Arts
14 நிமிட வாசிப்பு

வடக்கு மாகாணத்திற்கு மருத்துவப் பணிகளைக் கொண்டுவரும் யாழ்ப்பாணத்தின் மருத்துவ விஞ்ஞானக் கல்வி நிலையம்

June 20, 2024 | Ezhuna

நீண்டகால யுத்தத்தின் முடிவிற்கு பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு சாத்தியமாகாத நிலையில், மீள்கட்டுமானத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காத சூழலே யதார்த்தமாகியிருக்கிறது. இந்நிலையில், வடக்கில் முனைப்படைந்து வரும் தொழில் முயற்சிகளையும் முயற்சியாளர்களையும் பலரதும் கவனத்திற்கு கொண்டுவருவதே ‘வளரும் வடக்கு’ எனும் இத் தொடரின் நோக்கமாகும். வடக்குப் பிரதேசத்தில் புலம்பெயர் சமூகத்தின் முதலீடு, புத்தாக்க தொழில் முனைப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எத்தனிப்புகள், தொழில் முனைவோரின் அனுபவப் பகிர்வு, முயற்சிகளின் தோல்விகளில் இருந்து கற்ற பாடம், வடக்கு பிரதேசத்தில் தனித்துவமாகக் காணப்படக்கூடிய பிரச்சனைகள், உலகளாவிய சமூகத்துடன் இணைந்து முயற்சிகளை வெற்றிகரமாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இத்தொடர் அமையும். இத் தொடர் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார முயற்சிகளை விபரிப்பதோடு மட்டுமே நின்றுவிடாது, அதன் தொடர்ச்சியான அசைவிற்குத் தேவையான முன்னெடுப்புகளின் சாத்தியம் குறித்தும் இலங்கையின் பொருளாதாரப் பின்னணியில் தரவுகளோடு ஆராய்கிறது. இது புதிய முயற்சியாளர்களுக்கு பாடமாக அமைவதோடு மேலும் பல முயற்சியாளர்களை வடக்கை நோக்கி வரவழைக்கும்.

2020 கோவிட் – 19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றின்போது தான் எங்கள் மருத்துவப் பணியாளர்களின் அருமை எங்களுக்குத் தெரிந்தது. கோவிட் – 19 எவரையும் விட்டுவைக்கவில்லை என்பதால் இவர்களை நாம் நேசிக்கத் தள்ளப்பட்டோம். அது நோய்த் தொற்றின் காரணமாக அல்ல; மாறாக ஊர் முடக்கங்கள், வியாபார நிலையங்கள் இழுத்து மூடப்படுதல், சமூகச் சந்திப்புகளுக்குத் தடை, வருமான இழப்பு, பொருளாதாரச் சீரழிவு மற்றும் வீடுகளுக்குள் உறவுகளுடன் வைத்துப் பூட்டப்படுவதால் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவையே மருத்துவப் பணியாளர் மீது எமது நேசத்தை அதிகரிக்கச் செய்தது. பொதுவாக ‘அடுத்தவர்களே’ நோய்களினால் பாதிக்கப்படுகிறார்கள்; ஒரு சிறு பகுதியினரையே நோய் தாக்குகிறது. எனவே அவர்கள் மீது நாம் இரக்கம் காட்டினாலே போதும் என்ற மனநிலையே எம்மத்தியில் இருந்தது. பாரபட்சம் காட்டாது கோவிட் – 19 எங்கள் அனைவரையுமே பாதித்தது; எங்கள் வேலைகள், எங்கள் வீடுகள், எங்கள் குளிர்சாதனப் பெட்டிகள், எங்கள் பணப் பைகள் என அனைத்திலுமே அதன் கோர நிழல் வீழ்ந்தது. அதை நாம் எல்லோருமே உணர்ந்தோம்.

சில மாதங்கள் வரை மருத்துவப்பணியாளர்கள் ‘சுப்பர் ஹீரோக்களாகக்’ கொண்டாடப்பட்டார்கள். ஆனால் விரைவிலேயே மனிதத்தின் நன்றியின்மை பாம்புக் கடியை விட வேகமாக அவர்களைக் கடித்துக்குதறியது. ஹீரோக்களாக்கப்பட்ட மருத்துவப் பணியாளர்கள் விரைவிலேயே மறக்கப்பட்டார்கள்.

மருத்துவப் பணியாளர்கள் மீதான எமது காதல் ஈரமாக இருக்கும்போதே இலங்கையின் வடமாகாணத்தின் ஒளிரும் முன்னுதாரணமான மருத்துவத்துறை பற்றி பார்ப்பது அவசியம்.

அமெரிக்க – சிலோன் மிஷனால் 1848 இல் ஆரம்பிக்கப்பட்ட, மானிப்பாயில் இருக்கும் ‘கிறீன் ஞாபகார்த்த மருத்துவமனை (GMH)’, இலவச சேவைகள் உட்பட மிகவும் மலிவான மருத்துவச் சேவைகளை வழங்கி வருவது உங்களில் பலருக்குத் தெரியும். இக் கட்டுரைக்குக் காரணமான மருத்துவ விஞ்ஞானக் கல்வி நிலையம் (Institute of Medical Sciences – IMS) கிறீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் இருந்துதான் இயங்குகிறது.

2011 இல் இலண்டனில் சில மருத்துவர்களைச் சந்தித்தபோது மருத்துவ விஞ்ஞானக் கல்வி நிலையம் பற்றிய எண்ணக்கரு உருவாகியது. தற்போது இந்நிறுவனத்தின் தலைவராக இருக்கும் – நான் டாக்டர் சுரேன் என அழைக்கும் – டாக்டர் ராஜேந்திரா சுரேந்திரகுமாரன்  இக்காலத்தில் இலண்டன் செயிண்ட் பார்த்தலோமியூ மருத்துவமனையில் முனைவருக்கு அடுத்த நிலைப் பட்டத்துக்கான (post – doctoral studies) முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். கல்வி நிலையத்தின் உருவாக்கத்திற்கும் இருப்பிற்கும் தேவையான நிதியைத் திரட்டுவதற்கென சர்வதேச ஆலோசனைக்குழு ஒன்றின் ஆதரவுடன் ஒரு அறக்கட்டளையும்  நிறுவப்பட்டது. இது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட டாக்டர் சுரேனின் தலைமையில் இயங்கிய குழுவுடன் இணைந்து பணியாற்றியது.

மருத்துவ விஞ்ஞானத்தின் அனைத்து பகுதிகளிலும் பணிக்கு முன்பான (pre-service) மற்றும் பணியின் போதான (in-service) பயிற்சி வழங்கல்கள் உட்பட பலதரப்பட்ட கற்கை நெறிகளை வழங்குவதென்பதுவே இந்நிலையத்தின் முதன்மை நோக்கமாக இருக்குமென அறிவிக்கப்பட்டது. மருத்துவச் சேவைகளை வழங்குவது மட்டுமல்லாது, மருத்துவர் தவிர்ந்த, பலராலும் அதிகம் விரும்பப்படாத, இதர மருத்துவச் சேவைகளை நோக்கி மாணவர்களை ஊக்கப்படுத்துவதும் தொழில் வழிகாட்டுதலும் இந்நிலையத்தின் நோக்கங்களாக இருக்குமெனத்  தீர்மானிக்கப்பட்டது.

இவ் எண்ணக்கரு தோற்றம் பெற்ற அடுத்த வருடத்திலேயே இந்நிலையம் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்தது. வறுமைப்பட்ட, நிர்க்கதியான குடும்பங்களிலிருந்து மாணவர்களைச் சேர்க்கும் முயற்சியில் அது இறங்கியது. அடுத்த ஒரு வருடத்தில் 25 பேரை மருத்துவ உதவியாளர் (Healthcare Assistant) பயிற்றுத் திட்டத்தில் சேர்த்துக்கொண்டது. பயிற்சி முடிந்ததும் இவர்கள் தாதிகளுக்கு உதவியாளர்களாகப் பணிபுரிவார்கள். 2013 இல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் முதலாவது கற்கை நெறிக்கான நிதி உதவியை, உலகம் முழுவதும் கிளைகளைக் கொண்ட, சமூக மற்றும் கல்வித் தேவைகளுக்கான சேவைகளை வழங்கிவரும், இலண்டனைத் தளமாகக்கொண்ட மனிதநேயம் அறக்கட்டளை (Manitha Neyam Trust) பொறுப்பேற்றுக் கொண்டது. வசதியான மாணவர்கள் மாதம் தலா ரூ. 2,500 ஐக் கட்டணமாகச் செலுத்தியும், வறிய மாணவர்கள் புலமைப் பரிசில் உதவிகளுடனும், மீதிப்பணத்தை நன்கொடைகள் மூலமும் பெற்று இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்மாணவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள மருத்துவ நிறுவனங்களில் வேலைப் பயிற்சிகளையும் கொழும்பிலுள்ள முன்னணித் தனியார் மருத்துவமனையான இலங்கா மருத்துவமனையில் (Lanka Hospitals.) 3 மாத பயிற்சியையும் பெறுவார்கள். இம்மாணவர்களுக்கான பயிற்சி, தங்குமிடம் மற்றும் உணவு வழங்கலுக்காக, பங்குபற்றும் மாணவர்கள் இம்மருத்துவமனைக்கு மாதம் ரூ. 25,000 செலுத்த வேண்டும். இப்பயிற்சியின் போது அறுவைச் சிகிச்சைகள் உட்பட ஒரு முன்னணி மருத்துவமனையில் பணியாற்றுபவருக்குத் தேவையான தொழில்நிபுணத்துவம் பற்றிய அநுபவக் கற்கையைப் பெற்றுக்கொள்ள முடியும். இப்பயிற்சியை அரசாங்க மருத்துவமனைகளில் பெறுவதற்காக சுகாதார அமைச்சிடம் விண்ணப்பிக்கப்பட்டதாகவும் ஆனால் அங்கிருந்து சாதகமான பதிலேதும் கிடைக்கவில்லை எனவும் டாக்டர் சுரேன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மருத்துவ விஞ்ஞானக் கல்வி நிலையத்தின் அனைத்துக் கற்கை நெறிகளும் இலங்கையின் தேசிய தொழில்துறைப் பயிற்சி நிர்வாகம் (National Apprentice and Industrial Training Authority – NAITA),  மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணையம் (Tertiary And Vocational Education Commission – TVEC) ஆகியவற்றின் அங்கீகாரத்தைப் பெற்றவை என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. அத்தோடு சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தனியார் சுகாதாரக் கட்டுப்பாட்டுச் சபையில் (Private Health Regulatory Council, Ministry of Health) இந்நிலையம் பதியப்பட்டுமுள்ளது.

தாதிகளுக்குரிய மூன்று வருட பயிற்சிக் கற்கையையும் இக்கல்வி நிலையம் வழங்குகிறது. சுகாதார அமைச்சின் கற்கைநெறித் திட்டத்தை இந்நிலையம் பின்பற்றித் தனது பயிற்சிகளை வழங்கினாலும், தனியார் கல்வியைப் பெற்றுத் தாதிகளாக வருபவர்கள் இலங்கையின் தேசிய தாதிகள் சங்கத்தில் பதிவுசெய்ய முடியாது என்பது சட்டம். இதன் காரணமாக, இலங்கையில் சமூகப் பராமரிப்பு (Community Care), இறுதிக்காலப் பராமரிப்பு (Palliative Care) ஆகிய பணிகளுக்கு ஆட் போதாமை இருந்தும்கூட, அரசாங்க மருத்துவமனைகளில் இத் தாதிகள் பணிபுரிய முடியாது என்பது துர்ப்பாக்கியம். தனியார் கல்வி நிலையங்களினாற் பயிற்றப்படும் தாதிகள் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே பணியாற்ற முடியும்.

யாழ்ப்பாண மருத்துவக் கல்வி நிலையம் தற்போது மருத்துவத்துடன் தொடர்பற்ற தொழிற் பயிற்சிக் கற்கை நெறிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் வேலையற்றோர் பயிற்சித் திட்டத்துடன் இணைந்து விருந்தோம்பல் (Hospitality), மருத்துவம் சார்ந்த தகவற் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தொழிற்கல்விக்கான கற்கைநெறிகளை ஆரம்பித்துள்ளது. வேலையற்றோருக்கு மேற்படி துறைகளில் பயிற்சிகளை வழங்குவதற்காய் இந்நிலையம் அரசாங்கத்தினால் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. பின்வரும் துறைகளில் சான்றிதழ்களை வழங்க இளையோர் விவகாரம் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு யாழ்ப்பாண மருத்துவக் கல்வி நிலையத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது:

  1. மருத்துவப் பராமரிப்பு சான்றிதழ் (Certificate in Healthcare)
  2. தாதிப்பயிற்சி டிப்ளோமா (Diploma in Nursing)
  3. மருந்தகத் தொழில்நுட்பச் சான்றிதழ் (Certificate for Pharmacy Technician)

கல்வி நிலையம் தற்போது வழங்கிவரும் கற்கை நெறிகள்:

  1. பராமரிப்பாளர் , NVQ மூன்றாம் நிலை (Caregiver, NVQ Level 3)
  2. மூத்தோர் பராமரிப்பாளர் , NVQ நான்காம் நிலை (Caregiver – Elderly Care, NVQ Level 4)
  3. குழந்தைப் பராமரிப்பு  (Child Care Centre Operations, NVQ Level 4)
  4. பயோமெடிக்கல் தொழில்நுட்பவியலாளர் (Biomedical Technician, NVQ Level 2 and 3)
  5. பல் அறுவைச்சிகிச்சை தாதி உதவியாளர் (Dental Surgery Nurse Assistant, NVQ Level 3)

இக்கல்வி நிலையத்தில் தற்போது 132 மாணவர்கள் கல்விகற்று வருகிறார்கள்.

“மக்கள் வளத்தில் இலங்கை மிகவும் செழிப்பான நாடு. இவர்களில் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று பணமீட்டி தம் குடும்பங்களுக்கு உதவ விரும்புகிறார்கள்” என்கிறார் டாக்டர் சுரேன். 2016 இலங்கை வெளிநாட்டுப் பணியாளர் அலுவலகப் புள்ளிவிபரப்படி, வெளிநாட்டுப் பணிகளுக்கெனச் சென்ற இலங்கையரில் 56% மானோர் கூலியாளர்களாகவும், பணிப்பெண்களாகவும் தொழிலாளர்களாகவுமே சென்றிருக்கிறார்கள். இவர்கள் குறைந்த ஊதியத்தைப் பெறுபவர்கள் மட்டுமல்ல, அந்தஸ்திலும் கெளரவத்திலும் குறைவாகவே மதிப்பிடப்படுகிறார்கள் என்கிறார் டாக்டர் சுரேன்.

முறையான கல்வித் தகமைகளைக் கொண்டிருந்தால் அவர்கள் குழந்தைப் பராமரிப்பு, தாதி, மருத்துவ உதவியாளர் போன்ற பணிகளுக்காக மத்திய கிழக்கு போன்ற நாடுகளுக்குச் சென்று வீட்டு வேலைக்காரர்களாகவோ அல்லது தோட்டிகளாகவோ பணியாற்றி உழைக்கும் ஊதியத்தைவிட, 50% அதிகமாகச் சம்பாதிக்க முடியும். இதன் மூலம் நீண்ட நாட்கள் தனிமையில் வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு அதிக சம்பாத்தியத்தை அனுப்ப முடியும். நாடும் தனது அத்தியாவசிய அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொள்ள முடியும். 2019 இல் மட்டும், எம் நாட்டின் வெளிநாட்டுப் பணியாளர் 6.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளார்கள். இவர்கள் தொழில்துறைக் கல்வியைப் பெற்றவர்களாக இருந்திருப்பின் எவ்வளவு பணத்தை அனுப்பியிருப்பார்கள்; எத்துணை மதிப்புடனும் கெளரவத்துடனும் அவர்கள் நடத்தப்பட்டிருப்பர்?

இளையோர்களுக்கான தொழில் வழிகாட்டல் திட்டங்களையும் இக்கல்வி நிலையம் வழங்குகிறது. சுகாதாரத் துறையில் மருத்துவர்கள் அதியுச்ச கெளரவத்தைப் பெறும் அதே வேளை, இதர பணியாளர்களுக்கு எமது சமூகம் அதிக மதிப்பைக் கொடுப்பதில்லை. கோவிட் – 19 இதை ஓரளவுக்கு மாற்றி, இதர விற்பன்னர்கள் முதல் துப்புரவாளர் வரை எத்துணை முக்கியமானவர்கள் என்பதை எமக்கு ஞாபகப்படுத்தியிருந்தாலும், நாம் விரைவில் அதை மறந்துவிடுகிறோம். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் வருடா வருடம் நடத்தப்படும் ஆட்சேர்ப்பு நிகழ்வில் மருத்துவக் கல்வி நிலையம் பங்குபற்றுகிறது. அத்தோடு பாடசாலைகளுக்குச் சென்று மருத்துவம், குழந்தைப் பராமரிப்பு உட்பட்ட பராமரிப்பு துறைகளில் நாட்டம் கொள்ளும்படி மாணவர்களுக்கு ஊக்கத்தையும் கொடுத்து வருகிறது.

நிபுணத்துவப் பயிற்சிக் கல்வியை வழங்கும் அதேவேளை, நரம்பியல் புத்தாக்க மையம் (Neuro Rehabilitation Centre) மற்றும் இறுதிக்காலப் பராமரிப்பு (Palliative Care) ஆகிய துறைகளிலும் சேவைகளை வழங்கிவருகிறது. நரம்பியல் புத்தாக்க மையம், பாரிசவாதம் (stroke), உயிரிழைச் சிதைவுகள் (spinal injuries) மற்றும் மருத்துவக் காரணங்களினால் இயக்க முடக்கத்திற்குள்ளானவர்களைப் பராமரிக்கிறது. மருத்துவமனையில் வைத்து வழங்கப்படும் 18 படுக்கைகளைக் கொண்ட இச்சேவைக்கு, மாதப் பராமரிப்புக் கட்டணமாக 60,000 ரூபாக்களை இந்நிலையம் அறவிடுகிறது. இதற்கான சேவைகளாக படுக்கை, உணவு, உடற்பயிற்சிச் சிகிச்சை (physiotherapy), மருந்து மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கவனிப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. இறுதிக்காலப் பராமரிப்பு நிலையத்தில் வாழ்வின் அஸ்தமனத்தை அண்மிக்கும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவு வழங்கப்படுகிறது. அரசாங்க மருத்துவமனைகளில் இச்சேவைகளுக்கு அதிக கிராக்கி இருப்பதால் பிரத்தியேக அறை ஒன்றில் வைத்து இச்சேவைகளை வழங்க நாளொன்றுக்கு ரூ. 750 இனை நிலையம் அறவிடுகிறது.

இதைவிட குழந்தைகளுக்கான கபிரியெல்லா ராசையா சிகிச்சை நிலையம் (Gabriella Rasaiah Clinic for Children) என்னும் ஒரு மருத்துவச் சேவையையும் இந்நிலையம் நிர்வகித்து வருகின்றது. இள வயதில் நோய் காரணமாக இறந்த தமது குழந்தையின் ஞாபகார்த்தமாக பிரித்தானியாவில் வாழும் அவரது பெற்றோர் இந்நிலையத்தை ஆரம்பித்துள்ளனர். ஆட்டிசம், பெருமூளைவாதம் (Cerebral Palsy), டவுண்ஸ் சிண்ட்றோம் (Downs Syndrome) போன்ற வியாதிகளால் பீடிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இங்கு இலவசப் பராமரிப்பு வழங்கப்படுகிறது. இதே போன்ற வியாதிகளுக்கு யாழ்ப்பாணத்தில் இதர பல சிகிச்சை நிலையங்கள் இருந்தாலும் ‘கபிரியெல்லா ராசையா’ சிகிச்சை நிலையத்தில் இக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இப்படியான குழந்தைகளுக்கு உணவூட்டல், குளிப்பாட்டல், கழிவகற்றல் போன்ற விடயங்களில் பெற்றோர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பெற்றோர்கள் கலை, இசை உள்ளிட்ட பல்வேறுவிதமான சிகிச்சைகள் மற்றும் உறவாடல்களில் ஈடுபடுவதன் மூலம் அவர்களது மன அழுத்தங்கள், பிரச்சினைகளுக்கு நிவாரணம் கிடைக்கின்றது.

யாழ்ப்பாண மருத்துவக் கல்வி நிலையத்திற்கு எவ்வகையான ஆதரவை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என டாக்டர் சுரேனிடம் கேட்டேன். இந்நிலையத்தின் செயற்பாட்டு விஸ்தாரத்திற்கு உகந்த உபகரணங்கள் தேவைப்படுகிறதெனவும் ஏழை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கவேண்டிய தேவைகள் இருக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார். இதுவரை நிலையத்திற்கெனப் பல புத்தங்கள், புதிய ஆடைகள் மற்றும் பாவித்த சக்கர நாற்காலிகள், நடையுபகரணங்கள் ஆகியவற்றை முன்னாள் நோயாளிகளும் அன்பளிப்புச் செய்திருக்கிறார்கள் எனவும் டாக்டர் சுரேன் தெரிவித்தார். பெப்ரவரி 2020 இல், ஹட்டன், கொட்டகலை, யாழ். நகர றோட்டரி கிளப்களின் ஆதரவுடன் சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலிய நன்கொடையாளர்கள் இரண்டு நோயாளி அவதானிப்புக் கருவிகளை (Multi Parameter Patient Monitors) அன்பளிப்புச் செய்திருந்தனர். இதைவிட பிரித்தானியாவில் இருக்கும் பேரா. ஜயந்தா ஆர்ணோல்ட் மற்றும் மானிப்பாய் மருத்துவமனை நண்பர்கள் அமைப்பு  (Friends of Manipay Hospital) ஆகியோர் இந்நிலையத்திற்கு  ரூ. 107,000 பெறுமதியான சுகாதாரப் பராமரிப்பு உதவியாளர் புலமைப் பரிசுக்கான 1 வருட நிதியை நன்கொடையாகத் தந்துதவியுள்ளார்கள் என டாக்டர் சுரேன் விசேடமாகத் தெரிவித்தார். இச்செலவில் பெரும்பங்கு இலங்கா மருத்துவமனைகளில் வழங்கப்படும் பயிற்சிகளுக்காகச் செலவிடப்படும்.

கோவிட் – 19 காரணமாக, வகுப்பறை வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், மருத்துவக் கல்வி நிலையம் மெய்நிகர் (zoom) வழியாகத் தனது வகுப்புகளை நடத்தியது. பெருந்தொற்றினால் திணிக்கப்பட்ட இத் தொழில்நுட்பம் இப்போது பாடசாலைகள், நிறுவனங்கள் ஆகியனவற்றிற்கு இடையேயான உரையாடல்களையும் வகுப்புகளையும் ஆலோசனைகளையும் வழங்க உதவியாகப் போனது. இனிவரும் காலங்களில் ஆங்கிலம், தொடர்பாடல் மற்றும் மென்திறன்கள் (soft skills) போன்ற நெறிகளிலும் வகுப்புக்களை நடத்த நிலையம் உத்தேசித்துள்ளது. ஆங்கிலத்தில் தொடர்பாடலை மேற்கொள்ளும் திறமையுள்ள மாணவர்கள் தங்கள் உழைப்பிற்கு அதிக வெகுமானத்தைப் பெறக்கூடியதாகவிருக்கும். ஆங்கிலத்தை வெளி மொழியாகக் கற்பிப்பதில் (TEFL) அனுபவமுள்ள ஆசிரியர்கள் தங்களது நேரத்தில் ஓரிரு மணித்தியாலங்களை இதற்காக ஒதுக்க முடிந்தால் அதை நாம் வரவேற்போம்.

யாழ்ப்பாண மருத்துவக் கல்வி நிலையம் (Institute of Medical Sciences (IMS)) பற்றி மேலதிக தகவல்களை அறிய விரும்புவோர் டாக்டர் சுரேந்திரகுமாரன் அவர்களுடன், theimsjaffna@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

2626 பார்வைகள்

About the Author

ஜெகன் அருளையா

இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் தனது பெற்றோருடன் பிரித்தானியாவிற்கு இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக, இலங்கையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனங்களிலும் பணியாற்றியவர். 2015 இல், நிரந்தரமாக யாழ்ப்பாணத்துக்குக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • July 2024 (1)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)