அம்பாறை மாவட்டத்தில், குறிப்பாக போரின் இன்னல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், வறுமைநிலை தொடர்ந்தும் கவலைக்குரியதாக உள்ளது. விகிதாசார ரீதியாகப் பார்க்கும்போது, பல பகுதிகள் இன்னும் போர்க்கால நிலையிலிருந்து முன்னேற்றம் அடையவில்லை எனலாம். தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில், வாழ்வாதாரத்தின் மீதான தாக்கம் அதிகமாகியுள்ளது. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தப் பகுதிகள் புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவை மாவட்டத்தின் ஏழ்மையான பகுதிகளாகவும் காணப்படுகின்றன. பல குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யப் போராடுகின்றன. தற்போதைய பொருளாதார நெருக்கடி, உள்நாட்டுப் போரின் விளைவுகளை மேலும் தீவிரமாக்கி வருகின்றது. இப்பகுதி மக்கள் ஒருவகையில் கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் தமிழ்ப் பகுதிகளில், தமிழ் இளைஞர்களிடையேயான வறுமை விகிதம் மாவட்டச் சராசரியைவிட 13% அதிகமாக உள்ளது, மேலும் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். கல்விக்கான சவால்கள் அதிகரித்துள்ளதால், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையும் மேலோங்கியுள்ளது. வாழ்வாதாரத்திற்காக தமிழ் மீனவர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். இந்தப் பகுதிகளில், குறைந்த வாழ்க்கைத்தரம் வெளிப்படையாகக் காணப்படுகிறது. பல குடும்பங்கள் தினசரி வருமானத்திற்காகப் போராடுகின்றன. வளங்களுக்கான வாய்ப்பின்மை, மோசமான உட்கட்டமைப்பு, பொருளாதார வாய்ப்புகளின் பற்றாக்குறை ஆகியவை வறுமையைத் தீவிரப்படுத்துகின்றன. குறைந்த கல்வி அடைவு, வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் மேலும் கட்டுப்படுத்துகிறது. பெண்கள் மத்திய கிழக்கிற்குக் குடிபெயர்வது, இளைஞர்கள் அருகிலுள்ள நகரங்களில் தினக்கூலியாக வேலை செய்வது போன்றன கவலைக்குரிய போக்குகளாக மாறியுள்ளன.
விவசாயத்துறையும் கடும் தடைகளை எதிர்கொள்வதால், விவசாயிகளோடு உள்ளூர்ப் பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றது. இந்தச் சவால்களைச் சமாளிக்க, கிழக்கு மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் உடனடி முயற்சிகள் தேவையாகின்றன. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகங்களின் பிரச்சினைகளில் மூலோபாய ரீதியாக கவனம் செலுத்தப்பட வேண்டும். கல்வி, உட்கட்டமைப்பு, மற்றும் பொருளாதார மேம்பாட்டை உள்ளடக்கிய ஒரு விரிவான உத்தி இன்றியமையாததாகின்றது. தமிழ்ப் பகுதிகளில் கூட்டுறவுகள் முக்கிய பங்கு வகிக்க முடியும்.
உள்ளகக் காலனித்துவத்தின் முதல் நிலம்: அம்பாறை மாவட்டம்
அம்பாறை மாவட்டம், ஏப்ரல் 10, 1961 அன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்குப் பகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு அதிகாரபூர்வ மாவட்டமாக நிறுவப்பட்டது. இதற்கு முன்பு, இந்தப் பகுதி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஐரோப்பியக் காலனித்துவச் சக்திகளைப் போன்ற சுதந்திர இலங்கையின் உள்நாட்டுக் காலனித்துவச் சக்திகளின் அணுகுமுறையால் வளமான, தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய நிலமான கிழக்கு இலங்கை, பகுக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் இதற்கான திறந்த சாட்சியமாக உள்ளது.
1956 தேர்தலுக்குப் பிறகு, இங்கு அரசு ஆதரவுடன் சிங்களக் குடியேற்ற முயற்சிகள் தீவிரமடைந்து, சிங்கள மக்கள் தொகை கணிசமாக அதிகரித்தது. இதன் விளைவாக, உள்ளூர்த் தமிழ்ச் சமூகங்கள் இடம்பெயர்ந்து தங்கள் சொந்த மண்ணில் அகதிகளாக மாறினர். அம்பாறை மாவட்டத்தின் இன அமைப்பு மாறியது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான அரசு, ‘சிங்களம் மட்டும்’ மொழிச்சட்டம் உள்ளிட்ட கொள்கைகளின் மூலம் சிங்கள – பௌத்த மேலாதிக்கத்தை வலுப்படுத்தியது. 1940களில் தொடங்கப்பட்ட கல்ஓயா திட்டம், சிங்களக் குடியேற்றத்துக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக, 1953இல் 31,107 ஆக இருந்த அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சிங்கள மக்கள்தொகை 1981இல் 157,017 ஆக உயர்ந்தது. இந்தக் குடியேற்றங்கள் இன மோதல்களை மேலும் தீவிரப்படுத்தின. இதன் விளைவாக, படுகொலைகளும் நீடித்த இடப்பெயர்வுகளும் இடம்பெற்று, அம்பாறை இன மோதல்களின் களமாக மாறியது. உள்நாட்டுப் போர் முடிவடைந்த நிலையிலும், உள்ளகக் காலனித்துவம் மற்றும் இன உறவுகளின் மரபான சவால்கள் அம்பாறையில் இன்னும் தொடர்கின்றன.
தங்கள் இழப்புகளுக்கு முன், பணிந்து ஒடுங்காமல், மக்கள் தங்கள் இருப்பைத் தக்கவைக்க தொடர்ந்து போராடினர். அமைப்புகளைக் கட்டியமைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தினர். இதன் அடையாளமாக அம்பாறை மாவட்டத்தில், குறிப்பாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில், ‘மகாசக்தி கூட்டுறவு’ உருவானது. அதன் கதையும் தொடர்ந்த வளர்ச்சியும் முக்கியத்துவமுடையவை. மகாசக்தி கூட்டுறவு, பலருக்குப் பாடமாக அமைகின்றது.
மகாசக்தி கூட்டுறவு
மகாசக்தி சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கம் 1992 அக்டோபர் 10, விஜயதசமி நாளில் தொடங்கப்பட்டு, 1993 பெப்ரவரி 20 அன்று அதிகாரபூர்வமாக கூட்டுறவு அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 32 ஆண்டுகளாக பெண்களின் தலைமையில் இயங்கும் ஒரு நிலையான கூட்டுறவாக இது செயற்படுகிறது.
1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் ஆயுத வன்முறை உச்சத்தில் இருந்தது. ஆலையடிவேம்பு பிரதேசம் காவுகொள்ளப்பட்ட பிரதேசமாக மாற்றப்பட்டது. நீடித்த மோதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள், கணவனை இழந்த இளம் பெண்களை உருவாக்கியது. நெருக்கடிகளின் மத்தியில், பலருக்கு நம்பிக்கையையும், வாழ்க்கையின் சுமைகளைக் குறைக்கும் வலிமையையும் தர உருவாக்கப்பட்ட அமைப்புதான் மகாசக்தி கூட்டுறவு.

கூட்டுறவு அமைப்பின் உருவாக்கத்திற்கு பலர் அர்ப்பணிப்புடன் உழைத்தனர். சமூகஜோதி திரு. எஸ். செந்துரராசா, அமரர் என். மணிவாசகம், அமரர் பி. வாரித்தம்பி, க. சோமசுந்தரம் , அமரர் எம். இலட்சுமணன் மற்றும் அமரர் இ. கனகசபை ஆகியோர் முன்னோடிகளாக இருந்தனர். அப்போது திரு. எஸ். செந்துரராசா யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து அக்கரைப்பற்றில் வசித்து வந்தார்.
பாதிக்கப்பட்ட பெண்களின் தேவைகள் பல தீர்க்கப்படாமல் இருந்தன. உடனடித் தேவைகளைத் தீர்ப்பதில் பல இடர்கள் இருந்தன. மனிதாபிமான தேவைகளுக்கு அடுத்ததாக, நீண்டகால அமைப்பின் வழியிலான தீர்வு தேவை என்று உணரப்பட்டது. 22 சங்கங்கள் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உருவாக்கப்பட்டன. அவற்றின் பெயர்கள் அனைத்தும் சக்திகளையே குறிக்கின்றன: பராசக்தி, சிவசக்தி, ஓம்சக்தி, ஜெயசக்தி, யுகசக்தி, ஆதிசக்தி, தர்மசக்தி, அருள்சக்தி, ஜனாசக்தி, சிறிசக்தி, நவசக்தி, சர்வசக்தி, வீரசக்தி, சுடர்சக்தி, தேவசக்தி, துருவசக்தி, ஜீவசக்தி, யோகசக்தி, ஆத்மசக்தி, சாந்தசக்தி, கீதாசக்தி மற்றும் உதயசக்தி. இந்த அனைத்துச் சங்கங்களும் ஒன்றிணைந்து மகாசக்தி கூட்டுறவு சிக்கன கடனுதவுச் சங்கமாக உருவாக்கமடைந்தது.
மகாசக்தி என்பது பாதிக்கப்பட்டவர்களின் கூட்டுறவு அமைப்பாக அமைகிறது. எல்லாப் பெண்களும் ஒரு வலையமைப்பில் இணைந்து, நெருக்கடியான காலத்தின் தேவைகளை ஒன்றிணைத்து, அவற்றைத் தீர்க்க ஒன்றாக முன்னேறினார்கள். பலரின் வாழ்வுக்கு அடித்தளமாக இருந்துள்ள மகாசக்தி, சமூக – பொருளாதார மற்றும் கலாசார இணைவிற்கான தன்னிறைவுக் கட்டமைப்பை நோக்கிய ஒரு கூட்டு நிகழ்வாக வளர்ந்தது.
மகாசக்தியின் நிதிப்பலம் அதன் சிறந்த வளர்ச்சியைச் சுட்டுகிறது. நிரந்தர அலுவலகம், கடைத்தொகுதிகள் மற்றும் பயிற்சிநிலையம் ஆகியவற்றைக்கொண்ட வளமான சங்கமாக மகாசக்தி திகழ்கிறது. 17 நிரந்தரக் கூட்டுறவுப் பணியாளர்களின் குடும்பம் மகாசக்தி. பெண்கள் தலைமையிலான கூட்டுறவு முகாமைத்துவச்சபை மூலம் நிர்வகிக்கப்படும் நிர்வாக அமைப்பு, கூட்டுப் பங்காண்மையின் அடிப்படையில் தலைமைதாங்கும் பெண்களின் பொறுப்பில் உள்ளது.
கணக்காய்வு செய்யப்பட்ட அறிக்கையின் படி (31.12.2023):
2022 | 2023 | |
மொத்த சொத்துகள் | 170,23,265.48 | 154,806,186.09 |
மொத்த வைப்புகள் | 150,044,599.81 | 136,693,747.87 |
மீதி இலாபம் | 1,298,725.54 | 1,175,709.64 |
கடந்தகாலப் போர்களின் அழுத்தங்களை எதிர்கொண்டு, COVID-19 சவால்களைத் தாண்டி, பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து, பண வீக்கத்தின் உச்சத்திலும் கூட மக்களின் சேமிப்புகளைப் பேணிய மகாசக்தி கூட்டுறவு அமைப்பின் தொடர்ச்சியான இயக்கம் முக்கியமானதாகத் திகழ்கின்றது.
அம்பாறை மாவட்டம் தற்போது மூன்று தனித்தனியான நிலப்பரப்புகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட சமூகங்களைக் கொண்டுள்ளது. இனங்களின் நிலைகளில் பிரிந்தும், பிளவுபட்டும் வாழும் சமூகங்கள் கடந்தகால இனப்பிளவுகளின் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும், கூட்டுறவு அமைப்புகள் மக்களை இணைக்கும் சக்தியாகச் செயற்படுகின்றன. கூட்டுறவு அமைப்புகளில் பிளவுகள் இடம்பெறுவதில்லை. ஆனாலும் சமூகத்தின் பிரதிபலிப்புகள் சமூக அமைப்புகளிலும் ஓரளவு வெளிப்படவே செய்கின்றன.
மகாசக்தி, கல்முனை – அம்பாறை சிக்கனக் கடனுதவுக் கூட்டுறவுச் சங்கத்தின் சமாஜத்தில் ஒரு நிரந்தர அங்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. நிதிப் பலம், கூட்டுறவுச் சட்டவிதிகளுக்கு அமைவாக ஒழுகுதல், வெளிப்படைத்தன்மை மற்றும் முறையான முகாமைத்துவ அணுகுமுறை ஆகியவை மகாசக்தியை தனித்துவமாக உயர்த்துகின்றன.
கலாநிதி அகிலன் கதிர்காமர் அவர்களின் ‘இலங்கையின் யாழ்ப்பாணத்தில் போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்பின் தோல்வி: கடன், சாதி விலக்கு மற்றும் மாற்று வழிகளுக்கான தேடல்’ (The Failure of Post-War Reconstruction in Jaffna, Sri Lanka: Indebtedness, Caste Exclusion and the Search for Alternatives Indebtedness, Caste Exclusion and the Search for Alternatives Ahilan Kadirgamar The Graduate Center, City University of New York, 2017) என்ற ஆய்வின், ஐந்தாம் அத்தியாயமானது (‘கூட்டுறவுகள் மற்றும் மறுகட்டமைப்பின் மாற்றுப் பார்வைகள்’) கூட்டுறவு சார்ந்த மிக முக்கியமான விடயங்களைத் தெளிவுபடுத்துகிறது.
“உற்பத்தியை அதிகரிப்பதற்கான மூலதன முதலீடு மற்றும் தொழிற்படு மூலதனம் ஆகிய இரண்டும் இணைந்த மூலதனப் பற்றாக்குறையே போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் கூட்டுறவு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மைய சவால்களில் ஒன்றாக அமைகிறது. வளரக்கூடிய திறன்கொண்ட பல உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனங்கள், போரின்போது தங்கள் சேமிப்புகள் குறைந்து, சொத்துகளை இழந்ததால், பணப்புழக்கச் சிக்கல்களையும் எதிர்கொள்கின்றன. மேலும், வங்கிகள் கடன்களை வழங்குவதில்லை அல்லது அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கின்றன. இதனால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அதிகரிப்பதும், வாடிக்கையாளர்களிடமிருந்து ஆதரவுகளைப் பெறுவதும் கடினமாகி உள்ளது…….இத்தகைய சிக்கல்கள் அரசு மற்றும் அதிகாரத்தின் பங்கால் அதிகரிக்கப்படுகின்றன. கூட்டுறவுகள் மாகாண அரசாங்கத்தால் அதிகமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. 1970களில் வரைவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சட்டங்கள் இன்றுவரை தொடர்கின்றன; துணைச்சட்டங்கள் கூட மாற்றப்படவில்லை. மாகாண கூட்டுறவு அமைச்சர் மற்றும் ஆணையர் ஆகியோரால் கூட்டுறவுகள் சவாலுக்கு உள்ளாகின்றன. கூட்டுறவுகள் புதிய முயற்சிகள் எடுப்பதை அவர்கள் தடுக்கிறார்கள்; சுயாட்சியை மறுக்கிறார்கள். அல்லது கூட்டுறவுகளுக்குப் பயனளிக்காத திட்டங்களை வலியுறுத்துகிறார்கள்” (பக். 273).
வடக்கின், குறிப்பாக யாழ்ப்பாணத்தின் நிலைதான் கிழக்கிலும் இருந்தது. அம்பாறை மாவட்டத்தில், போரின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கூட்டுறவின் தேவையும் அவசியமும் இருந்தபோதும், அவற்றிற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது கடினமாக இருந்தது. இருந்தபோதிலும், மகாசக்தி ஒரு விதிவிலக்கு ஆகும். மகாசக்தியின் தொடர்ந்த வளர்ச்சிக்கு அதன் ஆரம்ப உறுப்பினர்கள் மிகுந்த பங்களிப்புச் செய்தனர். அவர்கள் பலமான அடித்தளத்தை அமைத்து, கூட்டுறவுக் கல்வி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் பெரும் பங்காற்றினர். இந்தத் தொடர் பங்களிப்பினால் மகாசக்தி இன்றைய நிலைக்கு வளர்ந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழ்ப் பிரதேசங்களில், போர் காரணமாக பலர் குடிபெயர்ந்ததால், கூட்டுறவு நிறுவனங்கள் தங்கள் துடிப்பான நடுத்தர வர்க்கத் தலைமையை இழந்தன. இன வன்முறை, மிரட்டல் மிகுந்த சூழல் மற்றும் இயக்க மோதல்கள், சாத்தியமான தலைவர்களைச் சங்காரம் செய்தமையால், மனிதவளப் பிரச்சினை அதிகரித்தது. இதன் விளைவாக, தலைவர்கள் பொதுப்பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. கல்வியாளர்களுக்கும், கூட்டுறவுத் தலைமைக்கும் இடையிலான உறவு துண்டிக்கப்பட்டது. இது அதிகாரத்துடனான சமூகத் தொடர்புகளை பலவீனப்படுத்தியுள்ளது.
இதன் தாக்கம் காரணமாக, மனித மூலதனத்தின் அழிவோடு, குறிப்பிடத்தக்க பொருள் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. ஒருகாலத்தில் கூட்டுறவுகளை ஆதரித்த சமூக வலைப்பின்னல்கள் பெரும்பாலும் மறைந்துவிட்டன. போருக்குப் பிந்தைய காலத்தில், அம்பாறையின் விளிம்பு நிலைக்குள்ளான பகுதிகளில் பொருளாதாரத்திற்கான கூட்டுப்பங்களிப்பை மீட்டெடுக்க முடியுமா என்பது ஒரு முக்கிய கேள்வியாக உள்ளது. இந்நிலையில்தான், மகாசக்தியின் பெண்களின் தலைமையும், அதன் வகிபாகமும் கவனத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

அம்பாறையில், போரினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தைப் புத்துயிர்பெறச் செய்ய தற்போதுள்ள கூட்டுறவு நிறுவனங்களால் முடியுமா என்பது முக்கியமாக எழுப்பப்பட வேண்டிய கேள்வியாக உள்ளது. இதற்குத் தேவையான ஆரம்பநிதி மற்றும் தொழில்நுட்ப வளங்களை ஆராய்வது அவசியமாகிறது. பயனுள்ள மறுகட்டமைப்புக்கு, வலுவான தலைமைத்துவமும், தெளிவான தொலைநோக்குப் பார்வையும் தேவையானவையாகும். மகாசக்தி கூட்டுறவுச் சங்கத்தின் வரலாற்று அனுபவம், பிளவுபட்ட மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களை மீண்டும் ஒருங்கிணைக்கவும், உற்பத்திசார்ந்த முன்னெடுப்புகளைத் தொடங்கவும் உதவியாக இருக்கும்.
அம்பாறையின் புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் பின்தங்கிய பகுதிகளில் (GIDA areas), மீனவர்கள் மற்றும் கிராமப்புற விவசாயிகள் தங்கள் உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும்போது, அவர்களுக்கு ஆதரவளிக்க கூட்டுறவு நிறுவனங்கள் மிகவும் அவசியமாகின்றன. இன்றைய சூழலில் பாரம்பரிய வங்கிகளின் உதவியைப் பெறுவது சவாலாக உள்ளது. அதிக வட்டி மற்றும் அறவீடுகள் போன்ற பிரச்சினைகள், வறிய விவசாயிகளுக்கு உதவுவதற்குத் தடையாகின்றன. முக்கியமான கடன்களை வழங்குவதிலும், சமூகப் பங்களிப்பை ஊக்குவிப்பதிலும் மகாசக்தி கூட்டுறவு அமைப்பின் மாதிரியைப் பின்பற்றுவது சிறப்பானதாக அமையலாம்.
உள்ளூர் மறுமுதலீட்டின் சுழற்சியை உருவாக்குவதும், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதும் மிகவும் முக்கியமானவை. கூட்டுறவு நிறுவனங்கள், தங்கள் இலாபத்தை உறுப்பினர்களிடையே விநியோகித்தல் அல்லது உள்ளூர்ப் பொருளாதாரத்தில் மீண்டும் முதலீடு செய்து, வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை இயக்குதல் ஆகிய இரு வழிகளிலும் செயற்படமுடியும். மக்களை ஒருங்கிணைத்து, அவர்களின் அபிலாஷைகளை அடைய உதவும் ஆற்றலை மகாசக்தியின் கட்டமைப்புக் கொண்டுள்ளது.
மகாசக்தியின் முன்பள்ளிகள்
வடமாகாணத்தில் மட்டும் 30,000 சிறுவர்கள் 1,600 முன்பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இப்பள்ளிகளில் 3,200 ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர். பெரும்பாலும், இவர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியத்தகமை இல்லாதவர்கள். பலர் மாதம் ரூபா 6,000 மட்டுமே சம்பளமாகப் பெறுகின்றனர். ஆனால், அதிக வருமானம் பெறும் பெற்றோர்களின் பிள்ளைகள் பயின்று வரும் முன்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூபா 20,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. சிலர் அதற்கு கூடுதலாகவும் பணம் பெறுகின்றனர். இந்த ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது.
அம்பாறையிலும் முன்பள்ளிகளின் நிலை மிகவும் பின்னடைவானதாக இருந்தாலும், மகாசக்தி 8 முன்பள்ளிகளைத் தொடங்கி, தன்னுடைய வருமானத்தில் அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிவருகிறது. இந்த 8 முன்பள்ளிகள், மகாசக்தி கூட்டுறவின் சமூகப் பணிக்கான முக்கிய முன்னோடிகளாகவும், எதிர்காலத் தலைமுறையின் கல்வி மேம்பாட்டுக்கான வளங்களாகவும் அமைகின்றன.
இவை:
- மகாசக்தி கண்ணகி கிராமம் பாலர் பாடசாலை
- மகாசக்தி புளியம்பத்தை பாலர் பாடசாலை
- மகாசக்தி கிராமம் பாலர் பாடசாலை
- மகாசக்தி கிராம எழுச்சி பாலர் பாடசாலை
- மகாசக்தி கோளாவில் பாலர் பாடசாலை
- மகாசக்தி நாவக்காடு பாலர் பாடசாலை
- மகாசக்தி டயக் கோணியா பாலர் பாடசாலை
- மகாசக்தி வாச்சிக்குடா பாலர் பாடசாலை
கிழக்கு மாகாணசபை, 4,500 ரூபா அளவில் ஒரு ஆசிரியருக்குரிய கொடுப்பனவை வழங்கும் நிலையில், இதனுடன் சேர்த்து மகாசக்தி 13,000 ரூபா கொடுப்பனவை ஆசிரியர்களுக்கு வழங்கிவருகிறது. இதன்மூலம், கிழக்கு மாகாணத்தில் முன்பள்ளிகளுக்கு வழங்கப்படும் உதவிக்கான புதிய நிலைமைகளை மகாசக்தி உருவாக்கியுள்ளது.
முன்பள்ளிகள் ஒரு கவனிக்கப்படாத கல்வித்துறையாகப் பின்னடைவு அடைந்துள்ளன. அம்பாறை போன்ற போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் கல்வி வளர்ச்சி மிகவும் மந்தமானது. இப்பகுதிகளின் கல்வி முன்னேற்றத்திற்கு முன்பள்ளிப் பாடசாலைகள் அடிப்படையானவை எனவும், அவற்றின் விரிவாக்கம் அவசியம் எனவும் உணரப்பட வேண்டும். இந்நிலையிலேயே, கூட்டுறவுசார் உதவியும், மகாசக்தியின் அனுபவமும் முன்பள்ளி அமைப்புகளின் வளர்ச்சிக்கு அவசியமானவையாக அமைகின்றன.
மகாசக்தியின் கூட்டுறவு மாதிரி
மகாசக்தியின் தற்போதைய கடன் கொடுப்பனவு 160 மில்லியன் ஆக உள்ளது. 2023 ஆம் ஆண்டின் கணக்கின்படி, இதற்கு 500 மில்லியன் வரையிலான கடனை முகாமைத்துவம் செய்யும் திறன் இருந்தாலும், நிதி ஒரு முக்கியத் தடையாக உள்ளது. தற்போது 300 விவசாயிகளுக்கு, இரு போகங்களுக்கும் வழங்கப்படும் கடன் தேவையின் 20% இனை மட்டுமே மகாசக்தி பூர்த்திசெய்கிறது. ஆனால் 1400 விவசாயிகளுக்கு சிறுதானியப் பயிர்களுக்கான கடன் தேவைப்படுகிறது. ஆலையடிவேம்பு, பரந்த விவசாய நிலம்; வளமான நீர்நிலைகள், கடல் வளம், மற்றும் சுற்றுலா வளத்துடன் கூடிய பகுதி. இருப்பினும், தேவையான உற்பத்திசார் கடன் வரையறை இதன் பொருளாதார முன்னேற்றத்துக்கு தடையாகவே உள்ளது. மேலும் இது பால் உற்பத்தி, தயிர் தயாரிப்பு மற்றும் மீன்வளத்திற்கும் புகழ்பெற்ற வளமான நிலம்; சின்ன முகத்துவாரம் முதல் குமண வரை கடலோரமாக விரியும் பரந்த நிலக்காடு என்பவைகளுடன்கூடிய பொருளாதார மையமாக விளங்குகிறது. பெரியகளப்பு, பல மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்துக்கான முக்கியமான களமாக உள்ளது. இங்கு மீன் வியாபாரத்தில் ஈடுபட கூட்டுறவுக் கடன்கள் அவசியமானவை. இருப்பினும், நிதிப் பற்றாக்குறையானது மீனவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு தொடர்ந்தும் தடையாகவே இருந்துவருகிறது.

மகாசக்தி, ஒரு கூட்டுறவு வங்கி அமைப்பை நோக்கி நகரவேண்டிய அவசியத்துடன் இருக்கிறது. ஆனால், நிதிப் பற்றாக்குறை, தொழில் நிபுணத்துவம் மற்றும் தொழில்திறன் ஆகியவை சவால்களாக உள்ளன. தற்போதைய நிறுவன உறுப்பினர்கள், நவீன தொழில்நுட்பத் தேவைகளுக்கு ஏற்ப தங்களைத் தயார்செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். பல வியாபார வாய்ப்புகள் மகாசக்தியின் கதவைத் தட்டினாலும், முதலீட்டில் உள்ள மனப்பயம் மற்றும் சேமிப்புக் கரைந்துபோகும் என்ற அச்சம் காரணமாக, முதலிடுவதில் விருப்பம் காட்டப்படுவதில்லை. கூட்டுறவுத் திணைக்கள ஆலோசனைகளும் திட்டங்களைத் தொடங்க நிதி கிடைக்க வேண்டும் என்ற பழைய அணுகுமுறையையே பரிந்துரைக்கின்றன. இது கூட்டுறவின் ஆன்மாவுக்கு ஒவ்வாத அணுகுமுறையாகும். ‘நன்கொடை பெறும் மனப்பாங்கு’ (Donor Dependency) ஒரு வகையான ஆற்றல் தளர்வை உருவாக்கி, மகாசக்தியின் இயற்கையான வளர்ச்சிக்கும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்கிறது. மகாசக்திக்கு உடனடித்தேவை வலுவான கூட்டாளிகள், நிதி ஆதரவு, தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் இணைந்து பயணிக்கத் தயாரான வளமான ஆதரவாளர்களே.
சமூகப் பொருளாதார மாற்றங்களில் கூட்டுறவு நிறுவனங்கள் முக்கிய கருவியாகச் செயற்படுகின்றன. இருப்பினும், இன அடிப்படையிலான மோதல்களைத் தீர்ப்பதில் அவற்றின் பங்கை பெரும்பாலும் மதிப்பிடுவதில்லை. உயிர்ப்புள்ள மனிதத் தொடர்புகளை வளர்ப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குற்றம்சாட்டப்பட்ட சமூகங்களுக்கும் இடையிலான பிளவுகளைக் குறைக்க கூட்டுறவுகள் உதவலாம். கூட்டுறவு மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் வளர்க்கும் முயற்சிகளுக்கு மகாசக்தி சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கம் உதாரணமாகத் திகழ்கின்றது.
பெப்ரவரி 11, 2025 அன்று ஆலையடிவேம்பு மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் ‘கூட்டுறவு நுகர்வோர் விற்பனை நிலையம்’ அக்கரைப்பற்று, சாகம வீதியில் கோலாகலமாகத் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருமான பொ. தனேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிலையத்தைத் திறந்துவைத்தார். சிக்கனக் கடனுதவு கூட்டுறவு சங்கம் ‘நுகர்ச்சிப் பிரிவை’ ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
அம்பாறை மாவட்டத்தின் சந்தைகள் இன்னும் இனரீதியாகப் பிளவுபட்டுள்ளன. நீடித்த பொருளாதார வறுமையால், பலர் தினக்கூலிகளாகவும், மத்திய கிழக்கில் பணிபுரியும் பொருளாதார அடிமைகளாகவும் மாறிவிட்டனர். அதிலும் தமிழ்ப் பகுதிகளில் இது பாரிய பிரச்சினைகளை உண்டாக்கியுள்ளது. வளமான பொருளாதார உற்பத்தி மையங்கள் இருந்தும், பல கிராமங்களில் சந்தை வசதிகள் குறைவாகவே உள்ளன. அக்கரைப்பற்று நகரின் வரலாறு அப்பகுதித் தமிழ் மக்களின் கசப்பான அனுபவங்களை உள்ளடக்கியது. அரசியல் ஆதிக்கத்துடன் இணைந்த இனப்பிளவுகள் இன்றும் தொடர்கின்றன. பாரம்பரிய இடங்களை இழந்த ஏக்க உணர்வு பலரின் சுவாசத்தில் நிறைந்துள்ளது. உள்ளூர் உற்பத்திக்கான ஒரு வலுவான சந்தை நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் முக்கியமான தேவையாக இருந்துவந்தது. உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்து, சந்தைப் பெறுமதியை அதிகரிக்கும் ஒரு மையம் அமைவது கனவாக இருந்த நிலையில், தற்போது திறந்துள்ள நுகர்வு மையம் அந்தத் தேவையை நிரப்பக்கூடியதாய் செயற்பட்டு வருகிறது.
அம்பாறையில் நிகழ்ந்த வன்முறைகள் நான்கு முக்கிய தளங்களில் நிறைவேற்றப்பட்டன. முதலாவதாக, தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட இன அழிப்பு (Genocidal Moments) மற்றும் நிலப்பரம்பல் மாற்றம் மூலம், அம்பாறையில் சிங்கள மக்களின் ஆதிக்கம் உருவாக்கப்பட்டது. இரண்டாவது, பாரம்பரிய தமிழ்ப் பொருளாதார மையங்கள் நீக்கம் செய்யப்பட்டன. மூன்றாவது, தமிழர்களின் வாழ்வாதாரம் நீக்கப்பட்டு, அவர்கள் கூலிகளாக மாற்றப்பட்டனர். இறுதியாக, தமிழர்கள் சந்தைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அம்பாறை மாவட்டத்தில் போரின் அதிர்வுகளையும் பின்னணியையும் தாண்டி, காலத்தில் நிலைத்திருக்கின்ற கூட்டுறவுகள் மிகச்சிலவே உள்ளன. பல்வேறு சவால்களைச் சமாளித்து, மக்களின் முழுப் பங்களிப்புடன் வளர்ந்த மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கம், இதற்கான ஒரு முக்கிய முன்னுதாரணம். அம்பாறையின் கூட்டுறவு அடையாளமாக, ஆலையடிவேம்பின் சமூக – பொருளாதார அடித்தளமாக, மகாசக்தி திகழ்கிறது.
முடிவு
அம்பாறை மாவட்டத்தின் தமிழ்ப் பகுதிகள் உதவியின்றித் தவிக்கின்றன; வறுமையின் மத்தியில், இன இருப்புப் பற்றிய கவலை அங்கு அதிகரித்துள்ளது. உள்ளூர்க் கட்டமைப்புகள் முற்றாக அழிந்துவிட்டன. வலுவான உள்ளூர் தலைமை இல்லை. அரசு, மாகாண மற்றும் மாவட்ட அதிகார அமைப்புகள் பல திட்டங்களை முன்னெடுத்தாலும், தமிழ்ப் பகுதிகளின் நிலை மாற்றப்படவில்லை என உள்ளூர் விவசாயிகள், பெண்கள் மற்றும் நன்னீர் மீன்பிடிச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கூறிவருகின்றனர். கடந்த காலங்களில், அரச ஆதரவில் குடிவந்தவர்களுக்கு அரச ஆதரவுக் கூட்டுறவு அமைப்புகள் உதவின. ஆனால், தமிழ்ப் பிரதேசங்களில் பலமாக இருந்த கூட்டுறவு அமைப்புகள் படிப்படியாக வலுவிழந்து, காலப்போக்கில் மறைந்துவிட்டன. இப்போது, ஒரு வலுவான அரிசி ஆலையைக்கூட அமைக்க முடியாத நிலையே அங்கு காணப்படுகின்றது.
மகாசக்தியின் பல தொழில் முன்னெடுப்புகள் (தயிர் உற்பத்தி, நெசவு, பெறுமதிசேர் உற்பத்தி) நாளடைவில் பெரிதாக வளராததற்கு மூலதன மற்றும் திறன்சார் தடைகளே காரணம். உற்பத்தி இலக்குகளை அடைய மகாசக்திக்கு பக்கத்துணை தேவை. மகாசக்தியின் வலுவான பலத்துடனும், நவீன வசதிகளின் உதவியுடனும் உள்ளூர் வளத்தை அணுகி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவேண்டிய தேவை எழுந்துள்ளது. ஆகவே, சமூகத்தின் மீதான அக்கறை, கரிசனை மற்றும் அறிவு ஆகியவைகளே விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியூட்டும் எனும் பிரக்ஞையை நாம் அனைவரும் உணர வேண்டியுள்ளது எனலாம்.
உசாத்துணைப் பட்டியல்
- Bawa, Mohamed Ismail Mohideen. Community Economic Development in the Ampara Coastal District, 2013. Senior Lecturer in Management, Department of Management, Faculty of Management and Commerce, South Eastern University of Sri Lanka. Retrieved from ResearchGate.
- Department of Cooperative Development, Eastern Provincial Council, Trincomalee. Retrieved from Eastern Provincial Council.
- Aravindan, M., & Kumara, Sarath. Devastation on the East Coast of Sri Lanka, January 2005. Retrieved from WSWS.
- Ismail, Mohamed. Post-war Socio-economic Development in the Eastern Province: A Case Study of Ampara District, December 2, 2014. South Eastern University of Sri Lanka, Ampara, Sri Lanka.
- Kadirgamar, Ahilan. The Failure of Post-War Reconstruction in Jaffna, Sri Lanka: Indebtedness, Caste Exclusion and the Search for Alternatives, 2017. CUNY Academic Works. Retrieved from CUNY Academic Works.
- Mahasakthi Coop Audited Report, 2023. Maha Sakthi Credit and Thrift Cooperative Society, Alayadivembu, March 10, 2025.
- Withanawasam, Athula. Political Participation in Multi-Cultural Context: A Study of Ampara District in Sri Lanka. Senior Lecturer and Head, Department of Political Science, University of Peradeniya, Sri Lanka. Retrieved from Saudi Journals.
- The Five-Year Ampara District Development Plan (2018-2022), April 24, 2018. Supported by the European Union under the EU-Support to District Development Programme (2013-2018). Accessed March 10, 2025. Retrieved from UNDP Sri Lanka.
- The Scales of Rural Tourism and Regional Development: A Case Study of Selected Areas in the Ampara District. International Journal of Business, Technology, and Organizational Behavior (IJBTOB), Vol. 4 No. 3, December 2024. Retrieved from IJBTOB.
- The List of Preschools in Ampara District, Sri Lanka. A field report showing the number of preschools/early childhood development centers by type of registration, province, and district in 2021. December 2024.
- The War and Its Consequences in the Amparai District, University Teachers for Human Rights (Jaffna), October 16, 1990. Special Report No. 3. Retrieved from UTHR.
- Withanawasam, Athula. Women, Civil War and Struggle for Survival: A Study of Tamil Women in Ampara District of Sri Lanka. International Journal of Social Science Research, Vol. 9, No. 2, 2021. Retrieved from Macrothink Journal.