இந்தத் தொடரின் சென்ற இரண்டு கட்டுரைகளில் லெயுசிக்காம் நிலப்படத் தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படத்தின் சில அம்சங்கள் குறித்து ஆராய்ந்தோம். இனி யாழ்ப்பாணக் கட்டளையகத்தின் பல்வேறு பிரிவுகளை விவரமாகக் காட்டும் நிலப்படங்கள் தரும் தகவல்கள் குறித்துப் பார்க்கலாம்.
லெயுசிக்காமின் தொகுப்பில் யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படத்துக்கு அடுத்ததாக யாழ்ப்பாணப் பட்டினத்தின் நான்கு பிரிவுகளையும் அதற்கு அயலிலுள்ள தீவுகளையும் ஒருங்கே காட்டும் நிலப்படம் உள்ளது (படம்-1). ஒல்லாந்தின் தேசிய ஆவணக்காப்பகத்தில் ‘4.VELH 328.13’ என்னும் இலக்கத்தையுடைய இந்த நிலப்படம் ஒரு நீளமான தலைப்பைக் கொண்டுள்ளது. இதை, “யாழ்ப்பாணப் பட்டினத்தின் நான்கு பெரும் பிரிவுகளையும் அருகிலுள்ள மக்கள் வாழுகின்றனவும் வாழாதனவுமான தீவுகளையும், ஒவ்வொரு பிரிவினதும் அளவையும், அவற்றில் எத்தனை கோவிற்பற்றுகளும் கிராமங்களும் உள்ளன என்பதையும், அவற்றின் பெயர்கள், முக்கியமான சாலைகள், குளங்கள், யானைப் பந்திகள், ஒவ்வொரு கிராமத்துக்குமுரிய தேவாலயங்கள் என்பவற்றைத் தனித்தனியாகவும், குளங்களை நீலநிறத்திலும் காட்டும் நிலப்படம்” எனத் தமிழில் கூறலாம். இத்தலைப்பு நிலப்படத்தின் உள்ளடக்கத்தை விவரமாக விளக்குகிறது.
லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நான்கு பிரிவுகளான வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி ஆகியவற்றையும் வேலணைத்தீவு, காரைதீவு, எழுவைதீவு, அனலைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு, புங்குடுதீவு ஆகிய ஏழு தீவுகளையும் தனித்தனியாகக் காட்டும் நிலப்படங்களும் அடங்குகின்றன. எனவே அப்பகுதிகளுக்குச் சிறப்பான விவரங்களை இனி வரக்கூடிய கட்டுரைகளில் விளக்குவோம். இந்தக் கட்டுரையில் தனித்தனிப் பிரிவுகளின் நிலப்படங்களில் இல்லாத தகவல்கள் அல்லது அந்நிலப்படங்களினூடாகப் போதிய அளவு விளக்கமுடியாத விடயங்கள் பற்றியும் நிலப்படம் காட்டும் அனைத்துப் பகுதிகளுக்கும் பொதுவான விடயங்கள் குறித்தும் பார்க்கலாம்.
இந்தக் கட்டுரையில் கையாள எடுத்துக்கொண்ட நிலப்படமும் தொகுப்பில் இதற்குப் பின்னர் வருகின்ற நிலப்படங்களும் அக்காலத்து நிர்வாகப் பிரிவுகளையும் அவை தொடர்பான குறிப்புகளையும் இயற்கையானவையும் மனிதரால் உருவாக்கப்பட்டனவுமான அம்சங்களையும் துல்லியமாகக் காட்டுகின்றன. இதனால், மேற்படி நிலப்படங்களே இலங்கையின் முதல் விவரமான நிலவுருவப் படங்களாகக் கொள்ளப்படலாம் என்ற கருத்து உண்டு1.
கடல்நீரேரிகள்
யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள்ளும் அதை அண்டியும் பல கடல்நீரேரிகள் காணப்படுகின்றன. வடமராட்சியை வலிகாமம், தென்மராட்சி ஆகியவற்றிலிருந்து பிரிப்பது தொண்டமானாறு நீரேரி எனவும், வலிகாமத்துக்கும் தென்மராட்சிக்கும் இடையில் உள்ளது உப்பாறு எனவும் ஆனையிறவுக்கு மேற்கே குடாநாட்டுக்கும் தலைநிலத்துக்கும் இடையிலும் தொடர்ந்து வேலணை, காரைநகர் ஆகிய தீவுகளுக்கும் வலிகாமத்துக்கும் இடையிலும் அமைவது யாழ்ப்பாணக் கடல்நீரேரி எனவும், ஆனையிறவுக்கும் சுண்டிக்குளத்துக்கும் இடையில் இருப்பது சுண்டிக்குளம் நீரேரி எனவும் தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. போர்த்துக்கேய, ஒல்லாந்த ஆவணங்களிலும் அக்கால நூல்களிலும் இவை அனைத்தையும் ஆறுகள் எனவே குறிப்பிட்டனர். இவற்றுள் தொண்டமானாறு, உப்பாறு ஆகிய நீரேரிகளின் தமிழ்ப் பெயர்களும் ஆறு என்ற பின்னொட்டைக் கொண்டுள்ளன. இங்கே எடுத்துக்கொண்ட லெயுசிக்காமின் நிலப்படத்தில் பெரும்பாலான நீரேரிகளுக்குக் குறிப்பான பெயர்கள் தரப்படவில்லை. ஆனால், தொண்டமானாறு நீரேரியின் கடலுக்கு அண்மித்த பகுதியைத் தொண்டமானாறு (Tondemanar) என்ற தமிழ்ப் பெயராலேயே குறிப்பிட்டுள்ளனர். இது, மேற்படி பெயர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்துக்கு முன்பிருந்தே புழக்கத்திலிருந்ததைக் காட்டுவதாகக் கொள்ளலாம். ஆனாலும், இதன் உட்பகுதியை, “ஏரி” எனப் பொருள்படும் “Lack” என்னும் ஒல்லாந்தச் சொல்லால் மட்டுமே குறித்துள்ளனர். உப்பாறுக்குத் தமிழ்ப் பெயரை அவ்வாறே நிலப்படத்தில் பயன்படுத்தவில்லை. ஆனால், அதே பொருள் தரக்கூடிய ஒல்லாந்தச் சொல் (Zoute Revier) பயன்பட்டுள்ளது. உப்பாறு என்ற தமிழ்ப் பெயரை மொழிபெயர்த்து நிலப்படத்தில் பயன்படுத்தினரா அல்லது ஒல்லாந்தச் சொல்லிலிருந்து தமிழ்ப் பெயர் உருவானதா என்பது தெளிவில்லை. மற்றைய நீரேரிகளுக்கு நிலப்படத்தில் பெயர் குறிப்பிடவில்லை.
தீவுகள்
ஒல்லாந்தரின் இந்தியப் பகுதிகளுக்கான ஆளுநர் நாயகம் ரைக்குளோஃப் வான் கூன்ஸ் 1658 இல் யாழ்ப்பாணத்தின் கட்டளைத் தளபதி அந்தனி பவிலியனுக்கு எழுதிய வழிகாட்டற் குறிப்பில் யாழ்ப்பாணக் கட்டளையகத்துக்கு உட்பட்டதாக மக்கள் வாழுகின்ற எட்டுத் தீவுகளும் மக்கள் வாழாத ஐந்து தீவுகளும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேற்படி ஆவணத்தின்படி மக்கள் வாழும் எட்டுத் தீவுகள் 1) காரைதீவு (அம்ஸ்டர்டாம்), 2) வேலணைத்தீவு (லேடன்), 3) புங்குடுதீவு (மிடெல்பேர்க்), 4) நெடுந்தீவு (டெல்ஃப்ட்), 5) நயினாதீவு (ஹார்லெம்), 6) அனலைதீவு (ரொட்டர்டாம்), 7-8) இரணைதீவு (ஹூர்ன் – என்குயிசென்) என்பனவாகும். மக்கள் வாழாத தீவுகள் 1) எழுவைதீவு, 2) வறண்ட தீவு, 3) பாலைதீவு, 4) கவுச்சே, 5) கச்சத்தீவு என்பன.2 இங்கு கவுச்சே எனக் குறிப்பிடப்படும் தீவு எது எனத் தெரியவில்லை. நெடுந்தீவுக்கும் பாலைதீவுக்கும் இடையில் அமைந்துள்ள காக்கரத்தீவாக இது இருக்கக்கூடும். 1974 ஆண்டில் இந்திய, இலங்கை அரசாங்கங்களிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கைக்கு உரியதாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோதும், அவ்வப்போது இத்தீவைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் எழுவது வழக்கம். ஆனால், யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் கைப்பற்றிய காலத்திலேயே (1658) இத்தீவு யாழ்ப்பாணத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததை மேற்படி குறிப்புத் தெளிவாகக் காட்டுகிறது. ஆனாலும், லெயுசிக்காம் தொகுப்பிலுள்ள எந்தவொரு நிலப்படமும் இத்தீவைக் குறித்துக் காட்டவில்லை. இது மக்கள் வாழாததாகவும் பிற வகைகளில் முக்கியத்துவம் குறைந்ததாகவும் அளவிற் சிறிதாகவும் இருந்தது இதற்குக் காரணம் ஆகலாம்.
மேற்படி குறிப்பிலிருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய காலத்தில், ஓரளவு பெரிய தீவுகளுள் ஒன்றான எழுவைதீவும் மக்கள் வாழாத ஒரு தீவாகவே இருந்துள்ளதாகத் தெரிகிறது.3 நிலப்படத்தில் இதற்கு ஒல்லாந்தர் வழங்கிய “பயனற்ற தீவு” எனப் பொருள்படக்கூடிய Woest Eijland என்னும் ஒல்லாந்தப் பெயர் காணப்படுவது இதை ஓரளவு விளக்குகிறது. போர்த்துக்கேயரும் இதைப் “பாலைநிலத் தீவு” என்னும் பொருளில் “இல்கா டெசெர்ட்டா” (Ilha Deserta) என அழைத்தனர்.4 ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய காலத்தில் எழுவைதீவில் மக்கள் வாழாததாலேயே, ஏனைய தீவுகளுக்கு இட்டதுபோல், எழுவை தீவுக்குத் தமது நாட்டின் நகரமொன்றின் பெயரை வழங்கவில்லை எனத் தோன்றுகிறது. மேற்படி வான் கூன்சின் குறிப்பின் காலத்திலிருந்து 60 ஆண்டுகள் (1658 – 1719) கழிந்த பின்னரே லெயுசிக்காமின் நிலப்படங்கள் வரையப்பட்டுள்ளன. இக்காலப் பகுதியில் எழுவைதீவில் மக்கள் குடியேறியிருக்கக்கூடும்.
நிலப்படத்தில், மண்டைதீவை ஒரு தனித் தீவாக வரைந்து காட்டியிருந்தாலும், நிலப்படத்தின் விளக்கக் குறிப்பில் அதைத் தனியாகப் பெயர் குறித்துப் பட்டியலிடவில்லை. இது தனிக் கோயிற்பற்றாக இல்லாமல் அல்லைப்பிட்டிக் கோயிற்பற்றின் ஒரு பகுதியாக இருந்ததால் பட்டியலில் தனியாகச் சேர்ப்பதைத் தவிர்த்திருக்கலாம். அதேவேளை 1658 ஆம் ஆண்டில் வான் கூன்ஸ் எழுதிய குறிப்பிலும் தீவுகளைப் பட்டியலிடும்போது மண்டைதீவை ஒரு தீவாகக் குறிப்பிடவில்லை. அக்காலத்திலும், அதை லெய்டன் தீவின் (வேலணைத்தீவு) ஒரு பகுதியாகக் கருதியதாகவே தெரிகிறது.
மேலே குறிப்பிட்ட தீவுகளுள் நெடுந்தீவு, இரணைதீவு, பாலைதீவு, கவுச்சே, கச்சத்தீவு என்பன நிலப்படத்தில் இல்லை. இவை குடாநாட்டிலிருந்து தொலைவில் இருப்பதால் நிலப்படத்தில் அடங்காமல் இருந்திருக்கலாம். ஆனாலும், இந்த நிலப்படம் பெரிய தீவுகளுடன் அண்டியிருக்கும் பல சிறிய தீவுகளைப் பெயர் குறித்துக் காட்டுகிறது. மேற்படி தீவுகளைப் பெயர் குறித்துக்காட்டும் மிகப்பழைய நிலப்படம் இதுவே. யாழ்ப்பாணத்துக்கும் மண்டைதீவுக்கும் இடையிலுள்ள சிறுத்தீவு, வேலணைத் தீவுக்கும் புங்குடுதீவுக்கும் இடையில் உள்ள நரியன்புட்டி, கண்ணாத்தீவு, பெரிய கண்ணாத்தீவு, சின்னக்கண்ணாத்தீவு, வாரிப்புட்டி ஆகியவையும் புங்குடுதீவை அண்டி கேரதீவு, பள்ளத்தீவு, குறிகாட்டுவான், நடுவில்துருத்தி என்பவையும் அனலைதீவுக்கு அருகில் புளியந்தீவு, பருத்தித்தீவு ஆகியனவும் காரைநகருக்கு அருகில் துருத்துப்புட்டியும் தனித்தனியான தீவுகளாகக் காட்டப்பட்டுள்ளன. (படம்-2, 3)
யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படத்தில் நிர்வாகப் பிரிவுகளான கோவிற்பற்றுகள் குறிக்கப்பட்டிருப்பதுபற்றி ஏற்கெனவே குறிப்பிட்டோம். இந்த நிலப்படம் கோவிற்பற்றுகளுடன் அவற்றின் துணைப்பிரிவுகளான ஊர்களின் பெயர்களையும் அவற்றின் எல்லைகளையும் காட்டுகிறது. நிலப்படத்தில் தரப்பட்டுள்ள விளக்கக் குறிப்பில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பெரும் பிரிவுகளான வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி என்பவற்றிலும் தீவுப் பகுதியிலும் இருந்த கோவிற்பற்றுப் பிரிவுகள் தனித்தனியே பட்டியலிடப்பட்டுள்ளன. இதன்படி, வலிகாமத்தில் 14 பிரிவுகளும் வடமராட்சியில் 3 பிரிவுகளும் தென்மராட்சியில் 5 பிரிவுகளும் பச்சிலைப்பள்ளியில் 4 பிரிவுகளும் தீவுப் பகுதியில் 7 பிரிவுகளுமாக மொத்தம் 33 பிரிவுகளின் பெயர்கள் பட்டியலில் உள்ளன. குடாநாட்டின் கோவிற்பற்றுப் பிரிவுகளைப் பற்றியும் அவற்றின் துணைப்பிரிவுகளைப் பற்றியும் பெரும் பிரிவுகளைத் தனித்தனியாகக் காட்டும் நிலப்படங்களை விவரிக்கும்போது பார்க்கலாம். இங்கே தீவுப் பகுதியின் பிரிவுகளை எடுத்துக்கொள்ளலாம். விளக்கக் குறிப்பின்படி தீவுப் பகுதியில் மொத்தம் 7 கோவிற்பற்றுப் பிரிவுகள் உள்ளன. இவற்றுள் வேலணைத்தீவில் மட்டும் ஊராத்துறை, வேலணை, அல்லைப்பிட்டி ஆகிய மூன்று பிரிவுகள் காணப்படுகின்றன. காரைதீவு, புங்குடுதீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகள் ஒவ்வொன்றும் தனித்தனியான கோவிற்பற்றுப் பிரிவுகள். பெரிய தீவுகளுள் ஒன்றான நெடுந்தீவு இந்தப் பட்டியலில் இல்லை. ஆனால், லெயுசிகாம் தொகுப்பிலுள்ள வேறு நிலப்படங்களில் நெடுந்தீவில் தேவாலயம் காட்டப்பட்டுள்ளது.
மக்கள் வாழும் தீவுகளுக்கு ஒல்லாந்தர் தமது நாட்டிலுள்ள நகரங்களின் பெயர்களை இட்டது பற்றி முன்னரே அறிந்தோம். இந்த நிலப்படத்தில் இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஐந்து தீவுகள் உள்ளன. (படம்-3) மேற்படி தீவுகளுக்குப் பெயர் குறிக்கும்போது ஒல்லாந்தர் இட்ட பெயர்களுக்கே முதன்மை கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, உள்ளூரில் வழங்கிய பெயர்களும் போர்த்துக்கேயர் வழங்கிய பெயர்களும் சேர்த்தே குறிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இதனால், நிலப்படத்தில் சில தீவுகளுக்கு மூன்று பெயர்கள் தரப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக அனலைதீவுக்கு ரொட்டர்டாம் (Rotterdam) என்ற ஒல்லாந்தப் பெயருக்கு முதன்மை கொடுத்துள்ளதுடன் போர்த்துக்கேயருடைய காலத்தில் வழக்கிலிருந்த டொனா கிளாரா (Donneclara) என்ற பெயரையும் உள்ளூர்ப் பெயரான அனலைதீவையும் குறித்துள்ளனர். ஒல்லாந்தப் பெயர்கள் இல்லாத தீவுகளுக்கு உள்ளூர்ப் பெயர்களையோ போர்த்துக்கேயர் புழங்கிய பெயர்களையோ முதன்மையாகக் குறிப்பிட்டுள்ளதைக் காணமுடிகிறது. போர்த்துக்கேயர் நாட்டைவிட்டுப் போய் 60 ஆண்டுகளுக்குப் பின்னரும் போர்த்துக்கேயப் பெயர்கள் நிலப்படத்தில் இருப்பது, அப்பெயர்கள் தொடர்ந்து வழக்கில் இருந்ததை அல்லது பழைய ஆவணங்களில் அப்பெயர்கள் இருந்ததால் அவற்றை அடையாளம் காண்பதற்கு வசதியாக அவற்றைக் குறிக்கவேண்டிய தேவை இருந்ததைக் காட்டுகிறது எனக் கொள்ளலாம்.
தீவுகளுக்கு வழங்கிய ஒல்லாந்தப் பெயர்கள் தொடர்பில் வேறு ஆவணங்களில் காணப்படாத தகவல் ஒன்றை இந்த நிலப்படத்தில் காணமுடிகிறது. கரையூருக்கும் மண்டைதீவுக்கும் இடையில் உள்ள சிறிய தீவான சிறுத்தீவுக்கும் “ஒன்ரஸ்ட்” (Onrust) என்னும் இன்னொரு பெயர் காணப்படுகிறது. இந்தப் பெயருக்கான காரணம் குறித்துத் தெளிவில்லை. ஒல்லாந்தருடைய மொழியில் இச்சொல்லுக்கு “அமைதியின்மை”, “ஓய்வின்மை” முதலிய பொருள்கள் உள்ளன. இதே பெயரில் 17 ஆம் நூற்றாண்டில் பெயர்பெற்ற ஒல்லாந்தக் கப்பல் ஒன்றும் இருந்துள்ளது. ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு 45 ஆண்டுகளுக்கு முன்பே அக்கப்பல் தீயினால் அழிந்துவிட்டது.5 எனவே, இக்கப்பலின் பெயருக்கும் சிறுத்தீவுக்கு அப்பெயர் இடப்பட்டதற்கு தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை. அதேவேளை, ஒல்லாந்தக் கிழக்கிந்தியப் பகுதிகளுக்கான தலைமையிடமாக இருந்த பத்தேவியாவுக்கு அண்மையில் இருந்த ஒரு தீவின் பெயரும் “ஒன்ரஸ்ட்” இத்தீவில் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் கடற்படைத் தளம் ஒன்றும் இருந்தது.6 இந்தப் பெயரையே சிறுத்தீவுக்கும் இட்டு வழங்கியிருக்கக்கூடும். சிறுத்தீவுக்கு இப்பெயரை இட்டதன் பின்னணி என்ன என்பதுபற்றியோ மேற்படி இரண்டு தீவுகளுக்குமிடையில் ஏதாவது ஒற்றுமை காணப்பட்டது குறித்தோ தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எவ்வாறாயினும், இப்பெயர் சிறுத்தீவுக்குப் பரவலாகப் பயன்பட்டதாகத் தெரியவில்லை. இந்தப் பெயர் குறித்து மேலும் ஆராய்வதற்கு இடமுண்டு.
வீதிகள்
குடாநாட்டுக்குள் காட்டியுள்ள வீதிகளை நோக்கும்போது அவை அனைத்தும் அக்காலத்திலிருந்த கிறித்தவத் தேவாலயங்களை இணைக்கும் வகையில் இருப்பது தெரிகிறது. உண்மையில் இவைதான் அக்காலத்திலிருந்த வீதிகளா அல்லது தேவாலயங்களை இணைக்கும் வீதிகளை மட்டும் நிலப்படத்தில் காட்டியுள்ளனரா என்பது தெரியவில்லை. ஒல்லாந்தர் பயன்படுத்திய தேவாலயங்கள் அனைத்தும் போர்த்துக்கேயர் அமைத்தவை. எனவே, மேற்படி வீதிகளும் போர்த்துக்கேயர் காலத்தைச் சேர்ந்தவையா அல்லது ஒல்லாந்தர் காலத்துக்கு உரியவையா என்பதும் தெளிவில்லை. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் முதற் சில ஆண்டுகள் யாழ்ப்பாணத்திலிருந்த ஒல்லாந்தப் போதகரான போல்தேயஸ் தனது நூலில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்த தேவாலயங்களைப் பற்றி விளக்கியுள்ளார்.7 அவர் விளக்கிய ஒழுங்கையும், அவற்றுக்கிடையேயான தொடர்புகள் குறித்து அவர் தந்துள்ள தகவல்களையும் பார்க்கும்போது போர்த்துக்கேயர் காலத்திலேயே லெயுசிக்காம் நிலப்படத்தில் உள்ளது போன்ற ஏதோவொரு வகையான வீதித்தொடர்பு இருந்திருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. இதுபற்றி மேலும் விவரமாகப் பின்னர் பார்க்கலாம்.
நிலப்படத்திலுள்ள வீதிகளுள் பெரும்பிரிவுகளை இணைக்கும் வீதிகள் மூன்று. ஒன்று யாழ்ப்பாண நகரத்திலிருந்து பருத்தித்துறைக்குச் செல்கிறது. இது வலிகாமப் பெரும்பிரிவிலுள்ள அச்சுவேலிப் பிரிவுக்கும் வடமராட்சிப் பெரும்பிரிவில் இருக்கும் உடுப்பிட்டிப் பிரிவுக்கும் இடையே கடல்நீரேரியைக் கடக்கிறது. இதுபோலவே யாழ்ப்பாண நகரத்தையும் தென்மராட்சி, பச்சிலைப்பள்ளிப் பெரும்பிரிவுகளையும் இணைக்கும் வீதி, வலிகாமத்திலுள்ள சிவியாதெருப் பிரிவுக்கும் தென்மராசியிலுள்ள நாவற்குழிப் பிரிவுக்குமிடையே உப்பாற்றைக் கடக்கிறது. பருத்தித்துறையைத் தென்மராட்சியுடன் இணைக்கும் வீதி வடமராட்சியிலுள்ள துன்னாலைப் பிரிவுக்கும் தென்மராட்சியிலுள்ள வரணிப் பிரிவுக்கும் இடையே நீரேரியைக் கடக்கிறது. மேற்குறிப்பிட்ட மூன்று வீதிகளும் நீரேரியைக் கடக்கும் இடங்கள் ஆழம் குறைந்தவை என்பதால் வறட்சிக் காலங்களில் நீர் வற்றியிருக்கும்போது இப்பகுதியூடாகத் தரைவழிப் போக்குவரத்துச் செய்ய முடிந்திருக்கும். மழை காலங்களில் நீர்வழிப் போக்குவரத்துச் சாதனங்களைப் பயன்படுத்தியிருக்கக்கூடும். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை அண்டியே எல்லாப் பருவகாலங்களிலும் வசதியாகப் போக்குவரத்துச் செய்யக்கூடிய வகையில் இவ்வீதிகள் மேம்படுத்தப்பட்டு, அவை நீரேரியைக் கடக்கும் இடங்களில் மரத்தாலான பாலங்களும் அமைக்கப்பட்டன.
குறிப்புகள்
- Rob van Diessen and Bert Nelemans, Comprehensive Atlas of the Dutch United East India Company – IV Ceylon (Voorburg: Asia Maior/ Atlas Maior, 2010), 242.
- Instructions from the Governor-General and Council of India to the Governor of Ceylon 1656-1665, trans. Sophia Pieters (Colombo: Ceylon Government Printer, 1908), 84.
- Instructions from the Governor-General, 84.
- Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959),338.
- Onrust Island, Wikipedia, https://en.wikipedia.org/wiki/Onrust, accessed 2024-May-4.
- Onrust, Wikipedia, https://en.wikipedia.org/wiki/Onrust_Island, accessed 2024-May-4.
- Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon,” 318-340.
தொடரும்.