இறக்காமம் : அனுராதபுரச் சேனாதிபதி அரக்கனுக்காக வரி விலக்கப்பட்ட ஊர்
Arts
17 நிமிட வாசிப்பு

இறக்காமம் : அனுராதபுரச் சேனாதிபதி அரக்கனுக்காக வரி விலக்கப்பட்ட ஊர்

July 30, 2024 | Ezhuna

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.

ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டுகளில் கீழைக்கரையின் அரசியல் நிலவரம் தொடர்பாக தெளிவான தகவல்களெதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் கீழைக்கரையின் நடுப்பகுதியில் வேகம்பற்று வடக்கு (உகணை) இராசக்கல் மலையும் தென் எல்லையில் பாணமைப்பற்று (இலகுகலை) மங்கல மகா விகாரமும் தொடர்ச்சியாக புத்த மையங்களாக இயங்கிக்கொண்டிருந்தன என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன.

முன்பு இலட்சக்கல் என்று அழைக்கப்பட்ட இலகுகலை (லஃகு|கல, lahugala) பொத்துவில்லுக்கு மேற்கே 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள சிங்களக் கிராமம் ஆகும். அங்குள்ள மங்கல மகா விகாரம் (சிங்களம்: ம|குல் மஃகா விஃகார, magul mahā vihāra) ஏராளமான தொல்லியல் இடிபாடுகளைத் தன்வசம் கொண்டுள்ளது. அங்கு கிடைத்த சில கல்வெட்டுகள், அது மகாயான புத்தநெறி சார்ந்த விகாரம் என்று கொள்வதற்கான சான்றுகளைக் கொண்டுள்ளன.

அங்கு மிண்டு என்ற இடத்தைச் சேர்ந்த மிந்து (midu,  மகிந்தன்) என்பவன் புத்தத்துவம் அடைவதற்காக மூன்று கற்களை நட்டான் (Dias, 1991:44). சாதி என்ற இடத்தைச் சேர்ந்த அக்போய் (sāti akbōy அக்கபோதி) என்பவன் மங்கல மகா சைத்தியத்திலுள்ள தாதுகோபத்தின் அடிப்புறத்தில் கல் இட்டிருந்தான். இந்தப் புண்ணியத்தால் தானும் சிகிலையும் (sihilā, சிஃகிலா) புத்தத்துவம் அடையவேண்டும் என்ற வேண்டுதலை அவன் இதில் பொறித்துள்ளான். (Dias, 1991:59) சிகிலை அவன் மனைவி ஆகக்கூடும்.

இன்னொரு கல்வெட்டு பூசுபாணம் எனும் ஊரைச் சேர்ந்த பவிளன் (Pūsubana paviḷan) உதயன் (udas, உட`ச்), மியிமி நாகன் (miyimi naka) ஆகிய மூவருக்கு அக்கபோதி மன்னனால் கொடுக்கப்பட்ட ஊர்களையும் நிலங்களையும் முகலன் என்ற இன்னொருவனுடன் சேர்ந்து இவ்விகாரம் சார்ந்த ஏதோ நடவடிக்கைகளில் ஈடுபட்டதை ஒரு சிதைந்த பலகைக் கல்வெட்டு சொல்கின்றது (Ranawella, 2005:149-150). இதே காலப்பகுதியைச் சேர்ந்த சரியாக வாசிக்கமுடியாத இன்னுமிரு கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.

மங்கல மகாவிகாரக் கல்வெட்டுகளில் வரும் அக்கபோதி மன்னன் அனுரையை ஆண்ட அக்கபோதி மன்னர்களுள் ஒருவன் எனக்கொண்டால், இவ்விகாரம் அக்கால அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் காணப்பட்டது எனக் கொள்ளமுடிகின்றது. விகாரத் திருப்பணிகளில் பங்களித்ததன் மூலம் தாங்கள் புத்தத்துவம் எய்தவேண்டும் என்று பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளே இவ்விகாரத்தின் மகாயானச் சார்பைச் சொல்கின்றன (உரு.01). மகாயானத்தைப் பின்பற்றுவோர் புத்தத்துவத்தை அடைந்து போதிசத்துவராக வீடுபேறு அடைவர் என்பது அச்சமயக் கொள்கை.

இதையொத்த ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளின் இன்னும் இரு கல்வெட்டுகள் இராசக்கல் மலையிலும் இதே காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. தாங்கள் புத்தத்துவத்தை அடையவேண்டும் என்ற கோரிக்கையுடன் மாபவுகெலி விகாரம் (Māpavukæli, மாபவுகெ_லி) என்ற விகாரம் மிகிந்சென் (mihindsen, பாலி: மகிந்தசேனன்) என்பவனால் அமைக்கப்பட்டதை ஒரு பலகைக் கல்வெட்டு சொல்கின்றது (Ranawella, 2005:145). இன்னொரு கல்வெட்டு இங்கிருந்த மருந்தகத்தின் தலைவர் அதன் கிழக்குப்புறச் சுவரில் எட்டு இடபங்களின் உருவங்களைப் பொறித்ததற்காக தான் புத்தத்துவத்தை அடையவேண்டும் எனப் பிரார்த்தித்துள்ளார் (Ranawella, 2005:157)

மருந்துச்சாலைக்கும் இடபங்களுக்குமான தொடர்பு தெளிவாகவில்லை. எனினும் இல்லங்களின் வாயிலில் மங்கல அடையாளமாக இடபங்களை நிறுவுவது இன்றும் இலங்கைத் தமிழ்ச் சைவரிடமுள்ள வழமை. இடபங்கள் சோழராட்சிக்குப் பின்னரேயே சைவ சமயத் தாக்கத்தால் இலங்கைச் சிங்கள அரசர்களால் புனிதமாகக் கருதப்பட்டன என்று இன்று  பொதுக்கருத்தில் உள்ளது. அவ்வாறன்றி அவை சோழருக்கு சற்று முன்பே புனிதமானவையாகக் கருதப்பட்டன என்பதற்காகக் கிடைக்கும் முக்கியமான சான்றுகளில் ஒன்று இது.

எம்மன்னன் காலத்தில் பொறிக்கப்பட்டன என்ற தகவல் கிடைக்காத இன்னும் சில ஒன்பதாம் – பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் இராசக்கல் மலையில் கிடைத்துள்ளன. அங்கு இருந்த அரியாரா விகாரத்தில் பொ.பி 800 – 1000 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அரசாணையின் கீழ் விகடகாரம் என்றோர் மண்டபம் அமைக்கப்பட்டதை ஒரு கல்வெட்டுச் சொல்கின்றது (Ranawella, 2005:114). இன்னொரு கல்வெட்டு இளம் சனபதத்தைச் சேர்ந்த அரச அதிகாரிகளைப் பற்றிச் சொல்கின்றது (Ranawella, 2005:115). இளம் சனபதம் கல்லோயா ஆற்றின் வடகரையில் அமைந்திருந்த ஒரு நிருவாகப் பிரிவு என்பதை போன அத்தியாயத்திலும் பார்த்தோம்.

பத்தாம் நூற்றாண்டின் அரசியற்களத்தில் கீழைக்கரை முக்கியமான நிலப்பரப்பாக நீடித்தது என்பதைச் சொல்லும் சில கல்வெட்டுகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக கிடைத்துள்ளன. அவற்றில் 923 முதல் 925 வரை ஆண்ட நான்காம் தப்புல மன்னனின் அல்லை மற்றும் கொன்றைவட்டவான் கல்வெட்டுகள் குறிப்பிடத்தக்கவை.

நான்காம் தப்புல மன்னன் காலத்தில் தெற்கு உரோகணத்தின் அரசியல் களம் கொதிநிலையில் இருந்தது. “ஒரு அரசனுக்குப் பின்னர் அவனது அதே வம்சத்தில் எஞ்சியுள்ள மூத்த ஆண்மகனே அடுத்து அரியணை ஏற முடியும்” என்ற விந்தையான வழக்கம் நிலவிய காலம் அது. நான்காம் தப்புல மன்னன் அனுராதபுரத்தில் முடிசூடும் போது அவனுக்கு முன் ஆண்ட அவனது மூத்த சகோதரன் ஐந்தாம் காசியப்பனின் மகன் “ஆப்பா மகிந்தன்” ஆதிபாதனாக உரோகணத்தை ஆண்டுகொண்டிருந்தான். ஆக, ஆப்பா மகிந்தன் நான்காம் தப்புலனின் பெறாமகன் தான்.

தன் பாட்டனின் தம்பி இரண்டாம் உதயன் காலத்தில் (887 – 898) உரோகணத்தின் அதிபனாக முடிசூடிக்கொண்ட ஆப்பா மகிந்தன், தன் தந்தை ஐந்தாம் காசியப்பன் (914 – 923) காலம் வரை சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள் உரோகணத்தை தனியாட்சி செய்து வந்தான் (உரு.02).

dynasty

அவன் அனுரை அரியணைக்கு அச்சுறுத்தலாக விளங்குவதை உணர்ந்து கொண்டதாலோ என்னவோ,  நான்காம் தப்புலனின் அடுத்த தம்பி உதயனின் மகனான “இளமேனி மகிந்தன்” என்பவன் தன் ஒன்றுவிட்ட அண்ணன் ஆப்பா மகிந்தனைக் கொன்று உரோகணத்தின் அதிபனாக முடிசூடிக்கொண்டான். இளமேனி மகிந்தனால் நான்காம் தப்புலனின் ஆறாம் ஆட்சியாண்டில் (~930) கபிகந்தூர் நதிக் கரையில் (கபிகந்தூர் ஃகோய், kapikandūr hōy) கப்புகம் பிரிவேனா எனும் புத்தமடம் அமைக்கப்பட்டதை கதிர்காமம் தேட்டகமுவ தூண் கல்வெட்டு சொல்லும். கபிகந்தூர் நதி என்பது இன்றைய மாணிக்க கங்கை. (Ranawella, 2004:31-35)

இப்படி தெற்கு உரோகணத்தின் ஆட்சியதிகாரம் நிலையில்லாமல் இருந்த காலப்பகுதியில் கிழக்கு உரோகணத்தில் அமைதியான ஆட்சியே நீடித்தது என்பதற்கான சான்றுகளாக அல்லை, சோமபுரம் மற்றும் கொன்றைவட்டுவான் கல்வெட்டுகளைச் சொல்லலாம். அல்லைக் கல்வெட்டானது அல்லை – கந்தளாய் வீதியில் மகாவலி கங்கைக்கு அருகாக இன்றைய கொட்டியாரப்பற்று மேற்கு (சேறுநுவரை) பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அக்கல்வெட்டில் தப்புல மன்னனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் அப்பகுதியில் அமைந்திருந்த “கிணிகம் கொத்தசார” கவுதுளு விகாரத்துக்கு வழங்கப்பட்ட மானியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன (Ranawella,  2004:25-280). கிணிகம் கொத்தசாரம், நூறாண்டுகளுக்குப் பின் சோழர் காலத்தில் கணக்கன் கொட்டியாரம் என்றழைக்கப்பட்ட நிருவாகப்பிரிவாகும். கவுதுளு விகாரம் அமைந்திருந்த இடத்துக்கு மிக அருகில் தான் சோழர் திருப்பணிகளைப் பெற்ற திருமங்கலாய் சிவாலயம் அமைந்திருந்தது.

கொன்றைவட்டவான் கல்வெட்டு வேகம்பற்று மத்திய பகுதியிலுள்ள அம்பாறை நகருக்கு அருகே கொன்றைவட்டவான் குளத்தடியில் கண்டெடுக்கப்பட்டது. இதன் அடிப்பகுதி உடைந்திருந்ததால் “இக்கல்வெட்டு இங்கு தான் நடப்பட்டிருந்தது, அல்லது இங்கிருந்து அத்தனை தூரமல்லாத இன்னொரு இடத்தில் நடப்பட்டிருந்தது” என்பார் பேராசிரியர் செனரத் பரணவிதான (EZ. Vol. V, p.126). இது, தப்புலனின் ஆறாம் ஆட்சியாண்டில் “செனவிரத் சங்வா ரகு`ச்”  (senavirad sangvā rakus) என்ற தண்டநாயகனின் கீழ் இருந்த “மெதர திகாமடுல” அலகின் “எரெகம” (ærægama, எ_ர_|கம) கிராமத்திற்கான வரிவிலக்குகள் பற்றிய அரசாணை ஒன்றைச் சொல்கிறது. மெதெர திகாமடுல்ல என்றால் “இந்தப்புற தீர்க்கமண்டலம்” என்று பொருள். அந்நாளைய கிழக்கு உரோகணத்தின் முக்கியமான நிர்வாக அலகான தீர்க்கமண்டலம் கல்லோயா ஆற்றின் வடபுறம் இராசக்கல் மலை வரை நீண்டிருந்தது என்பதைச் சுட்டிக்காட்டி, இக்கல்வெட்டிலுள்ள வசனம், கல்லோயாவின் மறு கரையில் தெற்குப்புறம் இருந்த தீர்க்கமண்டலப் பிரிவைக் குறிக்கும் என்று ஊகிப்பர் ஆய்வாளர்கள் (Ranawella, 2004:72-74).

பரணவிதானவின் ஊகம் சரியென்றால், இங்கு சொல்லப்படும் எரெகம, கொன்றைவட்டுவானுக்குத் தெற்கே கல்லோயா ஆற்றின் இக்கரையில் உள்ள இன்றைய இறக்காமம் கிராமம் தான் எனலாம். இக்கல்வெட்டுச் சொல்லும் தண்டநாயகன்  செனரவித் சங்வா ரகுசை, மகாவம்சத்தில் வரும் தப்புலனின் சேனாபதி “ரக்ககன் இலங்கன்” (rakkhakan ilangan) என்று அடையாளப்படுத்துகிறார்கள். ரக்ககன் என்பது “இரட்சகன்” என்ற வடமொழிச் சொல்லின் பாளி வடிவம். அது சில தமிழ்க்கல்வெட்டுகளில் “அரக்கன்” என்று இடம்பெற்றுள்ளது, தமிழ் அரக்கன், பாளி ரக்ககன், வடமொழி இரட்சகன் என்ற சொற்களின் சிங்கள மொழி வடிவம் “ரக்” என்பதாகும். எனவே “ரக்” இன் கிராமமே ரக்+கம = இன்றைய இறக்காமம்.

நான்காம் தப்புலனின் கொன்றைவட்டவான் கல்வெட்டு கல்லோயா ஆற்றின் கரைப்பகுதி உரோகணத்துக்கும் அனுராதபுரத்துக்குமான அரசியல் சதுரங்கத்தில் முதன்மையான இடம் வகித்தது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள மேலதிக சான்றாகும்.

நான்காம் தப்புலனுக்குப் பின்னர் அவனது சிற்றப்பன் வழித் தம்பியும் உரோகணத்தின் மகாதிபாதன் மகிந்தனின் தந்தையுமான உதயன், மூன்றாம் உதயன் என்ற பெயரில் முடிசூடினான் (935-938). அவனுக்குப் பின்னர் மூன்றாம் உதயனின் உடன்பிறவா தம்பி மூன்றாம் சேனனும் (938 – 946), அவனுக்குப் பின்னர் அவனது உடன்பிறவா தம்பி நான்காம் உதயனும் (946 – 954) ஆட்சிபுரிந்தார்கள் (உரு. 02). இவர்களது எல்லா ஆட்சிக்காலவேளையிலும் இளமேனி மகிந்தனே தெற்கு உரோகணத்தின் ஆதிபாதனாக வீற்றிருந்தான் என்பது தெரிகிறது. இவன் ஆட்சியின் வடக்கெல்லை எது, தீர்க்கமண்டலத்திலும் இவனது ஆதிக்கம் இருந்ததா என்பது தெளிவில்லை.

நான்காம் உதயன் ஆட்சிக் காலத்திலும் நாம் முன்பு கண்ட இரு இடங்களும் முக்கியமான இடங்களாகத் திகழ்ந்தன. கொட்டியாரப்பற்றில் வானடிப்பாலம், சோமபுரம் ஆகிய இடங்களிலும் வேகம்பற்றின் அருகே சம்மாந்துறைப்பற்று வளத்தாப்பிட்டிக்கு அருகேயும் நான்காம் உதயனின் சிங்களக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. வானடிப்பாலம் கல்வெட்டு சேறுநுவரைக்கு அருகே இருந்த “மெண்டியா திகின்னரு கொத்தசாரம்” என்ற இன்னொரு நிருவாகப்பிரிவைப் பற்றிச் சொல்கின்றது. அங்கிருந்த களித்துறை என்ற ஊரில் இருந்த தமிழ் விகாரத்துக்குச் சொந்தமான தசகமத்துக்கு (அல்லது பத்து ஊருக்கு) நான்காம் உதயனின் இரண்டா ஆட்சியாண்டில் வழங்கப்பட்ட வரிவிலக்குகள் பற்றி இக்கல்வெட்டு விவரிக்கின்றது (Ranawella, 2004:187-191)

சோமபுரம் இன்று சேறுநுவரை என்று அறியப்படும் அல்லையிலிருந்து மேற்கே 3 கி.மீ தொலைவிலுள்ள ஒரு பிற்காலக் குடியேற்றக் கிராமம். அங்கும் நான்காம் உதயனின் இரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று கிடைத்தது. அதில் அங்கிருந்த தமிழ் விகாரத்துக்கு உரிய வரிவிலக்குகள் விவரிக்கப்படுகின்றன (Ranawella, 2004:202-204).

அம்பாறை நகருக்கு அருகே வளத்தாப்பிட்டிக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு சிங்களக் கல்வெட்டு உதயனின் நான்காம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது. “மேதர திகாமடுல்ல”வில் நீலக்கல் விகாரத்துக்குச் சொந்தமாக இருந்த “முந்தரலாகாமம்” எனும் ஊருக்கான வரிவிலக்குகள் இதில் காணப்படுகின்றன. மேதர திகாமடுல்ல சுமார் இருபதாண்டுகளுக்கு முந்தைய நான்காம் தப்புலனின் கொன்றைவட்டுவான் கல்வெட்டிலும் காணப்படுகின்றது என்பதை நாம் இங்கு நினைவுகூரலாம். முந்தரலாகாமம் அல்லது நீலக்கல் விகாரம் இக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட இடத்தில் அமைந்திருக்கக்கூடும். நீலக்கல் விகாரம் எனும் விகாரத்தை முதலம் உதய மன்னன் (797 – 801) அமைத்ததாக மகாவம்சம் சொல்லும்.

ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இன்னும் பல கல்வெட்டுகள் கீழைக்கரைப் பகுதியில் கிடைத்துள்ளன. அவற்றில் கொட்டியாபுரப்பற்று மேற்கு சேறுவில் பகுதியில் கிடைத்த மூன்று கல்வெட்டுகள் குறிப்பிடத்தக்கவை. சேறுவில் பகுதியில் இன்றைய சேறுவில் விகாரத்திலும் இன்னொன்று அதற்கு அருகிலும், மூன்றாவது கொட்டியாரப்பற்று மேற்கு (சேறுநுவர) தெகிவத்தையிலுள்ள மண்டலகிரி விகாரத்திலும் கிடைத்தன. விந்தனைப்பற்று வடக்கு உகணையில் கிடைத்த ஒரு கல்வெட்டு அபய சலாமேகன் என்ற பட்டம் கொண்ட யாரோ ஒரு மன்னனின் ஆறாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது. இவை எல்லாமே புத்த மதத்தோடு நேரடியாகத் தொடர்புபட்ட பழஞ்சிங்களக் கல்வெட்டுகள் (Ranawella, 2004:54,67,85,159).

தொகுத்து நோக்கும் போது, கீழைக்கரையின் வட எல்லையில் கொட்டியாரப்பற்றும் தென்னெல்லையில் பாணமைப்பற்றும் நடுப்பகுதியில் வேகம்பற்று, விந்தனைப்பற்று, சம்மாந்துறைப்பற்று ஆகியனவும் ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டுகளில் பெருமளவு இயங்கிக்கொண்டிருந்த மக்கள் குடியிருப்புகளாக விளங்கின என்பதை உறுதியாகக் கூறலாம். இவை அனுராதபுர அரசர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இருந்த உரோகணப் பகுதிகள் என்பது கல்வெட்டுச் சான்றுகளால் தெரியவருகின்றது. மேலும் கொட்டியாரப்பற்றுப் பகுதியில் கிடைக்கும் தமிழ் விகாரங்கள் பற்றிய குறிப்புகள் அங்கு தமிழ்ப்புத்த சமயம் செழித்து வளர்ந்து கொண்டிருந்தது என்பதற்கான முக்கியமான சான்றாகும்.

அடிக்குறிப்புகள்

  1. மலையாளத்திலும் இலங்கைத் தமிழ் வட்டார வழக்குகளிலும் பவளம், பவிளம் என்றே அழைக்கப்படுகின்றது. பவிளன் (பவளன், பவளம் போன்றவன்) ஒரு தமிழனாகலாம்.
  2. ஐந்தாம் காசியப்பனின் காலக் கல்வெட்டொன்று விந்தனைப்பற்று கிழக்கு (மகா ஓயா) நிலோபே எனும் இடத்தில் கிடைத்துள்ளது (Ranawella, 2004:19-21).

உசாத்துணைகள்:

  1. Dias, M. (1991). Epigraphical Notes, No.s 1 – 18, Colombo: Department of Archaeology.
  2. Geiger, Wilhelm. 1998. Culavamsa Part I, New Delhi-Madras: Asian Educational Services.
  3. Ranawella, S. (2004), Inscriptions of Ceylon, V(II), Colombo: Department of Archaeology.
  4. Ranawella, S. (2005), Inscriptions of Ceylon, V(III), Colombo: Department of Archaeology.

இவ்வத்தியாயத்தில் பிறமொழி ஒலிப்புக்களை சரியாக உச்சரிப்பதற்காக, ISO 15919 ஐத் தழுவி உருவாக்கப்பட்ட தமிழ் ஒலிக்கீறுகள் (Diacritics) பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஒலிக்கீறுகளின் முழுப்பட்டியலை இங்கு காணலாம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4901 பார்வைகள்

About the Author

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • September 2024 (11)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)