நிலமும் நாங்களும்: பின் - போர்க்கால வட பகுதியின் நில விவகாரங்களைப் புரிந்துகொள்ளல்
Arts
17 நிமிட வாசிப்பு

நிலமும் நாங்களும்: பின் – போர்க்கால வட பகுதியின் நில விவகாரங்களைப் புரிந்துகொள்ளல்

November 26, 2024 | Ezhuna

ஈழம் சார்ந்தும் ஈழப்பிரச்சினை சார்ந்தும் ஆங்கிலத்திலும் தமிழல்லாத பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 2009 இற்கு பின்னர் வெளியாகிய அபுனைவு நூல்களை அவற்றின் சமூக – அரசியல் முக்கியத்துவம் கருதி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கோடு ‘திக்குகள் எட்டும்’ என்ற தொடர் வெளிவருகின்றது. இத்தொடரின் மூலம் தமிழ் சூழலுக்கு தமிழல்லாத பரப்பில் நடைபெறும் ஈழம் சார்ந்த வெளிப்பாடுகள் அறிமுகமாகும்.

உலகளாவிய ரீதியில் உள்நாட்டுப் போர்கள் மற்றும் ஆக்கிரமிப்புப் போர்களில் நிலம், நில உரிமை என்பன மோசமாகப் பாதிக்கப்படும் அம்சங்களில் ஒன்று. இதற்கு ஆகப்பெரிய உதாரணங்களாக இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசங்கள், சிறிலங்கா அரசினால் ஆக்கிரமிக்கப்ட்ட தமிழர் பிரதேசங்கள் விளங்குகின்றன. பலஸ்தீனம் யூதர்களுக்காக வாக்களிக்கப்பட்ட பூமி என்ற நம்பிக்கையை, தமது நில அபகரிப்புக்கான நியாயப்பாடாக இஸ்ரேல் எடுத்துக்கொண்டது. அதேபோல் இலங்கைத் தீவு முழுவதும் பவுத்தத்தைக் காப்பதற்காகச் சிங்களவர்களுக்கு புத்தரால் அருளப்பட்டது என்பது சிங்களப் பேரினவாதத்தின் ‘மகாவம்ச’ நம்பிக்கை.

தமிழர் தாயகத்தின் வடபகுதியில் எதிர்நோக்கப்படும் நிலம் (காணி) சார்ந்த சிக்கல்களைக் காத்திரமாகப் பதிவு செய்துள்ள ஆய்வறிக்கை ஒன்று 2015 இல் வெளிவந்திருந்தது. ‘மாற்றம்’ நிறுவனத்தினரால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இது சமூகத்தின் பல்வேறுபட்ட தரப்பினரிடமும் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள், தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ‘போருக்குப் பின்னர் இலங்கையின் வடக்கில் நிலவும் நிலம் (காணி) தொடர்பான பிரச்சினைகளும் அதைப் பற்றிய புரிதல்களும்’ என்பது 72 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையின் தலைப்பு. இது ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக சமூகத்தின் கவனத்திற்கும், அழுத்தத்திற்கும் வழிகோலக்கூடியது என்ற வகையில் இந்த ஆவணம் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டமையின் முக்கியத்துவம் அமைகின்றது (இந்த ஆய்வறிக்கை 2015 இல் வெளிவந்தது என்ற புரிதலோடு, இந்தக் கட்டுரை வாசிக்கப்பட வேண்டும். இதிலுள்ள தரவுகளில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளின் பின் 2024 இல் நிச்சயம் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்).

ஐந்து அத்தியாயங்களைக் கொண்டுள்ள இந்த ஆய்வறிக்கை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வடக்கின் நில விவகாரத்தோடு தொடர்புடைய சிக்கலுக்குரிய அம்சங்களை நுணுக்கமாகப் பதிவுசெய்துள்ளது. முதலாவது அத்தியாயம் வடபகுதி நிலங்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பினையும் அதன் பின்னணி, விளைவுகள் குறித்தும் ஆழமாகப் பார்க்கின்றது. காணி ஆவணங்களுடன் தொடர்புடைய சிக்கல்களை இரண்டாவது அத்தியாயமும்; மூன்றாவது அத்தியாயம் நில உரிமையிற் தாக்கம் செலுத்தும் பாலின – சாதிய குறுக்கு வெட்டு அம்சங்களையும் பேசுகின்றது. நான்காவது அத்தியாயம்  நில உரிமையிற் தாக்கம் செலுத்தும் இனத்துவ மற்றும் மதம் சார் அம்சங்கள் மீதான குறுக்கு வெட்டுப் பார்வையைக் கவனப்படுத்தப்படுகின்றது. நிறைவாக ஐந்தாவது அத்தியாயத்தில் ஆய்வின் பெறுபேறுகளின் அடிப்படையிலான முழுமையான அவதானிப்புகளும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பபடுகின்றன.

நில உரிமை, அதன் பயன்பாடு, நிலம் மீதான கட்டுப்பாடுகள், வளங்கள் மீதான கட்டுப்பாடு, சட்ட ரீதியான சிக்கல்கள், இராணுவ மயமாக்கல், காணி உரிமை மறுப்பு எவ்வாறு பெண்களைப் பாதிக்கின்றது, அது எவ்வாறு இனங்களுக்கிடையிலான உறவில் (தமிழ் – முஸ்லீம்) விரிசலை ஏற்படுத்துகிறது போன்ற நிலைமைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

தமிழர்களின் காணிநிலக் கோரிக்கை

போருக்குப் பின்னான சூழலில் தமிழர்களின் காணிநிலக் கோரிக்கையின் முக்கிய அம்சமாக வடக்கில் கேப்பாப்புலவு மக்களின் ஜனநாயகப் போராட்டத்தினைக் குறிப்பிடலாம். 2017 இலிருந்து பல வருடங்கள் தமது காணிகளை இராணுவத்திடமிருந்து விடுவிக்க அவர்கள் போராடினர். இரவு பகலாக அம்மக்கள் தமது நிலங்களை விடுவிக்கப் போராட்டங்களை முன்னெடுத்தனர். பெரும் சிரமங்கள், நெருக்கடிகள், காவற்துறை, இராணுவம், புலனாய்வுத் துறையின் கெடுபிடிகள், மிரட்டல்களுக்கு மத்தியில் போராடினர். மழை, குளிர், வெயில் எனக் காலநிலைச் சிரமங்கள் மட்டுமல்ல, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டமையும் அவர்களின் நாளாந்த வாழ்வை பெரிதும் பாதித்தது; இயல்புநிலை குழம்பிப் போனது; பலர் தொழில் வாய்ப்பை இழந்தனர்; பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பவும் வயதானவர்களைப் பராமரிக்கவும் சிரமப்பட்டனர்.

31 டிசம்பர் 2018 இற்கு முன் வடக்கு – கிழக்கு தனியார் நிலங்களிலிருந்து இராணுவம் விலக்கப்படுமென்று மைத்தரிபால சிறிசேன அரசாங்கம் உறுதியளித்தது. அது வாக்குறுதியாக மட்டுமே நின்றுபோனது. காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பின் (People’s Alliance for Right to Land) தரவுகளின்படி கேப்பாப்புலவில் மக்களுக்குச் சொந்தமான 350 ஏக்கர் நிலங்கள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. ஆளும் தரப்பு, தொண்டர் நிறுவனங்கள், வெளிநாட்டு அமைப்புகள் என எத்தனையே சந்திப்புகள் நடைபெற்றன; உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. ஆனால் அனைத்தும் காலம் கடத்தல்களாகவே நகர்ந்தன. நீதி, சமாதானம், நல்லிணக்கம் என்பவையெல்லாம் வெற்று வார்த்தைகளாயின.

நில உரிமைக்கும் நில அதிகாரத்திற்குமிடையிலான முரண்பாடு, அளவுகளில் வேறுபட்டாலும் உலகின் பல பாகங்களிலும் எல்லாக் காலங்களிலும் இவை நிலவிவந்துள்ளன. நிலப்பிரபுத்துவக் காலம் அதற்கான தொடக்கம். நிலம் மீதான உரிமை என்பது அடிப்படை வாழ்வாதாரம் சார்ந்தது. நிலம் மீதான அதிகாரம் என்பது அபகரிப்பு, நிலப்பறிப்பு சார்ந்தது. உயர் பாதுகாப்பு வலயம், தந்திரோபாய முக்கியத்துவம், பயங்கரவாத அச்சுறுத்தல், மூலோபாாய இராணுவத் தளம் என்பதான பல்வேறு சொல்லாடல்களை ஆட்சியாளர்கள் கவசங்களாகப் பயன்படுத்தி வந்தனர்.

இராணுவ நீக்கம் பற்றிய வாக்குறுதிகளும் எதிர்பார்ப்பும்

போர் முடிவுக்கு வந்து ஒன்றரைத் தசாப்தங்கள் கடந்துவிட்டன. இன்றும் இராணுவத்தினரின் பிரசன்னம் கொண்டதாகவும் இராணுவமயப்படுத்தப்பட்டதாகவுமே வடக்கு – கிழக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. சொந்த நிலங்களில் மீள்குடியமர முடியாத நிலையில் இன்றும் வடக்குத் தமிழர்கள் உள்ளனர். தற்போதைய தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் அளித்த வாக்குறுதிகளில் காணிகளை விடுவிப்பது முதன்மை பெற்றிருந்தது. அத்தோடு அரசியற் கைதிகளின் விடுதலை, போதைப்பொருள் பாவனைக்கான சமூகக் காரணிகளை இல்லாமற் செய்வது, தொழில் வாய்ப்புகளைப் பெருக்குவது குறித்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. நல்லெண்ணச் செயற்பாடாக ஆனையிறவு இராணுவச் சோதனைச் சாவடி நீக்கப்பட்டிருக்கின்றது. வடக்கிலிருந்து இராணுவத்தினை வெளியேற்றுவது குறித்தும் பேசப்படுகின்றது. ஆனால் நடைமுறையில் அது எத்தனை தூரம் நிறைவேற்றப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராயும் போது, நில விவகாரம் குறித்த சிக்கல்களுக்குத் திருப்திகரமான தீர்வு எட்டப்படுவது தவிர்க்கவியலாதது. நில விவகாரச் சிக்கல்களுக்கான தீர்வு நோக்கிய முனைப்புகள், மக்களுக்கு நெருக்கமான நிறுவனங்கள், பொறிமுறைகள், கட்டமைப்புகள் மூலம் பொருத்தமானதும் கூர்உணர்வு மிக்கதுமான வழிமுறைகளைக் கண்டடைவதன் ஊடாக செயல்வடிவம் பெறவேண்டுமென இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

அரசியற் தீர்வில் நில உரிமையின் வகிபாகம்

தனிநபர் மற்றும் சமூகப் பாதுகாப்பின்மை, நிலங்கள் மற்றும் சமூகங்கள் மீதான இராணுவமயமாக்கல், பாலின ரீதியிலான வன்முறை, வேலையின்மை, தண்ணீர், சுகாதாரம், கல்வி மற்றும் பிற முக்கியமான சேவைகள், வளங்களின் பற்றாக்குறை வடக்கு (மற்றும் கிழக்கு) இலங்கையில் நீடிக்கிறது என்பதை நிறுவுகின்றது இந்த ஆய்வு.

போருக்குப் பிந்திய ‘அமைதி’ பேண்தகு வகையிலும் நீடித்ததாக அமைவதற்கு, காணி சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும். தேசிய இனப் பிரச்சினையில் நில உரிமை இன்றியமையாத ஒரு அங்கம் என்பதையும், தேசிய பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வும் காணி சார் சிக்கலை உகந்த முறையில் தீர்க்க வேண்டும் என்பதையும் அங்கீகரிக்க வேண்டும். நிலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், மக்களுக்கு நெருக்கமான நிறுவனங்கள், பொறிமுறைகள் மற்றும் கட்டமைப்புகள் மூலம் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் இவ் ஆய்வு வலியுறுத்துகின்றது.

இராணுவ மயமாக்கலும் விளைவுகளும்

சிறிலங்காவின் 19 இராணுவப் பிரிவுகளில் (Military Divisions) வட பகுதியில் மாத்திரம், 14 இராணுவப் பிரிவுகள் நிலைகொண்டுள்ளன. இவை நிரந்தரமாக இருக்கக்கூடிய உட்கட்டுமானங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி (வவுனியா, மன்னார் ஆகிய நிர்வாக மாவட்டங்கள்) ஆகிய மூன்று பிரதேசங்களிலும் பாதுகாப்புப் படையின் மூன்று கட்டளைத் தலைமையகங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த 14 இராணுவத்தளங்களும் அமைந்துள்ளன. 2002 இல் வெளிவந்த தகவல்களின் படி, புதிய ஆட்சிப் பீடமும் வடக்கில் இராணுவப் பிரசன்னத்தினைக் குறைப்பதில்லை என அறிவித்துள்ளது.

வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தினருக்கான வீடுகளை அமைத்துக்கொள்வதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சீன அரசாங்கம், நிதியுதவி வழங்கியிருந்தது. அதற்காக 2012 இல் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில், இராணுவத்தினரின் குடும்பங்களைக் குடியமர்த்தும் வீடமைப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. வடக்கில் இராணுவத்தை நிரந்தரமாக நிலைகொள்ளச் செய்தல் மூலம், சிங்களக் குடியேற்றத்தை முன்னெடுப்பதும், அதனூடு பௌத்த மயமாக்குதலும் என்ற மறைமுக அணுகுமுறை கைக்கொள்ளப்படுகின்றது.

தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தை முன்னிலைப்படுத்தி இராணுவமயப்படுத்தல் தொடரப்படுவதோடு, அதனை நியாயப்படுத்துகின்ற அணுகுமுறையும் கடைப்பிடிக்கப்படுகிறது. இராணுவத்தின் குடும்பங்களைக் குடியமர்த்துதல் என்பது சிங்களக் குடியேற்றத்தின் மறைமுகமானதொரு வடிவமாகும். இராணுவப் பிரசன்னத்தைத் தொடருதல் என்பது, இன்னொரு வகையில் தேசிய இனப்பிரச்சினைக்கு ‘இராணுவத் தீர்வு’ என்ற அணுகுமுறையின் தொடர்ச்சியாகக் கைக்கொள்ளப்படுகின்றது.

வடக்கு (மற்றும் கிழக்கு) இராணுவமயமாக்கல் என்பது 30 வருட உள்நாட்டுப் போரின் நேரடி விளைவு. வடக்கு – கிழக்கை பாதிக்கும் முக்கிய பிரச்சினையாகவும் அது உள்ளமை வெளிப்படுத்தப்படுகின்றது. இராணுவமயமாக்கலின் மூலம், அதற்கான காரணங்கள், அளவு மற்றும் இராணுவமயமாக்கலின் தாக்கம் ஆகியவற்றை இந்த அறிக்கை ஆராய்கிறது. வட பகுதியின் பாரிய உயர் பாதுகாப்பு வலயமான ‘வலிகாமம்’ உட்பட உயர் பாதுகாப்பு வலய விளைவுகளை விரிவாக ஆராய்கிறது.

முல்லைத்தீவின் மணலாறு (வெலி ஓயா) ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசம். வடக்கிற்கும் கிழக்கிற்குமிடையிலான நிலத் தொடர்பினைத் துண்டிக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கங்கள் அங்கு 1980 களிலிருந்து சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வந்திருக்கின்றன. யாழ்ப்பாண உயர் பாதுபாப்பு வலய தலைமைச் செயலகம் (Security Force Headquarters) மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. அனைத்துப் பாதுகாப்பு படைகளின் தலைமையகங்களும் இணைக்கப்பட்ட கீழ்ப் பிரிவுகளைக் கொண்டுள்ளன. வடக்கு – கிழக்கில் இராணுவத்தினருக்கு வீடுகளை அமைப்பதில் சீனா உதவி வந்துள்ளது. 2012 இல் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இராணுவத்தினருக்கான வீடமைப்பிற்காகச் சீனா வழங்கியதாகக் கூறப்படுகின்றது.

“இராணுவமயமாக்கல் நிலத்தின் அணுகல், கட்டுப்பாடு மற்றும் விநியோகத்தையும் கணிசமாகப் பாதிக்கிறது. பொதுக் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்துவதைச் சட்ட ரீதியான வழிமுறைகளால் மட்டுமே தீர்க்கமுடியாது. நிலங்களின் இராணுவமயமாக்கல் இப் பிரச்சினையை மேலும் சிக்கலுக்குரியதாக்குவதில் சட்டத்தின் தெளிவற்ற விதிகள் துணை நிற்கின்றன. நிலத்தைக் கையகப்படுத்துதல் சட்டம் (பிரிவு 2) நிலத்தைப் ‘பொது நோக்கங்களுக்காக’ கையகப்படுத்த அனுமதிக்கிறது. தேசிய பாதுகாப்பு தொடர்பான காரணங்களுடன் தொடர்புடையதாக இல்லாவிட்டால், இந்தப் பொது நோக்கத்தை பகிரங்கமாகக் கூற வேண்டும் என்று அச்சட்டம் பரிந்துரைக்கிறது. காணிகளை இராணுவம் கையகப்படுத்தும் போது, ஒரு ‘பொது நோக்கம்’ உள்ளது என்று கூறுவது மட்டுமே சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்குகின்றது. நிலத்தை கையகப்படுத்த வேண்டிய அந்தப் ‘பொதுத் தேவைக்கு’ நீதிமன்றத்தின் முன் நியாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமலிருக்கின்றது. இலங்கையில் தேசிய பாதுகாப்பு விடயங்களில் நிறைவேற்று அதிகாரிகளுக்கு இருக்கும் சட்ட அமைப்பு மற்றும் நீதித்துறையின் பரந்த அளவிலான செல்வாக்குக் காரணமாக காணிகளை இராணுவம் கையகப்படுத்தும் பிரச்சினையைச் சட்ட ரீதியாக (மட்டும்) தீர்க்க முடியாதுள்ளது. இராணுவமயமாக்கல் மற்றும் பாதுகாப்பு நீக்கம் ஆகியவை சாராம்சத்தில் ஓர் அரசியல் பிரச்சினையாகும். இது தொலைநோக்கு அடிப்படையில் அரசியலால் மட்டுமே தீர்க்கப்படக்கூடியது”

என நிறுவுகின்றது முதலாவது அத்தியாயம்.

அத்தியாயம் 2: நில ஆவணம் (உறுதி) தொடர்பான சிக்கல்கள்

மனிதனால் உருவாக்கப்பட்ட அழிவுகள் அல்லது இயற்கைசார் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட எந்தவொரு சமூகத்திலும் நில ஆவணங்கள் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது இயல்பானது. புனரமைப்பு, மறுசீரமைப்புடன் இணைந்ததாக நில ஆவணங்கள் தொடர்பான சிக்கல்கள் இந்த அத்தியாயத்தில் கவனப்படுத்தப்பட்டுள்ளன. காணி உறுதிப் பிரச்சினைகள் போர் மற்றும் இனப் பிரச்சினையுடனும் நில நிர்வாகத்தின் பாகுபாடான அரசியல் போக்குடனும் தொடர்புடையவையாகும். ஆவணங்களின் இழப்பு மீள்குடியேற்றத்தைப் பாதிப்பதோடு, ஏற்பட்ட சேதங்கள், இழப்புக்கான இழப்பீட்டுத் திட்டங்களை அணுகுவதிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். மீள்குடியேற்றம் என்பது நிலத்தை அணுகுவது மற்றும் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல, மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளின் பேண்தகு பயன்பாட்டுத் திறனையும் பற்றியது என்கிறது இரண்டாவது அத்தியாயத்தின் முடிவுரை.

அத்தியாயம் 3: நிலப் பிரச்சினையின் பாலின – சாதிய குறுக்குவெட்டுப் பரிமாணம்

வடக்கில் நிலப்பிரச்சினையில் ஆழ வோரோடியுள்ள பாலினம் மற்றும் சாதியப் பரிமாணத்தையும் அதனால் ஏற்படுகின்ற பாதிப்புமிகு விளைவுகளையும் இந்த அத்தியாயம் பதிவு செய்கின்றது. வடக்கில் காணி விநியோக முறைகள் என்று வரும்போது சாதி அடிப்படையிலான பாகுபாடு இன்னும் சவாலாகவே உள்ளது. அது தலைமுறை தலைமுறையாக தொடர்கின்றது. குறிப்பாக வெளியாட்களுக்கு காணிகள் விற்கப்படும் போது, குறிப்பிட்ட சாதியினருக்கு விற்கக் கூடாது என்ற ‘சமூக ரீதியாக’ ஏற்றுக்கொள்ளப்பட்ட விதி பின்பற்றப்படுகின்றது. இதன் மூலம், குறிப்பிட்ட பகுதிகளில் ‘சாதி அடிப்படையிலான பிராந்தியவாதம்’ பேணப்படுகிறது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 72 வயதான ஓய்வுபெற்ற அரச அதிகாரி நாவுக்கரசு இப்படிக் கூறியுள்ளார்:

“யாழ்ப்பாணத்தில் சாதி அடிப்படையிலான நிலப் பிரிவுகள் உள்ளன. அவை இன்னும் உள்ளன. அடிப்படையில், நிலப்பரிவு என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் மேற்கொள்ளப்படும் வருமானம் ஈட்டும் நடவடிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. இப்படியாகத்தான் யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி வலுவாகப் புரையோடிக் கிடக்கிறது. ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் தமது நிலத்தை இன்னொரு சாதியைச் சேர்ந்தவர்களுக்கு இலகுவில் விற்க மாட்டார்கள். அண்டை வீட்டாரின் சம்மதம் என்பது பெரும்பாலான மக்கள் பின்பற்றும் ஒரு எழுதப்படாத சட்டம். பொதுவாக ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் வசிக்கின்றனர். அவர்கள் வாழும் தெரு அல்லது பகுதியின் அடிப்படையில் ஒருவரின் சாதியை கண்டடையலாம்.”

வடக்கில் நில விவகாரங்களில் பாலின, சாதியப் பரிமாணங்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே கவனம் கொடுக்கப்படுகின்றது. இந்தப் பரிமாணம் (சாதிய, பாலினம் சார் நில விவகாரச் சிக்கல்) அரசு மற்றும் சட்டங்களால் மட்டும் தீர்க்கப்பட முடியாதவை. நில உரிமை, நிலத்திற்கான அணுகல் (Access) சார்ந்து சாதிய, பாலின ரீதியில் உருவாக்கப்பட்டுள்ள விளைவுகளைக் கையாள பரந்த சமூக ரீதியிலான அங்கீகாரம், செயற்திட்டம் அவசியம். இந்த விவகாரங்களை வெளிப்படையாக உரையாடுவதற்குத் தமிழ்ச் சமூகம் தயாராக வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கின்றது.

அத்தியாயம் 4: நிலப் பிரச்சினையின் இன – மத குறுக்குவெட்டுப் பரிமாணம்

இந்த அத்தியாயம் நிலப் பிரச்சினைகளின் இன மற்றும் மதப் பரிமாணத்தை ஒரு இனக்குழும முரண்பாட்டுக் கண்ணோட்டத்திற் பார்க்கிறது. இனம் மற்றும் மத அடையாளத்தை அடிப்படைவாதக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், அரசியல் கண்ணோட்டத்தில் இந்த ஆய்வு நோக்குகிறது. இனம் என்பது நில விவகாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒரு குறுக்குவெட்டுப் பிரச்சினையாக, வடக்கில் தமிழர்கள் – சிங்களவர்களுக்கு இடையிலான இருமை நிலையாக (Binary) இந்த ஆய்வில் அணுகப்படவில்லை. முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் கவனப்படுத்தப்பட்டுள்ளன. 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை இவ்விரு சமூகங்களுக்கிடையிலான உறவில் ஆழமான கரும்புள்ளியை ஏற்படுத்தியதுடன், இந்தச் சமூகங்களுக்கிடையில் நிலவும் காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் தொடர்ந்தும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

தமிழ் – சிங்கள – பௌத்த முரண்பாட்டுப் பரிமாணத்திற்கு அப்பால், வடக்கில் நிலவும் மத ரீதியான பதட்டங்கள் முதன்மையாகத் தமிழர் – முஸ்லிம்கள் இடையிலான இனப் பிளவுடன் தொடர்புடையது. முஸ்லீம் மற்றும் தமிழ்ச் சமூகத்தினரிடையே உள்ள பிளவைக் களைவதற்கு காத்திரமான பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். பரஸ்பர சந்தேகம் மற்றும் அவநம்பிக்கைகள் படிப்படியாக நீக்கப்பட வேண்டும். சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையை வளர்க்க முறையான திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது நான்காவது அத்தியாயத்தின் கோரலாகும்.

சிங்களக் குடியேற்றம்

விவசாய அபிவிருத்தித் திட்டங்களைக் காரணம் காட்டி கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களுக்கு அத்திவாரம் போடப்பட்டு, சனத்தொகைச் சமநிலையில் (Demographic Balance) பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி சிங்கள மயமாக்கலுக்கு வழிகோலப்பட்டது. போருக்குப் பின்னான சூழலில் தேசிய பாதுகாப்பு என்ற காரணம் காட்டப்பட்டு இராணுவமயமாக்கலும், அதன் விளைவாக சிங்கள மயமாக்கல் நேரடியாகவும் (பௌத்த விகாரைகள் நிறுவுதல் மூலமும்) மறைமுகமாகவும் (இராணுவத்தின் குடும்பங்களைக் குடியேற்றுவதன் மூலமும்) முன்னெடுக்கப்படுகின்றது. போருக்குப் பின்னர் 18 பௌத்த விகாரைகள் வடக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட 67,000 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் (2014 இல் வட மாகாண சபை வெளியிட்ட தரவுகளின்படி,) இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட சூழல் நிலவுகின்றது. இவற்றில் தனியார் மற்றும் அரச காணிகள் அடங்குகின்றன. யாழ்ப்பாணத்தில் 10,919 ஏக்கர், முல்லைத்தீவில் 34,362 ஏக்கர், மன்னாரில் 22,247 ஏக்கர் நிலம் இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.

சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடும் நில வளங்கள் மீதான அதிகாரமும்

எந்தெந்த வகையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இராணுவம் முதலீடுகளை மேற்கொண்டு, விரிவுபடுத்தி வருகின்றது, ‘Holiday Houses’ எனப்படும் உல்லாச விடுதிகள், விவசாயம் மற்றும் கடற்தொழிலில் இராணுவத்தினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டிருக்கின்ற சூழல், தமிழ் மக்களின் தொழில் வளத்தினையும் வாழ்வாதாரத்தினையும் அவை எத்தகையை மோசமாகப் பாதிக்கின்றது என்ற தரவுகளும் அறிக்கையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

நில அபகரிப்பினாரல் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தில் 40,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. சாதிய ஒடுக்குமுறை தொடர்வதன் விளைவாக தாழ்த்தப்பட்ட மக்கள் நிலவுரிமையற்ற நிலையில் உள்ளனர். இன ரீதியிலான பிளவுகளையும் நிலப் பிரச்சினை அதிகப்படுத்துகின்றது. முஸ்லீம் மக்களில் பெரும்பான்மையானவர்கள் யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறவில்லை. பாதுகாப்பு தொடர்பான பரஸ்பர நம்பிக்கையீனம் அகலவில்லை.

நில விடுவிப்பை நோக்கிய செயற்பாட்டு அணுகுமுறையும் பரிந்துரைகளும்

இராணுவ நீக்கத்தினை (Demilitarization) நடைமுறைப்படுத்த அவசியமான செயற்பாடுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீட்டினைத் தவிர்ப்பது மற்றும் சிவில் நிர்வாகம், சிவில் நிறுவனங்களைப் பலப்படுத்துதல், சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு மற்றும் அதில் நிலவும் குறைபாடுகளுக்கு எதிரான அழுத்தம் கொடுக்கத் தகுந்த பொறிமுறையைக் கண்டறிதல், தமிழ் – முஸ்லீம் உறவுகளை மேம்படுத்தும் வழிமுறைகள், சாதிய ஒடுக்குதலால் நிலமற்றவர்களாகவுள்ள மக்களை நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக்குதல் போன்றன பற்றிய பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன. 

நிலம் சார்ந்த சிக்கல்களை நடைமுறை சார்ந்து மாகாண சபையினூடாக அணுகுவது பொருத்தமானதெனவும் கூறப்படுகின்றது. வட மாகாண சபை நில விவகாரம் தொடர்பாக நிலவக்கூடிய பிரச்சினைகளையும் அதன் பல்பரிமாண விளைவுகளையும் அடையாளம் காண்பதில் முனைப்புக் காட்ட வேண்டும். அவற்றை மத்திய அரசிற்கு எடுத்துச் சென்று, நிலவிவகார அணுகுமுறையில் கட்டமைப்பு சார்ந்ததும், நிர்வாக முறைமை சார்ந்ததுமான மாற்றங்களுக்கும் செயற்பாட்டுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

நிலம்: அரசியல் உரிமை, இருப்பு சார் அடையாளம்

பொதுவாக நிலம் என்பதை ’குடியிருக்கின்ற இடம்’ என்பதாகக் குறுக்கிவிட முடியாது. அது தமிழ் மக்களின் ’அரசியல்’, ’உரிமை’ மற்றும் ’இருப்பு’ சார்ந்தது. வெறுமனே காணி என்று சுருக்கிவிட முடியாது. அது மக்களின் வாழ்வாதாரம், வளங்கள் மீதான உரிமை, பண்பாட்டு வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது. இராணுவத்தை எதிர்த்து எவரும் எதுவும் கேட்கமுடியாது என்ற புறநிலையில், வடக்கில் சிங்கள பௌத்த மயமாக்கலை நடைமுறைப்படுத்தும் இயந்திரமாக ’அரசினால்’ இராணுவம் பயன்படுத்தப்படுகின்றது.

போருக்குப் பிந்தைய சூழலில் தமிழர் தாயகத்தின் வடக்கில் நிலவிவரும் நில உடைமை சார்ந்த விடயங்களைக் கள ஆய்வு மூலமும், தகவல், தரவுகள், ஆதாரங்கள் வழியாகவும் இந்த அறிக்கை ஆவணப்படுத்துகின்றது. நிலத்தின் பயன்பாடு – அதன் மீதான அணுகல், நிலக் கட்டுப்பாடு, ‘போருக்குப் பிந்தைய மீள்கட்டமைப்பு மற்றும் நல்லிணக்க சூழலில்’ பெண்கள், ஆண்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்தின் கூறுகளையும் ஆய்வு கவனத்திலெடுத்துள்ளது.

தமிழர் தாயகத்தின் வடக்கில் நிலம் சார்ந்து மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான துல்லியமானதும் விரிவானதுமான தகவல்கள் திரட்டப்பட்டு காத்திரமான ஆய்வறிக்கையாக இந்த ஆவணம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. நில விவகாரம் உணர்ச்சிவயப்பட்டதாக மட்டுமே கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது. இதனைத் தகுந்த தரவுகள், தகவல்கள், பரிந்துரைகளுடன் ஆவணமாக்கி, அறிவுசார் தளத்தில் முன்னெடுக்க வழிவகுப்பதாக இந்த ஆய்வறிக்கை அமைகிறது.


ஒலிவடிவில் கேட்க

1599 பார்வைகள்

About the Author

சிவராஜா ரூபன்

ரூபன் சிவராஜா அவர்கள் 1993 ஆம் ஆண்டு சிறுவனாக இருக்கும்போது ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தார். தற்போது கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, நாடகம் மற்றும் ஊடகம் ஆகிய தளங்களில் இவர் செயற்பட்டு வருவதுடன் அரசியல், சமூகம், கலை, இலக்கியம் சார்ந்தும் எழுதி வருகிறார். ஈழம், தமிழகம், மற்றும் புலம்பெயர் ஊடகங்கள், இதழ்களில் இவரது எழுத்துக்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.

'எதிர்ப்பரசியல்', 'அதிகார நலனும் அரசியல் நகர்வும்' (உலக அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு), 'எழுதிக் கடக்கின்ற தூரம்' (கவிதைத் தொகுப்பு), 'கலைப்பேச்சு' (திரை நூல் அரங்கு) என்பன இவரது படைப்புகளாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்