யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசும் ஒடுக்கப்பட்ட தேசம் பற்றிய புரிதலும்
Arts
23 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசும் ஒடுக்கப்பட்ட தேசம் பற்றிய புரிதலும்

November 16, 2024 | Ezhuna

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்துள்ளது. இனத்தேசியம், மதபேதம் என்பவற்றுக்கு அப்பால் சாதியுணர்வுடன் இணைந்த அடையாள அரசியல் முதன்மை இடம்பெற்றுள்ள இன்றைய சூழலில் எமது சமூக கட்டமைப்பில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளன எனும் விடயம் பேசுபொருளாகியுள்ளது. எமது சமூக உருவாக்கம் வர்க்க அடித்தளம் உடையதல்ல. சாதிகளின் கட்டமைப்பு சார்ந்து இயங்கும் எமக்கான அரசியல் செல்நெறி வர்க்க அமைப்பின் வரலாற்றுச் செல்நெறிக்குரியதினின்றும் வேறுபட்டது என்ற விடயத்தினை தமிழர் வரலாற்றுத் தொடக்கமாக அமைந்த திணை வாழ்வியலை மையமாக கொண்டு ஆய்வு செய்வதாக ‘தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும்’ என்ற இத்தொடர் அமைகிறது.

உலக அரங்கில் சமூக மாற்றச் செல்நெறி வர்க்கப் போராட்டங்கள் வாயிலாக மட்டும் நடந்தேறி வரவில்லை; வர்க்கப் பிளவுறாத காரணத்தால் புராதனப் பொதுவுடமைப் பண்புகளைத் தம்மகத்தே கொண்டு இயங்கி வந்த ஆசிய உற்பத்தி முறைமைக்கு உரிய எமது வாழ்வியலில் இன்னொரு வகையிலான சமூக அமைப்பு மாற்றப் போக்கு இடம்பெற்று வந்துள்ளது என்பதனைக் குறித்து இந்தத் தொடரில் பேசி வருகிறோம். முழுச் சமூக சக்திகள் மேலாதிக்கம் பெற்றதன் வாயிலாக ஏனைய முழுச் சமூக சக்திகளை உரிமைகள் அற்றனவாக ஆக்கி ஒடுக்கியவாறு, அவர்களை உழைப்போராக மட்டும் வாழ்வதற்கு வகை செய்த வண்ணமாக இயங்கி வந்த ஆசிய உற்பத்தி முறைக்கு இந்தியாவின் சாதி அமைப்பு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இதன் இயங்கு முறைக்குரிய தாற்பரியங்களை, மேலாதிக்கத்தின் வாயிலாக வெற்றிபெற்ற திணையானது ஏனையவற்றைத் தொடர்ந்தும் ஒடுக்கிச் சுரண்டும் பொருட்டுச் சாதியத்தை உள்வாங்கிச் செயற்பட்டு வந்த தமிழகம் மட்டுமே தெளிவுற எடுத்துக்காட்டி உள்ளது. அந்தவகையில் தமிழர் வரலாற்றுப் போக்குடன் சமூக அமைப்பு மாற்றங்களைத் தூண்டுகிற சக்தியாகப் பண்பாட்டு மாற்றங்களும் அதன் விருத்திகளும் ஏற்பட்டு வந்தவாறினை இந்தத் தொடரில் பேசி வந்துள்ளோம். 

நவீன வரலாற்றில் தமிழகம் உட்பட இந்தியா முழுமையிலும் திணை மேலாதிக்கத் தகர்ப்புக்குரிய செயலொழுங்குகளுக்கான முன்னுதாரணம் வெளிப்பட இயலவில்லை. இந்திய சுதந்திரப் போராட்ட அணியின் ஏகாதிபத்தியப் பிணைப்பைத் தகர்க்கும் விடுதலை இயக்கத்தில் ஓரளவுக்கு மாற்றத்தை நாடும் திணை அரசியல் ஒழுங்குமுறை பின்பற்றப்பட்டு இருந்தது. ஏகாதிபத்தியத் தகர்ப்பு விரும்பத்தக்கதாகவும் அவசியப்படுவதாகவும் உள்ள அனைத்துச் சமூக சக்திகளையும் ஐக்கியப்படுத்த இந்தியக் காங்கிரஸ் அமைப்பு முயன்ற போதிலும் அதன்கண் பிராமணத் தேசிய நாட்டம் துருத்திக் கொண்டிருந்தது. பிராமண நலன் மேலாண்மை பெற்றவாறு செயற்பட்டமையால் பண்ணையடிமைத் தனத்தை ஒழித்தாக வேண்டிய சமூக சக்திகள் காங்கிரசின் தேசிய முன்னெடுப்பை நிராகரித்து, எதிர் தேசிய இயக்க முறையொன்றைச் செயற்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டு இருந்தனர். காலனியத் தலையீடு அறிமுகப்படுத்தி இருந்த வர்க்க அரசியல் 1920 ஆம் ஆண்டுகளில் உருவாகி வளர்ந்த மத்தியதர வர்க்கத்துக்கு உத்வேகமூட்டியதுடன் அதனைச் செழுமைப்படுத்தி வந்திருந்தது. மத்தியதர வர்க்கத்தின் இருவேறுபட்ட சமூக சக்திகளின் (சாதிகள், மதங்கள், இனத் தேசியங்கள் என்பவற்றின்) நலன்களுக்கிடையே  இணக்கம் காண்பதாக அல்லாமல் சுதந்திரப் போராட்ட அணிக்குத் தலைமையேற்றிருந்த காங்கிரஸ் கட்சியானது பிராமணச் சார்புடன் இயங்க முற்பட்ட சூழலில் திராவிடரிய, தலித்திய, முஸ்லீம் லீக் இயக்கங்கள் எழுச்சி பெற்றன. நான்கு தரப்புகளாக இயங்கிய பண்பாட்டு – அரசியல் இயக்கங்கள் ஒவ்வொன்றிலும் முழுமைப்பட்ட ஏகாதிபத்தியத் தகர்ப்புக்கு உரியதான திணை அரசியல் செயல்பாங்கு இடம்பெற இயலாத நெருக்கடி ஏற்படலாயிற்று. வர்க்க – திணை அரசியல்களின் கலப்பிலான அடையாள அரசியல் மேலோங்கிய நிலையில் அனைத்துச் சமூக சக்திகளையும் ஒன்றிணைத்தாக வேண்டிய திணை மேலாதிக்க (ஏகாதிபத்திய) தகர்ப்பு அரசியல் முன்னெடுப்பு அங்கே சாத்தியமற்றதாக இருந்து வந்தது. சாதிய அடிப்படையில் இயங்கி வந்த சமூக முறைமையின் மீது காலனியம் ஏற்படுத்திய குறுக்கீட்டினால் இத்தகைய சூழல் ஏற்பட்டு இன்றுவரை நிலவி வருவது குறித்து முந்திய இயல்களில் பார்த்து வந்துள்ளோம்.

மாறாக இலங்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்புக்குரிய அனைத்துச் சமூக சக்திகளையும் ஒன்றிணைப்பது சாத்தியப்பட்டுள்ளது; மார்க்சிய வழிகாட்டலுடன் இயங்கி வரும் தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளதுடன் பாராளுமன்றத் தேர்தலை வரும் நொவெம்பர் 14 ஆம் திகதி முகங்கொண்டுள்ளது. இதனைப் படித்துக் கொண்டிருக்கும்போது மக்கள் விடுதலையை வென்றெடுப்பதற்கான திணை அரசியல் பண்புடைய என்.பி.பி. பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றதான முடிவு சாத்தியப்பட்டு இருக்கலாம். தேசிய இனப்பிரச்சினையை விளங்கிக் கொள்வதில் என்.பி.பி. போதாமையுடன் இயங்குவதும் ஏனைய சிறு தேசிய இனங்கள் மத்தியில் ஏகாதிபத்திய சார்பே பெரும்பான்மைப் பலத்துடன் உள்ள காரணத்தாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை சாத்தியப்படாத போதிலும் பாராளுமன்றத்தில் ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மை சாத்தியப்படாமல் போய்விடாது. இவ்வகையில் என்.பி.பி. அரசாங்கத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிட்டாத சூழல் ஏற்படுமாயின் அதனால் ஏற்படக்கூடிய அரசியல் நெருக்கடி பாரியதாக இருக்கும். மக்கள் விடுதலைத் திசை மார்க்கத்திலான புதிய அரசியல் அமைப்பு உருப்பெற இயலாமல் இன ரீதியிலான அடையாள அரசியல் இலங்கையில் மீண்டும் முனைப்படைவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. பிரித்தானிய ஏகாதிபத்தியம் இனப் பிரச்சினையை இங்கே பிரித்தாளும் சூழ்ச்சிக்கான கையாளுகையாகக் கொண்டிருந்த காரணத்தால் இங்கே இனவாதம் சார்ந்த அடையாள அரசியலை முகங்கொள்ள நேர்ந்துள்ளது; இன்னமும் அதன் வீரியம் முழுமையாகச் சாய்க்கப்படவில்லை.

சாதியவாதப் பிளவாக்கத்தை இந்தியாவில் உக்கிரப்படுத்திக் கையாண்டதைப் போல காலனித்துவ சக்தி இங்கே கையாளாத காரணத்தால் இனவாதத் தளத்துக்கு அப்பாலான விடுதலைத் திணை அரசியல் முன்னெடுப்பு இங்கு (சுதந்திரத்துக்குப் பின்னர்) சாத்தியமாகி இருந்தது. இன்றைய வரவேற்கத்தக்க மாற்றத்துக்கான அடிப்படை இதன் வாயிலாகவே ஏற்படலாயிற்று. சாதிய முரண் கூர்மையுடன் இருந்த யாழ்ப்பாணம் இதற்கான களமாக வெளிப்பட்டது. இங்கே உருவான ‘யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ்’ கீரிமலையில் கூட்டிய 1925 ஆம் ஆண்டின் முதலாவது மகாநாட்டில் பூரண தேசிய விடுதலை என்ற பிரதான தீர்மானத்துடன் சாதியத் தகர்ப்பு, பெண் விடுதலை எனும் சமூக நீதிக் கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தது. அந்த மாநாட்டுக்கு பாரதி மீது பெருமதிப்பைக் கொண்டிருந்த கல்வியியலாளரும் ஆன்மீகத் துறவியுமான விபுலாநந்த அடிகள் தலைமை தாங்கி இருந்தார்கள். இந்தியாவில் பிராமண மேலாதிக்கத்தை உணர்ந்து தமிழக காங்கிரஸ் தலைமைப் பொறுப்பைத் வகித்து வந்தவரான ஈ.வெ.ரா. பெரியார் தமது அந்தப் பதவியைத் துறந்து வெளியேறிய அதே வருடத்தில், யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் இவ்வாறு பிளவுபடாத விடுதலைத் தேசிய (பாரதியக்) கருத்தியலை வெளிப்படுத்தி இருந்தது எனும் அம்சம் கவனிப்புக்கு உரியது!

முப்பதாம் ஆண்டுகள்: அடையாள அரசியலின் ஆரம்பக் களங்கள்

சென்ற நூற்றாண்டின் முற்கூறில் பிராமணரல்லாதார் இயக்கம் தமிழகத்தில் கட்சி அமைப்பாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது. அதற்கு முன்னரே தலித் அரசியலுக்கான முன்னோட்டமாக அயோத்திதாசர் தொடக்கி வைத்த ஆதித் திராவிடர் எழுச்சி உருப்பெற்ற நிலையில் எழுச்சியுற முற்பட்ட இடைச் சாதியினரின் நீதிக் கட்சி எனும் இந்தப் பிராமணரல்லாதார் அமைப்புப் பின்னர் நாற்பதாம் ஆண்டுகளில் ‘திராவிடர் இயக்கம்’ எனப் பரிணமித்து இருந்தமையை அறிவோம். இந்த விரிவாக்கத்தை ஏற்படுத்திய ஈ.வெ.ரா. பெரியார் பிராமணரல்லாதார் இயக்கம் தோற்றம் பெற்ற போது அதனுடன் இணைந்துவிடவில்லை; இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை ஆதரிப்பவராகவும் காங்கிரஸ் கட்சி அனுதாபியாகவுமே காணப்பட்டார். அதேவேளை, அரசியலில் அதிக ஈடுபாடு கொள்ளாமல் ஈரோடு நகரசபைத் தலைவர் எனும் சமூகச் செயற்பாட்டுடன் அமைதி கொண்டவராக இயங்கி வந்தார். காங்கிரசின் வளர்ச்சிக்குப் பிராமணரல்லாதார் இயக்கம் பெரும் அச்சுறுத்தலாக அமைந்த நிலையில் 1917 ஆம் ஆண்டுக்குப் பின்னராக அவரது நெருங்கிய நண்பரும் இந்தியா முழுமையிலும் அறியப்பட்ட பிராமணத் தலைவருமான ராஜாஜி வாயிலாகத் தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைமைப் பீடத்துக்கு அழைத்து வரப்பட்டார். பெரியார் தலைமையில் கூட்டப்பட்டு இருந்த தமிழகக் காங்கிரஸ் மாநாடு 1925 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நிலையில் இட ஒதுக்கீட்டு கொள்கையைக் காங்கிசும் கையிலெடுக்க வேண்டும் என்ற பிரேரணையைப் பெரியார் முன்மொழிந்தார்.

அவ்வாறு இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையைப் பெரியார் காங்கிரஸ் அமைப்பில் முன் வைப்பதற்கு முன்னரே தமிழகச் சட்ட சபையில் இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. காந்தி தலைமையில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி ஒத்துழையாமை இயக்கத்தை நடாத்திய காலத்தில் இடம்பெற்ற சட்டசபைத் தேர்தலைக் காங்கிரஸ் பகிஸ்கரித்து இருந்த காரணத்தால் நீதிக் கட்சியின் தமிழகச் சட்டசபையின் ஆட்சியாளர்களாக வருவது சாத்தியப்பட்டு இருந்தது. இந்தியா முழுமையிலும் போல தமிழகத்திலும் பிராமணரே உயர் கல்வித் தளத்தையும் அரச பதவிகளையும் ஆக்கிரமித்து இருந்த சூழலில் சாதிவாரியான இட ஒதுக்கீடு அவசியப்பட்டதாக இருந்தது; காங்கிரசுக்கு அடுத்தபடியாக நீதிக் கட்சி தமிழகத்தில் ஆழ வேரூன்றுவதற்கு இட ஒதுக்கீட்டின் அவசியத்தை மக்கள் உணர்ந்து கொண்டமையே அடிப்படையாக அமைந்து இருந்தது. அதனை முறியடிக்கப் பிராமணரல்லாதவரான பெரியாரைக் கவசமாக ஆக்குவதற்குத் தலைமைப் பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டதே அல்லாமல் பிராமண மேலாதிக்கத்தை நாட்டில் நீக்கிவிடும் கைங்கரியத்தைக் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ள இயலாது என்பதில் அந்தக் கட்சியில் பெரும்பான்மையினராக இருந்த பிராமணர்கள் திடசங்கற்பம் பூண்டிருந்தனர்.

காங்கிரசின் அந்த மாநாடு இட ஒதுக்கீட்டுப் பிரேரணையை நிராகரித்த நிலையில் அந்த அமைப்பை விட்டு வெளியேறிய ஈ.வெ.ரா. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். ஏகாதிபத்தியப் பிணைப்பைத் தகர்த்து விடுதலை பெறும் பொருட்டு இந்திய மக்கள் சுயமரியாதை நாட்டம் கொள்வது அவசியம் என்பதைக் காங்கிரஸ் தலைவரான காந்தி வலியுறுத்தி வந்தார். அந்த அமைப்பினின்றும் வெளியேறி வந்தபோதிலும் காந்தியின் மீது மதிப்புணர்வைக் கொண்டிருந்த காரணத்தாலேயே தனது இயக்கத்துக்கு ‘சுய மரியாதை இயக்கம்’ எனும் பெயரை இட்டிருந்தார் பெரியார். பெங்களூருக்கு காந்தி வந்திருந்த சந்தர்ப்பத்தில் அவரைச் சந்தித்த பெரியார், பிராமணர்களது ஆதிக்கத்தைத் தகர்த்து நாட்டின் 95 விழுக்காட்டுக்கு மேலான பிராமணரல்லாதார் நலன்கள் மீது அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதனைக் காந்தி ஏற்றுக்கொள்ள மறுத்துப் பிராமணரல்லாத தன்னைத் தலைமையில் வைத்திருக்கும் காங்கிரஸ் பிராமணருக்கு உடன்பாடற்றதான தனது கருத்துகள் சிலவற்றை அங்கீகரிப்பது போலப் படிப்படியாக மேலும் பல மாற்றங்களை முன்னெடுக்க இயலும் என்றார். தமக்கு மாறான சில கருத்துகளை உங்களிடமிருந்து இப்போது அவர்கள் ஏற்றாலும் இன்னொரு மகாத்மா தலைமையேற்று அவற்றை நீக்கிவிட இயலும்; ஏற்பட்டு வந்த அந்த விடயங்களிலும் பிராமண நலனை மீண்டும் மேலாதிக்கம் பெறச் செய்வதற்கான வாய்ப்பு ஏற்படாமல் போகாது என்பதனாலேயே இன்றைய அவர்களது ஏற்பு அமைந்துள்ளது எனப் பெரியார் வலியுறுத்தினார்.

ஒட்டுமொத்தப் பிராமண நலன்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க இயலாது எனக் காந்தி மறுத்த நிலையில் அவரை நிராகரித்ததுடன் அவரையும் காங்கிரசையும் கடுமையாகத் தாக்கும் செயற்பாடுகளைச் சுயமரியாதை இயக்கம் வாயிலாகப் பெரியார் முன்னெடுக்கலானார். அத்தகைய சூழலில் நீதிக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றக்கொள்ளும் கோரிக்கை விடுக்கப்பட்ட போது அதனை ஏற்று நீதிக் கட்சியின் சமூகப் பணியாக சுயமரியாதை இயக்கச் செயற்பாடுகளை முன்னெடுக்கலானார். முந்திய அந்தக் கட்சியின் அடையாள அரசியல் பண்பில் இருந்து காத்திரமான பல மாற்றங்களைப் பெரியார் தலைமையிலான நீதிக் கட்சி வெளிப்படுத்த ஆரம்பித்து இருந்தது. முப்பதாம் ஆண்டுகளில் உப்புச் சத்தியாக்கிரகம் போன்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களூடாக காங்கிரஸ் அமைப்புத் தமிழகம் பூராகவும் வீறுடன் வளர்ந்ததாயினும், பெரியார் தலைமையிலான நீதிக் கட்சி வெகுஜன அணிதிரட்டலை வலுப்படுத்திப் பிராமண எதிர்ப்புக் கருத்தியலைப் புதிய பரிமாணத்துக்கு வளர்த்தெடுப்பதும் சமாந்தரமாக இடம்பெறலாயிற்று; பெரியாரது அந்தப் பண்பாட்டு இயக்கம் பிராமணியத்துக்கும் காங்கிரசுக்கும் பெரும் சவாலாக விசாலித்து வந்தது. அரசியல் ரீதியில் காங்கிரஸ் எழுச்சி பேரலையாக வளர்ந்த போது தனது செயற்பாடுகளைப் பெரியார் பண்பாட்டு இயக்கத்துக்கு உரியதாகக் கூர்மைப்படுத்திக் கொள்ளலானார். மிகப் பெரும் செல்வாக்குடன் வளர்ந்த அந்தப் பண்பாட்டு இயக்கத்தின் பெயரை ‘திராவிடர் கழகம்’ என மாற்றுவதை முன்மொழிந்தவர் புதிய தலைமுறைக்கு உரியவராக இணைந்து பெரியாருக்கு அடுத்த தலைவராக வளர்ந்து வந்தவரான சி.என். அண்ணாதுரை!

தனியே சமூக – பண்பாட்டு இயக்கமாகத் திராவிடர் கழகம் செயற்பட வேண்டும் என்பதில் தொடர்ந்தும் பெரியார் உறுதியுடன் இருந்தார். அது முன்னெடுக்கும் இயக்கச் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் கனதியான தாக்கங்களை ஏற்படுத்திய போதிலும் அரசியல் தளத்தைக் கைப்பற்றும் போது மட்டுமே மாற்றங்களை முழுமையாக நடைமுறைச் சாத்தியமாக்க இயலும் என்பதனை அண்ணாதுரை வலியுறுத்தி வந்தார்; தொடர்ந்தும் அந்தக் கருத்து பெரியாரால் நிராகரிக்கப்படலாயிற்று. இந்தக் கருத்து மோதல் உச்சக்கட்டத்தை எட்டியபோது தி.க. வில் இருந்து பிரிந்து சென்ற அண்ணாதுரை தலைமையிலான ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ (தி.மு.க.) 1967 ஆம் ஆண்டில் தமிழக ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இன்றுவரை திராவிடர் இயக்கக் கட்சிகளே ஆட்சியாளர்களாகவும் பிரதான எதிர்க் கட்சியாகவும் அமைய இயலுமாக இருந்த வகையில் திராவிடர் இயக்கத்தின் தாக்கம் அசைக்கவியலாததாக அமைந்துள்ளது. ‘பிராமண எதிர்ப்பு’ என்பதில் அடையாள அரசியல் கூறு மேலோங்கி வந்தபோதிலும் தனியே திராவிடர்களுக்கு மட்டுமான அமைப்பு என்பதைக் கடந்து ‘திராவிட நிலப்பரப்புக்கு’ உட்பட்ட அனைவரையும் (அதன் கொள்கைத் திட்டங்களை ஏற்கும் பிராமணரையும்) உறுப்பினராக்கும் திணை மேலாதிக்கத் தகர்ப்புக்கான அரசியல் பண்பு தி.மு.க. விடம் மேலோங்கிக் காணப்பட்ட காரணத்தாலேயே இன்று வரை அதன் வெற்றி தொடர இயலுமாக உள்ளது.

பூரண விடுதலைக் குரலும் இனத் தேசியங்களும்

‘பிராமண எதிர்ப்பல்ல, பிராமணிய எதிர்ப்பையே தி.மு.க. முன்னிறுத்துகிறது’ எனக் கோட்பாட்டு ரீதியாக விளக்கம் கொடுக்கப்பட்ட போதிலும் பிராமணர்களில் மிகப் பெரும்பான்மையினர் தி.மு.க. எதிர்ப்பை வலுப்படுத்தியே வருகின்றனர். திராவிட இயக்க அரசியலில் பிராமண மேலாதிக்கத்துக்கு எதிர்ப்பு எனும் எல்லையைக் கடந்து பிராமண வெறுப்பும் இந்து மத விரோதமும் என்கிற அம்சங்கள் தூக்கலாக இருப்பதானது அதனுடைய அடையாள அரசியல் பண்பு என்பதனைக் கவனங்கொள்வது அவசியம்; அதேவேளை, பிராமணத் தேசியமே இந்திய சுதந்திரத்தின் பின்னர் மேலோங்கி வரலாயிற்று என்றவகையில் பிராமண மேலாதிக்கச் சக்திகளின் அடையாள அரசியல் குணாம்சம் முனைப்படைந்து வருகிறது என்ற காரணத்தால் அதற்கெதிரான ‘எதிர்ப்பு அரசியல்’ வடிவமாக இது உள்ளது என்பதனையும் மனங்கொள்வது அவசியம். காந்தி – நேரு தலைமையில் ‘தாராளவாத அரைப் பிராமணத் தேசியம்’ ஏனைய சாதித் தேசியங்களையும் ஒன்றுபடுத்தி ஏகாதிபத்தியத் திணையைத் தற்காலிகமாகப் பின்வாங்க வைத்த போதிலும் சுதந்திர இந்திய அரசில் படிப்படியாகப் பிராமணரது ஆதிக்கம் மேலோங்கி வரலாயிற்று; காங்கிரசிடம் இருந்த விடுதலைத் தேசியப் பண்பை மேவியதாகப் பிராமண மேலாதிக்கம் வலுப்பெற இடமளித்த காரணத்தாலேயே ஏகாதிபத்திய அணிக்குத் தலைமை ஏற்கும் பிரதான ஏகாதிபத்திய மையமாக இந்தியாவை மாற்றுகின்ற இந்துத்துவம் இன்று ஆட்சி பீடமேற வாய்ப்பை வழங்கி இருந்தது!

இவ்வகையான அடையாள அரசியல் பண்பு இந்தியாவில் மட்டுமே செயற்பட்டிருந்தது என்பதற்கில்லை; இலங்கையிலும் காலனிய இயங்காற்றலின் பேறாக அதற்கே உரிய தனித்துவங்களுடன் எமக்கான அடையாள அரசியல் செயலொழுங்குகள் இடம்பெற்று வரலாயின. இந்தியாவில் விஞ்ஞான – தொழில்நுட்பக் கல்வி வழங்கப்படுவதனை மறுத்த பிரித்தானிய ஏகாதிபத்தியம் டொக்ரர் கிரீன் வாயிலாக யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுவதனை அனுமதித்து இருந்தது. முன்னதாக அமெரிக்க மிஷன் அந்தச் செயற்பாட்டை தமிழகத்தில் அனுமதிக்குமாறு கோரியிருந்தமையை நிராகரித்து இலங்கையிலும் கொழும்பிலன்றி யாழ்ப்பாணத்திலேயே நடைமுறைப்படுத்துமாறு  இடமளித்திருந்தது. மானிப்பாயில் கிரீன் இயங்கி வந்தபோது நவீன விஞ்ஞானத் தளத்துக்குரிய உடற்கூற்றியல், இரசாயனவியல், பௌதிகவியல் போன்ற கல்வியை முன்னெடுத்தார்; அதனூடாகத் தானும் தமிழைக் கற்றுத் தேர்ச்சி பெற்றதுடன் தமிழ் மாணவர்களது ஆங்கிலத் திறனை விருத்திபெறச் செய்து கொண்டார். தமிழில் விஞ்ஞான நூல்களை உருவாக்கியதன் தொடர்ச்சியாக ஆங்கில – தமிழ் அகராதி ஒன்று முதன்முதலாக  இங்கு ‘மானிப்பாய் அகராதி’ எனும் பெயரில் (இன்று ‘யாழ்ப்பாண அகராதி’ எனும் தலைப்பில் புதிய பதிப்புகளைக் கண்டு வரும் படைப்பு) வெளியிடப்பட்டது. 

யாழ்ப்பாணத் தமிழருக்கான இந்தக் கல்வி வாய்ப்பு இலங்கை முழுமையிலும், கடல் கடந்தும் நிர்வாக – உயர் பதவிகளில் ஐரோப்பியருக்கு அடுத்த நிலையில் அங்கம் பெறும் அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. நிர்வாக மற்றும் பொருளாதார வாய்ப்புகளை மிக அதிகமாக யாழ்ப்பாணத்தவருக்கு வழங்கிய பிரித்தானிய ஏகாதிபத்தியம் அரசியல் அதிகாரத்தை உரிய விகிதாசாரத்துக்கும் அதிகமாகச் சிங்களத் தரப்புக்கு வழங்கி இருந்தது. மட்டுமன்றி, காலனித்துவ நாடுகளில் உட்கட்டுமான விருத்தியை மிக உச்சமான அளவில் இலங்கை பெற்றுக்கொள்ளும் வகையில் பல உரிமைகளையும் இலங்கைக்கு வழங்கி இருந்தது பிரித்தானிய ஏகாதிபத்தியம். வலுவான கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதற்கு முன்னரே பல அதிகாரங்கள் இலங்கைக்கு வாய்க்கப் பெற்றமையால் இந்தியாவில் போன்று இங்கு சுதந்திரப் போராட்டம் எழுச்சியடையவும் இல்லை. சிங்களத் தலைவர்கள் இவற்றை அனுபவிக்கும் வகையில் தொடர்ந்தும் கிறிஸ்தவர்களாக இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்தியாவை ஒட்டச் சுரண்டி வந்ததன் பேரில் அங்கு எழுச்சி பெற்று வரும் சுதந்திரப் போராட்டம் காரணமாக அங்கிருந்து தமக்குரிய நேரடி ஆட்சியை நீக்க நேர்ந்த போதிலும் ஏகாதிபத்தியப் பிணைப்புக்குள் இந்தியாவைக் கொண்டியக்குவதற்கு உரிய பின்தளமாகப் பயன்படுத்தும் பொருட்டு இலங்கைக்குக் கேட்காமலே வழங்கும் கொள்கையை ஏகாதிபத்தியத் திணை கையாண்டு இருந்தது. 

இவற்றுக்கு விசுவாசமாகச் சிங்களத் தலைவர்கள் கிறிஸ்தவர்களாக நீடிப்பதனை மேற்கொண்டு ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தை வெளிப்படுத்திய போது, பௌத்த பிக்குகளும் இடதுசாரிகளும் மட்டுமே சுதந்திரத்துக்காகக் குரல் கொடுப்பவர்களாக இருந்தனர். இடதுசாரிகள் தொழிலாளர்களை அணிதிரட்டிச் சுதந்திர உணர்வை ஊட்டிய போதிலும் பரந்துபட்ட கிராமிய மக்களிடையே பௌத்த பிக்குகளின் விடுதலைக்கான பிரசாரங்களே அதிகம் தாக்குறவுடையனவாக அமைந்திருந்தன. கிராமிய விவசாயிகள் இடதுசாரி மனப்பாங்கைப் பெறுவதில் கீழ்மட்டப் பௌத்த பிக்குகள் விடுதலைத் தேசிய உணர்வுடன் இயங்கி வந்தமையும் அவர்களே இடதுசாரி விழிப்புணர்வுக்கு ஆட்பட்டு இருந்தமையும் காரணமாக அமைந்தது. அதேவேளை அதிகார பீட பௌத்த பிக்குகள் தமக்கான ஆட்சி குறித்த அக்கறையை அடையாள அரசியல் குணாம்சத்துடன் சிங்கள – பௌத்த மேலாதிக்க மனப்பாங்கை விதைப்பவர்களாக இருந்தனர். அநகாரிக தர்மபாலர் இதற்கான குறியீடாக வெளித்தெரிபவர். முப்பதாம் ஆண்டுகள் வரை இயங்கி வந்தவரான அநகாரிகர் இலங்கையைச் சிங்கள – பௌத்த நாடு என்பதாக உணரச் செய்யும் பரப்புரையையே மேற்கொண்டார். மார்க்சியர்களான இடதுசாரிகள் தொழிலாளர்களிடம் விடுதலைத் தேசிய உணர்வை முப்பதாம் ஆண்டுகளில் விதைக்கத் தொடங்கிய போது தொழிலாளர்களை அதிகம் அணிதிரட்டியிருந்த ஏ.இ. குணசிங்காவும் சிங்கள மேலாதிக்கத்தைப் பரப்புரை செய்து இந்திய வம்சாவளித் தொழிலாளர்களுக்கு எதிரான ‘போராட்டங்களை’ முன்னெடுக்கலானார்.

இலங்கை முழுவதிலும் நிர்வாகத்துறை மற்றும் பலதரப்பட்ட உத்தியோகங்கள், பொருளாதார வாய்ப்புகள் என்பன சார்ந்த ஆக்கிரமிப்பை மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணத் தமிழர்களை இன்னொரு வகையில் பிரித்தானிய ஏகாதிபத்திய அரசு கையாண்டது. முழுமையான ஏகாதிபத்திய விசுவாசத்துடன் சிங்களத் தலைவர்கள் மத்தியிலும் பெருமதிப்பைப் பெற்றவரான யாழ். மேட்டுக்குடி அரசியல் தலைவரான சேர். பொன். இராமநாதன் அரசியலாளராக இயங்கிய அதேவேளை சைவப் பிரசாரங்களை மேற்கொள்ளும் இந்து சமயப் பற்றாளராக நீடிக்க அனுமதிக்கப்பட்டார். சி.வை. தாமோதரம் பிள்ளை, பாவலர் துரையப்பா பிள்ளை போன்றோர் கிறிஸ்தவர்களாக இருந்து உயர் கல்வியைப் பெற்று உயர்பதவியையும் எட்டிய பின்னர் மீண்டும் சைவத்தைத் தழுவுவதற்குத் தடை இருக்கவில்லை. உத்தியோக ஆக்கிரமிப்பிலும் வேறு பல தொழில் வாய்ப்புகளிலும் இலங்கை பூராகவும் அதிகாரம் செலுத்திய யாழ். மேட்டுக்குடிகள் ஏகாதிபத்தியச் சார்பை வெளிப்படுத்திய போதிலும் கல்வியின் பொருட்டோ உயர் பதவியுடனோ இந்தியாவுடன் தொடர்புபட்டிருந்த துரையப்பா பிள்ளை, தாமோதரம் பிள்ளை போன்றோர் அங்கு எழுச்சி பெற்று வளர்ந்து வந்த சுதந்திரப் போராட்டக் கொந்தளிப்பினால் இடதுசாரி மனப்பாங்கை வரித்துக்கொண்டவர்களாக வெளிப்பட்டனர்.

அதேவேளை ‘யாழ்ப்பாண மாணவர் காங்கிரசில்’ இயங்கத் தொடங்கி இளைஞர்களான போது ஹன்டி பேரின்பநாயகம், ஒறேற்றர் சுப்பிரமணியம் போன்றோர் ‘யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்’ (யா.வா.கா.) எனப் பரிணமித்த தமது அமைப்பு வாயிலாக இடதுசாரி அரசியல் செயற்பாட்டை முழு வீச்சுடன் முன்னெடுக்கும் பணியைச் செய்தனர். இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியும் ஒன்றிணைந்த மார்க்சிய அமைப்புமாகிய ‘இலங்கை சமசமாஜக் கட்சி’ 1935 ஆம் ஆண்டு உதயமான போது அதன் அங்கத்தவர்களாக இணைந்து பயணித்தனர். தீவிர அரசியல் செயற்பாட்டாளராகத் துலங்கிய சட்டத்தரணி தருமகுலசிங்கம் சிறந்த மார்க்சியராகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிக்கு உத்வேகமூட்டுபவராகவும் திகழ்ந்ததைப் போல அவருடன் இணைந்து இயங்கிய யா.வா.கா. போராளிகளும் தொடர்ந்து தேசிய விடுதலை, சாதியத் தகர்ப்பு, பெண் விடுதலை எனும் கருத்தியல்களை மக்கள் மத்தியில் செயற்படுத்தி வந்தனர். 

சமசமாஜக் கட்சி உதயமாவதற்கு முன்னரே யா.வா.கா. இன் செயற்பாட்டாளர்கள் விடுதலைத் தேசிய இயக்கத்தை வலுவுடன் முன்னெடுத்தனர்; எமது சமூக – பண்பாட்டுத் தளத்தில் டொனமூர் அரசியல் யாப்பு முழுமையான சுதந்திரத்தை வழங்க மறுத்தமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட யா.வா.கா. முன்னெடுத்திருந்த போராட்டம் கனதியான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. அந்த யாப்பின் அடிப்படையில் இலங்கைச் சட்டசபைக்கு 1932 ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமையுடன் அறிவிக்கப்பட்ட தேர்தலை பகிஷ்கரிப்பதாக அவர்கள் முன்னெடுத்த இயக்கம் நாடு முழுமைக்குமாக முன்வைக்கப்பட்டு இருந்தது. அதனைத் தெற்கில் பலரும் மதித்து வரவேற்ற போதிலும் ஏனைய இடங்களில் தேர்தல் நடந்தேறியிருந்தது; யாழ்ப்பாண மாவட்டம் மட்டும் பரிபூரணமாக நிராகரித்து இருந்தது. தமிழ் இனவாத அரசியலை முன்னிறுத்தியவாறு, பின்னர் மன்னார் ஊடாகச் சட்டசபைக்குள் நுழைந்து ஏகாதிபத்திய அடிவருடி அரசியல் மார்க்கமொன்றைத் தொடக்கி வைத்த ஜி.ஜி. பொன்னம்பலம் முப்பதாம் ஆண்டுகளில் தோற்றம்பெற்ற தமிழ் அடையாள அரசியல் முன்னோடியானார். பொதுவாக யாழ்ப்பாணச் சமூக – பொருளாதாரச் சூழமைவு ஏகாதிபத்தியச் சாய்வுடைய அதேவேளை, ஆரம்பகால இடதுசாரி முன்னெடுப்பில் தொடங்கிய அரசியல் பகிஷ்கரிப்பு, பின்னரும் பாராளுமன்ற அரசியலில் தமிழ் இடதுசாரி அரசியல் தாக்கமுடையதாக ஆகவியலாத நெருக்கடியாக நீடித்தது. அந்த முன்னோடிகளின் முதல் பகிஷ்கரிப்பு சரியானதும் வெற்றிகரமானதும் என்ற போதிலும் அடையாள அரசியலை நிராகரித்து இலங்கைத் தேசியத்தைத் தமிழ் மக்களும் பரந்துபட்ட அளவில் முன்னெடுக்கும் இயங்கு முறையை உருவாக்கத் தவறியிருந்தமையைப் பின்வந்த தமிழ் இடதுசாரிகள் தொடரும்படி செய்தது. அதேவேளை, பூரண சுதந்திரம் என்பதனை முன்னிறுத்திய அவர்களது தொடக்கம் சமூக – பண்பாட்டுத் தளத்தில் விருத்தி செய்யப்படுவதாக இருந்தமையும் கவனிப்புக்கு உரியது!

நான்கு சில்லுகள் பூட்டிய வாகனத்துடன் நவ ஏகாதிபத்தியம்

சென்ற நூற்றாண்டின் முப்பதாம் ஆண்டுகளில் தொடங்கப்பட்ட சிங்கள – தமிழ் மேலாதிக்க சக்திகளது அடையாள அரசியல் முன்னெடுப்பின் நீடிப்பாக எண்பதாம் ஆண்டுகளின் ஆரம்பம் தொட்டு முப்பது வருடங்கள் நீடித்த யுத்தக் களரி மேற்கிளம்பலாயிற்று. அதன்பேறாக இலங்கைத் தேசத்தின் ஆளுமை, பொருளாதாரம் என்பன வீழ்ச்சியடைந்ததுடன் விடுதலை ஆற்றலும் மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. பௌத்த – சிங்களப் பேரினவாதிகளும் தமிழ்க் குறுந்தேசிய மேலாதிக்க சக்திகளும் தமக்குள் கூட்டுச் சேர்ந்தபடி மக்கள் சக்தியைப் பிளவுபடுத்தி இடதுசாரி எழுச்சித் திசை மார்க்கத்தில் ஒன்றிணைந்து போராடுவதன் வாயிலாக விடுதலை நோக்கி முன்னேறிச் செல்வதனைப் பலவீனப்படுத்தி உள்ளனர். அவர்களது ஊழல் மோசடிக் கொள்கைகளால் கோபத்தின் எல்லையைத் தொட்ட சிங்கள மக்கள், ஒன்றுபட்ட இடதுசாரி அணியாகிய தே.ம.ச. இனை ஆட்சிபீடம் ஏற்றியுள்ளனர். ஆயினும் ஜி.ஜி. பொன்னம்பலம் தொடக்கிய ‘தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற உத்தியோக ஆக்கிரமிப்பாளர்களுக்கு உரிய மேலாதிக்கத் தமிழ்த் தேசியம் இன்னமும் நீடிப்பதன் காரணமாயுள்ள ஆபத்தான சூழல் நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

பௌத்த – சிங்களப் பேரினவாதமும் தமிழ் மேலாதிக்கத் தேசிய வெறியர்களும் இந்தியாவுடன் இணைந்து இலங்கையை ஏகாதிபத்திய அணியின் கூர்முனையாக மாற்றி வருகின்றனர். அதனை முறியடிக்க விடுதலைத் தேசிய சக்திகள் முன்னெடுக்கும் இன்றைய முயற்சி வெற்றி பெறுமா? இதற்குச் சவாலாக அமைவது வீழ்ச்சியடையும் மேற்குலக ஏகாதிபத்தியத் திணை, இந்திய – இலங்கைத் தளத்தைத் தமக்குரியதாக வளைத்துப் போடுவதில் காட்டிவரும் கரிசனையாகும். இவ்வகையில் உருப்பெறும் நவ ஏகாதிபத்தியமானது தனக்கமைவான நான்கு சக்கரங்களை முன்னோடிகளிடமிருந்து பெற்று நவீனப்படுத்திப் பயன்படுத்தும் வல்லமை உடையது; சாதியம், நவ காலனித்துவம், தேசியவாதம், ஊடகவியல் எனும் நவ ஏகாதிபத்தியத்தின் நான்கு சக்கரங்கள் மரபானவை என்ற போதிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டுக் களமிறக்கப்பட்டவை. கடந்த நூற்றாண்டின் எண்பதாம் ஆண்டுகளில் புதிய பரிணமிப்புடன் மேலெழுந்த அடையாள அரசியல் இலங்கையை விடுதலைத் தேசிய மார்க்கத்தில் ஆற்றுப்படுத்துவதற்கு இன்னமும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

அடையாள அரசியலைச் சமூக – பண்பாட்டுத் தளத்தில் முறியடிக்கும் அடித்தளத்தை ஆரம்பகால இடதுசாரிகள் முப்பதாம் ஆண்டுகளில் ஏற்படுத்தித் தந்தனர்; அதன் விருத்தி 1966 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கம்’ எனப் பரிணமித்தது. அது குறித்த தேடலை அடுத்த அமர்வில் அலசுவோம்!


ஒலிவடிவில் கேட்க

1898 பார்வைகள்

About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (15)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)