Arts
19 நிமிட வாசிப்பு

கீழைக்கரையும் அதன் புவிச்சரிதவியலும் II

September 17, 2022 | Ezhuna

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.

கீழைக்கரையில் 21 கரச்சைக் களப்புகள் காணப்படுகின்றன (உரு. 01 & 02). உள்நாட்டு ஆறுகள் பெருகிப் பாய்வதால், இவற்றின் பெரும்பாலான நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் வண்டல் மண் படிந்து விட்டது. ஒப்பீட்டளவில் பெரிய கரைச்சைகளான மட்டக்களப்பு வாவி, பெரியகளப்பு, வாழைச்சேனைக் களப்பு என்பன இவ்வண்டல் மண் படிவால் இன்று பெருமளவு அகலம் குறைந்திருக்கின்றன. இலங்கைத்தீவின் கரையோரம், மட்டக்களப்பு வாவிக்குத் தெற்கே பிறைத்துண்ட வடிவில் அமைந்திருப்பதால், களப்புகளின் அளவை அதிகரிக்கும் கடுங்காற்று, பருவப்பெயர்ச்சிக் காற்றுகள் என்பன அங்கு அவ்வளவாகச் செல்வாக்குச் செலுத்தவில்லை (உரு.02). அதனால் அங்கு களப்புகளின் பரப்பு தெற்கே செல்லச் செல்ல சிறுத்துச் செல்கிறது (Silva et al 2013:21).

கீழைக்கரையின் வடகிழக்கு வலயக் களப்புகள்
ழைக்கரையின் கிழக்கு வலயக் களப்புகள்

கடலுக்குச் சமாந்தரமாக முழுநீளத்துக்கும் களப்புகளின் தொடர் சங்கிலி காணப்படுவதால், கீழைக்கரை அந்தக்களப்புகளின் இருபுறமும் கிழக்கிலும் மேற்கிலும் இரு தனித்தனி நிலப்பரப்புகளாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இக்களப்புகள் உள்ளூரில் ஆறுகள் என்றே அறியப்படுகின்றன. எனவே கடலுக்கும் ஆற்றுக்கும் இடைப்பட்ட நிலம் “எழுவான்கரை” (சூரியன் எழுகின்ற கரை – கிழக்குக்கரை) என்றும் ஆற்றுக்கு அப்பாலுள்ள மற்றைய நிலம், “படுவான்கரை” (சூரியன் மறைகின்ற / படுகின்ற கரை – மேற்குக்கரை) என்றும் அழைக்கப்படுகின்றன. எழுவான்கரை ஊர்களும் படுவான்கரை ஊர்களும் தொன்றுதொட்டே ஒன்றோடொன்று கொண்டும் கொடுத்தும் வந்திருக்கின்றன.

படகு, ஓடம், தோணி முதலியன மூலமான நீர்வழிப் போக்குவரத்தே இவ்வூர்களை இணைக்கும் பிரதான போக்குவரத்து மார்க்கமாக இருந்து வந்தது. தரைவழிப்பாதை பிரதான போக்குவரத்து மார்க்கமாக மாறியுள்ள சமகாலத்தில் இந்நீர்வழிப்பாதைகள் மறக்கடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் எச்சங்களை இன்றும் நீடிக்கும் குறுமண்வெளி – மண்டூர், குருக்கள்மடம் – அம்பிளாந்துறை, இலங்கைத்துறை – இலங்கைத்துறை முகத்துவாரம் முதலிய படகுப்பாதை போக்குவரத்துகளில் காணலாம். இந்நீர்வழிப் பாதைகளில், கரைச்சைகளுக்குச் சமனாக, அல்லது கரைச்சைகளை விட ஒருபடி மேலாக முக்கியத்துவம் பெற்று விளங்கியவை, கீழைக்கரையின் ஆறுகள்.

கீழைக்கரையின் ஆறுகள்


கீழைக்கரையில் மொத்தம் இருபத்தேழு ஆறுகள் பாய்கின்றன (Arumugam,1969). ஆறுகள் என்று கூறினாலும் இவை அகலத்தில் மிகக்குறைந்த சிற்றோடைகளே. செய்மதிப்படங்களை ஆராயும் போது, பட்டிப்பளை ஆறு, கூமுனையாறு, மாதுரு ஆறு முதலான ஓரிரு ஆறுகள் மட்டும் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை பேராறுகளாக ஓடியிருந்திருக்கின்றன என்பதை ஊகிக்கமுடிகின்றது.

கீழைக்கரையின் ஆறுகளில் பெரும்பாலானவை கடலில் நேரடியாகச் சென்றடையாமல், கடலோரமாக அமைந்துள்ள கரைச்சைகளில் கலக்கின்றன. மகாவலி கங்கை, கல்லாறு, கூமுனையாறு ஆகிய மூன்று மட்டுமே கரைச்சையூடாக அன்றி, கடலில் நேரடியாகக் கலக்கின்றன. அவற்றிலும், கூமுனையாறு மட்டுமே தூய கடற்கழிமுகத்தைக் கொண்ட ஆறாக இருக்கின்றது[1]. கீழைக்கரையின் வரலாற்றுத் தேவைப்பாட்டிற்காக, இங்குள்ள ஆறுகளில் முக்கியமான 11 ஆறுகளை மாத்திரம் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

1.மகாவலி கங்கை


இலங்கையின் மிக நீளமான ஆறு, மகாவலி கங்கை (335 கி.மீ நீளம்). சிவனொளிபாத மலையிலேயே மகாவலி கங்கையும் இலங்கையின் ஏனைய பேராறுகளான களனி கங்கை, கல் கங்கை, வளவை கங்கை ஆகிய மூன்றும் உற்பத்தியாவதாக, ஈழத்துத் தமிழ் – சிங்கள மரபுரைகள் கூறுகின்ற போதும், அங்கிருந்து சுமார் 30 கி.மீ. தள்ளி, மலைநாட்டின் ஃகட்டன் (Hatton) நகருக்கருகே ஃகோட்டன் (Horton) சமவெளி ஆற்றுப்பள்ளத்தாக்கிலேயே மகாவலி கங்கை ஊற்றெடுக்கின்றது[2].  (Ratnasiri, 2010:09)

மகாவலி கங்கை, கண்டியூடாகப் பாய்ந்து மகியங்கனை (பழைய பெயர்: விந்தனை), மன்னன்பிட்டி (பழைய பெயர்: தம்பன்கடவை[3]), என்பவற்றினூடாகச் சென்று, குரங்குமுனை என்ற இடத்தில் வெருகல் கங்கையாகப் பிரிந்து வெருகலில் கடலில் கலக்கின்றது. அதன் பிரதான கிளை, குருக்கள் கங்கை என்ற பெயரில் வடக்கே சென்று கொட்டியாற்றுக் குடாவில் கடலில் கலக்கின்றது.

மகாவலி கங்கையின் ஆழம், அது கடலில் கலக்கும் திருக்கோணமலையிலிருந்து விந்தனைக்கு (இன்றைய மகியங்கனை) தெற்கே பங்காரகம்மான வரை 130 மைல்கள் (209 கி. மீ) தூரம் படகுப்போக்குவரத்துக்கு உகந்ததாக இருந்ததால், பிரித்தானியர் காலத்தில், வணிகப்படகுகளின் போக்குவரத்துக்காக மகாவலி கங்கையைப் பயன்படுத்துவது பற்றி ஆராயப்பட்டிருந்தது. (Capper 1849:135, Tennent 1860:424-425) உண்மையில் இது காலனித்துவ ஆட்சியாளர்களின் காலத்துக்கு முன்பு உள்ளூர் அரசர்களால் வணிகத்துக்கும் போக்குவரத்துக்கும் பயன்படுத்தப்பட்ட நீர்வழி மார்க்கமாகும். இடைக்கால இலங்கைத் தலைநகரான பொலனறுவையை அண்டி ஓடும் அம்பன் கங்கை, மகாவலி கங்கையின் துணையாறு தான். பொலனறுவையை திருக்கோணமலைத் துறைமுகத்துடன் இணைத்து அதன் வணிகத்தை வளர்த்தெடுத்ததில் மகாவலி வழி நீர்ப்பாதைக்கு தவிர்க்கவியலாத வகிபாகம் இருந்திருக்கிறது.

எனவே இலங்கையின் பிரதான வர்த்தக – போக்குவரத்துப் பாதையாக விளங்கிய மகாவலிகங்கையின் இரு கிளையாறுகளான குருக்கள் கங்கை,  வெருகல் கங்கை என்பவற்றுக்கிடைப்பட்ட பகுதியில் இலங்கையின் பண்பாடும் நாகரிகமும் செழித்து வளர்ந்திருக்கின்றன. மகாவலியால் செழுமையூட்டப்பட்ட இந்நிலம் சிங்கள வரலாற்றிலக்கியங்களில் “கொத்தசார” என்று அழைக்கப்பட்டதுடன்,  சோழராட்சிக் காலத்தில் தஞ்சைப்பெருங்கோவிலுக்கு காணிக்கைப் பொருட்களை ஏற்றுமதி செய்யுமளவுக்கு வளம் நிறைந்ததாக விளங்கியது (Fernando ,1978:85-86). இங்கு சேருவில், ஈச்சிலம்பற்று, இலங்கைத்துறை, கல்லடி, நீலாப்பளை, மத்தளமலை, திருமங்கலாய், கங்குவேலி உள்ளிட்ட இடங்களில் பல தொல்லியல் மையங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.


2. நட்டூர் ஆறு:

நட்டூர் ஆறின் சிங்களப்பெயர் மாதுரு ஓயா. இது 1541 சதுர கி. மீ. நீர்ப்பிடிப்புப் பகுதி கொண்ட பெரிய ஆறு. ஊவா மலைத்தொடரில் ஊறி அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் மேற்கு எல்லையாக சுமார் 80 கி. மீ. தூரம் பாய்ந்து, பொலனறுவை வெலிக்கந்தைக்கருகே கிழக்கே திரும்பி, ஓட்டமாவடியில் வாழைச்சேனைக் களப்புடன் கலக்கின்றது. மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் அருகே பழங்காலத்தில் உயர் தொழிநுட்பத்துடனான நீர்ப்பாசனக் கட்டமைப்பு நீடித்திருந்தமைக்குச் சான்றுகள் பெறப்பட்டுள்ளன. கந்தேகம, கோராவெளி உள்ளிட்ட பல தொல்லியல் இடங்கள் நட்டூர் ஆற்றின் கரையோரமாக அமைந்துள்ளன.


3. முந்தனை ஆறு:

மகாவலி கங்கை, நட்டூர் ஆறு, முந்தனை ஆறு, மகிழவட்டவான் ஆறு என்பவற்றின் படுகையின் பருமட்டான வரைபடம்

இங்கினியாகல் மலைத்தொடரில் உருவாகும் இறம்புக்கன் ஆறும், அதன் மேற்கே தோன்றும் மகா ஓயா ஆறும், மகா ஓயா நகருக்கருகே இணைந்து முந்தனை ஆற்றை உருவாக்குகின்றன. முந்தனை ஆற்றுக்கு இன்னும் இரு துணையாறுகள் உள்ளன (உரு.03).  மகா ஓயாவுக்கும் மேற்கே ஊறிப்பாயும் கல்லோடை ஆறு, தெம்பிட்டிக்கு அருகே முந்தனை ஆற்றுடன் கலக்கிறது. ஒமுனை மலையடிவாரத்தில் தோன்றும் இலாவணை ஆறு, மயில் தங்கிய மலைக்கருகே முந்தனையாற்றுடன் இணைகின்றது, மொத்தம் 1280 சதுர கி.மீ. நீர்ப்படுகை கொண்ட முந்தனையாறு சித்தாண்டிக்கு மேற்கே வாழைச்சேனைக் களப்பில் கலக்கின்றது. அதன் ஒரு கிளை கரடியனாறாகப் பிரிந்து மட்டக்களப்பு வாவியில் கலக்கின்றது. உறுகாமக்குளத்துக்கு நீர்பாய்ச்சுவது முந்தனை ஆறு தான்.

முந்தனை ஆற்றின் படுகையும் பல ஆதிக்குடியிருப்புகளைக் கொண்டதாகும். குசலான்மலை, கரடியனாறு, வேலோடுமலை, கித்துள் உட்பட பல தொல்லியல் இடங்கள் முந்தனையாற்றோரமாக அமைந்துள்ளன.

4. மகிழவெட்டுவான் ஆறு:


இங்கினியாகல் மலைத்தொடரில் இறம்புக்கனை ஆற்றுக்கு சமாந்தரமாக ஊற்றெடுத்து 346 சதுர கி.மீ. நீர்ப்படுகைப் பரப்பில் பாய்ந்து, மட்டக்களப்பு மகிழவட்டவான் அருகே மட்டக்களப்பு வாவியில் கலக்கிறது . இவ்வாறு மகிழவட்டவான் ஆற்றின் குறுக்கே அணைகட்டி 1902 – 1919 க்கு இடைப்பட்ட காலத்தே அமைக்கப்பட்ட குளமே உன்னிச்சைக்குளமாகும்.  மகிழவட்டவான் அருகே கரைவெட்டி, உன்னிச்சை, புல்லுமலைப் பகுதிகளில் பழங்குடியிருப்புகள் அமைந்திருந்தன.



5. நவகிரியாறும் மூங்கிலாறும்:

நவகிரியாறு, மூங்கிலாறு, கல்லாறு என்பவற்றின் படுகைகளும்,


ஊவா மலைத்தொடரின் கிழக்கே வாலிம்ப மலையருகே களுகல் ஓயா (கருங்கல்லாறு) என்ற பெயரில் ஊற்றெடுக்கிறது நவகிரியாறு. இவ்வாற்றுடன்  கல்லோயா இடதுகரைக் கால்வாய் இணையுமிடத்தில், 1950-1954 க்கு இடையே நவகிரி நீர்த்தேக்கம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. நவகிரி நீர்த்தேக்கத்தின் அருகே தான் வரலாற்றுப்புகழ் பெற்ற இராசக்கல் மலை அமைந்துள்ளது.  நவகிரியாற்றின் ஒரு கிளை கிழக்கே சென்று மூங்கிலாற்றுடன் கலக்க, மறுகிளை பல சிற்றோடைகளாகப் பிரிந்து வெல்லாவெளியில் நாதனையாறாக மட்டக்களப்பு வாவியுடன் கலக்கின்றது.

நவகிரியாற்றின் படுகையில் உஃகணையிலுள்ள இராசக்கல் மலை மற்றும் வெல்லாவெளிப் பிரதேச தொல்லியல் மையங்கள் உள்ளிட்ட பல வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்கள் காணப்படுவதால், இவ்வாற்றின் கரையிலும் பெருமளவு ஆதிகாலக் குடியிருப்புகள் தோன்றி வளர்ச்சி கண்டுள்ளன என்பதை அறியக்கூடியதாகவுள்ளது.

நவகிரி ஆறு ஒரு துணையாறாகத் திறக்கின்ற மூங்கிலாறு,  சிங்களத்தில் ஆந்தலோயா என்று அழைக்கப்படுவதுடன், 522 சதுர கி. மீ. நீர்ப்பிடிப்புப் பகுதி கொண்டது. இங்கினியாகல் மலைத்தொடரில் ஊற்றெடுக்கும் நாமல் ஓயாவும்[4] வேறு துணையாறுகளும் உஃகணையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அந்தலோயாக் குளத்தில் தடுக்கப்பட்டு கிழக்கே ஆந்தலோயாவாக நகர்கின்றன.  மேலும் பல சிற்றோடைகளும் நவகிரியாறும் கலக்க, இறுதியில் மண்டூருக்கு வடக்கே மட்டக்களப்பு வாவியில் திறக்கிறது மூங்கிலாறு.


6. பட்டிப்பளை ஆறு (கல்லோயா /  கல்லாறு)


பட்டிப்பளை ஆறு 108 கி. மீ. நீளமான இலங்கையின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. இன்று கல்லோயா என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகிறது. தமிழில் கல்லாறு எனலாம்[5]. ஊவா மலைத்தொடரில் மடுல்சீமை மலைச் சரிவுகளில் பாயும் ஓடைகள் இணைந்து ஊற்றெடுக்கும் கல்லாற்றுக்கு “இ|ப்|பான் ஓயா”, தி|ம்பிரி ஓயா ஆகிய  இரண்டு முக்கியமான துணை ஆறுகள் உள்ளன.

துணையாறுகளிலிருந்து நீரைப் பெற்றுப் பாய்ந்து வரும் கல்லாறு இலங்கையின் மிகப்பெரிய செயற்கை நீர்த்தேக்கங்களில் ஒன்றான இங்கினியாகல் நீர்த்தேக்கம் அல்லது சேனாநாயக்க சமுத்திரத்தை உண்டாக்கியபடி கிழக்கே நகர்ந்து மலுக்கம்பிட்டிக்கு அருகே நான்கு கிளைகளாகப் பிரிகின்றது (உரு.04). ஒரு கிளை நேரே களியோடை ஆறு என்ற பெயரில் பாய்ந்து ஒலுவில்லில் கடலில் கலக்க, இன்னொரு  கிளை செங்கற்படை ஆறு என்ற பெயரில் சற்று வடகிழக்காகப் பாய்ந்து, நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் கடலில் கலக்கிறது. மூன்றாவது கிளைநதி, பைந்தாறு என்ற பெயரில் சம்மாந்துறைக்கு அருகாகப் பாய்ந்து மட்டக்களப்பு வாவியிலும், காரைதீவுக் கரைச்சையிலும் இருகிளைகளாகப் பிரிந்து மறைகின்றது. பைந்தாற்றின் இவ்விரு கிளைகளுக்கும் இடைப்பட்ட தீவே காரைதீவு.

நான்காவது கிளை மலுக்கம்பிட்டியிலிருந்து சற்று கிழக்கே தீகவாவிக்கு அருகே இன்று பெருமளவு தூர்ந்துபோய் சிறு வாய்க்கால்களாகச் செல்கின்றது. அது, பாலமுனை – முள்ளிக்குளமூடாக ஓடி இரண்டாகப் பிரிகிறது. அதன் ஒருகிளை வன்னிபத்து ஆறு என்ற பெயரில் மீனோடைக்கட்டுக்கு வடக்காகச் சென்று அட்டாளைச்சேனை கோணாவத்தைக் கரைச்சையில் கலக்கின்றது. மறுகிளை அட்டாளைச்சேனைக்கும் அக்கரைப்பற்றுக்கும் மேற்காகச் சென்று தில்லையாறு என்ற பெயரில், பெரிய களப்போடு கலக்கின்றது. அக்கரைப்பற்றின் பழைய பெயர் கருங்கொடித்தீவு. அட்டாளைச்சேனையின் பழைய பெயர் முல்லைத்தீவு. இவை தீவுகளாக அறியப்பட்டதன் காரணம், இவ்விரு தீவுகளையும் சூழ வடக்கே வன்னிபத்தாறும், கிழக்கே கடலும், மேற்கே தில்லையாறும் தெற்கே பெரியகளப்பும் என்றவாறு அவை முற்றாக நீரால் சூழப்பட்டிருந்தது தான்.

கல்லாற்றின் இந்த நான்கு கிளையாறுகளின் கழிமுகங்களிலும் மலைநாட்டின் பெருமளவு வண்டல்மண் அள்ளப்பட்டு வந்திருப்பது தெரியவருகிறது. மட்டக்களப்பு வாவியின் தென்பகுதி வண்டல் படிந்து தூர்ந்து போனமைக்கு, காரைதீவில் கலந்த பைந்தாறும் ஒரு காரணமாக இருக்கவேண்டும். அதே வண்டல் மண் படிவாலேயே அக்கரைப்பற்று நகரின் மேற்கே தில்லையாறு வண்டல் படிந்து வயல்நிலங்களாக மாறியிருக்கிறது.

கல்லாற்றை மறித்து, இங்கினியாகல் மலைத்தொடர்களிடையே அமைந்த குறுகிய கணவாயை இணைத்து 1949 – 1951ஆம் ஆண்டுகளுக்கிடையே அமைக்கப்பட்ட சேனாநாயக்க சமுத்திரம் எனும் நீர்த்தேக்கம் கல்லாற்றின் நீர்வரத்தைப் பெருமளவு குறைத்துவிட்டது. இன்று இங்கினியாகல் நீர்த்தேக்கத்துக்குக் கிழக்கே சிற்றோடைகளாகவே பட்டிப்பளையாறு நகர்கின்றது. அந்த ஆறு தன் கிளைகளில் பெருமளவு நீரை நிரப்பிய ஒருகாலத்தில் தில்லையாறு, பைந்தாறு வழியே ஒரு தொடர்ச்சியான நீர்வலை நிலவியதால், பெரியகளப்பின் தெற்கு முனையிலிருந்து மட்டக்களப்பு வாவியின் வடக்கு முனை வரை நீர்வழிப்போக்குவரத்தை தடையின்றிச் செய்ய முடிந்திருக்கிறது. (நாம் போன வாரத் தொடரில் பார்த்த ஒல்லாந்தர் காலக் குறிப்பை (Ferguson 1998:173)  இந்தப் பின்னணியில் தான் புரிந்துகொள்ள முடியும்.)

கீழைக்கரையின் நீர்ப்பாசன மற்றும் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கு இங்கினியாகல் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டபோது, அதிலிருந்து இரண்டு கால்வாய்கள் அமைக்கப்பட்டன. இதில் நீர்த்தேக்கத்தின் தெற்காகச் சென்று அம்பாறை இறக்காமக் குளத்தில் முடியும்  “வலதுகரைக் கால்வாய்” 32 கி. மீ. நீளமானது. வடக்காக  மட்டக்களப்பு நவகிரி நீர்த்தேக்கம் வரை செல்லும் “இடதுகரைக் கால்வாய்”, 52 கி.மீ. நீளமானது (Arumugam 1969).

கீழைக்கரையின் நடுநிலத்துக்கு பெருமளவு நீரை வழங்கும் கல்லாற்றைச் சூழ பெரும் எண்ணிக்கையிலான தொல்லியல் மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தீகவாபி விகாரமும் தீர்க்கவாபி மண்டலம் எனும் நிர்வாகப் பிரிவும் பழைமைவாய்ந்த இறக்காமம் கிராமமும் இவ்வாற்றை அண்டித்தான் உருவாகி நீடித்துள்ளன. கல்லாற்றின் படுகைக்கு அருகேயுள்ள மல்வத்தை, முள்ளிக்குளம் மலை, இறக்காமம், கொன்றைவட்டவான் குளம், அம்பாரக்குளம்,   என்பவற்றின் அருகே பிராமிக்கல்வெட்டுகளும் ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்ட தொல்பொருட்களும் இடிபாடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழைக்கரையின் நாகரிகம் பிறந்த மிக முக்கியமான ஆறுகளில் ஒன்று, கல்லாறாகும்.


7. அம்பலத்தாறு:

அம்பலத்தாறு, ஊரக்கையாறு, நாவலாறு, வில்லாறு, கூமுனையாறு என்பவற்றின் படுகைகள்


சிங்களப்பெயர் அம்பலம் ஓயா. நீத்தையாறு என்றும் அழைக்கப்படும். உகணையில் ஊற்றெடுக்கும் எக்கல் ஆறும், அம்பலம் ஓயாவும் இணைந்து 1961இல் அமைக்கப்பட்ட அம்பலம் ஓயா நீர்த்தேக்கத்தை நிரப்புகின்றன. அங்கிருந்து கிழக்கே பாயும் அம்பலத்தாறு, அக்கரைப்பற்று பனங்காட்டுக்கு தெற்கே பட்டிமேட்டில் பெரியகளப்போடு கலக்கின்றது. அம்பலத்தாற்றின் நீர்ப்படுகைப் பரப்பு 115 சதுர கி. மீ. இதன் கரையோரமாக பொத்தானை மலை, அலிக்கம்பை முதலான தொல்லியல் இடங்கள் அமைந்துள்ளன.


8. ஊரக்கை ஆறு:


தாலிபோட்டாறு என்றும் அழைக்கப்படும். சிங்களத்தில் பன்னல் ஓயா என்று பெயர். இதன் நீர்ப்படுகை 184 சதுர கி.மீ. மொனராகல் மலைக்குன்றுகளிடையே ஊற்றெடுக்கும் பன்னலோயா உகணையில் பன்னல்கம நீர்த்தேக்கத்தை உண்டாக்குகிறது. அங்கிருந்து உருவாகும் ஊரக்கை ஆற்றின் நீர்வரத்து சாகாமக் குளத்துக்குப் பாய்ந்து, பின்னர், சாகாமம் ஊரக்கைவெளிக்கருகே பெரிய களப்பில் கலக்கின்றது. ஊரக்கையாற்றின் படுகையில் மொட்டையாகல் மலை, சாகாமம், ஊரக்கவெளி  உள்ளிட்ட பல தொல்லியல் மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.



9. நாவலாறு:

நாவலாற்றின் சிங்களப்பெயர் ஃகெட ஓயா. இதன் பழைய பெயர் சடாவை ஆறு என்பது இடச்சு வரைபடங்களிலிருந்து தெரிகின்றது. 611 சதுர கி. மீ. பரப்பளவுள்ள நீர்ப்படுகை கொண்ட நாவலாறு, மொனராகல் மலைக்குன்றுகளிடையே ஊறி கிழக்கே பாய்ந்து பொத்துவில்லுக்கும் பாணகைக்கும் இடையே இரட்டல் என்ற இடத்தில் இரட்டல் குளத்துக்கு நீரை வழங்கியபடி இரு கிளைகளாகப் பிரிந்து பாணகை சாத்திரிவெளியிலும், அறுகங்குடா பசறிச்சேனையிலும் கடலில் கலக்கிறது. நாவலாற்றை அண்டி இலகுகலை, மங்கல மகா விகாரம், நீலகிரி புத்த விகாரம், சாத்திரிவெளி, இரட்டல் உள்ளிட்ட பல தொல்லியல் மையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



10. வில்லாறு:

வில்லாறு (சிங்களம்: வில ஒய), மொனராகலுக்கு அருகில் அத்திமலைக் குளத்தில் ஊற்றெடுத்துப் பாய்ந்து பாணகை வாவி என்றழைக்கப்படும் பாணகைக் குளத்துக்கு நீரை வழங்கி கிழக்கே சென்று, பாணகைக் களப்பு மூலம் கடலில் கலக்கும் ஆறு. சுமார் 30 கி.மீ. நீளங்கொண்ட இச்சிற்றாற்றின் கரையிலேயே பிராமிக்கல்வெட்டில் ‘பணவ’ என்றழைக்கப்படும் பாணகை ஊரும், தென்குடும்பிமலை, குணுகொலைக் களப்பு உள்ளிட்ட தொல்லியல் மையங்களும் காணப்படுகின்றன.



11. கூமுனையாறு:


கூமுனையாறு கீழைக்கரையின் தென்னெல்லையாகப் பாயும் சுமார் 116 கி.மீ. நீளமுள்ள ஆறாகும். ஊவா மலைத்தொடரில் மடுல்சீமை அருகே ஊற்றெடுக்கும் கூமுனையாறு, கிராவையாறு, சுளுந்தையாறு (ஃகுலாந்த ஒய) ஆகிய கிளைநதிகளிடமிருந்து நீரைப்பெற்று ஓடி,  கூமுனையில் அல்லது பூமுனையில் கடலில் கலக்கிறது. இதன் சிங்களப்பெயர், கும்புக்கன் ஓயா. கும்புக் என்றால் சிங்களத்தில மருதமரம். இதன் கழிமுகத்துக்கு அருகே பூமுனை அல்லது கூமுனை எனும் கிராமம் அமைந்திருந்ததால், தமிழில் இது கூமுனையாறு என்று அழைக்கப்பட்டது.

கீழைக்கரையைப் பொறுத்தவரை, வேறெந்த இடத்தையும் விட அதிகளவு எண்ணிக்கையிலான தொல்லியல் மையங்கள் கூமுனையாற்றின் படுகையை அண்டியே கண்டறியப்பட்டுள்ளன. கூமுனையிலிருந்து உகந்தமலை வரை இந்தத் தொல்லியல் மையங்கள் பரந்து விளங்குகின்றன. போவத்தகல், கொத்ததாமுகல், பம்பரக`ச்தலாவை ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

ஆக, கீழைக்கரையின் வரலாற்றைக் கட்டியமைத்ததில், அதன் புவிச்சரிதவியலும், குறிப்பாக கரைச்சை –  ஆறுகள் நிறைந்த அதன் தரைத்தோற்ற அமைப்பும் முக்கியமான வகிபாகத்தை அமைத்தது என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். இந்த நீர்நிலைகளை அண்டித்தான் பல தொல்குடியிருப்புகள் அமைந்திருக்கின்றன, வணிக – போக்குவரத்து பாதைகள் நீடித்திருக்கின்றன என்பதை ஓரளவு அனுமானிக்கக்கூடியதாக இருக்கும். தரைத்தோற்ற அமைப்புக்கு மேலதிகமாக இந்நிலத்தின் வரலாற்றைக் கட்டியமைத்த இன்னொரு காரணி, காலநிலை.

கீழைக்கரை டிசம்பர் முதல் பெப்ரவரி வரையான வடகீழ் பருவப்பெயர்ச்சி

கீழைக்கரையின் நடுப்பகுதி (ஏறாவூர் முதல் திருக்கோவில் வரை), டிசம்பர் மாதம் முதல் பெப்ரவரி வரையான காலத்தில் வடகீழ் பருவக்காற்று மூலம் அதிகூடிய மழைவீழ்ச்சியைப் பெறுகிறது. இக்காலத்தில் பெறப்படும் மழைவீழ்ச்சியானது, 500 தொடக்கம் 1000 மி.மீ. ஆகும் (உரு.06). ஒக்டோபர் முதல் நவம்பர் வரையான இரண்டாம் பருவப்பெயர்ச்சி இடைக்காலத்தில் மட்டுநகருக்கு வடக்கேயுள்ள அரைப்பகுதி 500 தொடக்கம் 750 மி.மீ. மழைவீழ்ச்சியையும் தெற்கு அரைப்பகுதி 300 தொடக்கம் 500 மி.மீ. வரையான மழைவீழ்ச்சியையும் பெறுகின்றது. எனவே ஒக்டோபர் முதல் பெப்ரவரி (தமிழ் ஐப்பசி முதல் மாசி) வரையான ஐந்து மாத காலம், கீழைக்கரையில் மிதமான காலநிலை நிலவுகிறது (Department of Meteorology, 2022).

ஏனைய காலங்களில் வெப்பமான காலநிலையே நிலவும் போதும், இங்கு ஏராளமான எண்ணிக்கையிலுள்ள நீர்நிலைகள், குளங்கள், சிற்றாறுகள் குடிநீருக்கும் விவசாய நீர்ப்பாசனத்துக்கும் வேண்டிய நீர்த்தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானவையாக இருக்கின்றன. இப்பகுதியின் வெப்பநிலை வீச்சு 24 – 37 பாகை செல்சியசுக்குள்ளேயே காணப்படுவதும், இந்த மிதமான சுவாத்திய நிலைக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல வாழிடங்களை இங்கு கண்டுகொண்டு மனிதகுலம் பெருகத் தொடங்கியமைக்கு பிரதான காரணங்களாக அமைந்தவை இந்தச் சூழற் காரணிகளே என்றால் அது மிகையாகாது.

தொடரும்.

அடிக்குறிப்புகள்

[1] மகாவலி கங்கையின் கிளையாறான வெருகலாறு வெருகல் முகத்துவாரத்தில் கடலில் கலக்கும் போதும், அதன் கிளையாறான சுங்கான் குழி ஆறு, உல்லைக்களிக் களப்பிலே கலக்கின்றது.  கல்லாற்றின் கிளையாறுகளான பைந்தாறும் தில்லையாறும் முறையே மட்டக்களப்பு வாவியிலும் பெரியகளப்பிலும் இணைகின்றன. எனவே கீழைக்கரையில் ஒற்றை ஆறாக ஓடும் கூமுனையாறு மட்டுமே கடலில் நேரடியாகக் கலக்கும் ஒரே ஆறாகும்.

[2]  13ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய நம்பி திருவிளையாடல் புராணத்தில் இந்நான்கு ஆறுகளும் முறையே மாவலி, கல்லணை, கம்பளை, வலவை என்று அழைக்கப்படுவதுடன், அவை   ஈழத்திலே சமனொளிபாத அடிவாரத்தில் தோன்றுவதாக பாடப்பட்டுள்ளது. “கருதிடின் வலவை மாவலிகங்கை கம்பளை கல்லணை என்னும் தரு சமனொளி சூழ் நதிகள் நான்கு இடமாம்” – நம்பி திருவிளையாடல் 25:12. (சாமிநாதையர் 1906:௬௨) சிங்கள மரபுரைகளிலும் சிங்கள சிறார் பாடல்களிலும் கூட  இது மீளமீளச் சொல்லப்பட்டுள்ளது (Plea to conserve Adam’s Peak, 2018). எனவே இம்மரபுரையின் உண்மைத்தன்மையை ஆராயவேண்டும். ஒருவேளை, காலனித்துவ ஆட்சிக்காலத்தில் சிவனொளிபாத மலையில் ஊற்றெடுத்த ஓடைகளைத் தடுத்து மவுசாக்கலை நீர்த்தேக்கம், காசல்ரீ நீர்த்தேக்கம் என்பன அமைக்கப்பட்ட பின்னர், அங்கிருந்து துவங்கிய ஒரு துணையாற்றின்  நீர்வரத்து மகாவலிகங்கையைச் சென்றடையவில்லையா என்பது தெரியவில்லை. இன்று மவுசாக்கலை, காசல்ரீ என்பவற்றின் நீர்ப்பாய்ச்சல் முழுமையாகக் களனி கங்கைக்கே பாய்கிறது.  

[3] இன்று மன்னன்பிட்டி என்றழைக்கப்படும் தம்பன்கடவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிராமம். தம்பன்கடவை என்ற இவ்வூர்ப்பெயர் காலனித்துவ காலத்தில் இவ்வூரைச் சூழ்ந்து விளங்கிய நிர்வாக மாவட்டத்தின் பெயராகவும் விளங்கிற்று. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அம்மாவட்டம் பொலனறுவை என்று பெயர் மாற்றப்பட்டபோதும், இன்றும் அங்குள்ள பிரதேச செயலகப் பிரிவு, தமன்கடுவை என்றே அழைக்கப்படுகிறது.

[4] நாமலோயாவை மறித்து 1960-1961 க்கும் இடையே நாமலோயாக் குளம் கட்டப்பட்டுள்ளது. இக்குளத்திலிருந்து வடியும் நீரே ஆந்தலோயாக் குளத்தைச் சென்று சேர்கிறது.
[5] ஒருகாலத்தில் மட்டக்களப்பு வாவியின் தென்னந்தம் கல்லோயாவின் கழிமுகமாக  இருந்தது என்பதையும், மட்டக்களப்பு வாவி கடலில்  கலக்கும் இடத்தில் பெரியகல்லாறு, கோட்டைக்கல்லாறு ஆகிய பெயர்களில் முகத்துவாரங்கள் இருப்பதையும் இங்கு ஒப்பிடலாம்.

உசாத்துணைகள்

  • சாமிநாதையர்., உ.வே.சா (பதிப்பு.). (1906). திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம். சென்னை: பதிப்பாளர்.
  • Arumugam., S. (1969). Water Resources of Ceylon: Its Utilisation and Development. Colombo: Water Resources Board.
  • Capper., J. (1845). A Descriptive Catalogue of Woods of Ceylon. JCBRAS Vol. II. pp. 136-158.
  • Department of Meteorology, (2022). Climate of Sri Lanka, Retrieved from: http://www.meteo.gov.lk/index.php?option=com_content&view=article&id=94&Itemid=310&lang=en&lang=en
  • Fernando., P.E.E. (1978). Allai Copper- Plate Charter of King Nissankamalla. The Sri Lanka Journal of the Humanities, IV, 1 & 2. pp.73-91.
  • Ferguson, D. (1998). The Earliest Dutch Visits to Ceylon. New Delhi _ Madras: Asian Educational Services.
  • Plea to conserve Adam’s Peak, (2018.12.13). Daily News. Retrieved From: https://www.dailynews.lk/2018/12/13/tc/171141/plea-conserve-adam%E2%80%99s-peak
  • Ratnasiri., J. (2010.03.31).  Origi of Kelani, Mahawei, Walawe and Kalu Ganga. The Island. p.09.
  • Silva, E. I. L., Katupotha, J., Amarasinghe, O., Manthrithilake, H., Ariyaratna, R. 2013. Lagoons of Sri Lanka: from the origins to the present. Colombo: International Water Management Institute.
  • Tennent, J.E. (1860). Ceylon: An Account of the Island, Vol I, London: Longman.

இவ்வத்தியாயத்தில் பிறமொழி ஒலிப்புக்களை சரியாக உச்சரிப்பதற்காக, ISO 15919ஐத் தழுவி உருவாக்கப்பட்ட தமிழ் ஒலிக்கீறுகள் (Diacritics) பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஒலிக்கீறுகளின் முழுப்பட்டியலை இங்கு காணலாம்.


ஒலிவடிவில் கேட்க

14937 பார்வைகள்

About the Author

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • April 2024 (19)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)
  • March 2023 (25)