முனிகளின் இராச்சியம்
Arts
18 நிமிட வாசிப்பு

முனிகளின் இராச்சியம்

November 12, 2024 | Ezhuna

பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது.

அறிமுகம்

மனிதர் சமூக விலங்காக அடையாளப்படுத்தப்படுகின்றனர். இயற்கையுடனிணைந்த வாழ்வில் தன் தேவைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டேயிருப்பது மனிதரியல்பாகும். இயற்கையை வெல்ல முடியாத தருணங்களில் எல்லாம் மனிதர் ‘இயல்பிறந்த’ ஆற்றலாக அதனைக் கருதி அச்சத்துடன் வழிபட, விசுவசிக்க, இறைஞ்சி நிற்கத் தலைப்பட்டனர். தான் நினைத்தது சித்திக்கச் சித்திக்க, மேலும் விசுவசிக்கவும் இறைஞ்சவும் நம்பிக்கை கொள்ளவும், தன் பகுத்தறிவைப் புறந்தள்ளி, அளவற்ற பக்தி கொள்ளவும் தலைப்பட்டனர். அது வயது, குலம், பால் என எல்லாப் பாகுபாடுகளும் கடந்த செயல்நிலையாகப் பரிணமித்தது.

குல தெய்வங்களும், குலத்துக்கப்பால் யாவரையும் இரட்சிக்கும் தெய்வங்களும் உருவாயின. ஒவ்வொரு மனிதரும் தனது இருப்புப் பற்றிக் கொண்டிருந்த அச்சமும் வாழ்தலுக்கான உணவுத்தேடலும் ஏனையனவும், பாதுகாப்புச் சார்ந்த உணர்வுந்துதலை மையப்படுத்தின. இனக் குழுத்தலைவர், உயிரைக் காத்த வீரர் என தன்னை, தன்னைச் சூழ உள்ளவரைக் காத்தவர் மரியாதைக்குரியோராகவும்; பிறருக்காகத் தன்னுயிர் நீத்தவர் வழிபடு தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் ஆயினர்.

அத் தெய்வ உருவாக்கமும், வழிபடும் சடங்கும், கதைகளும், பாடல்களும், கூத்துகளும் சமூக மானிடவியலை புரிந்து கொள்ளவும் எழுதவும் பெரிதும் துணை நிற்கின்றன. பண்பாட்டசைவியக்கத்தை இனவரைவியலை அறியவும் எழுதவும் தூண்டின. இறந்தவர்கள் நன்மை செய்பவர், தீமை செய்பவர், நன்மையும் தீமையும் செய்பவர் என வகைப்படுத்தப்பட்டுக் கருதப்படுவதும் உண்டு. அவற்றுள் பேயாக அச்சத்துடனும் தெய்வமாக பக்தியுடனும் வணங்கப்படுகின்ற தெய்வங்களுள் ஒன்றாக முனி – முனீஸ்வரர் விளங்குகின்றார்.

முனி – முனீஸ்வரர் – முனியப்பர்

ஈழத்துப் புலத்தில் தமிழர் வாழ்கின்ற கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களிலும் இன்றுவரை வணங்கப்படுகின்ற நாட்டார் தெய்வங்களுள் முனீஸ்வரருக்குத் தனி இடம் உண்டு. முனீஸ்வரரின் வரலாற்றை எழுத முற்படுகையில் சிலர் ‘ரிக்’ வேதத்தில் ‘முனி’ என்னும் சொல் உள்ளது என்றும் அதற்கு ‘தெய்வ ஆவேசம் படைத்தவர்’ என்பது பொருள் என்றும் குறிப்பிடுவர். உபநிடதங்கள், பகவத்கீதை முதலான நூல்களில் “உலக வாழ்வைத் துறந்து மௌனத்தைக் கைக்கொண்டு ஞானவழியாகிய பரமதியானத்துள் மூழ்கி விருப்பு, வெறுப்புகள் யாவும் நீங்கியவர்கள்” என முனி பற்றிக் குறிப்பிடுவதாகவும் கூறப்படுகின்றது.

முனி எனும் சொல்லுக்கு கழகத் தமிழகராதி; கோபம், இருடி, புத்தன், வில், யானைக்கன்று, அகத்தி, தவத்தோன் எனப் பலவாறு பொருள் சுட்டுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டே முனிவர் எனும் சொல் பிறந்தது.

முனி என்பது ஒருவரல்ல; அது பல தோற்றங்களை உடைய ஏதோ ஒன்றாகவோ அல்லது பலவாகவோ உள்ளது. பல்வேறு காரணங்களால், பெயரில் முன்னடை அல்லது பின்னடைச் சொற்களை உடைய பல முனிகள் காணப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் முனி பேயாகவே கருதப்பட்டிருக்க வேண்டும். முனி உலாவுகின்ற நேரம் நடுச்சாமப் பொழுது. அது விரும்பி உறைகின்ற ஆல், புளி மரங்களுக்குக் கிட்டவோ வெளிகளிலோ நடுச்சாமப் பொழுதை அண்மித்துச் செல்பவர் முனியிடம் அடி வாங்குவார். முனியை கண்டு ஏங்கி மரணத்தைத் தழுவிய கதைகளும் அநேகம் சொல்லப்படுகிறது. கந்த சக்ஷ்டி கவசத்தில்:

“அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதரும்

அடியனைக் கண்டால் அலறிக லங்கிட”

என வரும் வரிகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.         

  1. யாராலும் கட்டுப்படுத்த முடியாதது முனி
  2. அது துன்பத்தைத் தருவது
  3. புழங்கடை முனி பிள்ளைகளைத் தின்னும்
  4. கொள்ளிவாய்ப் பேய்கள் குறளைப் பேய்கள்
  5. பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதர்

எனும் கருத்துகளை இவ்வரிகள் உணர்த்தி நிற்கின்றன. இவ்வளவு விடயங்களும் யாழ்ப்பாணத்து மக்களின் நம்பிக்கைகளாக இருந்து வந்துள்ளன. ‘முனி அடிக்கும், பிடிக்கும்’ எனும் தொடர் இன்று வரை வழக்கில் உள்ளது. பிள்ளைகள் குழப்படி செய்தால் பொக்காண்டியிடம் – பொக்காண்டிப்பேயிடம் – முனியிடம் பிடித்துக் கொடுப்பேன் என மிரட்டும் வழக்கம் உள்ளது. தீய சக்திகள் புழக்கடையில் உறையும் என்ற நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. வயல்வெளிகளில், வெறும் வெளிகளில் தெரிகின்ற ஒளிப் பொருட்கள் கொள்ளிவாய்ப் பேய்கள் ஆகவும் பந்தத்துடன் உலாவும் முனிகள் ஆகவும் நம்பப்பட்டு வந்துள்ளன. இன்று இது ‘ஏதேன் வாயு’ என அறிவியலில் கூறுகின்றது. பொழுதுபட்டதன் பின்பு, அந்தியின் பின் இருட்டில் பெண்கள், சிறுவர்கள் வெளியில் செல்லக்கூடாது என்றும் அவர்களை முனி பிடிக்கும் என்ற நம்பிக்கையும் காணப்பட்டது. யுத்த காலம் இந்த நம்பிக்கைகளைக் குறைத்துவிட்டது. யாழ்ப்பாணத்தவர் பலர் கந்தசக்ஷ்டி விரதம் பிடிக்க இந் நம்பிக்கைகளும் காரணமாக இருந்திருக்கலாம்.

பஞ்சமுனிகளாக வாழ்முனி, செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி என்பன கூறப்படுகின்றன. இவை தவிர பதினெண்முனிகள் பற்றியும் கூறப்படுகின்றன. ஜடாமுனி, இலாடமுனி, நாதமுனி, பூதமுனி, சக்திமுனி, மாயமுனி, மந்திரமுனி, பால்முனி, கருமுனி, சுடலை முனி, நெல்லாண்டி முனி, வாள் முனி, சின்னமுத்து முனி உள்ளிட்டவை அவற்றுட் சில.     

இலங்கையில் மலையகப் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக குடியேறிய மக்கள் தம் வாழ்வியல் சூழலோடு இணைத்து பல முனிகளை தனித்துவமாக வழிபட்டு வருகின்றனர். ரோதை முனி, தவறணை முனி, கம்பி முனி, கவ்வாத்து முனி என்பன சில உதாரணங்களாகும் (ஜெயசீலன்,எம்.,2020), (மலையகத் தமிழரின் கிராமிய வழிபாடுகள் நாட்டார் வழக்காறுகள், வ. இன்பமோகன், (பதி) குமரன் புத்தக இல்லம், கொழும்பு). தமிழகத்தைப் போலவே இங்கும் முனி எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்ட முனியாண்டி, முனீஸ்வரர், முனியப்பு, முனியம்மா, முனுசாமி போன்ற பெயர்கள் வழக்கில் உள்ளன.

முனியைப் பேயாகக் கண்டு பயந்தோடிய தன்மையை நீங்கி முனியப்பராக, முனீஸ்வரராக – தெய்வமாக வழிபடும் மரபு பிற்காலத்தில் உருவாயிற்று. ஆயினும் அச்சத்தை விளைவிக்கின்ற ஆவேசம் மிகுந்த வீரம் மிக்க காவல் தெய்வமாக அவர் கருதப்படுகிறார். பயந்து ஓடுதல் பக்தியாக, வழிபாடாக, மடைபரவுவதாக மாறிற்று. கேட்பது தரும் கடவுள் எனும் நம்பிக்கையுருவாயிற்று. கொள்ளியைக் கையிலேந்தி பன்றி, யானை போன்ற மிருகங்களிடமிருந்தும் பிறமனிதர்களிடமிருந்தும் வயல்களைக் காக்கும் தெய்வம் என்ற நம்பிக்கை நிலைபெறலாயிற்று. தனிவழியே போகும் மனிதரைக் காக்கும் தெய்வமாக, இடர் களைந்து மனதில் நம்பிக்கை தரும் தெய்வமாக முனி கொண்டாடப்படும் நிலையை இன்று அவதானிக்க முடிகிறது. வவுனியா மூலாய்மடு, பேயாடி கூழாங்குள முனியப்பர் மீது த. மனோகரன் எழுதிய பாடலில்:

“பெருவீதி மருங்கிருந்து வழிகாட்டும் ஐயா

போகும் வழி சீரமைந்து விட வேண்டும் நீயே

காவலாய் இருந்தெம்மைக் காத்தருள வேண்டும்

பேயாடிக் கூழாங்குளம் உறையும் முனியப்பரே காவல்”

எனப் பாடியுள்ளமையும் பயமின்றிப் பயணிக்க, மனவுறுதி கொள்ள, நல்வழி காட்ட வேண்டும் என வேண்டி நிற்பதும் இம்மாற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.

முனிகள் பற்றிய கதைகள்

  • தக்கன் யாகத்தினை அழிக்க சிவன் தனது உக்கிர வடிவமாக வீரபத்திரரை உருவாக்கினார். வீரபத்திரர் யாகத்தையும், அதில் பங்கு பற்றியவர்களையும் மிகுந்த கோபத்தோடு தாக்கியளித்தார். அதேவேளை சிவபெருமான் தன்னிலிருந்து தன்னம்சமாக முனீஸ்வரரை உருவாக்கினார். அவர் காவல் தெய்வமாக நல்லவரைக் காத்தார். அவர் காலந்தோறும் பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகின்றார். இவரிலிருந்தே ஏழு முனிகள் தோன்றினர்.
  • சிவனும் உமையும் உடனிருந்த காலத்தில் உமையை விடுத்து சிவனை மட்டுமே பிருங்கிமுனிவர் வழிபட்டார். இதனால் கோபமுற்ற உமையம்மை சிவனில் பாதியாகக் கடுந்தவம் செய்ய முற்பட்டார். வாழைத்தோட்டம் அமைத்து சிவலிங்கத்தை அதில் ஸ்தாபித்து, அபிக்ஷேகம் செய்ய முனைந்த போது நீர் இருக்கவில்லை. விநாயகரையும் முருகனையும் அழைத்து நீரெடுத்து வரப்பணித்தார். மலையில் தவம் செய்த முனிவரின் கமண்டலத்தைத் தட்டி அதிலிருந்து கமண்டலவாற்றை விநாயகர் உருவாக்க, முருகனோ மலையில் வேலூன்றி சேயாற்றை உருவாக்கினார். நீர் வரக்காணாத உமையம்மை நிலத்தில் பிரம்பாலடிக்க பிரம்பகவாறு தோன்றிற்று. வெப்பத்தால் சிவந்த அம்மை நீர் வரத்தால் பச்சை நிறத்தினலாயினாள். அன்று தொட்டு பச்சையம்மன் ஆனாள். சிவலிங்கத்துக்கு அபிக்ஷேகம் செய்து விரதமிருந்த காலத்தில் அரக்கர்கள் பலர் அத் தவத்தை குழப்ப முற்பட்டனர். அப்போது சிவனிலிருந்து பஞ்சமுனிகள் தோன்றி பச்சையம்மனுக்குக் காவலாயிருந்தனர். இன்றும் அம்மன் கோயிலில் முனிக்கு இடமுண்டு.
  • தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்தி வந்த அந்தகாசுரன் எனும் அசுரனை அழித்துத் தம்மைக்காக்கும் படி வேண்டிய அடியார்களைக் காப்பதற்கு முற்பட்ட பராசக்தித் தாயானவள் ‘காத்தாயி’ எனும் பெயரில் பூமியில் அவதரித்ததாகவும் அவள் அந்தகாசுரனை அழிக்க ஏழு முனிகளைப் படைத்தாள் என்றும் அவர்கள் அசுரனை அழித்துக் கலியுகத்தில் மக்களைக் காக்க அவதரித்தனர் என்றும் கூறப்படுகின்றது.
  • பிரம தேவரின் மானச புத்திரர்களான சனகர், சந்தனர், சனாதனர், சந்தனகுமாரர் என்ற நான்கு முனிவர்கள் சிவபெருமானிடம் ஞானம் அருளுமாறு வேண்ட அவர்; குருவாக தென்திசை நோக்கி அமர்ந்து ஞானத்தைப் போதித்தார். சிவபெருமானின் ஞான வடிவம் தட்சிணாமூர்த்தி. முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரராக இருந்து ஞானத்தைத் போதித்ததால் அவர் முனீஸ்வரர் என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

ஆக முனி ‘சிவனின் அம்சம்’ எனும் கருத்து வளர்த்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆயினும் முனீஸ்வரன் சிவனின் அம்சம் என்பது போல சிம்ம முனி, நரசிம்ம (திருமால்) அம்சம் எனவும், நாதமுனி நாரதர் அம்சம் எனவும், வேதமுனி பிரம்மாவின் அம்சம் எனவும், ஏனைய முனிகள் ஏனைய தெய்வங்கள், தேவர்கள் அம்சம் எனவும் சொல்லும் வழக்கமும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. பேயாக, சிறு தெய்வமாக இருந்த முனிக்கு முனீஸ்வரன் காயத்ரி மந்திரம், பூஜா மந்திரம் என்பனவும் இயற்றப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

‘மம்மல்’ பொழுதுகளில், உச்சிப் பொழுதுகளில், சாமத்தில் தனித்துச் செல்லும் பெண்களைப் பிடித்து தான் விரும்பியதை அவர்களிடம் பெறுகின்ற பேயாகவும் அவர்களிடம் இருந்து விலகிச் செல்ல முட்டை, கோழி, ஆடு கேட்பவராகவும் இருந்தவர் முனி. சுருட்டுப் பற்றிய படி சாமங்களில் உலாவருபவர். அவரை நேரே காண்பவர் மீது தொற்றுபவராக அல்லது பிடித்து துன்பம் தருபவராக அல்லது இவரைக் கண்டவுடன் அதிர்ச்சியில் கண்டவர் இறந்துவிடுமளவுக்குக் கிலியை ஏற்படுத்த வல்லவராக இருந்த முனி, ஈஸ்வரனாரோடு இணைக்கப்பட்டு முனீஸ்வரனாக எல்லைக் காவல் தெய்வமாக, சுடலைக் காவலராக பைரவருக்கு சம அந்தஸ்து உள்ளவராக்கப்பட்டார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வடமராட்சிக்கு செல்லும்போது வல்லைப் பாலம் தாண்டியவுடன் முனிக்கு ஒரு கோயில் உண்டு. வழிப்பயணம் இடரின்றித் தொடர பயணிகள் அதனை வணங்கிச் செல்வர் (இப்போது அந்த இடத்தை விநாயகரும், சீரடி பாபாவும் ஆக்கிரமித்து வருகின்றனர்). அந்த முனி வல்லைவெளி தாண்டியவுடன் உள்ள புறாப்பொறுக்கி எனுமிடத்தில் உள்ள பெரிய ஆலமரத்தில் வசித்து வந்ததாகவும் அதைத் தறித்ததன் பின் அருகிலிருந்த மருதமரத்தில் உறைவதாகவும் கூறப்படுகிறது. இதுபோல வேறு முனிகளும் வடமராட்சியில் உள்ளன. அவை யாவும் மாதமொரு முறை ஒன்று கூடுவதாகக் கூறப்படுகிறது. புறாப்பொறுக்கியில் உள்ள முனியை, குறித்த நாளில் உயிலங்குன்றடி முனி வந்து சந்தித்து அதனை அழைத்துக்கொண்டு திக்கத்து முனியிடமும், பின்பு முறையே சக்கோட்டைமுனி, பருத்தித்துறை தாமரைக் குளத்தடி முனி என்பவைகளை அழைத்துக் கொண்டு சந்தைப் புளியடி முனியிடமும் வருவார். இவை வரும்போது தத்தம் பரிகலங்களுடன் வரும். சங்கு, சேமக்கலம், எக்காளம், சீழ்க்கை என்பன ஒலிக்கும். எதிரில் யாரேனும் எதிர்பட்டால் பரிகலங்கள் அவர்களை அடித்து விடும். அத்துன்பம் நீங்க மக்கள் நேர்த்திக் கடன் வைத்து நிறைவேற்றுவர் (கணபதிப்பிள்ளை, க. 1962, ஈழத்து வாழ்வும் வளமும், 61 -62).

முனியால் பீடிக்கப்பட்ட ஒருவர் நீர்நிலையை அடைந்தாலோ அல்லது நீர்ப்பொருள் ஒன்றைத் தொட்டாலோ முனி அவரை விட்டு விடும் என்றும், தூக்கத்திலே முனி ஒருவரைப் பீடிப்பின் ஈரச்சாக்கை காலால் மிதித்தவுடன் முனி விலகிச் சென்று விடும் என்றும் நம்பிக்கைகள் காணப்படுகின்றன. சுருட்டை, கொள்ளியை அதாவது நெருப்பை விரும்பும் முனி, நீரில் வெறுப்புக் கொண்டிருப்பதாகக் (கோபிகா, எழுதுமட்டுவாழ்) கருதப்படுகிறது.

மலையகத்தில் தொழில்துறை சார் வழிபாட்டில் முனிகளின் ஆதிக்கம் அதிகமுண்டு (ஜெயசீலன், எம்., 2020,165-173). தேயிலைக் கன்றுகளை நாற்று மேடையிட்டு வளர்க்கும் இடமாகிய தவறணையில் (யாழ்ப்பாண வழக்கில் இச்சொல் கள்ளுக் கொட்டிலைக் குறிக்கும்) பயிரைப் பாதுகாக்க, தொழிலாளிகளைப் பாதுகாக்க தவறணை முனி வழிபடப்படுகின்றார்.

போக்குவரத்து வளர்ச்சியடையாத பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பறிக்கப்பட்ட தேயிலைக் கொழுந்து மூடையாகக் கட்டப்பட்டு கம்பிகளின் வழியே தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டது. அக் கம்பிகள் ‘கம்பிமுனி’ எனும் தெய்வமாக, தங்களையும் தம் தொழிலையும் காக்கும் தெய்வமாக வழிபட்டது. தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களால் வழிபடப்பட்ட தெய்வம் ரோதை முனி எனப்பட்டது. இவருக்கான வழிபாடு நேர்த்தியாக நடைபெறாதுவிடின் ரோதை முனி உயிர்ப் பலியோ, இரத்தப்பலியோ எடுத்து விடுவார் எனும் நம்பிக்கை வலிதானதாகக் காணப்படுகிறது. இதைவிட மோட்டுமுனி (மேட்டுமுனி) போன்ற பல முனி வழிபாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. துன்பத்திலிருந்து மக்களை காக்கும் தெய்வமாக எல்லா மக்களாலும் வழிபடப்படும் தெய்வமாக முனி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் முனியின் அமைவிடங்கள்

முனிவழிபாடு இலங்கையில் தமிழர் வாழும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. மலையகத் தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் தனிவழிபாட்டு இடங்கள் உண்டு. யாழ்ப்பாணத்திலும் முனி ஊர்கள் தோறும் பரிவாரத் தெய்வமாகவோ தனிக் கோயிலுடையதாகவோ இன்று வரை வழிபடப்படுகின்றது. குறிப்பாக குடிமனைகள் இல்லாத வெளிகளில் தனிக்கோயில்கள் காணப்படுகின்றன.

மட்டக்களப்பு, அம்பாறைப் பிரதேசங்களில் தனிக்கோயில்கள் இல்லை. அம்மன் கோயில்களில் பரிவாரத் தெய்வங்களுள் ஒன்றாக உள்ளது. உதாரணமாக களுவாஞ்சிக்குடி முனைத்தீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தைக் குறிப்பிடலாம். இதே போல பெரும்படை, ஐயனார் கோயில்களிலும் முனிக்கு தனிப் பரிவாரக் கோயிலோ அல்லது படையலிடமோ காணப்படுகிறது. திருகோணமலை, வன்னிப் பிராந்தியங்களில் தனிக்கோயில்கள் உள்ளன.

பெரும்பாலும் நாற்சந்தி, முச்சந்தி, தெருவோரங்கள், ஆளரவமற்ற இடங்கள், ஊர் எல்லைகள், சுடலை போன்ற இடங்களிலேயே முனிக்குத் தனிக்கோயில்கள் இருப்பதை வட இலங்கையில் அவதானிக்க முடிகிறது.

சடங்கு முறைகள்

கிராமிய வழிபாட்டு மரபில் உள்ள முனியின் தனிக் கோயில்களில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கு வைக்கும் வழக்கம் காணப்படுகிறது. பரிவாரமாக இருக்கும் கோயில்களில் பிரதான தெய்வத்துக்கு விளக்கு வைக்கும் நாட்களில் விளக்கு வைக்கப்படுகின்றது. அடியவர்கள் தாம் ஊரை விட்டு வெளியூர் செல்லும்போது, நெடுவழிப் பிரயாணங்களின் போது விளக்கிட்டு வணங்கிச் செல்லும் வழக்கமும் காணப்படுகின்றது. குறித்த கோயிலை ஆதரிப்போரில் ஒருவரே பூசாரியாகவும் திகழ்கின்றார்.

தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, சித்ராப் பௌர்ணமி தினங்களில் சிறப்பு பூசை, மடை பரவுதல், நேர்த்திக் கடன் செலுத்துதல் போன்றன நிகழ்கின்றன. ஐயனார், பெரும்படை மற்றும் அம்மன் கோவில்களில் முனிக்கு தனியான வளுந்துப் பானை வைக்கும் வழக்கம் காணப்படுகின்றது. நீண்ட கால அளவில் ஆடு, கோழி என்பனவற்றை பலியிடுதல் முட்டை, சாராயம், சுருட்டு என்பனவற்றைப் படைத்தல் என்பன முதன்மை பெற்று வந்துள்ளன. இன்னும் சில கோவில்களில் மடையில் சுருட்டு, சாராயம் வைத்தல் நடைபெறுகின்றன. அதேபோல ஆடு, கோழி பலியிடாது நேர்ந்து விடுதலும் உண்டு. உயிர்ப்பலி அருகி வருகின்றது.

பூநகரி, சாவகச்சேரி போன்ற பிரதேசங்களில் சைவமடை வைக்கும் மரபே காணப்படுகின்றது (தகவல்: ச. மார்க்கண்டு). நாகர்கோவில், வீரபத்திரர் கோயில், விக்ஷ்ணு கோயில் போன்றவற்றில் சைவமடையே வைக்கப்பட்டு வருகிறது. அங்கு சாராயம் வைத்தாலும் பருகும் பழக்கம் இல்லை (தகவல், அப்பையா அருட்சிவபாலன், கொழும்புத்துறை). பொதுவில், கை பார்க்காத கப்பல் வாழைப்பழங்களை படைக்கும் மரபும் இக்கோயில்களில் காணப்படுகின்றது (தகவல், கோடீஸ்வரன் விஜிதரன், முகாமைத்துவ உதவியாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்). அதேபோல கேரதீவு ஐயனார், தனங்கிளப்பு முனியப்பர் கோவில்களில் காம்பு கிள்ளாத வெற்றிலையும், நாக்கு மூக்குத் தள்ளாத பழங்களும் படைக்கும் மரபு காணப்படுகின்றது. கிராமியக் கோயில்கள் பலவற்றில் பிள்ளையார், மூலவர் போன்றவர்களை அடுத்து முனிக்கு முதன்மையளிப்பதும் மடை வைப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். பொதுவில் வட இலங்கையில் காலமாமுனிக்கே அதிக செல்வாக்கு இருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆயினும் பொதுவில் முனீஸ்வரன் என்றே சொல்லப்படுகிறது. கல், சூலம், கருங்காலிக் கட்டையின் வழி ஆரம்பத்தில் வழிபடப்பட்ட முனி இன்று முனீஸ்வரராக பெரிய மீசையும் வாளும் ஏந்திய உருவத்தோடு குதிரையுடன் கூடியவராய் உருவக் கடவுளாக வழிபடப்படுகின்றார்.

மட்டக்களப்பில் காளமாமுனியையே முதன்மைப்படுத்துகின்ற அதேவேளை அம்மன் கோயில்களில் வாள் முனிக்கும் தனியான இடமுண்டு.

அரி ஓம் ஐயும் கிலியும் சௌவும் அங்கிசப் பிறை வடிவமும் ஆவென்ற வாயும் ஈ என்ற பல்லும் ஒரு கையில் கமண்டலமும் புலித்தோல் ஆசனமும் வீர மாணிக்க மாலையும் இலங்கிய மணித் தாவடமுமாக வருகின்றார் எங்கள் ஆதி கால மாமுனி அக்கினி மாமுனி அகத்திய மாமுனி குருவே மாதா பிதா….எனச் சடங்குப் பாடலும் காணப்படுகின்றது.

காளமாமுனிக்கு அம்மன் ஆலயங்களில் பரிவாரக் கட்டிடம் உள்ளது (தகவல், பூசாரி கிருபைரத்தினம் சர்வேஸ்வரன், ஆரையம்பதி). முனிக்கு அங்கும் தனிமடை உண்டு. அம்மனுக்குரிய மடையையொத்த மடை, சடங்குகள் என்பன நடைபெறுகின்றன. மந்திரச் சடங்குகளில் காளமாமுனி, வாள்முனி, ஆதிமுனி என்பன முதன்மையாகின்றன. கழிப்புச் சடங்குகளில் காளமாமுனியை ஆட்டி, பின் படையல் படைப்பர். சுடலையில் வைரவருக்கு சமமாக விசேக்ஷமாக முனிக்கும் படையல் வைப்பர். இந்தக் கருத்துகள், மத்திய இந்திய வரலாற்றில் முதன்மை பெற்றிருந்த சைவப் பிரிவுகளில் தாந்திரீக சைவங்களை, குறிப்பாக காளாமுக, கபாலிக சமயங்களை, அவற்றின் சுடலை வாழ்வை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

முனி, கோயிற் சடங்கில் கலையாடி வாக்குச் சொல்லும் மரபு இன்றும் காணப்படுகின்றது. யாழ்ப்பாண மரபில் முனி பொதுவாக கலையாடினாலும் சொத்தி முனியின் ஆட்டம் தனித்துவமானது. கருப்பு நிறத்தில் கீழ் ஆடையும் மேலே கருப்புக் கம்பளியும் போர்த்தி கண்ணாடி போட்டு கையில் பொல்லுடன் ஆடுதல் சிறப்பம்சமாகும். கண்ணாடி போடும் வழக்கம் எப்போது வந்தது என்பதை அறிய முடியாது விடினும், அதற்கு நூற்றாண்டுக்கு உட்பட்ட வரலாறே உண்டு என்பது தெளிவு. இந்தக் கம்பளி, கண்ணாடி, பொல் என்பன மடையில் வைக்கப்படுவது வழக்கம். அதேபோல இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கசையை வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. முனியாக தெய்வமாடுபவர் தனக்குத் தானே கசையால் அடித்தபடி கலை ஆடுவதும் குறி சொல்வதும் குறிப்பிட்ட பிரதேசங்களில் வழக்கமாக இருந்துள்ளது. இந்தப் பண்புகளோடு சொத்தி முனி ஒரு காலைக் கெந்தியபடி அல்லது குறண்டிக் குறண்டி ஆடுவது வழக்கம். முனி ஆடும்போது, விரல் மொத்தத்தில் உள்ள திரியை எண்ணெய்யில் தோய்த்து பந்தம் போல கொழுத்திக் கொடுக்கப்படும். ஆடுபவர் அதனை வாங்கி வாய்க்குள் வைப்பதாகவும், மீளவும் கொழுத்திக் கொடுக்க மீள வாய்க்குள் வைப்பதாகவும், 18 திரிவரை கொடுக்க வேண்டி இருக்கும் எனவும் கூறப்படுகிறது. நீறு போடுகின்ற வழக்கமும் காணப்பட்டுள்ளது. நீறு இடுவதன் ஊடாகத் தீராத நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை இன்று வரை காணப்படுகின்றது.

மட்டக்களப்பு பிரதேசத்தில் இவ்வழக்கங்கள் மாறுபடுகின்றன. கலை ஆடுபவர் புலித்தோல் ஆடை, உருத்திராக்கம், யோக தண்டம், கமண்டலம், சூலம் என்பனவற்றை தாங்கியபடியே முனியாக ஆடுவார். குறி சொல்லி நீறிடுவார். இங்கு முனி ஆட்டங்கள் பல வகையாக உள்ளன. வாள்முனி வாளேந்தி ஆடுதல் இதற்கு உதாரணமாகும். சடங்கின் போது பாடப்படும் காவியப் பாடல்களில் ஆதிமுனி, காளமாமுனி, வாள்முனி பற்றிய குறிப்புகள் வருவதையும் காண முடிகின்றது.

முடிவுரை

முனி பேயாக, குலதெய்வமாக, காவல் தெய்வமாக, தொழில் துறை சார் தெய்வமாக இலங்கை வாழ் மக்களிடம் சமய, சமூக, வாழ்வியல் புலத்தில் செல்வாக்குப் பெற்று நிற்கின்றது. பெண்களை, வழிப்போக்கர்களை பிடிப்பதாக – அடிப்பதாக – படையல் கேட்பதாக – படைத்தால் நன்மை செய்வதாக நம்பப்பட்ட முனி, ஈஸ்வரனுடன் இணைக்கப்பட்டு தெய்வமாக்கப்பட்டது. பயிர் பண்டங்களை, ஊரை, நோய் நொடியில் இருந்து மனிதர்களை காக்கும் குலதெய்வமாக, காவல் தெய்வமாக, தொழிலில் ஏற்படும் இடர்களை நீக்கி பாதுகாப்புத் தரும் முனியாக என்றும் வழிபடப்பட்டு வருகின்றது. வழிமறித்து அடிப்பதும், காறித் துப்பினால் விலகுவதும், வணங்கினால் வழித்துணையாய் வருவதுமாக நம்பப்பட்ட முனி, முனீஸ்வரனாக பெரும் தெய்வமாக்கப்பட்டு வருதலை அவதானிக்க முடிகிறது. ஆடு, கோழி பலியிடப்பட்டு வழிபடப்பட்டு வந்த யாழ்ப்பாணக் கோட்டை முனியப்பர் இன்று பெரும் தெய்வமாகி – ஆகமக் கோயிலாக மூன்று கால பூஜை நடைபெறும் தெய்வமாக விளங்குதலும், வடமராட்சி சுப்பர்மடம் முனீஸ்வரன் கோயிலின் மேல்நிலை ஆக்கமும் இதற்குத் தக்க சான்றுகளாகின்றன. கொள்ளி, நெருப்பு, சுருட்டு, திரி வழி நெருப்பை உண்ணும் தெய்வமாக இவர் சித்தரிக்கப்படுவதோடு, நீரினைக் கண்டால் விலகிச் செல்லும் தெய்வமாகச் சுட்டப்படுவதும் சமூக மெய்யியல் ஆய்வுக்குரிய விடயங்கள் ஆகின்றன. தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் எங்கும் வழிபடப்படும் இத்தெய்வம் தமிழகத்தில் ‘பொடிகாட்’ முனீஸ்வரனாகவும் மலேசியாவில் ‘ஸ்டெதஸ்கோப்’ முனியாகவும் இன்று விளங்குகின்றது. மலையகத்தில் தவறணை முனி, கம்பி முனி, ரோதை முனி என வழிபடப்படுவது துயரம் நிறைந்த மலையக வரலாற்றின் பெருஞ்சான்றாகின்றது. முனி என்பது ஒரு தெய்வமல்ல; அவை பல. இன்றும் முனிகளின் இராச்சியம் தேசமெங்கும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது.


ஒலிவடிவில் கேட்க

4186 பார்வைகள்

About the Author

தி. செல்வமனோகரன்

யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடத்தின் சைவசித்தாந்த துறையின் முதுநிலை விரிவுரையாளராக தி. செல்வமனோகரன் திகழ்கிறார் . இந்திய மெய்யியல் கற்கை புலத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றுள்ளார். இந்துக்கற்கை புலம் சார்ந்து காஷ்மீர சைவமும் சைவ சித்தாந்தமும், இலங்கையில் சைவத்தமிழ் பண்பாட்டு வளர்ச்சியில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, நாயன்மார் பாடல்கள், தமிழில் மெய்யியல் எனும் நூல்களை எழுதியுள்ளார். பெறுதற்கரிதான இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மீள்பதிப்புச் செய்துள்ளார். 'சொற்களால் அமையுலகு' என்னும் இவரது நூல் கலை, இலக்கியம் சார்ந்த விமர்சன நூலாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (15)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)