யாழ்ப்பாணக் கோட்டையின் அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகள் - ஒரு புதிய பார்வை - பகுதி 2
Arts
18 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணக் கோட்டையின் அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகள் – ஒரு புதிய பார்வை – பகுதி 2

June 15, 2023 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

கோட்டைப் பிரதேசத்தின் பூர்வீக மக்கள்

யாழ்ப்பாண நகரின் தொன்மையும் சிறப்பும் பற்றிய வரலாற்று ஆய்வில் அந்நியரான போர்த்துக்கேயர் கட்டிய கோட்டையுடன் முதன்மைப்படுத்திப் பார்க்கும் மரபு நீண்ட காலமாக இருந்து வருகின்றது. ஆனால் 2010 இல் இருந்து இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்து வரும் ஆதாரங்கள் கோட்டை அமைந்த இடத்திற்குத் தொன்மையான தொடர்ச்சியான நீண்ட பாரம்பரிய வரலாறு உண்டு என்பதும், அவ்வரலாற்றுப் பின்புலம் தான் இவ்விடத்தைக் கோட்டை கட்டுவதற்குப் பொருத்தமான இடமாகப் போர்த்துக்கேயர் தெரிவு செய்திருக்கலாம் என்பதும் தெரியவருகின்றது. கோட்டைக்கு மிகக் கிட்டிய தொலைவில் கிழக்கே அரியாலை, பூம்புகார், தென்கிழக்கே மண்ணித்தலை, கல்முனை, தெற்கே சாட்டி, மேற்கே ஆனைக்கோட்டை முதலான இடங்களில் யாழ்ப்பாணத்தின் தொடக்ககால மக்களான பெருங்கற்கால அல்லது ஆதி இரும்புக்காலப் பண்பாட்டுக்குரிய மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனால் அப்பண்பாட்டுக்குரிய மக்கள் கோட்டை அமைந்துள்ள பிரதேசத்திலும் வாழ்ந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. கந்தரோடையில் 1970களில் இந்தப் பண்பாடு பற்றி ஆய்வு நடாத்திய அமெரிக்க பென்சில்வேனியப் பல்கலைக்கழக அரும்பொருள்  ஆய்வாளர் விமலாபேக்கிலே கந்தரோடைப் பண்பாடு தமிழகப் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் கொண்டுள்ள நெருங்கிய ஒற்றுமையைச் சுட்டிக்காட்டி கந்தரோடையில் வாழ்ந்த பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கலாம் அல்லது கந்தரோடையில் வாழ்ந்த மக்கள் தமிழகத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கலாம் எனக் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

சுடுமண் சிற்பம் (2)

கோட்டைக்குள் ஐரோப்பியர் பயன்படுத்திய இருப்பிடங்களுக்கு முன்னால் நடாத்தப்பட்ட அகழ்வாய்வில் ஏறத்தாழ கி.பி1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உரோம மட்கலன்களைத் தொடர்ந்து அதன் கீழ் உள்ள கலாசாரப் படை கோட்டைப் பிரதேசத்தில் வாழ்ந்த தொடக்க காலக் குடியிருப்புகளுக்கு உரியதாகக் காணப்படுகின்றது. ஆயினும் இந்த அகழ்வாய்வின் போது பெருமளவு உரோம மட்கலன்களைக் கண்டுபிடித்த போதும் அதன் கீழ் அமைந்த கலாசாரப் படையை ஆய்வு செய்வதற்கு ஆய்வுக் குழிக்குள் கடல் நீர் உட்புகுந்தமை பெரும் தடையாகக் காணப்பட்டது. ஆயினும் இந்தக் கலாசாரப் படையில் இருந்தும், உரோம மட்கலன்களுடன் கலந்த நிலையிலும் பலவகை மட்கலன்களைக் கண்டறிய முடிந்தது. அவற்றுள் சில பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய கறுப்பு-சிவப்பு நிற மட்பாண்ட ஓடுகளாகும். அந்த மட்பாண்ட ஓடுகளில் மென்மைத் தன்மை பெருங்கற்கால மட்பாண்ட ஓடுகளை விடக் குறைவடைந்து காணப்படுகின்றது. ஆயினும் இதன் மேற்படையிலுள்ள உரோம மட்கலன்களின் (Rouletted Wares) காலம் கி. பி 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததால் அதற்கு முற்பட்ட குடியிருப்புக்களுக்குரிய கலாசார காலம் கி. மு 3 ஆம் அல்லது கி. மு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக எடுத்துக்கொள்ள இடமுண்டு. ஆயினும் பேராசிரியர் கனிங்காம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கோட்டை அகழ்வாய்வில் கண்டுபிடித்த கறுப்பு – சிவப்பு நிற மட்பாண்டத்தின் காலம் கி.மு 700 எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து இற்றைக்கு 2700 ஆண்டுகளுக்கு முன்னரே கோட்டைப் பிரதேசத்தில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

ஆய்வின்போது-கிடைக்கப்பெற்றவை-1

இந்தக்குடியிருப்புக்கள் தொடர்ந்தும் இங்கு நிலைத்திருந்ததை இப்பிராந்தியத்தில் கிடைத்த சற்றுப் பிற்பட்ட காலத் தொல்லியல் ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. அவற்றுள் இங்கு கிடைத்த நாட்டுப்புற தெய்வங்களுக்குரிய சுடுமண் சிற்பம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இந்தச்சிற்பம் கோட்டையின் மேற்குப் புறத்தில் அமைந்துள்ள (Site-08) கோட்டை அரணின் (Rampart) அத்திபாரத்தின் கீழ் நிலமட்டத்திலிருந்து 4. 5 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டதாகும். முற்றாக அழிவடைந்த இவ்வரணின் அத்திபாரம் இயந்திரத்தின் உதவியோடு தோண்டியெடுக்கப்பட்டதனால் அதன் கீழ் அமைந்திருந்த கலாசார அடுக்குகள் குழம்பிய நிலையில் காணப்பட்டன. ஆயினும் இந்தச்சிற்பத்துடன் பலவகை மட்பாண்டங்களும், செங்கட்டிகளும்  வெளிவந்ததனால் இக்கோட்டை அரண் கட்டப்படுவதற்கு முன்னர் அவ்விடத்தில் குடியிருப்பு அல்லது ஆலயம் இருந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. மண்ணோடு மண்ணாகக் காணப்பட்ட இச்சிற்பத்தின் வரலாற்றுப் பெறுமதியை உணர்ந்த இவ்விடத்தின் புனரமைப்புக்கு பொறுப்பாகவிருந்த ஆய்வு மேற்பார்வையாளர் திருமதி ராகினி, இச்சிற்பத்தை சரிவர அடையாளம் கண்டு உரியமுறையில் துப்பரவு செய்து அதைத் தொல்லியல் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார். சுடுமண்ணால் அமைந்த இச்சிற்பம் 6. 3 செ.மீ உயரமும் 6.6 செ.மீ அகலமும் 2. 5 செ.மீ சுற்றளவும் கொண்டது. இது அச்சினால் வடிவமைக்கப்பட்ட புடைப்புச் சிற்பம் என்பதை அதன் வடிவமைப்பும், அதன் உருவங்களும் உணர்த்துகின்றன. பெருமளவுக்கு வட்டவடிவில் அமைந்த இச்சுடுமண் தட்டின் ஒரு பக்கத்தில் மூன்று உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இரண்டு பெண் உருவங்கள் என்பது தெளிவாகக் காணப்படுகின்றன. மூன்றாவது உருவம் ஆணுக்குரியதெனப் பேராசிரியர் இரகுபதி கூறுகின்றார். இச்சிற்பத்தை ஒரு இடத்தில் வைத்து வழிபடுவதற்கு ஏற்ற வகையில் அதன் கீழ்ப்பகுதியில் தட்டையான பீடம் காணப்படுவதுடன் அதன் மேற்பகுதி திருவாசி போன்ற வடிவில் செதுக்கப்பட்டு அதன் மேற்பகுதியில் சிறிய முடியொன்றும் காணப்படுகின்றது.

தமிழகத்தில் கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்து ஆகம மரபில் கற்களைப் பயன்படுத்தி ஆலயங்கள், தெய்வச் சிலைகள், சிற்பங்கள் வடிவமைப்பதற்கு முன்னர் சுடுமண்ணால் செய்யப்பட்ட சிலைகள், சிற்பங்களை அக்கால மக்கள் வழிபட்டு வந்தனர். இதற்கு தமிழகத்தில் மாளிகைமேடு, அரிக்கமேடு, மாமல்லபுரம் முதலான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் போது கிடைத்த சுடுமண் சிற்பங்கள் சான்றாகும். இதற்குப் பழந்தமிழ் இலக்கியங்களிலும் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. இம்மரபு சமகால இலங்கை இந்துக் கலை மரபிலும் பின்பற்றப்பட்டதற்கு பல ஆதாரங்கள் உண்டு. அண்மையில் வவுனியா மாவட்டத்தில் சாஸ்திரிகூழாம்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் இது போன்ற சிற்பங்கள் கிடைத்துள்ளன. இதனால் யாழ்ப்பாணக் கோட்டையில் கிடைத்த இச்சிற்பத்தை அக்காலத்தில்  கோட்டைப் பகுதியில் வாழ்ந்த மக்களால் வழிபடப்பட்ட நாட்டுப்புறத் தெய்வங்களாகக் கருத இடமுண்டு. 

இலங்கையில் புராதன குடியிருப்பு மையங்களில் காணப்பட்ட சான்றுகளுள் பெண் உருவம் பொறித்த நீள் சதுர நாணயம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். பல அளவுகளிலும், பல வடிவங்களிலும் அமைந்த இந்நாணயம் கி.மு 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 5ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்ததாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. வட இலங்கையின் புராதன குடியிருப்பு மையங்களில் இவ்வகை நாணயங்களே அதிக அளவில் கிடைத்துள்ளன. இந்நாணயங்கள் இலங்கையில் வெளியிடப்பட்டதென்பதற்கு அந்நாணயங்களை வடிவமைப்பதற்குப் பயன்படுத்திய சுடுமண் அச்சுக்கள் புராதன குடியிருப்பு மையங்களில் கிடைத்திருப்பது சான்றாகும். இந் நாணயங்களை இலங்கையின் குறுநில அரசர்கள், வணிகக் குழுக்கள் வெளியிட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. 1917 இல் கந்தரோடையில் களவாய்வினை மேற்கொண்ட ’போல் பீரிஸ்’ இவ்வகை நாணயங்களைக் கண்டுபிடித்து அதில் உள்ள பெண் உருவம் தாமரை மலரில் நிற்பது போல் பொறிக்கப்பட்டுள்ளதை ஆதாரமாகக் காட்டி அதற்கு லக்சுமி நாணயம் என முதன் முதலாகப் பெயரிட்டுள்ளார். அவரால் இடப்பட்ட பெயரே இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணக் கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்விலும் இவ்வகை நாணயங்கள் கிடைத்துள்ளன. இவ்வாதாரம் இங்கு புராதன குடியிருப்புக்கள் இருந்ததற்கு மேலும் சான்றாகும். 

கோட்டைப் பிரதேசமும் அயல்நாட்டுத் தொடர்புகளும் 

யாழ்ப்பாணக் கடல்நீரேரியுடன் இணைந்துள்ள யாழ்ப்பாணக் கோட்டையின் அமைவிடம் தென்னிந்தியாவின் தென்பகுதியில் குறிப்பாக தமிழகத்திற்கு மிக அண்மையில் அமைந்துள்ளது. இலங்கை வரலாறு இந்தியப் பண்பாட்டுச் செல்வாக்கிற்குட்பட்டு வந்தாலும் அதன் ஆதிகால, இடைக்கால அரசியல் பொருளாதார பண்பாட்டு வரலாறு பெருமளவுக்கு தமிழகத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டு வளர்ந்ததற்கே அதிக சான்றுகள் காணப்படுகின்றன. அதில் இலங்கைத் தமிழக உறவின் குறுக்கு நிலமாக வட இலங்கை சிறப்பாக யாழ்ப்பாணம் காணப்படுவதனால் தமிழகத்தில் காலத்திற்கு காலம் தோன்றி வளர்ந்த பண்பாட்டை முதலில் உள்வாங்கிக் கொள்ளும் தொடக்க வாயிலாக இப்பிராந்தியம் இருந்துள்ளது எனலாம். ஆதியில் யாழ்ப்பாணக் கோட்டை அமைந்துள்ள பிரதேசத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலுள்ள தீவுகள் ஓர் இணைப்பு பாலமாக இருப்பதனால் தமிழகச் செல்வாக்கு இப்பிராந்தியத்திலும் அவ்வப்போது ஏற்பட்டிருக்கும் எனக் கூறலாம்.

நாட்டுப்புற-தெய்வங்களுக்குரிய-வழிபாட்டிடம்

இலங்கையின் ஆதிகால வரலாறு கூறும் பாளி இலக்கியங்கள் இலங்கையின் அயல்நாட்டு உறவுகள் வட இலங்கையிலுள்ள மாதோட்டப்பட்டினம், ஜம்புகோளப்பட்டினம் ஊடாக நடந்ததாகக் கூறுகின்றன. இலங்கையின் ஏனைய துறைமுகங்களை “தொட்ட” எனப் பாளி மொழியில் கூறும் போது இவ்விரு துறைமுகங்களையும் ’பட்டின’ எனக் கூறியிருப்பதும் இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது. இந்த அயல் நாட்டு உறவில் குறிப்பாக வணிக உறவில் கோட்டையின் அமைவிடத்திற்கும் முக்கியமான பங்குண்டு என்பது தெரியவருகின்றது. இதன் அமைவிடம் மேற்கே இந்திய உரோம, அரேபிய நாடுகளுடனும், கிழக்கே தென்கிழக்காசியா, கிழக்காசிய நாடுகளுடனும் நடைபெற்ற கடல் சார் வாணிபத்தில் முக்கியமான பரிவர்த்தனை மையங்களில் ஒன்றாக இருந்துள்ளது. அதனையே கோட்டைப் பகுதியில் கிடைத்து வரும் தொல்லியல் ஆதாரங்களும் உறுதி செய்கின்றன.

இலங்கையின் நிலையமும் இங்கு இயற்கையாகக் கிடைத்த வணிகப் பொருட்களும் பண்டுதொட்டு அயல்நாடுகளுடன் வணிகத் தொடர்புகளை ஏற்படுத்த காரணமாக அமைந்தது. ஆதியில் வட இலங்கையின் வணிகத் தொடர்புகள் பெருங்கற்கால பண்பாட்டுடன் தோற்றம் பெற்றதை மாந்தை, பூநகரி, கந்தரோடை ஆகிய இடங்களில் கிடைத்த சிலவகை மட்கலன்கள், கல்மணிகள், உலோகப் பொருட்கள் என்பன உறுதிசெய்கின்றன. இவ்வர்த்தகத்தில் தென்னிந்தியா சிறப்பாகத் தமிழ் நாடு முக்கியமான பங்கு வகித்துள்ளது. கோட்டை அகழ்வாய்வில் கிடைத்த விலையுயர்ந்த மட்பாண்ட வகைகள் பெருங்கற்காலப் பண்பாட்டுக்காலத்தில் இருந்து தமிழகத்திற்கும் யாழ்ப்பாணக் கோட்டைப் பிரதேசத்திற்கும் இடையே வணிக உறவு இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. கி. பி 1 ஆம் நூற்றாண்டுக்குரிய பெரிப்பிளஸ் எனும் நூலில் உரோம வணிகர்கள் இலங்கைக்கு வராமலே ஆரம்பத்தில் தென்னிந்தியத் துறைமுகங்களில் இலங்கைப் பொருட்களைப் பெற்று திருப்தி அடைந்தனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ சகாப்தத்தில் உரோமப் பேரரசில் ஏற்பட்ட அமைதியும் உட்பலஸ் பருவக் காற்றின் உதவியைக் கண்டுபிடித்தமையும் உரோம அரசின் செல்வமும் அரசியல் அமைதியையும் கீழைத்தேய வாசனப் பொருட்களுக்கு மேற்கு நாடுகளில் மதிப்பை ஏற்படுத்தியது. அதனால் உரோம வர்த்தகர்களின் வருகை தமிழ் நாடு, ஆந்திரம், இலங்கை முதலான பிரதேசங்களில் அதிகரித்தது. உரோமரோடு தமிழ்நாடு கொண்ட வர்த்தக உறவை பட்டினப்பாலையும், மதுரைக் காஞ்சியும் சிறப்பித்துக் கூறுகின்றன. இதை அரிக்கமேடு, உறையூர், கரூர், காவிரிப் பூம்பட்டினம், காஞ்சிபுரம் முதலான இடங்களிற் கிடைத்த உரோம நாட்டுத் தொல்லியல் சின்னங்களும் உறுதி செய்கின்றன. தொலமி, பிளினி ஆகிய மேற்கு நாட்டவரது குறிப்புகளிலும் இவ்வர்த்தக உறவு பற்றிக் கூறப்பட்டுள்ளது.

தொடக்க காலத்தில் தமிழ்நாட்டு வணிகர்கள் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து ஏலம், கறுவா, மிளகு போன்ற வாசனைப் பொருட்களையும் முத்து, இரத்தினம், யானை, யானைத்தந்தம் முதலான பொருட்களையும் பெற்று தென்னிந்தியத் துறைமுகங்கள் ஊடாக உரோமுக்கும் ஏனைய நாடுகளுக்கும் அனுப்பி வைத்தனர். அதேபோல் இலங்கைக்குத் தேவையான குதிரை ,சில உணவுப் பொருட்கள், பலதரப்பட்ட மட்பாண்டங்கள், உலோகப் பொருட்கள், மது வகைகள் என்பன தென்னிந்தியத் துறைமுகங்களுக்கு அனுப்பப்பட்டு பின்னர் அங்கிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன. இந்நிலை கி.பி 1ஆம் நூற்றாண்டளவில் மாற்றமடைந்தது. உரோம நாட்டு வர்த்தகர்களே இலங்கையில் நேரடியாக வணிக நடவடிக்கையில் ஈடுபட்டனர். இவ்வணிக நடவடிக்கை கி. பி 5 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்திருந்ததை அனுராதபுரம், பொம்பரிப்பு, மாந்தை, திருகோணமலை, கந்தரோடை, பூநகரி, பொலநறுவை போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட உரோம நாட்டுக்குரிய நாணயங்கள், மட்பாண்டங்கள், கண்ணாடிப் பொருட்கள் என்பன உறுதிப்படுத்துகின்றன. சமகாலத்தில் இவ்வர்த்தகத் தொடர்பு யாழ்ப்பாணக் கோட்டைப் பிராந்தியத்திலும் ஏற்பட்டிருந்ததை அங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. 

கோட்டைப் பிரதேசத்தில் உரோமரின் வர்த்தகத் தொடர்புகள் கி. பி 1ஆம் நூற்றாண்டிலிருந்து ஏற்பட்டிருக்கலாம் என்பதனை இங்கு மிகச்செறிவாகக் கிடைத்த உரோம மட்கலன்கள் உறுதிப்படுத்துகின்றன. கொட்றிங்டன் 1924 வெளியிட்ட தனது நூலில் யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியில் மட்குடம் ஒன்றில் சில பொன் நாணயங்களைக் கண்டுபிடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். உரோமர் பொன் நாணயங்களைத் தொடர்ந்து வெளியிட்ட செப்பு நாணங்கள் பெரும்பாலும் கி. பி 2 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதால் கோட்டைப் பிரதேசத்தில் கிடைத்த பொன் நாணயங்கள் இப்பகுதியில் உரோமருக்குள்ள தொடர்பு கி. பி 1ஆம் நூற்றாண்டளவில் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. 

கோட்டையின் உட்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வில் உரோம மட்பாண்ட சிதைவுகள் அடையாளம் காணப்பட்டாலும் ஐரோப்பியரின் இருப்பிடங்களுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த உரோம மட்பாண்டங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். ஆய்வுக் குழியில் ஐந்தாவது கலாசாரப் படையில் செறிவாகக் காணப்பட்ட மட்கலன்களில் சில அதற்கு முற்பட்ட குடியிருப்புக்களுக்குரிய மட்பாண்டங்களுடன் கலந்த நிலையிலும் காணப்பட்டன. இங்கு கிடைத்த மட்பாண்டங்களில் ரௌலடட் மட்பாண்டங்கள் (Roulette Ware), அரிட்டைன் மட்கலன்கள் (Arretine Ware) ஆம்போராச் சாடி (amphorae Jar) என்பன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. உரோம வர்த்தகத்தில் மதுபானம், எண்ணெய் போன்ற திரவப் பொருட்களைப் பாதுகாக்க ஒருவகைச் சாடி பயன்படுத்தப்பட்டது. இவை ஆம்போராச் சாடிகள் என அழைக்கப்பட்டன. இவை மிருதுவான களிமண்ணால் வனையப்பட்டு பழுப்பு நிறத்தினை உடையனவாகவிருக்கும். இவற்றின் அடிப்பகுதி கூராகவும், வாய்ப்பகுதி மூடியதாகவும், கழுத்துப் பகுதியின் இருபுறமும் கைப்பிடிகள் உடையதாகவும் காணப்படும். இதிலே கைபிடிகள் இருப்பதால் ஓரிடத்திலிருந்த இன்னோர் இடத்திற்கு எடுத்துச் செல்லவும் கூர்மையான அடிப்பகுதி இருப்பதால் நிலத்தில் ஊன்றி வைப்பதற்கும் வசதியாக இருந்தது. இவை தமிழ்நாட்டில் அரிக்கமேடு, வசவ சமுத்திரம், கரூர் அகிய இடங்களில் கிடைத்துள்ளன. கோட்டை அகழ்வாய்வில் இவ்வகைச் சாடிகள் முழுமையாகக் கிடைக்காவிட்டாலும் சாடியின் உடைந்த பாகங்களும், அவற்றின் காற்பகுதிகள் சிலவும் கிடைத்துள்ளன. இவை உரோம நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டதால் இலங்கையில் உரோமரின் நேரடி வர்த்தகம் நடைபெற்ற இடங்களில் கோட்டைப் பகுதியும் ஒன்று எனக் கருத இடமுண்டு. 

இலங்கை – தென்னிந்திய வர்த்தகத்தில் உரோமரின் செல்வாக்கு கி. பி 5 ஆம் நூற்றாண்டிலிருந்து படிப்படையாக வீழ்ச்சியடைய மேற்காசியாவில் ஏற்பட்ட அராபியரின் வர்த்தக எழுச்சி இப்பிராந்தியங்கள் செல்வாக்குப் பெறக் காரணமாகியது. இவற்றை உறுதிப்படுத்தும் தொல்லியல் ஆதாரங்கள் வட இலங்கையில் மாந்தை, பூநகரி, கந்தரோடை போன்ற இடங்களிலும் தமிழகத்தில் அரிக்கமேடு, மாழிகைமேடு போன்ற இடங்களிலும் கிடைத்துள்ளன. இந்த அராபியரின் வர்த்தக எழுச்சியில் மாதோட்டம் முக்கியமான துறைமுகமாக மாறியதை அங்கு கண்டுபிடிக்கப்பட்ட செறிவான மட்கலன்கள் உறுதி செய்கின்றன. சமகாலத்தில் அராபியரின் வர்த்தக நடவடிக்கைகள் கோட்டைப் பகுதியிலும் ஏற்பட்டிருந்ததை அகழ்வாய்விலும், தொல்லியல் மேலாய்விலும் கிடைத்த சிலவகை மட்பாண்டங்கள் உறுதிசெய்கின்றன. 

கி. பி 10 ஆம் நூற்றாண்டுக்கும் கி. பி 13 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட கால இலங்கை வரலாற்றின் அயல்நாட்டு உறவுகளில் கோட்டைப் பிரதேசம் வட இலங்கையில் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கலாம் என்பதனை இங்கு கிடைத்த நாணயங்கள்,மட்பாண்டங்கள், கல்வெட்டுக்கள் என்பன உறுதி செய்கின்றன. கோட்டையில் கிடைத்த அயல்நாட்டு நாணயங்களில் சோழ நாணயங்கள் எண்ணிக்கையில் அதிகமாகும். இங்கு சோழ நாணயங்களுடன் சோழரைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சிபுரிந்த சேர, பாண்டிய நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்துடன் கள ஆய்விலும், அகழ்வாய்விலும் கிடைத்த சிலவகை மட்பாண்டங்கள்  சோழர் கால மரபைச் சார்ந்தவையாகவுள்ளன. இம்மட்பாண்டங்கள் தமிழகத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற இடங்களில் கிடைத்த சோழர்கால மட்பாண்டங்களை நினைவுபடுத்துவதாக உள்ளன. 1970 களில் கோட்டைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட கி. பி 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் இராஜேந்திர சோழனது கல்வெட்டு நல்லூரில் இருந்த ஆலயம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட தானங்கள் பற்றிக் கூறுகின்றது. இந்நல்லூர் தற்காலத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூரைக் குறித்ததா அல்லது சோழர் காலத்தில் கோட்டைப் பகுதியில் ஓர் இடம் நல்லூர் என்ற பெயரில் இருந்ததைக் குறிப்பிடுகின்றதா என்பது தெரியவில்லை. பேராசிரியர் இந்திரபாலா மற்றும் பேராசிரியர் வி. சிவசாமி இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட காலப்பகுதியில் கோட்டை அரணில் தெற்குப் பகுதியில் கி. பி 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்தக் கல்வெட்டை அவதானித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாதாரங்களை நோக்கும் போது கோட்டைப் பிரதேசம் சோழரின் வணிக மையமாக மட்டுமன்றி அவர்களின் குடியிருப்பு மையமாகவும் இருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது. ஏனெனில் கி. பி 993 இல் இருந்து கி. பி 1070 வரை இலங்கையில் சோழரின் தலைநகராகப் பொலநறுவை இருந்த போது அவர்களின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் செல்வாக்குக்கு பெருமளவு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே காணப்பட்டன. பேராசிரியர் க. இந்திரபாலா கி. பி 993 இல் முதலாம் இராஜராஜ சோழன் அனுராதபுர அரசை வெற்றி கொள்ள முன்னர் அவர்களின் ஆதிக்க மையம் யாழ்ப்பாணத்தில் அல்லது திருகோணமலையில் இருந்துள்ளது எனக் கூறியுள்ளார். இக்கூற்றைக் கோட்டையில் கிடைத்து வரும் சோழர் கால ஆதாரங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்க இடமளிக்கின்றது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கி. பி 5 ஆம் நூற்றாண்டிலிருந்து ஏற்பட்ட வணிக கலாசார உறவுகள் பற்றிச் சீன இலக்கியங்கள் கூறுகின்றன. அவற்றில் வட இலங்கையுடனான உறவுகள் பற்றிக் குறிப்புக்கள் தெளிவற்றதாக இருப்பினும் வட இலங்கை முக்கியமான பங்கு வகித்ததை மாந்தை, பூநகரி, கந்தரோடை முதலான இடங்களில் கிடைத்த சீன நாணயங்கள், மட்பாண்டங்கள், கண்ணாடிப் பொருட்கள் உறுதி செய்கின்றன. இவ்வணிக கலாசார உறவுகள் யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியில் அல்லது இப்பிரதேசத்தினூடாகவும் நடைபெற்றிருக்கலாம் என்பதனை இங்கு கிடைத்து வரும் ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. அவற்றுள் அதிகளவானவை சீன மட்பாண்டங்களும், கண்ணாடிப் பொருட்களும் கோட்டை அகழ்வாய்வில் மட்டுமன்றி கள ஆய்வின் போதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றிடையே கண்டுபிடிக்கப்பட்ட சீன நாணயங்களின் காலம் கி. பி 10ஆம் நூற்றாண்டுக்கும் 13 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாகக் கணிப்பிடப்பட்டதனால் இக்காலப் பகுதியில் சீன நாட்டவர் கோட்டைப் பிரதேசத்தடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர் எனக் கூறலாம்.

சமகாலத்தில் பொலநறுவை அரசு வட இலங்கையில் உள்ள ஊர்காவற்றுறைத் துறைமுகம் ஊடாக தென்னிந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடன் அரசியல், பொருளாதாரத் தொடர்புகளை ஏற்படுத்தியதாக பாளி இலக்கியமான சூளவம்சம் கூறுகின்றது. இது உண்மையென்பதனை நயினாதீவில் கண்டுபிடிக்கப்பட்ட கி. பி 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் பராக்கிரமபாகுவின் தமிழ்க் கல்வெட்டும் உறுதிசெய்கின்றது. இக்கல்வெட்டு ஊர்காவற்றுறையில் துறைமுக நிர்வாகத்திற்குப் பொறுப்பாகவிருந்த அதிகாரிகள், வெளிநாட்டு வணிகருக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகளையும், அவர்களிடம் பெறவேண்டிய வரிமுறைகளையும் குறிப்பிடுகின்றது. இந்நிலையில் கோட்டைப் பகுதியில் பொலநறுவை அரசு கால நாணயங்கள் பல கிடைத்திருப்பது பொலநறுவை அரசு கால வெளிநாட்டு வர்த்தகத்தில் கோட்டைப் பிரதேசமும் முக்கியமான பங்கு வகித்திருக்கலாம் என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றது. 

நகரமயமாக்கம்

தென்னாசியாவில் நகரமயமாக்கத்தின் தோற்றமும், அதற்கான வரலாற்றுப் பின்னணியும் இடத்திற்கு இடம் வேறுபட்டதாகக் காணப்படுகிறது. பொதுவாக நிலையான குடியிருப்புகள், நிரந்தர பொருளாதாரக்கட்டமைப்பு, மிகை உற்பத்தி, சிறுதொழில் நுட்பவளர்ச்சி, உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகம் என்பன நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள், நகரமயமாக்கம், அரச உருவாக்கம் என்பன தோன்றியதன் தொடக்ககாலமாகக் கூறப்படுகின்றது. தமிழகத்தில் சேர நாட்டின் நகரமயமாக்கம், அரச உருவாக்கம் என்பன உரோம நாட்டு வணிகத் தொடர்பால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பாண்டி நாட்டிலும், சோழ நாட்டிலும் இவை விவசாய உற்பத்தியால் தோன்றியதாகக் கூறப்படுகிறது. வடஇந்தியாவில் நகரமயமாக்கத்தின் தோற்ற காலம் கி. மு. 500 – 400 எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இலங்கையிலும் இதன் தோற்ற காலம் ஏறத்தாழ கி. மு. 200 எனக் கூறப்படுகிறது. இலங்கையில் புராதன நகரங்கள் தோன்றிய இடங்களாக அனுராதபுரம், மகாகமை, கந்தரோடை, மாதோட்டம் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு இவ்விடங்கள் பிற நாடுகளுடன் குறிப்பாக உரோம நாட்டுடன் கொண்டிருந்த கடல்சார் வாணிபத் தொடர்பு  முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது. 

யாழ்ப்பாணக் கோட்டைப் பிரதேசத்தில் மேற்கொண்ட மேலாய்வில் கிடைத்த பண்டைய நாணயங்கள், பலவகை மட்பாண்டங்கள் இப்பிரதேசம் தொடக்கத்தில் உள்நாட்டு வர்த்தகத்திலும் பின்னர் இந்தியாவுடனும் இவற்றைத் தொடர்ந்து உரோம அரேபிய, சீனா முதலான நாடுகளுடன் கடல்சார் வர்த்தகத்தில் ஈடுபட்டதை உறுதிசெய்கின்றன. இவற்றை அகழ்வாய்வில் கிடைத்த ஆதாரங்கள் மேலும் உறுதி செய்கின்றன. இவ்விடத்தில் கொட்றிங்ரன் என்ற அறிஞர் கோட்டைப் பிரதேசத்தில் இருந்து 20 உரோம நாட்டு தங்க நாணயங்களைச் கண்டுபிடித்ததாகக் கூறியிருப்பதும் இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது. இவ்வாதாரங்களை வைத்து நோக்கும் போது யாழ்ப்பாண நகர உருவாக்கம் இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கந்தரோடை, அனுராதபுர, மகாகமை முதலான நகரங்கள் தோன்றியதன் சமகாலத்தில் ஏற்பட்டதெனக் கூறலாம். 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்