அறிமுகம் : சமத்துவச் சமூகம் காணப் போராடுவோர் பார்வையில் ஆறுமுக நாவலர்
Arts
18 நிமிட வாசிப்பு

அறிமுகம்: சமத்துவச் சமூகம் காணப் போராடுவோர் பார்வையில் ஆறுமுக நாவலர்

March 28, 2025 | Ezhuna

இன்றைய இருப்பில் இயங்கும் சமூக சக்திகள் தத்தமக்கான நலன்களின் நோக்கில் கடந்த காலத்தை மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்றன. மேலாதிக்கத் தமிழ்த் தேசியம், தலித்தியம், விடுதலைத் தேசியம் என்பவற்றின் கருத்தியல் தளங்களை அடிப்படையாக உடைய சமூக சக்திகள் இன்றைய இயக்கங்களாகச் செயற்படுகின்றன. எமக்கான நவீன வரலாற்றைக் கட்டமைத்த ஆளுமையாகிய ஆறுமுக நாவலர் குறித்து இவை ஒவ்வொன்றும் தமக்கே உரிய கண்ணோட்டத்தில் மறுவாசிப்பை மேற்கொள்கின்றன; இதன்வழியாக, கடந்தகாலச் சமூக சக்திகள் வழிவகுத்துவிட்டிருந்த இயங்குமுறை அமைந்த அடித்தளங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றன. இதேபோன்ற பின்னணிக்குரிய ஏனைய சமூகங்களில் இயங்கிய ஆளுமைகளுடன் எமது இயங்கு தளத்துக்குரிய ஆளுமைகளை ஒப்பிடுவதன் வாயிலாக செய்யப்பட்டவற்றையும், செய்திருக்கத்தக்கன எவை என்பதையும் மதிப்பீடு செய்வது அவசியமானது. இவற்றின் பெறுபேறுகள் எமக்கான எதிர்கால மார்க்கத்தை வடிவமைப்பதற்கு மிகமிக முக்கியமானவை ஆகும். “சமத்துவச் சமூகம் காணப் போராடுவோர் பார்வையில் ஆறுமுக நாவலர்” எனும் இத்தொடரானது நாவலரின் பங்களிப்புக் குறித்த மதிப்பீட்டின் வழியாக சமகால இயங்குமுறையைக் கணிப்பிட்டு, சுயவிமரிசனங்களுடன் புதிய பாதையையும், அதற்குரிய சரியான மார்க்கத்தையும் கண்டடையும் நோக்கில் எழுதப்படுகிறது.

இன்று உருவாகியுள்ள புதிய உலக ஒழுங்கில் இந்தியா, சீனா, இலங்கை என்பன இணைந்து இயங்குவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது எனும் குரல் ஏற்கனவே வெளிவந்துள்ளது. இத்தகைய புதிய செல்நெறி துலக்கமாகத் தெரிகிறதா எனும் கேள்வி பலரிடமும் தோன்ற இடமுள்ளது. ஏற்கனவே நிலவி வந்த ஒற்றை மையமான ஐக்கிய அமெரிக்க மேலாதிக்கம் தளம்பல் நிலையை அடைந்து, பழைய நியமங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கும் மாறுநிலைக் காலம் என்பதைக் கடந்து, உறுதியான புதிய உலக ஒழுங்கு ஒன்று ஏற்பட்டு விட்டதா? அத்தகைய புதிய உலக ஒழுங்கில் ஐக்கிய அமெரிக்கா – சோவியத் யூனியன் இடையே நிலவிய பனிப்போர் போல இந்தியா – சீனா எனும் எதிரெதிர் முகாம்கள் தோற்றம் பெறாதா? இந்தியாவும் சீனாவும் பரம வைரிகளாக இயங்குவன என்ற எண்ணமே பலரிடமும் நிலவுகின்றது. இத்தகைய பகை நாடுகள் எனும் தோற்றம் அரை நூற்றாண்டுக்கு உட்பட்ட வரலாற்றையே பெற்றிருந்தது.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்தியத் தலைவர்கள் சீனாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி இருந்தனர். கனடாவில் இருந்து வந்த நோர்மன் பெத்யூன் யப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று, வைத்தியப் போராளியாகச் செயற்பட்டதைப் போல, கோட்னீஸ் எனும் இந்திய மருத்துவப் போராளி சீன வீரர்களுக்குச் சேவை புரிவதற்காக அங்கு சென்று போர்க்களச் செயல்வீரராக இயங்கியுள்ளார். இன்றுங்கூட இந்தியா வருகிற பல சீனப்பயணிகள் கோட்னீஸ் உடைய கிராமத்தைத் தேடிச் சென்று, அவர் பிறந்து வளர்ந்த இல்லத்தைத் தரிசித்துச் செல்லும் செய்திகளைச் செவிமடுக்க இயலும்.

சீன – இந்திய எல்லைப் போர் ஒன்று 1962ஆம் ஆண்டில் ஏற்பட்ட பின்னரே இரு நாடுகளும் எதிரும் புதிருமான நிலையை எடுத்தன. இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட எல்லையில் சீனா அமைத்த வீதி பிணக்கிற்கான காரணமாக அமைந்தது. அவ்வாறு அமைக்கப்படும் வீதி பிரிட்டிசாரால் வரையப்பட்ட எல்லைக்கூடாகச் செல்கிறது என்ற பிரச்சினை இந்தியப் பாராளுமன்றத்தில் ஒலித்ததுண்டு. பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கு முன்னரான நீண்டகால வரலாற்றில் சீனாவுக்கானதாக அமைந்த நிலப்பரப்பின் ஊடாகவே அந்த வீதி அமைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் அதனைப் பிரச்சினை ஆக்குவதற்கு முயன்ற போது, அந்த எல்லை இந்தியாவின் கரிசனைக்குரிய தூரத்துக்கு அப்பாலானது; சீனாவுக்கான போக்குவரத்தில் அதனது நெருங்கிய பிராந்தியங்களை இணைப்பதற்கு அந்தச் சாலை அவர்களுக்கு அவசியமானது என்ற பதிலையே பிரதமர் நேரு முன்வைத்து வந்தார்.

சீனாவின் சோசலிச முன்னெடுப்பைச் சகிக்க இயலாதவராக இருந்த குருசேவ் எனும் சோவியத் ஒன்றியத்தின் அதிபர் சோவியத் யூனியனின் சோசலிசப் பாதையையும் சிதைக்கும் திரிபுவாதத்தை விதைத்தவர்; அவர் ஏற்படுத்திய சறுக்கலின் விளைவாகத் தான் 1992ஆம் ஆண்டில் அப்போதைய அதிபரான கோர்பச்சேவால் ‘சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்’ (U.S.S.R.) எனும் மகத்தான சோசலிச நாடு புவிப் பரப்பிலிருந்து காணாமல் போக நேர்ந்தது. ருஷ்ய தேசத்தில் பாட்டாளி வர்க்கம் கிளர்ந்தெழுந்து முன்னெடுத்த 1917 ஒக்ரோபர் புரட்சி வாயிலாக உருப்பெற்ற புதிய சோசலிச அரசுமுறை தமக்கான விடுதலைத் தேசிய நலனை உத்தரவாதப்படுத்தும் எனக் கண்ட பதினைந்துக்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட தேசங்களும் கைகோர்த்து இயங்கியதாக ஒக்ரோபர் புரட்சியின் நீடிப்பு அமையலாயிற்று. ஜார் மன்னனின் ஆட்சியில் ருஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட தேசங்களாக இருந்தவை, விடுதலை பெற்ற குடியரசுகளான போதிலும், சோவியத் சோசலிசக் குடியரசாகிவிட்ட ருஷ்யாவுடன் இணைந்து ‘சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்’ எனக் கூட்டரசை உருவாக்கிய புதிய வரலாறு அப்போது சாத்தியமாகி இருந்தது!

உலகின் ஆறிலொரு பங்கு நிலப்பரப்பு இவ்வகையில் சோசலிசப் பாதையை வரித்த பின்னர், அதுவரை முதலாளி வர்க்கம் – பாட்டாளி வர்க்கம் என்பவற்றுக்கு இடையே நிலவிய பிரதான முரண்பாட்டின் இடத்தை ஏகாதிபத்தியத்துக்கும் சோசலிசத்துக்கும் இடையேயான முரண்பாடு பிரதிபலிக்கும்; அதுவே இனிவரும் உலக ஒழுங்கை வடிவமைக்கும் என, ஒக்ரோபர் புரட்சியின் தலைவரான லெனின் எதிர்வு கூறியிருந்தார். ஏகாதிபத்தியத்தால் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட தேசங்கள் அபகரிப்புக்கு உள்ளாகி, அவற்றின் இடையிலான முரண்பாடு பிரதான இடத்தைப் பெற்றதான இயங்குநிலை நிலவரத்தின் புறநிலை நிதர்சனங்களை பின்னர் சோவியத் யூனியனுக்குத் தலைமை ஏற்றிருந்தவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை. வெறும் வர்க்க வாதமாக மார்க்சிஸ – லெனினிஸத்தை விளங்கிக்கொண்டதன் பேறாக சோவியத் ஒன்றியம் தகர்ந்து ருஷ்யாவும் பதினைந்து நாடுகளும் எனச் சிதறிப் போயின.

அவ்வாறு பிரிந்து சென்ற நாடுகளை நேட்டோவில் இணைப்பதில்லை என்ற ஐக்கிய அமெரிக்காவின் வாக்குறுதியை அன்றைய சோவியத் கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கோர்பச்சேவ் நம்பியிருந்தார்; அப்போது தனது தலைமையில் இருந்த கொம்யூனிஸ்ட் கட்சியைக் கலைத்ததுடன் சோசலிச முன்னெடுப்பையும் கைவிட்டு, சோவியத் ஒன்றியத்தில் இணைந்திருந்த பதினைந்து நாடுகள் பிரிந்து தனி நாடுகளாகச் செல்வதையும் அனுமதித்தார். அதன் வாயிலாக ஏற்படவிருந்த யுத்தத்தைத் தவிர்த்ததாகவும் கோர்பச்சேவ் நியாயம் கற்பித்துக்கொண்டார். 

அரசியல் சூதாட்டத்தின் போதான வாக்குறுதிகள் கால – தேச நிலவரங்களுக்குக் கீழ்ப்பட்ட வெற்றுரைகள் என்பதனை ஏகாதிபத்தியத் திணை மிக விரைவில் எடுத்துக் காட்டியது. முன்னெடுத்து வந்த சோசலிசப் பலத்தையும் இழந்து புதிதாக வரித்துக்கொள்ள முற்பட்ட முதலாளித்துவப் பாதையையும் உறுதிப்படுத்த இயலாமல் ருஷ்யா பலவீனப்பட்டுத் திணறிய போது, சோசலிச முகாமாக சோவியத் யூனியனுடன் ‘வார்சோ ஒப்பந்த நாடுகள்’ என (ஏகாதிபத்திய அணியின் ‘நேட்டோ ஒப்பந்தக்’ கூட்டுக்கு எதிரான தற்காப்பு அணிச்சேர்க்கையில் ஒன்றுபட்ட அணி) இருந்த பழைய ‘சோசலிச முன்னெடுப்புக்குரிய’ கிழக்கு ஐரோப்பிய நாடுகளை மட்டுமன்றி, சோவியத் ஒன்றியத்துக்குள் இருந்து பிரிந்து சென்ற புதிய தேசங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக நேட்டோவில் இணைத்து வந்தது ஏகாதிபத்தியத் திணை. சோசலிச முகாமிலிருந்து ‘பாதுகாக்கப்படுவதற்கு’ என உருவாக்கப்பட்ட நேட்டோ ஒப்பந்தம், சோசலிச அச்சுறுத்தல் தமக்கருகில் இல்லை என்றானதும் காலாவதி ஆகியிருக்க வேண்டும். மாறாக, ருஷ்யாவைத் தொடர்ந்தும் சுற்றிவளைத்த நேட்டோ நெருங்கி வந்ததுடன், உக்ரேனையும் தனக்குள் இணைப்பதற்கு முனைந்த சூழலில் அதனது பாதுகாப்புக் கேள்விக் குறியாவதைத் தடுக்கும் உத்தேசம் காரணமாக உக்ரேன் மீதான தாக்குதலை முன்னெடுக்கும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளானது ருஷ்யா!

மீண்டெழுந்து துரிதகதியில் விருத்தியடைந்தவாறு இருந்த ருஷ்யப் பலத்தைச் சிதைத்துவிட இயலும் என்ற எண்ணத்தில் ஐக்கிய அமெரிக்கா அந்த யுத்த வியூகத்தை அமைத்திருந்தது. ஐரோப்பிய ஒன்றியம், தமது தரப்புப் பலவீனப்படுவதை உணர்ந்ததால், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது என்றால், உக்ரேனைப் பங்குபோடுவதில் மிச்சம் மீதி தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கத்தோடு உள்ளது. தமது வீழ்ச்சி மென்மேலும் அதலபாதாளத்தை அடைந்துவிடாமல் இருக்க வேண்டுமாயின் மத்திய கிழக்கில் இஸ்ரேலைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குவது அவசியம் எனக் கருதி இன்று உக்ரேனைக் காவுகொடுத்துள்ளது. இஸ்ரேலின் உருவாக்கத்தில் ருஷ்யாவுக்கும் பங்கிருந்த காரணத்தால், ஈரானுடையதும் மத்திய கிழக்கு நாடுகளினதும் கோபக் கனலிலிருந்து இஸ்ரேல் பாதுகாக்கப்படுவதனை ருஷ்யாவால் மட்டுமே சாத்தியமாக்க இயலும் என்பதனை ஏகாதிபத்தியத் திணை நன்கு புரிந்து கொண்டுள்ளது.

அவ்வகையில் ருஷ்யாவுடன் தமது நெருக்கத்தை அதிகப்படுத்துவதன் பேறாக சீனாவுடன் நட்புறவைப் பலப்படுத்தி வருவதில் இருந்து அதனைத் தடுத்தாட்கொள்ள இயலும் என ஐக்கிய அமெரிக்கா எண்ணம் கொண்டு இருப்பதாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். ஐக்கிய அமெரிக்காவின் சூத்திரப் பாவையாக இயங்குவதில் இருந்து விடுபட்டு ஐரோப்பிய நாடுகள் தனிவழி காண வேண்டும் எனவும், அதற்கு ஏற்ற வகையில் நேட்டோ அமைப்பில் தம்மையும் இணைக்குமாறும் ருஷ்யா முன்னர் கோரிக்கை விடுத்திருந்தது. அப்போது தன்னை நம்பி ருஷ்யாவைப் பகைத்த ஐரோப்பிய யூனியனைக் கைகழுவிவிடத் தயாராகும் ஐக்கிய அமெரிக்காவின் தந்திரோபாயத்தை ருஷ்யாவால் விளங்கிக்கொள்ள இயலாதா? இன்றைய இருப்பில் ‘ஐரோப்பா’ எதிர் ‘ருஷ்யா’ என ஆகுவதற்குக் காரணமான ஐக்கிய அமெரிக்காவின் இராஜதந்திர வலையில் சிக்கும் பலவீன நிலையில் தான் ருஷ்யா உள்ளதா?

இன்றைய பலமான இருப்பை ருஷ்யா பெறக் காரணமாக அமைந்த நட்புச் சக்திகளான சீனாவையும் ஈரானையும் தூரப்படுத்தும் எந்தத் தவறுக்கும் ருஷ்யத் தலைவர் புடின் இடமளிக்க மாட்டார் என்பதே நிதர்சனம். இனியும் உலகை ஆட்டிப்படைக்கும் வகையில் தான்தோன்றித்தனமாக ஐக்கிய அமெரிக்கா நடந்து கொள்வதற்கு வாய்ப்பில்லை எனும் நிலைமையை பிரேசில், ருஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா எனும் நாடுகளது ஒன்றிணைவில் உருவான ‘BRICS’ அமைப்பு ஏற்படுத்திவிட்டது. அந்த அமைப்பு அதனை உருவாக்கிய மேற்படி ஐந்து நாடுகளது முன்னொட்டு ஆங்கில எழுத்துகளால் ‘BRICS’ என அழைக்கப்பட்ட போதிலும், அவற்றைக் கடந்து ஈரான் உள்ளிட்ட பல நாடுகளும் இணைந்து செயற்படும் வண்ணம் விரிவுபட்ட பலத்துடன் விசுவரூபம் பெற்றுவிட்டது. அதனைச் சிதைப்பதற்கு, தான் காரணமாக அமைந்தால், அதன் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் செயலொழுங்குகள் எவ்வாறு அமையும் என்பதனை அறியாத நிலையில் ருஷ்யா இல்லை.

ஐக்கிய அமெரிக்கத் தலைமையில் ஏகாதிபத்தியத் திணையால் பதியம் போட்டு வளர்க்கப்பட்ட இந்தியப் பெருமுதலாளி வர்க்கம் கூட தனக்கான அணியாக ‘BRICS’ இருப்பதைக் கைவிடத் தயாராக இல்லை. இந்த அமைப்பில் இருந்தபடி ஏகாதிபத்தியத் திணைக்கு முண்டு கொடுக்க இசைவோமே அல்லாது முற்றுமுழுதாக உங்களது அணிக்குள் முடங்கிப் போய்விட இயலாது என்பதை எடுத்துக்காட்டும் திராணி இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த அளவில் ஏகாதிபத்தியத் திணை அதனது தீர்மானிக்கும் வலுவை இழந்துவிட்டுள்ளது!

ஆக, புதிய உலக ஒழுங்கு அரங்கேறிவிட்டது. சென்ற வருடக் கடைக்கூறில் இடதுசாரி அணி இலங்கை அரசாங்கத்தைக் கைப்பற்ற இயலுமாக இருந்ததும் கூட இத்தகைய மாற்றத்தின் முன்னடையாளம் தான். இந்தியா, சீனா, ஐக்கிய அமெரிக்கா எனும் மும்முனைகளை வெற்றிகரமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் கையாள இயலுமாக இருக்கிறது என்பது, சோவியத் ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் என்ற இருமுனைப்பட்ட ‘உலகு – ஐக்கிய அமெரிக்கா இயக்கிய ஒற்றை மையம்’ (1990கள் முதல் 2020 வரை) என்பன தகர்வடைந்து புதிய உலக ஒழுங்கொன்று மேற்கிளம்பி வந்துவிட்டது என்பதன் வெளிப்பாடு தான். 

இத்தகைய ஒரு காலப் பின்னணியில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை ஆகுதியாக்கிய தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம் குறித்த கேள்வி எம்முன்னால் எழுகிறது. இனத் தேசியம் ஒன்றின் கோரிக்கையை மறுப்பதில் சிங்களத் தேசியமும் அதனது பல்லாயிரம் மக்களை அர்ப்பணம் செய்யவேண்டி இருந்தது. இன்று விடுதலைத் தேசிய உணர்வுடன் அரசாங்கத்தை அமைத்துள்ள சிங்களத் தேசியம் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் அனுபவிக்கின்ற அனைத்து உரிமைகளுடன் ‘சிறுபான்மை இனமக்கள்’ சமத்துவமாகப் பயணிக்க இயலுமே அல்லாது எந்தவொரு இனப் பிரிவினரும் ‘தனியுரிமைத் தாயகம்’ என்ற கோரிக்கையுடனோ, சமஷ்டி போன்ற அபிலாசையுடனோ இயங்க இயலாது எனக் கூறிவரக் காண்கிறோம். புரிந்துணர்வுடன் விடுதலையை நாடுகிறவர்களிடமும் இத்தகைய உணர்வுநிலை வெளிப்படக் காரணம் என்ன?

ஏகாதிபத்தியம் முழு அளவில் சரியத் தொடங்கும் இவ்வேளையில், அதற்கு முண்டு கொடுக்கும் தவறுகளுக்கு ஆட்படாமல், தேசங்களிடையே சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதன் வாயிலாகச் சோசலிச அமைப்பை வென்றெடுக்கும் இன்றைய சகாப்தத்தில் இலங்கையின் சுயநிர்ணய உரிமை, அதற்குள்ளே (இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்க மறுக்கும்) இனத்தேசியங்களின் சுயநிர்ணய உரிமை என்பவற்றை வரையறுக்க வேண்டியவர்களாக உள்ளோம். இதன் பொருட்டு ஏகாதிபத்தியம் வலுவுடன் இயங்க ஏற்றதாக முன்னெடுத்த நூற்றைம்பது வருடங்களுக்கு முந்திய செயலொழுங்குகளைக் கற்க வேண்டியவர்களாக உள்ளோம். பண்பாட்டுத் தேசிய எழுச்சியின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படும் ஆறுமுக நாவலர் (1823 – 1879), ஏகாதிபத்தியத்தைப் பலவீனப்படுத்தும் வகையில் பண்பாட்டுப் பாதுகாப்புப் போராட்டத்தை முன்னெடுத்தவர் என ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளால் மதிக்கப்படுபவர். அவர் பற்றிய சரியான மதிப்பீட்டினூடாகப் பெறப்படும் புரிதல், நாம் கடந்து வந்த பாதையை விளங்கிக் கொள்ள உதவும்  பயன்மிக்க முயற்சியாக அமையும்.

‘சமத்துவச் சமூகம் காணப் போராடுவோர் பார்வையில் ஆறுமுக நாவலர்’ எனும் இந்தத் தொடர் காலனித்துவம் ஏற்படுத்திய பண்பாட்டு மேலாதிக்கத்துக்கு எதிராகப் போராடிய நாவலரின் செயற்பாடுகள், எமது வரலாற்றுத் திசை மார்க்கத்தை எவ்வகையில் வடிவப்படுத்தியது என்பதை ஆய்வுக்கு உட்படுத்தும். அன்றைய எமது சமூக அசைவியக்கத்தில் அவரது செயற்பாடுகள் ஏற்படுத்திய தாக்கத்தின் பலம் – பலவீனங்கள் முற்போக்குத் திசைமுகப்படுத்தலாக அமைந்ததா, இன்றைய விடுதலைத் தேசிய சக்திகள் அவரிடம் இருந்து கற்பதற்குரிய சாதக – பாதக அம்சங்கள் எவை என்பன குறித்த தேடலை இங்கு மேற்கொள்வோம். பத்து இயல்களைத் தம்முள் அடக்கிய நான்கு பகுதிகளாக இந்தத் தொடர் கட்டமைக்கப்பட்டுள்ளது.

1. சென்ற காலத்தின் மீதான நாட்டமும் தேடலும்

ஈழத் தமிழ்த் தேசியம் அர்ப்பணிப்புமிக்க போராட்டத்தை முன்னெடுத்த போதிலும் கழித்தல் பெறுமானத்தில் தனது இருப்பை வந்தடையும் பெறுபேற்றைத் தாயக மண்ணில் கண்டுள்ளது. அதற்காகத் ஈழத் தமிழினத் தேசியம் முற்றுமுழுதான தோல்வியை எட்டியுள்ளது என்றும் பொருளில்லை. இன்றைய உலகையாளும் ஏகாதிபத்திய நாடுகளில் புகலிட வாழ்வைப் பெற்ற ‘புலம்பெயர் தமிழீழம்’ எமது மேலாதிக்கத் தமிழ்த் தேசியத்துக்குக் கிடைத்திருக்கும் ‘பெரு வெற்றி’ ஆகும்!

மேலாதிக்க உலகின் ஊடாட்டமாக உயிர்த்துடிப்பை வைத்துக்கொள்ளும் அந்தத் தமிழீழம், தாயக மண்ணில் ‘தமிழர் பூர்வீகப் பிரதேசம்’ என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் ஆக்கிக்கொண்டு வருகிறது. புகலிடத் தமிழீழப் ‘பிரசைகள்’ “அடைந்தால் தமிழீழம், அதில்லாத குறைபட்ட எதுவும் வேண்டியதில்லை” என்ற முடிவோடே உள்ளனர். அவர்களது தூண்டுதலுடன் நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைத்து, விடுதலைத் தமிழ்த் தேசியம் தக்க வைப்பதற்கு முனையும் அம்சங்களையும் பலவீனப்படுத்துகிற வேலைகளை இங்குள்ள மேலாதிக்கத் தமிழ்த் தேசியர்கள் முன்னெடுத்து வருகின்றனர். 

மேலாதிக்கத் தமிழ்த் தேசியம் நாவலரை ஐந்தாம் குரவர் எனும் வழிபாட்டுக்கு உரியவராக காட்டுகின்றது. ‘கிறிஸ்தவ மதமாற்றத்துக்கு எதிராகப் போராடிச் சைவத்தைக் காத்தவர்’ எனும் நாவலரின் வகிபாகத்தை ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் பௌத்தம் – சமணம் ஆகிய ‘புறச் சமயங்களை’ முறியடித்த நாவுக்கரசர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்க  வாசகர் எனும் நான்கு சைவ சமயக் குரவர்களது பணியின் தொடர்ச்சி எனக்கூறுவர். அதற்கான அடிப்படைகள் அவரிடம் எப்படி வெளிப்பட்டது? நாவலரை மேலாதிக்கத் தேசியவாதத்துக்கு உரியவராக மதிப்பிட்டு ‘சாதியின் காவலராக’ அவர் இயங்கினார் எனக் கணிப்பதுடன் முற்றாகவே அவரை நிராகரிக்கும் தரப்பு ஒன்று புகலிடத் தளத்துக்குரிய மற்றொரு பிரிவினரிடம் உருவாகி உள்ளது; அந்தத் தரப்புக்கு உரிய ஒரு சிலர் தாயகத்திலும் உள்ளனர். இத்தகையோர் தலித்தியச் சிந்தனையின் அடிப்படையில் நாவலர் மீது வைக்கும் விமரிசனங்கள் அனைத்தும் ஏற்புடையனவா?

மேலாதிக்கவாதிகள் போல வழிபாட்டுக்கு உரியவராகவோ, தலித்தியவாதிகள் போல பிற்போக்கின் குவிமையமாகவோ நாவலரை அணுகமுற்படாமல், அவருக்குரிய வரலாற்றுப் பங்களிப்பின் தாற்பரியத்தை மனங்கொண்டு நிதானமான கணிப்பீட்டை முன்னிறுத்தும் மூன்றாவது அணியொன்று கனங்காத்திரத்துடன் இயங்கவந்துள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்பை வலுவுடன் முன்னெடுத்து இயங்கிய ‘இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ நாவலர் நினைவு நூற்றாண்டை எதிர்கொள்ளும் வகையில் ஆய்வரங்குகள் – மலர் வெளியீடுகள் வாயிலாக அவருக்குரிய வகிபாகம் துலக்கமுறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருந்தது!

இந்தத் தொடரின் முதல் பகுதி ‘சென்ற காலத்தின் மீதான நாட்டமும் தேடலும்’ எனும் தலைப்பின் கீழ், இவ்விடயங்களை அலசும். இதன் முதல் இயலாகிய ‘மறுவாசிப்பில் நாவலர்’ என்பதனூடாக மேற்படி மூன்று தரப்பினரும் நாவலரைக் கண்டுகாட்டும் பாங்கு வெளிப்படுத்தப்படும். ‘மீள் பார்வைக்கான சமூக சக்திகள்’ எனும் இரண்டாம் இயல், பழைய பொற்காலத்துக்காக ஏங்குவதோடு அதன் மீளுருவாக்கமாக வெளிப்பட்டவரே நாவலர் எனக் காணும் ஆண்ட பரம்பரையினர், ஒடுக்கப்பட்டோரது பார்வையில் கடந்தகாலம் முழுவதும் நிராகரிக்கப்பட வேண்டியன எனக் கங்கணம் கட்டும் எதிர்ப்பு அரசியலாளர்கள், பண்பாட்டுத் தேசிய விடுதலைக் கூறுகளை வெளிப்படுத்தியவராக நாவலரைக் காட்டிய இலங்கை முற்போக்கு இயக்கத்தினர் (விடுதலைத் தேசிய சக்திகள்) எனும் முத்தரப்பினர் பற்றிப் பேசும்.

2. இன்றைய இருப்பின் மீதான கடந்த காலத்தின் தாக்கம்

நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஐரோப்பியக் காலனியாக இயங்கிய இலங்கைத் தமிழ்ச் சிந்தனை முறைமையில் காலனித்துவப் பிடி வலுவாகக் காலூன்றி உள்ளது. நாவலருக்கு முன்னரும் அவர் காலத்திலும் நிலவிய வாழ்வியல் கோலம் எத்தகைய மனக்கட்டமைப்பை நாவலரிடம் ஏற்படுத்தி இருக்கும் என்பதைக் கவனங்கொள்வது அவசியம். ‘இன்றைய இருப்பின் மீதான கடந்தகாலத் தாக்கம்’ எனும் இரண்டாம் பகுதியின் முதல் இயல் ‘காலனித்துவக் காலமும் கருத்து நிலைகளும்’ என்பதாகும்!

நாவலர் இயக்கம் கொண்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு, தமிழில் நவீனத்துவம் மேற்கிளம்பி வந்த காலமாகும். தமிழில் மட்டுமன்றி சிங்களச் சமூகமும், இந்தியாவின் தமிழுடன் ஏனைய இனத் தேசியங்களும்கூட அதே சமகாலத்தில் நவீனத்துவ மாற்றங்களுக்கு ஆட்பட்டன. அதன் புத்தூக்கம் காரணமாகச் சமூக – பண்பாட்டு மறுமலர்ச்சி இயக்கங்கள் பல்வேறு இடங்களிலும் எழுச்சி பெறலாயின. ‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூக இயக்க எழுச்சிகள்’ என்பது இரண்டாவது பகுதிக்குரிய மற்றொரு இயலாகும். அதன் மூன்றாவது இயலாகிய ‘சைவசித்தாந்தம்: ஆறுமுக நாவலரும் வ.உ. சிதம்பரநாதனாரும்’ என்பது ஒரே கருத்தியலை ஏற்ற இருவரது பண்புக் கூறுகளை அலசும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் தீவிரமாகச் செயற்பட்ட நாவலரும், இருபதாம் நூற்றாண்டின் முற்கூறில் தீவிர தேசிய விடுதலைப் போராளியாக இருந்த வ.உ.சி. யும் தத்தமது கால – தேச வேறுபாடுகளுக்கு அமைய வெளிப்படுத்திய கருத்துகள் ஆய்வுக்குரியன. 

3. தவறிப் போயிருந்த தடங்கள்

‘நாவலர் பிறந்திருக்காது போனால்?’ என்ற அச்சம் அவரது மறைவின் ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் வரை நீடித்ததுண்டு. எண்பதாம் ஆண்டுகளின் பின்னர் அரச பயங்கரவாதம் மேலெழுந்து வன்முறை நாயகர்களுக்கான களமாக இலங்கை மாற்றப்பட்ட சூழலில், பண்பாட்டுப் போராளியின் இடத்தை போர்க்களத்தின் மாவீரர் பெற்றுக்கொண்டனர். முன்னதாக நாவலர் செயற்படுத்தி இருந்த பண்பாட்டுத் தள வேலை முறைகளில் ஏற்பட்ட மேலாதிக்கப் பண்பின் ஏதாயினும் கூறு வன்முறை நாயகருக்கு உரித்தான வெளியைக் கட்டமைத்து இருந்ததா? வேறுவகையில் சொல்வதாயின், இரு தரத்தாருக்கும் உரியதாகப் பொதுவான அடித்தளம் ஒன்று இருந்ததா? தமிழகத்தில் வ.உ.சி. யின் அரசியல் – இலக்கியச் சகாவாக இருந்த பாரதியின் ஆன்மிக நாத்திக வெளிப்பாடு போல ஈழத் தமிழில் ஊற்றெடுக்க இயலாமல் போனது ஏன்? நாவலரால் சிவபூமியாகக் காப்பாற்றப்பட்டதாலே தான், பெரியார் நாத்திகவாதச் சமூக விழிப்புணர்வுடன் இயங்கியது போல இங்கு ‘சாதி ஒழிப்பு’ இயக்கம் எழுச்சி பெறாமல் போனதா?

மேலும், ஜனநாயகப் பண்புமிக்க செயற்களத்தை நாவலர் ஏற்படுத்தி இருக்க இயலாதா? அவரது சமகாலத்தில் (முன்பின்னாகவும்) இந்தியாவில் இயக்கம் கொண்ட வள்ளலார், தயானந்த சரஸ்வதி, ராஜா ராம் மோகன் ராய், இராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்றோருடன் பலவகை ஒத்த பண்புகளைக் கொண்டிருந்த போதிலும் மேலாதிக்கத் தேசிய முன்னோடிக்கு உரிய பண்புக் கூறுகளும் ஆறுமுக நாவலரிடம் வெளிப்பட்டு இருந்தன. இந்தியாவில் சாத்தியப்பட்ட வெகுஜனக் கிளர்ச்சி அலைக்குரிய வெளி அப்போது இலங்கையில் இல்லாமல் போனது ஏன்? இவை குறித்து ‘ஆன்மிக நாத்திக வெளிப்பாட்டுத் தளம்’, ‘தீர்மானிக்கும் சக்தியாக இயற்கை வளத்தைச் சார்ந்த உற்பத்தி முறை’, ‘மாற்றத்தின் நேரியனும் புறநிலையும்’ எனும் மூன்று இயல்கள் அலசும்!

4. இருப்பும் மாற்றச் செல்நெறியும்

ஏகாதிபத்தியத்தால் கட்டமைக்கப்பட்ட எமது தேசிய இருப்பில் உள்ளுறையாக அமைந்திருந்த பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக, எண்பதாம் ஆண்டுகளில் இனத் தேசியங்கள் இடையே இரத்தம் சிந்தவைத்த மோதல் களமாக நாடு மாறிப் போயிருந்தது. ஏகாதிபத்தியம் தனது நலன் பேணும் வகையில் சிங்களத் தேசியத்துக்கு வழங்கியிருந்த அதீத அரசியல் வாய்ப்பை விடுதலைத் தேசிய எழுச்சி பெற்ற சிங்களத் தரப்பும் தவறான வகையிலேயே கையாண்டிருந்தது; ஏனைய இனத் தேசியங்களின் சுயநிர்ணய உரிமையை மதித்து உரிய பங்குப் பரிமாற்றங்களை ஏனைய இனத் தேசியங்களுடன் ஏற்படுத்தியவாறு சிங்களத் தேச நலனை விருத்திசெய்ய முயன்றிருப்பின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்க் குணத்துடன் இலங்கைத் தேச நலன் முன்னேற வாய்ப்பாக அமைந்திருக்கும்.

ஏனைய தேசிய இனங்களுக்கு அரசியல் – பொருளாதாரச் சம உரிமையை வழங்காமலே சிங்களத் தேசப் பிராந்தியத்தில் யாழ்ப்பாண உத்தியோக ஆக்கிரமிப்பை நீக்குவதற்கென எடுக்கப்பட்ட முயற்சிகள் பிரிவினைவாதப் போருக்கு இடமேற்படுத்தி இருந்தது. பிரித்தானிய ஏகாதிபத்தியம் யாழ்ப்பாணத்துக்கு வழங்கி இருந்த உத்தியோக ஆக்கிரமிப்புக்கான வாய்ப்பின் பின்னணி குறித்த தேடலை மேற்கொள்ளாது, இலங்கை அரசு மேற்கொண்ட தரப்படுத்தலுக்கு எதிராக, மேலாதிக்கத் தேசிய நாட்டத்துடன் மேற்கொள்ளப்பட்ட யுத்த முன்னெடுப்பு, தாயகத்தில் மிக மோசமான பின்னடைவை ஏற்படுத்தியதுடன், ஏகாதிபத்தியப் புகலிடத்தை நாடிச்சென்று தொடர்ந்தும் விடுதலை நாட்டத்துக்கு விரோதமான மனப்பாங்கை வளர்க்கவும் வித்திட்டுள்ளது.

இடம்பெற்ற யுத்தத்தின் பேறாக பொருளாதார, நிர்வாக, உட்கட்டமைப்புச் சீர்குலைவுகளுக்கு உள்ளாகிவிட்ட இலங்கையின் இறைமையும் சுயாதிபத்தியமும் ஏற்கனவே கைநழுவிப்போன சூழலில், தொடரும் செயலொழுங்குகள் கூட முழு அளவிலான நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை. பேரினவாத முன்னெடுப்பைக் கைவிட்டு, சம உரிமையுடன் ஏனைய அனைத்துத் தரப்பினருக்குமான வாய்ப்பு, வசதிகள் ஏற்படுத்தப்படும் என்ற உறுதிப்பாட்டுடன் இயங்கும் புதிய இடதுசாரி அரசாங்கத்தை வீழ்த்தும் முனைப்புடன் மேலாதிக்கத் தமிழ்த் தேசியம் செயற்பட்டவாறு உள்ளது.

ஏகாதிபத்தியத் திணையில் சங்கமித்துள்ள ‘புலம்பெயர் தமிழீழம்’ இங்குள்ள மேலாதிக்கத் தமிழ்த் தேசிய அரசியலாளர்களுக்கு ஊட்டமளிப்பதன் பேரில், வெளித் தெரியும் பேசு பொருளாக அவர்களது குரல் ஓங்கியொலிக்கிறது; காப்பிரேட் ஏகாதிபத்திய ஊடக ஊதுகுழல்களும் அதனைப் பரப்புரை செய்கின்றன. மிகப் பெரும்பான்மையான ஈழத் தமிழ் மக்கள் இலங்கைத் தேசத்தின் சுயநிர்ணய உரிமையைப் பேணிப் பாதுகாத்தவாறு தமிழினத் தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை எவ்வாறு வடிவப்படுத்த இயலும் என்ற அக்கறையுடனேயே உள்ளனர். மேலாதிக்கத் தமிழ்த் தேசியம் ஆறுமுக நாவலரை விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டு வழிபாட்டுக்கு உரிய விம்பமாக்கிக் காட்டுவதைப் போல, விடுதலைத் தேசிய உணர்வுடனுள்ள மிகப் பெரும்பான்மையான மக்கள் இல்லை. அவருக்குரிய வரலாற்றுப் பின்புலத்தில் அவர் எத்தகைய வகிபாகத்தைக் கொண்டிருந்தார் என்பதைக் காணும் ஆர்வம் பலரிடம் உள்ளது.

இங்கு மேலாதிக்கத் தமிழ்த் தேசியம் விடுதலை நாட்டம்மிக்கோரைக் கொன்றும் காணாமலாக்கியும் வந்தபோது களச் செயற்பாட்டைக் கைவிட்டுப் புகலிட வாழ்வை நாடியவர்களும் மேலைத் தேசங்களையே தஞ்சம் புக நேர்ந்தது. அத்தகையவர்களில் பெரும்பான்மையினர் தம்மளவில் விடுதலைத் தேசிய உணர்வைக் கொண்டிருந்த போதிலும் மேலாதிக்கத் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகக் காத்திரமான செயற்களத்தை உருவாக்க இயலாதவர்களாக இருந்தனர். அங்குள்ள மேலாதிக்கத் தமிழ்த் தேசியச் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக மற்றொரு பகுதியினர் தலித்தியவாத நிலைப்பாட்டை வரித்துக்கொண்டனர். இங்கு தலித்தியவாதப் பின்னணி எதுவும் இல்லாத போதிலும் புகலிடச் செயற்பாட்டாளர்களது அக்கறையின் பேரில் சில நடவடிக்கைகள் தோன்றி மறைகின்றன. இங்கே ஏகாதிபத்தியப் பயன்பாட்டுக்காக, இனவாத முரண்பாடு தான் ‘வளமூட்டி விருத்தி செய்து’ வியாபகம் அடைந்துள்ளது; இந்தியாவில் செழிப்பாகப் பயன்படுத்தப்பட்ட சாதியவாதம் இங்கே எதிர்பார்க்கும் அளவுக்கு வளர இயலாவிட்டாலும் தலித்தியவாதக் கருத்து நிலைகள் விடுதலைத் தேசியத்துக்குக் குந்தகம் விளைக்கும் வகையில் ஊடறுப்பை மேற்கொள்ள இடமேற்பட்டுள்ளது. குறிப்பாக நாவலர் பற்றிய தலித்தியக் கண்ணோட்டம் மிக மோசமான தாக்கத்தை விளைவிப்பதாய் உள்ளது. நாவலர் இயங்கிய வரலாற்றுச் சூழல் பற்றிய தேடல் இன்றிச் சாதி குறித்து அவர் வெளிப்படுத்திய சில கருத்துகளை முன்வைத்து அவரை முற்றாக நிராகரிக்கும் போக்கு தலித்தியர்களிடம் உள்ளது. நாவலருக்கு எதிராக இவர்கள் கர்ணகடூரமாகக் கொச்சைப்படுத்தி உதிர்க்கும்  குற்றச்சாட்டுகள் பற்றிப் பெரும்பாலான மக்கள் அலட்டிக்கொள்ளாத போதிலும் விடுதலைச் செயற்பாட்டுக்கு உரிய சிலரது பார்வையைச் சிதைப்பதாகத் தலித்தியக் கருத்து நிலை இயக்கம் கொண்டுள்ளது.

வெகுஜனத் தளத்தில் தலித்தியக் கருத்தாடல் தாக்கம் செலுத்தவில்லை என்பதனால் பாதகமான சூழல் இல்லையெனப் பொருளில்லை; அரசியல் தளத்தில் மேலாதிக்கத் தமிழ்த் தேசிய நாட்டத்தை நிராகரித்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் உரிமையுடன் வாழும் உத்தேசத்தை மக்கள் வந்தடைகிற இன்றைய சூழலில், பண்பாட்டுத் தளத்தைத் தமக்குச் சாதகமாக்குவதற்கு மேலாதிக்கவாதிகள் எத்தனிக்கின்றனர். அதற்கான கருவியாக ‘ஐந்தாம் குரவர்’ நாவலர் கையாளப்படுகிறார். கடின உழைப்புக்குப் பெயர்போன எமது சமூகத்தைக் கையேந்தும் நிலைக்கு ஆளாக்கிய புலம்பெயர் புரவலர்கள் ‘நவீன நாவலர்களை’ உருவாக்கி அத்தகைய கைங்கரியங்களை மேற்கொள்ள முனைகின்றனர். மேலாதிக்கத்தை எதிர்க்கும் பேரால் நாவலரைக் கொச்சைப்படுத்தும் போது, அவரைக் காப்பாற்றுவதாக எண்ணி விடுதலைக்கு விரோதமானவர்களின் கூடாரம் நோக்கி மக்கள் தள்ளப்படுவதைத் தவிர்ப்பது இன்றைய காலத்தின் தேவை! 

இத்தொடர் பற்றிய முன்னுரைக் குறிப்பின் ஆரம்பத்தில் இன்று ஏற்பட்டுள்ள புதிய உலக ஒழுங்குப் பிரகாரம் தேசங்கள் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தும் அரசியல் சூழல் விருத்தி பெறவுள்ளது பற்றிக் குறிப்பிட்டு இருந்தோம். இந்தத் தொடரின் இறுதிப் பகுதியானது, விடுதலைத் தேசியச் சக்திகள் நாட்டினுள்ளே இனத் தேசியங்கள் சமத்துவத்தை வென்றெடுக்க முயற்சிக்கும் அதேவேளை, உலக அரங்கில் ஒடுக்கும் – ஒடுக்கப்படும் தேசங்கள் என்ற பேதங்களற்று, அனைத்துத் தேசங்களும் ஒரே நிறையுடையனவாக வருவதற்கு கடந்தகால அனுபவங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் பிரதான அம்சமாக அமையும் வகையில், நாவலர் குறித்த தெளிவான கணிப்பைப் பெற்று, அதன் வாயிலாக எதிர்கால மார்க்கத்தை வகுக்க முயல்வோம். அதற்கமைவாக ‘புதிய நாவலர்கள்: பிரதிகளும் உயிர்ப்பான அமைப்புகளும்’, ‘தேசங்கள் இடையே சமத்துவம் நாடும் புதிய உலக ஒழுங்கு’ எனும் இரு இயல்கள், இறுதியான இந்த நான்காம் பகுதியில் இடம்பெறும். பதினைந்தாவது இயலாக வரவுள்ள ‘முடிவுரை’யுடன் இந்தத் தேடல் இங்கு நிறைவுபெறும்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்