கிழக்கிலங்கையின் துணை அரசன் சோணையன், அவனின் மகன் அமைச்சர் தேவநாகன் ஆகியோர் பற்றிய காயங்குடா - கூமாச்சோலை கல்வெட்டு
Arts
10 நிமிட வாசிப்பு

கிழக்கிலங்கையின் துணை அரசன் சோணையன், அவனின் மகன் அமைச்சர் தேவநாகன் ஆகியோர் பற்றிய காயங்குடா – கூமாச்சோலை கல்வெட்டு

December 11, 2024 | Ezhuna

‘இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர்’ எனும் இத்தொடர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை தொல்லியல் ரீதியாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைக் கொண்ட ஆவணமாகும். நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் எனவும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டை பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் எனவும், இங்கு கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றிருந்தது எனவும் பேராசிரியர் எஸ். பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் நாக மன்னர்கள், நாக தலைவர்கள், நாக பிரதானிகள், நாக சுவாமிகள், நாக அதிகாரிகள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையின் வரலாற்றுதயக் காலத்தில் நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பலர் தமிழ்ச் சமூகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்கள் பற்றிய வரலாறு மற்றும் வழிபாட்டுப் பாரம்பரியம் ஆகியவை பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இத்தொடரில் ஆராயப்படுகின்றன.

மட்டக்களப்பு நகரில் இருந்து வாழைச்சேனைக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் செங்கலடி சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியில் இருந்து மகாஓயாவுக்குச் செல்லும் வீதியில் 3 1/2 கி.மீ தூரத்தில் காயங்குடா சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியின் வலது பக்கம் செல்லும் பாதையில் காயங்குடா எனும் பழமை வாய்ந்த ஊர் அமைந்துள்ளது. இவ்வூர் அமைந்துள்ள பகுதி முன்பு காசிமோட்டை எனவும், இவ்வூர் காயங்குடா மலை எனவும் அழைக்கப்பட்டது.

மட்டக்களப்புத் தமிழகத்தில் ஆதித் தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் காயங்குடாவும் ஒன்றாகும். 2012 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் காயங்குடாப் பகுதிக்கு செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது அங்கு ஆய்வுகளை மேற்கொண்ட போது இதற்கான ஆதாரங்கள் இப்பகுதி முழுவதும் நிறைந்து காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

காயங்குடா பாலமுருகன் கோயிலின் அருகில் உள்ள பாறையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு, கூமாச்சோலை பாறையில் காணப்படும் கல்வெட்டு மற்றும் காயங்குடா குளத்தின் அருகில் காணப்படும் நாகர் கால தொல்லியல் எச்சங்கள் ஆகியவை இதற்கு முக்கிய சான்றுகளாக விளங்குகின்றன. இக்கல்வெட்டுகள் மூலம் 2000 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் நாகர் சமூகத்தைச் சேர்ந்த தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது நிரூபணமாகிறது.

காயங்குடா குளத்தில் மறைந்து கிடந்த ஆதி நாகரின் சுவடுகள்

காயங்குடா முருகன் கோயிலின் தென்திசையில் ஒரு கி.மீ தூரத்தில் காயங்குடா குளம் காணப்படுகிறது. இக்குளத்தின் அருகில் காளிகோயில் அமைந்துள்ளது. காளிகோயில் வாசலில் சதுர வடிவில் ஓர் ஆசனக்கல் காணப்படுகிறது. இது அருகில் உள்ள குளத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.

காயங்குடா குளம் அமைந்துள்ள பகுதி பண்டைய காலத்தில் ஆதி நாகர் வாழ்ந்த இடமாகும். இங்கு நாகரின் வாழ்விடங்கள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவை அமைந்திருந்தமைக்கான சான்றுகள் பல உள்ளன. பண்டைய நாகர் குடியிருப்பின் மீதே பிற்காலத்தில் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

நான் காயங்குடா குளப்பகுதிக்கு சென்றது ஆவணி மாதக் காலப் பகுதியாகும். இது இந்தப் பிரதேசம் வறண்டு காணப்படும் காலமாகும். குளத்தில் நீர் வற்றிக் காணப்படும் காலம் அது. குளத்தில் அணையை ஒட்டி சிறிதளவு நீரே காணப்பட்டது. குளத்தின் நடுவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கிராமவாசி ஒருவரின் இடுப்பளவிற்கே நீர் காணப்பட்டது.  அப்பொழுதுதான் குளத்தைத் தூர்வாரும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. தூர்வாரும் போதுதான் மண்ணுள் புதையுண்டு கிடந்த பண்டைய கட்டிடங்களின் சிதைவுகள் வெளிப்பட்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

இங்கு பத்துக்கும் மேற்பட்ட நாகரின் தூண்தாங்கிக் குழிக்கற்கள், இருபதுக்கும் மேற்பட்ட கற்தூண்கள், மண்மேடுகள் மூன்று, அவற்றில் ஏராளமான புராதன செங்கட்டிகள், ஆசனக் கற்கள், குழிகள் வெட்டப் பட்ட சிறு பாறைகள் என நாகர் வாழ்ந்த பண்பாட்டுச் சின்னங்கள் குவிந்து கிடந்தன. குளக்கட்டின் சரிவில் ஏராளமான செங்கட்டிகள் காணப்பட்டன.

காயங்குடா முருகன் கோயில்

காயங்குடா சந்தியில் இருந்து மேற்குப்பக்கமாக காயங்குடா குளத்திற்குச் செல்லும் வீதியில் 400 மீற்றர் தூரத்தில் உள்ள அரசினர் பாடசாலையின் அருகில் ஓர் முருகன் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலின் முன் பக்கத்தில் சதுர வடிவுடைய கற்பீடம் ஒன்றும், வட்டமான கல் உரல் ஒன்றும் காணப்படுகின்றன. இவை இப்பகுதியில் வாழ்ந்த ஆதித் தமிழரின் பண்பாட்டுச் சின்னங்களாகும்.

பிராமணர் வில்லு பற்றிக் குறிப்பிடும் பிராமிக் கல்வெட்டு

கோயிலின் அருகில் உள்ள பாடசாலையின் பின் பக்கத்தில் ஒரு கற்பாறை காணப்படுகிறது. அக்கற்பாறை கிராமவாசிகளால் பெருமளவில் உடைத்து எடுக்கப்பட்டிருந்தது. அப்பகுதியை ஆராய்ந்தபோது தான் அங்கு சில எழுத்துகளைக் கண்டேன். அது ஓர் கல்வெட்டு. கற்பாறையில் நான்கு வரிகளில் பிராமி எழுத்துகளில் அக்கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது. இக்கல்வெட்டு யாராலும் இதுவரை வாசித்துப் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டின் முதலாவது வரியில் பல எழுத்துகள் சிதைந்து காணப்படுகின்றன. 8 எழுத்துகள் மட்டுமே தெரிகின்றன. இரண்டாவது வரியில் சில எழுத்துகள் சிதைந்துள்ளன. எனினும் 12 எழுத்துகள் ஓரளவு தெரிகின்றன. மூன்றாவது வரியில் 13 எழுத்துகள் உள்ளன. இவை அனைத்தும் தெளிவாகத் தெரிகின்றன. இதில் “சபுலிணி சோகஹோ பமணவிலஹே” எனப் பொறிக்கப்பட்டிருந்தது. இதில் உள்ள பமணவில என்பது இப்பகுதியில் இருந்த பிராமணர் வில்லு எனும் குளத்தை அண்டிய பிராமணர் கிராமத்தின் பெயராகும். நான்காவது வரியில் 17 எழுத்துகள் உள்ளன. இதில் பல எழுத்துகள் சிதைந்துள்ளன. எனவே இக்கல்வெட்டை வாசித்து அதன் பொருளை விளங்கிக்கொள்ள முடியவில்லை.

மூன்று வணிகர்கள் பற்றிக் கூறும் கல்வெட்டு

இக்கல்வெட்டுப் பற்றிப் பேராசிரியர் பத்மநாதனிடம் கூறி, இதன் புகைப்படங்களையும் அவருக்குக் காட்டினேன். அவர் தனது மாணவர்கள் சிலரை அவ்விடத்திற்கு அனுப்பி கல்வெட்டைப் படியெடுத்து வாசித்துள்ளார். பல எழுத்துகள் சிதைந்துள்ளதால் இக்கல்வெட்டை அவராலும் சரியாக வாசிக்க முடியவில்லை. கல்வெட்டின் இறுதியில் “திணி வணிஜஸ” என எழுதப்பட்டுள்ளதாகவும், மூன்று வணிகர்கள் செய்த கருமம் பற்றி கல்வெட்டுக் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் “மருமகன்” எனும் சொல் இக்கல்வெட்டில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மருமகன் என்பது தமிழ் பிராமிச் சொல்லாகும். எனவே காயங்குடாப் பகுதியில் 2000 வருடங்களுக்கு முன்பு தமிழ் வணிகர்கள் மூவர் வாழ்ந்துள்ளனர் என்பதை இக்கல்வெட்டின் மூலம் தெரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

சோணையனின் மகனான அமைச்சர் தேவநாகன் பற்றிக் குறிப்பிடும் காயங்குடா – கூமாச்சோலைக் கல்வெட்டு

இப்பகுதியில் உள்ள கூமாச்சோலை என்னுமிடத்தில் காணப்படும் ஒரு மலைப்பாறையில் நாகர் பற்றிய மிக முக்கியமான ஒரு கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பிற்கால பிராமிக் கல்வெட்டாகும். இதன் காலம் பொ.ஆ 1 ஆம் நூற்றாண்டாகும். மேலும் இது இலங்கையில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் சோணையன் எனும் பெயர் பொறிக்கப்பட்ட அபூர்வமான கல்வெட்டுகளில் ஒன்றாகும்.

1934 ஆம் ஆண்டு C.W. நிக்கலஸ் முதன் முதலாக இக்கல்வெட்டைக் கண்டு, அதன் பிரதியொன்றை எடுத்தார். 1935 இல் பேராசிரியர் பரணவிதான தொல்லியல் திணைக்களத்தில் இக்கல்வெட்டின் பிரதியைப் பதிவு செய்தார். இருப்பினும் 1983 ஆம் ஆண்டு வெளியான பிற்கால பிராமிக் கல்வெட்டுகள் எனும் நூலிலேயே இக்கல்வெட்டு முதன் முதலாகப் பதிவு செய்யப்பட்டது.

இக்கல்வெட்டு மொத்தமாக 9 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. பாறையில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ள பகுதியானது 13 அடி 4 அங்குல நீளமும், 5 அடி 5 அங்குல அகலமும் கொண்ட செவ்வக வடிவமான பகுதியாகும். கல்வெட்டின் மத்தியில் நீள்வட்ட வடிவில் உள்ள பகுதியில் உள்ள எழுத்துகள் அழிந்துவிட்டன. இப்பகுதியில் சில இரும்பு ஆயுதங்களைத் தீட்டி அல்லது தேய்த்து உள்ளபடியால் இதில் உள்ள எழுத்துகள் அழிந்து பாறை மழுங்கிக் காணப்படுகிறது.

இதன்படி 1 ஆம், 2 ஆம் வரிகளின் ஆரம்பத்தில் இருந்த 5 எழுத்துகளும், மத்தியில் இருந்த 10 எழுத்துகளும் அழிந்துவிட்டன. மேலும் 3 ஆம், 4 ஆம், 5 ஆம், 6 ஆம் வரிகளின் நடுப்பகுதியில் 8 முதல் 12 எழுத்துகள் வாசிக்க முடியாத அளவிற்கு முற்றாக அழிந்துவிட்டன. கல்வெட்டின் 7 ஆம், 8 ஆம், 9 ஆம் வரிகளில் உள்ள எழுத்துகள் முழுமையாக உள்ளன.

எனினும் அதிஷ்டவசமாக இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட காலத்தில் இலங்கையை ஆட்சி செய்த மன்னன், அவனது காலத்தில் கிழக்கிலங்கையை ஆட்சி செய்த துணை அரசன் மற்றும் இப்பகுதியின் அமைச்சர் ஆகியோரின் பெயர்கள் உள்ள பகுதிகளை வாசிக்கக் கூடியதாக உள்ளது. இக்கல்வெட்டில் இப்பகுதியில் உள்ள சில நிலங்கள் அல்லது காணிகள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கை மூலம் கிடைக்கும் வருமானம் இங்குள்ள வழிபாட்டுத்தலத்திற்கு வழங்கப்பட வேண்டும் எனும் செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.   

கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:

  1. [சித்தம்] மகரஜ வஹபயஹ ம[ஹ] ரதி ய சூள ரோஹன போஜிக ஹோனயஹ பு
  2. [த] அமெதி தேவ நாகய பஜி [னக] ர புஜமினி .. .. .. .. கனி [மஹா] துபே கரவய ரஜ வஹபயஹ
  3. அரசய ப [ஹ] னி [ய] கெதஹி .. .. .. .. .. .. கர விஹரஹி மஹதுபஹி தினே
  4. வபெ தெ தகெ [ஹி] .. .. ஹ க .. .. KA (கரவா எனும் குறியீடு) .. .. .. குபர KA கரஹேனய KA ப [ம]
  5. ணவிலஹி KA மஹசபஹனிய [ஹி] .. .. .. KA கிரிதிவடய KA பஹனவில
  6. தஹி கிரி மெ [தொ-வி] சிடி கிரியகஹி .. .. .. மஹதுபஹி தகரனிய கட முத வெடி
  7. யஹி ஹவஜர தினி கல தெல மகனகே உதிரிக அதி ஹிடு துபஹி ஜின படிசதரி
  8. ய தஜ அருவனகே க துபஹி கம கரன திவச ஹமனன அதய பத ஹட (ரக)
  9. ஹட தின கொலஹொபகஹி தொ கரிஹகே KA               

இதன் பொருள் பின்வருமாறு:

“வெற்றி, மகாராஜன் வசபனின், ரோகண இராச்சியத்தின் துணை அரசனும், பிராந்தியத்தின் பிரதான அதிகாரியுமான சோணையன் என்பவனின் மகனும், கிழக்குக் கரையோர அமைச்சருமான தேவநாகன் என்பவனால், மகாராஜன் வசபனின் ஆணைப்படி, .. .. .. விகாரையின் பெரிய தூபிக்கு, .. .. .. இரண்டு பருவமழை காலத்தில் பயிர் செய்யப்படும் .. .. .. பஹனிய எனும் இடத்திலுள்ள .. .. ..எனும் இடத்தில் நான்கு கரிச நிலத்திலும், (கரிச என்பது ஒரு காணியின் அளவைக் குறிக்கும்) .. .. .. கரசேனை எனும் இடத்திலுள்ள இரண்டு கரிச நிலத்திலும், பிராமணவில்லு எனும் இடத்திலுள்ள மூன்று கரிச நிலத்திலும், மஹா சப்பஹனிய எனும் இடத்திலுள்ள .. .. .. ஒரு கரிச .. .. .. கிரிதிவட்டை எனும் இடத்திலுள்ள இரண்டு கரிச நிலத்திலும், பகனவில்லு எனும் இடத்திலுள்ள ஒரு கரிச நிலத்திலும், .. .. .. மொத்தமாக 22 கரிச நிலத்திலும் (கிடைக்கும் வருமானம்) .. .. .. பெரிய தூபியின் உச்சியில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை எண்ணெய் பூசுவதற்காகவும், இங்கு தரையில் விரிக்கப்பட்டுள்ள மான் தோல் விரிப்பில் உள்ள சேதத்தை சரி செய்வதற்காகவும், தூபியில் பதாகைகள் போடுவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் கொலஹோபக எனும் இடத்தில் உள்ள இரண்டு கரிச நிலத்தில் கிடைக்கும் பணம், பண்டிகைகளின் போது துறவிகளுக்கு உணவு வழங்கப் பயன்படுத்தப்பட வேண்டும்” 

மன்னன் வசபனின் துணை அரசன் சோணையன் 

இக்கல்வெட்டு பொ.ஆ. 67 முதல் 111 வரையான 44 ஆண்டுகள் இலங்கையை ஆட்சி செய்த வசபன் எனும் மன்னன் காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இவனது ஆட்சியின் கீழ் ரோகண இராச்சியத்தின் துணை அரசனாக சோணையன் என்பவன் பணி புரிந்துள்ளான். இவனைக் கல்வெட்டில் “சூள ரோஹண போஜிக அமெதிய ஹோணய” எனக் குறிப்பிட்டுள்ளனர். சோணையனின் மகனான தேவநாகன் என்பவன் இப்பகுதியில் ஓர் அமைச்சராகப் பணியாற்றியுள்ளான். இவன் கல்வெட்டில் “அமெதி தேவ நாகய” எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். இவர்கள் நாக குலத்தைச் சேர்ந்த தமிழர்கள் என்பது இவர்களின் பெயர்கள் மூலம் தெரிகிறது.

கிழக்கிலங்கையில் ஆட்சி செய்த மன்னர்கள் பற்றிய விவரங்களை மட்டக்களப்பு மான்மியமும் குறிப்பிடுகிறது. அதன்படி இக்காலப்பகுதியில் கிழக்கிலங்கையின் இரண்டு வெவ்வேறு இராச்சியங்கள் இருந்துள்ளன. அவை வடபகுதியில் மட்டக்களப்பு எனும் இராச்சியமும், தென்பகுதியில் உன்னரசுகிரி எனும் இராச்சியமும் ஆகும். இவை அக்கால சிற்றரசுகளாக இருந்திருக்க வேண்டும். இவற்றில் மட்டக்களப்பு இராச்சியத்தை தாசகன் எனும் மன்னனும், உன்னரசுகிரியை மனுநேய கயவாகு எனும் மன்னனும், அவனுக்குப்பின் ஆடகசெளந்தரி எனும் அரசியும் ஆட்சி செய்துள்ளனர். இம்மூவரின் பெயர்கள் எதுவும் இக்கல்வெட்டில் காணப்படவில்லை. எனவே அனுராதபுர மன்னரின் கீழ் ரோகண இராச்சியம் இருந்தாலும், ரோகண இராச்சியத்தின் கிழக்குப்பகுதியில் தமிழ்ச் சிற்றரசுகளும் இருந்துள்ளன எனலாம். இவை அனுராதபுர மன்னர்களோடு புரிந்துணர்வுடன் இணக்கமான ஆட்சி செய்திருக்கலாம். அல்லது அனுராதபுர மன்னர்களுக்குத் திறை செலுத்தி தங்கள் சிற்றரசுகளை ஆட்சி செய்திருக்கலாம். அதேசமயம் அனுராதபுர மன்னன் கிழக்கிலங்கைக்கு பொறுப்பாக ஒரு துணை அரசனையும் அல்லது ஆட்சியாளரையும், ஒரு அமைச்சரையும் அமர்த்தியுள்ளான் என்பது இக்கல்வெட்டின் மூலம் தெரிகிறது.

காயங்குடா பகுதியில் இருந்த பிராமணர் கிராமமும், வில்லுக் குளமும் 

இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் பமணவில எனும் இடமும் ஒன்றாகும். பமண என்பது பிராமணரைக் குறிக்கும் சொல்லாகும். வில என்பது வில்லுக்குளத்தைக் குறிக்கும் பெயராகும். எனவே இது பிராமணர் வில்லு எனப் பொருள்படுகிறது. இதன்படி காயங்குடா பகுதியில் இருந்த ஒரு வில்லுக்குளத்தின் அருகில் ஒரு பிராமணர் கிராமம் இருந்துள்ளது எனத் தெரிகிறது. பிராமணவில்லு எனும் பெயருடைய இக்கிராமத்தில், இப்பகுதியில் உள்ள கோயில்களுக்கு பூஜை செய்யும் பிராமணர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வந்திருக்க வேண்டும்.

அரச சலுகைகளுடன் அதிகளவில் பிராமணர்கள் வாழ்ந்த இடங்கள் பல, பண்டைய காலத்தில் இலங்கையில் இருந்தன. இவை பிரம்மதேயம் என அழைக்கபட்டன. காயங்குடா பகுதியில் இருந்த கிராமம் பிரம்மதேயம் எனும் அந்தஸ்தைப் பெறாத சிறிய பிராமணர் குடியிருப்பாக இருக்க வேண்டும்.

பமணவில எனும் இடத்தின் பெயர் காயங்குடா பாலமுருகன் கோயில் அருகில் காணப்படும் கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே பமணவில எனப்பட்ட பிராமணர்வில்லு எனும் இடம் அல்லது கிராமம் இப்பகுதியில் உள்ள முக்கிய ஊராக விளங்கியிருக்க வேண்டும். இவ் இரு கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் பிராமணவில்லு எனும் குளம் தற்போது இப்பகுதியில் காணப்படும் காயங்குடா குளமாகக் கூட இருக்கலாம். அப்படியாயின் இக்குளத்தைச் சுற்றியே 1900 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிராமணர் குடியிருப்பு இருந்திருக்க வேண்டும். 


ஒலிவடிவில் கேட்க

1339 பார்வைகள்

About the Author

என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் ‘தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்’, ‘புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்’, ‘இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்’, ‘யார் இந்த இராவணன்’, ‘பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை’, ‘பண்டைய தமிழ் நூல்களில் சிவன்’, ‘கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’, ‘தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?’ போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்