மேகம் கவிந்த தாரகை : மருத்துவர் கிறீன்
Arts
9 நிமிட வாசிப்பு

மேகம் கவிந்த தாரகை : மருத்துவர் கிறீன்

October 11, 2023 | Ezhuna

ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இலங்கைக்கு கிடைத்த சில பேறுகளில், மேலைத்தேச மருத்துவமுறையின் உள்நுழைவும் ஒன்றாகும். அதுவரை தனியே சுதேச மருத்துவத்தையே நம்பியிருந்த இலங்கை மக்கள், மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்தோடு தீர்க்கப்படமுடியாத பல நோய்களையும் குணப்படுத்த முடிந்தது. இறப்புவீதம் பெருமளவுக்கு குறைந்தது. இவ்வாறான மேலைத்தேய மருத்துவத்துறையை இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் வளர்த்தெடுக்க, அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. அவ்வாறு மேலைத்தேய மருத்துவத்தை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வளர்த்தெடுக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவர்களையும், அவர்களது பணிகளின் தனித்துவத்தையும், இலங்கையின் வடபகுதியில் மேலைத்தேச மருத்துவத்துறை 1820 முதல் இப்போதுவரை வளர்ந்து வந்த முறைமைகளையும் தொகுத்து தருவதாக ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகின்றது.

1884 இல் பிரித்தானிய ஆளுநர் சேர். ஆர்தர் கோர்டன் யாழ்ப்பாணக் கல்லூரியையும் அமெரிக்க மிசனரிகளின் பணியையும் பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணம் வருகை தந்தார். அமெரிக்க மிசனரிகள் யாழ்ப்பாணத்தில் ஆற்றும் மருத்துவப் பணிகளுக்காகவும் மருத்துவப் பீடத்தை மீள ஆரம்பிக்கவும் 1000 ரூபாவை ஆர்தர் கோர்டன் அமெரிக்க மிசனுக்கு வழங்கினார்.

உடல்நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து 1873 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குத் திரும்பிய கிறீன் நியூயோர்க்கில் கிறீன்கில் என்ற இடத்தில் உள்ள தனது குடும்ப இல்லத்தில் வசித்தார்.

green Image (1)

மேகங்கள் கவிந்த நாள்

1884 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி கிறீன் தனது அறைக்கு சகோதர, சகோதரிகள், மனைவி, பிள்ளைகள் அனைவைரையும் ஒவ்வொருவராக வாஞ்சையுடன் அழைத்து தனது இறுதியான பிரியாவிடையைப் பரிவு மிக்க வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்.

எவ்வித சலனமும் இன்றி கிறீனது உயிர் இயேசுவின் நித்திய உலகைச் சென்றடைந்தது. 19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்களில் ஈடிணையற்றவரும் தமிழர்களால் மிகவும் உயர்ந்தநிலையில் வைத்துப் போற்றத்தக்கவருமான  மருத்துவர் கிறீனது வாழ்வு முடிவுக்கு வந்தது.

கிறீனது குடும்பத்தவர்களது ஆவணப் புத்தகத்தில் பின்வரும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

“1884 மே 28: பெறுதற்கரியவரும் மிகவும் நேசத்துக்குரியவரும் எமது சகோதரருமான சாமுவேலது உயிர் பகல் 12.15 மணியளவில் எம்மை விட்டுப் பிரிந்தது. அன்று மழைநாள். பழத்தோட்டத்திலே அப்பிள் மலர்கள் மலர்ந்து பொற்கதிர்களைப் பரப்பின. மரங்களில் முகிழ்த்த புதிய தளிர்கள் அபரிமிதமான பசுமையைப் பரப்பிய வண்ணமிருந்தன. நிலமெங்கும் பச்சைநிறக் கம்பளம் விரித்தது போல் காணப்பட்டது. வசந்தகாலத்தின் புத்துயிர்ப்பு நிலமெங்கும் வியாபித்திருந்தது. எங்கும் நிசப்தமும் அமைதியும் நிலவியது.”

கிறீனது இறுதிச் சடங்கு 1884 மே 30 அன்று நடைபெற்றது.  

மருத்துவர் கிறீன், தான் இறந்தபின் தனக்கு ஒரு நினைவுக்கல் இருக்குமாயின் அது எளிமையானதாக இருக்க வேண்டும் என்றும் அதிலே “தமிழர்களின் மருத்துவத் தூதுவர் (Medical Evangelist to the Tamils)” என்ற வாசகங்களைப் பொறிக்குமாறும் தனது உயிலில் எழுதியிருந்தார். அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்திலுள்ள வூஸ்டர் கிராமத்திலுள்ள கிறீனது குடும்பத்தவர்களது அடக்கசாலையில் கிறீனது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட போது கிறீனது இறுதி விருப்பம் நிறைவேற்றப்பட்டது. அந்நினைவுக்கல் மருத்துவர் கிறீன் தமிழர்களுக்கு ஆற்றிய பணியை நினைவுபடுத்தி நிற்கின்றது.

Green Gravestone

இறந்தோரைப் போற்றி வாழ்தல்

ஒருவர் இறந்தால் அவரது உடலை வைத்து அஞ்சலி உரைகள் ஆற்றுவது கிறித்துவ மரபு; இது தமிழ் மரபல்ல. இறந்தவர்களது உடலை 24 மணிநேரத்துக்குள் தகனம் செய்தல் சைவத் தமிழர்களின் மரபு. இறந்தவர்களைப் போற்றி நினைவு கூர்வதும், பித்துருக்களை வழிபடுவதும் தமிழ் மரபு. நடுகல் வழிபாடு பற்றிய சங்க இலக்கியப் பாடல்கள் பல உள. தெய்வத்துக்கு முன் தென்புலத்தாரை வைத்து வழிபடும் மரபை, இல்லறத்தில் வாழ்பவரின் கடமையை திருவள்ளுவர் வலியுறுத்துகின்றார்.  

“தேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை – அவர்
தின்னும் சுவையமுது வேண்டியதில்லை
சாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்
சாம்பல் தமிழ்மணந்து வேகவேண்டும்.

பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும் -அங்கு
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும் -கொஞ்சு
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்.”

என்று பாடிய மதுரைப்பண்டிதர் அமரர் க.சச்சிதானந்தன், B.A( Hons) Lond., M.Phil (Lond) Ph.D (Jaffna) அவர்கள் தாம் இறந்த பின்பு தமதுடலை வைத்து கிறித்துவ மரபுப்படி நினைவுரைகளை ஆற்றக் கூடாது என்று விரும்பியிருந்தார்.

மருத்துவர் கிறீனது உயிலில் தனது இறுதிச் சடங்கு பற்றி எழுதியிருந்த வரிகள் ஆச்சரியமானவை. தனது இறுதிச் சடங்கு மிகவும் எளிமையானதாக இருக்க வேண்டும் என்றும் அங்கு புகழுரைகளோ அவதூறுகளோ இடம்பெறத் தேவையில்லை (speak neither blame nor praise) என்று கிறீன் எழுதியிருந்தமையும் நோக்குதற்குரியது.

மேலைத்தேச மரபில் சமூகப் பெரியவர் ஒருவரது மறைவின்போது உடலை நல்லடக்கம் செய்யும் முன்னர் ஆற்றும் புகழுரைகள் கவனத்துக்குரியவை. இங்கு முதல் அஞ்சலியுரை யாருக்கு வழங்கப்படுகிறது என்பதிலும் நிகழ்வை ஒழுங்குபடுத்துபவர்கள் கவனம் செலுத்துவார்கள்.  ஒருவரது இறப்பின்போது ஆற்றப்படும் புகழுரைகள், அஞ்சலிக் குறிப்புக்கள், நண்பர்கள் எழுதும் கடிதங்கள் நினைவுகூரலுக்குரியவை; பாதுகாக்கப்பட வேண்டியவை.

சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் மறைந்த போது உலகின் பல பாகங்களிலிருந்தும் அறிஞர்கள் எழுதிய புகழுரைகள், கடிதங்கள் அவரது மைந்தனால் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. இரங்கலுரைகளைப் படிக்கின்றபோது தமிழ் கூறும் நல்லுலகு புலவரில் வைத்திருந்த மதிப்பும் புலவரது தமிழறிவும் வியப்பை ஏற்படுத்தியது.

சேக்ஸ்பியரது காவியத்தில் வரும் உரோமப் பேரரசரான யூலியஸ் சீசரது உடலை வைத்து உரோமைப் போர்த்தளபதியான மார்க் அன்டனி ஆற்றும் உரை பிரபல்யமானது. ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவர்கள் அதனை மனனம் செய்வார்கள். மார்க் அன்டனி உரையின் ஆரம்பத்தில், “நான் சீசரைப் புதைப்பதற்கு வந்தேனே தவிர புகழ்வதற்கல்ல” என்று ஆரம்பித்து “மனிதர்கள் செய்யும் நல்ல விடயங்களை அவர்களது எலும்புகளுடன் சேர்த்துப் புதைத்துவிடுவார்கள்; தவறுகள் தான் மரணத்துக்குப் பிறகும் இருக்கும்” என்று தொடர்ந்து சீசர் உரோமுக்காக உலகின் பல பாகங்களிலிருந்தும் கொண்டு வந்த சேர்த்த செல்வத்தைப் புகழும் மொழிகள்  ஒரு சொற்சிலம்பமே. அன்டனியின் உரை அங்கு கூடியிருந்த மக்களிடையே கிளர்ச்சியை ஏற்பத்தியது.

MSC

மருத்துவர் கிறீனுக்குக் கிடைத்த புகழுரைகள்

மருத்துவர் கிறீனது மறைவை அடுத்து கிறீனது குடும்பத்தவர்களுக்குப் பலரிடமிருந்தும் புகழுரைகள் கடிதங்கள் வாயிலாகக் கிடைத்தன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

மருத்துவர் வண. ஹென்றி மார்ட்டின் ஸ்கடர் (மருத்துவர் ஜோன் ஸ்கடரின் மகன்):

மருத்துவர் சாமுவேல் பிஸ்க் கிறீன் மேன்மக்களில் ஒருவர். மிகவும் தெளிந்த பார்வை கொண்ட பண்பட்டவர். எப்போதும் அறிவுப்புலம் கொண்டு செயற்படுவர். சுயநலம் என்பது சிறிதுமற்றவர். மிகப் பரந்த இதயமும் நேர்மையும் தாராள மனப்பாங்கும் கொண்டவர். நம்பிக்கை, மெய்யுறுதிப்பாடு, விருப்பார்வம் மிக்க அச்சமற்ற கிறித்தவர். நான் அவரிடத்தில் அன்பாக இருந்தேன். என்றும் அவருக்கு வணக்கம் செலுத்துவேன்.

வண. W.W. ஹொலாண்ட் (அமெரிக்க இலங்கை மிசனரி 1846-1892):

மருத்துவர் கிறீன் திறமைமிக்க முதன்மையான மருத்துவராகவும் சத்திரசிகிச்சை வல்லுநராகவும் விளங்கியதுடன் தான் ஆற்றும் மருத்துவப் பணியில் தன்னார்வம் மிக்கவராகவும் அர்ப்பணிப்புள்ளவராகவும் திகழ்ந்தார். அதேவேளை விஞ்ஞான அறிவில் முழுமையான ஆர்வம் கொண்டு அதனைப் பின்பற்றி வந்தார். புதிய விடயங்களை, மூலங்களை அறிவதிலும் செயல்முறைகளைத் தெரிந்து கொள்வதிலும் எப்போதும் ஆர்வம் கொண்டிருந்தார். அறிவுக் கூர்மையும் நெஞ்சுரமும் கொண்டவராக இருந்தபோதிலும் பெண்மையின் மென்மையும் அவரிடமிருந்தது. அவர் மேற்கொண்ட சத்திர சிகிச்சைகளை உள்ளூர் மக்கள் வியப்புடன் நோக்கினர்.

பிராங் கே. சாண்டர்ஸ் (யாழ்ப்பாணக் கல்லூரியில் கடமையாற்றிய அமெரிக்க ஆசிரியர்):

அவரது நினைவுகள் இன்றுபோல் என்றும் நிலைத்திருக்கும். ஒரு போதும் எம்மை விட்டு நீங்காது. தமது மக்களிடையே கடமையாற்றும் மருத்துவர்களை உருவாக்குவதில் அவர் கவனம் செலுத்தினார். இன்று இலங்கை முழுவதும் கடமையாற்றும் முன்னணி மருத்துவர்கள் அனைவரும் கிறீனிடம் மருத்துவம் கற்றவர்களே. 

மருத்துவர் ஜே. வைத்திலிங்கம் (உதவி குடியேற்றநாட்டு சத்திரசிகிச்சை நிபுணர்கிறீனது முதல் வகுப்பில் பயின்ற மாணவர்) :

மருத்துவர் கிறீன் சுயநலம் என்பது சிறிதும் அறியாதவர். உலகின் மீது பரிவுமிக்கவர். விசாலமான மனம் கொண்டவர். அவர் வெற்றிகரமாக மேற்கொண்ட சத்திரசிகிச்சைகள் ஆர்வத்தை ஏற்படுத்தியதுடன் அவரிடம் நான் மருத்துவம் பயில்வதற்கு பிரதான உந்துதலாகவும் அமைந்தன.

மருத்துவர் சப்மான் வைத்திலிங்கம் (கிறீனது 5 ஆவது மருத்துவ மாணவ அணியில் மருத்துவம் பயின்றவர்):

மருத்துவர் கிறீனுடன் 10 வருடங்கள் பணியாற்றியுள்ளேன். பிரித்தானிய அரசாங்கம் கிறீனது மருத்துவப் பணியை எல்லா வழிகளிலும் பராட்டியது. இலங்கையிலிருந்து மட்டுமன்றி இந்தியாவிலிருந்தும் கிறீனிடம் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனர். அவர் தமிழை சரளமாகவும் இலகுவாகவும் பேசும் வல்லமை மிக்கவராக விளங்கினார். தமிழர்களிடையே வழங்கிவரும் மரபுத் தொடர்கள், பழமொழிகளில் மிகுந்த புலமையுடையவர். 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த மனிதர்களில் கிறீனும் ஒருவர்.

யாழ்ப்பாண மருத்துவ வரலாற்றின் முதலாம் இயல் நிறைவுறுகிறது.

குறிப்பு: “மேகம் கவிந்த தாரகை” – இந்தியாவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. குடும்பத்தின் நலனுக்காக தன் வாழ்வைத் தியாகம் செய்த பெண்ணின் கதை. இத்திரைப்படத்தின் இயக்குநர் ரித்விக் கட்டக் அவர்களது வாழ்க்கை வரலாறும் மேகம் கவிந்த தாரகை என்ற பெயரில் வெளியாகியுள்ளது. 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7566 பார்வைகள்

About the Author

பாலசுப்ரமணியம் துவாரகன்

பாலசுப்ரமணியம் துவாரகன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றவர். 2005 - 2008 காலப்பகுதியில் சுகாதார அமைச்சில் கடமையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் ஆளுமைகளை நேர்காணல் செய்து கனடாவிலிருந்து வெளிவரும் 'வைகறை' வாரப்பத்திரிகையிலும் 'காலம்' சஞ்சிகையிலும் பிரசுரித்துள்ளார். கலாநிதி. சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலரின் பதிப்பாசிரியர்.

கடந்த 14 வருடங்களாக யாழ். போதனா மருத்துவமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் துவாரகன் 2018 இல் யாழ். போதனா மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மருத்துவ அருங்காட்சியகத்தில் மேலைத்தேச மருத்துவ வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார். இவர் மருத்துவ அருங்காட்சியகத்துக்குப் பொறுப்பு அலுவலராக விளங்குவதுடன் மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களது வழிகாட்டலில் யாழ்ப்பாணத்தில் தனித்துவமான மருத்துவ அருங்காட்சியகம் உருவாகக் காரணமானவர். இங்குள்ள தொலைமருத்துவப் பிரிவில் பன்னாட்டு மருத்துவ வல்லுநர்கள், பேராசிரியர்கள் வாரந்தோறும் கலந்துகொள்ளும் இணையவழி தொலைமருத்துவக் கருத்தமர்வுகளின் இணைப்பாளராகவும் செயற்படுகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்