2020-21 களில் நாடு முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய லம்பி தோல் நோய் [Lumpy skin disease] எனும் ஒரு வகை பெரியம்மை நோய் மீளவும் இந்த வருடம் (2023 இல்) வளர்ப்பு மாடுகளைப் பாதித்திருக்கிறது. மாடுகளின் உடல் முழுதும் சிறியது முதல் பெரியது வரையான வீக்கங்களை உருவாக்கும் இந்த நோய் கடந்த முறையை விட மாறுபட்ட விதத்தில் சற்று வீரியத்துடன் மாடுகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. மாடு வளர்ப்பாளர்களின் பொருளாதாரத்தைக் கணிசமான அளவு பாதிக்கத்தக்க நோயாக இது காணப்படுகின்றபடியால் அவர்கள் அச்சமடைவதையும் பரவலாக அவதானிக்க முடிகிறது. உலக கால்நடை சுகாதார அமைப்பால் [WOAH] விரைவாக பரவலடையும் ஆனால் மிகக் குறைந்தளவு இறப்பு வீதத்தை ஏற்படுத்தும் நோயாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. [high morbidity and low mortality] கடந்த முறை போன்றே இந்தியாவில் இந்த நோய் உணரப்பட்டு அதன் தொடர்ச்சியாக இலங்கையிலும் அவதானிக்கப்பட்டுள்ளது. வடக்கு இந்தியாவில் தொடங்கி தற்போது தென் இந்தியாவையும் தாண்டி இலங்கையின் பல பகுதிகளில் இந்த நோய் உக்கிரமடையத் தொடங்கியுள்ளது.

உலகில் முதன் முதலில் ஸாம்பியா எனும் தென் ஆபிரிக்க நாட்டில் 1929ஆம் ஆண்டு அவதானிக்கப்பட்ட இந்த நோய் ஏனைய ஆபிரிக்க, எகிப்து, இஸ்ரேல் போன்ற மத்திய கிழக்கு நாடுகளின் கால்நடைகளை அடிக்கடி பாதித்திருக்கிறது. இந்த நோய் இப்போது வரை ஆபிரிக்க, மத்திய கிழக்கு பகுதிகளின் பொதுவான நோயாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. [endemic in African and Middle East countries] அங்கு இதற்கு தடுப்பூசியும் வழங்கப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பங்களாதேஷ் மற்றும் சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் அவதானிக்கப்பட்ட இந்த நோய் இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் முதன் முதலில் [ஓகஸ்ட் 2019] அவதானிக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நகரில் உள்ள ஆய்வு கூடம் [National institute of high security animal disease] இந்த நோயை உறுதிப்படுத்தியிருந்தது. இதன்பிறகு தமிழ்நாடு உள்ளிட்ட ஏனைய இந்தியாவின் மாநிலங்களிலும் வேகமாக பரவிய இந்த நோய் இலங்கையின் வடக்கின் சில பகுதிகளில் 2020 ஜூலை – ஓகஸ்ட் மாதங்களில் அவதானிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் நாடு முழுவதும் லம்பி வேகமாக பரவியிருந்தது. இம்முறையும் இதேபோல வடக்கின் சகல மாவட்டங்களிலும் முதலில் அவதானிக்கப்பட்டு தற்போது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் லம்பி பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இருந்து சட்டவிரோத கடத்தல்காரர்களின் படகுகள் மூலம் இலங்கைக்கு கடந்த முறையைப் போல இம்முறையும் பரவியிருக்கலாம் என்பது எனது கருத்தாகும். மேலும் லம்பி நோயைக் கடத்தும் பூச்சிகள் முப்பது கிலோமீட்டர் வரை பறக்கக்கூடியன என்பதும், இலங்கைக்கு பரவ ஏதுவாக அமைந்திருக்கலாம். மழை காலத்தின் பின்னரான நுளம்புகள் ஏனைய பூச்சிகளின் பெருக்கம் மேலும் இந்த நோய் தீவிரமாகப் பரம்பலடையச் செய்திருக்கலாம்.
தற்போது வவுனியாவின் செட்டிகுளம் பகுதியில் தினமும் சராசரியாக 15 – 20 வரையான முறைப்பாடுகள் இந்த நோய் தொடர்பாக கிடைக்கப்பெறுகின்றன. இதேபோன்ற நிலைதான் ஏனைய பல கால்நடைப் பிரிவுகளிலும் காணப்படுகிறது. இது தொடர்பாக இலங்கையின் கால்நடை நோயியல் பிரிவு பல ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இலங்கையில் இது தொடர்பான மேம்படுத்தப்பட்ட ஆய்வு கூடங்கள் இல்லாததால் வெளிநாடுகளுக்கு மேற்படி மாதிரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தக் கட்டுரையின் நோக்கம் மேற்படி லம்பி பெரியம்மையின் விஞ்ஞான பூர்வமான தன்மைகளையும் சிகிச்சை முறைகளையும் மக்களுக்கு தெளிவுபடுத்துவதாகும்.

இந்த நோய் Poxviridae குடும்பத்தையும் Capripoxvirus பிரிவையும் சேர்ந்த lumpy skin disease virus (LSDV) எனும் இரட்டை இழை DNA வைரஸ் நச்சுயிரியால் ஏற்படுகிறது. மிக அதிகளவு பசு மாடுகளையும் குறைவான அளவில் எருமை மாடுகளையும் தாக்குகிறது. மேற்படி வைரஸ் அடங்கும் கூட்டத்தில் நெருங்கிய ஆட்டு அம்மை மற்றும் செம்மறி ஆட்டு அம்மை போன்ற வைரஸ்கள் காணப்பட்டாலும் இந்த நோய் ஆடு, மற்றும் செம்மறி ஆடுகளுக்கு ஏற்படாது. இதுவரை லம்பி மனிதனுக்குத் தொற்றியதாகத் தெரியவில்லை. சகல வயது மாடுகளையும் தாக்கும் இந்த நோய் குறிப்பாக இளம் கன்றுகளிலும் பால் கறக்கும் மாடுகளிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொதுவாக இறப்பு வீதம் மிக குறைவான போதிலும் சரியாக கவனிக்கப்படாத குறிப்பிடத்தக்க இளம் கன்றுகள் சுவாச தொகுதியின் கடும் நோய்த் தொற்றால் இறந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. நாட்டு மாடுகளை விட ஐரோப்பிய மற்றும் ஐரோப்பிய கலப்பின மாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடியது. இந்த நோய் அந்தந்த மாடுகளின் நோய் எதிர்ப்பு சக்தியின் அடிப்படையில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
பாலுற்பத்தி குறைதல், உணவு உட்கொள்தல் குறைதல், கன்றுகளில் வளர்ச்சி குன்றுதல், உடல் மெலிவடைதல் தோலில் நிரந்தர அடையாளம் ஏற்படுதல், பசுக்களில் கருச்சிதைவும் ஆண் மாடுகளில் மலட்டு தன்மையும் ஏற்படுதல் போன்ற காரணிகளால் அதிக பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துகிறது. கடுமையாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை பார்க்கும் பலர் மாட்டிறைச்சி உண்பதை விரும்பாத நிலையும் பால் குடிக்காமல் விடும் நிலையும் ஏற்படுகிறது. என்னிடம் பலர் இது தொடர்பாக தொடர்ச்சியாக வினவியிருக்கிறார்கள். உண்மையில் அதிக வெப்பத்தில் சமைக்கும் போது மேற்படி வைரஸ் அழிவதால் சரியாக சமைத்து உண்ணும் இறைச்சியையோ, சரியாக கொதிக்க வைத்து குடிக்கும் பாலையோ பார்த்து பயப்படத் தேவையில்லை.
இந்த நோய் பிரதானமாக நுளம்பு, உண்ணிகள், மாடுகளை கடிக்கும் ஈக்களால் பரவுகிறது. குறைந்தளவில் நோயுற்ற மாடுகளின் நேரடித் தொடுகை, இனக்கலப்பின் போது விந்து மூலமாக சினைப்பட்ட மாடுகளில் இருந்து கருப்பை வழியாகவும் பாலின் மூலமும் கன்றுக்கும் பரவுகிறது. எனினும் மேற்கூறிய நுளம்புகள், உண்ணிகள் மற்றும் கடிக்கும் ஈக்களாலே பெரும்பாலும் இந்த நோய் பரவலடைகிறது. அத்துடன் மாடுகளில் இந்த வைரஸ் 35 நாட்கள் வரை மாடுகளில் வாழக்கூடியது.

நோய் ஏற்படும் மாடுகளில் முதலாவது அறிகுறியாக கண் சிவந்து கண்ணிலிருந்து நீர் வடியும். சரியாக கவனிக்கப்படாத கண் பாதிப்படைய கூடிய வாய்ப்பும் உள்ளது. மூக்கிலிருந்து சளியும் வாயிலிருந்து எச்சிலும் வடியும். காய்ச்சல் ஏற்படும். உடல் அசதி காரணமாக நடக்க மாட்டாது நொண்டும். உணவு உட்கொள்ள முடியாது. நிணநீர் சுரப்பிகள் வீக்கமடையும். சிறிய கட்டிகள் தலை, கழுத்து, மூக்கு, வாய், மார்பு, முதுகு, கால், மடி, பிறப்புறுப்புகள், அடிவயிறு என சகல பகுதிகளிலும் தோன்றும். கட்டிகள் தோலில் இருந்து உயர்ந்து வீங்கிக் காணப்படும். மடி மற்றும் முலைப் பகுதியில் தோன்றும் கட்டிகளால் மடியழற்சி ஏற்படும். சில மாடுகளில் பல சிறிய கட்டிகள் நிணநீர் முடிச்சுகளுடன் சேர்ந்து மேற்கூறிய இடங்களில் பெரிய அளவில் காணப்படும். நோய் எதிர்ப்பு சக்தி கூடிய மாடுகளில் கட்டிகள் சிறிய அளவிலும் விரைவாகவும் சுகமாகிவிடும். அதி தீவிரமாக பாதிக்கப்பட்ட சில மாடுகளில் கட்டிகள் சீழ் பிடித்து உடையும். கவனிக்காது விட்டால் புழு வைக்கும். இந்த காயங்கள் துப்பாக்கியால் சுட்ட காயம் போல காணப்படும். இதனால் தோலின் பெறுமதி குறையும். சில மாடுகளில் நுரையீரல் பாதிக்கப்பட்டு நிமோனியா நிலைகூட ஏற்படும். சினைப்பட்ட மாடுகளில் கருச்சிதைவு ஏற்படும். மாடுகளுக்கு இந்த நோய் ஒரு முறை வந்தால் மீளவும் வராது.
இந்த நோயை வெற்றுக் கண்ணால் பார்த்தவுடன் அறிந்து கொள்ள முடியும். இலத்திரன் நுணுக்குக்காட்டி மூலம் பார்க்கும் போது வைரஸை இலகுவாகக் கண்டறியலாம். PCR பரிசோதனை மூலம் மிகச் சரியாக நோய் நிலையை உறுதிப்படுத்தலாம்.
ஆபிரிக்க நாடுகளில் இந்த நோய்க்கு தொடர்ச்சியான தடுப்பூசி வழங்கப்படுகிறது. இந்தியாவில் பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. ஆட்டு அம்மைக்குரிய [Goat/sheep pox] தடுப்பூசிகளும் பலனளிப்பதாக அறிய முடிகிறது. இலங்கையில் இதுவரைக்கும் இந்த நோய்க்குரிய தடுப்பூசிகள் பண்ணையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக நோய் அறிகுறிகளை குறைப்பதும் இரண்டாம் நிலை நுண்ணங்கித் தொற்றைக் குறைப்பதும் தான் சிகிச்சையாகச் செய்யப்படுகிறது.

கண்ணில் நீர் வடியும் போது கண்ணுக்கு பயன்படுத்தும் மருந்துத் துளிகளை பயன்படுத்தலாம். வீக்கம், காய்ச்சலை குறைக்கும் மருந்துகளையும் தோலை ஊடுருவி நுண்ணங்கித் தொற்றை குறைக்கும் சரியான நுண்ணுயிர் கொல்லிகளை கால்நடை வைத்தியரின் ஆலோசனையின் படி பயன்படுத்தலாம். காயம் ஏற்பட்டு இருந்தால் அதற்குரிய சிகிச்சையையும் செய்ய வேண்டும்.
இந்தியாவில் லம்பியை இல்லாமலாக்க பாரம்பரிய மருத்துவ முறைகள் பயன்படுத்தபடுகின்றன. எனது கருத்தின் படி, நவீன கால்நடை மருத்துவத்தையும் பாரம்பரிய மருத்துவத்தையும் சமாந்தரமாக செய்து வரும் போது விரைவாக பலனைப் பெற முடியும். மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய பொருட்களை வழங்கும் போது அவை விரைவாக குணமடைகின்றன. உடல் ஆற்றல் குறைவடைந்த மாடுகளுக்கு விட்டமின் மற்றும் கனியுப்புகளை வழங்க வேண்டும். இளம் கன்றுகளில் அதிக சுவாச நோய் அறிகுறிகள் இருப்பதால் எமக்கு கொரோனா காலத்தில் செய்த ஆவி/ வேது பிடித்தலை செய்வது நல்ல பலனை தருகிறது. methylene blue போன்ற மருந்துகளும் நல்ல பலனைத் தருகின்றன.
முக்கியமான காவிகளான நுளம்புகள் ஏனைய பூச்சிகள் பெருகும் இடங்களை அழிப்பதன் மூலமும் பண்ணைகளைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம். நோய் ஏற்பட்ட மாடுகளைத் தனிமைப்படுத்துவதோடு, அந்த மாடுகளைத் தேவையில்லாமல் வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் மாடுகள் கூட்டமாக மேயும் நிலையைத் தவிர்த்தல் வேண்டும். இந்த நோய் நிலைமை இருக்கும் பகுதிகளில் இருந்து லம்பி இல்லாத இடங்களுக்கு மாடுகள் பிரயாணம் செய்வதை தவிர்த்தல்/தடுத்தல் வேண்டும். புதிதாக வாங்கும் மாடுகளை சில வாரங்கள் தனிமைப்படுத்திவிட்டே [Quarantine] ஏற்கனவே இருக்கும் மாடுகளுடன் சேர்க்க வேண்டும். கால்நடை சிகிச்சையாளர்கள் மாடுகளுக்கு மருந்துகளை ஏற்றும் ஒவ்வொரு தடவையும் புதிய ஊசிகளை பயன்படுத்த வேண்டும். இறந்த மாடுகளை சரியான முறையில் எரித்தோ சுண்ணாம்பு சேர்த்து ஆழமாக புதைத்தோ அகற்ற வேண்டும்.
இந்த நோய் காரணமாக பால், இறைச்சி உற்பத்தி குறைதல் முக்கிய பிரச்சினையாக இருப்பதோடு இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் தோன்றியுள்ள கால்நடை மருந்துகளின் விலையின் அதிகரிப்பும் பாரிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்தகாலங்களை விடவும் மருந்துகளின் விலை இப்போது மூன்று, நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. மேலும் கடந்த முறை நோய் அறிகுறிகள் விரைவாகக் குறைவடைந்த அதேவேளை இந்த முறை நோய் அறிகுறி மாறுவதற்கு நீண்ட காலம் எடுப்பதால் மருந்துகளின் தேவையும் அதிகரித்துள்ளது. இது பண்ணையாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
கடந்த முறை வந்த மேற்படி நோய்க்கும் இந்த முறை வந்த நோய்க்கும் மரபணு ரீதியில் வேறுபாடு [genetically variant] காணப்படுவதாக இந்திய ஆய்வுகள் சொல்கின்றன. மேலும், இந்த முறை நோயின் வீரியமும் நோய் காணப்படும் காலமும் அதிகளவில் இருப்பதை அவதானிக்க முடிகிறது. இது எதிர்காலத்தில் மேலும் வேறுபாட்டுடன் வரக்கூடிய நிலையை தோற்றுவிக்கலாம். வைரஸ் நோய்களுக்கு ஒரே மாதிரியான தடுப்பூசிகளை பயன்படுத்த முடியாது. அவை காலத்துக்கு காலம் தமது இயல்புகளை விரைவாக மாற்றக் கூடியன. திரிபுகள் தோன்றலாம். மாடுகளில் ஏற்படும் கால்வாய் நோயும் இந்த மாதிரி பலவகையான வேறுபாடுகள் திரிபுகளைக் கொண்டதால் உலகம் முழுதும் வேறுபட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. [கொரோனாத் தடுப்பூசி வேறுபாடுகளையும் அவற்றின் திரிபுகளையும் நினைத்துப் பாருங்கள்]. ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு விதமாக தமது செயற்பாட்டை மாற்றக் கூடிய நச்சுயிரி வைரசுகள் எதிர்காலத்தில் வேறு விதமாக வரலாம். விலங்குகளை மாத்திரம் பாதிக்கும் நோய்கள் எதிர்காலத்தில் மனிதனையும் பாதிக்கலாம். எனவே இந்த மாதிரியான ஆபத்துக்களைத் தவிர்க்க பண்ணை சுகாதார, உயிர்பாதுகாப்பு நடைமுறைகளையும் விலங்குகளில் இருந்து ஏற்படும் நோய்கள் உட்பட எந்த நோய்களும் மனிதர்களுக்கு தோன்றாமல் இருக்க தனிமனித சுகாதார நடைமுறைகளையும் கடைப்பிடிப்போமாக.