யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் - 7
Arts
27 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 7

December 6, 2023 | Ezhuna

“யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்” என்ற இத்தொடரானது, யாழ்ப்பாணத்தில் புராதன நூலக வரலாறு முதல் நவீன தனியார் நூலக வளர்ச்சி, பொது நூலக வளர்ச்சி, நூலகவியல் கல்வியின் அறிமுகம், நூலகத்துறையில் ஈழத்தமிழர்களின் முன்னோடி முயற்சிகளாக யாழ்ப்பாணத்தில் எழுந்த நூலகவியல்சார் நூல் வெளியீடுகள், நூலகவியல் துறைசார் சஞ்சிகைகளின் வெளியீடுகள், யாழ்ப்பாண கல்வியியல் வரலாற்றில் தடம் பதித்த நூலகங்களின் வரலாறு என்பவை உள்ளிட்ட விடயங்களை பற்றி பேசவிழைகின்றது.

திருக்கோணமலையில் நீண்டகாலம் பணியாற்றியிருந்த திரு.வி.எஸ். தனபாலசிங்கம் அவர்கள், 1990 ஜனவரி மாதம் தொடக்கம் யாழ். மாநகர சபைப் பொது நூலகத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்தார். யாழ். நூலகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தபோது, யாழ். நூலகம், கோட்டையிலிருந்து தொடர்ச்சியான ஷெல் தாக்குதலின் காரணமாக தனது பிரதான நூலகக்கட்டிடத்தை விட்டு வெளியேறியிருந்தது. அதன் சேர்க்கைகளும் சேவைகளும் பிரிக்கப்பட்டு ஆறு கிளை நூலகங்களாக செயற்பட்டுக் கொண்டிருந்தது. யாழ். நூலகத்தில் பணியாற்றும் உதவி நூலகர்கள் அனைவரிலும் பார்க்க சேவை மூப்பு நூலகரான தனபாலசிங்கத்தை முதன்மைக் கிளை நூலகமான நல்லூர் கிளை நூலகத்தின் பொறுப்பை ஏற்கும்படி யாழ். மாநகர நிர்வாகத்தினர் பணித்திருந்தனர். 

நல்லூர் கிளை நூலகத்தில் அவர் பணியாற்றி வந்த குறுகிய காலப்பகுதியிலேயே, (மூன்று மாதங்களில்) அதே ஆண்டு மார்ச் முதலாம் திகதி தொடக்கம் உள்ளுராட்சி நூலக சேவை இரண்டாம் தர நூலகராகப் பதவியுயர்வு பெற்றதுடன் மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு இடமாற்றமும் செய்யப்பட்டார். எனினும் அப்போதைய யாழ். மாநகர ஆணையாளரின் (திரு.வே.பொ. பாலசிங்கம்) வேண்டுகோளுக்கு அமைவாக அவரது இடமாற்றம் ரத்து செய்யப்பட்டது. 

அவ்வாண்டு ஜூன் மாதம் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்ட யுத்தம் காரணமாக அவ்வேளையில் நூலகராகப் பணியாற்றியவர்கள் பாதுகாப்புக் கருதி யாழ்ப்பாணத்தை விட்டு இடம்பெயர்ந்தமையால், நூலக நிர்வாகம் செயலிழந்து நூலக சேவைகள் ஸ்தம்பிதமடைந்தன. யாழ். மாநகர ஆணையாளரான திரு.வே.பொ. பாலசிங்கம் நூலக சேவையை தடையின்றி நடாத்துவதற்கு நல்லூர் கிளை நூலகரான திரு. தனபாலசிங்கத்தை யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் பிரதம நூலகராக அவ்வாண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து நியமித்தார். 

பிரதம நூலகர் பதவியைப் பொறுப்பேற்றவுடன் நல்லூர் கிளை நூலகக் கட்டிடத்தில் தொழிற்பட்ட மாநகர சபையின் வேலைப் பொறியியலாளர் அலுவலகத்தை இடம்மாற்றி, அந்தக் கட்டிடம் முழுவதையும் நூலகமாக மாற்றியமைக்க ஆணையாளர் வழிசெய்தார். அத்துடன் மாநகர சபையின் இந்து விடுதியில் தனியாக தொழிற்பட்ட பிரதம நூலகர் அலுவலகம், நிர்வாக அலுவலகம் ஆகியவற்றை நல்லூர் கிளை நூலகக் கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்தார். அத்துடன் இந்து விடுதியில் சிறிய பகுதியாக இருந்த சிறப்பு ஆவணமாக்கல் பிரிவான இலங்கை நூற் பிரிவினை நல்லூர் நூலகத்தில் தனியொரு பகுதியாக மாற்றி அங்கே மேலும் பல ஆவணங்களையும் நூலகர் சேகரித்தார். படிப்படியாக மாநகர சபையின் வேலைப் பொறியியலாளர் அலுவலகம் யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் பிரதான செயலகமாக உருமாறிவந்தது. 

தொடர்ந்து அடுத்த ஆண்டில் (1991) சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாவை மூன்று நாட்கள் சிறந்த ஆய்வுக் களத்துடன் மாநகர சபையின் அனுசரணையுடன், தனபாலசிங்கம் ஏற்பாடு செய்திருந்தார். 

1995 இல் மாபெரும் இடப்பெயர்வு இடம்பெறும் வரை சகல கிளை நூலகங்களையும் தரமான நூல்களின் சேர்க்கையுள்ள நூலகங்களாக அபிவிருத்தி செய்துவந்தார். அக்காலகட்டத்தில்  யாழ்ப்பாணத்தில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக, யாழ்ப்பாணத்தில் நூல்கள் கொள்வனவு செய்ய முடியாதிருந்தது. ஏ9 பாதையோ, இரயில் போக்குவரத்தோ இயங்காதிருந்த அவ்வேளையில், கொழும்பில் நூல்களைக் கொள்வனவு செய்து கப்பல் மூலம் திருக்கோணமலை ஊடாக யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வர ஏற்பாடு செய்திருந்தவர் தனபாலசிங்கம். முழு யாழ் மாவட்ட மக்களுக்கும் இந்த நூற்சேர்க்கையே புதிய நூல்களை வாசிக்கும் வாய்ப்பினை வழங்கிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

1995 இல் மாபெரும் வலிகாமம் இடப்பெயர்வினால் சகல கிளை நூலகங்களிற்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருந்தன. 1981 யாழ் நூலக எரிப்பின் பின்னர் சிறுகச் சிறுக அரும்பாடுபட்டு சேகரித்துப் பேணப்பட்ட  நூற்சேர்க்கையின் பெரும் பகுதி வலிகாமம் புலப்பெயர்வின்போது கைவிடப்பட்ட நூலகங்களிலிருந்து காணாமற் போயின. 1995 இன் பின்னர் யாழ்ப்பாணம் இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

‘புத்தகமும் செங்கல்லும்

1997 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க, இன நல்லிணக்கத்தினை தனது ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தும் நோக்குடன் யாழ் நூலகத்தைப் ‘புத்தகமும் செங்கல்லும்” என்ற வேலைத்திட்டத்தினூடாக, புனரமைப்புச் செய்யத் தீரமானித்திருந்தார். அதற்காக ஜனாதிபதி, நூலகக் குழு ஒன்றை நிறுவினார். அக்குழு அழிவடைந்த யாழ் நூலகக் கட்டிடத்தை மீள்நிர்மாணம் செய்வதற்கும் மீள்நிர்மாணம் செய்யப்படும் வரை இடைக்கால நூலகம் ஒன்றை நிறுவவும் தீர்மானித்தது. யாழ் மாநகர ஆணையாளர் திரு.வே.பொ. பாலசிங்கத்திடமும், யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பல்லேகலவிடமும் யாழ் நகரில் இடைக்கால நூலகத்திற்கு பொருத்தமான கட்டிடம் ஒன்றைத் தெரிவு செய்யுமாறு ஜனாதிபதியின் நூலகக் குழு கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கமைய யுத்தத்தால் அழிவடைந்திருந்த தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமானதும் யாழ். கச்சேரியடியில் இருந்ததுமான ஒரு கட்டிடத்தை பொறுப்பேற்று புனரமைத்து இடைக்கால நூலகத்தை அங்கு திறப்பதாக முடிவாயிற்று. 

அதே நேரம் இடைக்கால நூலகத்தில் பணியாற்ற திரு. தனபாலசிங்கம் தலைமையிலான குழுவொன்றை மாநகர ஆணையாளர் தெரிவு செய்திருந்தார். அக்குழுவினரை ஜனாதிபதி நூலகக் குழு கொழும்பிற்கு இராணுவம் மூலமாக அழைப்பித்து பிரிட்டிஷ் கவுன்சிலில் நேர்முகப் பரீட்சை நடாத்தியது. அப்போது ஜனாதிபதியின் நூலகக் குழு, திரு.வி.எஸ். தனபாலசிங்கத்தை பிரதம நூலகராகத் தெரிவு செய்து அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தனர். 

இதே நேரம் யாழ்ப்பாணத்தில் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் நிலவிய விடுதலைப் போராட்ட அரசியல் சூழலில் இடைக்கால நூலகமானது இலங்கை அரசின் ஆக்கிரமிப்பின் ஒரு குறியீடாகவே பார்க்கப்பட்டது. இதற்கிடையே புதிய நூலகக் கட்டிடத்தை தனியானதொரு காணியில் கட்டுமாறும், எரியுண்ட பழைய நூலகத்தை நினைவகமாகப் பேணுமாறும் புத்திஜீவிகளாலும், பொதுமக்களாலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. இதற்கு அரசு கடுகளவும் இணங்கவில்லை. 

இதன் விளைவாக சந்திரிகா அரசினால் யாழ்ப்பாணப் பொது நூலகத்தினை புனரமைத்துத் திறப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்திருந்தது. தவிர்க்கவியலாத சூழலில் அதன் பிரதம நூலகர் பணியினை ஏற்றிருந்த தனபாலசிங்கத்திற்கும், மாநகர ஆணையாளருக்கும் உயிர் அச்சுறுத்தல் வேறு விடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் கொழும்பிற்கு அழைக்கப்பட்ட நூலகப் பணியாளர் குழுவிடம் யாழ்ப்பாண நூலகத்திற்கென இலங்கை அரசினாலும், இந்திய அரசினாலும், ஏனைய சர்வதேச நாடுகளாலும் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்த நூல்களும், நூலகத்திற்குத் தேவையான தளபாடங்களும் வழங்கப்பட்டன. அத்துடன் யாழ் திரும்பியதும் உடனடியாக இடைக்கால நூலகத்தை ஒழுங்குபடுத்தி அதே மாதத்தில் திறக்க ஏற்பாடு செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தது. எனினும் யாழ்ப்பாணத்தில் நிலவிய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக உருவாகியிருந்த அரசியல் சூழ்நிலையில், நூலகக் குழுவினரில் சிலர் சுதந்திரமாகப் பணியாற்ற இயலாதிருந்த நிலைமையின் காரணமாக, உயிர் அச்சுறுத்தலுக்குப் பயந்து பணிக்குச் செல்ல மறுத்தனர். 

இராணுவத்தின் கட்டாயப்படுத்தலின் காரணமாகப் பணியை ஏற்று நூலகர் தனபாலசிங்கமும், அவரது நூலகக் குழுவினரும் யாழ்ப்பாணப் பொது நூலக சேவையினை ஒழுங்கு செய்திருந்தனர். 1998 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று பழைய கச்சேரிக்கு அருகில் அமைந்திருந்த புனரமைக்கப்பட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான கட்டிடத்தில் யாழ். நூலக சேவைகள் சம்பிரதாயபூர்வமாகத் தொடக்கிவைக்கப்பட்டது. அப்போதைய தபால், தந்தி தொலைத்தொடர்பு வெகுசனத்துறை அமைச்சர் திரு. மங்கள சமரவீர, கல்வி உயர்கல்வி அமைச்சர் ரிச்சர்ட் பத்திரன, சமூக சேவைகள் அமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திசாநாயக்க ஆகிய அரசாங்கப் பிரமுகர்களின் முன்னிலையில், பலத்த இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் நூலகம் அன்று திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆசியுரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்த நல்லை ஆதீன முதல்வரை இராணுவத்தினர் கௌரவப்படுத்தாமல், உடற்பரிசோதனைக்கு உட்படுத்த முனைந்ததுடன் விழா நிகழ்விடத்திற்கு நடந்தே செல்லவும் வற்புறுத்தியமை காரணமாக அதனை எதிர்த்து நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அவர் திரும்பிச் சென்றுவிட்டார். (செய்தி: வீரகேசரி, 18.01.1998).

பிரதம நூலகராகப் பணியை ஏற்றுத் தன் கடமையை அரசியல் கெடுபிடிகளைக் கண்டு தளராமல் தொடர்ந்து மன உறுதியுடன் மேற்கொண்ட திரு. தனபாலசிங்கம் பொது நூலகத்தை வெகு அவதானத்துடனும், தொழில்சார் நேர்மையுடனும் அபிவிருத்தி செய்வதில் அக்கறை செலுத்தினார். இதனால் இடைக்கால நூலகம் ஒரு ‘மாதிரி நூலகமாக’ யாழ் மாவட்டத்தின் பெரிய நூலகமாக காலக்கிரமத்தில் வளர்ச்சியடைந்தது. யாழ். மாநகரசபை ஆணையாளர் திரு பாலசிங்கத்தின் ஆதரவுடன், யாழ். நூலக அபிவிருத்திக்கான உதவிகளை பெற்றுத்தரும் பணியில் என்னையும் (என். செல்வராஜா) ஈடுபடுத்தி, யாழ்ப்பாண நூலகத்தின் ஐரோப்பிய பிரதிநிதியாகவும் என்னை நியமிக்க தனபாலசிங்கம் வழியமைத்திருந்தார்.

பல பெரியார்களின் தனிப்பட்ட சேகரிப்புகளைப் பெற்று அதற்கெனத் தனியான பகுதியொன்றினையும் உருவாக்கினார். பாதுகாப்புத்துறையின் கடுமையான கட்டுபாட்டிற்குள்ளும் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து மாணவர்கள் இந்நூலகத்தைப் பயன்படுத்த வைத்தார். அத்துடன் நூலக சேவைக்கு அப்பால் யாழ் மாவட்ட நூலகர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளையும் இந்நூலகத்தில் ஏற்பாடு செய்திருந்தார். 

யாழ்ப்பாண மாவட்டத்தில் நூலகவியல் துறையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான நூலகவியல்சார் நூல்களைப் பெறும் ஒரே இடமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகமே இருந்து வந்த ஒரு சூழல் அப்போது நிலவிவந்தது. பல்கலைக்கழக மாணவர்களாக இல்லாத நிலையில் நூலகவியல்துறை மாணவர்கள், தமக்கான நூல்களை இரவல் பெறும் வழியின்றி, ஒரு பிரத்தியேக ஒழுங்கு முறைக்குட்பட்டே பல்கலைக்கழக நூலகத்தை பயன்படுத்த இடமளிக்கப்பட்டனர். தீவிர கெடுபிடிகள் காரணமாக அந்த நூலகத்தைப் பயன்படுத்துவதையும் நூலகவியல்துறை மாணவர்கள் வசதியீனமாகக் கருதி தவிர்த்து வருவதை தனபாலசிங்கம் உணர்ந்திருந்தார். 

இந்நிலையில் பிரித்தானியாவில் ஸ்கொட்லாந்தின் டண்டி பல்கலைக்கழக நூலகத்தின் நூலகக் கல்விப் பிரிவு மூடப்படும் செய்தியறிந்து அங்கிருந்த சுமார் 600 இற்கும் அதிகமான நூலகவியல் சார்ந்த பெறுமதிமிக்க நூல்களை எனது உதவியுடன் பெற்று யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் நூலகவியல் கல்விபெறும் மாணவர்களுக்கான தனியானதொரு பிரிவை உசாத்துணைப்பிரிவு மண்டபத்தின் ஒரு மூலையில் உருவாக்கி நூலகவியல் துறையின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க அளவில் சேவையாற்றியுள்ளார். 

இதே வேளை யாழ். கல்வி வலயத்தால் நடாத்தப்பட்டுவந்த முறைசாராக் கல்வி பிரிவினர் நடாத்திவந்த நூலகவியல் பயிற்சி நெறியின் போதனாசிரியராகவும் யாழ். இந்துக் கல்லூரியிலும், கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் இவர் பணியாற்றியிருந்தார்.

இதேவேளை அழிக்கபட்ட யாழ் நூலகக் கட்டிடத்தின் புனரமைப்பு வேலைகள் நடைபெறத் தொடங்கியிருந்தன. புனரமைப்பிற்கான திட்டமிடல் கூட்டங்களில் பங்குபற்றி நூலகத்தில் அமைய வேண்டிய புதிய அம்சங்களையும் குழுவினருக்கு வெளிப்படுத்தி, இலங்கையில் ஒரு மாதிரி நூலகமாக அமைக்கத் தன்னாலான பங்களிப்பினை வழங்கிவந்தார். எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகக் கட்டிடம், இலங்கை அரசினால் புனரமைக்கப்பட்டு யாழ் மாநகர சபையால் 2003 ஆம் ஆண்டு பொறுப்பேற்கப்பட்டபோது, முன்னர் கச்சேரியடியில் இயங்கிய இடைக்கால நூலகத்தை மூடி, புனரமைக்கப்பட்ட கட்டிடத்திற்கு நூல்களையும், தளபாடங்களையும் இடமாற்றம் செய்யும் பாரிய பணியை அவர் திட்டமிட்டு வெற்றிகரமாகச் செய்துமுடித்தார். 

யாழ். பொது நூலகம், இலங்கை அரசினால், அந்நாளைய மாநகர முதல்வர் செல்லன் கந்தையா அவர்களின் காலத்தில் புனரமைக்கப்பட்டு மீளத் திறக்கப்படுவதை ஒரு பெருவிழாவாக மாநகரசபை ஏற்பாடு செய்திருந்தது. இதனைத் திறந்துவைக்க, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரின் கடுமையான விமர்சகரான திரு.வீ. ஆனந்தசங்கரியை அழைக்க அரசியல்வாதிகள் சிலர் மறைமுகமாக முயற்சி செய்திருந்தனர். எனினும் இதனை எதிர்த்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்னணியில் இயங்கிய ஒரு குழுவினர் திறப்பு விழாவையே நடாத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். 

திறப்பு விழாவுக்கு முன்னைய தினம் இனம் தெரியாத இளைஞர்களால் கட்டடத்தின் திறப்புகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இதனால் இடைக்கால நூலகம் இருந்தும் இல்லாத சூழலில் சிலகாலம் மக்கள் பாவனையின்றி மூடப்பட்ட துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் அப்பாவி வாசகர்கள் குறிப்பாக பரீட்சையை அண்மித்திருந்த உயர்தர மாணவர்கள் பெரும் கஷ்டத்தை எதிர் நோக்கினர். ஒழுங்கு செய்யப்பட்ட புனரமைக்கப்பட்ட நூலகம் திறக்கப்படாமல் நீண்ட காலம் மூடப்பட்டு இருந்தமையால் உள்ளூரில் மாத்திரமல்லாது, உலகின் பல பாகங்களிலிருந்தும் மூடிக்கிடக்கும் பொது நூலகத்தை திறக்கும்படி மாநகரசபைக்கு நெருக்குதல்கள் உருவாகியிருந்தன. இந்த மக்கள் எழுச்சியின் பயனாக நூலகம் எவ்வித ஆரவாரமுமின்றி ஒருநாள் (23.02.2004) காலை அன்றைய ஆணையாளரின் உதவியுடன் மக்கள் பாவனைக்காகத் திறந்துவிடப்பட்டது. ஈழத்தின் அறிவுஜீவிகளைக் கொண்டதாக நம்பப்படும் எமது தமிழ் மண்ணில் இடம்பெற்றுவிட்டதாக வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ள துர்ப்பாக்கியமான நிகழ்வு இதுவாகும். 

ஆரவாரமின்றி திறக்கப்பட்ட யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் உள்ளக அபிவிருத்திப் பணிகளும் ஆரவாரமின்றியே திரு.வி.எஸ். தனபாலசிங்கம் அவர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. 

புனரமைக்கப்பட்ட நூலகத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் உதவி கோரி பல நிறுவனங்களுக்கும் தனபாலசிங்கம் கோரிக்கை விடுத்தார். யுனெஸ்கோ நிறுவனம் தொழில்நுட்ப உதவிகள் வழங்க முன்வந்தது. அவர்கள் நூலகத்தில் கணணிக் கூடம் அமைப்பதற்கும், நூலகத்தை கணணிமயப்படுத்துவதற்கும் 30 கணணிகளையும் அதனுடன் சேர்த்துப் பல இயந்திர உபகரணங்களையும் அன்பளிப்பாக வழங்கினார்கள். பணியாளர்களுக்கு விசேட பயிற்சிகளையும் வழங்கினார்கள். மேலும் கஷ்டப் பிரதேச மக்களும் மாணவர்களும் வாசிப்புத் திறனை மேம்படுத்த வழிவகை செய்யும் நோக்கில் நடமாடும் நூலக வாகனத்தையும் வழங்கினார்கள்.

யுனெஸ்கோ நிறுவனத்தினர், பொது நூலகத்தின் நூற்சேர்க்கையை விருத்தி செய்யும் நோக்கில் பிரதம நூலகர் திரு தனபாலசிங்கத்தை ஐந்து முறை தென்னிந்தியாவிற்கு அனுப்பி தமிழ்நாடு, பெங்களூர் போன்ற இடங்களில் வெளியான பெருந்தொகையான நூல்களை ஒரே தடவையில் (ஏறத்தாழ 30,000 நூல்களை) கொள்வனவு செய்ய உதவினர். அத்துடன் பல கலாசார வெளியீடுகளை கணணி இறுவட்டுக்களாக தென்னிந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யவும் உதவினர். இதற்கு மேலதிகமாக திரு. தனபாலசிங்கத்தை ஆவணப் பாதுகாப்பு தொடர்பாக சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் பயிற்சி பெறவும் ஏற்பாடு செய்திருந்தனர்.

பல்வேறு நாடுகளின் அரசுகளிடமிருந்தும், பல நிறுவனங்களிடமிருந்தும், பல அபிமானிகளிடமிருந்தும் பெரும் தொகையான நூல்களையும், உபகரணங்களையும் நன்கொடையாகப் பெற ஏற்பாடு செய்து நூலகத்தின் நூற் சேரக்கையினை 100,000 இற்கும் அதிகமாக தனபாலசிங்கம் தனது பதவிக்காலத்தில் உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவரது தலைமைத்துவத்தின் கீழ் யாழ்ப்பாணப் பொது நூலகம் மிகவும் சிறப்படைந்திருந்ததை இன்று பலரும் சொல்லக் கேட்கமுடிகின்றது. இவரது காலத்தில்தான் தனியார் வழங்கிய பிரத்தியேக நூற்சேர்க்கைகளைக் கொண்ட தனிப்பகுதி உருவாகியது. இலங்கை பத்திரிகைகள் சஞ்சிகைகள் என்பவற்றை பாதுகாக்கும் விசேட பகுதி உருவாகியது. யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் அனுசரணையுடன் ஆங்கில கற்கை கூடம் நிறுவப்பட்டது. சிங்கப்பூர் சர்வதேச நிறுவன அனுசரணையுடன் சிறுவர் நூலகப்பிரிவு நவீனமயப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணப் பொது நூலகத்திற்கான தனியான இணையத்தளமொன்று உருவாக்கப்பட்டது. 

இவரது அளப்பரிய பிரயத்தனத்தினால் இன்று யாழ் நூலகம் இலங்கையின் மாதிரி நூலகமாகத் திகழ்கின்றது. அத்துடன் 2013 ஆம் ஆண்டு இலங்கை தேசிய நூலகங்கள் ஆவணமாக்கல் சபையால்  இலங்கையில் அதிவிசேட தர நூலகமாகத் தரப்படுத்தப்பட்டதுடன் இலங்கையில் சிறந்த நூலகங்களில் ஒன்றாகவும் தெரிவு செய்யப்பட்டது. இவரது சேவையினை ஆய்வு செய்த இலங்கை தேசிய நூலகங்கள் ஆவணமாக்கல் சபையினர் 2009 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் சிறந்த நூலகர்களில் ஒருவராக திரு.வி.எஸ். தனபாலசிங்கத்தை தெரிவு செய்து விருது வழங்கிக் கௌரவித்தனர்.

இவரது நிர்வாகத்தின்போது, சிங்கப்பூர் தேசிய நூலக சபையினர் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சின் அனுசரணையுடன் சிறுவர் நூலக அபிவிருத்திக்கென நிதி ஒதுக்கி அப்பகுதியை புனரமைப்புச் செய்தனர். இப்பகுதிக்கென நூல்களையும் நவீன கண்கவர் தளபாடங்களையும் உபகரணங்களையும் சிறுவர் பகுதிக்கென வழங்கினர். சிறுவர்களுக்கான கணனி இணைய வசதிகளையும் செய்து தந்தனர். சிறுவர் பிரிவில் பணியாற்றவென நூலகப் பணியாளர் குழுவொன்றினைத் தெரிவுசெய்து பயிற்சிக்காக சிங்கப்பூருக்கு வரவழைத்தனர். திரு. தனபாலசிங்கத்தின் தலைமையில் அந்த நூலகர் குழுவினர் 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்று பயிற்சி பெற்று நாடு திரும்பினர்.

சிங்கப்பூரிலிருந்து திரும்பியதும் தாம் பெற்றுக்கொண்ட பயிற்சிகளின் அடிப்படையில் நவீன மயப்படுத்தப்பட்ட யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் சிறுவர் நூலகத்தை 29.7.2011 ஆம் திகதி சிங்கப்பூர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பிரிநிதிகள், சிங்கப்பூர் வெளிநாட்டமைச்சர் ஆகியோரைக் கொண்டு திறந்து வைத்தனர். அத்துடன் சிங்கப்பூரில் பெற்ற பயிற்சி அடிப்படையில் சிறுவர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து பல சிறுவர்களையும் பெற்றோர்களையும் ஊக்குவித்து, அந்த நூலகத்தைப் பயன்படுத்த வழியமைத்துத் தந்தனர். இன்றும் இச்சிறுவர் பகுதி இலங்கையில் சிறந்த சிறுவர் நூலகமாகத் திகழ்வதுடன் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றவண்ணமிருக்கின்றது.

இதற்கு மேலாக திரு. தனபாலசிங்கம் அவர்கள், யாழ் மாவட்ட பொது நூலகங்களையும் பாடசாலை நூலகங்களையும் அபிவிருத்தி செய்வதற்காக நூலகப் பணியாளர்கள், ஆசிரிய நூலகர்களிற்கு காலத்திற்குக் காலம் பயிற்சிப் பட்டறைகளை பொது நூலகத்தினூடாக நடாத்தி அவர்களை வழிப்படுத்தியும் வந்துள்ளார்.

தனது நூலகப் பணிகளுக்கு மேலதிகமாக, தமிழ்ப் பிரதேசங்களில் நூலக சேவையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு, யாழ். பல்கலைக்கழக பிரதம நூலகராகவிருந்த (அமரர்) ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்களுடன் இணைந்து ‘நூலக விழிப்புணர்வு நிறுவகம்’ என்னும் அமைப்பை உருவாக்கி அதன் செயலாளராகப் பணியாற்றி மக்களிடையேயும் மாணவர்களிடையேயும் அருகி வரும் வாசிப்புப் பழக்கத்தை வளப்படுத்துவதற்கான பல நிகழ்ச்சித் திட்டங்களை அமுலாக்கி வந்தார்.

இவ்வமைப்பினூடாக பல பயிற்சிக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து நூலகப் பணியாளர்களையும் வளப்படுத்தி வந்தார். நூலகங்களை ஒழுங்குபடுத்துதல், பொருத்தமான நூலகத் தளபாடங்கள் உபகரணங்கள் என்பவற்றை அறிமுகப்படுத்தி, பிரதேசரீதியில் நூலகங்களை சிறப்பாக இயங்கச் செய்ய நூலக விழிப்புணர்வு நிறுவகம் தன்னாலான பணியை சில காலம் ஆற்றிவந்தது.

திரு.வி.எஸ். தனபாலசிங்கம் அவர்கள், தனது உள்ளூராட்சி நூலக சேவையில் 33 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து 2011 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி ஓய்வு பெற்றார். 

ஓய்வின் போதும் யாழ்ப்பாண மாவட்டத்தின் நூலக வளர்ச்சியில் அதிகம் அக்கறை காட்டிவந்தவர் திரு. தனபாலசிங்கம். அரியாலை அருணோதயா சனசமூக நிலையம் 1995 ஆம் ஆண்டு யுத்தத்தினால் அழிக்கப்பட்ட பின்னர் 1996 ஆம் வருடம் மீளவும் உருவாக்கப்பட்டது. இந்த சனசமூக நிலையத்தை மீள் நிர்மாணம் செய்யும் நிர்வாகச் செயலாளராகப் பல வருடங்கள் பணியாற்றி நிலைய வாசிகசாலை, பாலர் பாடசாலை, கலாசார அரங்கம் என்பவற்றை மீளக் கட்டிமுடித்து 2003 ஆம் வருடம் மக்கள் பயன்படுத்த முன்நின்று உழைத்துள்ளார். 

யாழ். மறை மாவட்ட குரு முதல்வரினால் நிர்வகிக்கப்படும் கிளிநொச்சி அன்னை இல்லத்தில் போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக லெபாரா நிறுவனத்தால் நிர்மாணித்து வழங்கப்பட்ட லெபாரா நூலகத்தை ஒழுங்குபடுத்தியதுடன் அதன் தொழிற்பாட்டிற்காக ஆலோசக நூலகராகத் தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றார். 

அவருக்குக் கிடைக்கவிருந்த சுப்ரா தர (Supra Grade) நூலகர் பதவி அவர் பணியாற்றும் காலத்தில் அவருக்கு உள்ளக காழ்ப்புணரச்சிகளால் வழங்கப்படவே இல்லை என்பது வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட வேண்டிய மற்றும் ஒரு வேதனையான சம்பவமாகும். அண்மையில் அவரது ஓய்வூதிய காலத்திலேயே அது புதிய நிர்வாகத்தினரால் வழங்கி வைக்கப்பட்டமையானது கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பானது. அவர் பணியில் இருந்தவேளையில் இப்பதவித் தரத்தைப் பெற்றிருந்தால் அவரால் மேலும் பல சாதனைகளை உரிய அதிகாரத்துடன் செய்திருக்க முடியும் என்பது எனது அபிப்பிராயமாகும். 

நூலகர் எஸ். தனபாலசிங்கம் 30.07.2011 இல் ஓய்வுபெற்ற பின்னர், அவரது உதவி நூலகராக இருந்த திருமதி இமெல்டா கருணாகரன் 01.08.2011 அன்று முதல் நூலகராகப் பதவிவகித்தார். இவரது பதவிக்காலத்தில் திரு.மு.செ. சரவணபவன் மாநகரசபை ஆணையாளராகப் பணியாற்றினார். சரவணபவனின் பதவிக்காலம் 31.05.2012 இல் நிறைவடைந்ததும், செ. பிரணவநாதன் என்பவர் 05.06.2012 இல் ஆணையாளராகப் பதவியேற்றார். இவரது பதவிக்காலத்திலேயே திருமதி. இமெல்டா கருணாகரன் ஓய்வுபெற்றார். இமெல்டாவின் பதவிக்காலம் 10.11.2014 இல் நிறைவடைந்த வேளையில், திருக்கோணமலை பொதுசன நூலகத்தில் நூலகராகப் பணியாற்றிய திருமதி. சுகந்தி சதாசிவமூர்த்தி 10.11.2014 இல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் நூலகராகப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். 

திருமதி. சுகந்தியின் பதவிக்காலம் 14.07.2021 அன்றுடன் நிறைவடைந்து அவர் ஓய்வுபெற்றுச் சென்ற வேளையில், செல்வி. கந்தையா கிருபாகுமாரி அவர்கள் யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் நூலகராக 14.07.2021 முதல் 03.11.2022 வரையிலான குறுகிய காலம் பணியாற்றி ஓய்வுபெற்றிருந்தார். பின்னர் செல்வி. நடராஜா ராகினி அவர்கள் 03.11.2022 முதல் ஓய்வுபெறும் வரை (14.07.2023) எட்டு மாதங்கள் பணியாற்றியிருந்தார். திருமதி. சுகந்தியின் பதவிக் காலத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த 10 நூலகர்கள் பிரதேச நூலகங்களுக்கு 2021 இல் மாற்றலாகிச் செல்ல நேர்ந்தது. அதன் காரணமாக மாற்றலாகிச் சென்ற ஒருவரின் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் முன்னர் கொக்குவில் பொது நூலகத்தில் உதவி நூலகராகப் பணியாற்றிய திருமதி. அனுசியா சிவகரன் அவர்கள் யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் நூலகராக 14.07.2023 முதல் நியமிக்கப்பட்டிருக்கிறார். யாழ்ப்பாண நூலக வரலாற்றில் குறுகிய இரண்டாண்டு காலத்தில் மூன்று நூலகர்கள் பதவியேற்றிருப்பதென்பது, ஒரு ஆரோக்கியமான சூழல் அல்ல. ஒரு நூலகம் உறுதியான பாதையில் நீண்டகாலத் திட்டங்களுடன் பயணிப்பதே ஆரோக்கியமானதாகும். பதவி மூப்பை மாத்திரம் கருத்தில்கொண்டு உயர் பதவிகளில் நூலகர்களை நியமிப்பதென்பது பொது நூலக வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடாகும். 

யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் வரலாறு பற்றிய விரிவான தேடலுக்கு பின்வரும் நூல்கள் பயனுள்ளவையாக அமையும்.

  1. யாழ்ப்பாண நூல் நிலையம்: ஒரு ஆவணம் (க.சி. குலரத்தினம், 1997)
  2. யாழ்ப்பாண நூலகம் அதன் சாம்பலிலிருந்து எழுகின்றது (வி.எஸ். துரைராஜா, 2009)
  3. யாழ்ப்பாணப் பொது நூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு (என். செல்வராஜா, 2001, 2023)
  4. யாழ்ப்பாண பொதுசன நூலகம்: எரிக்கப்பட்டு 34 ஆண்டுகள் (தங்க முகந்தன், 2015)
  5. Rising from the Ashes (N. Selvarajah, 2003, 2023)
  6. யாழ்ப்பாணப் பொது நூலகம்: அன்றும் இன்றும் (ரூபவதி நடராஜா, 2019)

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6669 பார்வைகள்

About the Author

நடராஜா செல்வராஜா

நடராஜா செல்வராஜா, யாழ். இராமநாதன் பெண்கள் கல்லூரியில் நூலகராகவும், யாழ்ப்பாண, சர்வோதய சிரமதான சங்கத்தின் யாழ்.மாவட்ட நூலகப் பொறுப்பாளராகவும், இலங்கை உள்ளூராட்சி அமைச்சின் நூலகராகவும், இந்தோனேசியா, ஐக்கியநாடுகள் சபையின் கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகவும், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகத்தின் பொறுப்பாளராகவும், கொழும்பு இனத்துவக் கல்விக்கான சர்வதேச நிலைய ஆய்வு நூலகப் பொறுப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

அயோத்தி நூலக சேவையின் ஸ்தாபகரும், நூலகவியல் காலாண்டுச் சஞ்சிகையின் தாபக ஆசிரியராகவும் செயற்பட்டார். ஊடகத்துறையிலும் பணியாற்றிவிட்டு, தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இவர், ரோயல் மெயில் தபால் நிறுவனத்தின் அந்நிய நாணயப்பிரிவில் அதிகாரியாக தற்போது பணியாற்றுகின்றார். இவர் நூலகவியல் பற்றி தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், நூலகவியல் பற்றியும் பல வெளியீடுகளை செய்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)