ஆங்கில மூலம் : G.B கீரவல்ல
இலவசக் கல்வித் திட்டமும் மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர்களும்
இலங்கையின் இலவசக் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் விளைவாகத் தோன்றிய கிராமப்புறத்தின் படித்த இளைஞர்களே, மக்கள் விடுதலை முன்னணியினைத் தோற்றுவித்தவர்கள் என்பதைப் பல ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இத்தொடர்பைச் சுட்டிக் காட்டியவர்கள் கல்வித் துறையில் ஏற்பட்ட இம்மாற்றங்களின் முக்கியத்துவத்தை சமூக வரலாற்று நோக்கு முறையில் விளக்குவதற்குத் தவறியுள்ளனர். இலங்கையில் கல்வி பரவலாக விரிவாக்கம் பெற்றமை ஒரு குறிப்பிட்ட வகை கல்வி முறைமையை (EDUCATION SYSTEM) நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இக் கல்வி முறைக்கும் குட்டி முதலாளித்துவ வகுப்பின் அபிலாசைகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு கல்வி முறைமைக்குள் நெருக்கடியை உருவாக்கியதை ஆய்வாளர்கள் சரியாக ஆய்வு செய்து இனங்காண்பதற்குத் தவறியுள்ளனர்.
இலங்கையில் இருந்துவரும் கல்விமுறை 19 ஆம் நூற்றாண்டில் காலனியத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. அரசாங்கம் அப்போது கல்வித் தராதரங்கள் இவையெனத் தீர்மானித்தது. அத் தராதரங்களுக்கு அமைய பாடசாலைகளை நிறுவி கல்வியை போதிக்கும் பொறுப்பை கிறிஸ்தவ மிசனரிகளுக்கு வழங்கியது. கல்வி நிறுவனங்களை முகாமை செய்துவந்த மிசனரிகளின் பாடசாலைகளுக்கு உதவிநிதி (கல்வி மானியம்) வழங்கப்பட்டது. கிறிஸ்தவ மிசனரிகள் கல்வியின் மீது கட்டுப்பாட்டை வைத்திருந்தமைக்கு எதிரான பண்பாட்டு எதிர்வினை பௌத்தர்களிடமிருந்தும் இந்துக்களிடமிருந்தும் கிளம்பியது. இதன் பயனாக பௌத்த இந்துப் பாடசாலைகளும் போட்டியிட்டுப் பாடசாலைகளை ஆரம்பித்தன. இவ்வாறு உருவான கல்வி முறை கல்வியோடு இணைந்த குறித்த வகையான விழுமிய முறையைக் (VALUE SYSTEM) கொண்டதாய், அரசாங்கம் விதித்த நியமங்களுக்கு ஏற்ற வகையில் இயங்கத் தொடங்கியது. நகரப் புறங்களிலும், கிராமப் புறங்களிலும் கல்வி வசதிகள் பெருகின. கல்வியின் இப்பெருக்கம் இரு காரணிகளால் வேகமடைந்தது. முதலில் பல்வேறு சமயப் பிரிவினர்களிடையே ஏற்பட்ட போட்டி கல்வியின் பெருக்கத்திற்கு காரணமாயிற்று. அடுத்ததாக டொனமூர் அரசியல் அமைப்பின் கீழ் அமைக்கப்பட்ட மந்திரி சபைகளில் கடமையாற்றிய அமைச்சர்களிடம் கல்வித் துறைப் பொறுப்பை காலனிய அரசாங்கம் கையளித்தது. கல்வி அமைச்சரான c.w.w. கன்னங்கரா 1943 இல் இலவச கல்வித் திட்டத்தைச் செயற்படுத்தினார். இத்திட்டம் கல்வியின் விரைவான விரிவாக்கத்திற்கு காரணமாயிற்று. குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு தேசிய மொழிக் கல்வி வழங்கப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் கல்வித் துறையில் இரு முக்கிய இயல்புகள் வெளிப்பட்டன.
அ) இரண்டாம் நிலைக் கல்வியிலும் (SECONDARY EDUCATION) பல்கலைக்கழகக் கல்வியிலும் விரைவான விரிவாக்கம் இடம்பெற்றது.
ஆ) இவ் விரிவாக்கம் இடம்பெற்ற போது காலனிய கல்வி முறைக் கட்டமைப்பில் மாற்றம் இருக்கவில்லை. அவ்வமைப்புத் தொடர்ந்து நீடித்தது.
இதனை விட சனத்தொகைப் பெருக்கம் விரைவாக ஏற்பட்டது. தமது பகுதிகளில் போதிய கல்வி வசதிகள் இல்லையெனக் கூறிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுத்தனர். தூரப் பகுதிகளில் எல்லாம் மத்திய மகா வித்தியாலயங்கள் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அவ்வாறு பாடசாலைகள் திறக்கப்பட்டு முதல் நிலைக் கல்வியும் இரண்டாம் நிலைக் கல்வியும் விரிவாக்கம் பெற்றன. இப்பாடசாலைகளில் தாய்மொழியில் (சிங்களம், தமிழ்) கல்வி கற்பிக்கப்பட்டதால் கல்வி பயிலச் சேரும் மாணவர் தொகை பல மடங்காக அதிகரித்தது. முதல் நிலை, இரண்டாம் நிலைக் கல்வியின் பெருக்கத்தின் காரணமாக பல்கலைக்கழகங்களிலும் கற்கும் மாணவர் தொகை அதிகரித்தது. 1958 ஆம் ஆண்டில் வித்தியாலங்கார, வித்தியோதய என்ற ‘இரு பிரிவேனாக்களும்’ பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றன. 1965 இல் கொழும்பு பல்கலைக்கழக வளாகம் ஆரம்பிக்கப்பட்டது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் தொகையும் அதிகரித்தது.
முதல் நிலை, இரண்டாம் நிலைக் கல்வியில் மாணவர் சேர்வு ஒவ்வொரு 5 ஆண்டுக்கிடையிலும் எவ்வாறு அதிகரித்தது என்பதைப் பின்வரும் புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

இவ்வாறு அதிகரித்துச் சென்ற மாணவர் சேர்வுத் தொகை 1970 ஆம் ஆண்டில் 27 லட்சத்துப் 16 ஆயிரத்து 187 ஆக உயர்ந்திருந்தது.
கல்வித் துறையின் அபிவிருத்தி இலங்கையின் குறைவிருத்தியின் ஒரு அம்சமாகும். வளர்ச்சியடையாது தேக்கமுற்ற ஒரு பொருளாதாரத்தில் படித்த இளந்தலைமுறையினர் உழைப்புச் சந்தையில் அதிகரித்துச் சென்றமை நெருக்கடிக்குக் காரணமாயிற்று. அதிகரித்த ஒவ்வொரு அலகு உழைப்பையும் (UNIT OF LABOUR) பயனுடைய வழியில் உள்ளீர்க்கும் வலுவுடையதாகப் பொருளாதாரம் இருக்கவில்லை. குட்டி முதலாளி வர்க்கத்தினர் தம் பிள்ளைகளின் கல்வியில் முதலீடு செய்தனர். தாம் செய்யும் முதலீடு உரிய பயனைத் தரக்கூடிய சிறந்த முதலீடு என நம்பினர். அவர்களுடைய பிள்ளைகள் படிப்பை முடித்ததும் ‘வேலையற்றோராக’ இருப்பதைக் கண்டதும் அவர்கள் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்தனர். படித்தவர்களின் வேலையின்மை ஏற்படுத்திய அதிருப்தியையும் மக்கள் விடுதலை முன்னணியின் எழுச்சிக்கான காரணங்களையும் ‘தேசப்பிரேமி’ (தேச பக்தன்) என்னும் மக்கள் விடுதலை முன்னணியின் பத்திரிகையில் வெளியான கட்டுரையொன்றிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் மேற்கோள் எடுத்துக் காட்டுகிறது.
“எண்ணற்ற பிரச்சினைகளினால் அல்லாடும் எமது பெற்றோர் வியர்வை சிந்தி உழைத்த பணத்தைக் கொண்டு உணவையும் உடுக்கத் துணியையும் கொள்வனவு செய்வதற்குப் பதிலாக எமது கல்விக்காகச் செலவிட்டார்கள். அவர்கள் இருப்பதற்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கலாம். எதையும் செய்யாமல் எமக்கு உதவினர். நாம் கண் தூங்காது நித்திரையின்றி வருந்திப் படித்தோம். பரீட்சைகளில் சித்தி எய்தினோம். நாம் பட்டங்களைப் பெற்றோம். ஊழல் மலிந்த நவ – காலனிய பொருளாதார முறையை ஒழித்து சோஷலிச சமூகம் ஒன்றை கட்டி எழுப்புவதற்குப் பதிலாக அந்தப் பொருளாதார முறை மீதே நம்பிக்கை கொண்டு செயற்பட்டோம். இதற்குரிய தண்டனை இன்று எமக்குக் கிடைத்திருக்கிறது. நாம் இப்போது தெருக்களில் அலைகிறோம். முதலாளிகளின் ஏளனத்துக்கும் சிரிப்புக்கும் உரியவர்களாக ஆகியுள்ளோம். (‘தேசப் பிரேமி’ 19070 ஆகஸ்ட் 8)
கல்வி முறைமையில் சமத்துவமின்மை
1967 ஆம் ஆண்டு பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களில் கிராமப்புற மாணவர்கள் மத்திய மகா வித்தியாலயங்கள், பௌத்த பிரிவேனக்கள் ஆகியவற்றில் கல்வி கற்றவர்களாகக் காணப்பட்டனர். இக்கல்வி நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் கலைப்பிரிவுப் பாடங்களைக் கற்றோரைப் பல்கலைக்கழங்களிற்கு அனுப்பி வைத்தன. சட்டம், விஞ்ஞானம், மருத்துவம், விவசாய விஞ்ஞானமும் கால்நடை மருத்துவமும், பொறியியல் ஆகிய துறைகளுக்கு மகா வித்தியாலயங்களிலும், மத்திய மகா வித்தியாலயங்களிலும் இருந்து தெரிவானோர் மிகக் குறைந்த எண்ணிக்கையினராகவே இருந்தனர். 1970 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகங்களிற்கு தெரிவானோர் பற்றிய புள்ளி விபரங்கள் கீழே காணப்படும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இப்புள்ளி விபரங்கள் கல்வி முறைமையில் நிலவிய சமத்துவமின்மையை எடுத்துக் காட்டுவன.

1965 இன் பின்னர் சமூக விஞ்ஞானங்களை (கலைப் பாடங்களை) படித்த பட்டதாரிகளிற்கு வேலை கிடைக்கவில்லை. அவர்கள் வேலையற்றோர் பட்டாளத்தில் சேர்ந்தனர். கல்வி வாய்ப்புக்கள் சமத்துவமற்ற முறையில் பகிரப்பட்டிருந்தமையால் கிராமப்புற மாணவர்கள் கலைப் பாடங்களைப் பல்கலைக்கழகங்களில் கற்பதும் பின்னர் வேலையில்லாதவர்களாக இருப்பதுமான நிலை தோன்றியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினதும், ஏனைய அரைப் பாட்டாளி வர்க்கம் மற்றும் பட்டாளி வர்க்கம் ஆகியவற்றினதும் இளைஞர்கள் வேலையின்மையால் அவதியுற்றனர்.
டட்லி சியர்ஸ் (DUDLEY SEERS) குழுவின் அறிக்கை வேலையின்மைப் பிரச்சனை அக்காலத்தில் முதன்மையும் முக்கியத்துவமுடையதாகவும் இருந்தமையைப் பின்வருமாறு விளக்கிக் கூறியது.

“வேலையின்மையால் இளைஞர்கள் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாயினர்; வேலையொன்றைப் பெறுவதில் நீண்ட காலம் வீணே கழிந்தது. தாம் பெற்ற கல்விக்கு ஏற்ற சமூக அந்தஸ்தைத் தரக்கூடியதும், பாதுகாப்பானதும், தகுந்த வருமானம் தருவதுமான தொழிலைப் பெறும் உரித்தை தாம் பெற்ற கல்வி தமக்கு வழங்கியுள்ளது என நம்பிய இளைஞர்கள் விரக்திக்குள்ளாயினர். நாம் மாதிரி மதிப்பீடு (SAMPLE SURVEY) ஒன்றை நிகழ்த்தினோம். அம்மதிப்பீட்டின் போது பட்டச்சான்றிதழ் பெற்றவர்களையும் க.பொ.த (சாதாரணம்) சான்றிதழ் பெற்றவர்களையும் நேர்காணல் செய்தோம். அப்போது கல்வியை முடித்த பின் உழைப்புச் சந்தை என்ற யதார்த்தத்தில் தாம் எதிர்கொண்ட இன்னல்களையும் வலி மிகுந்த அனுபவங்களையும் அவர்கள் எமக்கு எடுத்துக் கூறினர். மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலான காலம் தாம் வேலை தேடி அலைந்ததையும், சமூகத்திற்கு எவ்வித பயனும் அற்றவர்களாகத் தாம் இருந்ததையும் எடுத்துக் கூறினர். அவ்விதம் தாம் அலைவுற்ற காலம் தான் தம் ஆற்றல்களின் உச்ச காலம் என்றும், அது வாழ்க்கையின் அதி உச்சமான விளைதிறன் மிக்க (THE MOST PRODUCTIVE YEARS) காலமாக இருந்திருக்க வேண்டும் என்றும் கழிவிரக்கத்தோடு குறிப்பிட்டனர். தமது பெற்றோரையும் குடும்பத்தினரையும் நண்பர்களையும் எதிர்கொண்ட போது நாணிக் கூசும் நிலையில் இருந்ததாகவும் கூறினர். அவ் இளைஞர்களின் மனதில் பதிந்திருந்த கசப்புணர்வும் கோபமும் இயல்பானதாகவே தோன்றியது. அவர்களுக்கு வேலையொன்று கிடைத்த பின்பும் இக் கசப்புணர்வும் கோபமும் தொடரவும் கூடும்.”
“இளைஞர்கள் தமது அபிலாசைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் ஏற்பட்ட விரக்தி மக்கள் விடுதலை முன்னணியின் தோற்றத்திற்கான காரணங்களில் ஒன்றாகும். வேலையற்ற இளைஞர்கள் தமது பெற்றோருக்கு ஒரு சுமையாக அமைந்தனர். அவர்களது பெற்றோர்களால் அவ் இளைஞர்களைப் பராமரிக்க முடியவில்லை. இளைஞர்கள் கல்வித் தகைமைச் சான்றிதழ்களை தமது பிரதான சொத்தாகக் கருதினர். ஆனால் வேலையைப் பெறுவதற்கு அச்சான்றிதழ்கள் உதவாத போது ஏமாற்றமும் விரக்தியும் அடைந்தனர்.”
“சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கிளர்ச்சியாளர்களில் 80 வீதத்தினர் மகா வித்தியாலயங்கள் என்ற வகைப் பாடசாலைகளில் கல்வி கற்றவர்களாய் இருந்தனர். அவர்களில் 6.4 வீதத்தினர் மத்திய மகா வித்தியாலயங்களில் கற்றவர்கள். இவையும் முதல் வகையை ஒத்த பாடசாலைகளே. இவ்விரு வகைப் பாடசாலைகளும் கிராமத்து மாணவர்களின் உயர்தரப் பாடசாலைகளாக விளங்கின. இப்பாடசாலைகளில் வழங்கப்பட்ட கல்வி கிளர்ச்சிக்கான காரணிகளில் முக்கியமானது.”

கணநாத் ஒபய சேகர அவர்களின் மேற்படி கூற்று கிராமத்து இளைஞர்களின் கல்வியில் இவ்வகைப் பாடசாலைகள் பெற்ற முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. பிராந்தியங்களில் மத்திய மகா வித்தியாலயங்கள் மக்கள் விடுதலை முன்னணியின் நடவடிக்கைகளுக்கான முக்கிய களங்களாக அமைந்தன.
- அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயம்
- கேகாலை மத்திய மகா வித்தியாலயம்
- தொலங்கம மத்திய மகா வித்தியாலயம்
ஆகியவை மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய களங்களாக அமைந்த பாடசாலைகளுக்குச் சிறந்த உதாரணங்களாகும்.
சந்தேகத்தின் மீது கைது செய்யப்பட்ட கிளர்ச்சியாளர்கள் கல்வி கற்ற பாடசாலைகளின் வகையும், பல்கலைக்கழகங்களின் பெயர்களும் கீழே தரப்பட்டுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அக் கல்வி நிறுவனங்களில் கற்றோர் எண்ணிக்கையும் வீதாசாரமும் அட்டவணையில் தரப்பட்டும் உள்ளன.

குறைவிருத்திப் பொருளாதாரம்
இளைஞர் வேலையின்மையும் அவர்களின் விரக்தி நிலையும் பற்றி விரிவாகக் குறிப்பிட்டோம். உண்மையில் இவை யாவும் இலங்கையின் பொருளாதாரத்தின் குறை விருத்தியின் (UNDER DEVELOPED ECONOMY OF SRI LANKA) விளைவே ஆகும்.
1948 இல் பிரித்தானியர் இலங்கைக்கு அரசியல் சுதந்திரத்தை வழங்கிவிட்டு நீங்கிய போது விட்டுச் சென்ற பொருளாதார முறைமை குறைவிருத்தி முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு (UNDER DEVELOPED CAPITALIST ECONOMY) சிறந்தவோர் உதாரணமாகும். இலங்கைப் பொருளாதாரம் வெளியில் இருந்து வரும் ஆதிக்கத்தின் (EXTERNAL DOMINATION) காரணமாக வளர்ச்சி நோக்கி முன்னேற முடியாத நிலையில் இருந்தது. 1960 களில் இலங்கைப் பொருளாதாரத்தின் பின்னடைவும் குறை விருத்தியும் பின்வரும் மூன்று இயல்புகள் ஊடாக வெளிப்பட்டன.
- ஏற்றுமதி வருமானத்தின் வீழ்ச்சி
- அந்நியக் கடன் அதிகரித்தல்
- வேலையின்மைப் பிரச்சனை அதிகரித்தல்
இலங்கை ஏற்றுமதியால் கிடைத்த வருமானத்தைக் கொண்டு நுகர்வுக்கான தேவைகளை இறக்குமதி செய்து வந்தது. உலகச் சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான விலைகள் குறைந்து சென்றன. அதேவேளை இலங்கை இறக்குமதி செய்த நுகர்வுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து சென்றன. இதனால் இலங்கையின் வர்த்தக மாற்று விகிதம் (TERMS OF TRADE) பாதகமாக மாறியது.

இலங்கையின் 80 வீதமான ஏற்றுமதி வருமானத்தை உழைத்துத் தரும் தேயிலை, இறப்பர் என்ற இரண்டு ஏற்றுமதிப் பொருட்களின் விலைகள் 1960-1970 காலத்தில் முறையே 30 வீதமாகவும், 40 வீதமாகவும் வீழ்ச்சியுற்றன. ஆயினும் விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட இழப்பைச் சரி செய்யக் கூடிய வகையில் ஏற்றுமதிகளின் அளவு உயரவில்லை.
1961-1970 காலத்தில் வர்த்தக மாற்று விகிதம் (TERMS OF TRADE) 37 வீதம் வீழ்ச்சியுற்றது. இது ஆண்டுக்கு சராசரி 4 – 5 வீத வீழ்ச்சியாகும். இவ் வீழ்ச்சி காரணமாக இலங்கை தனது நுகர்வுத் தேவைகளை ஈடு செய்யக் கூடியதாக இறக்குமதிகளைச் செய்ய முடியவில்லை.
ஏற்றுமதி வருமானத்திற்கும் இறக்குமதிச் செலவுகளுக்குமிடையிலான இடைவெளி வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையாக (BUDGET DEFICIT) வெளிப்பட்டது. 1960 – 1970 காலத்தில் சில ஆண்டுகளுக்கான வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறைப் புள்ளி விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பல மடங்காக அதிகரித்துச் சென்ற வரவுசெலவுப் பற்றாக்குறையை நிரப்புவதற்கு இரு வழிமுறைகள் இருந்தன.
- வர்த்தக விகிதத்தை இலங்கைக்கு சாதகமாக மாற்றுதலும் அந்நிய நிதி உதவியைப் பெறுதல். இம் முதலாவது வழி சாத்தியப்படவில்லை.
- உலக வங்கியிடமும் சர்வதேச நாணய நிதியத்திடமும் (IMF) கடன் பெறுதல். 1960 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட கால நிதி அமைச்சர்கள் இந்த இரண்டாவது வழியையே பின்பற்றினார்கள். வெளிநாடுகளிடம் இருந்தும் சர்வதேச நிறுவனங்களிடமிருந்தும் கடன்களும் நிதி உதவியும் தொடர்ந்து பெறப்பட்டது.
இதனால் இலங்கையின் பொருளாதாரம் மேற்கு நாடுகளில் தங்கியிருக்கும் பொருளாதாரமாக ஆகியது. இதன் பொருளாதார விளைவுகளில் சில பின்வருமாறு:
- 1968 இல் அரிசி மானியம் குறைக்கப்பட்டது.
- அவ்வாண்டில் இலங்கை ரூபா நாணயத்தின் பெறுமதி குறைக்கப்பட்டது.
- நாணயப் பெறுமதி இறக்கத்தின் விளைவாக நுகர்வுப் பொருட்களின் விலைகள் அதிகரித்தன.
- வாழ்க்கைச் செலவுச் சுட்டெண் (COST OF LIVING INDEX) 1960 இல் 103.5 ஆகவிருந்து 1965 இல் 111.5 ஆகவும் 1970 இல் 130.5 ஆகவும் உயர்ந்தது.
- வேலையின்மையும், குறைவேலையின்மையும் அதிகரித்தன.
- தொழிலாளர் வர்க்கத்தினதும், குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினதும் வாழ்க்கைத் தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம் எதிர்வினையாற்றினர்.
1966 இல் தோட்டத் தொழிலாளர்கள் பல வேலை நிறுத்தங்களைச் செய்து எதிர்ப்பை வெளியிட்டனர். 1967 இல் தனியார் துறை தொழிற்சங்கங்களும் 1968 இல் அரசாங்கத் திணைக்கள தொழிற்சங்கங்களும் 1969 இல் அரசாங்க கூட்டுத்தாபனத் தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டன.

குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் இளைய தலைமுறை பொருளாதார நெருக்கடியின் அழுத்தத்தை உணர்ந்தது. தமது முன்னைய தலைமுறை அனுபவித்த வாழ்க்கை வசதிகள் தமக்கு இல்லாமல் போவதை அவர்கள் கண்கூடாகக் கண்டனர்; அனுபவத்தால் உணர்ந்தனர். புதிய முறைமை குட்டி முதலாளித்துவத்தின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடியதாய் இருக்கவில்லை. அரசியல் எதிர்ப்பை தொழிலாளர் வர்க்கம் முன்னெடுக்க தவறிய பின்னணியில் மக்கள் விடுதலை இயக்கம் எழுச்சி பெற்றது.
குறிப்பு : கலாநிதி காமினி கீரவல்லவின் நீண்ட கட்டுரையின் 1 – 29 பக்கங்களில் கூறப்பட்ட கருத்துகள் பகுதி 1,2,3 ஆகியவற்றில் தொகுத்துக் கூறப்பட்டன. அடுத்து வரும் பகுதி 4 மரபு வழி இடதுசாரிக் கட்சிகளின் அரசியலில் இருந்து மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் எவ்விதம் வேறுபட்டதாய் இருந்தது என்பதையும் 1970 ஆம் ஆண்டில் இடதுசாரிகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து உருவாக்கிய கூட்டணி அரசை, மக்கள் விடுதலை முன்னணி வன்முறைக் கிளர்ச்சி மூலம் கவிழ்ப்பதற்கும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவும் முயன்றதற்கான காரணங்களை விளக்குவதாகவும் அமையவுள்ளது.
தொடரும்.