சிங்கள அரசின் காணிக் கொள்கை
Arts
8 நிமிட வாசிப்பு

சிங்கள அரசின் காணிக் கொள்கை

November 6, 2023 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1974 களை தொடர்ந்து வந்த காலப்பகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்கவை தலைமையாகக் கொண்ட கூட்டு அரசாங்கம் கடைப்பிடித்த காணிக் கொள்கை காரணமாக மலையக பெருந்தோட்ட பகுதிகள் எங்கிலும் சிங்களப் பேரினவாதம் மூர்க்கமாக தலைவிரித்தாடத் தொடங்கியது. மலையக பெருந்தோட்டங்களில் இருந்து தமிழ் தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு அந்த தோட்டக் காணிகளை சிங்கள மக்களுக்கு பிரித்துக் கொடுக்கும் கைங்கரியம் ஆரம்பமானது. இதன் பொருட்டு 1975 ஆம் ஆண்டு சட்ட விதிமுறைகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்தச் சட்ட விதிகளை எந்த ஒரு நீதிமன்றத்திலோ நியாய சபைகளிலோ சவாலுக்கு உட்படுத்த முடியாது என்று அச்சட்ட விதிகளிலேயே  குறிப்பிடப்பட்டிருந்தது. காணிப் பறிப்பு சட்டத்தின் விளைவாக சிங்கள மக்களுக்கும் மலையக தமிழ் மக்களுக்கும் இடையே வன்மமும் பகையும் தூண்டிவிடப்பட்டு அந்த பகைமை இன்றுவரை நிரந்தரமாக அவர்கள் மனதில் குடிகொள்ள வழிசமைத்துக் கொடுக்கப்பட்டது.

Srimavo was appointed

நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே கோப்பிப் பயிர்ச் செய்கைக்காக இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் கண்டிய விவசாயிகளின் காணிகளை பறித்துக் கொள்வதற்கு காரணமாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தது. இருந்தபோதும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே காணி பகிர்ந்தளித்தல் சட்டம் கொண்டுவரப்பட்டு தேயிலை பெருந்தோட்ட காணிகளை துண்டாடி சிங்கள மக்களுக்கு பகிர்ந்து அளிக்கும் நடவடிக்கை ஆரம்பமானது. இதனால் அத்தகைய தோட்டங்களில் வசித்தவர்களுக்கு அவர்கள் வசிக்க எந்தவிதமான மாற்று திட்டமும் அறிவிக்கப்படாமல், பலாத்காரம் பிரயோகிக்கப்பட்டு, தோட்டங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.

மேற்படி சட்ட விதிமுறைகளை, பெருந்தோட்ட தொழிலாளர்கள் மத்தியிலும் கண்டிய விவசாயிகள் மத்தியிலும் செயலாற்றிய அரச சார்பற்ற நிறுவனங்களும் மத அமைப்புகளும்கூட வன்மையாகக் கண்டித்தன.அத்தகைய அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்றான சமூகம் மற்றும் சமயத்துக்கான மத்திய நிலையம் பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்து.

“மேற்படி சட்ட விதிமுறைகள் அரசு அதிகாரிகளுக்கு சர்வாதிகாரி போன்ற ஒரு அதிகாரத்துவ வரம்பு மீறலுக்கான சக்தியை அளிக்கின்றன. அத்தகைய வரம்பற்ற அதிகாரத்தை பயன்படுத்தி அவர்கள் தொழிலாளர்கள் மீது பல்விதமான அத்துமீறல்களைச் செய்ய முடியும். பாதிக்கப்பட்டவர்கள், எந்தவித பரிகாரங்களையும் பெற்றுக்கொள்ள முடியாமல் பரிதவிக்கும் நிலையும் தோன்றும் என்ற விதத்தில் சட்டவிதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.”

Rosario

இதனால் ஏற்பட்ட  வரவேற்கத்தக்க ஒரு திருப்புமுனை என்னவென்றால் பெருந்தோட்ட துறையைச் சேர்ந்த அரச சார்பு தொழிற்சங்கங்களும், எதிர்தரப்பு தொழிற்சங்கங்களும்  ஒன்றிணைந்து போராடத் துணிந்தமையாகும். 1975 நவம்பர் 30 ஆம் திகதி பெருந்தோட்ட தொழில்துறையின் ஆறு தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான கூட்டுமுயற்சி பற்றி பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பித்தன. இந்தப் பேச்சுவார்த்தையில் செங்கொடிச் சங்கத்தைச் சேர்ந்த என். சண்முகதாசன், எம்.எஸ். தம்பி ராஜா, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் யூனியனைச் சேர்ந்த டபிள்யூ. சி. ரத்னாயக்க, தேசிய தொழிலாளர் காங்கிரஸ் சங்கத்தை சேர்ந்த என். வெள்ளையன் ஆகிய முன்னணிப் பேச்சாளர்கள் பங்குபற்றினர்.

இவ்வாறு அரசாங்கத்துக்கு எதிராக திரண்டு வரும் தொழிற்சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமய அமைப்புகள் ஆகியவற்றின் எதிர்ப்பைக் கண்டு வெகுண்ட அரசாங்கம் அவ்வருடம் டிசம்பர் மாதமளவில் மேற்படி சட்டவிதிகளை மீளப் பெற்றுக் கொண்டதாக அறிவித்தது. இந்த முயற்சிகளுக்கு சமாந்தரமானதாக, ஏற்கனவே பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்து பிரஜாவுரிமை பெற்றுக்கொண்டிருந்த இந்திய வம்சாவழித் தமிழர்களில் பலர், தமக்கும் இந்த நாட்டில் ஒரு பிரஜைக்கான உரிமைகள் இருப்பதாகவும், தங்களுக்கு வேலைவாய்ப்பும் நில உரிமையும் வழங்க வேண்டும் என்றும், அரசாங்கத்தின் பிற்போக்குவாத கொள்கைகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கத் தொடங்கினர். இதற்கு உதாரணமாக பின்வரும் சம்பவத்தைக் குறிப்பிடலாம். 1976 ஆம் ஆண்டு அரசாங்கமானது பூண்டுலோயா பிரதேசத்தில் காணப்பட்ட சொக்சி தேயிலைத் தோட்டத்தை சிங்கள மக்களுக்கு துண்டாடி பகிர்ந்து அளிக்கும் முகமாக அங்கிருந்து தமிழ் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற முற்பட்டது. அதனால், இத் தோட்டத்தைச் சேர்ந்த சகலரும் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டதுடன் தமக்கும் காணி உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர். மேற்படி தோட்டத்தின் முகாமைத்துவமும் தோட்டத்தின் காணிகள் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டால் முழுத் தோட்டமும் அழிந்து போய்விடும் என்ற பயத்தில், அரசாங்கம் தோட்டத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தது.

N.Shanmugathasan

உடனேயே இது தொடர்பான எதிர்ப்பு கூட்டம் ஒன்று ரம்பொடையில் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் உரை நிகழ்த்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமான் பின்வருமாறு கருத்து தெரிவித்தார் :

“முன்பு ஒருமுறை இந்த மக்கள் அனைவருக்கும் பிரஜா உரிமைகள் பறிக்கப்பட்டு நாடற்றவர்கள் ஆக்கப்பட்டபோது அவர்கள் ஓட்டுரிமையை இழந்தார்கள். இப்போது கடும் பிரயத்தனத்தில் பின்னர் பிரஜா உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் இப்போது தொழில் அற்றவர்களாகவும் வீடற்றவர்களாகவும் வீதியில் வந்து நிற்கின்றனர்.” (காங்கிரஸ் செய்தி இதழ், 1976 ஒக்டோபர் 1)

ஆனால் அதற்குப் பின்னரும் நிலைமை சீராகவில்லை. மேலும் மேலும் இனவாதம் பற்றி எரியும் வகையில் சம்பவங்கள் முன்னெடுக்கப்பட்டன. தோட்டத்து மக்களை அவர்கள் இருப்பிடங்களில் இருந்து உள்ளூர் காடையர்களைப் பயன்படுத்தி பலாத்காரமாக விரட்டி அடித்துவிட்டு தோட்டத்தைக் கைப்பற்றி நிலங்களைத் துண்டாடி சிங்களவர்களுக்கு கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்தன. இதன்போது தோட்டத்துப் பயிர்களும் லயங்களும் கூட தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. 1977 மார்ச் 11 ஆம் திகதி, தொழில் ஆணையாளர் சகல பெருந்தோட்ட தொழிற் சங்கங்களும் அடங்கிய கூட்டம் ஒன்றைக் கூட்டி ஒரு அறிவித்தலை விடுத்தார். அதன் பிரகாரம், அரசாங்கத்தின் காணிப் பகிர்ந்தளிப்பு கொள்கையை நாட்டின் எந்தப் பிரஜையும் எதிர்க்க முடியாது. நாட்டின் சகலரும் இதனை ஏற்றுக்கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து கண்டி, கம்பளை, புஸ்ஸல்லாவ ஆகிய பிரதேசங்களில் காணப்பட்ட தோட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு, அவை கொலனிகளாக துண்டாடப்பட்டு பெரும்பான்மை சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் தமிழர்களின் இருப்பிடங்கள் சின்னாபின்னமாக்கப்பட்டு, சனத்தொகை பரம்பல் சிதறடிக்கப்பட்டது. அவர்களது இருப்பிடங்களுக்கு மத்தியில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாகின. இவ்வகையான அநீதிகள் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டதற்கு காரணம் அவர்கள் தமிழ் மொழியை பேசியமையும் அவர்கள் இந்திய வம்சாவழியினராக இருந்தமையும் ஆகும் . இன்றுவரை இந்த அட்டூழியம் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. நாம் வெறும் பார்வையாளர்களாகவே இருக்கிறோம் என்பது சோகம் நிறைந்த உண்மையாகும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

3185 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்