வடக்கு - கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியில் சுகாதாரத் துறையின் முதலீடு 
Arts
10 நிமிட வாசிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியில் சுகாதாரத் துறையின் முதலீடு 

November 25, 2024 | Ezhuna

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பது அந்நாட்டின் நிலைபேறுகைக்கு ஸ்திரத்தினை வழங்குகின்றது. இலங்கையில் உள்ள வளச் செழிப்பு நாட்டின் அபிவிருத்திக்கு பெரும்பங்காற்றக்கூடியது. இலங்கையின் கால்பங்குக்கும் அதிகமான நிலப்பரப்பை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் கொண்டுள்ளன. இந்தவகையில் இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு, அதில் அடையாளப்படுத்தக்கூடிய வளங்கள் அல்லது இதுவரை கண்டறியப்பட்ட வளங்கள் தொடர்பாக தெளிவுடுத்துவதாகவும், அந்த வளங்களின் இப்போதைய பயன்பாடற்ற முறைமையை மாற்றியமைத்து உச்சப்பயனைப் பெறுதல், அதனூடே வடக்கு – கிழக்கின் விவசாயத்துறை, உட்கட்டமைப்பு, கடல்சார் பொருளாதாரம் என்பவற்றை அபிவிருத்தி செய்வது பற்றியும் ‘வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் விளக்குகின்றது.

பொருளாதார அபிவிருத்தி துறையில் பங்கு கொள்ளும் துறைகளை நாம் பொருளாதார உட்கட்டமைப்புத் துறைகள், உற்பத்தி உட்கட்டமைப்புத் துறைகள், சமூக உட்கட்டமைப்புத் துறைகள் என மூன்று துறைகளாக பிரித்து வகையீடு செய்யலாம். உற்பத்தி உட்கட்டமைப்பு துறையினுள் விவசாயம், கால்நடை, கடற்றொழில், வனவளம், கைத்தொழில், சனத்தொகை போன்ற துறைகளும்; பொருளாதார உட்கட்டமைப்புத் துறையினுள் மின்சாரம், சக்தி வளம், நீர்வழங்கல், நீர்ப்பாசனம், போக்குவரத்து, தபால், தொலைத்தொடர்புகள், வங்கிகள் போன்ற துறைகளும்; சமூக உட்கட்டமைப்புத் துறையினுள் கல்வி, சுகாதாரம், விளையாட்டுத்துறை, கூட்டுறவு, கிராமிய அபிவிருத்தி, சமூக சேவைகள், நன்னடத்தை, வீடமைப்பு போன்ற துறைகளும் உள்ளடக்கப்படுகின்றன. உற்பத்தி உட்கட்டமைப்புகளும், பொருளாதார உட்கட்டமைப்புகளும் மனித வளத்துக்கு தேவைப்படும் அடிப்படை விடயங்களை பௌதீக ரீதியில் அபிவிருத்தி செய்யும் துறைகளாகவும், சமூக உட்கட்மைப்புத்துறை மனித வளத்துக்கான மன ரீதியான உறுதிப்பாட்டை வழங்கும் துறையாகவும் காணப்படுகின்றன. அதிலும் சிறப்பாக மனித வளத்தின் சிறந்த உருவாக்கத்துக்கு ஆரம்பம் முதல் பாடுபடும் சுகாதாரத் துறையானது ஒரு குழந்தையின் உருவாக்கம் முதல் இறப்பு வரையிலுமான அனைத்து நலச் சேவைகளையும் உள்ளடக்கியுள்ளது. சுகாதாரத் துறையானது வருமுன் காக்கும் முன்தடுப்பு (Prevention) நடவடிக்கைகள், நோயின் பின்னரான குணப்படுத்தல் (Curative) நடவடிக்கைகள் என இரு பெரும் பிரிவுகளில் செயற்படுகின்றது. அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் கணிசமான தொகையை பெற்றுக்கொள்ளும் இத்துறையானது நாட்டில் வினைத்திறனும் உடற்திறனும் கொண்ட மனித மூலதனத்தை உருவாக்கும் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தும் துறையாகக் காணப்படுகின்றது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சுகாதார உட்கட்டமைப்பு

வடக்கு – கிழக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறையில் மேலைத்தேய வைத்தியம் மற்றும் சுதேச வைத்தியம் என்ற இரு பிரிவுகள் முகாமை செய்யப்படுகின்றன. வடக்கு – கிழக்கு மாகாணங்களின் சகாதார நிலைமையைப் பற்றிய சுட்டிகளை ஆராயும் போது, கிழக்கு மாகாணத்தில் பிறப்பு வீதமானது ஆயிரத்துக்கு 14.3 வீதமாகவும் இறப்பு வீதமானது ஆயிரத்துக்கு 6 வீதமாகவும் காணப்படுகின்றது. குழந்தைகளின் இறப்பு வீதமானது வட மாகாணத்தில் ஆயிரத்துக்கு 10.5 வீதமாகவும் கிழக்கு மாகாணத்தில் 8.5 வீதமாகவும் காணப்படுகின்றது. பிறப்பின் போதான பிள்ளைகளின் இறப்பு வீதமானது கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கு 25.7 வீதமாகவும் வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கு 18.71 வீதமாகவும் காணப்படுகின்றது. பிறந்து 28 நாட்களுக்குள் இறந்து போகும் பிள்ளைகளின் வீதம் வட மாகாணத்தில்  ஒரு இலட்சத்திற்கு 7.5 வீதமாகவும் கிழக்கு மாகாணத்தில் 6 வீதமாகவும் காணப்படுகின்றது. இந்த வகையில் வடக்கு மாகாணத்தினை விட கிழக்கு மாகாணத்தின் சுகாதார நிலை ஒப்பீட்டளவில் முன்னேற்றமுடையதாக இருக்கும் போதும், தேசிய ரீதியில் ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடும் போது இம் மாகாணம் முன்னிலையில் காணப்படவில்லை.

அரசு முதலீட்டில் செய்யப்பட்ட பல உட்கட்டமைப்புகள் சிறப்பாக இயங்கவில்லை என்பதனை விட சிறந்த வளப்பரிமாற்றம் இடம்பெறவில்லை என்பதுவே இவ்விரு மாகாணங்களின் குறைவான சுகாதார நிலைக்குக் காரணமாகும். கிழக்கு மாகாணத்தில் நான்கு பிரதி மாகாண சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், 46 பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், 178 பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளும், 627 பொது சுகாதார மருத்துவ மாது பிரிவுகளும் மேலைத்தேய வைத்திய சேவை வழங்கல் பிரிவில் காணப்படுகின்றன. இவை வருமுன் காக்கும் நடவடிக்கைகளுக்காக செயற்பட்டு வருகின்றன. நோய் வந்த பின் குணப்படுத்தும் கட்டமைப்புகள் என்ற வகையில் 01 போதானா வைத்தியசாலையும், 02 மாவட்ட பொது வைத்தியசாலைகளும், 17 தள வைத்தியசாலைகளும், 51 பிரதேச வைத்தியசாலைகளும், 63 ஆரம்ப வைத்தியப் பராமரிப்பு நிலையங்களும் செயற்படுகின்றன. சுதேச மருத்துவத்துறையில் 3 ஆதார வைத்தியசாலைகளும், 8 மாவட்ட வைத்தியசாலைகளும், 4 கிராமிய வைத்தியசாலைகளும், 5 பஞ்ச கர்மா வைத்தியசாலைகளும், 48 ஆயுள்வேத மத்திய மருந்தகங்களும் செயற்பட்டு வருகின்றன. வட மாகாணத்தில் வருமுன் காக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 05 பிரதி மாகாண சுகாதார சேவை பணிமனைகளும், 33 பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளும், 244 கிராமோதய வைத்திய நிலையங்களும், 28 பாடசாலை பல்வைத்தியப் பிரிவுகளும், 5 மார்பு நோய் சிகிச்சை நிலையங்களும், 05 மலேரியா தடுப்பு நிலையங்களும், 05 STD நிலையங்களும் செயற்படுகின்றன. நோயின் பின்னரான குணப்படுத்தும் கட்டமைப்பின் கீழ் 01 போதனா வைத்தியசாலையும், 24 மாவட்ட பொது வைத்தியசாலைகளும், 10 தள வைத்தியசாலைகளும், 54 பிரதேச வைத்தியசாலைகளும், 49 ஆரம்ப வைத்தியப் பராமரிப்பு நிலையங்களும் செயற்படுகின்றன. சுதேச மருத்துவ துறை சார்ந்து 36 மாகாண நிர்வாக வைத்தியசாலைகளும், 37 பிரதேச சபையினது வைத்திய நிலையங்களுமாக 73 வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றன. வைத்திய சேவைக் கட்டமைப்பை பொறுத்த வரையில், வடக்கு – கிழக்கில் உருவாக்கப்பட்டுள்ள நிர்வாகப் பொறிமுறையும் கட்டிடங்களும் ஏனைய வசதியளிப்புகளும் திருப்தி அடையத்தக்கதாகவே உள்ளன. குறிப்பாக வட மாகாணத்தில் 5762 தங்கி நின்று சிகிச்சை பெறும் கட்டில்களும், கிழக்கு மாகாணத்தில் 7989 தங்கி நின்று சிகிச்சை பெறும் கட்டில்களும் காணப்படுகின்றன. இது இம்மாகாணங்களின் கட்டில் தேவை திருப்தியாக உள்ளதனை வெளிக்காட்டுகிறது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிலவும் வைத்திய துறைசார் ஆளணித் தட்டுப்பாடு என்பது நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு பிரச்சினையாகும். குறிப்பாக வைத்தியத் துறையின் உயர்திறன் கொண்ட வைத்திய நிபுணர்களின் சேவையானது இவ்விரு மாகாணங்களிலும் தொடரும் பற்றாக்குறையாகவே இருந்து வருகிறது. 2023 இல் கிழக்கு மாகாணத்தில் 219 வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறையாகக் காணப்பட்டதுடன், வடக்கு மாகாணத்தில் இந்த வெற்றிடம் 214 ஆகக் காணப்பட்டது. இது அனுமதிக்கப்பட்ட ஆளணியில் காணப்படும் வெற்றிடத்தைக் காட்டுகின்றது. நிபுணத்துவ திறனுடைய பல வைத்தியர்கள் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வசிப்பவர்களாக இருப்பதனால், இவர்களை இவ்விரு மாகாணங்களிலும் நிரந்தரமாகத் தங்க வைப்பதற்கான விடுதி வசதிகள் குறைவாகக் காணப்படுகிறது. மேலும் அவர்கள் குடும்பமாக வசிப்பதில், பிள்ளைகளை கல்வி கற்க வைப்பதில், பொழுது போக்கு வசதிகளைப் பெறுவதில் பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொள்வதாகவும் குறிப்பிடுகின்றனர். எது எவ்வாறாயினும் வடக்கு – கிழக்கின் தேவைக்காக, குடும்பமாக வந்து தங்கியிருந்து சேவை புரியும் பல தென்னிலங்கை வைத்தியர்களின் சேவையையும் நாம் மறக்க முடியாது. வைத்திய அதிகாரிகளின் நியமனங்களிலும் போதிய அளவு ஆளணியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், மீள் சேவைக்கு இணைக்கப்பட்ட வயது முதிர்ந்த வைத்தியர்களால் கிராமிய வைத்தியசாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தாதிய உத்தியோகத்தர்களில் காணப்படும் அதிகளவான வெற்றிடங்கள் காரணமாக, வடக்கு – கிழக்கில் தாதிய சேவையாளர்கள் இல்லாமல் இயங்கும் பல கிராமிய வைத்தியசாலைகள் அதிகளவில் காணப்படுகின்றன. கணித, விஞ்ஞானத் துறைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளிடமிருந்தே தாதிய சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட வேண்டியிருப்பதால், கிராமங்களிலிருந்து இத்துறையில் கல்வி கற்பவர்கள் மிகக் குறைவாக இருப்பதும், பலர் தாதிய சேவையில் பணியாற்ற விருப்பமற்று இருப்பதும் இவ் வெற்றிடத்துக்கு காரணமாகவுள்ளது. இணை மருத்துவச் சேவை பணியாளர்களின் ஆட்சேர்ப்பில் காணப்படும் தடைகள் காரணமாகவும், மருத்துவ ஆளணியின் சமமற்ற பரம்பல் கிராமிய வைத்தியசாலைகளின் சேவைத் தரத்தைக் குறைத்து விடுகிறது. ஒரு வைத்தியரால் சிகிச்சை அளிக்கக் கூடிய வெளிநோயாளர் எண்ணிக்கையின் இரு மடங்கினை கிராமிய வைத்தியசாலைகளில் பணிபுரிபவர்கள் பராமரிக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளனர்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் குருதிச் சோகை, நிறை குறைவு, குள்ளமாதல் அல்லது வளர்ச்சி குறைவு, அதீத நிறை, வயதுக்கேற்ற உயரம் – நிறையின்மை ஆகிய போசாக்கு சார்ந்த பிரச்சினைகளில், கர்ப்பிணித் தாய்மார்களை அதிகம் பாதிக்கும் நோய்களாக குருதிச்சோகையும் நிறை குறைவும் இருந்து வருகின்றன. வட மாகாணத்தில் 19.9 வீதமான கர்ப்பிணித் தாய்மார்கள் குருதிச்சோகை நோய்ப் பாதிப்புடையவர்களாக இருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் இது 21 சதவீதமாகக் காணப்படுகின்றது. இதே போல வடக்கு மாகாணத்தில் நிறை குறைவுள்ள கர்ப்பிணித் தாய்மார்களின் வீதம் 14.1 ஆகவும், கிழக்கில் இது 16.2 வீதம் ஆகவும் காணப்படுகின்றது. வட மாகாணத்தில் நிறை குறைவுடன் பிறக்கும் பிள்ளைகளின் வீதம் 13.4 ஆகவும், கிழக்கில் இது 14.8 வீதம் ஆகவும் காணப்படுகின்றது. கிழக்கில் வளர்ச்சி குறைவான 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகள், அதாவது வயதுக்கேற்ற உயரம் – நிறையைப் பெற்றிராத பிள்ளைகள், 6112 பேர் காணப்படுகின்றனர். வட மாகாணத்தில் இது 963 ஆகக் காணப்படுகின்றது. வயதுக்கேற்ற உயரமும் நிறையுமற்ற 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் சராசரி வேறு மாகாணங்களுடன் ஒப்பிடும் போது அதிகமாக இருக்கின்றது. வட மாகாணத்தில் 0.3 சதவீதமானவர்கள் அதீத நிறையுடைய பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய தரக் குடும்பங்களில் இருந்து உருவாகும் இப் பிரச்சினையானது முறையற்ற உணவுப் பழக்கத்தினால் ஏற்பட்டு வருகிறது. போசாக்குத் தொடர்பான பிரச்சினைகள், உணவு கிடைக்காமை என்பதனை விட உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாகவே அதிகம் ஏற்பட்டு வருகின்றன. கிராமிய மட்டத்தில் இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய பச்சை இலை வகைகளும், புரதமும் கொழுப்பும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாக நுகரப்படுவதில்லை. மாறாக அளவுக்கதிகமான மாப்பொருளை நுகர்வு செய்தல் காரணமாக மந்த போசணைப் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. விபத்துகள், தற்கொலைகள், இருதய நோய்கள், சிறுநீரகப் பாதிப்புகள், டெங்கு ஆகியன அதீத இறப்புகளை ஏற்படுத்தும் நோய்களாக உள்ளன. விபத்துகளால் பாதிப்படையும் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வகை தொகையின்றி காயமடைவோருக்கு சிகிச்சையளிக்க கணிசமான அளவு அரசநிதி செலவிடப்பட வேண்டியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் வருடாந்தம் 115,045 பேரும், வடக்கு மாகாணத்தில் 97,135 பேரும் விபத்துகளால் பாதிப்படைவது இக் கருத்திற்கு மேலும் வலுச்சேர்க்கிறது. வட மாகாணத்தில் 806 பேரும், கிழக்கு மாகாணத்தில் 7027 பேரும் டெங்கு நோய் காரணமாக கடந்த ஆண்டில் பாதிப்படைந்துள்ளனர். சிறுநீரகப் பாதிப்புக்கு உட்பட்டு சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை கிழக்கு மாகாணத்தில் 3165 ஆகவும், வடக்கு மாகாணத்தில் 2734 ஆகவும் காணப்படுகின்றது.

சுகாதாரத் துறை சார்ந்து இவ்விரு மாகாணங்களிலும் அதிகளவிலான முதலீட்டுடன் கூடிய உள்ளக வசதிகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்ற போதும், கிராமிய மட்டத்தில் இந்தச் சேவைகளை இணைப்புச் செய்வதில் குறைபாடுகள் காணப்படுகின்றன. வீதிகளின் சீரின்மை, வாகனங்களின் பற்றாக்குறை என்பன காரணமாகவும், ஆளணியின்மை காரணமாகவும், மாவட்ட வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களை அனுப்பி வைக்கும் நடைமுறையே நோய் பராமரிப்புச் சேவையில் தொடர்ந்து வருகிறது.


ஒலிவடிவில் கேட்க

2535 பார்வைகள்

About the Author

அமரசிங்கம் கேதீஸ்வரன்

பொருளியல் துறையில் சிரேஷ்ட வளவாளராகவும், பயிற்றுனராகவும் செயற்பட்டு வருகின்ற அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளராவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் இளமாணி மற்றும் முதுமாணிப்பட்டம் பெற்ற இவர் 2012ஆம் ஆண்டு ‘திட்டமிடல் மூல தத்துவங்கள்’ என்ற நூலினை வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்