யாழ்ப்பாணத்தின் சாதிக் கட்டமைப்பும் சமூக உறவுகளும் : பன்முகநோக்கு - பாகம் 3
Arts
12 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தின் சாதிக் கட்டமைப்பும் சமூக உறவுகளும் : பன்முகநோக்கு – பாகம் 3

August 30, 2024 | Ezhuna

‘யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்’ என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது. இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் தன்மையுடைய நேரிய பகுப்பாய்வு தன்மைகளாக அமையும் ஆய்வுக்கட்டுரைகளின் ஊடாக யாழ்ப்பாணத்தின் சமூக கட்டமைப்பு, சாதியும் வர்க்கமும் சமயமும், சமய சடங்குகளும் சாதியமும், குடும்பம் திருமணம் ஆகிய சமூக நிறுவனங்களும் சாதியமும் ஆகியன இந்தத் தொடரில் வரலாற்று நோக்கில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகள் போராட்டங்கள் என்பவற்றை வரலாற்று நோக்கில் விபரிப்பதாகவும் இந்தத்தொடர் அமைகிறது.

மானிடவியலாளர் பேரின்பநாயகத்தின் கட்டுரை

‘CASTE, RELIGION AND RITUAL IN CEYLON’ என்ற தலைப்பில் றொபர்ட் சித்தார்த்தன் பேரின்பநாயகம் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் ‘யாழ்ப்பாணத்தில் சாதி, சமயம், சடங்கு’ என்னும் தலைப்பில் இந்நூலில் இடம்பெறுகிறது. இக் கட்டுரையினை பேரின்பநாயகம் 1965 ஆம் ஆண்டில் எழுதினார். ஏறக்குறைய 60 ஆண்டுகள் கடந்தபின் இக்கட்டுரை தமிழாக்கம் மூலமாக தமிழ் அறிவுலகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணச் சமூகம் பற்றி ‘THE KARMIC THEATER – SELF, SOCIETY AND ASTROLOGY IN JAFFNA’ என்னும் இவரது ஆய்வு நூல் 1982 இல் ‘த யூனிவேர்ட் சிட்டி ஒவ் மசா சூ செட் பிரஸ்’ வெளியீடாக வந்துள்ளது. இந்நூலும் தமிழ்ச் சமூகத்தின் கவனத்தைப் பெறவில்லை. பெரும்பான்மையான அறிவாளிகளுக்கு மேற்படி தலைப்பில் ஒரு நூல் எழுதப்பட்டுள்ளது பற்றித் தெரியாது என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடுதல் பொருத்தமானது.

யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பு, சமயம், சடங்கு என்னும் மூன்று விடயங்களுக்கும் இடையிலான தொடர்புகளைப் பேரின்பநாயகம்  இக்கட்டுரையில் ஆராய்கிறார். அவரது கட்டுரையில் மூவகைச் சடங்குகள் விபரிக்கப்பட்டுள்ளன.

அ) பெருநெறி (Great Tradition) சார்ந்த விநாயகர், முருகன், சிவன், காளி முதலிய தெய்வங்களுக்கான கோவில்களில் நடைபெறும் சடங்குகள்.

ஆ) அண்ணமார், காத்தவராயர், பெரியதம்பிரான் ஆகிய நாட்டார் தெய்வங்களுக்கான கோவில்களில் நடைபெறும் சடங்குகள்.

இ) வீட்டுச் சடங்குகள்

இவ்வகை வீட்டுச் சடங்குகளில் இருவகை உள்ளன.

   I. திருமணம், பூப்புச் சடங்கு முதலியன

   ii. மரணச்சடங்கு

கோவில், குடும்பம் என்ற இரு நிறுவனங்கள் சார்ந்து நடைபெறும் இச்சடங்குகளில் சாதியின் வகிபாகம் குறித்து இக்கட்டுரை விளக்குகிறது. யாழ்ப்பாணத்தின் வகைமாதிரியான கிராமப் பின்னணியில் இச்சடங்குகளைப் பேரின்பநாயகம் விபரிக்கின்றார்.

கற்பனை மாதிரி

கோவில், குடும்பம் என்ற இரு நிறுவனங்கள் சார்ந்து நடைபெறும் சமயச் சார்புடைய இச்சடங்குகளில் யாழ்ப்பாணத்தின் 8 – 10 வரையான சாதிகள் மட்டுமே பங்கேற்கின்றன. அத்தோடு சடங்குகளோடு தொடர்புடைய அனைத்துச் சாதிகளும் ஒருசேர ஒரே கிராமத்தில் வசிப்பதில்லை. இவற்றுள் சில சாதிகள் ஒரு கிராமத்தின் எல்லைக்குள் வதிவனவாகவும், ஏனைய சாதிகள் அயல் கிராமங்களில் வதிவனவாகவும் இருக்கும். இந்நிலையில் சடங்கியல் சேவைகளாடு (Ritual Services) தொடர்புடைய எல்லாச் சாதிகளும் ஒருங்கே வதியும் கற்பனை மாதிரிக் (Ideal Type) கிராமம் ஒன்றில் சடங்குகளும், அவை சார்ந்த சமூக உறவுகளும் நடைபெறுவதாகவே கட்டுரையின் வருணிப்பு அமைந்துள்ளது.

பெருநெறிக் கோவில்களின் சடங்குகள்

இக்கோவில்களின் உடைமையாளர்களாக வேளாளர்கள் உள்ளனர். இக்கோவில்களில் ஆகம முறைப்படி சமயச் சடங்குகள் நடைபெறும். இவ்வகைக் கோவில்களின் பூசகர்களாகப் பிராமணர்கள் சேவை செய்கின்றனர்.

பெருநெறிக் கோவில்களின் பூசைகளும் சடங்குகளும் சமஸ்கிருத நெறிப்படி, புனித நூல்களில் கூறப்பட்ட விதிமுறைகளின்படி நடத்தப்படும். பெருநெறிக் கோவில்களில் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் பூசைகள் நடைபெறுகின்ற போதிலும் வழிபடுவோர் பூசைகளில் கலந்து கொள்வதில்லை. விதிவிலக்காக ஓரிருவர் பூசை நேரம் வந்து வழிபட்டுச் செல்வதுண்டு. வெள்ளிக்கிழமைகளில் விசேட பூசைகள் நடைபெறுவதுண்டு. அத்தினத்தில் காலையிலும், மாலையிலும் பலர் கலந்து கொள்வதுண்டு. வேளாளர் குடும்பங்கள் சிலவற்றின் உடமையாக உள்ள இவ்வகைக் கோவில்களின் நிர்வாகம் வேளாளர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. ஒரு கிராமத்தில் இருக்கும் பெருநெறிக் கோவில்களை விட நாட்டார் தெய்வக் கோவில்களின் எண்ணிக்கை கூடிய அளவினதாக இருக்கும்.

பெருநெறிக் கோவில்களில் ஆண்டுத் திருவிழா முக்கியமான நிகழ்வு ஆகும். பெருநெறிக் கோவிலின் ஆண்டுத் திருவிழாவில் கிராமத்தின் பல்வேறு சமூகக் குழுக்களும் பங்கேற்கும் முறையினை இக்கட்டுரை நுணுக்க விபரங்களுடன் பதிவு செய்துள்ளது. இவ்விபரிப்பு மானிடவியலாளர் ஒருவரின் கூர்மையான அவதானிப்பின் படியான பதிவாகும். 1960 களில் யாழ்ப்பாணத்தின் சைவக் கோவில்களின் நடைமுறைகள் பற்றிய இந்த வருணிப்பை 2024 ஆம் ஆண்டின் கிராமத்துச் சைவக் கோவில்களின் நடைமுறைகளோடு ஒப்பிட்டு ஆராய்தல் பயனுடையதொரு ஆய்வாக இருக்கும். அத்தகைய ஆய்வு, பேரின்பநாயகம் குறிப்பிடும் 8 – 10 வரையான சாதிகளில் எத்தனை சாதிகள் இன்றும் சைவக்கோவில் சடங்குகளுடன் சம்பந்தப்பட்டுள்ளன, சாதி – சமயம் – சடங்குத் தொடர்புகள் இன்று எவ்வாறு மாற்றமுற்றுள்ளன என்பவற்றை அறிவதற்கும் உதவும்.

நாட்டார் தெய்வக் கோவில்களின் சடங்குகள்

நாட்டார் தெய்வக் கோவில்கள் பல்வேறு சாதியினரின் உடைமையாக இருந்தன. இவற்றின் நிர்வாகமும் அவ்வச் சாதிகளால் நடத்தப்பட்டன. ‘வேள்வி’ எனப்படும் மிருகபலி இக்கோவில்களில் 1960 களில் முக்கியம் வாய்ந்த ஆண்டு விழா நிகழ்வாக இருந்தது. நாட்டார் தெய்வக் கோவில்களில் ஆகம விதிகளின் படியான சடங்குகள் இடம்பெறுவதில்லை. வேளாளர்களை மையப்படுத்திய வெவ்வேறு சாதிகளின் சடங்கியல்சார் சேவைகளும் ஆகம நெறிப்படியான கோவில்களிற்கு மட்டுமே உரியவை.

கடந்த 60 ஆண்டு காலத்தில் சமஸ்கிருத மயமாக்கம் (Sanskritisation) நாட்டார் தெய்வக் கோவில்களின் நடைமுறைகளை மாற்றியுள்ளது.  

பேரின்பநாயகம் அவர்களின் கட்டுரையில் தரப்பட்டுள்ள பதிவுகள் 1960 களின் நிலைமைகளைத் தெரிந்து கொள்தற்கும், இன்றைய மாற்றங்களோடு ஒப்பிடுவதற்கும் உதவுவனவாக உள்ளன.

வீட்டுச் சடங்குகள்

வேளாளர்களின் வீட்டுத் திருமணச் சடங்குகளில் 1960 களில் 5 சமூகப் பிரிவினர் சம்பந்தப்பட்டிருந்தனர். இச்சமூகப் பிரிவினர்களின் சேவைகள் மரபுவழிப்பட்ட கடமைகள் (Traditional Duties) என்ற இயல்பை உடையனவாய் இருந்தன. கடந்த 60 ஆண்டு காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் சடங்கியல் சேவைகளிற்கான (Ritual Services) தேவையை இல்லாமல் செய்துவிட்டன. பிராமணருடைய சேவை மட்டும் பணத்தைக் கொடுத்துப் பெற்றுக் கொள்ளும் சேவை என்ற நிலைக்கு மாறியுள்ளது. வீட்டுச் சடங்குகளில் சாதி – சமயம் – சடங்குத் தொடர்புகள் மீளாய்வுக்கு உரியன.

மரணச் சடங்குகளில் 1960 களில் சாதிகளின் சடங்கியல் சேவைகளின் (Ritual Services) வகிபாகமும், 2024 இல் அவற்றின் வகிபாகமும் ஒப்பிட்டு ஆராயப்பட வேண்டும். பேரின்பநாயகம் அவர்களின் கட்டுரை சாதி – சமயம் – சடங்கு பற்றிய மானிடவியல் சித்திரிப்பு; அக்கட்டுரை ஒரு வரலாற்று ஆவணத்தின் சிறப்புகளை உடையது.

அரசியல் நோக்கு

அரசியல் நோக்கு எனும் மூன்றாவது பிரிவில் இரு கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. 8 ஆவது அத்தியாயமான பிறையன் பவ்வன் பேர்ஜரின் கட்டுரை ‘இலங்கையின் வடபகுதியில் 1968 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆலயப் பிரவேச நெருக்கடி’ பற்றியது. பவ்வன் பேர்ஜர் ஒரு மானிடவியலாளர். சாவகச்சேரியில் கள ஆய்வினை நடத்திய பவ்வன் பேர்ஜர் ‘CASTE IN TAMIL CULTURE: THE RELIGIOUS FOUNDATIONS OF SUDRA DOMINATION IN TAMIL SRILANKA (1982) என்னும் ஆய்வு நூலை எழுதினார். 1970 களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தின் அரசியல் களநிலையை நன்கு அவதானித்த அவரின் மேற்குறித்த அரசியல் கட்டுரை மிக முக்கியமானதொரு ஆய்வு. கவனிப்பைப் பெறாத இவ்வாய்வின் தழுவலாக்கத்தைப் பொருத்தம் கருதி இந்நூலில் சேர்த்துள்ளோம்.

தற்காப்புத் தேசியவாதம்

1968 இல் தோன்றிய மாவிட்டபுரம் ஆலயப் பிரவேச நெருக்கடி, நீறுபூத்த நெருப்பாக இருந்த சாதிப் பிரச்சினையை, பற்றி எரியும் பிரச்சினையாக மாற்றியது. இரும்புக் கம்பிகள், மண் அடைக்கப்பட்ட போத்தல்கள் என்பன கொண்டு சாதி வெறியர்கள் ஆலயப் பிரவேசத்தைக் கோரி நின்ற சத்தியாக்கிரகிகள் மீது தாக்குதல் தொடுத்தனர் எனக் குறிப்பிடும் பவ்வன் பேர்ஜர், அதே ஆண்டில் பாரிஸ் நகரில் மாணவர்கள் வீதிகளில் இறங்கி மறியல் செய்து நிகழ்த்திய பெருங் கிளர்ச்சியுடன் மாவிட்டபுரம் கிளர்ச்சியை ஒப்பிடுகிறார். மாவிட்டபுரம் நெருக்கடி ஒரு பத்தாண்டு எல்லைக்குள் (1968 – 1978) தணிந்தது. யாழ்ப்பாணம், தமிழ் இளைஞர்களின் கிளர்ச்சி என்ற இன்னொரு கிளர்ச்சியால் மிகப்பெரிய கொந்தளிப்பு நிலைக்குள் மூழ்கியது என பவ்வன் பேர்ஜர் குறிப்பிடுகிறார். 1978 வரை பல இடங்களில் ஆலயப் பிரவேசத்தை ஒட்டிய சச்சரவுகள் இடையிடையே ஏற்பட்டதேனும் மாவிட்டபுரம் சச்சரவைத் தொடர்ந்து தமிழ்ச் சமூகம் அரசியல் ஐக்கியத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

மாவிட்டபுரம் நெருக்கடி உள்ளக முரண்பாடுகள் முற்றிய நிலையில் ஏற்பட்டது. வெளியில் இருந்து சிங்கள மேலாதிக்கத்தால் ஏற்பட்ட ஆபத்துகள், உயர்சாதி வேளாளர்களும் தாழ்த்தப்பட்டோரும் ஐக்கியப்பட்டு, அரசுக்கு எதிரான அரசியல் கிளர்ச்சியில் ஓரணியில் திரள வழிவகுத்தது என்று பவ்வன் பேர்ஜர் கூறுகிறார். இவ்வாறாக வட இலங்கையில் தமிழர்களிடையே மேற்கிளர்ந்த எழுச்சியை பவ்வன் பேர்ஜர் ‘தற்காப்புத் தேசியவாதம்’ (Defensive Nationalism) எனக் கூறுகின்றார். தமிழ் அரசியல்வாதிகளும் தங்கள் சமூகம் சிதைவடைவதைத் தடுத்து ஐக்கியப்படுத்திப் பாதுகாப்பதற்காகத் தற்காப்புத் தேசியவாதத்தைத் தேர்ந்து கொண்டனர் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

வரலாற்றாசிரியரான அரசரத்தினம் அவர்களும், மானிடவியலாளர்களான மைக்கல் பாங்ஸ், கென்னத் டேவிட், பேரின்பநாயகம் ஆகியோரும் கூறியிருக்கும் கருத்துகளைத் தொகுத்து, டச்சுக்காலம் முதல் 1968 இன் மாவிட்டபுர ஆலயப் பிரவேச நெருக்கடி வரையான ஏறக்குயை 300 ஆண்டு காலத்தின் சாதிய வரலாற்றைப் பகுப்பாய்வு முறையில் விளக்கிக் கூறும் கட்டுரையாக பவ்வன் பேர்ஜரின் கட்டுரை அமைந்துள்ளதெனலாம். இவ்வாறு வரலாற்று நோக்கிலான பகுப்பாய்வை வழங்கும் பவ்வன் பேர்ஜர் 1970 கள் முதல் யாழ்ப்பாணம் ‘இளைஞர் கிளர்ச்சி’ என்னும் அரசியல் மடைமாற்றத்திற்கு உட்படுவதை எடுத்துக் காட்டுகிறார். 1968 – 1978 காலத்தின் இந்த அரசியல் மடை மாற்றம் வடபகுதியின் அரசியல் மாற்றத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவுவதாக உள்ளது.

ஏ.ஜே. வில்சன் அவர்களின் ஆய்வுரை

அரசியல் விஞ்ஞானத்துறைப் பேராசிரியரான ஏ.ஜே. வில்சன் அவர்கள் ‘SRI LANKAN TAMIL NATIONALISM : ITS ORIGINS AND DEVELOPMENT IN THE NINETEENTH AND TWENTIETH CENTURIES’ என்னும் நூலை 2000 ஆம் ஆண்டில் வெளியிட்டார். இந்நூலின் இரண்டாவது அத்தியாயம் இலங்கைத் தமிழர்களின் சாதியமைப்புப் பற்றியது. தமிழர்களின் அரசியல் ஒருங்கிணைவில் சாதியின் வகிபாகத்தைப் பேராசிரியர் இக்கட்டுரையில் ஆராய்ந்துள்ளார். பேராசிரியரின் கட்டுரையின் தழுவலாக்கமாக ‘இலங்கைத் தமிழர்களின் சமூகக் கட்டமைப்பும் இனவரைவியலும் : யாழ்ப்பாணத்தின் வேளாளர் சமூகக் குழுவின் வரலாறும் பிற சமூகக் குழுக்களுடன் அதன் உறவு நிலையும்’ என்னும் தலைப்பிலான கட்டுரை அமைந்துள்ளது.

தமிழர் சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகள்

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட அரசியல், நிர்வாக மாற்றங்களின் பயனாக தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு – கிழக்கு மாகாணங்கள், ஒன்றிணைந்த பிரதேசமாகவும், தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடமாகவும், தனித்துவ அடையாளத்தைப் பெற்றது. இவ்வாறான ஒன்றிணைதல் ஏற்பட்ட காலத்தில், இலங்கைத் தமிழர்களிடையே மூன்று பிரதேசங்கள் சார்ந்ததான ஏற்றத் தாழ்வுகள் வெளிப்பட்டன எனப் பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் குறிப்பிடுகிறார். இம் மூன்று பிரதேசங்களாவன:

1.     யாழ்ப்பாணத் தமிழர்களின் யாழ்ப்பாணக் குடாநாடு

2.     மட்டக்களப்புத் தமிழர்களின் கிழக்கு மாகாணம்

3.     மேற்கு மாகாணத்தின் கொழும்புத் தமிழர்களின் கொழும்பு நகரம்

1920 கள் தொடக்கம் தமிழர் அரசியலில் கொழும்புத் தமிழ்த் தலைமை செல்வாக்குச் செலுத்தியது. 1948 இன் பின்னர் அரசியல் தலைமைத்துவம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பிராந்தியங்களை நோக்கி நகர்ந்தது. இம் மாற்றத்தை வில்சன் அவர்கள் தமது கட்டுரையின் முற்பகுதியில் விபரித்துக் கூறுகிறார்.

யாழ்ப்பாணத்தின் சாதிமுறை

1619 இல் யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சியுடன் யாழ்ப்பாணச் சாதி முறையில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டது என்ற கருத்தை ஏ.ஜே. வில்சன் இக்கட்டுரையில் தெளிவாக எடுத்துக் கூறுகிறார். வரலாற்றாசிரியர் அரசரத்தினம் அவர்களை மேற்கோள் காட்டும் வில்சன் அவர்கள் நில உடைமையாளர்களான வேளாளர்கள், மடப்பள்ளிகள், அகமுடையார், தனக்காரர் என்னும் நான்கு – ஐந்து வெவ்வேறு சமூகக் குழுக்கள் ஒன்றிணைந்து வேளாளர் என்ற பெருங்கூட்டான சாதி உருவானது; இந்த உருவாக்கம் யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சியின் பின் உள்ள 400 ஆண்டு காலத்தில் படிப்படியாக நிறைவேறியது என்ற கருத்தை தனது கட்டுரையில் அழுத்திக் கூறுகிறார். இப் பெருங்கூட்டில் செட்டிகள், பரதேசிகள், மலையாளிகள் என்னும் சமூகக் குழுக்களும் ஒன்றிணைந்தன என்றும் அவர் குறிப்பிடுகிறார். ‘வேளாளர்கள்’ என்ற பொதுப் பெயரில் யாழ்ப்பாணத்தின் மேலாண்மையுடைய சமூகக் குழுக்கள் ஒன்றிணைவதற்கு தூய்மை – துடக்கு என்னும் சாதியக் கருத்தியல் தடையாக இருக்கவில்லை. இதற்குக் காரணம் யாழ்ப்பாணத்தில் பிராமணர் சாதி முக்கியத்துவம் உடையதல்ல. வேளாளர்களின் சேவகர்களான யாழ்ப்பாணத்துப் பிராமணர்கள், பொருளாதார நிலையிலும் உலகியல்சார் விடயங்களிலும் வேளாளர்களிலும் தாழ்ந்த படிநிலையிலேயே இருந்தனர். பிராமணியக் கருத்தியல் தென்னிந்தியா போன்று யாழ்ப்பாணத்தில் முக்கியத்துவம் பெறவில்லை. வேளாளர் ஒன்றிணைந்த சாதியாக உருவாக்கம் பெற்ற வரலாறு பேராசிரியர் சி. அரசரத்தினம் அவர்களால் நன்கு ஆராய்ந்து விளக்கிக் கூறப்பட்டது. இதனையே பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் வழிமொழிகிறார்.

மீன்பிடியும் கடல் வர்த்தகமும்

ஏ.ஜே. வில்சன் அவர்களின் கட்டுரையில் தமிழ்ச் சமூகத்தில் ‘கரையார்’ சமூகக்குழு தனித்துவம் மிக்கதாக வளர்ச்சி பெற்றதை எடுத்துக் காட்டியுள்ளார். கரையார் ஒரு போதும் வேளாளர் மேலாதிக்கத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கவில்லை. மீன்பிடியும் கடல் வர்த்தகமும் அச் சமூகத்தினைரைத் தனித்துவமும் சுயாதீனமும் உடைய சமூகமாக வளர உதவியது. மீன்பிடித் தொழிலோடு கப்பல் ஓட்டுதல், கடற் சண்டை ஆகியவற்றிலும் வல்லவர்களாய் இவர்கள் விளங்கினர். இவர்களுள் கடலோடிகள் என்ற பிரிவினர் முயற்சியாண்மை மிக்கவர்களாயும் பணம் படைத்தவர்களாயும் இருந்தனர்.

இந்தியா – பர்மா ஆகிய நாடுகளுடனான வர்த்தகத்தில் இவர்கள் ஈடுபட்டனர். புகையிலை, சங்கு ஆகியவற்றை ஏற்றி அனுப்புவதிலும், இந்தியா – பர்மா ஆகிய நாடுகளில் இருந்து அரிசியைக் கப்பல்களில் ஏற்றி வருவதிலும் இவர்கள் ஈடுபட்டனர். வர்த்தகத்தில் செல்வம் ஈட்டிய யாழ்ப்பாணத்துக் கரையார் சமூகம், கிழக்கு மாகாணத்தில் காணிகள் புதிதாக பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்ட காலத்தில் நெல் வயல்களிலும், தென்னந் தோட்டங்களிலும் முதலீடு செய்தார்கள்.

மட்டக்களப்பின் கரையார் நில உடைமையாளர்களுடன் திருமண உறவுகளை வலுப்படுத்தி, வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையே சமூக உறவுகளை இச்சமூகத்தினர் வலுப்படுத்தினர். யாழ்ப்பாணத்தின் வேளாளர்களுக்கும் கரையார் சமூகத்திற்கும் இடையே பகை உறவுகள் இருக்கவில்லை. கரையார் சமூகத்தின் தலைமைக்கான ஆபத்து, வெளியில் இருந்து, பிரித்தானியர்களின் கொள்கை காரணமாக எழுந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர், பிரித்தானிய அரசு கடலோடிகளின் யாழ்ப்பாணம் – இந்தியா – பர்மா வர்த்தகத்தைத் தடை செய்தது. 1950 இன் பின்னர் இலங்கை அரசும் கடலோடிகளின் வர்த்தக முயற்சிகளைக் கட்டுப்படுத்தியது.

அரசியல் ஒருங்கிணைப்பு  

அரசியல் ஒருங்கிணைவுக்கு தடையாக அமைவது சாதி அடிப்படையிலான சமூகப் பிளவுகளாகும் என்பதையும் ஏ.ஜே. வில்சனின் கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. யாழ்ப்பாணத்தின் சனத்தொகையில் பெரும்பான்மையாகவும், கிராமப் பகுதிகளில் மேலாதிக்கமுடையதாகவும் இருந்த வேளாளர் சாதியினர் ‘அகமண முறை’ காரணமாய் பிளவுபட்டிருந்தனர். ஆயினும் 20 ஆம் நூற்றாண்டில் பின்வரும் காரணிகளின் தூண்டுதலால் கிராமங்களைக் கடந்த ஐக்கியமும் ஒருங்கிணைவும் வளர்ச்சியடைந்தது:

1.     நவீனமயமாதல்

2.     அச்சுத் தொழிலின் வளர்ச்சி 

3.     தமிழ் மொழி வெகுஜன ஊடகமாதல்

4.     வெகுஜன ஊடகங்களின் விருத்தி

5.     நவீன போக்குவரத்து

6.     வெளியில் இருந்து வரும் ஆபத்து அல்லது பொது எதிரி

மேலே இறுதியாகக் குறிப்பிட்ட வெளியில் இருந்து வரும் ஆபத்து அல்லது பொது எதிரி என்பதையே பவ்வன் பேர்ஜர் ‘தற்காப்புத் தேசியவாதம்’ எனக் குறிப்பிட்டார்.

முடிவுரை

பேரின்பநாயகத்தின் கட்டுரை 1965 இல் எழுதப்பட்டது. சாதி – சமயம் – சடங்கு ஆகிய மூன்று விடயங்களுக்கிடையிலான உறவுகளை விபரிக்கும் இக்கட்டுரை, கொந்தளிப்புகள் எதுவும் இல்லாத, அமைதியான யாழ்ப்பாணச் சமூகத்தின் வாழ்வியலைச் சித்தரிக்கிறது. பவ்வன் பேர்ஜர் அமைதியான யாழ்ப்பாணத்திற்கு மாறுபட்ட பெரும் கொந்தளிப்பு நிலை, 1968 இல் மாவிட்டபுரம் ஆலயப் பிரவேச நெருக்கடியால் ஏற்பட்டதை எடுத்துக் காட்டுகிறார்.

ஆயினும் ஆச்சரியம் தரும் வகையில் 1968 முதல் 1978 வரையான பத்தாண்டு காலத்தில் சாதி மோதல்கள் யாழ்ப்பாணத்தில் தணிந்தன. யாழ்ப்பாணச் சமூகம் ‘இளைஞர் கிளர்ச்சி’ என்னும் பிறிதோர் கொந்தளிப்புக்குள் ஆழ்ந்தது என பவ்வன் பேர்ஜர் குறிப்பிடுகிறார். ஏ.ஜே. வில்சன் அவர்கள் யாழ்ப்பாணம் என்ற எல்லையைத் தாண்டிய, இலங்கைத் தமிழர்கள் என்ற முழுமையை உள்ளடக்கிய தேசியவாத எழுச்சியையும், தமிழர்கள் ஐக்கியப்பட்டு சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமைப்பட்டுப் பயணிப்பதையும் எடுத்துக் கூறுகிறார்.

வரலாறு, மானிடவியல், அரசியல் விஞ்ஞானம் என்னும் மூன்று சமூக அறிவியல்துறை ஆய்வாளர்கள் எண்மரின் ஒன்பது கட்டுரைகளைத் தாங்கி வரும் ‘யாழ்ப்பாணத்துச் சாதியம்’ என்னும் இந்நூல் ஓர் அறிவியல் பொக்கிசமாகும். ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முற்பட்ட கால யாழ்ப்பாணச் சமூகம் பற்றி இந்நூல் வழங்கும் பின்நோக்குப் பார்வை, நிகழ்காலப் போக்குகளை மதிப்பீடு செய்வதற்கு பேருதவியாக அமையும் என்பது எமது நம்பிக்கை. 


ஒலிவடிவில் கேட்க

4381 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (8)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)