யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்கள்
Arts
10 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்கள்

February 1, 2023 | Ezhuna

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

இடமொன்றின் தெரிந்தெடுக்கப்பட்ட இயல்புகளைக் குறியீட்டு அடிப்படையில் காட்டுவதே நிலப்படம் ஆகும். இது பெரும்பாலும் மட்டமான தளத்தில் வரையப்படுகின்றது.1 நிலப்படங்கள், அவை வரையப்பட்ட காலத்தின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்துவனவாக உள்ளன. நிலப்படங்கள் முதன்மையாக, முழு உலகினதோ அதன் பகுதிகளினதோ புவியியலை விளக்குவனவாக இருந்தபோதும், அவை அப்பகுதிகளின் வரலாறுகளைப் புரிந்துகொள்வதற்கும் உதவுகின்றன. “நிலப்படங்கள் சிறப்பான வரலாற்று மூலங்கள். பழைய நிலப்படம் ஒன்று, அதன் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஒரு கதையை உள்ளடக்கியிருக்கலாம். வரலாற்று நிலப்படங்களின் வடிவத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய கலைத்துவம், பாணி, தோற்றம் என்பன குறிப்பிட்ட காலத்தைப் பற்றியும் அக்காலத்துப் பண்பாட்டைப் பற்றியும் விளக்கங்களைத் தரக்கூடும். அதேவேளை வரலாற்று நிலப்படங்களின் உள்ளடக்கங்கள், தற்காலத்தில் இல்லாமற் போய்விட்ட நிலத்தோற்றங்களினதும் பிற அம்சங்களினதும் பதிவுகளாக அமைகின்றன. அவை நிலப்படத்தை வரைந்தவரது முன்னுரிமைகள், உணர்வுகள், பயங்கள், அறிவு நிலை ஆகியவற்றுடன் அவரது பண்பாட்டுச் சூழலையும் பிரதிபலிப்பவையாக அமையக்கூடும்.”2

ஒரு படம் பல ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்பார்கள். நிலப்படங்கள் இக்கூற்றுக்குச் சரியான எடுத்துக்காட்டுகள். அவை ஏராளமான தகவல்களை இலகுவாக அறிந்துகொள்ளும் வகையில் ஒரே தாளில் தருகின்றன. குறிப்பாக, இடஞ்சார்ந்த தகவல்களை நிலப்படங்களினூடாகச் சிறப்பாக விளக்க முடியும். முழு உலகையும் அல்லது பிராந்தியங்கள், நாடுகள், நகரங்கள், ஊர்கள் போன்ற பல்வேறு அளவுகளைக் கொண்ட பகுதிகளைத் தேவைக்கு ஏற்றவாறு நிலப்படங்களில் காட்ட முடியும். இப்பகுதிகளிற் காணப்படக்கூடிய நிலம், கடல், காடுகள், மலைகள், நிலத் தோற்றங்கள், ஏரிகள், குளங்கள், நகரங்கள், வீதிகள், கட்டடங்கள் போன்ற இயற்கையானவையும் செயற்கையானவையுமான பலவகைப்பட்ட பௌதீக அம்சங்கள் தொடர்பான தகவல்களை நிலப்படங்கள் தருகின்றன. குறிப்பிட்ட ஒரு காலத்தில் மேலே குறிப்பிட்ட அம்சங்களின் அமைவிடங்கள், அளவுகள், வடிவங்கள் போன்றவற்றை நிலப்படங்களிலிருந்து அறிந்துகொள்ள முடிவதுடன், அவற்றுக்கு இடையிலான வெளிப்படையாகத் தெரியக்கூடிய தொடர்புகளை விளங்கிக்கொள்ளவும், வெளிப்படையாகத் தெரியாத தொடர்புகளை உய்த்துணரவும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

ஒரே நிலப்படத்திலிருந்து வரலாற்றுத் தகவல்கள்

பல சந்தர்ப்பங்களில் சில வரலாற்று உண்மைகளை நிறுவுவதற்கு ஒரு நிலப்படமே போதுமானதாக இருக்கக்கூடும்.3 எடுத்துக்காட்டாக, ஒல்லாந்தர் போர்த்துக்கேயக் கோட்டையை முற்றுகையிட்டிருந்தபோது வரையப்பட்ட நிலப்படமொன்றிலிருந்து போர்த்துக்கேயர் கால யாழ்ப்பாண நகரத்தின் பல்வேறு அம்சங்களை அறிய முடிவதுடன், யாழ்ப்பாண நகரத்தின் தோற்றம், அதன் வளர்ச்சி என்பன தொடர்பான சில தகவல்களையும் பெறக்கூடியதாக உள்ளது. அத்துடன், ஒல்லாந்தர் எவ்வாறு போர்த்துக்கேயரின் கோட்டையை முற்றுகை இட்டிருந்தனர் என்பதை இந்நிலப்படத்திலிருந்து தெளிவாக அறிய முடிகின்றது. இதிலிருந்து பெறக்கூடிய பல தகவல்கள் வேறு மூலங்களில் கிடைக்காதவை. இந்நிலப்படத்திலிருந்து நேரடியாகக் கிடைக்கும் தகவல்களைத் தவிர, இதைப் பிற எழுத்துமூல அல்லது தொல்லியல் சான்றுகளுடன் சேர்த்து ஆய்வு செய்யும்போது மேலதிகமான தகவல்களையும் பெறமுடிகின்றது.

வரலாற்றுத் தொடர்ச்சியும் நிலப்படங்களும்

ஒரு தனி நிலப்படம் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் இருக்கும் நிலைவரங்களையே காட்டுவதால், கால ஓட்டத்தில் இடம்பெறும் மாற்றங்களை அறிவதற்கு அது போதுமானதல்ல. பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட நிலப்படங்களை ஒப்பிட்டு ஆராய்வதன் மூலம் பல்வேறு அம்சங்கள் வரலாற்றினூடாக அடைந்த மாற்றங்களை அறிய முடியும்.4 நகரங்கள் அல்லது பிற குடியிருப்புகள், போக்குவரத்து வலையமைப்பு போன்ற இன்னோரன்ன முறைமைகளின் விரிவாக்கம், வளர்ச்சி என்பன தொடர்பான தகவல்களை இவ்வாறு பெற முடியும். பல்வேறு முறைமைகள் இவ்வாறு வளர்ச்சி பெறுகின்றபோது, அவை ஒன்றன்மேல் இன்னொன்று ஏற்படுத்தும் தாக்கங்களைத் தெளிவாக அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. புதிய வீதிகள், பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், மருத்துவ வசதிகள், தொழில் வசதிகள், வடிகால்கள், நீர்வசதி போன்றவை ஏற்படுத்தும் நிலப் பயன்பாட்டு மாற்றங்களைப் பல்வேறு கால கட்டங்களில் வரைந்த நிலப்படங்களை ஒப்பிட்டு ஆராய்வதன் மூலம் விளங்கிக்கொள்ள முடியும்.

அரசியல், பாதுகாப்புச் சூழலும் நிலப்படங்களும்

அத்துடன், குறிப்பிட்ட காலகட்டங்களில் ஏற்படக்கூடிய அரசியல், பாதுகாப்பு அழுத்தங்கள் தொடர்பான சான்றுகளையும் நிலப்படங்கள் தருகின்றன. இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் இறுதியில் பல முக்கிய நகரங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கான திட்டங்களைக் காட்டும் நிலப்படங்கள் இவ்வாறானவை. அக்காலகட்டத்தில் பிரான்ஸ், பிரித்தானியா ஆகியவை இந்துமாகடற் பிராந்தியத்தில் வலுப்பெற்றன. இந்நாடுகளில் ஒன்று இலங்கையிலிருந்த ஒல்லாந்தரின் பகுதிகளைக் கைப்பற்றிக்கொள்ள வாய்ப்புகள் இருந்தன. இதனால். கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை போன்ற முக்கியமான நகரங்களைப் பலப்படுத்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வரைபடங்களும் தயாரிக்கப்பட்டன. திறந்த நகரமாக இருந்த யாழ்ப்பாண நகரத்தைச் சுற்றி மதில் அமைப்பதையும், கோட்டையைப் பலப்படுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு நிலப்படங்களும் வரைபடங்களும் வரையப்பட்டன. இந்தத்திட்டங்கள் செயலுருப் பெறாவிட்டாலும், மேற்படி படங்கள் அக்காலத்தில் நிலவிய அரசியல், பாதுகாப்புச் சூழலை விளக்குவதற்கான சான்றுகளாக அமைகின்றன.

நிலப்படங்களும் இடப்பெயர்களும்

நிலப்படங்கள், தேவையைப் பொறுத்து அவை வரையப்பட்ட காலப்பகுதியில் புழக்கத்திலிருந்த நாடுகள், பிரதேசங்கள், ஊர்கள், குறிச்சிகள், காணிகள், வீதிகள், ஆறுகள், நீர்நிலைகள் போன்ற பல இடம் சார்ந்த அம்சங்களைப் பெயர் குறித்துக் காட்டுகின்றன. பழைய நிலப்படங்களில் காணப்படும் இவ்வாறான பெயர்கள் தற்காலப் பெயர்களை ஒத்தவையாகவோ வேறுபாடானவையாகவோ இருக்கலாம். இவை இப்பெயர்கள் குறிக்கும் அம்சங்களின் தோற்றம், வரலாறு, பல்வேறு காலப்பகுதிகளில் அவற்றின் பயன்பாடு போன்றவை தொடர்பான தகவல்களைத் தரக்கூடியவையாக உள்ளன.

பல வரலாற்றாளர்கள் தமது ஆய்வுகளுக்குப் பழைய நிலப்படங்களில் காணப்படும் இடப் பெயர்களைப் பயன்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தின் பண்டைய வரலாற்றை எழுதிய இராசநாயக முதலியார், தனது கருதுகோள்களை நிறுவுவதற்குத் தொலமியின் நிலப்படத்திலுள்ள இடப்பெயர்களைப் பயன்படுத்தியுள்ளார்.5

நிலப்படங்களைத் தகவல் மூலங்களாகப் பயன்படுத்துவதிலுள்ள சிக்கல்கள்

நிலப்படங்களின் நம்பகத்தன்மை குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனப் பலர் குறிப்பிடுவது உண்டு. எழுத்து மூலமான ஆவணங்களைப் போலவே நிலப்படங்களின் நம்பகத் தன்மைக்கும் வரையறைகள் உண்டு.

இன்று நாம் பார்க்கக்கூடிய பழைய நிலப்படங்களை ஒரு காலத்தில் அரசர்களோ, பிரபுக்களோ, அரசாங்கமோ, படையினரோ, வணிகரோ, கடலோடிகளோ பயன்படுத்தியிருக்கலாம்.6 எனவே பயன்படுத்துபவர்களின் தேவையை நிறைவேற்றும் வகையிலேயே நிலப்படங்கள் வரையப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. நிலப்படங்களில் அவை காட்டும் பகுதியின் எல்லாத் தகவல்களையும் காட்ட முடியாது என்பதால், குறித்த நிலப்படம் என்ன நோக்கத்துக்காக வரையப்படுகின்றதோ அந்த நோக்கத்துக்கு ஏற்ப தெரிந்தெடுக்கப்பட்ட தகவல்களே நிலப்படங்களில் உள்ளடக்கப்படுகின்றன. நிலப்படமொன்றில், அதன் நோக்கத்துக்குத் தேவை இல்லாததால் குறிப்பிட்ட ஒரு வீதி காட்டப்படாமல் இருக்கலாம். அந்நிலப்படத்தைப் பார்ப்பவர்கள் அப்படம் வரையப்பட்ட காலத்தில் அவ்வீதி இருக்கவில்லை என்ற பிழையான முடிவுக்கு வரக்கூடும். சமயம், அரசியல் போன்றவை சார்ந்த நோக்கங்களுக்காக வரையப்படும் நிலப்படங்களில் பக்கச் சார்பான தகவல்கள் இடம்பெறுவது உண்டு.

சில நிலப்படங்கள் பல்வேறு காரணங்களால் சீரான அளவுத் திட்டங்களுக்கு அமைவதில்லை. படத்தின் சில பகுதிகள் அளவுக்கு மீறிப் பெரிதாகவோ சிறிதாகவோ காணப்படலாம் அல்லது சில பகுதிகள் நெருக்கி வரையப்பட்டிருக்கலாம். முறையான நில அளவைத் தரவுகள் இல்லாததால் அல்லது வரைதற் குறைபாடுகளால் இவ்வாறான நிலை ஏற்படக்கூடும். குறிப்பிட்ட தேவைக்கு துல்லியம் முக்கியமானதாக இல்லாமலும் இருந்திருக்கலாம். ஆனால், இவ்வாறான குறைபாடுகளால் தகவல்கள் திரிபு அடைந்து பிழையான முடிவுகளுக்கு வழியேற்படுத்தக்கூடும். யாழ்ப்பாண நகரத்தையும் சூழலையும் காட்டும் ஒல்லாந்தர் கால நிலப்படங்கள் சிலவற்றில் இவ்வாறான குறைபாடுகளைக் காண முடிகின்றது.

சில வேளைகளில் நிலப்படங்களில், உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்ட அம்சங்களும் காட்டப்படுகின்றன. அவை குறித்த நிலப்படங்கள் வரையப்பட்ட காலத்தில் உண்மையாக இல்லாதிருந்திருக்கும். அவை எக்காலத்திலும் உருவாக்கப்படாமலே இருந்திருக்கலாம். வேறு வழிகளில் தகவல்கள் கிடைக்காவிடில் குறித்த அம்சங்கள் ஒரு காலத்தில் உண்மையில் இருந்தவை எனப் பிழையாகக் கருத வாய்ப்புகள் உள்ளன. யாழ்ப்பாணக் கோட்டை, நகரம் என்பவற்றைக் காட்டும் ஒல்லாந்தர் கால நிலப்படங்கள் சிலவற்றிலும் உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்ட கட்டடங்களும் அமைப்புக்களும் காட்டப்பட்டுள்ளன. அவை உண்மையில் கட்டப்படவில்லை.

நிலப்படங்கள் பல்வேறு வழிகளில் சேகரிக்கப்படும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு வரையப்படுகின்றன. அறியாமை, ஆசை, கருத்தியல் சார்ந்த காரணங்களாலும் சிலவேளைகளில் கெட்ட நோக்கம் போன்றவற்றாலும் தகவல்களில் திரிபுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.7

எனவே நிலப்படங்களை வரலாற்றுச் சான்றுகளாகப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. வேறு மூலங்களிலிருந்து கிடைக்கும் தகவல்களை ஆராய்ந்து குறிப்பிட்ட சான்றுகளை உறுதிப்படுத்த வேண்டும்.

யாழ்ப்பாணப் பிரதேச நிலப்படங்கள்

கி. பி. 150 அளவில் தொகுக்கப்பட்ட தொலமியின் குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு பின்னாளில் வரையப்பட்ட இலங்கைப் படத்தின் ஒரு பகுதியாக இன்று யாழ்ப்பாணப் பிரதேசம் என அழைக்கப்படும் பகுதிகளும் காட்டப்பட்டுள்ளன.8 ஆனாலும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் யாழ்ப்பாணப் பிரதேசத்தைக் காட்டும் நிலப்படங்கள் ஒல்லாந்தர் காலத்திலிருந்தே கிடைக்கின்றன. இவற்றுட் பெரும்பாலானவை நெதர்லாந்திலுள்ள ஆவணக்காப்பகங்களிலும் அருங்காட்சியகங்களிலும் உள்ளன. மேற்படி நிலப்படங்கள் குறித்தும் இலங்கையில் பல்வேறு நிறுவனங்களிலுள்ள சில நிலப்படங்கள் குறித்தும் 1941/42 ஆம் ஆண்டுகளில் ஆர். எல். புரோகியர் ஒல்லாந்தப் பறங்கியர் சங்க ஆய்விதழில் ஒரு கட்டுரைத் தொடர் எழுதியிருந்தார். இதில் யாழ்ப்பாணத்து நிலப்படங்கள் பற்றிய தகவல்களும் உள்ளடங்கியிருந்தன.9 எனினும் இதில் படங்கள் எதுவும் இல்லை. அண்மைக் காலம்வரை இந்த நிலப்படங்களைப் பார்வையிடுவது காலமும் பெருஞ் செலவும் பிடிக்கக்கூடிய ஒரு விடயம். ஆனால், இப்போது இவற்றுட் பெரும்பாலானவற்றை நெதர்லாந்தின் தேசிய ஆவணக் காப்பகம் (Nationaal Archief), விக்கிமீடியா பொதுவகம் (Wikimedia Commons), பரஸ்பர மரபுரிமைக்கான நிலப்படத் தொகுப்பு (Atlas of Mutual Heritage) போன்ற இணையத்தளங்களில் பார்வையிட முடிகின்றது. முதலிரண்டு இணையத்தளங்களில் இவற்றைப் பதிவிறக்கம் செய்யும் வசதிகளும் உள்ளன.

எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதும், குறித்த சில நிலப்படங்களின் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதுமே இத்தொடரின் நோக்கம்.

அடிக்குறிப்புகள்

  1. “Map,” National Geographic Resource Library, accessed January 19, 2023, https://education.nationalgeographic.org/resource/map.
  2. World History Sources – The World History Survey Course on the Web, George Mason University, accessed January 19, 2023, https://chnm.gmu.edu/worldhistorysources/unpacking/mapswhybother.html
  3. Brien Barrette, and Genya Erling, “Learning Historical Research,” accessed January 19, 2023, http://www.williamcronon.net/researching/maps.htm#_Using_Maps_to.
  4. “Learning Historical Research”
  5. C. Rasanayagam, Ancient Jaffna (New Delhi: Asian Educational Services, 1993), 93-128.
  6. Ashly and Miles Baynton-Williams, New Worlds – Maps from the Age of Discovery (London: Quercus, No Date), 7.
  7. Mark Monmonior, How to Lie with Maps (Chicago: University of Chicago, 2018), 2.
  8. J. R. Sinnathamby, Ceylon in Ptolemy’s Geography (Colombo: J. R. Sinnathamby, 1968), 19-30.
  9. R. L. Brohier, “Ceylon in Maps,” The Journal of the Dutch Burgers Union, vol XXXII, no. 2 (October 1942): 79-89.

ஒலிவடிவில் கேட்க

14313 பார்வைகள்

About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • July 2024 (5)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)