பல்வகைமை பற்றிய அறிவு ஒருபுறம் இருக்க, அவற்றால் ஏற்படும் பயன்பாடுகள் தனித்து ஆய்ந்தறியப்படவேண்டியவை. பாதுகாப்பு பொறிமுறைகளும் முக்கியமானவை. இதனால் இக்கட்டுரைத் தொடரானது வட – கிழக்குப் பகுதியிலுள்ள கடலும் கடல்சார்ந்த உயிர்ப்பல்வகைமை, காடும் காடுசார் உயிர்ப்பல்வகைமை, நிலமும் நிலம்சார் உயிர்ப்பல்வகைமை, நன்னீர் நிலைகள்சார் உயிர்ப்பல்வகைமை, வரள்நில உயிர்ப்பல்வகைமை, கண்டல்நில உயிர்ப்பல்வகைமை, சுற்றாடல்சார் உயிர்ப்பல்வகைமை என்பனவற்றை ஆராயவுள்ளது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

சி. ஜேம்சன் அரசகேசரி

விவசாய விஞ்ஞானியும் சூழலியலாளருமான கலாநிதி.சி.ஜேம்சன் அரசகேசரி அவர்கள் விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் முன்னைநாள் மேலதிக பணிப்பாளர் ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாயத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரான இவர் விவசாயத்துறையில் மூன்று தசாப்தங்களாக பயனுள்ள பங்காற்றி வருவதுடன் மிளகாய், வெங்காயம், நிலக்கடலை, குரக்கன் மற்றும் மா போன்ற பயிர்களில் புதிய வகைகளைக் கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயம் சம்பந்தப்பட்ட அநேக பிரச்சினைகளின் தீர்வுகளுக்கு வழிவகுத்துள்ள அரசகேசரி அவர்கள், மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் விவசாய மற்றும் சுற்றாடல் சம்பந்தப்பட்ட கருத்திட்டங்களுக்கு ஆலோசகராகவுள்ளதுடன் சமூக சேவையாளராகவும் திகழ்கிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்