தமிழ் மன்னன் திரிதரனின் மகன் மகாநாகன் பொறித்த கதிர்காமக் கல்வெட்டு
Arts
10 நிமிட வாசிப்பு

தமிழ் மன்னன் திரிதரனின் மகன் மகாநாகன் பொறித்த கதிர்காமக் கல்வெட்டு

July 14, 2024 | Ezhuna

‘இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர்’ எனும் இத்தொடர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை தொல்லியல் ரீதியாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைக் கொண்ட ஆவணமாகும். நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் எனவும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டை பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் எனவும், இங்கு கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றிருந்தது எனவும் பேராசிரியர் எஸ். பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் நாக மன்னர்கள், நாக தலைவர்கள், நாக பிரதானிகள், நாக சுவாமிகள், நாக அதிகாரிகள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையின் வரலாற்றுதயக் காலத்தில் நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பலர் தமிழ்ச் சமூகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்கள் பற்றிய வரலாறு மற்றும் வழிபாட்டுப் பாரம்பரியம் ஆகியவை பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இத்தொடரில் ஆராயப்படுகின்றன.

கதிர்காமம் முருகன் கோயிலில் இருந்து கிரிவிகாரைக்குச் செல்லும் வீதியில் பாதையின் வலதுபக்கம் இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகிறன. இவற்றில் ஒரு கல்வெட்டு தமிழ் மன்னன் சிறிதரனின் (திரிதரன்) மகன் மகாநாகனால் பொறிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்த மித்தசேனனைக் கொன்று அனுராதபுரத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்து வந்த தமிழ் மன்னர்கள் ஆறு பேர்களில் ஒருவனே திரிதரன் என்பவனாவான். இவர்கள் பொ.ஆ. 429 – 455 வரையான 25 வருடங்கள் இலங்கையை ஆட்சி செய்தனர். இந்த ஆறு தமிழ் மன்னர்களையும் ஒருவரின் பின் ஒருவராகக் கொன்று, இறுதியில் அனுராதபுரத்தைக் கைப்பற்றி இலங்கையின் மன்னனானான் தாதுசேனன். திரிதரனின் மகனான, தமிழ் மன்னன் மகாநாகன் ருகுணுப் பகுதியை ஆட்சி செய்து வந்த சிற்றரசன் ஆவான். இம்மன்னன் பொறித்த கல்வெட்டே கதிர்காமத்தில் உள்ளது.

இக்கல்வெட்டு நான்கு துண்டுகளாக உடைந்துள்ளது. இவற்றில் ஒரு துண்டு கிடைக்கவில்லை. மிகுதியாக உள்ள மூன்று துண்டுகளையும் ஒன்று சேர்த்துக் கல்வெட்டை வாசித்துள்ளனர். 5 அடி நீளமும், 2 அடி 2 அங்குலம் அகலமும் கொண்ட ஓர் கற்பலகையில், 3 அடி 4 அங்குல நீளம் – 2 அடி 2 அங்குல அகலத்தில் 13 வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டில் கதிர்காமத்தில் இருந்த விகாரை மற்றும் மடாலயம் (முருகன் கோயில்) ஆகியவற்றைப் புனரமைப்பதற்கும், விளக்கு எரிப்பதற்கும், ஆலயத்தில் தானம் கொடுப்பதற்கும் தேவையான செலவை ஈடுகட்டும் முகமாக, இப்பகுதியில் இருக்கும் கிராமம் அல்லது காணி மற்றும் பணம் ஆகியவற்றை மன்னன் தானமாக வழங்கியது பற்றிய செய்தி எழுதப்பட்டுள்ளது. தானம் செய்தவர் சரதரயனின் (சிறிதரன் எனும் திரிதரன்) மகன் மகாதலி மகாநாக ராஜா.

இலங்கையில் பொ.ஆ. 1 ஆம் நூற்றாண்டில் மகாநாகன் எனும் ஓர் மன்னன் ஆட்சி செய்துள்ளான். ஆனால் அவனின் தந்தையின் பெயர் திரிதரன் அல்ல. எனவே பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட ஆறு மன்னர்களில் ஒருவனான திரிதரனின் மகனாகவே இந்த மகாநாகன் இருக்க வேண்டும். இவன் ரோகண பகுதியை ஆட்சி செய்த சிற்றரசனாக இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதன்படி இக்கல்வெட்டு பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட பிற்கால பிராமிக் கல்வெட்டாகும்.

கல்வெட்டின் நான்கு துண்டுகளில் மூன்று துண்டுகள் மட்டுமே உள்ளன. ஒரு துண்டு கிடைக்கப் பெறாதலால் இதில் பொறிக்கப்பட்டுள்ள செய்தியை முழுமையாகக் குறிப்பிடமுடியவில்லை. இருப்பினும் ஓரளவு அர்த்தத்துடன் இக்கல்வெட்டு வாசிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதில் பல தவறுகள் உள்ளன. கல்வெட்டில் சிறிதரன், மகாநாகன், அமுது ஆகிய தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. அதன் விபரங்கள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

“சித்தம் சரதரயஹ (சிறிதரன்) புத்த மகாதலி மகாநாக (மகா நாகன்) ரஜெமி கஜரகம ரஜி மஹா வஹேரகி மகல மஹா சேய (ன) .. .. .. ஜின பதிச .. .. .. .. .. அம (அமுது) பதம கொட்டு .. .. .. .. .. தெல முல கொட்டு க .. .. .. .. .. ஹபி வதேக க பயிட்டு கரணக .. .. ..  .. .. துகமி அடதஹ  ச .. .. .. .. ஹகசலயிடே .. .. .. .. .. வட்டிதணி அம .. .. .. .. ..

பொருள் : சரதரனின் (சிறிதரன்) மகனான மன்னன் மகாதலி மகாநாகன் ஆகிய நான் கதிர்காமத்திலுள்ள ரஜமஹா விகாரை, மங்களகரமான மிகப்பெரிய மகாசேனன் கோயில் அல்லது மடாலயம் (முருகன் கோயில்) ஆகியவற்றின் பழுதடைந்த கட்டிடங்களை புனரமைக்கவும், புனித அன்னதானம் வழங்கவும், நெய் விளக்கேற்றுவதற்கான செலவை ஈடுகட்டவும் ஒரு கிராமத்தையும் (…ட்டுகம) அல்லது நிலத்தையும், எட்டாயிரம் பணத்தையும் தானமாக வழங்குகிறேன்.

இந்தக் கல்வெட்டில் உள்ள 13 வரிகளில் முதல் 4 வரிகள் மட்டுமே தெளிவான பொருளுடன் வாசிக்கப்பட்டுள்ளன. 5 முதல் 13 வரையான 9 வரிகளில் முதல் பாதி மட்டுமே வாசிக்கப்பட்டுள்ளது. இறுதிப்பாதியின் எழுத்துக்கள் உள்ள கல்வெட்டுத் துண்டு வாசிக்கப்படவில்லை. ஏனெனில் அத்துண்டு கல்வெட்டில் காணப்படவில்லை. எனவே கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள முழுமையான செய்தியை உறுதியாகக் கூற முடியவில்லை.

கல்வெட்டை வாசித்து அதை மொழிபெயர்த்த பேராசிரியர் பரணவிதான கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருந்த மகாசேன தெவொல (முருகன் கோயில்) அல்லது மடாலயம்  (முருகன் மடாலயம்) பற்றிய விடயத்தை ஏனோ மறைத்து விட்டார். கல்வெட்டுச் செய்தியில் இரண்டு ஆலயங்கள் புனரமைக்கப்பட்ட செய்தியே கூறப்பட்டிருக்க வேண்டும். பெளத்த விகாரையை “ரஜ மஹா விஹாரை” என்று குறிப்பிட்டு விட்டு, மீண்டும் “மங்கள மஹா சேய” என இரண்டு தடவைகள் குறிப்பிட மாட்டார்கள். எனவே கல்வெட்டில் “கஜரகம ரஜ மகா விகாரை, மங்கள மகாசேன தெவொல” எனக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மங்கள மகாசேன என்ற சொல்லின் இறுதி எழுத்தான ‘ன’ என்ற எழுத்தை ‘ய’ என்று மாற்றினால் முருகன் கோயில் பெளத்த கோயிலாக மாறிவிடும். அதாவது மகாசேன என்பது மகாசேய என மாறிவிடும்.

இதன்படி கல்வெட்டில் தமிழ் மன்னனால் விகாரைக்கும், கோயிலுக்கும் வழங்கப்பட்ட தானத்தை விகாரைக்கு மட்டுமே வழங்கப்பட்டதாக வாசித்து மொழிபெயர்த்துள்ளனர். இந்தச் செய்தி இருட்டடிப்பிற்கு, கல்வெட்டின் ஒரு துண்டு கிடைக்கப் பெறாதது ஏதுவாக அமைந்துள்ளது. மேலும் இக்கல்வெட்டை வாசிப்பதற்கு முன்பு ஜே.டபிள்யூ. ரொபர்ட்சன் அவர்களால் இக்கல்வெட்டின் பகுதிகள் பிரதி எடுக்கப்பட்ட போது எழுத்துகள் சிதைவடைந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்புதான் கல்வெட்டு படியெடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டுள்ளது. இது கல்வெட்டிலுள்ள செய்திகளின் நம்பகத்தன்மையில் மேலும் சந்தேகத்தை உண்டாக்குகிறது.

எனவே கல்வெட்டு பற்றிய மொழிபெயர்ப்பில் நம்பகத்தன்மை குறைவாகவே உள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. தமிழ் மன்னன் ஒருவன் நாடு போற்றும் முருகப் பெருமானின் முக்கிய திருத்தலமான கதிர்காமத்திற்கு வழங்கிய தானத்தில் அக்கோயிலுக்கோ அல்லது கோயில் சார்ந்த மடாலயத்திற்கோ தானங்கள் வழங்காமல்  இருப்பானா எனும் சந்தேகமும் இயல்பாகவே எழுகிறது.

நாகமலை பற்றிக் குறிப்பிடும் மண்டாகல மலைக் கல்வெட்டு

‘யால’வின் வடகிழக்கில், 19 கி.மீ தூரத்தில், யால வனவிலங்குகள் சரணாலயத்தில், அடர்ந்த காட்டின் மத்தியில் மண்டாகல மலைத்தொடர் அமைந்துள்ளது. கதிர்காமத்துக்கு பாத யாத்திரை செல்லும்போது கும்புக்கன் ஆற்றைக் கடந்து நடந்து செல்கையில் எமது வலது பக்கத்தில் இந்த மலையைக் காணலாம்.   

மண்டாகல மலைத் தொடரின் உச்சி 160 மீட்டர் உயரமானதாகும். இம்மலையில் குகைக் கல்வெட்டுகளும், பாறைக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இங்கு மொத்தமாக 27 பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 24 முற்காலப் பிராமிக்குரியவை. 3 கல்வெட்டுக்கள் பிற்காலப் பிராமிக் கல்வெட்டுகளாகும். இவை மூன்றும் பாறைக் கல்வெட்டுகளாகும். இவற்றில் ஒரு கல்வெட்டில் ‘நாகமலை’ எனும் மலை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நாக வழிபாடு செய்யப்பட்ட மலையாக இருக்க வேண்டும்.

இக்கல்வெட்டு மொத்தமாக 9 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. 4 ஆவது வரி தொடக்கம் 9 ஆவது வரி வரை, முன்பகுதியில் உள்ள சில எழுத்துகள் சிதைந்துள்ளன. கல்வெட்டிலுள்ள எழுத்துகள் பொ.ஆ. 3 – 4 ஆம் நூற்றாண்டுக்குரியவை ஆகும்.

இக்கல்வெட்டு மேகவண்ண அபயன் எனும் மன்னனின் முதலாவது ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இவன் பொ.ஆ. 249 – 262 வரையான காலப் பகுதியில் அனுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்த கோதாபயன் என்பவனாவான். மேகவண்ண அபயன் எனும் கோதாபயன், 2 ஆம் சிறிநாகனின் மகனாவான். 2 ஆம் சிறிநாகன் பொ.ஆ. 240 – 242 வரையான இரண்டு ஆண்டுகள் அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி செய்தவனாவான். இக்கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு:

“மேகவண அப ராஜ சட்ட லஹித பதம அவன வசஹி கட நாக பவத்த விஹரக அமெத்த கஹ ……. மத்த சஹரக மன … லகடக ……. வயியன வவிக …… டொவதிகமே தொடக்க ……. …….. குபுற லக்கம ……..  ……. கல ……. ஹ ந சிய …….  அகட சஹ …….. பிகி.

கல்வெட்டில் ‘காள நாக பப்பத்த விகாரை’ எனும் வழிபாட்டுத் தலத்திற்கு சில காணி நிலங்கள் தானமாக வழங்கப்பட்டமை பற்றிக் கூறப்பட்டுள்ளது. இது காள நாக பர்வத மலை எனும் இடத்தில் இருந்த வழிபாட்டுத் தலமாகும். மேகவண்ண அபயனின் அமைச்சர் ஒருவரால் இக் காணி நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டின் படி எடுக்கப்பட்ட படம் கிடைக்கவில்லை.

நாக பக்தை பற்றிக் குறிப்பிடும் தெமட்டகல மலைக் கல்வெட்டு  

மண்டாகல மலைத் தொடரின் மேற்கில் சுமார் 11 கி.மீ தூரத்தில் தெமட்டகல மலை அமைந்துள்ளது. கதிர்காமத்துக்கு பாத யாத்திரை செல்லும்போது நாவலடியை அடைவதற்கு முன்பு யாத்திரீகர்கள் நீராடும் உப்பாற்றில் இருந்து வடக்குப் பக்கம் பார்க்கும் போது தெரியும் இரண்டு  உச்சிகளைக் கொண்ட மலையே தெமட்டகல மலையாகும்.

இது 305 மீற்றர் உயரமான இரு உச்சிகளைக் கொண்ட மலையாகும். 1921 ஆம் ஆண்டில் ஆங்கிலேய நில அளவையாளர்கள் இம்மலையின் ஓர் உச்சி 1000 அடிகளையும், அடுத்த உச்சி 950 அடிகளையும் கொண்டது என தமது குறிப்புகளில் எழுதியுள்ளனர்.

இம்மலையில் 2 பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை பொ.ஆ. 3 ஆம் நூற்றாண்டுக் குரியவையாகும். இவ்விரண்டு கல்வெட்டுகளிலும் இந்து சமயம் தொடர்பான சொற்கள் காணப்படுகின்றன. ஒரு கல்வெட்டில் சுவாமி எனும் சொல்லும், அடுத்த கல்வெட்டில் நாகம் எனும் சொல்லும் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தெமட்டகல மலையில் உள்ள குகைகளில் நாக வழிபாடு நிலவியதோடு, இங்கிருந்த குகையொன்றில் முனிவர் ஒருவர் தங்கிச் சென்றமையும் தெளிவாகத் தெரிகிறது. இக்கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு:

“சி அமதய ப ரயஹ உபசக நாகயஹ மத்தய லசி ய லேனே சட்டுதிசிக சக ஹட்டய நியதே.”

இதன் பொருள் “நாக பக்தையும், அமைச்சர் பறையனின் தாயுமான லசியின் குகை, நான்கு திசைகளிலும் இருந்துவரும் சங்கத்தாருக்கு வழங்கப்பட்டது.” என்பதாகும். இக்கல்வெட்டின் படியெடுக்கப்பட்ட படம் கிடைக்கவில்லை.

 தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7280 பார்வைகள்

About the Author

என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் ‘தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்’, ‘புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்’, ‘இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்’, ‘யார் இந்த இராவணன்’, ‘பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை’, ‘பண்டைய தமிழ் நூல்களில் சிவன்’, ‘கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’, ‘தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?’ போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்