சிலிக்கன் பள்ளத்தாக்கை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரும் ‘யாழ் ஜீக் சலஞ்’ மற்றும் ‘அரிமா டெக்னோலொஜீஸ்’ 
Arts
15 நிமிட வாசிப்பு

சிலிக்கன் பள்ளத்தாக்கை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரும் ‘யாழ் ஜீக் சலஞ்’ மற்றும் ‘அரிமா டெக்னோலொஜீஸ்’ 

October 7, 2024 | Ezhuna

நீண்டகால யுத்தத்தின் முடிவிற்கு பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு சாத்தியமாகாத நிலையில், மீள்கட்டுமானத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காத சூழலே யதார்த்தமாகியிருக்கிறது. இந்நிலையில், வடக்கில் முனைப்படைந்து வரும் தொழில் முயற்சிகளையும் முயற்சியாளர்களையும் பலரதும் கவனத்திற்கு கொண்டுவருவதே ‘வளரும் வடக்கு’ எனும் இத் தொடரின் நோக்கமாகும். வடக்குப் பிரதேசத்தில் புலம்பெயர் சமூகத்தின் முதலீடு, புத்தாக்க தொழில் முனைப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எத்தனிப்புகள், தொழில் முனைவோரின் அனுபவப் பகிர்வு, முயற்சிகளின் தோல்விகளில் இருந்து கற்ற பாடம், வடக்கு பிரதேசத்தில் தனித்துவமாகக் காணப்படக்கூடிய பிரச்சனைகள், உலகளாவிய சமூகத்துடன் இணைந்து முயற்சிகளை வெற்றிகரமாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இத்தொடர் அமையும். இத் தொடர் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார முயற்சிகளை விபரிப்பதோடு மட்டுமே நின்றுவிடாது, அதன் தொடர்ச்சியான அசைவிற்குத் தேவையான முன்னெடுப்புகளின் சாத்தியம் குறித்தும் இலங்கையின் பொருளாதாரப் பின்னணியில் தரவுகளோடு ஆராய்கிறது. இது புதிய முயற்சியாளர்களுக்கு பாடமாக அமைவதோடு மேலும் பல முயற்சியாளர்களை வடக்கை நோக்கி வரவழைக்கும்.

“உன்னைக் கொல்லாமல் விடுவது எதுவோ, அதுவே உன்னை மேலும் பலப்படுத்தும்” என்றொரு பிரபலமான சொல்வழக்கு 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜேர்மன் தத்துவ ஞானி பிறெட்றிக் நீட்சேயினால் முதலில் பாவிக்கப்பட்டது என்பார்கள். இக்கூற்று கொஞ்சம் மிகை நாடகப் பாணியானதும் பெரும்பாலும் உண்மையற்றதுமெனக் கருதப்பட்டாலும் யாழ் ஜீக் சலஞ் (Yarl Geek Challenge – YGC) இற்கு இது மிகவும் பொருத்தமானது.

YGC ஒரு போட்டி நிகழ்வு. எனக்குப் பிடித்தமான அதற்கு, கடந்த சில வருடங்களாக, என்னால் முடிந்த அளவுக்கு ஆதரவும் வழங்கி வருகிறேன். தொழில்நுட்பத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளையும், சேவைகளையும் அறிமுகம் செய்வது தொடர்பாக நடைபெறும் இப்போட்டியில் இலங்கை முழுவதிலுமிருந்து வரும் இளையவர்கள் குழுக்களாகப் பங்குபற்றுவது வழக்கம். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட உலகெங்கும் பரந்து வாழும் தொழில்நுட்ப நிபுணர்களின் மையமாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் Yarl IT Hub எனப்படும் நிறுவனம் வருடா வருடம் இப்போட்டியை நடத்தி வருகிறது. அதன் நோக்கம்  யாழ்ப்பாணத்தை அடுத்த ‘சிலிக்கன் பள்ளத்தாக்கு’ ஆக மாற்றுவது.

இலங்கை முழுவதிலுமிருந்து போட்டியாளர்கள் YGC யில் பங்குபற்றுகிறார்கள். மூன்று அங்கங்களாக நடைபெறும் இப்போட்டியின் முதலிரண்டு அங்கங்களும் யாழ்ப்பாணத்திலும் இறுதி அங்கம் கொழும்பிலும் நடைபெறுகிறது. 2012 இல் ஆரம்பமான இப்போட்டி நிகழ்வு, இவ்வருடம் (2019) தனது எட்டாவது நிகழ்வை நடத்துகிறது. YGC போட்டியாளர்களின் நோக்கம் போட்டியில் முதல் பரிசைத் தட்டிக்கொண்டு போவதேயாக இருப்பினும் போட்டியில் பங்குபற்றுவதே ஒருவகையில் கிடைக்கும் ஒரு பரிசுதான்.

YGC போட்டியாளர்கள் ஒவ்வொரு படிநிலையிலும் வழிகாட்டலையும் ஊக்குவிப்பையும் பெறுகிறார்கள். போட்டியின் இறுதியில் போட்டியாளர்களின் ‘கண்டுபிடிப்புகளை’ வாங்குவதற்கென முதலீட்டாளர்கள் காத்திருப்பார்கள். தமது கண்டுபிடிப்புகள் முன்னிலைக்குச் சென்றுவிட வேண்டும் என்பதற்காக போட்டியாளர்கள் மிகக் கடுமையாக உழைப்பார்கள். முதலீட்டாளர்களும் தமது பணமீட்டல் முயற்சிகளில் வெற்றியீட்டியும் தோல்விகளைக் கண்டும் அனுபவம் பெற்றவர்களாக இருப்பார்கள். முதலாவது அங்கத்தில் போட்டியாளர்களுக்குக் கிடைக்கும் ஊக்கமும் வழிகாட்டலும் ஒரு பெற்றோரிடமிருந்து பிள்ளைக்குக் கிடைக்கும் வகையில் சிறப்புடையதாக இருக்கும். இரண்டாவது அங்கத்தின் இறுதித் தேர்வின் போது வழங்கப்படும் தீர்ப்பு சில வேளைகளில் மிகவும் கடுமையானதாக, நிஜ வாழ்வையொத்ததாக இருப்பதுண்டு. இரண்டுமே பெறுமதி மிக்க அனுபவங்களாகவே இருக்கும்.

இறுதியாக வழங்கப்படும் பரிசு உண்மையில் இறுதியானதல்ல. போட்டி முழுவதும் அவர்கள் கற்றுக்கொள்ளும் பாடங்களும் பெறும் அனுபவங்களுமே போட்டியாளர்களுக்குக் கிடைக்கும் உண்மையான பரிசுகள். கடுமையான உழைப்பினாலும் சோம்பல், நேர்த்தியின்மை காரணமாகக் கிடைக்கும் படு தோல்விகளினாலும் ஒருவர் பெறும் அனுபவம் தான் இங்கு மிகவும் பெறுமதியானது. தாம் போகும் பாதை சரியானதா அல்லது அவை மாற்றப்பட வேண்டியவையா என்பதைத் தீர்மானிக்க அவர்கள் ஒவ்வொருவரும் தம்மைத் தாமே சவால் செய்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தம்மைத் தாமே சவால் செய்ய முடியாதவர்களாக இருப்பார்களானால் இரண்டாம், மூன்றாம் அங்கங்களின் போது நீதிபதிகளின் சவால்களைச் சமாளிக்க முடியாமல் அவர்கள் தோற்றுப்போகவும் நேரிடும். போட்டியாளர்கள் குழுவாகவும், தனியாகவும் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழிகள் காப்பாற்றப்படும்போது மட்டுமே வெற்றி நிச்சயம் என்பதை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். கால தாமதம், நம்பகத்தன்மையின்மை, அற்பத்தனம் ஆகியவற்றுக்குப் பெயர்போன நம் நாட்டில் புகார் செய்பவர்களும் அவர்களது புகார்களைக் கண்டு கொள்ளாதவர்களுமே அதிகம். இப்படியான குணாதிசயங்கள் ஒருபோதுமே உதவப்போவதில்லை என்பதை YGC போட்டியாளர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

உங்கள் பணியகத்தில் வேண்டுமானால் ஓரளவு ஒழுக்கம் இருக்கலாம் ஆனால் நீங்கள் சமூகமளித்த எத்தனை பொதுக் கூட்டங்கள் சரியான நேரத்திற்கு ஆரம்பித்திருக்கின்றன? சரியான நேரத்திற்குச் சமூகமளித்து மேடையில் உட்கார்ந்து கொண்டு ஒழுங்கமைப்பாளர்கள் அப்போதுதான் அங்குமிங்கும் அலைந்து திரிந்து காலத்தை வீணடிப்பதன் மூலம் அடுத்த தடவை நாமும் பிந்தி வரலாம் என்ற பாடத்தை நாமும் கற்றுக்கொள்ள வைக்கும் சம்பவங்களை எத்தனை தடவை எதிர்கொண்டிருக்கிறீர்கள்?

YGC போட்டிகளில் போட்டியாளர்கள் தம்மிடையே அளிக்கும் வாக்குறுதிகள் காப்பாற்றப்படாத போது தமது கண்டுபிடிப்புகள் தோற்றுப்போகும் என்பதைப் போட்டியாளர்கள் கற்றுக்கொள்கின்றனர். போட்டியிலிருந்து நீக்கப்படுவதன் மூலம் அடுத்த கட்டத்திற்கு மேலும் உத்வேகத்தோடு பயணிக்கும் ஆற்றல் அப்போதுதான் கிடைக்கிறது. “உன்னைக் கொல்லாமல் விடுவது எதுவோ, அதுவே உன்னை மேலும் பலப்படுத்தும்” என்பது இங்கு தான் பிரயோசனப்படுகிறது.

YGC போட்டிகளின் போது கற்றுக்கொள்ளும் முக்கிய பாடம் எவரொருவர் எதிர்காலத்தில் சிறந்த சக ஊழியராக இருக்கக்கூடியவர் என்பதைத் தீர்மானிப்பதே. யார் தீர்க்கமானவர், யார் இலக்கை நோக்கிப் பயணிக்கக் கூடியவர், யார் நம்பகத்தன்மையுடையவர், யாரெல்லாம் உங்கள் திறமைகளுக்கு வலுச்சேர்க்கும் திறமைகளைக் கொண்டிருப்பவர், இன்னும் சிறப்பாக, யார் கேட்டு, அவதானித்து, கற்று, கற்பித்து, மரியாதை செய்து சிரமங்களை எதிர்கொள்ளும் போதும் மனம் தளராதிருந்து செயலாற்றுபவர் போன்ற கற்கைகள் இப்போட்டிகளின் விளைபொருட்களாகின்றன.

YGC போட்டிகளில் பங்குபற்றும் குழுவினரிடையே இருந்து புதிய நிறுவனங்கள் உதயமாகின்றன என்பதும் இங்கு முக்கியமானது. போட்டியின் போது அவர்கள் உருவாக்கிய கண்டுபிடிப்பே அவர்களது எதிர்கால நிறுவனத்தின் தயாரிப்பாக இருக்க வேண்டுமென்பதில்லை. YGC போட்டியின் விளைவாக உருவாக்கப்பட்ட எனக்குத் தெரிந்த ஒரு நிறுவனம் ஏறத்தாழ மூடப்படும் நிலைக்குச் சென்றதையும் நானறிவேன். அவர்களது தொழில் முனைவின் காரணமாக பெருந்தொகையான பணத்தை அவர்கள் இழந்திருந்தார்கள். ஆனாலும் அவர்கள் ஓய்ந்துவிடவில்லை. அவர்கள் கற்ற அனுபவம் இப்போது அவர்களை மேலும் பலசாலிகளாக்கியிருக்கிறது. புதிய பல முதலீட்டாளர்களை ஈர்த்து புதிய தொழில்நுட்பங்களிலும் சேவைகளிலும் ஈடுபட்டு மிகவும் சிறப்பாக அவர்கள் பயணிக்கிறார்கள். அவர்களைப் பற்றி நான் இன்னுமொரு கட்டுரையில் எழுதுவேன்.

இக்கட்டுரை 2012 இல் YGC போட்டியில் வெற்றிபெற்ற Team Arima பற்றியது. YGC இல் சந்தித்து இறுக்கமாக இணைந்துகொண்ட ஒரு குழுவே ‘அரிமா’. ‘அரிமா’ என்ற பெயரை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்? என நான் அந்நிறுவனத்தின் முதன்மை நிர்வாகியான ஜெயகிருஷ்ணன் ராஜகோபால சர்மாவிடம் கேட்டேன். “போட்டிக்குத் தொழில்நுட்பத்தைத் தயாரிப்பதில் குழு எமது கவனத்தைச் செலுத்தியதால் எமது குழுவிற்கான பெயரொன்றை வைப்பதற்கு தாம் முற்றாக மறந்துவிட்டிருந்தோம். போட்டி ஆரம்பிப்பதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே நாம் எங்கள் மண்டைகளைப் போட்டுடைத்து ‘அரிமா’ என்ற பெயரைத் தீர்மானித்தோம். இது எவரையும் நோக வைக்காது, கவர்ச்சியானது என நாங்கள் யோசித்து இம்முடிவுக்கு வந்தோம்” என்றார் ஜே.

2012 இல் YGC இல் முதல் போட்டியிடும்போது ‘அரிமா’ குழுவில் இருந்தவர்கள் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்துக்கொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர்கள். 1990 களில் நான் கொழும்பில் ஒரு மென்பொருள் அபிவிருத்தி நிறுவனத்தை நடத்திக்கொண்டிருந்த போதே நான் மொறட்டுவ பல்கலைக்கழகம் பற்றி அறிந்திருந்தேன். எங்கள் நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்பில் ஈடுபடும்போது மொறட்டுவ பல்கலைக்கழகப் பட்டதாரிகளே தேர்வுப் பட்டியலில் உயர்ந்த இடத்தில் இருப்பார்கள் என்னுமளவுக்கு அப் பல்கலைக்கழகம் பெயரெடுத்திருந்தது.

“மொறட்டுவ பல்கலைக்கழக வாழ்க்கை யாழ்ப்பாண வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இருந்தது” என்கிறார் ஜே. தனிப்பட்டவராகவும் சரி சமூகமாகவும் சரி விருப்புகளை உருவாக்கும் நகரமல்ல யாழ்ப்பாணம். இளையோரை உசார்ப்படுத்துமளவுக்கு யாழ்ப்பாணத்தில் போதியளவு உதாரண புருஷர்கள் இல்லை. மாறாக கொழும்பிலோ அல்லது வெளிநாடுகளிலோ சிறந்த வேலைகளைப் பெறுதற்கேற்ற பாதைகளை மொறட்டுவ காட்டி விடுகிறது. திறமைக்கும் கடின உழைப்புக்கும் எப்போதும் தகுந்த சன்மானம் காத்திருக்கும் என்ற நம்பிக்கையை யாழ்ப்பாணத்தில் காண்பது மிக அரிது. வடக்கிலிருந்து மொறட்டுவைக்குச் சென்றவர்கள் திரும்பி யாழ்ப்பாணம் செல்வதற்குத் தயங்குகிறார்கள் என்கிறார் ஜே. 2013 இல் பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட பின்னர் ‘அரிமா’ குழுவினர் எவருமே யாழ்ப்பாணம் திரும்பவில்லை; இவர்களில் இருவர் சிங்கப்பூருக்குச் செல்ல வேறிருவர் கொழும்பிலேயே தங்கிவிட்டனர்.

2017 இல் யாழ்ப்பாணம் திரும்பிய ஜே, YGC யில் வெற்றியைத் தேடித்தந்த அந்த மங்களகரமான ‘அரிமா’ என்ற பெயரில் நிறுவனமொன்றை ஆரம்பிக்க எண்ணுகிறார். Yarl IT Hub Challenge என்ற நிகழ்வைத் தத்து எடுத்து ‘யாழ்ப்பாணத்தை அடுத்த சிலிக்கன் பள்ளத்தாக்கு ஆக்குதல்’ என்ற முழக்கத்துடன் செயற்பட ஆரம்பிக்கிறார். சிங்கப்பூருக்குச் சென்ற இருவருடன் சேர்த்து ஆரம்ப YGC குழுவிலிருந்த நால்வரில் மூவர் யாழ்ப்பாணம் திரும்புகிறார்கள். 2019 ஆம் ஆண்டு வாக்கில் ‘அரிமா’ 25 பணியாளர்களைத் தன்னகத்தே கொண்டதாக வளர்ந்துவிட்டிருந்தது.

நேர்காணல்கள் மூலம் மாத்திரம் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஜே இற்கு நம்பிக்கை இல்லை. அதற்குப் பதிலாக நம்பிக்கை தரும் புதியவர்களைச் சம்பளத்துடனான பயிற்சியாளர்களாகவே ஜே உள்வாங்குகிறார். பணியாளராக ஒருவரை நியமிப்பதற்கு முன் ஓரிரு மணித்தியாலங்கள் அவருடன் பேசுவதாலோ அல்லது அவரைப் பரீட்சிப்பதனாலோ மட்டும் அவரது பலங்களையும் பலவீனங்களையும் அறிந்துவிட முடியாது. அவரது பணிமுறை எப்படியானது என்பது பரீட்சிக்கப்பட்ட பின்னர் அவரைப் பணிக்கெடுப்பதே சிறந்தது. புகழ் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் படித்ததாலோ அல்லது ஒருவர் பெற்றிருக்கும் உயர் தரப் பட்டங்களினாலோ ஜே மயங்கிவிடும் ஒருவரில்லை. பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற இவை உதவி செய்திருப்பினும் வணிக உலகில் சிறப்பாகச் செயலாற்ற இவை உதவி செய்யா. ‘அரிமா’ வில் பணிபுரிபவர்களில் பலர் பட்டதாரிகளும் பட்டதாரிகளல்லாதோருமாக இருப்பினும் இவர்களெல்லாம் ‘அரிமா’ வின் பயிற்சிகளின்போது தமது ஆற்றல்களை வெளிப்படுத்தியவர்களே. ‘அரிமா’ வில் பணியாற்றும் யாழ்ப்பாணக் குழுவில் முக்கியமானவர்கள் யாழ். பல்கலைக்கழகப் பட்டதாரிகளும், உயர் கல்விக்குப் போக முடியாதவர்களுக்கான Yarl IT Hub இன் ஊக்கி பயிற்சித் திட்டப் பட்டதாரிகளுமாவர். இவ்விடயத்தில், போர்க்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வளர்ந்து 1990 களில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அங்கு கலிபோர்னியாவில் தொழில்நுட்பத் துறையில் உயர் பதவிகளை வகித்து வரும் ரமோஷன் கனகசபையின் பங்களிப்பை ஜே மிகவும் நன்றியோடு நினைவுகூர்கிறார். வடக்கின் தொழில்நுட்பக் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதில் Yarl IT Hub வகித்த வகிபாகம் பற்றியும் ஜே குறிப்பிடத் தவறவில்லை.

“அரிமாவில் எப்படி இணைந்து கொண்டீர்கள்?” என பட்டதாரிகளல்லாத சில மென்பொருள் அபிவிருத்தியாளர்களிடம் நான் கேட்ட போது அவர்கள் சொன்னது:

“2011 இல் நான் இலங்கை வங்கியில் பயிற்சியாளராகச் சேர்ந்தேன். 2013 இல் யாழ்ப்பாணத்தில் ஒரு இரண்டாம் நிலைப் பாடசாலையில் கற்பித்தேன். 2017 இல் ஊக்கி பயிற்சித் திட்டத்தில் இணைந்தேன். நவம்பர் 2017 இல் ‘அரிமா’ வில் இணைந்தேன்.”

“2012 இல் National Apprentice and Industrial Training Authority (NAITA) NVQ நான்காம் நிலைத் தராதரத்தில் சித்தியெய்தினேன். 2015 – 2017 வரை Sri Lanka Advanced Technological Institute (ATI) இல் கற்று தகவற் தொழில்நுட்பத்தில் HND டிப்ளோமா பெற்றேன். 2018 இல் ‘அரிமா’ வில் இணைந்தேன்.”

“2012 இல் மொண்டிசோரி பள்ளியில் கற்பித்தேன்; 2015 – 2017 வரை Sri Lanka Advanced Technological Institute (ATI) இல் தகவல் தொழில்நுட்பத்தில் HND டிப்ளோமா பட்டம் பெற்றேன். 2017 இல் ‘அரிமா’ வில் இணைந்தேன்.”

“2014 இல் வவுனியாவிலுள்ள ஒரு Call Centre இல் இணைந்து ஒன்றரை வருடங்கள் பணியாற்றினேன். ஜனவரி 2018 இல் ஊக்கியில் பயின்று பின்னர் ‘அரிமா’ வில் இணைந்தேன்.”

“2016 இல் க.பொ.த உயர்தரத்தை முடித்தேன். 2017 இல் ஊக்கியில் பயின்று பின்னர் நவம்பர் 2017 இல் ‘அரிமா’ வில் இணைந்தேன்.”

‘அரிமா’ வை இயக்கும் பிரதான குழு யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டிருந்தாலும் அதன் சிறிய குழுவொன்று கொழும்பிலும் இயங்குகிறது. இவ்விரு இடங்களிலும் பணி புரிபவர்கள் தமிழ், சிங்கள மொழிகளைப் பேசுபவர்களானாலும் இவர்களின் இணைப்பு மொழியாக ஆங்கிலமே இருக்கிறது. ‘அரிமா’ வின் பிரதான வருமானம் அமெரிக்காவிலிருந்து கிடைப்பதால் ஆங்கிலப் புலமை இங்கு அத்தியாவசியமாகிறது. கடல் கடந்த நாடுகளிலுள்ள பல நிறுவனங்களில் இயக்குநர்களாகவும் முகாமைத்துவப் பதவிகளில் இருப்பவர்களும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டிருப்பதனால் அந்நிறுவனங்களின் வேலைகளை இலங்கைக்கு அனுப்புவதையே விரும்புகிறார்கள். ஆனால் பணிகளின் தகமை சர்வதேச தரத்தில் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பார்கள். இப்படியான வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் நிதியைக் கொண்டு ‘அரிமா’ தனது சொந்த தொழில்நுட்ப மற்றும் சேவை உற்பத்திகளில் முதலீடு செய்கிறது. அப்படியானதொன்றே Arogya Life என்ற மருத்துவ மனை முகாமைத்துவ மென்பொருள். கொழும்பிலுள்ள Hemas Hospitals மற்றும் மூளாயிலுள்ள Moolai Hospital ஆகிய மருத்துவமனைகள் Arogya Life மென்பொருளையே பாவிக்கின்றன.

Arogya Life, மருத்துவ மனையின் தொழிற்பாடுகள் சீராக இயங்குவதற்கு உதவி செய்கிறது. மருத்துவமனையில் ஏற்கெனவே பாவனையிலிருக்கும் தரவுக்கொத்துகளிலிருந்து தரவுகளைப் பெற்று அவற்றை அறிக்கை வடிவங்களில் இலகுவாக்கி முகாமைத்துவப் பணியாளர்களுக்குத் தருகிறது. அதே போன்று பணிகள் முடிவடைந்ததும் அவற்றுக்கான கட்டணப் படிவங்களைத் தயாரித்து உரிய இடங்களுக்கு அனுப்பிவிடுகிறது. இவையெல்லாவற்றையும் ஒன்றிணைந்த தொகுதியாகச் செய்யாமல் அங்கங்களாகப் பிரித்து (modules) இத் தொழில்நுட்பம் கையாள்வதால் பிரதான தொழிற்பாட்டிற்குப் பங்கம் விளைவிப்பதில்லை. தேவையானால் அங்கங்கள் தனித்தனியாகப் பராமரிக்கப்படுகின்றன. உதாரணமாக நோயாளிகளோடு மருத்துவமனை நிர்வாகம் மேற்கொள்ளும் தொடர்பாடல்களை கணனிகள் மூலம் செய்துகொள்ள வசதியுண்டு.

YGC குழுவில் அங்கம் வகிக்கும் சத்தியவரதன் (சத்தி) மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் இன்னுமொரு பட்டதாரி. படிப்பை முடித்த பின் பல வருடங்களாக சிங்கப்பூர், கொழும்பு ஆகிய இடங்களில் பணி புரிந்தபின்னர் 2018 இன் இறுதியில் யாழ்ப்பாணம் திரும்பி ஜே யுடன் ‘அரிமா’ வில் இணைகிறார். இப்போது அவர் ‘அரிமா’ வின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி (Chief Technology Officer – CTO). மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பட்டதாரியும் 2012 இல் YGC யில் வெற்றி பெற்ற குழுவின் உறுப்பினருமாகிய ஹரீசன் ராஜேந்திராவும் சிங்கப்பூரிலிருந்து திரும்பி வந்து ‘அரிமா’ வின் தயாரிப்பு நிர்வாகத்தில் முதன்மைத் தொழில்நுட்ப அதிகாரியாகப் பணி புரிகிறார்.

கொழும்பிலும் சிங்கப்பூரிலும் பணியாற்றியதை விட யாழ்ப்பாணத்தில் பணியாற்றும்போது எதிர்கொண்ட சவால்கள் என்ன என நான் சத்தியிடம் கேட்டேன். “சிறப்பான அறிவும் திறன்களும் கொண்ட பணியாளர்களைக் கண்டுபிடிப்பது சிரமம். கடல் கடந்த வாடிக்கையாளர்களைச் சமாளிக்க வல்ல தொழில்நுட்பமும் ஆட்திறனும் ஒருங்கிணைந்த பணியாளர்களைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தாலும் அது சாத்தியமாகாதது என்றில்லை; அப்படியான சிலரை நான் ‘அரிமா’வில் இணைத்திருக்கிறேன்” என்கிறார் சத்தி.

“பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் பணியாளர் சமூகங்களும், பயிற்சிப் பட்டறைகளும், கருத்தரங்குகளும் இருக்கக்கூடிய சூழலில் கொழும்பு, சிங்கப்பூர் போன்ற இடங்களில் தொழில்நுட்ப சமூகங்கள் அபார வளர்ச்சி காண்கின்றன. பன்முகப்பட்ட ஆற்றல்களையும் அனுபவங்களையும் கொண்ட பணியாளர்களைக் கொழும்பிலோ அல்லது சிங்கப்பூரிலோ சந்திக்குமளவுக்கு யாழ்ப்பாணத்தில் காண்பது சங்கடமாகவே இருக்கிறது” என்கிறார் சத்தி.

மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் சத்தி கணனி விஞ்ஞானத்தில் கற்று பட்டம் பெற்றார். தொழில்நுட்பத்தின் தத்துவங்கள் பற்றிய பரந்த அறிவை அது அவருக்கு வழங்கியிருந்தது. இந்த அடிப்படைக் கல்வியைக் கொண்டு இதர தொழில்நுட்பங்களுக்குள் இலகுவாகப் பாய்ந்து செல்ல அவரால் முடிந்தது. யாழ்ப்பாணத்திலுள்ள பல பயிற்சிக் கல்லூரிகளில் ஒரு மென்பொருளை மட்டுமே இலக்காக வைத்துக் கற்பிக்கிறார்கள். இதனால் அவர்கள் இதர தேவைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய நெகிழ்வுத்தன்மை அற்றவர்களாகி விடுகிறார்கள். இவ்விடயத்தை ‘அரிமா’ வித்தியாசமாகக் கையாள்கிறது. பணியாளர்கள் தமது பன்முக ஆளுமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் அவர்கள் சுயாதீனமாகத் தமது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு வசதியான கருவிகளைத் தந்துதவுகிறது ‘அரிமா’. யாழ்ப்பாணத்தில் தகமையுள்ள பணியாளர்களைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் அவர்களின் இதர திறன்களை நீங்கள் தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

‘அரிமா’ வினால் சிறந்த தகமைகளைக் கொண்ட பணியாளர்களைக் கவர்ந்துகொள்ள முடியும். காரணம் அது சிறந்த தரமுள்ள பணிகளைக் கையாள்கிறது; ஆரோக்கியமான சூழலைத் தருகிறது; வேலை – வாழ்க்கைச் சமநிலையில் அது அதீத அக்கறை கொண்டிருக்கிறது. வீட்டிலிருந்து பணி புரிவது தொடர்பாக ‘அரிமா’ அதிகம் இறுக்கமாக இருப்பதில்லை எனினும் பலர் அலுவலகத்தில் இருந்து பணி புரிவதையே விரும்புகிறார்கள். வசதியான சூழல், பணியாளரிடையேயான நட்புறவு போன்ற காரணங்களினால் அலுவலகம் ஒரு குடும்பம் போலவே இயங்குகிறது என்கிறார் சத்தி.

இருப்பினும் கல்வியிலும், உட்கட்டுமானத்திலும் அரசாங்கம் நிறைய முதலீடுகளைச் செய்யவேண்டும் என்கிறார் சத்தி. கற்கை நெறிகள் உட்பட்ட பயிற்சி நிறுவனங்களின் தராதரம் முன்னேற்றமடைய வேண்டும். தொழில்நுட்பம் தொடர்பான புத்தகங்களிலும் சுய கல்விக்கான கருவிகளிலும் நூலகங்கள் தம்மைத் தரமுயர்த்திக் கொள்ள வேண்டும். யாழ்ப்பாண நகருக்குள் தொலைத் தொடர்பு கட்டுமானம் திருப்தியாக இருந்தாலும் நகருக்கு வெளியே இணையத் தொடர்புகள் இன்னும் ADSL தரத்திலேயே இருக்கின்றன. நல்ல சம்பளத்துடன் சிறந்த மேதைகளையும் அவர்களது குடும்பங்களையும் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுவர வேண்டுமானால் இங்கு போதுமான பொழுதுபோக்கு வசதிகள் இருக்க வேண்டும். பிட்சா ஹட்டில் மாலை வேலைகளில் மணித்தியாலக் கணக்கில் தூங்குவதை விட மாலைப் பொழுதுகளைக் கழிக்க வேறு வழிகள் அவசியம் என்கிறார் சத்தி.

அடுத்த 5 வருடங்களுக்குள் தனது யாழ்ப்பாணப் பணியாளர்களின் தொகையை 100 ஆக அதிகரிக்க வேண்டுமென்பதே ‘அரிமா’ வின் திட்டம். தனது வேலைகளைப் புற நிறுவனங்களுக்கு ஒப்பந்தத்தில் விட்டுவிட்டுத் தனது தொழில்நுட்பக் கருவிகள், சேவைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்பதே அதன் அவா. Yarl IT Hub இன் கனவான ‘யாழ்ப்பாணத்தை அடுத்த சிலிக்கன் பள்ளத்தாக்கு ஆக்குதல்’ திட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றுவதென ‘அரிமா’ திடசங்கற்பம் பூண்டுள்ளது.

அரிமா தொழில்நுட்பத்தின் ஜே ராஜகோபால சர்மாவுடன் தொடர்பு கொள்ள: jaykrish@arima.xyz

Yarl IT Hub உடன் தொடர்பு கொள்ள: sayanthan@yarlithub.org

இக்கட்டுரை லங்கா பிஸினெஸ் ஒன்லைன் ஜூன் 26, 2019 பதிப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியிருந்தது.


ஒலிவடிவில் கேட்க


About the Author

ஜெகன் அருளையா

இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் தனது பெற்றோருடன் பிரித்தானியாவிற்கு இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக, இலங்கையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனங்களிலும் பணியாற்றியவர். 2015 இல், நிரந்தரமாக யாழ்ப்பாணத்துக்குக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்