ஒரு நாட்டின் பண்பட்ட சமுதாயத்தினை உருவாக்குவதற்குக் கல்வி நிறுவனங்கள் எந்த அளவுக்கு உதவுகின்றனவோ, அதே போன்ற பங்களிப்பினையே நூலகங்களும் ஆற்றி வருகின்றன. சிறு வயது முதல் மாணவர்களுக்கு அறிவுத் துறையில் ஆர்வத்தையும் அறிவையும் ஊட்ட அக்கறை எடுக்கும் ஓர் ஆசிரியனைப் போலவே நூலகமும் தான் சார்ந்த சமூகத்தினுள்ளே சேவையாற்ற வேண்டியுள்ளது. ஆசிரியருக்கு எதைப் போதிப்பது என்றதொரு வரையறை உண்டு. ஆனால் நூலகங்களின் வழங்கல் எல்லையற்றது. சுதந்திரமானதும் விரிவானதுமான தேடலுக்கு ஒருவரை ஆற்றுப்படுத்துவது நூலகத்தின் தனித்துவமான பணியாகின்றது.
உலக நாடுகளின் சமூக – பொருளாதார வளர்ச்சிப் போக்கும், வேகமும் அந்நாடுகளில் அமைந்துள்ள நூலக சேவைகள், தகவற் சேவைகள், ஆவணவாக்கச் சேவைகள் முதலியவற்றிலும் தங்கியுள்ளதென்பது, பல சர்வதேச கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் அழுத்தமாக எடுத்துரைக்கப்பட்டு வந்துள்ளது. ஆயினும் உடனடிப் பொருளாதார நன்மையை அளிக்கின்ற நடவடிக்கைகளிலேயே ஆட்சிக்கு வரும் எந்தவொரு அரசாங்கமும் கவனம் செலுத்துகின்றதே தவிர நெடுங்காலத்தில் பயனளிக்கும் நூலகச் சேவைகள் போன்ற துறைகளை அபிவிருத்தி செய்வதற்கான ஆக்கபூர்வமான செயல்களில் இவை ஈடுபடாமலிருக்கின்றன. அநேகமாக எல்லா வளர்முக நாடுகளிலும் காணக் கூடியதாகவுள்ள நிலைமை இது. இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல.
உலகின் சனத்தொகையின் கணிப்பீட்டில், ஒரு நாட்டில் கல்வியறிவு பெற்றோரின் வீதம் மொத்த சனத்தொகையில் எத்தனை என்பதை கண்டடைந்துள்ளார்கள். அண்மைக்காலத்தில் மேற்கொண்ட ஒரு கணிப்பீட்டின் படி மொத்த சனத்தொகையில் 92.3% கல்வி அறிவைக் கொண்டுள்ள இலங்கையில் கூட நூலக சேவைகளின் வளர்ச்சி மந்த நிலையிலேயே இருந்து வருகின்றது என்பதை அறியமுடிகின்றது. எம்மைச் சுற்றியுள்ள பிராந்திய நாடுகளில் 10 நாடுகளின் புள்ளிவிபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
Country | Total Population Literacy Rate | Literacy Rate Male% | Literacy Rate Female% | Data Year |
சிங்கப்பூர் | 97.5 | 98.9 | 96.1 | 2020 |
சீனா | 97.0 | 98.5 | 95.2 | 2020 |
பிலிப்பைன்ஸ் | 96.3 | 95.7 | 96.9 | 2019 |
மலேசியா | 95.0 | 96.2 | 93.6 | 2019 |
தாய்லாந்து | 94.1 | 95.5 | 92.8 | 2021 |
இலங்கை | 92.3 | 93.0 | 91.6 | 2022 |
இந்தியா | 76.0 | 82.4 | 65.8 | 2022 |
பங்களாதேஷ் | 74.9 | 77.8 | 72.0 | 2020 |
நேபாளம் | 71.2 | 81.0 | 63.3 | 2021 |
பாக்கிஸ்தான் | 58.0 | 69.3 | 46.5 | 2019 |
(World Population Review 2022: Total Population Literacy Rate (%) Extracted)
1960 இல் இலங்கையின் நூலகக்கல்வி பற்றிய விழிப்புணர்வு
ஒரு நாட்டின் அல்லது ஒரு பிரதேசத்தின் நூலக வளர்ச்சி குன்றியிருப்பதற்கான அடிப்படைக் காரணிகளில் ஒன்று பயிற்றப்பட்ட நூலகர்கள் போதியளவில் அங்கு இல்லாமையாகும். இலங்கையின் நூலக அமைப்பு முறையை 1960 ஆம் ஆண்டு ஆய்வு செய்த யுனெஸ்கோ நிபுணரான ஹெரால்ட் பொனியின் அறிக்கை மாத்திரமின்றி இலங்கையில் அவ்வப்போது நடந்தேறிய சர்வதேச மாநாட்டுத் தீர்மானங்கள் கூட நூலகவியற் பயிற்சியின் முக்கியத்துவத்தை எமக்கு ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளன. உதாரணமாக 1967 ஆம் ஆண்டு மார்கழி மாதம் யுனெஸ்கோ நிறுவனத்தின் ஆதரவில் கொழும்பில் நடைபெற்ற ஆசிய நூலக சேவைகளின் தேசியத் திட்ட நிபுணர்களின் கூட்டம், நூலகவியற் கல்விக்கு முதலிடம் கொடுத்து கீழ்க்காணும் தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றியது.
1. நூலக அபிவிருத்தி நடவடிக்கைகளில் நூலகவியற் கல்விக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும்.
2. நூலகவியற் கல்விக்கு தேவையான வசதிகள் உள்நாட்டில் அல்லது ஒரு பிராந்தியத்தில் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
3. உள்நாட்டில் நூலகப் பயிற்சித் திட்டங்கள் இல்லாதவிடத்து வெளிநாட்டில் பயிற்சி பெறுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும். நூலகத்துறையில் சமீபகாலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் அறிவதற்கும் வெளிநாடுகளில் இது தொடர்பாக என்ன நடைபெறுகின்றன என்பதை அறிவதற்கும் அனுபவம்மிக்க உள்நாட்டு நூலகர்கள், அவசியமாக வெளிநாடுகளுக்கு, எவ்வாறாயினும் அனுப்பப்படல் வேண்டும்.
4. உள்நாட்டில் நூலகப் பயிற்சிக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படுமிடத்து எண்ணிக்கையை விடத் தரத்திற்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டும்.
5. சர்வதேச நிறுவனங்களின் உதவியோடு நூலகவியல், தகவலியல், ஆவணவாக்கவியல் முதலியவற்றிற்கான பயிற்சி நிறுவனங்கள் பிராந்திய மட்டத்தில் ஸ்தாபிக்கப்பட வேண்டும். இந்நிறுவனங்கள் நூலக அபிவிருத்திப் பிரச்சினைகள் பற்றி ஆராய்ச்சி நடத்தவும், நூலகப் பயிற்சி நிறுவனங்களை அப்பிராந்தியத்தில் அமைக்கவும், முன்னேற்றவும் உதவவேண்டும். நூலகவியற் பயிற்சிகளுக்குப் பயனளிக்கும் வகையில் தேவையின் பொருட்டு உள்நாட்டு மொழிகளில் நூலக விஞ்ஞான நூல்களை வெளியிடவேண்டும்.
6. அனுபவங்களையும், கருத்துகளையும் பரிமாறிக் கொள்வதற்காக சிரேஷ்ட நூலகர்களுக்கென கருத்தரங்குகள் பிராந்திய மட்டத்தில் நடத்தப்படவேண்டும்.
7. முழுநேர நூலகக் கல்வியைப் பெற வசதியற்ற நூலகர்களுக்கென அப்பிராந்தியத்தில் தபால் மூல நூலகப்பாட நெறிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
இலங்கையில் 1950 ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது நூலகப் பயிற்சி வகுப்புகளையும் சேவைக்கால பயிற்சி நெறிகளையும் கொழும்பு பொதுசன நூலகம், பிரிட்டிஷ் கவுன்சில், அமெரிக்க கலாசார நிலையம், இலங்கை விஞ்ஞானக் கைத்தொழில் ஆராய்ச்சி நிலையம் போன்ற நிறுவனங்கள் நடாத்தி வந்த போதிலும் ஒழுங்காகத் திட்டமிடப்பட்ட நூலகவியற் கல்விமுறை 1960 ஆம் ஆண்டிற்குப் பின்பே இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதெனலாம். இவை யாவும் சேவைக்காலப் பயிற்சியளிக்கும் திட்டங்களாக விளங்கினவேயன்றி திட்டமிட்ட பாடவிதான அடிப்படையில் பயிற்சிநெறிகளை நடாத்தி, பரீட்சைகள் மூலம் தேர்ச்சிபெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்குவதாக அமையவில்லை.
1957 ஆம் ஆண்டு இலங்கை விஞ்ஞானக் கைத்தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளரினால் கொழும்பில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துவந்த நூலகர்களுக்கு ஒரு வருடப் பயிற்சிநெறியொன்று ஒழுங்குசெய்யப்பட்டது. அப்பயிற்சி நெறி, கனடா – கொழும்புத் திட்டத்தின் (Canadian Colombo Plan) ஊடாக, இலங்கைக்கு உதவும் முகமாக, கனடா கிங்ஸ்டன் நகரில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழக பிரதம நூலகராகவிருந்த டொனால்ட் ஏ. ரெட்மொன்ட் (Donald A. Redmond) அவர்களால் கொழும்பில் நடத்தப்பட்டது. டொனால்ட் ஏ. ரெட்மொன்ட் கனடாவுக்குத் திரும்பிய பின்னர், கலாநிதி வை. மகாலிங்கமும் அவரது குழுவினரும் பயிற்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டனர். இப்பயிற்சியில் பொதுசன நூலகங்கள், பாடசாலை நூலகங்கள், ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை, தொழில்நுட்பக் கல்லூரி நூலகங்கள், அரச – தனியார் நிறுவன நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் எனப் பல்வகைப்பட்ட நூலகங்களின் பணியாளர்கள் பயன்பெற்றனர்.
கலாநிதி வை. மகாலிங்கம்
இலங்கையில் நூலகக் கல்வியின் வரலாற்றினை அறிய விரும்பும் எவரும் அறிந்திருக்க வேண்டிய ஆளுமை உரும்பிராயைப் பூர்வீகமாகக் கொண்ட கலாநிதி வைத்திலிங்கம் மகாலிங்கம் என்பவராவார். இலங்கையில் நூலகக் கல்வியின் பிதாமகன் என்றும் அவரை கூறலாம். மலேசியாவின் கெடா மாநிலத்தில், சுங்கை பட்டானியில் (Sungai Petani) 08.07.1931 இல் பிறந்தவர் வை. மகாலிங்கம். தனது ஆரம்பக் கல்வியை அங்கு கற்றபின் பெற்றோருடன் இலங்கைக்குத் திரும்பி இடைநிலைக் கல்வியையும் உயர் கல்வியையும் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் கற்றிருந்தார். கல்கத்தாவில் தனது பட்டப்படிப்பினை மேற்கொண்ட பின்னர் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் ஆசிரியப் பணியில் இணைந்துகொண்டார். 1957 இல் நூலக விஞ்ஞானத்தில் முதுமாணிப் பட்டம் பெறும் நோக்குடன் கனடாவில் குவிபெக் மாகாணத்தில் உள்ள McGill பல்கலைக்கழகத்தில் இணைந்துகொண்டார். அங்கு நூலகவியலில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்ற பின்னர் மீண்டும் நாடுதிரும்பி கொழும்பு, விஞ்ஞான கைத்தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Ceylon Institute for Scientific and Industrial Research – CISIR) நூலகராகப் பணியாற்றத் தொடங்கினார்.
இக்கால கட்டத்தில் இலங்கை உயர்கல்வி நிலையங்களிலும் விஞ்ஞானத் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பணியாற்றிய நூலகத் துறையில் உயர்கல்வி கற்ற, துறைசார் நூலகர்கள் சிலர் ஒன்றிணைந்து நூலகக் கல்வியில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் எனத் தீர்மானித்தனர். இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, 1944 ஆம் ஆண்டு C.W.W. கன்னங்கராவினால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச கல்வித் திட்டமாகும். இக்கல்வித் திட்டத்தினால் பாலர் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்விபெறும் வாய்ப்பு இலங்கை மாணவர்களுக்குக் கிட்டியது. இதன் பக்க விளைவாக பாடசாலை நூலகங்களின் தேவை ஆங்காங்கே உணரப்பட்டதால் பல உயர்தர பாடசாலைகள் தமது ஆசிரியர்கள், மாணவர்களுக்கென பாடசாலை நூலகங்களை உருவாக்கத் தலைப்பட்டன. அத்தகைய நூலகங்களை வழிநடத்த தகைமைபெற்ற நூலகர்களின் பற்றாக்குறை நிலவுவதை அவ்வேளையில் உணரத்தலைப்பட்டனர்.
எனவே, காலத்துக்கேற்ப சிந்தித்த கலாநிதி வை. மகாலிங்கம் அவர்கள் இலங்கையில் நூலகக் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் பல்வேறு நிறுவனங்களிலும் பணியாற்றிவந்த ஒன்பது நூலகர்களை ஒன்றிணைத்து இலங்கை நூலகச் சங்கத்தினை (Ceylon Library Association) 1960 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அமைத்திருந்தார். மார்கிரெட் குணரத்ன (Margaret Gunaratna), ஈஸ்வரி கொரயா (Ishvari Corea), வைத்திலிங்கம் மகாலிங்கம் (Vaithilingam Mahalingam), மானெல் சில்வா (Manel Silva), எஸ்.சீ. புளொக் (S.C. Block), வில்பிரட் குணசேகர (Wilfred Gunasekara), N. குணத்திலக்க (N. Gunathilake), கிளவ்டா நித்சிங்ஹ (Cloudah Nithsinghe), W.B. தொரகும்புர (W.B. Dorakumbura) ஆகியோரே இந்த ஒன்பது பேருமாவர்.
இச்சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினராக அறுபது அங்கத்தவர்கள் இணைந்தபோதிலும், மேற்குறிப்பிட்ட ஒன்பது நூலகர்களுமே கல்வித்தகைமை பெற்ற நூலகர்களாக இருந்தனர். இவர்களுள் அப்போதைய இலங்கைப் பல்கலைக்கழக நூலகராகவிருந்த எஸ்.சி. புளொக் இலங்கை நூலகச் சங்கத்தின் முதலாவது தலைவராகவும், வை. மகாலிங்கம் முதலாவது செயலாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர். அத்துடன் நூலகக் கல்வியைத் திட்டமிடவும், வடிவமைக்கவும் நூலகக் கல்விக்கான அலுவலர் (Library Education Officer) பதவியொன்றும் உருவாக்கப்பட்டது. இப்பதவிக்கும் கலாநிதி மகாலிங்கம் அவர்களே நியமிக்கப்பட்டார். தமது நூலகச் சங்கத்தில் இணைந்திருந்த நூலகக்கல்வித் தகுதி பெற்றிராத நூலகர்களுக்கு முதலில் நூலகக் கல்வியை வழங்குவது அத்தியாவசியமானதாகப்பட்டது.
இலங்கை விஞ்ஞானக் கைத்தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய வை. மகாலிங்கம், 1965 ஆம் ஆண்டு புல்பிரைட் (Fulbright) புலமைப் பரிசில் பெற்று அமெரிக்காவிலே நியுயோர்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நூலகத்துறையில் கலாநிதிப் பட்டப்படிப்பினை மேற்கொண்டார். மூன்று ஆண்டுகளில் கலாநிதிப் பட்டப் படிப்பினை நிறைவுசெய்த அவர் 1968 ஆம் ஆண்டு கனடாவில் குடியேறினார். அதே வருடம் ஜுன் மாதம் கிங்ஸ்டன் நகரில் உள்ள குயீன்ஸ் பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞான பீட நூலகராகப் பதவியேற்றார். காலப்போக்கில் விஞ்ஞானபீடக் கிளை நூலகங்கள் அனைத்தும் கலாநிதி மகாலிங்கம் அவர்களது பொறுப்பின் கீழ் நிர்வகிக்கப்படலாயின. 1972 ஆம் ஆண்டில் குயீன்ஸ் பல்கலைக்கழக நூலகச் சங்கத் தலைவராகவும் அவர் தெரிவுசெய்யப்பட்டார். 1968 முதல் 1986 வரை 18 ஆண்டுகள் அப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
மகாலிங்கம் அவர்கள் தனது இறுதிக் காலத்தை ஆன்மீக நிறைவுக்காக வாழத் தீர்மானித்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்து சென்றார். தீவிரமான சத்யசாயி பக்தராக மாறிய அவர், அங்கு புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்யசாயி உயர்கல்வி நிறுவனத்தின் நூலகத்தில் கௌரவ நூலகராகச் சேவையாற்றினார். இங்கு இருபது ஆண்டுகாலம் முழுநேரச் சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னாளில் கனடா – புட்டபர்த்தி என மாறிமாறி வாழத்தலைப்பட்ட இவரால், முதன்மை காரணமாக கோவிட் 19 காலத்தின் பின்னர், கனடாவை விட்டு வெளியேறமுடியவில்லை. 2022 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி கனடாவில் இவர் உயிர்நீத்தார். (நன்றி: வே. விவேகானந்தன், ‘இலங்கை நூலகக் கல்வியின் பிதாமகன் கலாநிதி வை. மகாலிங்கம்”, தாய்வீடு (கனடா), ஒக்டோபர் 2022: ப.64-65).
இலங்கை நூலகச் சங்கம்
1960 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை நூலகச் சங்கம், முதலில் சேர்ந்த அதன் அறுபது அங்கத்தவர்களுக்கும் நூலகக் கல்வியை பயிற்றுவிக்கும் முகமாக 1961 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் கொழும்பில் ஆங்கிலமொழி மூலம் ஆறுமாத பகுதிநேர வகுப்பொன்றை ஆரம்பித்தது. இதனை முன்நின்று ஒழுங்கமைத்தவர் கலாநிதி மகாலிங்கம் அவர்களே. முதற்பரீட்சை, இடைநிலைப்பரீட்சை, இறுதிப்பரீட்சை என மூவகைப் பரீட்சைகளை நடாத்தத் திட்டமிட்டு, அதன் முதற் பரீட்சைக்கான வகுப்புகளை 1961 ஆம் ஆண்டு ஆங்கில மொழிமூலம் கொழும்பில் இலங்கை நூலகச் சங்கம் நடாத்தியது.
1963 ஆம் ஆண்டு இவ்வகுப்புகள் முதன்முறையாக கண்டியிலும் யாழ்ப்பாணத்திலும் நடாத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக 1963 ஆம் ஆண்டு தை மாதம் ஆங்கில மொழிமூலம் பகுதிநேர வகுப்புகளாக நடாத்தப்பட்ட இப்பாட நெறிக்கு (அ) பட்டியலாக்கம், (ஆ) பகுப்பாக்கம், (இ) உசாத்துணை நூல்களும் முறைகளும் அரசாங்க ஆவணங்களும், (ஈ) தொழில்நுட்பச் சேவைகளும் நூற்தெரிவும் நூற்கட்டலும் என நான்கு பாடங்கள் போதிக்கப்பட்டன. இதற்கான பரீட்சை முதன்முறையாக அவ்வருடத்தின் (1963) ஆனி மாதம் நடந்தேறியது.
யாழ்ப்பாணத்தில் நடந்த இவ்வகுப்பிற்கு சுமார் பத்து மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். யாழ்ப்பாணத்தின் நான்காம் குறுக்குத் தெருவில் அமைந்திருந்த அமெரிக்கத் தகவல் நிலைய நூலகத்தில் நடாத்தப்பட்ட இப்பாடநெறிக்கு கொழும்பிலிருக்கும் இலங்கை விஞ்ஞான கைத்தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி நூலகராகவும், இலங்கை நூலகச் சங்கத்தின் முதலாவது செயலாளராகவும், நூலகச்சங்க கல்வி அதிகாரியாகவும் கடமையாற்றிவந்த திரு.வை. மகாலிங்கம், யாழ்ப்பாணக் கல்லூரிப் பட்டதாரி மாணவர் பிரிவின் நூலகத்திற்குப் பொறுப்பாயிருந்த திரு.ஆர்.எஸ். தம்பையா ஆகிய இருவருமே ஆரம்பத்தில் இலங்கை நூலகச் சங்கத்தின் சார்பில் விரிவுரையாளர்களாக யாழ்ப்பாணத்தில் வகுப்புகளை நடாத்தினர்.
1965 இல் இப்பாடத்திட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தினால், இப்பாடவிதானம் மூன்று வருடங்களைக் கொண்டதாக விரிவாக்கப்பட்டதோடு நூலகங்களில் வேலை செய்யாதோரும் தத்தமது அனுபவ அடிப்படையில் இத்துறையில் பயிற்சிபெற வாய்ப்பளிக்கப்பட்டது. தொடக்ககாலத்தில் கொழும்பில் மட்டும் நடாத்தப்பட்ட இவ்வகுப்புகள் காலப்போக்கில் கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதன்பின் அமெரிக்காவிலிருந்து நூலகவியல் பட்டத்துடன் நாடு திரும்பி யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் பிரதம நூலகராகக் கடமையாற்றிய கலாநிதி வே.இ. பாக்கியநாதன் அவர்கள் திரு.வை. மகாலிங்கம் அவர்களிடமிருந்து விரிவுரைப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். அதன்பின் அனேகமாக ஒவ்வொரு வருடமும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வந்த முதற்பரீட்சை வகுப்புகளை திருவாளர் ஆர்.எஸ். தம்பையாவும், வே.இ. பாக்கியநாதனுமே முக்கிய பொறுப்பேற்று நடத்தி வந்தனர்.
ஆரம்பத்திலிருந்து ஆங்கில மொழி மூலம் மாத்திரமே நடாத்தப்பட்டு வந்த முதற் பரீட்சை வகுப்புகளுடன் 1966 ஆம் ஆண்டு சிங்கள மொழி மூல வகுப்புகள் கொழும்பிலும் கண்டியிலும் ஆரம்பிக்கப்பட்டன. அக்கால கட்டத்தில் இலங்கை நூலகச் சங்கம் சுமார் 75 துறைசார் கல்வி பெற்ற நூலகர்களை இலங்கை மண்ணில் உருவாக்கியிருந்தது. எனினும் தமிழ்மொழி மூல வகுப்புகள் முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் 1975 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டன. காலத்துக்கேற்ப முதற் பரீட்சைப் பாட நெறியின் பாடத் திட்டமும் மாற்றப்பட்டு அதன் பெயரும் ‘நூலகவியல் ஆவணவாக்கம், தகவலியல் பரீட்சை’ என அழைக்கப்பட்டது. 1980 ஆம் ஆண்டு இதன் பாடத்திட்டம் மீண்டும் வெகுவாக மாற்றியமைக்கப்பட்டது.
இலங்கை நூலகச் சங்கத்தின் இடைநிலைப் பரீட்சைக்கான வகுப்புகள் முதன் முறையாக 1966 ஆம் ஆண்டில் ஆங்கில மொழி மூலம் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் யாழ்ப்பாணத்தில் இவ்வகுப்புகள் முதன்முறையாக பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே அதாவது 1979 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டன, 1963 ஆம் ஆண்டுமுதல் 1978 ஆம் ஆண்டுவரை தமிழிலும், ஆங்கிலத்திலும் சித்தியடைந்திருந்த சுமார் முப்பது மாணவர்கள் 1979 ஆம் ஆண்டு சித்திரை மாதம் தொடக்கம் கார்த்திகை மாதம் வரை நடந்த வார இறுதி இடைநிலை வகுப்புகளைப் பின்பற்றினர். இவர்களுக்கு ஒரே வகுப்பில் ஆங்கிலத்திலும், தமிழிலும் விரிவுரைகள் நடாத்தப்பட்டன. இதற்கான பரீட்சையில் இருபத்தைந்துக்கும் மேற்பட்டவர்கள் சித்தியடைந்தனர். பிரித்தானிய நூலகச் சங்கத்தின் இடைநிலைப் பரீட்சையின் பாடங்களையும், பாடத் திட்டத்தையும் ஓரளவு பின்பற்றி இக் கற்கைநெறி உள்நாட்டுத் தேவைக்கேற்ப சில மாற்றங்களைக் கொண்டிருந்தது. 1980 ஆம் ஆண்டு முதல் இதன் பாடத்திட்டம் காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் புதிதாக அமைக்கப்பட்டது.
1973 இன் நடுப்பகுதியில் இலங்கை நூலகச் சங்கத்தின் இறுதிப் பரீட்சைக்கான வகுப்புகள் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டு இதன் இறுதி நிலைப் பரீட்சை முதன் முறையாக 1974 ஆம் ஆண்டிலேயே கொழும்பில் நடாத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக நடைபெற்ற இடைநிலைப் பரீட்சையில் சித்தியெய்திய இருபதிற்கும் மேற்பட்ட நூலகவியல் மாணவர்களுக்கான பகுதி நேர இறுதிப் பரீட்சை வகுப்புகள் பல கஸ்டங்களுக்குமிடையே 1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகத்தின் நூலகப் பணியாளர்கள் பலர் இவ்விறுதிப் பரீட்சையின் மூலம் துறைசார் கல்வித் தராதரத்தை பெற்றுக்கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. 1982 இல் இடம்பெற்ற இரண்டாவது இறுதிப் பரீட்சையின் பின்னர் யாழ்ப்பாணத்தில் இறுதிப் பரீட்சைக்கான வகுப்புகள் நடைபெறுவதில் இழுபறி நிலையே காணப்பட்டது. இது 1990கள் வரையில் இழுபட்டது. இடையிடையே இறுதித்தரநிலை வகுப்புகள் தொடங்கப்படுவதும், இரண்டொரு வகுப்புகளைத் தொடர்ந்து, அவ்வேளையில் இலங்கை நூலகச் சங்கத்தின் இணைப்பாளராகப் பணியாற்றிய யாழ். மத்திய கல்லூரி நூலகர் திரு. க. மாணிக்கவாசகரால் பல்வேறு காரணங்கள் காட்டப்பட்டு வகுப்புகள் நிறுத்தப்படுவதும் வாடிக்கையான சலிப்பூட்டும் நிகழ்வுகளாயின. இதனால் நூலகவியல் கல்வியை பூர்த்தி செய்யத் தீவிரமாக விரும்பிய இடைநிலைப் பரீட்சையில் சித்தியெய்திவிட்டு காத்திருந்த மாணவர்கள் பலத்த போக்குவரத்து சிக்கல்களுக்கிடையேயும் கொழும்பிலேயே தமது இறுதிநிலைக் கல்விக்கான வகுப்புகளுக்கு சமூகமளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். பலர் இறுதித்தர நூலகக் கல்வியை நிறைவுசெய்யாமலே அதனைக் கைவிட்டிருந்தனர்.
இதற்கிடையில் நூலகங்களில் கணினியைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தினை உணர்ந்துகொண்ட இலங்கை நூலகச் சங்கம் 1984 ஆம் ஆண்டு முதல் கணினி சம்பந்தமான பாடவிதானத்தையும் நூலகவியல் கல்வியில் இணைத்துக்கொண்டது.
தொடரும்.