வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்தல் : பொருளாதார முன்னேற்றமும் சமூகப் பொறுப்பும்
Arts
15 நிமிட வாசிப்பு

வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்தல் : பொருளாதார முன்னேற்றமும் சமூகப் பொறுப்பும் 

May 17, 2024 | Ezhuna

நீண்டகால யுத்தத்தின் முடிவிற்கு பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு சாத்தியமாகாத நிலையில், மீள்கட்டுமானத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காத சூழலே யதார்த்தமாகியிருக்கிறது. இந்நிலையில், வடக்கில் முனைப்படைந்து வரும் தொழில் முயற்சிகளையும் முயற்சியாளர்களையும் பலரதும் கவனத்திற்கு கொண்டுவருவதே ‘வளரும் வடக்கு’ எனும் இத் தொடரின் நோக்கமாகும். வடக்குப் பிரதேசத்தில் புலம்பெயர் சமூகத்தின் முதலீடு, புத்தாக்க தொழில் முனைப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எத்தனிப்புகள், தொழில் முனைவோரின் அனுபவப் பகிர்வு, முயற்சிகளின் தோல்விகளில் இருந்து கற்ற பாடம், வடக்கு பிரதேசத்தில் தனித்துவமாகக் காணப்படக்கூடிய பிரச்சனைகள், உலகளாவிய சமூகத்துடன் இணைந்து முயற்சிகளை வெற்றிகரமாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இத்தொடர் அமையும். இத் தொடர் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார முயற்சிகளை விபரிப்பதோடு மட்டுமே நின்றுவிடாது, அதன் தொடர்ச்சியான அசைவிற்குத் தேவையான முன்னெடுப்புகளின் சாத்தியம் குறித்தும் இலங்கையின் பொருளாதாரப் பின்னணியில் தரவுகளோடு ஆராய்கிறது. இது புதிய முயற்சியாளர்களுக்கு பாடமாக அமைவதோடு மேலும் பல முயற்சியாளர்களை வடக்கை நோக்கி வரவழைக்கும்.

தமிழில் : த. சிவதாசன்

சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றின் பிரதான பணிப்பாளர் ஒருவருடன் பேசக் கிடைத்தது. ஓய்வு வயதை அண்மித்துக்கொண்டிருக்கும் அந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெரியவரிடம் “போர் முடிந்து பலவருடங்களாயினும் ஏன் அந்நிறுவனம் வடக்கில் முதலீடு செய்யவில்லை” எனக் கேட்டேன். “வடக்கை விட இலகுவாக இலாபமீட்டக்கூடிய இதர இடங்கள் இருக்கின்றன” என அவர் சாவதானமாகக் கூறினார். அதில் எந்தவிதத் தவறுமில்லை. பங்குச்சந்தை முதலீட்டை நம்பியிருக்கும் நிறுவனங்கள் தமது முதலீட்டாளர்களின் இலாபத்திற்குப் பொறுப்பாக இருப்பனவேயன்றி உணர்வுகளுக்கும் மனச்சாட்சிக்கும் முதலிடம் கொடுப்பதில்லை.

அப்போதும், இப்போதும் அவர் கூறியது சரியே. இலகுவாகப் பணம் பண்ணுவதற்கு வடக்கு ஏற்ற இடமில்லை. தங்களைப் பணக்காரராக்க முயற்சிப்பதைவிட வடக்கைப் பணக்கார மாகாணமாக மாற்றுவற்கு ஏற்ற வகையில் அவர்கள் முதலீடுகளைச் செய்து மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே வடக்கு இலகுவாகப் பணம் பண்ணும் ஒரு இடமாக மாறும்.

வடக்கைப் பற்றி மட்டும் நான் எழுதுவதற்குக் காரணம் நான் அங்கு தான் வாழ்கிறேன்; அது மட்டுமே எனக்குத் தெரிந்த இடமென்பதால். ஆனாலும் இக்கட்டுரையில் நான் குறிப்பிடுவது இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் பொருந்தும். கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கவனமாகக் கொடுக்கப்பட்டு, கவனமாகப் பெறப்பட்டு இலக்குவைக்கப்பட்ட முதலீடுகளே இதர மாகாணங்களுக்கும் அவசியம்.

2019 இல் இலங்கை, ஒரு குறுகிய காலத்திற்கு, கீழ் மத்திய வருமான நாடாக இருந்து உயர் மத்திய வருமான நாடாகத் தரமுயர்த்தப்பட்டிருந்ததெனினும், ஒரு வருடத்தின் பின்னர், 2020 இல், மீண்டும் கீழ் மத்திய வருமான நாடாகத் தரமிறக்கப்பட்டது. இருப்பினும் மேற்கு மாகாணத்தை வைத்தே எங்கள் செழிப்பு, தரம் பார்க்கப்பட்டது. மேற்கு மாகாணத்தைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இதர அனைத்து மாகாணங்களும் மிகவும் ஏழ்மையானவை.

chart

புலம்பெயர்ந்த தமிழர்கள் என்னை அழைத்து, தாம் எப்படி வடக்கில் முதலிடலாம் எனக் கேட்பார்கள். பணம் பண்ணுவது மட்டுமே அவர்களது முதன்மை நோக்கம். அதேவேளை, வடமாகாண மக்களுக்கு சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொடுப்பதன் மூலம் அவர்களையும் பணம் பண்ண வைப்பது என்பதும் அவர்களது நோக்கங்களிலொன்று. இலாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், வடக்கு மக்கள் தாமே தமக்கான சந்தர்ப்பங்களை உருவாக்க ஆதரவு தருவதும் இவர்களது நோக்கமாகும். இதர மாகாணங்களைச் சேர்ந்த மக்களிடமும் இப்படியான நல்லெண்ண முயற்சிகள் இருக்கலாம். எனவே இங்கு நான் எழுதுவது அனைவருக்குமே பொருந்தும்.

எனக்கு வரும் அழைப்புகளில் பெரும்பாலானவற்றில் இருக்கும் பிரச்சினை, இவ்விடயம் பற்றிய அவர்களது அறிவுப் போதாமையே. அங்குள்ள மக்களுக்கு ஏதாவது உதவியைச் செய்யவேண்டுமென்ற உந்துதலே அவர்களை இயக்குவதுபோல் தெரிகிறது. 30 வருட காலப் போர்; அதன் பின்னர் பத்தாண்டு காலம் என வட மாகாணம் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியற்றே இருந்து வருகிறது. 2018 இல் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவின் பிரகாரம் வடக்கு மாகாணம் மிகவும் ஏழ்மையான கிழக்கு மாகாணத்தைவிட அடுத்த உயர் நிலையில் இருந்தது.

gdp

முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்படும் கேள்விகளில் சில:

பண உதவி செய்தல்: “நோர்வேயிலிருக்கும் ஒருவர் பத்தாயிரம் டொலர்களை உதவியாகத் தர விரும்புகிறார். உங்களிடம் ஏதாவது யோசனைகள் இருக்கிறதா?”

பண முதலீடு செய்தல்: “பிரித்தானியாவில் வாழும் எனது கணக்காள நண்பர் ஒருவர் இலங்கையில் ஏற்றுமதி வியாபாரமொன்றில் முதலீடு செய்ய விரும்புகிறார். வடக்கில் இதற்கான சாத்தியமேதுமுள்ளதா?”

நேரத்தையும் திறமையையும் காணிக்கை செய்தல்: “உங்கள் இளைய தலைமுறையினரை முன்னேற்ற நீங்கள் முயல்வதுபோல் தெரிகிறது. உதவி தேவைப்பட்டால் எங்களது விவேகமான மாணவர்கள் தமது கல்வியையும், திறமைகளையும் முன்னேற்ற நான் தொண்டாகப் பணிபுரியத் தயாராகவுள்ளேன்”

முதலீட்டில் பங்காளி: “என்னிடம் ஒரு விவசாயம் செய்யாத காணி இருக்கிறது. அங்கு ஏதாவது தொழில் முயற்சியை மேற்கொள்ளும் வகையில் பங்காளியாக வரக்கூடியவர் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா?”

மிகக்குறைந்த தகவல்களுடன் வருபவர்களுக்கு ஆலோசனை வழங்க நான் தயக்கப்படுவதனால் அவர்களிடம் நான் மேலதிக தகவல்களைக் கேட்பதுண்டு. இதற்குக் காரணம், முதலீடுகளை ஏற்றுக் கொள்பவர்களைக் கண்டுபிடிக்க முடியாது என்பதல்ல. இலவசமாகத் தானம் செய்வது என்பது இலகு. இலவசமென்றால் அதைப் பெறுவதற்கான மக்களில், பற்றாக்குறையே இருக்காது. இலவசப் பணம், இலவச மடிக்கணனி, இலவச இயந்திரம், இலவசக் காணி, இலவசப் பயிற்சி என்றால் அவை உடனடியாகவே பறிக்கப்பட்டுவிடும்.

சொந்தத்தில் இழப்பதற்கு எதுவுமில்லை என்ற காரணத்தால் இவ்வுதவிகளைப் பெறுவதற்கு ஏராளமான பேர் முன்வருவார்கள். எனக்குத் தெரிய, முக்கியமான இடத்தில் தானமாக வழங்கப்பட்ட ஒரு காணி தேடுவாரன்றிக் கிடக்கிறது; வழங்கப்பட்ட இயந்திரங்கள் துருப்பிடிக்கின்றன; வழங்கப்பட்ட இலவசப் பயிற்சிகள் மறக்கப்பட்டோ அல்லது பாவனையற்றோ போய்விட்டன. துர்ப்பாக்கியமாக இலவசமாக வழங்கப்பட்டவைக்கு பெறுமதி இல்லையென்றாகிவிட்டது. ஒரு தேங்காயெண்ணை ஆலைக்கு ரூ. 5 இலட்சம் பெறுமதியான இயந்திரங்களும் ரூ.5,000 பெறுமதியான தள்ளுவண்டியும் இலவசமாக வழங்கப்பட்டன.

கவனமற்று வழங்கப்பட்ட அனைத்தும் கவனமற்றுப் பெறப்பட்டன. தானம் செய்யவோ  அல்லது முதலீடு செய்யவோ விரும்புபவர்கள் இலக்குகளைத் திட்டமிட்டு இனங்காண்பதும், பெறப்படும் உதவிகள் எதிர்ப்பார்த்த விளைவுகளைத் தரக்கூடுமா என்பதைக் கவனமாக ஆய்ந்தறிந்த பின்னர் தமது தானங்களைச் செய்வதும் அத்தியாவசியமானது.

gdp growth

ஒரு முதலீட்டாளரோ அல்லது காணிக்கையாளரோ தமது முதலீடுகளை அல்லது தானங்களைச் செய்வதற்கு முன்னர், கேட்டறியவேண்டிய சில கேள்விகளை இக் கட்டுரை பரிந்துரைக்கிறது. காணிக்கைகள் என்னும்போது, பெறுபேறுகளை எதிர்பார்க்காத முதலீடுகள் என்பதை இங்கு நான் கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.

1. ஏன் நீங்கள் முதலீடு செய்யவேண்டும்?

a). பெறுபவர் எப்படியாகச் செலவு செய்தாலும் பரவாயில்லை என்னும் எண்ணத்துடன் கொடையாகக் கொடுத்தல்.

b). நேசிக்கும் ஒருவர் மீதான நினைவுச் சின்னத்தை அமைத்தல்.

c). பண்டத்தின் தரத்தையும் உற்பத்தியையும் அதிகரிக்க ஊக்குவிப்பதன் மூலம் அப்பண்டங்களை நீங்களே வாங்கிக்கொள்ளல்.

d). ஒரு சொத்துக்கு உரிமையாகுதல், உதாரணமாக ஒரு காணியைக் கொள்வனவு செய்து அதைப் பிரயோசனமாக்குதல்.

e). வடமாகாணத்தின் மொத்த உற்பத்தி, கொள்திறன் மற்றும் தரத்தைக் கட்டியெழுப்புதல்.

f). வடமாகாணத்தின் ஒரு வியாபாரத்தில் நடைமுறை அல்லது உறங்கு பங்காளியாக ஆகுதல்.

போன்ற பல.

2. என்ன தொகையை? எப்படி முதலீடு செய்ய உத்தேசமாகவுள்ளீர்கள்?

a). ஒரு நன்கொடையைக் கொடுத்துவிட்டு பேசாமலிருத்தல்.

b). குறைந்த அல்லது பூச்சிய வட்டிக்கு பணத்தை வழங்குதல் அல்லது ஈடாக எதையும் பெறாது பணத்தை வழங்குதல். அதிக நெருக்கடிகளுடன் வங்கிகளால் கடன் வழங்கப்படுபவர்களுக்கோ அல்லது வங்கிகளால் கடன் நிராகரிக்கப்பட்டவர்களுக்கோ கடன் வழங்குதல்.

c). ஒரு சொத்தை வாங்கி அதில் பிறர் பலன் பெறுவதற்கு வழி செய்தல்: (காணியை ஒரு விவசாயிக்கு குத்தகைக்குக் கொடுத்தல். பெரிய வீடொன்றை உணவகமொன்றிற்கு வாடகைக்கு விடுதல். சிறிய வாகனமொன்றை ‘டக்சி’ சாரதிக்கு வாடகைக்கு விடுதல்)

d). பங்கு முதலீடுகளில் ஈடுபடுதல். இலாபமீட்டுவதற்குப் பலகாலம் எடுக்கலாம் அல்லது இலாபமே கிடைக்காமல் போகலாம் என்பதை அறிந்து முதலீடு வளரும்வரை பொறுமையாக இருத்தல்.

e). ஈவுத்தொகை (dividends) பெறுவதை மட்டுமே நோக்கமெனக்கொண்டு, பங்கு முதலீட்டின் ஈடுபடுதல். முதலீட்டில் வளர்ச்சி காணாதபோது குறிக்கப்பட்ட கால எல்லைக்குள் வெளியேறுதல்.

போன்ற பல.

3. என்ன பெறுபேற்றை எதிர்பார்க்கிறீர்கள்? அதை எப்படி அளந்து கொள்வீர்கள்?

a). வேலைகளை உருவாக்குதல்: உ+ம், ஒரு ஆலையை உருவாக்கிவிட்டு, ஒரு வருடத்தின் பின்னர் அதன் பணியாளர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுங்கள்.

b). வருமானத்தை அதிகரித்தல்: உ+ம், ஒரு கிராமியக் குடும்பத்திற்கு 100 கோழிக்குஞ்சுகளைத் தானமாகக் கொடுத்துவிட்டு, கோழிகளாலும் முட்டைகளாலும் அக்குடும்பத்தின் வருமானம் உயர்வதை அவதானியுங்கள்.

c). ஆரோக்கியத்தை முன்னேற்றுதல்: உ+ம், சுத்தமான குடிநீர் வழங்கலுக்கு ஆவன செய்து, பாவனையாளர்களில் நீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் குறைவதை அவதானியுங்கள்.

d). தொழில் முகவர்களை ஆதரித்தல்: உ+ம், கேக் விநியோக வியாபாரி பெரிய வெதுப்பு சூளை ஒன்றை வாங்குவதற்கு உதவி செய்வதன் மூலம் அவரது வியாபாரம் அதிகரிப்பதை அவதானியுங்கள்.

இப்படிப் பல.

4. யார் நன்மையடையவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்?

a). கிராமப்புற சமூகங்கள்

b). பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்

c). இளையோர்

d). போரினால் பாதிக்கப்பட்டவர்கள்

e). கூட்டுறவு முயற்சிகள்

f). தொழில் முகவோர்

ஆகியோர்.

5. எங்கு?

a). ஒரு குறிப்பிட்ட கிராமம்

b). ஒரு குறிப்பிட்ட மாவட்டம்

c). ஒரு குறிப்பிட்ட சமூகம்

ஆகியன.

6. எத் துறையில்?

a). விவசாயம்

b). மீன்பிடி

c). உணவுத் தயாரிப்பு

d). தகவல் தொழில்நுட்பம்

e). கல்வி

f). சுகாதாரம்

g). சுற்றுலா

ஆகியன.

7. முதலீட்டு இலக்கு?

a). தொழில்நுட்பமும் இயங்கு முறைகளும்: புதிய பயிர்வகைகள், சொட்டு நீர்ப்பாசனம் ஆகியன.

b). பயிற்சி / கல்வி: ஆங்கிலம், ஈயத் தொழில் (Plumbing), நீர்ப்பாசனம் ஆகியன.

c). நிலங்களும் கட்டிடங்களும்

d). இயந்திரங்கள்

f). ஆரம்ப முதலீடு

ஆகியன.

இவ்வனைத்துக் கேள்விகளுக்கும் நீங்கள் முற்கூட்டியே பதிலளிக்க வேண்டியதில்லையாயினும் குறைந்தது (1) ஏன் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும்; (2) எப்படி, எவ்வளவு முதலீட்டை நீங்கள் செய்யவேண்டும்; (3) என்ன பெறுபேற்றை எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விகளுக்காவது நீங்கள் பதில்களை வைத்திருக்க வேண்டும்.

முதலீடு செய்வது மட்டுமே முடிவாகாது. நீங்கள் எதிர்ப்பார்த்த பெறுபேறுகள் கிடைத்தனவா என்பதை அறிய முயற்சிக்க வேண்டும். அவற்றை எப்படி மேலும் திறமையாகச் சாதித்திருக்க முடியும் என்பதோடு, மற்றவர்களும் உங்கள் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ள வழி செய்யவேண்டும்.

பெரிய தொண்டு நிறுவனங்கள் முதல் நிறுவனக் கொடையாளிகள் வரை, தமது கொடைகள் வழங்கப்பட்டு ஒரு வருடத்திற்குப் பின்னராவது வந்து தமது கொடைகள் எவ்வளவு தூரத்துக்கு நன்மை பயத்திருக்கின்றன; எதிர்பார்த்த விளைவுகள் பெறப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள முயற்சிப்பதில்லை என்பதே நான் கண்ட உண்மை. சிலவேளைகளிகளில் அவை திருப்தி தராமையினாலோ என்னவோ அப்படியாகச் செய்யப்பட்ட ஆய்வுகள் பலவும் வெளியிடப்படுவதுமில்லை. பலரும் தமது அனுபவங்களை மற்றவரும் பகிரும்படி பரப்புரை செய்வதுமில்லை. மிகப்பெரும் தொண்டு நிறுவனங்கள்கூட தமது மீளாய்வுகளை மற்றயோரிடம் பகிர்வதில்லை என்பது மிகவும் ஏமாற்றத்தைத் தருகிறது.

அனுபங்களிலிருந்து பட்டறிவைப் பெற குறைந்தது அவர்கள் என்ன செய்யலாம்?

a). முதலீடு செய்யப்பட்டு 12 மாதங்களின் பின்னர் அம்முதலீட்டால் கிடைத்த நன்மை என்ன, எதில் முன்னேற்றம் கண்டிருக்க முடியும், எது தீமையில் முடிந்தது என ஒரு முதலீட்டு மீளாய்வு செய்யப்படுதல்.

b). பாடங்களைக் கற்றுக்கொள்ளுதலுடன் அவற்றை மற்றையோரும் அறியக்கூடியாத முன்வைத்தல்.

வடக்கில் முதலீடு செய்யப்படும், கொடையாக வழங்கப்படும் பல வளங்கள் வீணடிக்கப்படுகின்றன; பாடங்கள் கற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதெல்லாம் எங்களுக்கு எப்படித் தெரியும்? போர் முடிந்து ஒரு தசாப்தத்தின் பின்னரும் எமது வடக்குப் பிரதேசம் பொருளாதாரச் சட்டகத்தின் அடிமட்டத்தில் தான் இன்னமும் இருக்கிறது. உலகம் முழுவதிலும் பொருளாதார ரீதியில் வானளாவிய உயர்ச்சிகளைக் கண்டுவரும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரும் வடக்கைச் சேர்ந்தவர்களாக இருந்தும்கூட நிலைமை இப்படியாக இருக்கிறது. இலங்கையில் வடக்கு ஒன்றுதான் சனத்தொகையில் வீழ்ச்சி கண்டுவரும் மாகாணம். எமது மக்கள் சந்தர்ப்பங்களைத் தேடி வேறு நாடுகளுக்குச் செல்வது தான் இதற்கு காரணம். இதனால் தான் வடக்கிற்கு கிடைக்கும் அரிய சந்தர்ப்பங்கள் வீணடிக்கப்படுகின்றன.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

8736 பார்வைகள்

About the Author

ஜெகன் அருளையா

இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் தனது பெற்றோருடன் பிரித்தானியாவிற்கு இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக, இலங்கையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனங்களிலும் பணியாற்றியவர். 2015 இல், நிரந்தரமாக யாழ்ப்பாணத்துக்குக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (15)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)