பண்டைத் தமிழர் வழிபாட்டு மரபில் கண்ணகி
Arts
21 நிமிட வாசிப்பு

பண்டைத் தமிழர் வழிபாட்டு மரபில் கண்ணகி

July 24, 2024 | Ezhuna

ஈழநாடானது தமிழகத்திலிருந்து கடலால் பிரிக்கப்பட்ட நாடாக அமைகின்ற போதும், பண்டைக்காலந்தொட்டே தமிழர்களின் மரபுத் தொடர்ச்சியான பண்பாட்டுக் கூறுபாடுகளை உடைய மண்டலமாக காணப்பட்டு வருகிறது. தொல்காப்பியம் சுட்டும் பல இலக்கண விதிகள் இன்று தமிழகத்தில் வழக்கில் இல்லாத போதும் ஈழத்தில் அவை வழங்கப்பட்டு வருகின்றன. பண்பாட்டு வாழ்வியல்களின் அடிப்படையிலும் பண்டைத் தமிழரின் மரபுகள் பலவற்றை ஈழத்தில் காணவியலும். இந்நிலையின் தொடர்ச்சியாகவே பண்டைத் தமிழரின் சமயப் பண்பாட்டு மரபுகளையும் கருதலாம். அந்த வகையில், வடக்கே பருத்தித்துறைமுதல் தெற்கே தேவேந்திரமுனைவரை உள்ள தமிழ் மக்களிடமும், சிங்கள மக்களிடமும் காணப்படும் வழிபாட்டு முறைகளில் பண்டைத் தமிழ் நூல்களில் காணப்படும் வழிபாட்டு மரபுகளை ஆய்வுப் பரப்பாகக் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும், இலக்கணங்களிலும் காணப்படும் வழிபாட்டு மரபுகளில் இலங்கையில் இன்றளவும் வழங்கி வருகின்ற மரபுத் தொடர்ச்சியினை ஆராய்வதே ‘இலங்கையில் பண்டைத் தமிழரின் வழிபாட்டு மரபுகள்‘ எனும் இத் தொடரின் நோக்கமாகும். இத் தொடர், இலங்கையில் பண்டைத் தமிழரின் வழிபாட்டு மரபுகள் இன்றளவும் தொடர்கின்றன என்னும் கருதுகோளினை அடையும். 

பண்டைத் தமிழர் பல வகைப்பட்ட வழிபாட்டு மரபுகளை உடையவர்களாக விளங்கினர். இவ்வழிபாட்டு முறைகள் திணைசார்ந்த நிலையிலும் தொழில், சமூக வாழ்வியல் சார்ந்த நிலைகளிலும் அமைந்திருந்தன. அவ்வகையான வழிபாட்டு முறைமைகளிற் சில இன்று வழக்கருகிவிட்டன. சான்றுகளாக பல தேவன் வழிபாட்டினையும் வருணன் வழிபாட்டினையும் குறிப்பிடலாம். சங்க காலத்தில் பெருவழக்காக விளங்கிய இவ்வழிபாட்டு முறைகள் படிப்படியாகக் குறைந்து இன்று வழக்கற்றுப் போய்விட்டமை காணக்கூடியதாகின்றது. அவ்வாறில்லாமல் சங்ககாலம் தொட்டு இன்றளவும் தொடர்ந்து வரக்கூடிய வழிபாட்டு முறைகள் பல உள்ளன. அவற்றுள் தனித்தன்மையுடன் இன்றளவும் வழங்கி வரும் வழிபாட்டு முறையாக கண்ணகி வழிபாட்டினைக் குறிப்பிடலாம். இவ்வழிபாட்டு முறையின் மெய்யியற் கட்டமைப்பானது இன்றளவும் தொடர்வதினைக் காணக்கூடியதாக உள்ளது. கண்ணகி வழிபாட்டின் மெய்யியற் கட்டமைப்பினைக் காணுதலுக்கு முன் அதன் மரபுத் தொடர்ச்சியினைக் காணலாம். துளுவ நாட்டினை இணைத்த பண்டைத் தமிழகத்தில் பெரு வழக்காயிருந்த கண்ணகி வழிபாடானது பல்வேறு திரிபுகளைப் பெற்ற போதும் இன்றளவும் அதன் வடிவ மாறுதல்களுடன் நிலைப்புத் தன்மை பெற்றுள்ளதெனலாம். பழஞ்சேர நாடான இன்றைய கேரளத்தில் கண்ணகி வழிபாடானது பண்டைய மரபுகளுடன் இணைந்து வழங்கி வருதலினை காணக் கூடியதாகின்றது. ஆனால் முழுமையான கண்ணகி வழிபாட்டு மரபினை இன்றளவும் ஈழத்திற் காணலாம். சிலப்பதிகார காலத்திற்கு முற்பட்டதான கண்ணகி வழிபாட்டு மரபினை அறிதலுக்கு சிலப்பதிகாரத்திற்கு முற்பட்ட சான்றுகள் ஏதும் கிட்டவில்லை. ஆதலால் சிலப்பதிகாரம் தொட்டு கண்ணகி வழிபாடானது எவ்வகையில் பரவலாக்கம் பெற்று நிலைத்தது என்பதினைக் காணலாம்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி அறிமுகம்

சிலப்பதிகாரத்தில் கண்ணகியை அறிமுகம் செய்யும் நிகழ்வு பல இடங்களில் நிகழக் காணலாம்.

  1. இளங்கோவடிகள் கண்ணகியை அறிமுகம் செய்தல்
  2. கோவலன் கண்ணகியை அறிமுகம் செய்தல் 
  3. தெய்வமேற்றப்பட்ட சாலினி கண்ணகியை அறிமுகம் செய்தல்
  4. கவுத்தி கண்ணகியை அறிமுகம் செய்தல்
  5. வாயிலோன் கண்ணகியை அறிமுகம் செய்தல்
  6. கண்ணகி தன்னைப் பாண்டிய மன்னனுக்கு அறிமுகம் செய்தல்
  7. குன்றக் குறவர் கண்ணகியை செங்குட்டுவனுக்கு அறிமுகம் செய்தல்
  8. கண்ணகி தெய்வ நிலையில் தன்னை அறிமுகம் செய்தல்

என்பனவாக கண்ணகி தொடர்பான அறிமுகங்களினை வகைமை செய்து கொள்ளலாம்.

இளங்கோவடிகள் கண்ணகியை அறிமுகம் செய்தல்

நாடகப் பாங்கில் அமைக்கப் பெற்றதான சிலப்பதிகாரத்தில் கதை மாந்தர்களை அறிமுகம் செய்தல் என்பது இன்றியமையாத நிகழ்வாகின்றது. அவ்வகையில் இளங்கோவடிகளாலேயே முதலில் கண்ணகி அறிமுகம் செய்யப்பட்டுகின்றாள். இதனை,

“நாக நீ ணகரொடு நாகநா பதனொடு
போகம், நீள் புகழ் மன்னும் புகார்-நகர் அது-தன்னில்
மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குலக் கொம்பர்;
ஈகை வான் கொடி அன்னாள்; ஈர்-ஆறு ஆண்டு அகவையாள்;
அவளும்-தான்,
போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும்,
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்,
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக்
காதலாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ.”

என்னும் அடிகளால் அறியலாம். காப்பியத் தலைவி கண்ணகி, காப்பியத் தலைவன் கோவலன் என்ற நிலையில், உலகக் காப்பிய மரபில் தலைவனை முதலில் அறிமுகம் செய்தலே மரபான நிலையில், இளங்கோவடிகள் அதற்கு முரண்பட்டு காப்பியத் தலைவியை முதலில் அறிமுகம் செய்கின்றார். அவ்வாறாயின் அதற்கான காரணங்களாக பலவற்றினைக் குறிப்பிடலாம் அவற்றையெல்லாம் சிலப்பதிகாரக் காப்பியத்துள்ளேயே காணலாம்.

கண்ணகியை முதலில் அறிமுகம் செய்து கோவலனைப் பிறகு அறிமுகம் செய்தமைக்கான காரணமாக அரும்பதவுரையாசிரியர் ‘இவளை முற்கூறிற்று கதைக்கு நாயகியாதலின்’ எனக் கூறுதலின் வழி, சிலப்பதிகாரம் என்னும் காப்பியக் கதை நிகழ்வினுக்கு நாயகியாக கண்ணகியே விளங்குகின்றாள் எனலாம். அதன் பொருட்டே கண்ணகியை முற்படக்கூறி கோவலனை பிற்பட வைத்து இளங்கோவடிகள் கூறினார் எனலாம். இனி கண்ணகியின் நலன்களாக  இளங்கோவடிகள் கூறுமாற்றைக் காணலாம்.

  1. கண்ணகி பிறந்த புகார் நகரம் சிறப்பித்துக் கூறப்படுகிறது. சுவர்க்கத்திலும் போகத்தில் புகழ்பெற்றது நாகருலகம் ஆதலால் நாகலோகத்துடன் போகத்தில் ஒப்பீடுடையதாக புகார் சிறப்பிக்கப்படுகின்றமையினைக் காணக் கூடியதாகின்றது.
  2. புகார் நகரில் வாழும் மழைபோல் வாரி வழங்கும் கொடைத்தன்மையுடைய கைகளைப் பெற்றவனாகிய மாநாய்க்கனுடைய குடியில் அப்பண்புகளோடு தோன்றியவள் கண்ணகி.
  3. தாமரை மலரில் தோன்றிய திருமகளையொத்த வடிவினையுடையவள்.
  4. தீதில்லாத அருந்ததியினுடைய புகழுக்குரிய கற்பினையொக்கும் கண்ணகியாளின் கற்பு.
  5. உலகிலுள்ள புகழுக்குரிய பெண்கள் யாவரும் போற்றுகின்றனவான பெருங் குணங்கள் யாவற்றினையும் விரும்பக்கூடியவள் கண்ணகி.

என்பனவாக பன்னிரண்டு வகையான கண்ணகி குறித்த அறிமுகத்தைச் செய்கின்றார் இளங்கோவடிகள். இவ்வறிமுகப் பகுதியிலேயே வழிபாட்டுக்குரிய தெய்வத்தன்மை பெற்றவளாகக் கண்ணகி போற்றப்படுவதைக் காணலாம். கண்ணகியின் பதியாகிய புகார் நகரம் பஞ்சம், வறுமை, கொள்ளைநோய், பகையச்சம், இயற்கை இடர்பாடுகள் என்பனானவை அற்றதாகவும், தேவருலகினுக்கும் அதனினும் மேலான நாகருலகிற்கும் இணையான போகத் தன்மையுடையது என்பதாகவும் இருக்கின்றது. மக்கள் வாழ்வினுக்குரிய போகத்தினை தரும் தெய்வமாக கண்ணகி போற்றப்படுவது மண்வழி ஏற்றிக் கூறப்பட்டுள்ளமையினை, மழை போல் வாரிவழங்கும் கைகளையுடைய கொடைச் சிறப்பினுக்குரிய மாநாய்க்கன்குடி வழிவந்த பண்பாகக் கூறப்பட்டதெனலாம். மலரினிற் தோன்றுதல் என்பது தவநிலையின் உச்சத்தினையும் தூய ஒழுக்கச் செயற்பாடுகளையும் குறிப்பதாக ஆசிவகம் முதலான மெய்யியல் மரபுகள் கருதுகின்றமையினை காணலாம். இதனடி வந்ததாகவே கண்ணகியார் கோவிலெங்கும் காணப்படும் தாமரைக் குளத்தினைக் குறிப்பிடலாம்.

தீதில்லாத தன்மை என்பதனை அடியார்க்கு நல்லார் ‘தீது – பிற நெஞ்சு புகுதல்’ என விளக்கிக் கூறுவார். அதன் பொருள், தமது செயற்பாடுகளால் பிற ஆடவர் கவனத்தை கவராத தன்மையுடையவள் என்பதுவாகும். 

“தெய்வம் தொழல் கெழுதற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”

மேற்கண்டவாறான அறிமுக மொழிகளில் அறிவனவாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

  1. இளங்கோவடிகளின் முதல் அறிமுகத்திலேயே கண்ணகி தெய்வத்தன்மை பொருந்திய நிலையில் காட்டப்படுதலினைக் காணலாம்.
  2. கண்ணகி வரந்தரு தெய்வம் என்னும் நிலையினை நோக்கிச் செல்வதற்கான கூறுபாடுகளைக் கொண்டிருந்ததைக் காணலாம்.
  3. பின்னர் வரக்கூடிய அறிமுகங்கள் எல்லாம் கண்ணகியை தெய்வ நிலைக்கு இட்டுச் செல்லுவதற்குத் தொடக்கமான அறிமுகமாக இதனைக் கருதலாம்.

என்பனவாக செய்திகளைக் கண்ணகியை இளங்கோவடிகள் அறிமுகம் செய்வதை இம்முதல் அறிமுகத்திற் காணலாம்.

கண்ணகியை கோவலன் அறிமுகப்படுத்தல்

கண்ணகியின் எழில் நலனைப் பாராட்டுதல் என்பதன் வழி கோவலன் கண்ணகியை அறிமுகப்படுத்துதல் என்னும் தன்மையினைக் காணலாம். இதனை நலம் பாராட்டலென்னும் பொருள் பொதிந்த உரையென அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றார். நாடக வழக்கில் நலம் பாராட்டுதல் என்பது ஒருவரது சிறப்பியல்புகளை அறியப்படுத்தலுக்கான உத்தியாகவே அமையும். அவ்வகையிலேயே கோவலனின் ’குறியாக் கட்டுரை’ என்னும் இந்த நலம் பாராட்டுதல் பகுதியும் அமைந்துள்ளமையினைக் காணலாம்.

“குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்,
உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின்,
பெரியோன் தருக – திரு நுதல் ஆக என:
அடையார் முனை அகத்து அமர் மேம்படுநர்க்குப்
படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்,
உருவிலாளன் ஒரு பெரும் கருப்பு வில்

இரு கரும் புருவம் ஆக ஈக்க:
மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்,
தேவர் கோமான் தெய்வக் காவல் –
படை நினக்கு அளிக்க – அதன் இடை நினக்கு இடை என:
அறுமுக ஒருவன் ஓர் பெறும் முறை இன்றியும்,
இறும் முறை காணும் இயல்பினின் அன்றே –
அம் சுடர் நெடு வேல் ஒன்றும் நின் முகத்துச்
செங் கடை மழைக் கண் இரண்டா ஈத்தது?

மா இரும் பீலி, மணி நிற மஞ்ஞை, நின்
சாயற்கு இடைந்து, தண் கான் அடையவும்;
அன்னம், நல் – நுதல்! மெல் நடைக்கு அழிந்து,
நல் நீர்ப் பண்ணை நளி மலர்ச் செறியவும்;
அளிய – தாமே, சிறு பசுங் கிளியே -”

மேற்கண்டதான அடிகளின் வழி பின்வருவனவான செய்திகளை அறியலாம்.

  1. கண்ணகி திருமகளுடன் ஒப்புடமையவளாக இவ்வடிகளிற் கூறப்படுவதைக் காணலாம். இதற்கு முற்பட்ட அடிகளிலும் ‘தீராக் காதலிற் றிருமுக நோக்கீர்’ கோவலன் உறுமோர் குறியாக் கட்டுரை’ என்பதற்கு ‘கோவலன் திருமகளைப் போல் வாளுடைய முகத்தை நோக்கி’ என அடியார்க்கு நல்லாரும் உரைக்க காணலாம். இதன் வழி கண்ணகி திருமகளோடு தெய்வ நிலையில் ஒப்புமையுடையோளாகக் கூறப்பட்டுள்ளமையைக் காணலாம்.
  2. பிறை, திரு, அமுதம், வச்சிரம் என்பன அவற்றிற்குரிய இறையருளால் கண்ணகியை திருமகளோடு ஒத்த இறைத் தன்மையுடையவள் ஆக்குகிறது. அத்தோடு பிறை – சிவபெருமானின் முடியைச் சூடுவது, திரு – திருமாலின் நெஞ்சில் உறைவது, அமுதம் – சாவா மூவாப் பேராற்றலை வழங்கக் கூடியது. வச்சிரம் – இந்திரனுக்கு வலிமையை வழங்குவது என்பனவற்றால் கண்ணகி ஆற்றல் மிகுந்த பெருமாட்டியாகக் கோவலனால் கருதப்படுகின்றமையினை உணரலாம்.
  3. மாசறு பொன், வலம்புரிமுத்து, காசறுவிரை, கரும்பு, தேன் என்பனவும் உயர்வு நோக்கி கூறப்பட்ட தெய்வ நிலையில் போற்றப்படும் தன்மை வாய்த்தனவாக அமைவதினைக் காணலாம்.

மேற்கண்டவாறாக கண்ணகியோடு ஒப்புமை காட்டிக் கூறப்பட்டன யாவும் மனிதர்களால் உருவாக்கம் பெறாமல் இயற்கை ஆற்றலோடு கிளர்ந்த பொருட்களாம். அவ்வாறன்ன பொருட்களைப் போல் கண்ணகியும் தன்திறத்தால் தெய்வ நிலை ஆற்றலைப் பெற்றவள் என்பனவாக மேற்கண்ட நலம் பாராட்டல் அமைகிறது.

கொற்றவையின் அருள்வரப் பெற்ற சாலினி கண்ணகியை அறிமுகம் செய்தல்

கோவலனும் கண்ணகியம் கவுந்தியடிகளோடு பாண்டிய நாட்டின் வேட்டுவர்கள்  வாழும் நிலப்பகுதிக்குள் செல்லுகின்ற வேளையில் எயினர் குடியிருப்பில் ஓய்வு மேற்கொண்டிருந்த சமயம் அங்குள்ள எயினர்கள் வெட்சிப் போரில் தங்களது மறவர்கள் அயற்புலத்து ஆநிரைகளைக்  கவர்ந்து வருதல் வேண்டும்; தங்களது முன்றிலில் செல்வம் குவிய வேண்டும் என்பனவான வளங்களைப் பெறுதற் பொருட்டு கொற்றவையை வழிபடலாயினர். கொற்றவை வழிபாட்டிற்காக சாலினி என்னும் தங்கள் குல இளம் பெண்ணிற்கு கொற்றவைக்குரிய சோடணைகள் எல்லாம் செய்து முன்னிலைப்பரவலில் பாடல்களை இசைத்தும் பாடியும் வழிபடலாயினர். இக்காட்சியினைக் கோவலனின் பின்னின்று கண்ணகியும் கண்டு வரலானாள். கொற்றவையின் அருள்வலுப் பெற்ற சாலினியானவள் கண்ணகியை நோக்கி அருள்வாக்கு கூறத் தொடங்கினாளர்.

“இவளோ, கொங்கச் செல்வி; குடமலை ஆட்டி;
தென் தமிழ்ப் பாவை; செய்த தவக் கொழுந்து;
ஒரு மா மணி’ ஆய், உலகிற்கு ஓங்கிய
திரு மா மணி’ எனத் தெய்வம் உற்று உரைப்ப
திருமாமனியெனத் தெய்வமும் நுரைப்ப”
(சிலம்பு 12. 45 – 50)

என்பனவாக அத் தெய்வவாக்கு அமைவதினைக் காணலாம். மேற்கண்டவாறாக சாலினி கண்ணகியை அறிமுகம் செய்யும் அடிகளை ஆழ்ந்து நோக்கும் போது நமக்குப் பல  மெய்மைகள் விளங்கும்:

  1. கொங்கு நாட்டில் கண்ணகி வழிபாடானது ‘செல்வி’, ‘செல்லியம்மன்’ (செல்வி அம்மை) வழிபாடாகவும் விளங்கியதெனலாம். கோங்கிளங் கோசர்கள் இவ்வழிபாட்டினை சிறப்புடன் நிகழ்த்தி வந்தமையினை சிலப்பதிகார உரைபெறு கட்டுரையில் அறியலாம். இன்றளவும் கொங்கு நாட்டில் நிகழும் செல்லியம்மன் முதலான பெண் தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியான நிகழ்வைக் காணலாம்.
  2. பழஞ் சேர நாட்டில் பெரும் வழிபாட்டு மரபாக விளங்கியது கண்ணகி வழிபாடாகும். அதன் பொருட்டே கண்ணகியைக் குடமலையாட்டியென அறிமுகம் செய்தாள் எனலாம். ‘ஆட்டி’ என்னும் சொல் ஆள்பவள் என்பதாகப் பொருள் தரும். திருவினை ஆள்பவள் திருவாட்டி என அழைக்கப்படுகின்றமையைப் போல், சேர நாட்டினை ஆளும் தெய்வமாக கண்ணகி விளங்கியபடியால், குடமலையாட்டி என அழைக்கப் பெற்றாள். இன்றைய கேரளத்தில் உள்ள தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களான கொடுங்களூர் பகவதியம்மன் கோயில், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் முதலான தலங்கள் கண்ணகி கோயிலே என்பதினை அறியலாம்.
  3. ஈழத்திலும் பாண்டிய நாட்டிலும் கண்ணகி வழிபாடானது சிறந்து விளங்கியது. அதனடிப்படையிலேயே ‘தென்தமிழ்ப்பாவை’ என்பதாக கண்ணகி அறிமுகம் செய்யப்பட்டாள் எனலாம். ‘பாவை’ என்னும் சொல் எதிரிகளை அழிக்கின்ற வரந்தரும் தெய்வத்தினைக் குறிப்பதினை சங்க கால இலக்கியங்களிற் காணலாம். கொல்லிப் பாவை என்னும் வழக்காற்றின் வழியும் இதனை அறியலாம். ஈழத்தில் இன்றளவும் கண்ணகி வரந்தரும் தெய்வமாகவும் குற்றங்களை அழிக்கும் தெய்வமாகவும் விளங்குகின்றமையினைக் காணலாம். தென்தமிழ் மக்களால் வரந்தரு தெய்வமாக கண்ணகி வழிபாடு செய்யப்பட்டமையால் ‘தென்தமிழ்ப்பாவை’ என அறிமுகம் செய்யப்பட்டாள் எனலாம்.
  4. ‘ஒரு மாமணியாய் உலகிற்கோங்கிய திருமாமணி’ என்பதன் வழி உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் கண்ணகி வழிபாடானது பரவலாக்கம் பெற்றிருந்தமையினைக் காணலாம். இவ்வழிபாட்டு மரபானது சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலத்திலும் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தும் வழங்கி வந்த பெரு வழிபாட்டு மரபாக தமிழ் நாடுகளிலும் அதற்கப்பாலுள்ள நாடுகளிலும் வழங்கியிருந்தமையை இவ் வரிகளின் வழி அறியலாம்.
  5. தாம் இயற்றும் இலக்கிய காலத்திற்கு முன்னரே பல நூற்றாண்டுண்டுகளாக நிகழ்ந்து வரும் நிகழ்வினை தாம் இயற்றும் இலக்கிய காலத்துக்குப் பின் நிகழ்வதாகக் காட்டுவதும் ஓர் இலக்கிய உத்தியேயாகும். கதையின் நிகழ்வுக் காலத்திலேயே அவ்விலக்கியங்கள் நின்றுவிடுகின்ற படியால் கதையின் முடிவுகளை பின் நிகழ்ந்ததாகக் காட்டுவது இலக்கிய மரபிற்கும் நாடக மரபிற்கும் உரியதாயிற்று. அவ்வகையில் சிலப்பதிகாரம் இயற்றப்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கண்ணகி வழிபாடானது தமிழுலகெங்கும் பரவலாக்கம் பெற்றிருந்தமையினைக் காணலாம்.
  6. ‘அன்னல்’ என்ற சொல் தவநிலையில் உள்ளோரையும், தலைமை நிலையுடையோரையும், இறை நிலையை அடைந்தோரையும் குறிக்கக் கூடியதாகும். அதன் பொருட்டே அடியார்க்கு நல்லாரும் இவ்வேட்டுவ வரியின் அடிகளுக்கு விளக்கம் கொடுக்கும் போது ‘கண்ணகி அன்னலாதலை’ எனக் குறிப்பிடுகின்றார். இளங்கோவடிகள் ஆசிவகத் தவத்துறவிகளைக் குறிப்பிடும் போது ‘அன்னலாம்’ பெருந்தவத்து ஆசீர்வகர்கள் எனக் குறிப்பிடுதலைக் காணலாம். இதன் வழி ‘அன்னல்’ என்னும் சொல்லாட்சி தமிழ் மரபில் தெய்வ நிலையில் உள்ளோரைக் குறிக்கும் பொருண்மையில் ஆளப்பட்டுள்ளமையினைக் காணலாம்.

மேற்கண்டவாறாக சாலினியின் அறிமுகக் கூற்றால் கண்ணகி தெய்வ நிலையைப் பெற்று வழிபடப்பட்டு வந்த மரபினைக் காணலாம்.

பண்டைத் தமிழ்நாடுகளில் பல்வகைப்பட்ட தாய்த் தெய்வ வழிபாட்டு மரபுகள் சிறப்புற்றிருந்தன. அவ்வகையான மரபுகளிற் தலையாயதாக கண்ணகி வழிபாடானது விளங்கிற்றெனலாம். ஒவ்வொரு வழிபாட்டு மரபும் தனித்தன்மையுடன் விளங்கியதெனலாம். இவ்வழிபாட்டு மரபுகளை வாயிலோன் கண்ணகியை அறிமுகம் செய்யும் கூற்றில் வைத்துக் கூறியுள்ளமையினைப் பின்வருமாறு காணலாம்.

“அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப்
பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி,
வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை, அல்லள்;
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு, சூர் உடைக்
கானகம் உகந்த காளி, தாருகன்
பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்;
செற்றனள் போலும்; செயிர்த்தனள் போலும்;
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே என”

என்ற அடிகளிற் பண்டைத் தமிழர்களின் தாய்த் தெய்வ வழிபாட்டு மரபுகள் விளக்கிக் கூறப்பட்டுள்ளமையினைக் காணலாம்.

  1. மேற்கண்ட அடிகளில் கொற்றவை, ஏழு மங்கையரில் ஒருவரான பிடாரி, கானகம் உகந்த காளி என்பனவாக மூன்று தாய்த் தெய்வ வழிபாட்டு மரபுகள் சுட்டப்படுகின்றமையினைக் காணலாம். கண்ணகி வழிபாட்டிலிருந்து மாறுபட்ட வழிபாட்டு முறைகளாக இவை விளங்கினபடியாலேயே தனித்துக் கூறப்பட்டது எனலாம்.
  2. போரில் வெற்றியினை வழங்கக்கூடிய அரச தெய்வமாக கொற்றவை வழிபாடானது பண்டு தொட்டு தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இவ்வழிபாடானது பாலைத்திணைக்கு உரியது. ‘பொருது களத்து’ இரு வேந்தரில் வெற்றி பெற்றோருக்கு உரியதாகின்றது.
  3. கன்னித் தெய்வ வழிபாடு, உலகெங்கிலும் சிறந்து விளங்கிய வேளாண் உற்பத்தி நிலையில் வளர்ச்சியடைந்த மரபாகும். ஏழு கன்னியரை வழிபடுதல் என்பது பண்டைத்தமிழர் மரபாகும். அவ்வெழுவரில் எவர்க்கும் அடங்காத சினத்தினையுடையவள் பிடாரி. ஆதலாலேயே கண்ணகியோடு ஒப்பிடப்பட்டாள். ஏழு கன்னியர் வழிபாடானது தமிழர்களால் பண்டு தொட்டு கடைப்பிடிக்கப்படும் வழிபாட்டு மரபாகின்றது. இவ்வழிபாட்டினை ஈழத்தில் ஏழு மங்கையர் வழிபாடாக இன்றளவும் கடைபிடிக்கின்றனர்.

ஆடலிற் சிறந்த காளி வழிபாடானது எல்லையைக் காக்கும் வழிபாடாக, நகரின் எல்லையிலுள்ள காவற் தெய்வத்தினை வழிபடும் வழிபாட்டு மரபினையுடையதாக விளங்குகின்றதெனலாம். இதன் தொடர்ச்சியினை இன்றும் காணலாம்.  தமிழ் நாட்டின் பழமையான நகரங்களில் ஊரின் வடபால் எல்லையில் காளிகோயில் அமைந்திருக்கக் காணலாம். ஆணிற்கு இணையான தெய்வமாகவும், ஆணினும் உயர்ந்த தெய்வமாகவும் காளியானவள் விளங்கினபடியால் ‘இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு, தாருகன் பேரூரம் இழித்த பெண்’ என்பனவாறாக காளி குறிப்பிடப்படுகின்றாள். இவ்வழிபாட்டு மரபும் கொற்றவை வழிபாட்டு மரபிலிருந்து மாறுபட்டதாகும்.

மேற்கண்டதான மூன்று வழிபாட்டு மரபுகளும் கண்ணகி வழிபாட்டு மரபிலிருந்து மாறுபட்டனவாயினும் இவற்றினுக்கிடையே பல ஒப்புடைப் பண்புகளும் காணப்படுகின்றன. இவ்வொப்புமைப் பண்புகளைக் கொண்டே பிற்காலத்தார் இவ்வழிபாட்டு மரபுகள் யாவும் ஒன்றே என்பதாகக் கொண்டிருக்கக் காணலாம். ஆயினும் அவை ஏற்புடையன அல்ல என்பதற்குச் சிலப்பதிகாரமே சான்றாகின்றது ஆயினும் கண்ணகியம்மன் வழிபாடு நிகழும் ஊர்களிலெல்லாம் கொற்றவைக்கும், பிடாரிக்கும், காளிக்கும் கோயில் அமைந்திருப்பதை இன்றும் காணலாம். சேர நாட்டுக் கோயில்களில் இன்று காளி வழிபாட்டுடன் கண்ணகி வழிபாட்டினை இணைத்துக் காணும் வழமையினைக் காணலாம்.

குன்றக் குறவர் கண்ணகியை அறிமுகம் செய்தல்

கண்ணகி மதுரையை எரியூட்டி அந்நகரின் மேற்குவாயில் வழியாக வெளியேறி பதினான்கு நாட்கள் நடந்து சேரநாட்டின் மலைப்பகுதியினை அடைந்து அம்மலை மேலிருந்த வேங்கை மரத்தின் நிழலில் இருந்தாள். அப்பொழுது வியப்பினுக்குரியதாக வானுலகத்திலிருந்து கோவலனோடு வந்த தேவர்கள் கண்ணகியைத் தங்களது விமானத்தில் ஏற்றிச் சென்றனர். இக்காட்சியைக் கண்ட குன்றக் குறவர்கள் வியந்து கண்ணகியை வழிபட்டு வந்தனர். பின்னர் மலைவளம் காணவந்த சேர மன்னனிடம் இக்காட்சியினைக் கூறிக் கண்ணகியை அறிமுகம் செய்தனர்.

“குருவியோப்பியுங் கிளிகடிந்துங் குன்றத்துச் சென்று வைகி
அருவி………………………………….
பெருமலை துஞ்சாது வளஞ்சரக் கெனவே.”
(சிலம்பு. குன்றக்குரவை. 1-22)

தொல்காப்பியப் பொருளதிகார வெட்சித்திணையில் அதன் துறைகளாகக் கூறப்படுவன :

  1. காட்சி
  2. கால்கோல்
  3. நீர்ப்படை
  4. நடுகல்
  5. வாழ்த்து

என்பனவாகும். இவை போரிலே வீரச் சாவினைத் தழுவிய மறவர்களுக்கு அவர்தம் மக்களாற் செய்யப்படுவனவாகும். தானை மறவர்களின் மறச்செயலால் அவர்களுக்கு வழங்கப்படும் இவ் உயரிய தெய்வ நிலையினை கண்ணகி பெற்றமையினை மேற்கண்டவாறாக வஞ்சிக் காண்டத்தின் பிரிவுகளின் வழி அறியலாம். வஞ்சிக் காண்டத்தில்தான் கண்ணகி தெய்வமாக தன்னை அறிமுகம் செய்யும் வகையில் வரந்தரு காதை என்னும் பிரிவு அமைவதினைக் காணலாம்.

“தென்னவன் நீதிலன் றேவர்கோன் றன்கோயில்” என்று தம்மை அறிமுகம் செய்தலின் வழி கண்ணகி தெய்வ நிலையில் தம்மைப் பாண்டியனின் மகளாகக் கூறுகின்றமையினைக் காணலாம். இவ் அடிகளுக்கு உரைகூறும் அரும்பத உரையாசிரியர் ‘முன் மானிட யாக்கையிற் கொண்ட சிவப்பாறித் தெய்வயாக்கை பெறுதற்குக் காரணமாயினாள்’ என்பதை, “நான் அவன் மகளென்றாள், வென்வேலவன் குன்று – செங்கோடு நான்குன்றில் வந்து விளையாடுவேன்; நீங்களும் அங்கு வாருங்கோளென்றாள்” எனக் கூறுதலின் வழி, கண்ணகி பாண்டிய நாட்டாராலும் கொங்கு நாட்டாராலும் வழிபடு தெய்வமாகப் போற்றப் பெற்றமையினை அறியலாம்.

போரிலே மறச்சாவடைந்த தானை மறவனுக்கு ஒரு கல்லினைத் தேர்ந்தெடுத்து, அதற்கான கால்கோல் விழாச் செய்து, புனித நீரில் நீராட்டி, நடுகல்லினை நிறுத்தி நெல்லுத் தூவி, அவனைத் தெய்வமாக வழிபட்டு வாழ்ந்து, கோயிலும் கோட்டமும் செய்யும் பண்டைத் தமிழ் மரபினை ஒட்டியதாகவே கண்ணகி வழிபாட்டு மரபு காணப்படுகின்றதெனலாம். இதனை:

“நன்னா டனைத்து நளிர்சினை வேங்கைப்
………………………..
வடதிசை வணங்கிய மன்னவ ரேறென்” 
(சிலம்பு. வரந்தகருகாதை, 220 – 234)

என்னும் அடிகளின் வழியறியலாம். போரிலே வெற்றி பெற்ற வீரர்களுக்குக் கல்லெழுப்பிக் கடவுள் மங்களம் செய்தலே சிறப்பாம். அதனையொப்பவே, செங்குட்டுவனும் வட திசையில் ஆரிய மன்னர்களையெல்லாம் வென்று, அவர் தலைமேல் கல்லேற்றி கங்கையில் நீராட்டி கண்ணகிக்குக் கோயில் செய்தமை, தமிழ் மரபு பற்றியே எனலாம். ஆதலால் வஞ்சிக் காண்டம் கண்ணகியின் தெய்வ நிலையினை உணர்த்தவே எழுந்ததெனலாம். தமிழகம் கடந்தும் கண்ணகி வழிபாடானது பரலாக்கம் பெற்றிருந்தமையை உரைபெறு கட்டுரையானது விளக்குவதாக உள்ளது.

“அன்று தொட்டு
………………நிகழ்வித்தோனே”   
(உரைபெறு கட்டுரை)

மேலும் இவ் உரைபெறு கட்டுரையின் வழி கண்ணகியானவள் வரந்தரு தெய்வமாக உயர்ந்த நிலையில் போற்றப்படுகின்றமையினைக் காணலாம். வரந்தரு தெய்வத்தின் அருள் என்பது மழை வளம் பிழையா விளையுள், நோய் நீக்கம், துன்பம் – துயர் துடைத்தல் என்பனவாம். இவை யாவற்றினையும் வழங்கும் தெய்வமாக கண்ணகி போற்றப்பட்டமையை மேற்கண்ட சிலப்பதிகாரச் செய்திகளின் வழி அறியலாம்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

7202 பார்வைகள்

About the Author

ஜெகநாதன் அரங்கராஜ்

முனைவர் ஜெ. அரங்கராஜ் யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்தவர். இவர் பழந்தமிழ் இலக்கியத் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம் முதலான துறைகளில் தமது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். சிங்கப்பூர்த் தமிழ்ப் பாடநூற்கள் குறித்தும் பண்டைத் தமிழர்களின் அயலகத் தொடர்புகள் குறித்தும் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ‘செம்மொழித் தமிழ் இலக்கண, இலக்கிய மேற்கோள் அடைவு’ என்னும் இவரது நூல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் ஈழம், தமிழகம் என இரண்டு தலங்களிலும் ஆய்வு மேற்கொண்டுள்ள ஆய்வாளராக இவர் திகழ்கின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • September 2024 (11)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)