“நீங்கள் வேண்டுவது மனிதருக்குள்ள உரிமைதான், மிருகங்களைப்போல் நடத்தப்பெறாமல் மனிதர்களைப்போல் தலைநிமிர்ந்து நடக்க உங்களுக்கு உரிமை வேண்டும். அந்த உரிமையில்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? நீங்கள் இன்றே யோசியுங்கள். இப்புஸ்தகத்தில் சொல்லப்பட்ட எல்லாவற்றையும் கவனித்து வாசியுங்கள். வாசிக்கத் தெரிந்தவர்கள் வாசிக்கத் தெரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். எல்லோரும் ஒன்றுகூடுங்கள். ஒற்றுமைப்படுங்கள். சங்கங்கூட்டுங்கள். அவ்விதம் நீங்கள் ஒற்றுமைப்பட்டுவிட்டதாகக் கண்டாலும் கேட்டாலும் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள். பாரதமாதா சந்தோஷப்படுவாள். சுதந்திர வீரர்கள் கூத்தாடுவார்கள். உங்களை அடிமைகளாக வைத்து உங்களது ரத்தத்தை உறிஞ்சும் இனத்தவர்களுக்கு வருத்தந்தான். அவர்கள் ஒரு சிறுபான்மையோர். அவர்களைப்பற்றி உங்களுக்குக் கவலை வேண்டாம். ஆறரை லட்சம் பெயர்களைக் கவனிப்பதா? அல்லது நாலு, ஐந்து ஆயிரம் பேர்களைக் கவனிப்பதா? இன்றே கூடுங்கள்”.
தொழிலாளர் சட்ட புஸ்தகத்தின் இறுதியில் இடம்பெறும், ‘சகோதிரர்களுக்கு ஒரு வார்த்தை’ என்ற பகுதியில், தோட்டத் தொழிலாளரின் யதார்த்த வாழ்க்கை நிலைமையையும் அம்மக்களின் விமோசனத்துக்கான மார்க்கத்தையும் மேற்கண்டவாறு உணர்ச்சிபொங்க எடுத்துரைத்துள்ளார், நடேசய்யர். தொழிலாளர் சட்ட புஸ்தகத்தின் சமூக முக்கியத்துவத்தையும் அந்நூல்வழி நடேசய்யர் ஏற்படுத்த விரும்பிய மாற்றங்களையும் அக்குறிப்புகள் நேரடியாக வெளிப்படுத்தியுள்ளன.
தோட்டத் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவர்களை அணிதிரட்டி, அரசியல் மயப்படுத்துவதும் நடேசய்யரின் அரசியல் இயக்கத்தின் அடிப்படைத் தேவைகளாக விளங்கியுள்ளன. அவற்றை நிறைவுசெய்யும் பல்வேறு செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் நடேசய்யர் முன்னெடுத்து வந்துள்ளார். அதன் ஓர் அங்கமாகத் தொழிலாளர் சட்டங்களை மக்கள்மயப்படுத்தல் விளங்கியுள்ளது.
பத்திரிகை எழுத்துகளிலும் துண்டுப்பிரசுரங்களிலும் சட்டமன்ற விவாதங்களிலும் தொழிலாளர் பற்றிய சட்டங்களின் போதாமைகளை எடுத்துக்காட்டியுள்ள நடேசய்யர், உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் ஏட்டளவில் மட்டும் இடம்பெறுவதைக் கண்டித்து வந்துள்ளார். சட்டங்கள் பற்றிய தெளிவின்மையால் தொழிலாளர்கள் தம் உரிமைகளை அறிந்துகொள்ளாதிருப்பதையும் சட்டங்களின் அடிப்படையில் பெற்றுக்கொள்ள வேண்டியவற்றுக்குப் பணத்தையும் காலத்தையும் விரயமாக்குவதையும் அவதானித்துள்ள அவர், தொழிலாளர்களிடத்தில் ‘தொழிலாளர் சட்டங்கள்’ தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அம்முயற்சியின் ஒரு வெளிப்பாடாகவே, ‘தொழிலாளர் சட்ட புஸ்தகம்’ அமைந்துள்ளது. நூலின் முகவுரையில் அவர் குறிப்பிட்டுள்ள பின்வரும் கருத்துகள், அதனை வெளிப்படுத்தி நிற்கின்றன:

“தங்களுக்கு எவ்விதமான சுதந்திரங்கள் உண்டு என்பதை இவர்கள் அறிய முடியாதிருக்கிறார்கள். ஏதாவது கஷ்டம் வந்தால் எழுத்துக் கூலிக்காரர்களிடமும் சில ஏமாற்றுக்காரர்களிடமும் அகப்பட்டுக்கொண்டு உள்ளவற்றையும் தொலைத்து அவதிக்குள்ளாகிறார்கள். தொழிலாளர்களின் இவ்விதநிலைமையைத் தொலைக்கவே இச்சிறு புஸ்தகத்தை அச்சிடத்துணிந்தேன்… தொழிலாளர்களைச் சட்ட நிபுணர்களாக்க இப்புஸ்தகம் எழுதப்படவில்லை. அயோக்கியர்களிடம் அகப்பட்டுக் கொண்டு அவதிப்படாதிருக்க வேண்டியே இது எழுதப்பெற்றது என்பதை மறக்கவேண்டாம்.”
நடேசய்யரின் ‘இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்’ (1928), ‘இந்தியா – இலங்கை ஒப்பந்தம்’ (1941) ஆகிய நூல்களும் மேற்படி நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளன. கல்விநிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்துள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மிகப்பெருந்தேவையை மேற்படி நூல்கள் நிறைவுசெய்துள்ளன எனலாம். அதற்குச் சான்றாக, ‘இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்’ என்ற நூலினை வாசித்தறிந்த தொழிலாளர்கள் மூன்று தோட்டங்களில் துரைமார்கள் மிரளும் அளவிற்குக் குழப்பம் விளைவித்துள்ளமையைக் (சாரல்நாடன், 1988: 138) குறிப்பிடலாம். அதனால் தோட்ட நிர்வாகத்தினரும் பெரிய கங்காணிமார்களும் அந்நூலை அழித்தொழிக்கும் செயற்பாட்டைத் தந்திரமாக முன்னெடுத்துள்ளனர். அதனை “1928-ம் வருசம் நான் ஒரு புஸ்தகம் வெளியிட்டிருந்தேன். அப்புஸ்தகங்கள் தொழிலாளர்களிடம் சேராமல் பல பெரிய கங்காணிகளும் முயற்சி எடுத்தனர்” (1939: i) எனக் குறிப்பிட்டுள்ளார், நடேசய்யர். இந்நிலையாலே அந்நூலின் விரிவாக்கமாகத் தோட்டத் தொழிலாளர் தொடர்பான புதிய சட்டங்களையும் உள்ளடக்கி, ‘தொழிலாளர் சட்ட புஸ்தகம்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
தொழிலாளர் சட்ட புஸ்தகம், கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்திருந்த இந்தியன் பிரஸில் 1939ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டு, 25 சதத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழில் தொழிலாளர் சட்ட புஸ்தகம் என்ற பெயர் வழங்கப்பட்டிருந்தாலும் ஆங்கிலத்தில் ‘இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்’ (Rights and Responsibilities of Indian Labourers) என்ற உபதலைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நூலினைப் பொன்னுலகம் புத்தக நிலையம் 2022ஆம் ஆண்டு மறுபதிப்பாக வெளியிட்டுள்ளது.
இந்தியக் கிராமத்திலிருந்து, தோட்டத்துக்குப் பிரயாணம், தோட்டத்தில் வேலை, தொழிலாளர் சங்கங்கள், வைத்திய வசதி – வைத்திய வரி, தொழிலாளர் நஷ்டஈட்டுச் சட்டம், வாக்குரிமைச் சுதந்திரம், முறையிடல், தடை உத்திரவு எனும் ஒன்பது அதிகாரங்களைக் கொண்டுள்ள இந்நூலில், ‘சகோதிரர்களுக்கு ஒரு வார்த்தை’ என்ற பகுதி இறுதியில் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிற்படுத்தப்பட்ட வாழ்க்கை நிலைமையும் அதிலிருந்து மீட்சிபெறுவதற்கான சில ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
‘இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்’ (1928) வெளிவந்து, பத்தாண்டு இடைவெளியில் அந்நூலின் விரிவாக்கமாகத் ‘தொழிலாளர் சட்ட புஸ்தகம்’ வெளிவந்திருந்தாலும் இருநூல்களினதும் அடிப்படைக் கருத்தோட்டங்கள் வேறுபட்டுள்ளதைக் காணமுடிகின்றது. அப்பத்தாண்டு கால இடைவெளியில் அரசியல், சமூக, பொருளாதார அசைவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பெருந்தோட்டத் தொழிலாளர் வாழ்விலும் பெருந்தாக்கங்களைச் செலுத்தியுள்ளன. அரசியல் யாப்புச் சீர்திருத்தம், சர்வசன வாக்குரிமை முதலியன தொடர்பான வாதங்களில் மேலோங்கிய இலங்கைவாழ் இந்தியர்மீதான எதிர்ப்பு, 1931இல் வழங்கப்பட்ட சர்வசன வாக்குரிமை, 1930களின் முற்பகுதியில் மேலோங்கிய உலகப் பொருளாதாரப் பெருமந்தம், உள்ளூராட்சி சபைத் (கிராம சபை) தேர்தலிலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வெளியொதுக்கப்பட்டமை, பெருந்தோட்டத் தொழிலாளர்களிடையே லங்கா சமசமாஜ கட்சி முன்னெடுத்த செயற்பாடுகள், இந்தியர்கள் கூலித்தொழிலாளர்களாக வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடைசெய்த இந்தியச் சட்டம், இந்திய மற்றும் இலங்கை அரசுகளுக்கு இடையே இலங்கைவாழ் இந்தியத் தொழிலாளர்கள் தொடர்பில் இடம்பெற்ற கொள்கைநிலைப்பட்ட வாதங்கள் முதலானவை பெருந்தோட்டத் தொழிலாளர் வாழ்வைப் பாதித்ததோடு புதிய சவால்களையும் அவர்களுக்கு ஏற்படுத்தின. அதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு, எதிர்காலம் முதலானவை பெரிதும் மாற்றமுற்றன. அம்மாற்றங்களுள் முதன்மையானவொன்றாக இலங்கைப் பிரஜையாக வாழ்தல் – உணர்தல் என்ற நிலைமாற்றம் அமைகிறது. அதன் பிரதிபலிப்புகளைத் ‘தொழிலாளர் சட்ட புஸ்தகத்தில்’ காணமுடிகின்றது.
இலங்கையில் பெருந்தொகையான இந்தியர் நீண்டகாலமாக நிரந்தரமாக வசித்துவந்தபோதிலும் அவர்களிடையே தாம் இலங்கையர், இலங்கைப் பிரஜை என்ற உணர்வு அதிக அழுத்தம் பெறவில்லை; “திலகர் (1919), சரோஜினி நாயுடு (1922), மௌலானா சௌகத் அலி (1924), மகாத்மா காந்தி (1927), கமலாதேவி சட்டோபத்யாயா (1931), ஜவஹர்லால் நேரு (1931) முதலான இந்தியத் தலைவர்களின் இலங்கை வருகை” (Nadesan, 1993: 66) இந்தியத் தேசிய உணர்வை மேலும் எழுச்சி பெறச் செய்துள்ளது; 1921ஆம் ஆண்டு வரை இலங்கைவாழ் இந்தியருக்கென அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை; 1924ஆம் ஆண்டு அரசியல் சீர்திருத்தத்தின்படி இந்தியாவில் பிறந்து வளர்ந்த இந்தியருக்கே வாக்குரிமை வழங்கப்பட்டதால் இலங்கையில் நிரந்தரமாக வாழ்ந்துவந்த இந்தியருக்கு வாக்குரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பன மறுக்கப்பட்டன. இந்நிலையால் இலங்கைப் பிரஜையாக உணர வேண்டிய, வாழ வேண்டிய தேவையும் சூழலும் அக்காலத்தில் நிலவவில்லை. அதனால் நடேசய்யர் இலங்கையிலிருந்து தாயகம் திரும்புபவர்கள் எவ்வாறெல்லாம் திரும்பலாம் என்பது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வந்துள்ளார். எடுத்துக்காட்டாக, இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும் என்ற நூலில் ஊருக்குத் திரும்புதல் எனும் தனி இயலை நடேசய்யர் வைத்துள்ளதைக் குறிப்பிடலாம். அந்த இயலில் தொழிலாளர்கள் இந்தியா திரும்புவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள், நாடு திரும்புவதற்குத் தொழிலாளர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் முதலியன விளக்கப்பட்டுள்ளன. குடியகல்வு நிதியுதவியுடன் எவ்வாறு நாடு திரும்பலாம் என்பது விவரமாக விளக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான அறிவுறுத்தல்கள் தேசபக்தன் பத்திரிகையிலும் இடம்பெற்றுள்ளன.

இலங்கைவாழ் இந்தியர் இலங்கையில் தம் இருப்பை உறுதிசெய்வதற்கு அவர்களை வலுமிக்க அரசியல் சக்தியாகக் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்த நடேசய்யர், 1930களின் தொடக்கம் முதல் இந்தியத் தொழிலாளர்கள் தம்மை இலங்கைப் பிரஜைகளாக, இலங்கை வாசியாகப் பதிவுசெய்து கொள்ளுமாறு வலியுறுத்தி வந்துள்ளதுடன் அதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளார். அவரின் ‘தொழிலாளர் சட்ட புஸ்தகம்’ (1939), ‘இலங்கை – இந்திய ஒப்பந்தம்’ (1941) முதலான நூல்களும் சுதந்திரனில் அவர் எழுதிய அரசியல் தொடர்களும் அதற்குச் சான்றாக விளங்குகின்றன.
தொழிலாளர் சட்ட புஸ்தகத்தில் இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும் நூலில் இடம்பெற்றுள்ள ‘ஊருக்குத் திரும்புதல்’ என்ற இயல் – என்ற செய்தி இடம்பெறவில்லை. மாறாக, இலங்கைப் பிரஜையாதல், இலங்கையின் நிரந்தர வாசியாதல் என்பனவே இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, டொனமூர் சீர்திருத்தத்தில் வாக்குரிமை பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த வழிமுறைகளைத் தொழிலாளர் சட்ட புஸ்தகத்தில் தெளிவாக விளக்கியுள்ள நடேசய்யர், அவ்வழிமுறைகளைப் பின்பற்றித் தொழிலாளர்கள் தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். ‘நாம் இலங்கையில் நிரந்தரமாக வசிக்கிறோம், இந்தியாவுக்குப் போகமாட்டோம்’ என்று இந்தியத் தொழிலாளர்களை உறுதியாகக்கூறும்படி குறிப்பிட்டுள்ள அவர், அத்தொழிலாளர்கள் விரும்பினாலும் இந்தியாவுக்குச் செல்வதற்கோ அங்கு சென்று வளமாக வாழ்வதற்கோ முடியாதுள்ள சூழலையும் சுட்டிக்காட்டி, இலங்கையின் நிரந்தரவாசியாகப் பதிவுசெய்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டியுள்ளார். உதாரணமாக, வாக்குரிமை பெறுவதற்கான வழிமுறைகளுள் ஒன்றான, ‘இலங்கையின் நிரந்தரவாசி என்ற சான்றிதழைப் பெறுதல்’ தொடர்பாகத் தொழிலாளர் சட்ட புஸ்தகத்தில் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது:
“ ‘நான் இலங்கைவாசி இந்தியா சம்பந்தம் எனக்கு வேண்டாம்’ என்று எழுதிக்கொடுத்து ஒரு சர்ட்டிபிகேட் பெறவேண்டும். இந்தமாதிரி சர்ட்டிபிகேட் பெற்றால் மிகவும் நல்லது. நீ இலங்கையன் ஆவாய். மற்ற இலங்கையர்களுக்குள்ள எல்லா உரிமையும் உனக்கு உண்டாகும். கிராமங்களில் சிங்களக் கிராம வாசிகள்போல் காணிகள் கவர்மெண்டாரிடம் இனாமாகப் பெற உரிமையுண்டு, ‘அன்னியன் நீ, இந்த நாட்டைவிட்டுப் போகவேண்டும்’ என்று ஒருவரும் சொல்லமுடியாது. கூடுமானால் எல்லா இந்தியத் தொழிலாளர்களும் இந்தவிதமான சர்டிபிகேட் பெறுவது உத்தமம். பெரும்பான்மையான தொழிலாளர்களை இவ்விதம் பதிவு செய்யவேண்டிய ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறோம். தொழிலாளர்கள் பயமில்லாமல் இதனைச் செய்யலாம்” (1939: 49).
இப்பதிவு இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுதல் என்பதற்கு மாறாக இலங்கையில் நிரந்தரமாக வசித்தல் என்ற நிலைமாற்றத்துக்குச் சிறந்த சான்றாக அமைகிறது. இந்நிலையால் ‘ஊருக்குத் திரும்புதல்’ என்பது 1930களில் அவசியமற்றதாகியுள்ளது.
சர்வசன வாக்குரிமை வழங்கிய காலத்திற்குப் பின்னர், இலங்கையர்களாகப் பதிவுசெய்துகொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளமை அதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. “1931ஆம் ஆண்டு வாக்காளர்கள் பதிவுசெய்யப்பட்டபோது ஒரு இலட்சம் இந்தியவம்சாவளி மக்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்துள்ளனர். தொடர்ந்து 1936ஆம் ஆண்டில் வாக்காளர் பதிவு இடம்பெற்றபோது இந்திய வம்சாவளியினரின் வாக்காளர் தொகை ஒரு இலட்சத்து 45 ஆயிரமாகவும், 1938இல் இத்தொகை ஒரு இலட்சத்து 70 ஆயிரமாகவும், 1939இல் இந்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 25 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது” (தேவராஜ், 2008: 14). இந்த எண்ணிக்கை அதிகரிப்பில் நடேசய்யரின் பங்களிப்பும் கணிசமாக இருந்துள்ளது எனலாம். அவர் 1939ஆம் ஆண்டு மூன்று இலட்சம்பேர் வாக்காளர்களாகப் பதிவுசெய்ய வேண்டும் என எதிர்பார்த்துள்ளார் என்பதைத் தொழிலாளர் சட்ட புஸ்தகத்தின் மூலம் அறியமுடிகிறது.
இலங்கைப் பிரஜைகளாகப் பதிவு செய்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வெவ்வேறு தளங்களில் வெளிப்படுத்திவந்துள்ள அவர், அவ்வாறு பதிவு செய்ய முனைபவர்களைத் தடுக்கும் வகையில் அச்சமூட்டப் பயன்படுத்துகின்ற கருத்தாக்கங்களின் போலிமையையும் அம்பலப்படுத்தியுள்ளார். எடுத்துக்காட்டாக, அவ்வாறு அச்சமூட்டப் பயன்படுத்துகின்ற அம்சங்களை, “நீங்கள் இந்தியா கவர்மெண்ட் ஏஜண்டிடம் போகமுடியாது, உங்களுக்கு வேலைகிடைக்காவிட்டால் இந்தியாவிற்கு அனுப்பமாட்டோம், குறைந்த திட்டச்சம்பளம் கிடைக்காது, ஆஸ்பத்திரி வசதி இருக்காது, ரயிலில் இந்தியா போக அரைச்சார்ஜ் இருக்காது, கடனுக்காக வாரண்டில் உன்னைப் பிடிப்பார்கள்” என நிரல்படுத்தி, இவை எவையும் இலங்கைப் பிரஜையாகப் பதிவு செய்பவர்களை எவ்விதத்தும் பாதிக்காது என்பதைத் தனித்தனி தலைப்பின்கீழ் தெளிவுபடுத்தி, மக்களை இலங்கைப் பிரஜையாகப் பதிவு செய்யத் தூண்டியுள்ளமையைக் குறிப்பிடலாம் (1939: 50-53).
இலங்கைவாழ் இந்தியரின் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துச் சென்றமையால், சிங்களப் பேரினவாத சக்திகள், அந்த எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. “1940 ஆண்டு இந்தியவம்சாவளி மக்களை வாக்காளர் பட்டியலில் பதிவதற்கு ஆவணங்கள் மாத்திரம் போதுமானதல்ல என்றும் அதற்கு மேலாக அவர்களை நேரடியாக அழைத்து விசாரணை செய்ததன் பின்னரே வாக்காளர்களாகப் பதிவு செய்யவேண்டும் என்றும் புதிய நடைமுறை அமுலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. வாக்காளர் பதிவுக்கான நேரடி விசாரணைக்குச் செல்ல வேண்டும் என்பதைப் பற்றி பலர் அறிந்திராததுடன், இந்த நேரடி விசாரணைக்கான அறிவிப்புகள் முறையாக இந்தியவம்சாவளி தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் 1941ஆம் ஆண்டு இடம்பெற்ற வாக்காளர் பதிவின்போது இம்மக்களின் வாக்காளர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 25 ஆயிரத்திலிருந்து ஒரு இலட்சத்து 68 ஆயிரமாகக் குறைவடைந்துள்ளது” (தேவராஜ், 2008: 15).
மேற்படி தகவல்கள், இலங்கைவாழ் இந்தியர் இலங்கையராக வாழ விரும்பியதையும் அதனை ஏற்க மறுத்த சிங்கள ஆதிக்கச் சக்திகள், பெரும்பான்மை பலத்தினாலான சட்ட அங்கீகாரத்துடன் அம்மக்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதையும் காட்டுகின்றன. இதன் தொடர் வளர்ச்சியாகவே நாடு சுதந்திரமடைந்ததும் கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமைச் சட்டம் (1948) அமைகிறது.
இலங்கைவாழ் இந்தியருக்கு எதிராகச் சிங்கள ஆதிக்கச் சக்திகள் 1920களிலிருந்து முன்னெடுத்துவந்துள்ள செயற்பாடுகள், நாடு சுதந்திரமடையுமுன்னே இலங்கைவாழ் இந்தியர் தம் இருப்பை வலுவாக உறுதிப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன. நடேசய்யர் அதனை நன்குணர்ந்து செயற்பட்டுள்ளார் என்பதற்குத் தொழிலாளர் சட்ட புஸ்தகம், இந்தியா – இலங்கை ஒப்பந்தம் முதலான நூல்களும் சுதந்திரனில் அவர் எழுதிய தொடர்களும் சான்றாக அமைகின்றன.
பெருந்தோட்டத் தொழிலுக்காக இலங்கை வந்த பெருந்தொகையான மக்கள் இலங்கையின் நிலையான சமூகமாக உருவாக்கம் பெற்றபின்னர், இந்திய அடையாளத்துடன் முழு உரிமை பெற்ற இலங்கைப் பிரஜையாக வாழ முடியாதிருத்தல், இலங்கையின் ஆதிக்க அரசியல் சக்திகள் இந்திய அடையாளத்தைக் கொண்டு அம்மக்களின் இருப்பைச் சிதைத்து வருதல், ‘இந்தியர்’ என்ற அடையாளத்தைக் கொண்டு பிழைப்பு நடத்துகின்ற சிறுதொகை இந்தியர் இலங்கையில் நிரந்தரக் குடிகளாக உள்ள பெருந்தொகை இந்தியத் தொழிலாளர்களுக்குத் துரோகம் இழைத்து வருதல் முதலானவற்றால், இந்திய அடையாளம் அச்சுறுத்தலுக்கு உரியதாக மாறிவந்தபோது, அம்மாற்றத்தைத் தூரநோக்கோடு அணுகியுள்ள நடேசய்யர், இலங்கையில் நிலையான சமூகமாக உருப்பெற்றுள்ள இந்தியருக்கு – இந்திய வம்சாவளியினருக்கு இந்தியர் என்ற அடையாளம் அவசியமற்றது என்பதைக் கணித்துள்ளார். சுதந்திரனில் அவர் எழுதிய தொடர்கள் அதற்குச் சான்றாக உள்ளன. எடுத்துக்காட்டாக, பின்வரும் கருத்துகளைச் சுட்டிக்காட்டலாம்:
“இலங்கையில் இந்தியரென்று யாரைச் சொல்லலாம்? இலங்கையில் ஒரு காலும் இந்தியாவில் ஒரு காலும் வைத்துக்கொண்டிருக்கும் இந்திய வியாபாரிகளைத்தான் குறிக்கும். இந்தியன் என்பதையும் விடப் பிரியமில்லை. இலங்கை என்பதையும் விடப் பிரியமில்லை. ஆனால், தோட்டத் தொழிலாளியோவெனில், இலங்கையில் இரண்டு மூன்று தலைமுறைகளாக வந்து குடியேறியவர்கள். இந்தியாவில் இவர்களுக்குச் சொந்தம் கிடையாது. இவர்கள் எந்த இடத்திலிருந்து வந்தார்கள் என்பது அவர்களில் அநேகருக்குத் தெரியாது. இவர்களை இந்தியர்களென்று சொல்லுவது பொருந்தாது. இவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்பதை மறக்க வேண்டாம்.
இந்தியத் தமிழர்களில் இலங்கையில் நிரந்தரமாய்க் குடியேற எண்ணி இலங்கையர்களுடைய உரிமைகள்போல் எல்லா உரிமைகளையும் பெற வேண்டுபவர்கள் தங்களை இந்தியர் என்று சொல்லிக்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ‘இந்தியன் நான்’, இலங்கையனுக்குள்ள உரிமையை கொடுக்கவேண்டுமென்று கேட்பதைப் பண்டித் நேருவும் ஒப்புக்கொள்ளமாட்டார். தாங்கள் இந்தியராகவே இருக்க வேண்டுமென்று எண்ணும் சில சூழ்ச்சிக்காரர்கள் கையில் தோட்டத் தொழிலாளர்கள் அகப்பட்டுக்கொண்டு விழிக்கிறார்கள். தங்களுடைய சுயநலங்கருதி தொழிலாளர்களைத் தங்கள் கைஆயுதமாக உபயோகித்துக்கொண்டு வருகிறார்கள். இந்த முறை நிற்க வேண்டும்” (சுதந்திரன் – 10.06.1947).
நடேசய்யரின் மேற்படி கண்டடைவு ஆழமான சமூக, அரசியல் பார்வையினாலும் மக்கள்நல அரசியல் நிலைப்பாட்டினாலும் எட்டப்பட்டதாகும். அக்காலத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்ற அரசியல் அமைப்பாக விளங்கிய இலங்கை – இந்தியக் காங்கிரஸ், சமகால அரசியல், சமூக அசைவைக் கருத்திற்கொள்ளாது தான்சார்ந்த சிறுதொகையினருக்காக இந்திய அடையாளத்தை வலியுறுத்தி, பெருந்தொகை மக்களின் இருப்பைச் சிதைவுக்குள்ளாக்கிய வேளையில் நடேசய்யர் அந்நிலைப்பாட்டுக்கு மாறாக இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்தை முன்வைத்துள்ளார்.
இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும் நூல் வெளிவந்தபோது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்கள் எவையும் உருவாக்கம் பெறவில்லை. நடேசய்யரும் A.E. குணசிங்கவுடன் முரண்பட்டு நகரத் தொழிலாளர் சங்கத்திலிருந்து வெளியேறியிருந்தார். அந்நூலின் முன்னுரை முதல் முடிவு வரை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கெனத் தொழிற்சங்கம் உருவாக்கப்படுவதன் அவசியமும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் ஒன்றிணைய வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதன்பின்னர் நடேசய்யரே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் (1931) என்ற தோட்டத் தொழிலாளருக்கான சங்கத்தை உருவாக்குகிறார். அச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டு எட்டு வருடங்களின்பின் வெளிவந்துள்ள தொழிலாளர் சட்ட புஸ்தகத்திலும், தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு தொழிற்சங்கங்களை அமைக்க வேண்டியதன் தேவையை அழுத்தமாக வலியுறுத்தியுள்ளதோடு, சிறுசிறு தொழிற்சங்கங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும், அவை யாவும் பெருந்தொழிற்சங்கத்தின்கீழ் ஒன்றிணைய வேண்டியதன் தேவையையும் சுட்டிக்காட்டி, தொழிற்சங்கம் ஒன்றை எவ்வாறு உருவாக்குவது, அதற்கான சட்டவிதிகள் முதலானவற்றை விரிவாக விளக்கியுள்ளார். நடேசய்யரின் தொழிற்சங்க அனுபவமும் அவருடைய தொழிற்சங்கச் செயற்பாடுகளுக்கு எதிராகத் தோட்டநிர்வாகத்தினர் மேற்கொண்ட கெடுபிடிகளும் தொழிற்சங்கங்களை அமைக்கும் முறை, தொழிற்சங்கம் தொடர்பான சட்டவிதிகள், அமைப்பாக ஒன்றிணைந்து செயற்பட முனைபவர்களுக்குத் தோட்டநிர்வாகம் கொடுக்கும் நெருக்கடிகள் முதலானவற்றைத் தெளிவுபடுத்துவதற்குக் காரணமாக அமைந்தன எனலாம்.

இலங்கைவாழ் இந்தியத் தொழிலாளர் தொடர்பான சட்டங்களை, சட்ட நூல்களை அடிப்படையாகக் கொண்டு மட்டும் வியாக்கியானம் செய்யாமல், தேசிய – சர்வதேசிய அரசியல் அசைவுகளையும், இலங்கை – இந்திய அரசியல் நிலைப்பாடுகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களையும் இலங்கைவாழ் இந்தியரின் வாழ்க்கை நகர்வுகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அடிப்படையாகக் கொண்டு விளக்கியுள்ளார். அதனாலேயே இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும் என்ற நூலினதும் தொழிலாளர் சட்ட புஸ்தகத்தினதும் அடிப்படைக் கருத்தாக்கங்கள் வேறுபட்டுள்ளன. அவை 1920களிலும் 1930களிலும் இலங்கைவாழ் இந்தியரின் சமூக, அரசியல் அசைவில் ஏற்பட்ட மாற்றங்களின் வெளிப்பாடுகளாகும். அவர்கள் இலங்கையின் நிரந்தரவாசிகளாக நீண்டகாலமாக வாழ்ந்துவந்தாலும் தம்மை இலங்கையராக, இலங்கைப் பிரஜையாக உணரத்தொடங்கிய காலமாக அந்த இடைப்பட்ட காலம் அமைகிறது. இந்திய வம்சாவளித்தமிழர் என்ற அடையாளத்துக்கு மாறாக, மலையகத் தமிழர் என்ற தனித்த அடையாள உருவாக்கத்துக்கும், அதன் வளர்ச்சியாக மலையகத் தமிழர் ஒரு தேசிய சிறுபான்மை இனம் என்ற எழுச்சிக்கும் மேற்படி இடைப்பட்ட கால அரசியல், சமூக மாற்றங்கள் தொடக்கமாக அமைந்தன எனலாம்.
தொழிலாளர் சட்ட புஸ்தகத்தில் இடம்பெறுகின்ற நிகழ்வுகள், செய்திகள் முதலானவற்றின் அடிப்படையான கருத்தாக்கங்களின் வெளிப்பாடுகள், நடேசய்யர் மற்றும் மீனாட்சியம்மாளின் இலக்கிய ஆக்கங்களின் கருப்பொருட்களாக இடம்பெற்றுள்ளன. நடேசய்யரின் ‘இலங்கைத் தோட்ட இந்திய தொழிலாளர் அந்தரப் பிழைப்பு’ நாடகத்திலும், ‘இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை’ என்ற நூலிலும் இடம்பெறும் மீனாட்சியம்மாளின் பாடல்கள் முதலானவற்றில் அவ்வெளிப்பாட்டைக் காணமுடிகின்றது. நடேசய்யர் மற்றும் மீனாட்சியம்மாளின் இலக்கிய ஆக்கங்கள் வெறும் கற்பனைப் புனைவுகள் அல்ல; அவை சமூக நடைமுறையின் யதார்த்த வெளிப்பாடுகள் என்பதற்கு இந்த ஒப்புமை சான்றாக அமைகிறது.
நடேசய்யர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை, அவர்களது உரிமைநிலைப்பாட்டை மேம்படுத்த மேற்கொண்ட உத்திகளுள் ஒன்றாக அமையும் தொழிலாளர் சட்ட புஸ்தகம், அம்மக்களுக்குப் பெரும் வெளிச்சத்தை வழங்கியிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. வெறுமனே சட்டங்களை விளக்கும் சட்டக் கைநூலாக இல்லாமல், அத்தொழிலாளர்களின் வரலாற்றுப் பின்னணி, வாழ்க்கை நிலைமை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் முதலானவற்றின் பின்னணியில் சட்டங்களையும் அச்சட்டங்களின் பயன்பாட்டையும் உதாரணங்களுடன் விளக்கும் முயற்சியை நடேசய்யர் மேற்கொண்டுள்ளார். அதனால் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான சட்டப்புத்தகமாக மட்டுமன்றி அவர்களது விடுதலைக்கான வழிகாட்டியாகவும் இந்நூல் விளங்கியிருக்கிறது.