யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் - 12
Arts
17 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 12

May 3, 2024 | Ezhuna

“யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்” என்ற இத்தொடரானது, யாழ்ப்பாணத்தில் புராதன நூலக வரலாறு முதல் நவீன தனியார் நூலக வளர்ச்சி, பொது நூலக வளர்ச்சி, நூலகவியல் கல்வியின் அறிமுகம், நூலகத்துறையில் ஈழத்தமிழர்களின் முன்னோடி முயற்சிகளாக யாழ்ப்பாணத்தில் எழுந்த நூலகவியல்சார் நூல் வெளியீடுகள், நூலகவியல் துறைசார் சஞ்சிகைகளின் வெளியீடுகள், யாழ்ப்பாண கல்வியியல் வரலாற்றில் தடம் பதித்த நூலகங்களின் வரலாறு என்பவை உள்ளிட்ட விடயங்களை பற்றி பேசவிழைகின்றது.

யாழ்ப்பாணத்தில் உருவாகிய தனித்துவமான சனசமூக நிலைய நூலக மரபு

தத்தமது கிராமங்களின் சமூக மேம்பாடு, சமூகத்துக்கான பொது அறிவினை வழங்கல், சமூகத்தினரிடையே ஒற்றுமையைப் பேணல், சுயசிந்தனை கொண்ட அறிவுசார் சமூகமொன்றுக்கான அடித்தளத்தை வழங்கும் வகையில் வாசிப்புக் கலாசாரத்தை உருவாக்குதல் என்பன போன்ற காரணிகளை முன்வைத்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிகளில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உருவாகியதே சனசமூக நிலையச் சிந்தனையாகும். 

அக்காலகட்டத்தில், குறிப்பாக ஆங்கிலேயர் காலத்தில் பிரபுக்களுக்கும், அரச அதிகாரிகளுக்கும் மட்டுமே கிட்டியிருந்த ‘கிளப்புகளின்’ அங்கத்துவம், பொது வெளியில் சந்தித்து உண்டு கழித்து உரையாடும் கிராமத்துச் சுதேச மக்களுக்கு கிட்டவில்லை. 

club

அக்காலகட்டத்து கலாசாரத்தில் பாரிய மரங்களைச் சுற்றிய ‘குந்து’களும் மதகுகளும் தான் அவர்களது ‘ஊர்த்துளவாரம்’ பேசும் சந்திப்பு மையங்களாகியிருந்தன. 

பின்னாளில் ஊர் மக்களின் கூட்டு முயற்சியினாலும், ஊரில் பணம் படைத்தவர்களின் நிதியுதவிகளுடனும் ஞாபகச் சின்னங்களாக கூரையுடன் கூடியதாகக் கட்டப்பட்ட தெருக்கோடி இளைப்பாறு மடங்களும், முச்சந்தி மடங்களும், சுதேசிகளின் சந்திப்பு மையங்களாகின. 

காலக்கிரமத்தில் ஊரவரின் இத்தகைய நேர விரயத்தை பயனுள்ளதாக்கும் வகையில் இம்மடங்களில் ‘பத்திரிகைகள்’ வைக்கும் பழக்கம் அறிமுகமாகி அவர்களுக்கு ‘நாட்டு வளப்பம்’ பற்றிய செய்திகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பினை ஊர்ப் பிரமுகர்கள் வழங்கினர். மழை, வெய்யில் காலங்களில் அவர்களுக்கு வசதியாக இம்மடங்களையொட்டி தனியான சனசமூக நிலையக் கட்டிடங்களும் காலக்கிரமத்தில் பரிணாமம் பெற்றன. 

1970 – 1980 களில் யாழ்ப்பாண மாவட்டத்தில்‌ யுத்த மேகங்கள் சூழும் வரையில், கிராமிய மட்டத்தில்‌ நூலக சேவையினை வழங்குவதில்‌ மாவட்ட சபை உப அலுவலகங்களின்‌ (இன்றைய பிரதேச சபை) கீழ்‌ இயங்கும்‌ பொதுசன நூலகங்களுக்கு அடுத்தபடியாக சனசமூக நிலையங்களே முன்னணியில்‌ நின்றிருக்கின்றன. 1980 களின் ஆரம்பத்தில் சனசமூக நிலையங்களின் சம்மேளனத்தின் வேலைத் திட்டங்களில் பதிவு செய்யப்பட்டு பங்காற்றிய வகையில் 338 சனசமூக நிலையங்கள் பல்வேறு மட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சேவையாற்றி வந்துள்ளன என்பதை நானறிவேன். இன்று வலிகாமம் தெற்குப் பகுதியில் மாத்திரம் சுமார் 60 சனசமூக நிலையங்கள் செயற்படுவதையும், அவற்றுள், நூலகப் பணியாளர்களைக் கொண்டியங்கும் மூன்று சனசமூக நிலையங்கள் செயற்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெரும்பாலான சனசமூக நிலையங்கள்‌ புதினப்‌ பத்திரிகைகளையும்‌ சில சஞ்சிகைகளையும்‌ கொண்ட வாசிகசாலைகளாக மாத்திரம்‌ இயங்கி வந்தன. சில சனசமூக நிலையங்கள்‌ வாசிகசாலையுடன்‌ இணைந்‌ததாக இரவல்‌ வழங்கும்‌ நூலக சேவையினையும்‌ நடாத்தின. நிதிப் பற்றாக்குறை, விஞ்ஞான ரீதியிலான நூலக நிர்வாகம்‌ தொடர்பான போதிய துறைசார் அறிவின்மை, உள்ளக நிர்வாகச்‌ சீர்கேடுகள்‌ போன்ற காரணிகளால்‌ சில சனசமூக நிலையங்கள்‌ நூலக சேவையினை திறம்பட நடாத்தமுடியாத நிலையில்‌ காணப்பட்டிருந்தன.

சில இடங்களில்‌ நிரந்தரக்‌ கட்டிட வசதிகள்‌ கொண்‌டுள்ள சனசமூக நிலையங்கள்‌, கற்றோர்‌, செல்வந்தர்‌ போன்‌றோர்‌ வாழும்‌ சூழலில்‌ அமைந்திருந்த போதிலும்‌ அவர்களின் அக்கறையின்மையால் வாசிகசாலைகளாக மட்டுமே இயங்கி வந்ததையும் அவதானிக்க முடிந்தது. 

சனசமூக நிலைய நூலகங்களிற் சில மிகத்‌ திறமையாக இயங்கி கிராமத்தவரின்‌ அபிமானத்தையும்‌ ஆதரவையும்‌ பெற்றுள்ளன. பொதுவாக நோக்குமிடத்து இத்தகைய வெற்றி வாய்ப்பினைப்‌ பெற்றுள்ள நூலகங்கள்‌ எண்ணிக்‌கையில்‌ குறைவாகவே உள்ளன. ஒரு கிராமத்தின்‌ முழுமையான நிர்வாகத்‌ திறனில்‌ தங்கி இயங்கும்‌ சனசமூக நிலையங்கள்‌, சமய நிறுவனங்கள்‌, தனியார்‌ நிறுவனங்கள்‌ போன்றவற்றைச்‌ சார்ந்த நூலகங்களின்‌ நாளாந்த நடவடிக்கைகளில்‌ பல சிக்கல்‌ ஏற்படுவது தவிர்க்க முடியாததே. பொதுநல நோக்கத்தைக்‌ கருத்திற்கொண்டு இத்தகைய பிரச்சினைகளை சுமூகமாகத்‌ தீர்த்துக்கொண்டு கிராமத்தவரின்‌ ஒத்துழைப்புடன்‌ நூலகத்தை நிர்வகிப்பது சிறிது கடினமாக இருப்பினும்‌, அது இயலாத காரியமல்ல.

இத்தகைய பின்புல அறிமுகத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கி வருகின்ற சில குறிப்பிடத்தக்க சனசமூக நிலைய நூலகங்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை வகை மாதிரிக்காக இத்தொடரில் வழங்குகின்றேன். யாழ்ப்பாணக் கலாசாரத்துடன் ஒன்று கலந்து நிற்கும் சனசமூக நிலைய மரபினை இவ்வுதாரண நிறுவனங்களின் வாயிலாக ஓரளவு வாசகர் உய்த்துணர்ந்து கொள்ளலாம். இவை வெறும் உதாரணங்களேயன்றி, இவையே தலைசிறந்த சனசமூக நிலையங்கள் என்ற வகைப்படுத்தல் எவையும் இங்கே மேற்கொள்ளப்படவில்லை.

அல்வாய் பாரதிதாசன் படிப்பகம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் அல்வாய் கிராமத்தில் பாரதிதாசன் படிப்பகம் இயங்கி வருகின்றது. இது வடமராட்சியின் அல்வாய் கிராமத்தில் சமூக மேம்பாட்டின் மீது அக்கறை கொண்ட இளைஞர் குழுவொன்றினால் 1964 மே 1 ஆம் திகதி தொடங்கப்பெற்றது. 

தமிழகக் கவிஞரான பாரதிதாசனின் கவிதைகள் விதைத்துச் சென்றுள்ள பகுத்தறிவு, மொழிப்பற்று, இனவுணர்வு, நாட்டுப்பற்று, சமூகச் சீர்திருத்தம் போன்ற கருத்துகளை உள்வாங்கி அதன்வழி ஒழுக முனையும் இளைஞர்களுக்கு அக்கவிஞனின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள இப்படிப்பகம் வழிகாட்டியாக அமைந்துள்ளது.

பாரதிதாசன் படிப்பகத்தின் மகுட வாசகமாக பாரதிதாசனின் கவிவரிகளில் ஒன்றான ‘செல்வம் என்று போற்று செந்தமிழ்ச் சொல்லை’ என்ற சொற்பதத்தைத் தேர்ந்தெடுத்துப் பொறித்து வைத்துள்ளார்கள். 

ஒரு சனசமூக நிலையமோ பொது நூலகமோ தம்மளவில் சிறப்பானதெனத் தேர்ந்தெடுத்துக்கொண்ட பாதையொன்றில் பயணிக்க வேண்டுமாயின் தனக்கென்றொரு தூரநோக்குச் சிந்தனை கொண்ட ‘பணிக்கூற்று’ முக்கியமானது. அப்பணிக்கூற்று, குறித்த அந்த நூலகம் அல்லது சனசமூகநிலையம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், அதன் இலக்கு, அதன் இலட்சியம் என்பவற்றை தெளிவாக வரையறை செய்துகொண்டதாக அமைய வேண்டும். அவ்வகையில் பாரதிதாசன் படிப்பகத்தின் பணிக்கூற்றுகளாக ‘தமது பிரதேசத்தின் பாரம்பரிய முதுசங்களையும் புலமைச் சொத்துக்களையும் ஆவணப்படுத்திப் பயன்படுத்துவதினூடாக அறிவு சார்ந்த ஒரு சமூகத்தை உருவாக்குதல்’ என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. 

வடமராட்சிப் பிரதேசத்திலே பல்வேறு நூலகங்கள் நகரசபையாலும், பிரதேச சபையாலும், பாடசாலை நிர்வாகங்களாலும், உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தின் நிதிப் பின்னணியினாலும், இயங்கி வருகின்றன. இத்தகைய கல்விசார் நிறுவனங்களின் மத்தியில் தனித்துவமாக தனது இருப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது பாரதிதாசன் படிப்பகம். 

வடமராட்சிப் பிரதேசத்தில், பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி ஆகிய மூன்று பிரதேசச் செயலக பிரதேச எல்லைகளுக்குள் வசிக்கின்ற அறிவுத் தாகம் கொண்ட இளையோர், பெரியோர் அனைவரும் பாரதிதாசன் படிப்பகத்தில் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இதுவரை 1600 இற்கு மேற்பட்ட அங்கத்தினர்கள் பாரதிதாசன் படிப்பகத்தில் இணைந்து சேவைகளைப் பெற்று வருகின்றனர். 

இந்நூலகத்தின் சிறப்பம்சம், அங்கத்தவர்களுக்கிடையேயான கையெழுத்துச் சஞ்சிகை உருவாக்கமும் பகிர்தலுமாகும். மொழித்திறன் விருத்திக்கு வழிவகுக்கும் இத்தகைய செயற்பாடுகள் இப்பிரதேச பாடசாலை மாணவர்களிடையே இளம் படைப்பாளிகளையும் இலக்கியவாதிகளையும் முகிழ்ந்தெழச் செய்கின்றன. காலத்துக்குக் காலம் படிப்பகத்தினரால் கவிதை, கட்டுரை, சிறுகதைப் போட்டிகளும் நடைபெறுகின்றன. 

இந்நூலகம் 9000 இற்கும் அதிகமான நூல்களை தனது நூற்சேர்க்கையில் கொண்டுள்ளது. இரண்டு நூலக அலுவலர்கள் நூலகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் பாரதிதாசன் படிப்பகத்தின் சேவைகள் இடையூறின்றி வழங்கப்பட்டு வருகின்றன. நூலக சேவைகளைக் கண்காணிப்பதற்கும், அதன் தேவைகளை  பூர்த்தி செய்வதற்கும், மேலதிக சேவைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் என சமூக ஆர்வலர்கள், கிராமத்தின் கல்விமான்கள் ஆகியோரை உள்ளடக்கிய நூலகக் காப்பாளர் சபையொன்றும் இங்கு இயங்கி வருகின்றது. இந்நூலகம் திங்கட்கிழமைகள் தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களும் காலை 9.00 மணிமுதல் மாலை 4.30 மணிவரை சேவையாற்றுகின்றது. 

நூலகத்தின் விரிவாக்கப் பணிகளின் தேவை கருதி 2003 இல் புதிய கட்டிடம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்பு விழாவின் போது ‘திரவியம்’ என்ற பெயரில் ஒரு சிறப்பு மலரும் வெளியிடப்பட்டுள்ளது. அல்வாய் பாரதிதாசன் படிப்பகம் தொடர்பாக மேலதிக பல தகவல்களை இச்சிறப்பிதழின் வழியாகப் பெற்றுக்கொள்ள முடியும். 

இந்நூலகம் திறந்திருக்கும் நேரம் குறித்த மீள் மதிப்பீட்டினை நூலகக் காப்பாளர் சபை மேற்கொள்ள வேண்டும். நூலகம் திறந்திருக்கும் நேரத்தை, அரச – தனியார் அலுவலகங்களில் தொழில் பார்க்கும் அலுவலர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் வார நாட்களில் நூலகத்திற்கு வந்து பயன்பெற்றுச் செல்வதற்கு வசதியானதாகக் கருத முடியாது. மாணவர்களினதும் அலுவலக ஊழியர்களான அங்கத்தவர்களினதும் நலன் கருதி நூலகம் திறந்திருக்கும் நேரத்தை மாலை 6:30 மணி வரையாவது நீடிக்க வேண்டும்.  

(தகவல் உதவி : கு.சரவணன், நூலகக் கவனிப்பாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) 

அரியாலை ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையம்

2021 இல் பவளவிழாக் கண்ட ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையம், 1946 ஆம் ஆண்டு அரியாலையூர் மக்களால் தொடங்கப் பெற்றது. ஆரம்பத்தில் தனியார் இல்லமொன்றில் இயங்கிய இந்தச் சனசமூக நிலையம், 1953 ஆம் ஆண்டில் சொந்தமாக வாங்கப்பெற்ற காணியொன்றில் 1977 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட நிரந்தரக் கட்டிடத்தில் இயங்கத் தொடங்கியது. 

ஆரம்பத்தில் விளையாட்டுத்துறையில் அதிக ஈடுபாடு கொண்ட அங்கத்தவர்களால் ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையம் பெருமை பெற்றது. அன்றைய காலகட்டத்தில் கலைமகள் சனசமூக நிலையத்தினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட கரப்பந்தாட்ட அணி நாடளாவிய ரீதியில் சிறந்தவொரு அணியாகப் பெயர் பொறித்திருந்தது. அதன் கிரிக்கெட் அணி யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறந்த அணிகளுள் ஒன்றாகவும், எல்லே அணி நல்லூர்ப் பிரதேச மட்டத்தில் சிறந்த அணியாகவும் திகழ்ந்து வந்தது. யாழ் மாவட்டத்திலேயே முதன் முறையாக  பெண்களுக்கான கிரிக்கெற் அணி அரியாலை ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. 

sanasmookam

மாதர் சங்கம், இளைஞர் கலா மன்றம், சிறுவர்களுக்கான முன்பள்ளி, விளையாட்டுக்கழகம், சிறுவர் அரங்கம் எனப் பல்வேறு பகுதிகளுடன் சிறந்ததொரு நூல் நிலையத்தையும் ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையம் கொண்டுள்ளது. 

இந்நிலையத்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் நாளை முன்னிட்டு ‘கரோல்’ கதம்ப நிகழ்ச்சி கலாசாரப் பெருவிழாவாக நடாத்தப்பட்டு நிதி சேகரிப்பும் இடம்பெற்று வருகின்றது. ஆண்டுதோறும் ஒவ்வொரு சிவராத்திரி தினத்தின்போதும் கலையில் ஈடுபாடு கொண்ட அறுபது வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு ‘கலைச் சிகரம்’ விருதும் வழங்கப்படுகின்றது. 

2016 ஆம் ஆண்டு ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையத்தினர் மேற்படி நிலையத்தின் எழுபதாவது ஆண்டு நிறைவு விழாவினை சிறப்பான முறையில் நடத்தி முடித்துள்ளனர். அதனை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிகளும் கல்வியாளர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் கௌரவிப்புகளும் நாடகம், கட்டுரை, பேச்சுப் போட்டிகளும் இடம்பெற்றன. 

(தகவல் உதவி : இ.மதிகரன், முன்னாள் தலைவர், ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையம்)

சதாவதானி கதிரைவேற்பிள்ளை சனசமூக நிலையம்

யாழ்ப்பாணக் குடாநாட்டின் பருத்தித்துறைப் பிரதேசத்தின் விவசாயக் கிராமமான தம்பசிட்டியில் மாமலந்தணிச் சிவாலயத்தின் அருகாமையில் திரு. செல்லத்தம்பி முத்துக்கிருஷ்ணா, மு. நாராயணமூர்த்தி, செல்லத்தம்பி பெருமாள்பிள்ளை, செல்லத்தம்பி இராமச்சந்திரன், செ. அருச்சுனா ஆகியோர் ‘இளைஞர் வாசிகசாலை’ (Young Men’s Library) ஒன்றை 1906 ஆம் ஆண்டு முதல் திருமதி பார்வதி கந்தையா அவர்களின் வீட்டில் இயங்கினர். இதுவே பின்னர் அவ்வூரில் வாழ்ந்து மறைந்த சதாவதானி கதிரைவேற்பிள்ளை அவர்களின் பெயர் சூட்டப்பெற்று ஜுலை 1948 முதல், படிப்படியான வளர்ச்சியைப் பெற்று வந்தது. கடந்த 12.7.1998 இல் ஐம்பதாவது ஆண்டு விழாவையும், 2006 இல் தனது நூற்றாண்டு விழாவையும் சதாவதானி கதிரைவேற்பிள்ளை சனசமூக நிலையம் கண்டுள்ளது.

kathiravelpillai

பிராந்தியத்தின் சமூகக் கலாசாரம், பாரம்பரியம் என்பவற்றை நிலைநிறுத்திப் பேணும் நிலையமாக இயங்குவதைத் தனது தாரக மந்திரமாகக் கொண்டு நடைபயின்று வருகின்ற சதாவதானி கதிரைவேற்பிள்ளை சனசமூக நிலையம், ‘சமூக மானுட விழுமியங்கள், ஒழுக்க அறிவியல் கட்டளைகள் மற்றும் நன்னடத்தைசார் உணர்வு ஆகிய பண்புகளை விருத்தி செய்து பிள்ளைகளின் மத்தியில் நல்லதொரு சூழலை உருவாக்கும் நிலையமாக விளங்குதல்’ என்பதை தனது பணிக்கூற்றாகக் கொண்டுள்ளது. 

பருத்தித்துறை, மேலைப் புலோலியில் பிறந்த சதாவதானி நா. கதிரைவேற்பிள்ளை (தோற்றம்: 21.12.1871 – மறைவு: 26.03.1907) 36 வருடங்களே இவ்வுலகில் வாழ்ந்திருந்தாலும், தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழகத்தில் தமிழ்ப் பணிக்கும், சைவப் பணிக்கும் தந்தவர். இவர் அயலில் இருந்த சைவப் பிரகாச வித்தியாசாலையில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். ஆறாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர இயலாத பொருளாதார வசதியீனமான நிலையில், ஆறுமுக நாவலரின் மாணாக்கராகிய மகாவித்துவான் தியாகராசப்பிள்ளையிடம் முறையாகக் கல்வி கற்றார். பதினெட்டு வயதிற்குள் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் சங்க நூல்களையும், தருக்க சாத்திரங்களையும் துறைபோகக் கற்றார். 

சதாவதானி கதிரைவேற்பிள்ளை சனசமூக நிலையம் 12.07.1948 இல் பருத்தித்துறைப் பட்டண சபையில் ஒரு சனசமூக நிலையமாக முறைப்படி பதிவுசெய்யப்பட்டது (பதிவு இலக்கம்: J/U/CC/1). மக்களின் ஒத்துழைப்புடன் 1960 இற்குப் பின் படிப்படியாக பத்திரிகைகளும், நூல்களும் கொள்வனவு செய்யப்பட்டு அங்கு ஒரு நூலகம் உருவாக்கப்பட்டது. 

சமய, சமூக, கலாசார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கென நிலையத்தின் ஒரு கிளையாக 1967 ஆம் ஆண்டில் ‘கதிரைவேற்பிள்ளை கலாமன்றம்’ என்ற அமைப்பினை உருவாக்கி, 1975 முதல் ‘கதிரொளி’ என்னும் மாதாந்தக் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டனர். முதலில் மு.ஆ. கந்தவேல் (முருகேசு ஆறுமுகம் கந்தவேல்)  இச்சஞ்சிகையின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். கதிரொளி சஞ்சிகை 11.04.1976 இல் சதாவதானியின் ஆண்டுவிழாவையொட்டி அச்சுருவிலும் வெளிவந்திருந்தது. அந்நாட்களில் கோவில்களில் நடைபெற்று வந்த சதிர்க் கச்சேரிகள், மிருகபலிகள் போன்றவற்றை எதிர்த்து துண்டுப் பிரசுரங்களை மக்களிடையே விநியோகித்து அவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் பணியில் ‘கதிரைவேற்பிள்ளை கலாமன்றம்’ ஈடுபட்டு வந்தது. 

kathiroli

படிப்படியாக சனசமூக நிலையத்தின் விரிவாக்கச் சேவைகளாக பாலர் பாடசாலை, அறநெறிப் பாடசாலை ஆகியவற்றையும் தொடங்கினர். 1967 ஆம் ஆண்டிலிருந்து ஊர்ச் சிறுவர்களின் வாசிப்புத் திறனை மட்டுமல்லாது அவர்களது பேச்சுத்திறன், பாட்டுத்திறன், வாதாடும் திறன் என்பவற்றையும் வளர்த்தெடுக்கும் நோக்குடன், சதாவதானி கதிரைவேற்பிள்ளை அவர்களின் குருபூசைத் தினத்தன்று பேச்சு, பண்ணிசை, பட்டிமன்றம், கட்டுரை எழுதுதல் ஆகிய போட்டிகளை நடாத்தி வெற்றி பெற்றோருக்குப் பரிசில்களையும் வழங்கினர். 

1985 ஆம் ஆண்டு (08.12.1985) அக்கிராம விவசாயிகளுக்குக் கடன் உதவி வழங்கும் நோக்குடன் சிக்கனக் கூட்டுறவுச் சங்கத்தினையும் ஆரம்பித்திருந்தனர். 

போர்க்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளில் இருந்தும் பீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்த சதாவதானி கதிரைவேற்பிள்ளை சனசமூக நிலையம் 2012 ஆம் ஆண்டில் புனரமைக்கப்பெற்ற அழகான கட்டிடத்துடன் பொலிவு பெற்றது. இந்நூலகம் பத்திரிகை, சஞ்சிகைச் சேர்க்கைகளுடன், 3,200 நூல்களைக் கொண்டதாகவும் வளர்ச்சி கண்டுள்ளது. அப்பிரதேசத்தின் பாடசாலைச் சிறப்பு மலர்கள், ஆண்டு மலர்கள், அந்தியேட்டி நினைவு மலர்கள், உள்ளூர் ஆசிரிய/வெளியீட்டாளர்களின் நூற்சேர்க்கைகள் எனப் பல்வேறு சிறப்புச் சேர்க்கைப் பிரிவுகளை உருவாக்கி வளர்த்து வருகின்றது. 

(தகவல் உதவி: அ. சுபாசினி, நூலகக் கவனிப்பாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)

ஏழாலை சித்தி விநாயகர் நூலகம்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஏழாலை என்ற சிற்றூர் பல புலவர்களையும், வித்துவான்களையும், பண்டிதர்களையும், பேராசிரியர்களையும், ஆசிரியப் பெருந்தகைகளையும், முன்னோடிச் சிறுகதை எழுத்தாளர்களையும் எமக்குத் தந்த மண்ணாகும். 

1981 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பொதுநூலகம் இலங்கையின் ஆட்சியாளர்களால் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்ட காலகட்டத்தில் தோன்றிய மக்கள் எழுச்சியின் பயனாகவும், அவர்களுக்கான வாசிப்பிற்கான உள்ளூர் வாய்ப்புகளை வழங்கும் நோக்குடனும் யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே சனசமூக நிலையங்களினூடாக பல நூலகங்கள் சிறியதும் பெரியதுமாக உருவாக்கப்பட்டன. யாழ்ப்பாணம் ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நூலகத்தின் வரவும், மேலும் பல்வேறு சனசமூக நிலைய நூலகங்களின் உருவாக்கமும் இதன் ஒரு பக்க விளைவே. 

ஏழாலை சித்தி விநாயகர் நூலகமும், யாழ்ப்பாண நூலக எரிப்பின் விளைவாக ஏற்பட்ட ஏழாலைப் பிரதேச மக்களின் வாசிப்புத் தேடலுக்குத் தீனியாக 1985 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 18 ஆம் நாளில் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கம் அவர்களினால், ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலையின் புத்தகக் கண்காட்சியுடன் திறந்து வைக்கப்பட்டது. 

இந்நூல் நிலையம், வலிகாமம் தெற்குப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட (N/202) கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ளது. இது, மல்லாகத்தில் இருந்து தெற்குப் புன்னாலைக்கட்டுவனுக்குப் போகும் பிரதான பாதையில், ஏழாலை சாது சங்க மடமாக இருந்து தற்போது ஊர் மக்களால் ‘மடத்துப் பிள்ளையார்’ என்றழைக்கப்படும் கோவிலுக்கு எதிர்ப் புறமாக, முத்தமிழ் மன்றத்துக்குப் போகும் வழியில் உள்ளது. 

ஏழாலை சித்தி விநாயகர் நூலகம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்துக்கு எதிர்ப்புறமாக அமைந்துள்ள இல்லம், ஈழத்துச் சிறுகதை இலக்கிய முன்னோடி சி. வைத்திலிங்கம் அவர்களுடைய பூர்வீக இல்லமாகும். இலக்கிய கலாநிதி திரு.மு. கந்தையா, சித்தாந்த வித்தகர் மு. ஞானப்பிரகாசம் ஆகியோரின் வழிகாட்டல்களுடன் திரு.இ. கணேசராஜா அவர்கள் இந்நூலகத்தை ஆரம்பத்தில் நடாத்தி வந்தார். இவ்விரு பெருந்தகைகளும் இறந்த பின்னர் அவ்விருவரின் நினைவாகவும், இலக்கிய கலாநிதி திரு.மு. கந்தையா, சித்தாந்த வித்தகர் மு. ஞானப்பிரகாசம் ஞாபகார்த்த சித்தி விநாயகர் நூலகமாக இதனை பெயர் மாற்றம் செய்துள்ளார். இரண்டறைகள் கொண்ட இந்நூலகக் கட்டிடம் பொதுமக்கள் மத்தியில் இன்றும் சுருக்கமாக ஏழாலை சித்தி விநாயகர் நூலகம் என்றே அழைக்கப்பட்டு வருகின்றது. 

ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் கற்கும் யாழ் ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாசாலையின் அயலில், பலரும் சங்கமிக்கும் ஒரு இடமாக தெருக்கரையில் அமைந்திருந்தமையால், பலரும் எப்போதும் பத்திரிகை வாசிப்பதற்கு அங்கு குழுமியிருக்கும் சூழலே காணப்பட்டது. இந்த நூலகத்தின் முதல் அங்கத்தவராக சிறுகதை முன்னோடி சி. வைத்திலிங்கம் அவர்களே தம்மைப் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நூலகத்தின் தொடக்க காலத்தில் பெரியோர், சிறியோர், பெண்கள் என வாசகர் கூட்டம் எப்போதும் நூலகக் கட்டிடத்தைச் சூழ்ந்து காணப்பட்டனர். அவர்களுக்காக பல்வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகள், வார – மாத இதழ்கள், நாவல்கள், சிறுவர் சஞ்சிகைகள், அறிவுத்திறன் கொண்ட நூல்கள், மாணவருக்கான புத்தகங்கள், பயிற்சிக் கையேடுகள் எனப் பல்வகை எழுத்தாக்கங்களும் நூலகத்தில் கிடைக்க வழிசெய்யப்பட்டிருந்தன. 

வடபுலத்தில் யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் இந்நூலகத்தில் முதலுதவி வகுப்புகளும், தற்காப்புப் பயிற்சி நெறிகளும் ஊர் மக்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தன. யுத்த காலத்தில் பத்திரிகை வசதிகள் குன்றியிருந்த சூழ்நிலையில் கூட ஏழாலை சித்தி விநாயகர் நூலகம் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் இயங்கி வந்துள்ளது. 

ஆரம்பகாலம் முதல் சேகரித்த பொக்கிஷங்கள் சுமார் 7000 வரை இருந்த நிலையில் தான், 1987 – 1991 காலகட்டத்தில், இந்திய இராணுவத்தின் சோதனைச் சாவடி இந்நூல் நிலையத்தை அண்டி அமைக்கப்பட்டது. இதன் போது நூலகத்தின் அருகில்கூட எவராலும் பாதுகாப்புக் காரணங்களால் போக முடியவில்லை. கையறு நிலையில் அங்கு இருந்த எமது முதுசங்கள் ஆயிரமாயிரமாக அழிவுற்றன. இந்திய இராணுவம் போனபின்பு சற்று சுதாகரித்து எழுந்த ஏழாலை சித்தி விநாயகர் நூலகம், தனது சேவையினை 1995 ஐப்பசி மாதம் வரை தடையின்றித் தொடர்ந்தது.

வலிகாமம் பாரிய புலப்பெயர்வின் பின்னர் அதன் நூலகச் சேவைகள் சிறிது காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்டிருந்தது. யுத்தச் சூழலில் கட்டிடமும் நூல்களும் கவனிப்பாரற்று கறையான்களால் பாரிய சேதமடைந்திருந்தன. ஏழாலை மக்கள் மீண்டும் ஊருக்குத் திரும்பிவந்த பொழுது, அதுவரை சேர்த்து வைத்திருந்த சுமார் 7000 நூல்கள் கட்டிடத்தினுள்ளே நிலத்திலும், வெளித் தரையிலும் வீசியெறியப்பட்டு காற்றிலும் மழையிலும் நேரடியாகப் பாதிக்கப்பட்டுக் கிடந்தன. தீண்டுவாரற்றுக் கிடந்த ஏராளமான நூல்கள், பத்திரிகைகள் கறையானுக்குத் தீனியாகிவிட்டிருந்தன. 

மக்களினதும் நிலையப் பொறுப்பாளர்களினதும் பொறுப்புணர்வினாலும், உணர்ச்சிப் பெருக்காலும், ஏழாலை சித்தி விநாயகர் நூலகம் மீண்டும் ஓரளவு புனரமைக்கப்பட்டு மீளவும், நூல் சேகரிப்பு முயற்சிகள் தொடங்கப் பெற்றன. தற்போது இந்நூலகத்தில் 2000 நூல்கள் வரை சேர்க்கப்பட்டுள்ளன. நூலகத்தை பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு நீண்டகாலம் எடுக்கும் என்று கருதப்படுகின்றது. 

தற்போதைய சூழலில் பத்திரிகைகள் வாசிப்பதற்கென முதியோர் சிலர் அங்கு வந்து செல்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் தமது ஆய்வுத் தேவைகளுக்காக அந்நூலகத்தைப் பயன்படுத்துகின்றனர். மாலை மூன்று மணி முதல் ஏழு மணி வரை திறந்திருக்கும் இந்நூலகம் போதிய நூல்கள் இன்மையால், இரவல் வழங்கும் செயற்பாடுகள் முடுக்கிவிடப்படாமல் பெரும்பாலும் ஒரு உசாத்துணை நூலகமாகவே இன்று சேவையாற்றுகின்றது. 

அண்மைக் காலத்தில் சிறுவர்களைக் கவரும் வகையில் சில புதிய சிறுவர் இலக்கியங்கள் அன்பளிப்பாகப் பெறப்பட்டுள்ளன. பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவர்களுக்குரிய விஷேட ஆய்வுக்குரிய புத்தகங்களும், பலகாலமாக பத்திரிகைகளில் வெளிவந்து வெட்டுத்துண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வந்த ஆவணங்களின் பல தொகுதிகள் பத்திரிகை வெட்டுத்துண்டுக் கோவைகளாக இங்கே பேணப்பட்டு வந்துள்ளன. 

ஏழாலை சித்தி விநாயகர் நூலகத்தின் பல சேவைகளுள் நூல் வெளியீட்டு நிகழ்வுகளும் குறிப்பிடத்தகுந்தவை. தமிழ்ப்பிரியா (காம்பொடிந்த மலர், 2009: ஒரு நியாயம் விழிக்கிறது, 2010), கு. றஜீபன் (புறநானூறு, பேசற்க, நகுநயம் மறைத்தல், 2014), ஏழாலைவாணி திருமதி செ. ஜெயவாணி (இப்போது சொல் எப்போது வந்த கவிதை நீ, 2011), இ. கணேசராஜா (சித்தாந்த வித்தகர் மு. ஞானப்பிரகாசம், 2015) ஆகியோரின் நூல்களின் வெளியீடுகளும் அறிமுக நிகழ்வுகளும் ஏழாலை சித்தி விநாயகர் நூலகத்தின் நூலக மண்டபத்தில் நூலகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்தநூல் நிலையத்தை அமைப்பதில் ஆர்வத்துடன் செயற்பட்டவரும், இன்று தனது முதிய வயதிலும் நிலையத்தை கண்ணும் கருத்துமாக பாதுகாத்துப் பராமரித்து வருபவருமான திரு.இ. கணேசராஜா, சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலைகளில் ஆசிரியராகவும், பின்னர் அதிபராகவும் பணியாற்றிய பின் ஓய்வு பெற்றவராவார்.

(தகவல் உதவி : ஏழாலை சித்தி விநாயகர் நூல் நிலையமும் ஆவணக் காப்பகமும்/மணிமொழி. ‘எங்கட புத்தகங்கள்’, மலர் 1 (4), ஜுலை 2021 : ப. 16 – 20).

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

8060 பார்வைகள்

About the Author

நடராஜா செல்வராஜா

நடராஜா செல்வராஜா, யாழ். இராமநாதன் பெண்கள் கல்லூரியில் நூலகராகவும், யாழ்ப்பாண, சர்வோதய சிரமதான சங்கத்தின் யாழ்.மாவட்ட நூலகப் பொறுப்பாளராகவும், இலங்கை உள்ளூராட்சி அமைச்சின் நூலகராகவும், இந்தோனேசியா, ஐக்கியநாடுகள் சபையின் கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகவும், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகத்தின் பொறுப்பாளராகவும், கொழும்பு இனத்துவக் கல்விக்கான சர்வதேச நிலைய ஆய்வு நூலகப் பொறுப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

அயோத்தி நூலக சேவையின் ஸ்தாபகரும், நூலகவியல் காலாண்டுச் சஞ்சிகையின் தாபக ஆசிரியராகவும் செயற்பட்டார். ஊடகத்துறையிலும் பணியாற்றிவிட்டு, தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இவர், ரோயல் மெயில் தபால் நிறுவனத்தின் அந்நிய நாணயப்பிரிவில் அதிகாரியாக தற்போது பணியாற்றுகின்றார். இவர் நூலகவியல் பற்றி தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், நூலகவியல் பற்றியும் பல வெளியீடுகளை செய்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • July 2024 (5)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)