பரமேஸ்வராக் கல்லூரியில் சேர் பொன். இராமநாதன் அவர்களின் நூலகத்தில் இருந்த அரிய நூல்களையும் யாழ்ப்பாணக் கல்லூரி நூலகம் கொண்டிருந்த 30,000 வரையிலான நூல்களையும் மேலும் பருவ இதழ்கள், அரச ஆவணங்கள், சிறு பிரசுரங்கள் போன்றவற்றையும் கொண்டு யாழ் வளாகம் தன் நூலகச் சேர்க்கைகளைக் கட்டியெழுப்பத் தொடங்கியது. நூலகச் சேர்க்கையையும் தளபாட வசதியையும் படிப்படியாக வளர்த்துச் சென்று பின்னாளில் பிரதம நூலகராகப் பதவியேற்ற சி. முருகவேள் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து நூலகர் ஆர்.எஸ். தம்பையா விலகிக் கொண்டார்.
ஓகஸ்ட் 1974 முதல் டிசம்பர் 1978 வரையிலான நூலகப் பொறுப்பாளர் பதவிநிலையிலும், ஜனவரி 1979 முதல் செப்டெம்பர் 1981 வரையிலுமான பதில் நூலகர் பதவிநிலையிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகராகப் பணியாற்றிய வேளையில் யாழ்ப்பாணப் பொது நூலக ஆலோசகர் குழுவிலும் 70 களில் திரு ஆர்.எஸ். தம்பையா சேவையாற்றி வந்தார்.
அவர் பல்கலைக்கழகத்தில் இணையும் வேளை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் நூலகச் சேர்க்கைகளின் பெரும் பகுதியை பல்கலைக்கழகம் உள்ளீர்த்துக் கொண்டதால், யாழ்ப்பாணக் கல்லூரி நிர்வாகம் அவற்றைத் திரும்பிப் பெற இலங்கை அரசாங்கத்துடன் நீண்டகாலம் போராடி 1980 இல் தமது நூற் சேர்க்கையின் ஒரு பகுதியை மட்டும் மீளப் பெற்றுக்கொண்டது. நாம் அவரது நூலகவியல்துறைப் பிரிவின் மாணவர்களாகப் பயின்றுவந்த வேளையில், இக் காலகட்டத்தில் திரு ஆர்.எஸ். தம்பையா அவர்கள் யாழ்ப்பாணக் கல்லூரியின் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வந்ததை எம்மிடம் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து ஒக்டோபர் 1981 இல் நீங்கிய திரு ஆர்.எஸ். தம்பையா அவர்கள், நைஜீரியாவுக்குச் சென்று அங்கு ‘Maiduguri’ பல்கலைக்கழகத்தில் (University of Maiduguri, Nigeria) 1981 முதல் 1995 வரை நூலகவியல் தகவல் விஞ்ஞானத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார். 1995 இல் பணியிலிருந்து ஓய்வுபெறும் வேளையில் அவர் அப்பல்கலைக்கழகத்தின் நூலகவியல் தகவல் விஞ்ஞானத் துறைத் தலைவராகப் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நைஜீரியாவில் 1995 இல் பணி ஓய்வுபெற்றதும் பிரித்தானியாவுக்கு வந்து, 2020 இல் தான் மறையும் வரையும், குடும்பத்தினருடன் தனது ஓய்வு காலத்தினை அமைதியாக சமய, சமூகப் பணிகளில் கழித்து வந்தார்.
யாழ்ப்பாணக் கல்லூரியில் பணியாற்றிய காலத்திலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்திலும் பின்னர் நைஜீரியாவில் நூலகவியல்துறை விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்திலும் அமரர் ஆர்.எஸ். தம்பையா அவர்கள் தனது பெயரில் துறைசார்ந்த நூல்கள் எதனையும் வெளியிட்டிராதது ஒரு பெரும் குறையாகும். குறைந்தபட்சம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றையாவது, அதன் ஆரம்பகால உள்வீட்டுப்பிள்ளை என்ற வகையில் பதிவுசெய்து வைத்திருந்திருக்கலாம். குறிப்பிடத்தகுந்த ஓரிரு கட்டுரைகளை மட்டுமே துறைசார்ந்து அவர் எழுதியிருக்கிறார் என அறிய முடிகின்றது. நூலக தகவல் விஞ்ஞானக் கலைக்களஞ்சியத் தொகுப்பில் (Encyclopedia of Library and Information Science published by M. Dekker. New York) இவர் எழுதியிருக்கும் ‘Chain Indexing’ என்ற கட்டுரை வாயிலாக இவரது பெயர் நூலகவியல்துறை மாணவர்களிடையேயாவது நின்று நிலைத்திருக்கும்.
அமரர் ஆர்.எஸ். தம்பையாவின் இறுதிக் காலத்தில் நூலகப் பணிகளைவிட தான் சார்ந்த கிறிஸ்தவ, சமூக நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்ட சமயம் மற்றும் சமூகம் சார்ந்த பணிகளே அவரிடம் முனைப்புப் பெற்றிருந்தன. 07.06.2020 அன்று அமரர் ஆர்.எஸ். தம்பையா மறையும் வேளை அவருக்கு வயது 93.
சிற்றம்பலம் முருகவேள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது நூலகராக அமரர் சிற்றம்பலம் முருகவேள் அவர்கள் ஜனவரி 1982 முதல் மே 1994 வரை பணியாற்றினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏழாலைக் கிராமத்தில் முருகேசு – சிவக்கொழுந்து தம்பதியினரின் வழித்தோன்றலான சிற்றம்பலம் – பராசக்தி தம்பதியினரின் மூத்த புதல்வராகப் பிறந்தவர் இவர்.
ஏழாலைக் கிராமத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் பின்னர் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியில் சிலகாலமும், கொழும்பு ரோயல் கல்லூரியில் சில காலமுமாகப் பயின்று பல்கலைக்கழகம் புகுந்தார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற திரு. முருகவேள், ஒரு தமிழ் சிறப்புப் பட்டதாரியாக வெளியேறி, பரமேஸ்வராக் கல்லூரியில் ஆசிரியப் பணியில் இணைந்துகொண்டார். இதே பாடசாலையில் ஆசிரியராகவும், பின்னாளில் அதிபராகவும் இருந்த இவரது சிறிய தந்தையாரான ஞானப்பிரகாசம் ஆசிரியரின் வழியாக சைவ விசார, சிவஞானப் பசிக்கு இரைதேடிக் கொண்டார். நீறில்லா நெற்றிபாழ் என்பதற்கேற்ப, முருகவேள் அவர்களின் அகன்ற நெற்றி திருநீறு பூத்ததாகவே எப்பொழுதும் காணப்படுவதை அவருடன் பழகியவர்கள் நன்கு அறிவர்.
முருகவேள் அவர்கள் திருமணம் செய்த காலகட்டத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவு நூலகராகப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டார். பின்னாளில் ஆர்.எஸ். தம்பையா அவர்கள் இளைப்பாற, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகராகப் பதவியேற்று தான் இளைப்பாறும் வரையில் அப்பணியில் தன் வாழ்வின் பெரும்பொழுதைச் செலவிட்டார். முருகவேள் அவர்களின் காலகட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் வெள்ளிதிசைக் காலம் எனலாம்.
இலங்கையின் கல்வி அமைச்சராக பதியுதீன் முகம்மது அவர்கள் சேவையாற்றிய காலகட்டத்தில், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது வளாகமாக 15.7.1974 இல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட வேளைமுதல், பின்னர் சுதந்திரமான பல்கலைக்கழகமாக 1979 இல் மாற்றம்பெறும் வரையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு ஏராளமான ஏட்டுச்சுவடிகள் (ஓலைச்சவடிகள்) பொதுமக்களால் நன்கொடையாகவும், வேறு வழிகளிலும் கையளிக்கப்பட்டிருந்தன. பல்கலைக்கழக நூலகத்தின் ஆரம்பகால நூலகரான திரு ஆர்.எஸ். தம்பையா அவரது காலத்தில் இவ்வேட்டுச் சுவடிகள் நூலகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்தனவேயன்றி அவற்றை வாசித்துப் பட்டியலிடும் பணிகள் எதுவும் சாத்தியமாகி இருக்கவில்லை. இந்நிலையில் திரு முருகவேள் அவர்கள் ஜனவரி 1982 இல் புதிய நூலகராகப் பணியேற்றதன் பின்னர், இவ்வேட்டுச் சுவடிகளைப் பார்வையிட்டு விஞ்ஞான பூர்வமாகப் பட்டியலிடும் பணியை முடுக்கி விட்டார். ஒவ்வொரு ஏட்டுச் சுவடிக்குமான தலைப்பு, பிரதிப்பாடத் தொடக்கம், பிரதிப்பாட முடிவு, ஓலைகளின் எண்ணிக்கை, அளவும் பிற பௌதிக விபரங்களும், குறிப்பு என பல்வேறு தகவல்களுடன் இப்பட்டியலை இவர் தயாரித்தார். கிரந்த லிபியில் அமைந்த வடமொழிச் சுவடிகளை இனங்காண பிரம்மஸ்ரீ து. சுந்தரமூர்த்தி போன்ற அறிஞர்களின் உதவிகளையும் பெற்றிருந்தார். இவரது பணிக்கு அந்நாளில் பல்கலைக்கழகப் பணியாளர்களாக இருந்த க. நிரஞ்சனாதேவி, செ. சண்முகநாதன் ஆகியோர் பெருந்துணை புரிந்தனர். அரபு எண் ஒழுங்கில் அமைந்த பிரதான பட்டியல், தலைப்புச்சுட்டு, பொருட்சுட்டு ஆகிய மூன்று பிரிவுகளில் அப்பட்டியலை ஒழுங்கமைத்து, 1992 இல் ஒரு சிறு நூலுருவிலும் பல்கலைக்கழக நூலகத்தின் வெளியீடாக கல்லச்சுப் பிரதியாக நூலகர் முருகவேள் வெளியிட்டார்.
அமரர் முருகவேள் அவர்களின் நூல்கள் இரண்டு இதுவரை வெளிவந்திருக்கின்றன. அவரது ஆழ்ந்தகன்ற சைவசித்தாந்த அறிவும் வடமொழிப் புலமையும் இந்நூல்களின் வழியாக புலப்படுத்தப்பட்டிருக்கின்றன. அமரர் ஆர்.எஸ். தம்பையா போன்று நூலகத்துறை சார்ந்து அமரர் முருகவேள் விரிவாக எழுதாமை இன்றும் ஒரு கேள்விக் குறியாகவே அமைந்துவிட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அவர் பணியாற்றிய காலகட்டம் மிகவும் சிறப்பானதொரு காலகட்டமாகும். அதுபற்றி பல்கலைக்கழகத்தில் அவரது நிர்வாகத்தில் பணியாற்றிய வி. வேல்தாஸ் அவர்கள் அண்மையில் யாழ். உதயன் பத்திரிகையில் (உதயன் 3.1.2015) எழுதிய நீத்தார் நயப்புரையில் உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.
லண்டன் பல்கலைக்கழகத்தின் நூலக டிப்ளோமா பரீட்சைக்கென செப்டெம்பர் 1965 இல் நூலகர் முருகவேள் சமர்ப்பித்த விரிவான நூற்பட்டியல் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். 1960 ஆம் ஆண்டு வரை ஐரோப்பிய மொழிகளில் எழுதப்பட்டிருந்த சைவசமயம் தொடர்பான நூல்கள் பற்றிய விரிவான நூற்பட்டியல் இதுவாகும். இப்பட்டியலுக்கான விரிவான பகுப்பாக்கம் ஒன்றினை இவரே உருவாக்கியிருந்தார். சைவ சமயம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் எவருக்கும் தமது தேடலை விரிவுபடுத்த இப்பட்டியல் நிச்சயம் உதவியாக இருக்கும். இதன் ஒரு பிரதி தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தில் பேணப்படுகின்றது (ஆய்வேடுகளின் சேர்க்கை இலக்கம் 76336). இவ்வாய்வு விரிவான பயன்பாடு கருதி நிச்சயம் நூலுருவாக்கப்படல் வேண்டும். இக் கைங்கரியத்தை அமரர் சி. முருகவேள் அவர்களின் நினைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகச் சமூகம் அல்லது இந்து சமய, கலாசார அலுவல்கள் அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும். முதலாம் பாகமாகவாவது இவ்வேடு வெளிவருமிடத்து, 1961 முதலாக இந்நாள் வரை வெளிவந்த சைவசமய ஆய்வுகள் பற்றிய பட்டியல்படுத்தும் பணியை வேறொருவர் பின்னாளில் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படலாம். சைவத்தையும் தமிழையும் தன் வாழ்வு நெறியாக ஏற்று வாழ்ந்து மறைந்த ஏழாலையின் புதல்வன் முருகவேளுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக இது அமையும்.
திருமதி ரோகிணி பரராஜசிங்கம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தை வளர்த்தெடுத்த நூலகர்களின் பட்டியலில்; ஆர்.எஸ். தம்பையா, சிற்றம்பலம் முருகவேள் வரிசையில் திருமதி ரோகிணி பரராஜசிங்கம் மூன்றாமவராவார். இவர் தனது நூலகப் பணிக்காலத்தில் மே 1994 முதல் பெப்ரவரி 1995 வரையிலான காலப் பகுதியில் பிரதி நூலகராகவும், மார்ச் 1995 முதல் செப்டெம்பர் 2005 வரை நூலராகவும் பணியாற்றியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் பருத்தித்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி ரோகிணி பரராஜசிங்கம் 30.04.1940 இல் பிறந்தவர். இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் தாயான இவர் சிறுவயது முதலே வாசிப்பில் ஆர்வம் மிக்கவர். தன் இளமைக் காலத்தில் பென்குவின் பதிப்புகளைத் தேடித் திரிந்து வாசித்து மகிழ்ந்தவர். அவரது நூல்களின் மீதான ஆர்வமே விலங்கியல் பட்டதாரியான அவரது வாழ்வின் திசையை நூல்களையும் நூலகங்களையும் நோக்கித் திருப்பியுள்ளது.
திருமதி ரோ. பரராஜசிங்கம் 1961 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில், தனது B.Sc. சிறப்புப் பட்டத்தை விலங்கியல்துறையில் பெற்றுக்கொண்டவர். தமிழகத்திலிருந்து இலங்கைக்குத் திரும்பிய பின்னர் சிறிது காலம் கார்கில்ஸ் நிறுவனத்தின் புத்தக விற்பனைப் பிரிவின் (Cargill’s Book Centre) பொறுப்பாளராகப் பணியாற்றி வந்தார்.
தனது பட்ட மேற்படிப்பு டிப்ளோமாவை (Post Graduate Diploma) நூலகவியல் துறையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1964 – 1965 காலகட்டத்தில் பெற்றுக்கொண்டார். இக்காலகட்டத்தில் இலங்கையின் புகழ்பெற்ற நூலக அறிஞர்களான சி. முருகவேள், எச்.ஏ.ஐ. குணத்திலக்க, திரு சோமதாச, கலாநிதி போல் குரூஸ் ஆகியோர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இவரது வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள். இவர்களின் சிறப்பான வழிகாட்டலின் கீழ் திருமதி ரோ. பரராஜசிங்கம், சிறந்ததொரு நூலக ஆளுமையாகச் செதுக்கப்பட்டார்.
02.03.1978 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இணைந்து, உதவி நூலகராக அங்கு சேவையாற்றத் தொடங்கினார். சிக்கலான போர்க் காலப்பகுதியில், குறிப்பாக 1983 இனக் கலவரக் காலத்திலும், அதன் பின்னர் இந்திய இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலைகொண்டிருந்த 1987 – 1990 காலகட்டத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தை சிறப்புற நிர்வகித்து வந்தவர் இவர்.
ஏப்ரல் 1983 இல் தனது MLIS நூலக உயர்கல்விப் பட்டத்தினை சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புச் சித்திகளுடன் பெற்றுக்கொண்டார். இப்பட்டத் தேர்ச்சியின் பயனாக 1983 இல் சிரேஷ்ட உதவி நூலகராகப் பதவி உயர்வினைப் பெற்றுக்கொண்டார்.
இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகமும் இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு இராணுவ முகாமாகவே அது மாறிவிட்டிருந்தது. அவ்வேளையில் பல்கலைக்கழக நூலகத்தின் சேர்க்கைகளை சமயோசிதமாக பாதுகாத்த பெருமை இவருக்கு உரியதாகும். இக்காலகட்டத்தில் பிரதம நூலகர் திரு சி. முருகவேள் அவர்கள் ஓராண்டு கல்விசார் விடுப்பில் (Sabbatical Leave) சென்றிருந்தார். பல்கலைக்கழக நூலகத்தின் தலைமைப் பொறுப்பினை திருமதி பரராஜசிங்கம் அவர்களே ஏற்று நடத்தவேண்டிய சூழல் அன்று இருந்தது. அவ்வேளையில் திருமதி பரராஜசிங்கம் அவர்கள் குடும்பத்தினருடன், திருநெல்வேலியில் இடம்பெயர்ந்து வாழ்ந்திருந்தார். உள்ளக இடப்பெயர்வுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுள் இவருடைய குடும்பமும் ஒன்று.
இந்திய இராணுவம் பல்கலைக்கழகத்தை ஆக்கிரமித்திருந்த ஒருநாள் இரவு அவரது உதவி நூலகர் ஒருவரிடமிருந்து அவசர அழைப்பு வந்திருந்தது. அவரின் கூற்றுப்படி நூலகக் கட்டிடம் தாக்கப்பட்டிருந்தது. நூல்கள் சிதறுண்டு கிடக்கின்றன. அந்நியர்களால் நூல்கள் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. மழைவேறு சிதறுண்டு கிடந்த நூல்களை நனைத்தழித்துக் கொண்டிருந்தது. அவற்றை உடனடியாகவும், பாதுகாப்பாகவும் அப்புறப்படுத்தாவிட்டால், பல்கலைக்கழக நூலகச் சேர்க்கைகள் அனைத்தும் அழிந்துவிடும். துரிதமாகச் சிந்தித்து மிக முக்கியமான முடிவொன்றினை உடனடியாக எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம்.
மழையுடன் கூடிய காரிருள் சூழ்ந்திருந்த அவ்வேளையில், மின்சார வெளிச்சம் தடைப்பட்டிருந்த நிலையில், கூப்பிட்ட குரலுக்கு வரக்கூடியதாகவிருந்த ஒரு சில நூலக உதவியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திற்குச் சென்று இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளாகிக் கைவிடப்பட்டிருந்த நூலகப் பகுதியைக் கண்டு திருமதி பரராஜசிங்கம் அதிர்ச்சியடைந்துள்ளார். அங்கே பல நூல்கள் இந்திய இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டு, தீவைத்துக் குளிர் காயவும் பயன்படுத்தப்பட்ட சான்றுகள் சாம்பல் மேடுகளாகக் காட்சியளித்தன. மேலும் பல நூல்கள் சேர்த்தடுக்கப்பட்டு இராணுவத்தினருக்கான இருக்கைகளாகவும், படுக்கைகளாகவும் உருமாற்றப்பட்டிருந்தன. புள்ளிவிபரவியல் பகுதியில் காணப்பட்ட நூற் தட்டுக்கள் வெறிச்சோடியிருந்தன. அவர் முன்னிருந்த ஒரே தீர்வு எஞ்சிய நூல்களையாவது பாதுகாப்பாக மீட்டெடுத்து லொறியொன்றின் மூலம் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்துவதேயாகும்.
அயலவர்களாலும் இந்திய இராணுவத்தினராலும் சூறையாடப்பட்டவை போக தப்பிப் பிழைத்த நூல்களையும், மழையில் நனைந்து கொண்டிருந்த நூல்களையும் அவசர அவசரமாகச் சேர்த்து எடுத்து லொறிகளில் ஏற்றி, தன்னிடமிருந்த சில்க் சேலைகளினால் அவற்றை மழையிலிருந்து ஓரளவு பாதுகாத்து, அவற்றை சாவகச்சேரியிலுள்ள ஒரு பாடசாலை மண்டபத்துக்குக் கொண்டுசென்று சேர்த்திருக்கிறார். அதற்கான முழுச் செலவினையும் அப்பொழுது 44 வயதேயான அவர், தானே பொறுப்பேற்று இந்த அவசரகாலப் பணியை ஆற்றியிருக்கிறார்.
நூல்களை அனுமதியின்றி அப்புறப்படுத்திய இவரது அருஞ்செயலை பல்கலைக்கழக நிர்வாகம் முதலில் கண்டித்த போதிலும், பின்னாளில் அவரால் பாதுகாத்து வழங்கப்பட்ட 35,000 நூல்களையிட்டு அவருக்கு அதே நிர்வாகம் பாராட்டுக் கடிதமொன்றினையும் வழங்கியிருந்தது. அங்கே இழக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நூல்களை, பின்னாளில் திட்டமிட்டுக் கட்டியெழுப்ப அவர் மிகுந்த பிரயாசையுடன் செயற்பட வேண்டியிருந்தது.
திருமதி பரராஜசிங்கம் அவர்கள், துஷ்யந்தி கனகசபாபதிப்பிள்ளை என்பவருக்கு வழங்கிய நேர்காணலொன்றில் தனது உணர்வுகளை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். அந்த நேர்காணலில் பல்கலைக்கழக நூலக அழிப்புப் பற்றித் தான் கொழும்பிலிருந்த இந்திய உயர் ஸ்தானிகருக்கு ஒரு காரசாரமான கடிதத்தை எழுதியிருந்ததாகவும், அதில் இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் சேர்க்கைகளுக்கும் கட்டிடத்திற்கும் தளபாடங்களுக்கும் ஏற்படுத்தியிருந்த மீளப்பெறமுடியாத சேதத்தை, கலாசாரப் படுகொலையை விலாவாரியாகக் குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்திய இராணுவம் ஏற்படுத்திய சேதத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அவ்வேளையில் இருப்பிலிருந்த 64,000 நூல்களில் 35,000 நூல்களையே மீட்டெடுக்க முடிந்ததாகத் தெரிவித்திருந்தார். யாழ்ப்பாணப் பொது நுலகம் இழந்த நூல்களைப் பற்றிப் பேசுமளவிற்கு எவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூல்களின் இழப்புப் பற்றிப் பேசுவதில்லை என்பது அவதானிக்கத்தக்கது. பல்கலைக்கழகத்தின் நூலகப் பிரிவில் மாத்திரமல்ல, சில கல்வித்துறைகளுக்கான பீடங்களின் அலுவலகங்களில் இந்திய இராணுவத்தினர் தங்கியிருந்த வேளை, தமக்கு இடைஞ்சலாகவிருந்த சொத்துகளையும் அப்புறப்படுத்தியிருந்தார்கள். குறிப்பாக, பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வேடுகளின் பிரதிகளை பல்கலைக்கழகத் தண்ணீர்த் தாங்கியின் அருகே குப்பை மேடாகக் குவித்து வைத்திருந்த அவலத்தை, அவ்வேளையில் அந்தப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருந்த ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தில் வாழ்ந்திருந்த என்னால் கண் கூடாகப் பார்த்துக் கண்ணீர் வடிக்கவே முடிந்திருந்தது. வரலாற்றுத்துறைப் பிரிவினரால் பாதுகாக்கப்பட்டு வந்த தொல்பொருட்கள் சிதறடிக்கப்பட்டிருந்தன. அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த 5000 ஆண்டுப் பழமையான ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சிப் பொருட்களுக்கும், குறிப்பாக அங்கு பேணி வைத்திருந்த முதுமக்கள் தாழிக்கும் என்ன நடந்திருக்கும் என்று கற்பனைகூட செய்திருக்க என்னால் முடியவில்லை. முப்பதாண்டுகள் கழிந்த நிலையிலும் எமது தலைமுறையினரின் மனத்திரையை விட்டு அகலாத வடுக்கள் இவை.
படிப்படியாகத் தன் பதவியுயர்வுகளைப் பெற்று 16 ஆண்டுகள் உதவி நூலகராகச் சேவையாற்றிய பின்னர் அப்போது பிரதம நூலகராகவிருந்த திரு சி. முருகவேள் அவர்கள் 1994 இல் ஓய்வுபெற்ற வேளையில் திருமதி பரராஜசிங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதில் நூலகராகப் பதவியேற்றிருந்தார். பின்னர் 01.03.1995 இல் பிரதம நூலகராகப் பணியில் தொடர்ந்தார். இவரது பொறுப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் இருந்த வேளையில்தான் மீண்டும் ஒரு பாரிய சிக்கல் ஏற்பட்டது. வரலாற்று முக்கியத்துவமான 1995 வலிகாமம் இடப்பெயர்வு அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுப்பேற்ற பின்னர் காணப்பட்ட அந்த இறுக்கமான நிர்வாகக் கட்டமைப்பிற்குள்ளும் பாரிய போக்குவரத்துச் சங்கடங்களுக்குள்ளும், பல்கலைக்கழக நூலகத்தை மீளவும் ஒழுங்கமைத்து வழிநடத்த வேண்டி இருந்தது.
இவரது நூலகப் பணிகளில் அவரது கணவர் பரராஜசிங்கம் அவர்கள் பின்னணியில் நின்று பல விதங்களிலும் உதவி புரிந்து வந்துள்ளார். ஆங்கிலத்தில் மிகவும் திறமையாக எழுத்தாற்றலை கொண்டிருந்த இவரது கணவர் பல சந்தர்ப்பங்களில் சட்ட நுணுக்கமான கடிதங்களை எழுதி இவரது பணிக்கு உதவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 27 ஆண்டு இடையறாத நூலகப் பணியினை மேற்கொண்டுவந்த திருமதி ரோகிணி பரராஜசிங்கம் 30.09.2005 இல் பல்கலைக்கழக நூலகர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார்.
பல்கலைக்கழக புத்திஜீவிகளுக்கு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் ஒரு வருட கல்விசார் விடுமுறையையும் இரண்டு தடவைகள் பெற்றுக்கொள்ளாமல் நூலகத்தை வளர்த்தெடுப்பதிலேயே அக்கறை செலுத்திவந்தவர் திருமதி பரராஜசிங்கம். தொடர்ந்து 27 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்துறைக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியிருக்கின்றார். ஒரு தடவை இவர் 3 மாத விடுமுறையை மாத்திரம் பெற்றுக்கொண்டு பல்வேறு சர்வதேச நூலகங்களுக்கும் விஜயம் செய்து, தான் அவதானித்து வந்திருந்த நூலக நிர்வாக, வடிவமைப்புச் சிந்தனைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் செயற்பாட்டில் அறிமுகம் செய்ய முன்வந்திருந்தார். அவ்வகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகச் சேர்க்கைகளை கணினிமயப்படுத்தும் ‘Library Automation’ நடவடிக்கைக்கு 2003 இலிருந்தே பெரும் பங்காற்றியிருக்கின்றார்.
நூலகவியல் கல்வியை தமிழ் மாணவர்களுக்கு வழங்கும் பணியில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலேயே நூலகவியல் துறைக்கான பட்டப்பின் கல்வி டிப்ளோமா துறையை (DIPLIS) இலங்கை நூலகச் சங்கத்தின் உதவியுடன் 2002 – 2003 காலகட்டத்தில் மீளுருவாக்கம் செய்வதில் முன்நின்று உழைத்தவர் இவர்.
பல்கலைக்கழகத் தேவைகளுக்கான ஆராய்ச்சித் துறையில் இவர் ஈடுபாடு காட்டி வந்ததன் பயனாக, லேசர் தொழில்நுட்பத் துறைக்கான சுட்டி மற்றும் சாராம்ச சேவைகள் பற்றிய வழிகாட்டிகளையும் (Major Indexing and Abstracting Services in the field of Laser Technology), நூலக விஞ்ஞான – தகவல் தொழில்நுட்பக் கல்விக்கான குறிப்புரையுடனான வழிகாட்டியொன்றினையும், பட்டியலாக்கம் – பகுப்பாக்கம் – சுட்டிகள் மற்றும் நூலக முகாமைத்துவம் சார்ந்த பல ஆய்வுக் கட்டுரைகளையும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கின்றார்.
யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம், இலங்கை நூலகச் சங்கம் ஆகியவற்றின் ஆயுட்கால உறுப்பினராகவிருந்து இந்த அமைப்புகளின் வளர்ச்சிக்கும் தனது கடின உழைப்பினை இவர் வழங்கியிருக்கிறார்.
2005 இற்குப் பின்னரான தனது ஓய்வுக் காலத்திலும்கூட, நூலகவியல் துறையைத் தேர்வு செய்திருந்த தமிழ் மாணவர்களுக்கு உதவும் வகையில் தான் முன்னர் வழங்கிவந்த விரிவுரைச் சேவையினைத் தொடர்ந்தும் வழங்கி வந்திருந்தார். அவ்வகையில், ஸ்ரீலங்கா நூலகச் சங்கம் வழங்கி வந்த நூலகவியல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வழங்கிவந்த நூலகவியல் துறைக்கான பட்டப் பின்படிப்பு, யாழ்ப்பாணத் தேசிய கல்வியியற் கல்லூரி வழங்கிவந்த நூலகக் கல்வி ஆகியவற்றால் பல மாணவர்களும் பயனடைந்துள்ளனர். உரும்பிராயில் இருந்தபோது பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு கல்வியறிவை ஊட்டியதோடு அவர்களது தடையுறாத கல்விக்காக பண உதவியும் செய்து வந்தார். இயல்பாகவே மிகவும் இரக்க குணம் படைத்தவரான இவர் உதவி கேட்டு வருபவர்களுக்கு தன்னாலான உதவிகள் செய்து வந்தார் என்பதை இவருடன் நெருங்கிப் பழகிவந்த சக நூலக ஊழியர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.
பின்னாளில் பருத்தித்துறையில் தனது இளைய மகளோடு அமைதியாகத் தனது ஓய்வினை அனுபவித்து வந்த திருமதி ரோகிணி பரராஜசிங்கம் அவர்கள் 27.04.2022 அன்று இயற்கை எய்தினார்.
திருமதி ரோகிணி பரராஜசிங்கம் அவர்கள் இளைப்பாறியதன் பின்னர் திருமதி ஆர். கருணானந்தராஜா அவர்கள் ஒக்டோபர் 2005 முதல் செப்டெம்பர் 2008 வரையிலான மூன்றாண்டு காலப்பகுதியில் பதில் நூலகராகப் பணியாற்றி ஓய்வுபெற்றிருந்தார். அவரைத் தொடர்ந்து செல்வி எஸ். அருளானந்தம் அவர்கள் ஒக்டோபர் 2008 முதல் பெப்ரவரி 2012 வரை பதில் நூலகராகவும், பின்னர் மார்ச் 2012 முதல் 25.12.2019 இல் அவர் மறையும் வரை நூலகராகவும் பணியாற்றியிருந்தார். அவரது மறைவினைத் தொடர்ந்து கலாநிதி எஸ். கேதீஸ்வரன், கலாநிதி திருமதி கல்பனா சந்திரசேகர் ஆகியோர் பதில் நூலகர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.