யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் : ஒரு வரலாற்றுக் குறிப்பு - பகுதி 2
Arts
21 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் : ஒரு வரலாற்றுக் குறிப்பு – பகுதி 2

September 6, 2024 | Ezhuna

“யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்” என்ற இத்தொடரானது, யாழ்ப்பாணத்தில் புராதன நூலக வரலாறு முதல் நவீன தனியார் நூலக வளர்ச்சி, பொது நூலக வளர்ச்சி, நூலகவியல் கல்வியின் அறிமுகம், நூலகத்துறையில் ஈழத்தமிழர்களின் முன்னோடி முயற்சிகளாக யாழ்ப்பாணத்தில் எழுந்த நூலகவியல்சார் நூல் வெளியீடுகள், நூலகவியல் துறைசார் சஞ்சிகைகளின் வெளியீடுகள், யாழ்ப்பாண கல்வியியல் வரலாற்றில் தடம் பதித்த நூலகங்களின் வரலாறு என்பவை உள்ளிட்ட விடயங்களை பற்றி பேசவிழைகின்றது.

இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் 1974 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆறாம் நாள் திருநெல்வேலியில் அப்போதைய பிரதம மந்திரியாக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவால் சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. அதற்கு முன்னரே 1974 இல் ஜூலை 10 ஆம் திகதி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் இயங்கத் தலைப்பட்டுவிட்டதை அதன் முதலாம் ஆண்டுக்கான நிர்வாக அறிக்கையின் கால எல்லைக் குறிப்பு தெரிவிக்கின்றது (இலங்கைப் பல்கலைக்கழகம் – யாழ்ப்பாண வளாகம் ஆண்டறிக்கை 1974.07.10 இலிருந்து 1975.12.31 வரையான காலப்பகுதியை உள்ளடக்கியுள்ளது).

இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம்

சிக்கலும் முரண்பாடுகளும் நிறைந்திருந்ததொரு சூழலில், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் யாழ்ப்பாண விஜயத்தை எதிர்த்து பாடசாலைகள், கடைகள் மூடப்பட்டு, யாழ்ப்பாணக் குடாநாட்டில் தமிழ் அரசியல்வாதிகளின் ஏற்பாட்டில் பகிஷ்கரிப்பு நடத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாண வளாகம் அரச பாதுகாப்புப் படையினரின் பலத்த பாதுகாப்புடன் சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.

திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம் தீவிரமடைந்திருந்த வேளையில் திடீரென்று அவசர அவசரமாக யாழ்ப்பாணத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது வளாகம் திறக்கப்பட்டமைக்கு, யாழ்ப்பாணத்தில் அரசின் விருப்பிற்கு எதிராக, 1974 ஜனவரி 3 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதிவரை நடந்தேறிய அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடும் மறைமுகமான காரணியாக அமைந்திருந்ததை அக்காலத்தில் வாழ்ந்திருந்த புத்திஜீவிகள் நன்கறிவர். யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டை நடாத்துவதற்கு தலைமை தாங்கி முன்நின்று உழைத்த பேராசிரியர் சு. வித்தியானந்தனையும் அவரது குழுவினரையும் புறந்தள்ளி, யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாடு நடாத்தப்படுவதை எதிர்த்து, கொழும்பில்  அரசாங்கத்தின் ஆதரவுடன் அதனை நடத்தி முடிப்பதற்கு ஆதரவாக இருந்த இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் புத்திஜீவிகளுக்கு சன்மானம் வழங்கும் வகையில் யாழ்ப்பாண வளாகத்தின் உயர் பதவிகள் வழங்கப்பட்டமை, யாழ்ப்பாண வளாகத்தின் அவசரத் திறப்பு மறைமுகமாக வழிகோலியது.

அநியாயப் படுகொலைகளுடன் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நிறைவுற்று ஆறு மாதங்கள் கழிந்த நிலையில், இலங்கையின் கல்வி அமைச்சராகவிருந்த கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் மஹ்முட் அவர்கள் 15.07.1974 அன்று இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது வளாகம் யாழ்ப்பாணத்தில் பரமேஸ்வரா கல்லூரியை உள்ளீர்த்து, அதனை பிரதான பல்கலைக்கழகக் கட்டிடமாகக் கொண்டு திறக்கப்படவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் எல்.எச். சுமணதாச அவர்கள் 19.07.1974 அன்று வித்தியாலங்கார வளாகத்தில் தமிழ் மற்றும் இந்து சமயத் துறையின் துறைத்தலைவராகப் பணியாற்றி வந்த கலாநிதி கா. கைலாசபதி அவர்களை 01.08.1974 முதல் யாழ்ப்பாண வளாகத்தின் முதலாவது தலைவராக நியமித்திருப்பதாக அறிவித்தார். மூன்றாண்டுகளின் பின்னர், யாழ்ப்பாண வளாகத்தின் இரண்டாவது தலைவராக கலாநிதி சுப்பிரமணியம் வித்தியானந்தன் தெரிவுசெய்யப்பட்டார். யாழ்ப்பாண வளாகம், 1979 ஜனவரி 1ஆம் நாள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமான வேளையில் கலாநிதி சு. வித்தியானந்தன் அதன் முதலாவது துணைவேந்தரானார்.

இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தின் அவசர உருவாக்கத்தை அன்றைய  சில நேர்மையான சிங்கள புத்திஜீவிகள் ‘அட்டுவ கடலா புட்டுவ ஹதுவா’ என்ற சிங்களப் பழமொழியை பயன்படுத்தி, பிரதம அமைச்சர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவையும், அமைச்சர் செல்லையா குமாரசூரியர் உள்ளிட்ட அவரது குழுவினரையும் கிண்டலடித்திருந்தனர்.

‘அட்டுவ’ என்பது சிங்கள மொழியில் வீடுகளில் தானியங்கள் சேமித்து வைப்பதற்கு அமைக்கப்படும் மரப்பலகையிலான பரண்களைக் குறிக்கும் சொல்லாகும். இதனை தமிழில் ‘அட்டாலை’ அல்லது ‘அட்டாளை’ என்றும் சில ஊர்களில் குறிப்பிடுவதுண்டு. வீட்டில் பாவனையிலுள்ள ஒரு பரணை உடைத்து அதன் பயன்பாட்டைச் சீரழித்துவிட்டு, அந்த மரத்தைப் பயன்படுத்தி ஒரு கதிரையைச் செய்த மாதிரி, நன்றாக இயங்கி வந்தவையும் வரலாற்று முக்கியத்துவமானவையுமான யாழ்ப்பாணத்தின் மூன்று கல்வி நிறுவனங்களை உடைத்துத் தகர்த்து ஒரு பல்கலைக்கழக வளாகத்தை அமைத்தமையையே அவர்கள் இப் பழமொழியின் வாயிலாக மறைமுகமாகக் குறிப்பிட்டனர் என்பது தெளிவு.

இலங்கையின் மற்ற மாநிலங்களில் எல்லாம் பல்கலைக்கழக வளாகங்கள் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலங்களில், விரிவாக்கத்துக்கான வாய்ப்புகள் உள்ள, பல்கலைக்கழகத்துக்கேயுரிய தனித்துவமான நவீன கட்டிட வடிவமைப்புக்கான திட்டமிடல்களுடன் திறக்கப்பட்டு வந்த நிலையில், யாழ்ப்பாண வளாகம் விதிவிலக்காக, ஏற்கெனவே இயங்கு நிலையிலிருந்த யாழ்ப்பாணத்தின் மூன்று கல்வி நிறுவனங்களைச் சீர்குலைத்து, அவற்றில் பயின்றுவந்த பள்ளிச் சிறார்களின் இயல்பு வாழ்க்கையை அழித்து உருவாக்கப்பட்டிருந்தது. இதனை யாழ்ப்பாணத்துக் கல்விச் சமூகமும் எவ்வித எதிர்ப்புமின்றி கைகட்டி வேடிக்கை பார்த்திருந்தது.

1921 ஆம் ஆண்டில் சேர். பொன். இராமநாதன் அவர்களால் சைவப் பாடசாலையாக உருவாக்கப்பட்டு திருநெல்வேலியில் சுமார் முன்னூறு மாணவர்களுடன் சிறப்பாக இயங்கிவந்த பரமேஸ்வராக் கல்லூரியை ஆக்கிரமித்து, அங்கிருந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும், எவ்வித முன்னேற்பாடுமின்றி, விஸ்தீரணத்தில் மிகவும் சிறியதான திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்துக்கும் வேறு சில அயல் பாடசாலைகளுக்கும் அனுப்பிவைத்து, பரமேஸ்வராக் கல்லூரியை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகமாக பெயர்சூட்டி, பல்கலைக்கழகத்துக்கான எவ்வித உட்கட்டுமான வசதிகளுமற்ற நிலையில் அவசர அவசரமாக இவ்வளாகம் உருவாக்கப்பட்டது.

வட்டுக்கோட்டையில் அமைந்திருந்த வெளிவாரிப் பட்டப்படிப்பு மையத்தையும், யாழ்ப்பாணக் கல்லூரி நூலகத்தையும் கபளீகரம் செய்து அங்கிருந்த அரிய பல நூல் சேகரிப்புகளையும் பல்கலைக்கழகத்துக்கான நூலகச் சேர்க்கையாக மாற்றி இலங்கையின் கல்வி வரலாற்றில் மாபெரும் குளறுபடியை அன்றைய அரசு மேற்கொண்டிருந்ததை தமிழ்க் கல்விச் சமூகம் எவ்வித எதிர்ப்புமின்றி மௌனமாக எதிர்கொண்டிருந்தது. இவ்வாறே கிழக்கிலும், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தின் போது, அங்கு எவ்விதமான சிக்கலுமின்றி இயங்கிவந்த வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலய மாணவர்களை பிறிதொரு இடத்திற்கு மாற்றிவிட்டு அந்தக் கட்டிடத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தை நிறுவினர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச காணிகள் ஏராளம் தரிசாக இருந்த நிலையில் அங்கே பொருத்தமானதொரு புதிய கட்டடத்தை திட்டமிட்டு உருவாக்கும் மனநிலையில் சிறீமா அரசு இருக்கவில்லை. மாறாக அவசர அவசரமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் முதுசொங்களாக இருந்த திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரி, திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயம், யாழ்ப்பாணக் கல்லூரி ஆகிய மூன்று முக்கிய கல்வி நிறுவனங்களின் அமைதியான நிர்வாகத்தைச் சீர்குலைத்து, ஒரு பல்கலைக்கழக வளாகத்தை சம்பிரதாயபூர்வமாக 1974 ஒக்டோபர் ஆறாம் திகதி கோலாகலமாகத் திறந்துவைத்தது.

திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரி நூலகத்தில் இருந்த சேர். பொன் இராமநாதன், அவரது மருமகனார் சு. நடேசபிள்ளை ஆகியோரின் தனிப்பட்ட சேகரிப்புகள், யாழ்ப்பாணக் கல்லூரியின் நூற்றாண்டுப் பெருமைபெற்ற பட்டதாரிப் பயில்வுப் பிரிவு நூலகம் ஆகியன பலாத்காரமாக பல்கலைக்கழக வளாக நூலகத்துக்கான நூற்சேர்க்கைகளாக உள்வாங்கப்பட்டன.

ஆரம்பத்தில் விஞ்ஞான பீடம், மனிதப் பண்பியற் பீடம் ஆகிய இரு பீடங்களே யாழ்ப்பாண வளாகத்தில் காணப்பட்டன. பின்னாளில் 1975 இல் மனிதப் பண்பியற் பீடத்தின் கீழ் இயங்கும் வகையில், இணுவிலில் மருதனார்மடத்தில் இயங்கிவந்த இராமநாதன் நுண்கலைக் கல்லூரியும் உள்ளீர்த்துக் கொள்ளப்பட்டது. இந்து நாகரிகத்துறையின் தலைவராகவிருந்த பேராசிரியர் க. கைலாசநாதக் குருக்கள் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியின் தலைவராகவும் பணியாற்றினார்.

1978 இல் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகச் சட்டம், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவந்த பல்வேறு வளாகங்களை தன்னாதிக்கம் உள்ள பல்கலைக்கழகங்களாக இயங்க வழியேற்படுத்தித் தந்தது. அதன் விளைவாக, யாழ்ப்பாண வளாகம், 1979 ஜனவரி 1 ஆம் நாள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாயிற்று. முதலாவது துணைவேந்தராக கலாநிதி சு. வித்தியானந்தன் நியமிக்கப்பட்டார். அவரது முயற்சியால் 07.08.1978 இல் மருத்துவபீடம் ஒன்றை கைதடியில் உருவாக்கும் பணிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பெற்றன. 8.10.1978 அன்று கல்வி உயர்கல்வி அமைச்சர் நிசங்க விஜேரத்தின அவர்கள் சம்பிரதாயபூர்வமாக இப்பணிகளை தொடக்கிவைத்தார். பின்னர் கொக்குவில், ஆடியபாதம் வீதியில் கட்டப்பட்ட மருத்துவ பீட வளாகத்திற்கு 1981 ஆம் ஆண்டில் இடமாற்றம் செய்யப்பட்டது. இதன் பயனாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இயங்கு நிலையிலான மருத்துவ பீடம் ஒன்றும் கிட்டிற்று. அங்கு பல்கலைக்கழகத்தின் நூலகப் பிரிவொன்றும் இயங்கியது. முதலாவது மருத்துவபீட மாணவர்கள் அணி 8.8.1979 இல் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். அவர்களுக்கான இறுதி MBBS பரீட்சை ஜூலை 1983 இல் நிறைவெய்தி முதலாவது வைத்தியர் அணி வெளியேறியது.

கொழும்பில் இயங்கிவந்த சுதேச மருத்துவத்தின் சித்த வைத்தியப் பிரிவு 1984 ஆம் ஆண்டு கைதடியில் இயங்கிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வைத்தியபீட வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

யாழ்ப்பாண வளாக நூலகம்

1974-75 முதலாவது ஆண்டுக்கான நிர்வாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, 1974 ஒக்டோபர் மாதம் யாழ்ப்பாண வளாக உருவாக்கத்தின்போது, திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரி நூற்சேர்க்கைகளும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரயின் வெளிநிலைப் பட்டப்படிப்புகள் அலகுக்குச் சொந்தமான தேர்ந்த நூற்சேர்க்கைகளும் ஒன்றுசேர்க்கப்பட்டு பல்கலைக்கழக நூலகத்திற்கான நூல்கள், சஞ்சிகைகள் உள்ளடங்கிய நூற்சேர்க்கையாகின. இவற்றின் எண்ணிக்கை 29,439 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வேளையில் தனியான, பொருத்தமான நூலகக் கட்டிடம் இல்லாமையால், பரமேஸ்வராக் கல்லூரியின் விஞ்ஞான ஆய்வுகூடமும், பாடசாலை மாணவர் தங்குமிடமும் இணைக்கப்பட்டு தற்காலிக நூலகமாக மாற்றப்பட்டது. வளாகத்துக்கான விஞ்ஞானப் பிரிவு நூலகம் வட்டுக்கோட்டையிலேயே வைத்துப் பராமரிக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டுக்கான புதிய நூல் கொள்வனவுக்காக ரூபா 28,788.00 பெறப்பட்டிருந்தது. 1975 இல் மேலதிகமாக ரூபா 75,000.00 நூல் கொள்வனவுக்காகப் பெறப்பட்டிருந்தது. அவ்வாண்டு 12,434 நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டும் கலாநிதி ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்களிடமிருந்து 5000 நூல்களும், யாழ்ப்பாணப் பேராயர் வண. கலாநிதி டீ. தியோகுப்பிள்ளை அவர்களினால் வழங்கப்பட்ட வண. ஞானப்பிரகாசர் அவர்களின் சேகரத்திலிருந்த 500 நூல்களும், வண. தனிநாயகம் அடிகளிடமிருந்து சஞ்சிகைகள் உள்ளிட்ட 1389 அரிய நூல்களும் ஆவணங்களும், சர்வதேச தூதராலயங்களிடமிருந்த மேலும் 500 நூல்களுமாக மொத்தம் 18,434 நூல்கள் அன்பளிப்பாகப் பெறப்பட்டும் உள்ளன. நூலகம் தொடங்கப்பெற்ற முதலாம் ஆண்டில் பல்கலைக்கழக நூலகம் 192 சஞ்சிகைகளுக்கு சந்தா செலுத்தியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் தொடங்கப்பெற்ற முதலாம் ஆண்டில் யாழ்ப்பாண வளாகத்தில் மொத்தம் 515 அங்கத்தவர்கள் (மாணவர்கள், கல்விசார், கல்விசாரா வளாக ஊழியர்கள், ஆய்வு மாணவர்கள்) நூல் இரவல் பெறும் அங்கத்தவர்களாகப் பதிவுபெற்றுள்ளனர். ஆய்வு மாணவர்களிடம் மாத்திரம் ஓராண்டுக்கான அங்கத்துவ சந்தாவாக ரூபா 5.00 மாத்திரம் அறவிடப்பட்டுள்ளது.

ஆரம்ப ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு வார நாட்களில் நூலகம் காலை 8:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை நூலகம் திறந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் மாத்திரம் 8:00 மணிக்குத் திறந்து 3:00 மணி வரை நூலகம் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.

1975 இல் இரண்டு முக்கியமான சேகரிப்புகளை நூலகம் உள்வாங்கியுள்ளது. 1972 ஒக்டோபர் 4 ஆம் திகதி மறைந்த இலங்கையின் பிரபல்யமான தொல்லியல் அறிஞரான செனரத் பரணவிதானையின் சேகரங்களில் அன்றைய காலகட்டப் பெறுமதியில் ரூபா 30,000 மதிப்புள்ள 2662 நூல்களும், யாழ்ப்பாண வைபவமாலை உள்ளிட்ட பல நூல்களைப் பதிப்பித்தவரும் இலங்கையின் புராதன சைவாலயங்கள் என்ற தலைப்பின் கீழ் ஈழத்தின் பிரபல சைவாலயங்களின் வரலாற்றை எமக்கு நூலுருவில் வழங்கியவருமான அமரர் குல. சபாநாதன் அவர்களின் அரிய வாழ்நாட் சேர்க்கைகளான ரூபா. 6000 பெறுமதியான 2137 நூல்களும் பல்கலைக்கழக நூலகத்துக்கென கொள்வனவு செய்து வழங்கப்பட்டன. தொல்லியல், மொழியியல், வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வுத் தேவைகளுக்கு மிகுந்த பயன் தரும் மேற்படி நூல்களின் பெரும்பகுதி அவ்வாண்டில் பல்கலைக்கழக நூலக வளாகத்தினுள் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகச் சுவடிக் காப்பகப் பிரிவுக்கு (Archives Section) அடிப்படைச் சேகரங்களாகப் பயன்படுத்தப்பட்டன. யாழ்ப்பாணக் கல்லூரியிலிருந்து பெறப்பட்ட பல அரிய நூல்களும் இந்தச் சுவடிக் காப்பகப் பிரிவிலும், தென்னாசிய சேகரப் பிரிவிலும் உசாத்துணை நூல்களாகப் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பேணிப் பாதுகாக்கும் பொருட்டு நூல்கள் மாத்திரமன்றி பெறுமதிமிக்க புகைப்படங்களும் ஓவியங்களும் பொதுமக்களால் வழங்கப்பட்டன. கலைப்புலவர் நவரத்தினம் அவர்களின் அரிய சேகரிப்புகளில் ஒன்றான கலாநிதி ஆனந்தா கென்டிஷ் குமாரசுவாமி அவர்களின் ஓவியம் ஒன்றை ‘ஈழநாடு’ பத்திரிகை அதிபரான கே.சி. தங்கராஜா அவர்கள் 10.10.1975 அன்று பல்கலைக்கழக நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார். இவ்வோவியம் அப்போதைய ‘தென்னாசிய அறை’யின் (South Asia Room) சுவரை அலங்கரித்திருந்தது. இதனைத் தொடர்ந்து 20.12.1975 அன்று சுவாமி ஞானப்பிரகாசரின் திருவுருவப்படமும் ‘தென்னாசிய அறை’யில் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.

எமது கட்டுரையின் கவனக்குவிப்பு, பல்கலைக்கழகத்தின் நூலக உருவாக்கமும் வளர்ச்சியுமே என்பதால், அந்த நூலகத்தின் உருவாக்கத்திற்கும் கட்டுமானத்திற்கும், வளர்ச்சிக்கும் அடிப்படையாக அவ்வக் காலகட்டங்களில் பணியாற்றிய பிரதம நூலகர்களின் வாழ்வையும் பணிகளையும் அறிந்துகொள்வதன் வாயிலாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் படிமுறை வளர்ச்சி வரலாற்றை அறிந்துகொள்ள முடியும். அதற்கு முன்னர் இலங்கைப் பல்கலைக்கழக நூலகத்தின் யாழ்ப்பாண வளாகத்தில் மிகவும் வரையறுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளுக்கு முகம்கொடுத்து, மிகக்குறைந்த ஆளணியுடன் அடிப்படை வசதிகள்கூட அற்ற நிலையில், ஒரு பல்கலைக்கழக நூலகத்தை திட்டமிட்டு வடிவமைத்து தீர்க்க தரிசனத்துடன் செயற்படுத்த முன்நின்று உழைத்த ஊழியர்களின் மனத்திடத்தையும் கௌரவத்துடன் நினைவுகூரவேண்டியுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது நூலகர் என்ற வகையிலும், இலங்கை நூலகச் சங்கத்தின் ஸ்தாபக முன்னோடி என்ற வகையிலும், அமரர் ஆர்.எஸ். தம்பையாவின் (ரெஜினால்ட் செபரட்ணம் தம்பையா) பெயர் ஈழத்துத் தமிழ் நூலகவியல் வரலாற்றில் நிரந்தரமாகப் பதிவாகியுள்ளது. அவருடன் இணைந்து பணியாற்ற யாழ்ப்பாணக் கல்லூரியிலிருந்து தேர்வாகிய சிலரையும் இங்கே குறிப்பிடுவது அவசியமாகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுலகத்தை அதன் அத்திவாரத்திலிருந்து திட்டமிட்டு வளர்த்தெடுப்பதில் ஆர்வத்துடன் செயற்பட்ட திரு. ஆ. சிவநேசச்செல்வன், செல்வி. கந்தையா, செல்வி. அழகரத்தினம், திரு. தனபாலசிங்கம் (சிங்கம்) ஆகிய நூலக ஊழியர்களின் பணி மிக முக்கியமானது. இவர்களுடன் பேராதனைப் பலகலைக்கழகத்திலிருந்து திரு. செல்வேந்திரன், பட்டியலாக்கப் பணிகளுக்காக திருமதி. சிவராஜா, திருமதி. பரமேஸ்வரன், திரு P.D.W. டீ சில்வா ஆகியோர் ஆரம்ப கட்டத்தில் நூலகப் பணியாளர்களாக உள்வாங்கப்பட்டனர்.  நவம்பர் 1975 இல் திரு. மக்கார்வி (Mr. Terence McGarvey) வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் (Belfast) நகரிலிருந்து பிரித்தானியாவின் V.S.O. என்ற பிரபல்யமான கடல் கடந்த தொண்டர் சேவைகள் அமைப்பினால் (Volunteer Services Overseas) இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்திற்கு இரண்டு ஆண்டு சேவைத்திட்ட ஒப்பந்தத்தின் கீழ் தொண்டர் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். அவரது பதவிக் காலத்தை பிரித்தானிய V.S.O. தொண்டர் அமைப்பு நீடித்திருந்த காரணத்தினால் அவர் 1979 ஜூன் வரை பல்கலைக்கழகத்தில் சேவையைத் தொடரும் வாய்ப்பினைப் பெற்றிருந்தார். அவருக்கு பல்கலைக்கழக நூலகத்தின், உதவி நூலகர் என்ற பதவி நிலையில் பட்டியலாக்கப் பிரிவை வழிநடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னாளில் சிவனையா ஜீவன், திருமதி. ரோகிணி பரராஜசிங்கம் ஆகியோர் நூலக சேவையில் அமர்த்தப்பட்டனர்.

வட்டுக்கோட்டையில் எஞ்சியிருந்த பல்கலைக்கழகத்தின் நூற்சேர்க்கையினைப் பராமரித்து அங்கிருந்து இயங்கிய பல்கலைக்கழக விஞ்ஞானத்துறை மாணவர்களின் நூலகத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் பணிக்காக செல்வி. சிவஞானசுந்தரம் அவர்களும், பின்னர் திரு. என். சுப்பிரமணியம் அவர்களும் இளநிலை உதவி நூலகர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். வட்டுக்கோட்டையில் பல்கலைக்கழகப் பிரிவு இயங்கிய கட்டிடத் தொகுதி படிப்படியாக யாழ்ப்பாணக் கல்லூரியிடம் கையளிக்கப்பட்டது. டிசம்பர் 1978 இல் முழுமையாக யாழ்ப்பாணக் கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேற வேண்டியேற்பட்டது. திருநெல்வேலியில் பல்கலைக்கழக வளாகத்திலேயே ஜூலை 1978 இல் முதலாம் கட்ட நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்திருந்த இயற்கை விஞ்ஞானப் பிரிவுக் கட்டிடத்திற்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இயங்கிய பிரிவு மாற்றப்பட்டதுடன், வட்டுக்கோட்டையில் இயங்கிய நூலகப் பிரிவும் பிரதான நூலகத்திற்குள் உள்வாங்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தை ஆரம்பகட்டத்தில் வளர்த்தெடுப்பதில் மிகுந்த ஈடுபாட்டுடன் இயங்கிய முதல் மூன்று நூலகர்கள் பற்றிய குறிப்புகளின் வழியாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் வளர்ச்சியின் சில கூறுகளை நாம் உய்த்துணர்ந்து கொள்ளலாம்.

அமரர் ஆர்.எஸ். தம்பையா : யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலகர்

அமரர் ஆர்.எஸ். தம்பையா அவர்கள் மலையகத் தலைநகர் கண்டியில் பிறந்தவர். நான்கு வயதிலேயே தன் அன்னையை இழந்தவர். அதன் பின் தந்தையாரின் ஊரான அச்சுவேலிக்குத் திரும்பி, அங்கே அவரது தமக்கையின் அரவணைப்பில் இறைபக்தியுள்ள கிறிஸ்தவக் குடும்பப் பின்னணியில் வளர்ந்து வந்தார். அவரது சகோதரி மேபல் தம்பையா, யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் அதிபராக நீண்டகாலம் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலைத்தேய வெஸ்லியன் மிசனரிமாரின் ஆதிக்கத்திலிருந்த அதிபர் பதவியை தனதாக்கிக்கொண்ட முதலாவது சுதேசிய அதிபராக மேபல் தம்பையா வரலாற்றில் மதிக்கப்படுகின்றார்.

நூலகர் ஆர்.எஸ். தம்பையா அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை சென். ஜோன்ஸ் கல்லூரியில் பெற்ற பின்னர் மெட்ராஸ் பிரஸிடென்சி கல்லூரியில் உயர்கல்வியைப் பெற்றுத் திரும்பினார். அதன் பின்னர் 1955 இல் புவியியல் ஆசிரியராக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இணைந்து, சில காலத்தின் பின்னர் நூலகத்துறையின் பால் கொண்ட ஈடுபாடு காரணமாக, யாழ்ப்பாணக் கல்லூரியின் நூலகராகவும் பணியாற்றியுள்ளார். வட்டுக்கோட்டையில் அவர் பணியாற்றிய வேளையில் 1957 – 1958 காலகட்டத்தில் நூலகத்துறைக்கான தனது  எம்.ஏ. பட்டத்தையும் ஐக்கிய அமெரிக்காவின் இல்லிநொய்ஸ் (Illinois) பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார். 1958 இல் பட்டப் படிப்பிற்காக அமெரிக்காவில் தங்கியிருந்த வேளையில் 1958 இல் ‘மதம்சார் அரங்கியல்” பாடத்துறையில் நியூ யோர்க்கிலுள்ள ‘Union Theological Seminary in New York’ என்ற கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றார். அரங்கியல் துறையின் பாற் கொண்ட இவரது ஈடுபாடு பின்னாளில் பல ஆங்கில தமிழ் நாடகங்களை இவர் இலங்கையில் மேடையேற்ற வழிவகுத்தது.

1966 – 1968 காலகட்டத்தில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஓராண்டு விடுப்புப் பெற்று அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள கன்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் (Kansas University) புவிவியல் பாடத்தை கற்பித்ததுடன், அப் பல்கலைக்கழகத்தின் தென் ஆசியப் பிரிவின் நூலகராகவும் சிறிதுகாலம் பணியாற்றியிருந்தார். அதுவே பின்னாளில் கல்லூரி நூலகராக இருந்த இவரது கவனத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை நோக்கித் திருப்பியிருந்தது.

யாழ்ப்பாணக் கல்லூரி வெளிநிலைப் பட்டப்படிப்புகள் அலகின் நூலக வளங்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திற்குள் உள்வாங்கப்பட்ட வேளை ஆர்.எஸ். தம்பையாவும் யாழ்ப்பாணக் கல்லூரியிலிருந்து நீங்கி, பல்கலைக்கழக நூலகர் பதவியை பெற்றுக்கொண்டார். ஆரம்ப காலத்தில், பரமேஸ்வராக் கல்லூரியில் தற்காலிகமாக ஒரு கட்டிடத்தில் மனிதப் பண்பியல் பீடத்திற்கான நூலகமும், வட்டுக்கோட்டையில் அறிவியல் பீட நூலகமும் ஆரம்பிக்கப்பட்டன. பல்கலைக்கழக கல்வித் தகுதி அடிப்படையில் அவருக்கு பதில் நூலகர் தரத்திலேயே பணியாற்ற முடிந்தது. அங்கு அவர் 1974 – 1981 காலகட்டத்தில் பணியாற்றி பல்கலைக்கழக நூலகமொன்றின் ஆரம்பகட்ட கட்டமைப்பினை கடின உழைப்பினை நல்கி, வெற்றிகரமாகச் செய்துமுடித்தார். இவரது காலத்திலேயே யாழ். பல்கலைக்கழக நூலகத்திற்கான நிரந்தர அமைவிடத்துக்கான கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. விஞ்ஞான பீடத்திற்கும் கலைப்பீடத்திற்கும் நடுவில் பார்வதி பரமேஸ்வரன் ஆலயத்திற்கு தென்மேற்கில் இராமநாதன் வீதியை நோக்கி அமைந்த இடத்தில் 1980 ஆம் ஆண்டில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. நூலகர் தம்பையாவின் பணிக்காலத்தில் கட்டிடத்தை வளர்த்துச் செல்லும் முயற்சியில் மும்முரமான போராட்டத்தினை அவர் முன்னெடுத்தபோதிலும், சாணேற முழம் சறுக்கும் நிலையே அவரது கசப்பான அனுபவங்களாகின. அவர் பணியாற்றிய 1974 தொடக்கம் 1981 ஆம் ஆண்டு வரையான காலத்தில் ஊர்ந்து சென்ற கட்டிட அமைப்புப் பணி 2000 ஆம் ஆண்டளவிலேயே 67,718 சதுர அடிகள் கொண்ட சதுர நிலப்பரப்பில் கட்டி முடிக்கப்பட்டது. அதற்கிடையில் பல்வேறு புதிய துறைகள் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டதுடன் புதிய மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். இவர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட வளங்களுடனும், தற்காலிக கட்டிட வசதியுடனும் சேவைகளை வழங்க நிர்வாகம் நிர்ப்பந்தித்தமையால், நூலகருக்கும், ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புகளுடனும் இயங்கிய அவருடைய நூலகக் குழுவினருக்கும் அழுத்தங்கள் அதிகரித்த வண்ணமே இருந்தது. நைஜீரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றதும் 1981 இல் திரு. ஆர்.எஸ்.தம்பையா அவர்கள் தனது நூலகப் பொறுப்பாளர் பணியிலிருந்து விலகிக்கொண்டார். அவரைத் தொடர்ந்து அங்கு அர்ப்பணிப்புடன் ஆரம்பம் முதல் சேவையாற்றிய நூலக ஊழியர்களும் படிப்படியாக பல்கலைக்கழக நூலக சேவையிலிருந்து நீங்கி பிற துறைகளில் இணைந்துகொள்ள ஆரம்பித்தனர். சிலர் பல்கலைக்கழகத்திலிருந்தே விலகிச்சென்று பிற நிறுவனங்களில் நூலகத்துறையுடன் சம்பந்தப்படாத தொழில்வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டார்கள்.

நவீன நூலகக் கட்டிடத்தில் சேவையாற்றும் வாய்ப்பினை ஆர்.எஸ். தம்பையா அவர்கள் பெற்றிராத போதிலும், வரையறுக்கப்பட்ட நிதி, ஊழியர் வசதிகளுடன் ஒரு பல்கலைக்கழகத்திற்கான அறிவியல் சேர்க்கையை உள்ளடக்கிய ஆரம்பகட்ட அடிப்படைக் கட்டமைப்பினை வெற்றிகரமாக அவரே ஏற்படுத்தியிருந்தார் என்பதை மறுக்கவியலாது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

3731 பார்வைகள்

About the Author

நடராஜா செல்வராஜா

நடராஜா செல்வராஜா, யாழ். இராமநாதன் பெண்கள் கல்லூரியில் நூலகராகவும், யாழ்ப்பாண, சர்வோதய சிரமதான சங்கத்தின் யாழ்.மாவட்ட நூலகப் பொறுப்பாளராகவும், இலங்கை உள்ளூராட்சி அமைச்சின் நூலகராகவும், இந்தோனேசியா, ஐக்கியநாடுகள் சபையின் கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகவும், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகத்தின் பொறுப்பாளராகவும், கொழும்பு இனத்துவக் கல்விக்கான சர்வதேச நிலைய ஆய்வு நூலகப் பொறுப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

அயோத்தி நூலக சேவையின் ஸ்தாபகரும், நூலகவியல் காலாண்டுச் சஞ்சிகையின் தாபக ஆசிரியராகவும் செயற்பட்டார். ஊடகத்துறையிலும் பணியாற்றிவிட்டு, தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இவர், ரோயல் மெயில் தபால் நிறுவனத்தின் அந்நிய நாணயப்பிரிவில் அதிகாரியாக தற்போது பணியாற்றுகின்றார். இவர் நூலகவியல் பற்றி தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், நூலகவியல் பற்றியும் பல வெளியீடுகளை செய்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • September 2024 (11)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)