1
1949 இல் குரியன், குஜராத்தில் உள்ள ஆனந் நகருக்கு வந்தபோது அவருக்கு வயது 28. அப்போது அவர் அங்குள்ள விவசாயிகளை நம்பவைத்தார்; அவர்கள் உற்பத்தி செய்யும் பால் அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது, அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அவர்களின் பாலில் உரிமை கோர அதிகாரம் இல்லை என கால்நடைப் பண்ணையாளர்களுக்கு வழிகாட்டினார்.
வியாபாரிகள் மற்றும் முகவர்களால் உள்ளூர்ப் பால் பண்ணையாளர்கள் சுரண்டப்படுவதற்கு பதிலாக, அமுல் டிசம்பர் 19, 1946 இல் நிறுவப்பட்டது. அந்த நேரத்தில், பால் விலை தன்னிச்சையாக நிர்ணயம் செய்யப்பட்டது. கைராவிலிருந்து (Kaira, Gujarat) பால் சேகரிப்பு மற்றும் அதை மும்பைக்கு விநியோகம் செய்வதில் பன்னாட்டு ‘போல்சன் (Polsan)’ ஆகியன ஏகபோகமாக இருந்தது. வர்த்தக நடைமுறைகளால் விரக்தியடைந்த கைராவின் விவசாயிகள், திரிபுவன்தாஸ் படேல் தலைமையில், சர்தார் வல்லபாய் படேலை அணுகினர். அவர் ஒரு கூட்டுறவு நிறுவனத்தை உருவாக்க அறிவுறுத்தினார். அவர்கள் அவ்வாறு செய்தால், அவர்கள் பால்சனுக்கு வேலை செய்வதற்குப் பதிலாக பம்பாய் பால் திட்டத்திற்கு நேரடியாகத் தங்கள் பாலை வழங்க முடியும். விவசாயிகளை ஒருங்கிணைக்க உதவி செய்யவும் சர்தார் படேல் உறுதி பூண்டார்.
‘அமுல்’ என்பது குஜராத்தின் ஆனந் (Anand) நகரில் அமைந்துள்ள குஜராத் பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு என்ற இந்திய சமாஜத்தின் கூட்டுறவு சங்கத்தின் (ஆனந் மில்க் யூனியன் லிமிடெட்) சுருக்கமாகும். இது குஜராத் அரசின் கூட்டுறவுத் துறையின் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு லிமிடெட் உரிமையின் கீழ் உள்ளது. 3.6 மில்லியன் பால் உற்பத்தியாளர்கள் இதற்கு உரிமையாளர்கள். திரிபுவன்தாஸ் படேல் 1946 இல் இந்த அமைப்பை நிறுவினார். 1970 களில் ஓய்வு பெறும் வரை அதன் தலைவராகப் பணியாற்றினார். அவர் 1949 இல் வர்கீஸ் குரியனைப் பணியமர்த்தினார். ஆரம்பத்தில் பொது முகாமையாளராக இருந்த குரியன், கூட்டுறவு நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் முயற்சிகளுக்கு வழிகாட்டினார். 1994 இல் படேலின் மரணத்தைத் தொடர்ந்து குரியன் அமுலின் தலைவரானார். அமுலின் மார்க்கெட்டிங் வெற்றிக்குக் காரணமாகினார். அமுல் இந்தியாவில் வெண்மைப் புரட்சியைத் தூண்டியது. இது நாட்டை உலகின் மிகப்பெரிய பால் மற்றும் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாக மாற்றியது. அதன் பின்னர் வெளிநாட்டு சந்தைகளிலும் இறங்கியது.
பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, அமுலின் மாட்டுத் தீவனத் தொழிற்சாலையைத் திறப்பதற்காக ஆனந்த் சென்றார். அக்டோபர் 31, 1964 அன்று, அவர் விவசாயிகளிடம் அவர்களின் கூட்டுறவுகளைப் பற்றி பேசினார். டெல்லிக்குத் திரும்பிய பிறகு, இந்தியாவின் பிற பகுதிகளில் கைரா கூட்டுறவு நிறுவனத்தைப் பிரதிபலிக்க தேசிய பால் வளர்ச்சி வாரியம் (NDDB) என்ற அமைப்பை உருவாக்கினார்.
வர்கீஸ் குரியன் மற்றும் பிறரின் முயற்சியால் கூட்டுறவு மேலும் வளர்ச்சி பெற்றது. எருமைப் பாலில் இருந்து பால் பவுடரை உருவாக்கும் கண்டுபிடிப்பு, இந்தியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட பால் தொழிலில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு தொழில்நுட்ப முன்னேற்றமாகும். குரியன் உதவியுடன், இந்தச் செயல்முறை வணிக ரீதியாக விரிவாக்கப்பட்டது. இது ஆனந்தில், முதல் நவீனப் பால் கூட்டுறவுக்கு வழிவகுத்தது. இந்தக் கூட்டுறவு, சந்தையில் அதற்குரிய இடத்தைப் பிடித்தது.
1970 இல், கூட்டுறவுத் துறை இந்தியாவில் ‘வெண்மைப் புரட்சியை’ முன்னெடுத்தது. சக்திகளை ஒன்றிணைத்து சந்தையை விரிவுபடுத்தும் அதே வேளையில், விளம்பரங்களை விரிவுபடுத்தவும், ஒருவருக்கொருவர் போட்டியிடுவதைத் தவிர்க்கவும், குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட், மாவட்ட கூட்டுறவுகளின் உச்ச சந்தைப்படுத்தல் அமைப்பு உருவாக்கப்பட்டது. இது 1973 இல் நிறுவப்பட்டது. அமுல் தொழில்நுட்ப வளர்ச்சி இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரவியது. 1999 இல், ‘அனைவருக்கும் சிறந்த’ ராஜீவ் காந்தி தேசிய விருது அமுலுக்கு வழங்கப்பட்டது.
2
இந்தியாவின் முதன் முதலாக மக்கள் தொகை வசூல் (crowdfunded /cloud funded) மூலம் தயாரிக்கப்பட்ட படம் ‘மந்தன்’. ஒரு படத்தின் வெற்றியை வசூலை வைத்து அளவிடுவதுதான் வழக்கம். ஆனால் இந்த வெளிச்சத்தில் மந்தனின் வெற்றியைக் கணக்கிட முடியாது.
‘மந்தனுக்கான’ யோசனை டாக்டர் குரியனுக்குரியது. அவர் படத்தை இயக்க பிரபல திரைப்பட இயக்குனர் ஷியாம் பெனகலை அணுகினார். பெனகல் படத்தின் பட்ஜெட் சுமார் 10 முதல் 12 லட்சம் ரூபாய் என மதிப்பிட்டார். டாக்டர் குரியன், பால் பண்ணையாளர்களை அணுகி, திரைப்படத்தை உருவாக்க அவர்களின் ஆதரவைக் கோரினார். பெனகல் தனது நினைவுகளை பின்வருமாறு கூறினார் : “நாங்கள் அனைவரும் ஒரு பிச்சைக் கிண்ணத்தைக் கொண்டு வருகிறோம்; உங்கள் உழைப்பு, அர்ப்பணிப்பின் கதையை உலகுக்குக் காட்ட விரும்புகிறோம். நீங்கள் எங்களுக்கு 2 ரூபாய் கொடுங்கள் என்று நாங்கள் விவசாயிகளிடம் சொன்னோம்.”
டாக்டர் குரியன், திரைப்படம் நாடு முழுவதும் உள்ள பால் பண்ணையாளர்கள் மத்தியில் உற்சாகத்தையும் பெருமையையும் தூண்டும் வகையில் அமையவேண்டும் என்று பெரிதும் விரும்பினார். இது அவரது கதையையோ, அமுலின் கதையையோ மட்டும் சொல்லாது, இந்தியாவில் விவசாயிகள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும், அதிகாரத்தில் இருப்பவர்கள் அவற்றை எவ்வாறு சுரண்டுகிறார்கள் என்பதையும் வெளிச்சம் போட்டும் காட்டியது. எனவே, விவசாயிகளை மையமாக வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்குவது அவர்களின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாததாக அமையும் எனவும் கருதப்பட்டது. டாக்டர் குரியன் விவசாயிகளிடம் நேரடியாக நிதியைப் பெறத் தூண்டினார். டாக்டர் குரியன் அவர்களை அணுகினார்: “நாங்கள் உங்களுக்கு தினசரி 2 ரூபாய் குறைவாகத் தருகிறோம். உங்கள் பாலை 8 ரூபாய்க்கு பதிலாக 6 ரூபாய்க்கு விற்க வேண்டும். நாங்கள் உங்கள் கதையைச் சொல்ல விரும்புகிறோம்” என்றார். விவசாயிகள் ஒப்புக்கொண்டனர்.
சுமார் 5 லட்சம் விவசாயிகள் தலா இரண்டு ரூபாய் நன்கொடை அளித்தனர். இந்தியாவில் ஒரு தன்னிறைவு பெற்ற பால் கூட்டுறவு நிறுவனம் என்ற டாக்டர் குரியனின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, அவருடைய கதையை திரைக்குக் கொண்டு வருவதற்கு அவர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஆதரவை வழங்கினர்.
‘மந்தனின்’ வெற்றியானது, உயர்தரத் திரைப்படங்களைத் தயாரிக்க மக்கள் கூட்டு நிதியைப் (Crowdfunding /Cloud funding) பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்தது. வெண்மைப் புரட்சியைப் பற்றிய இத் திரைப்படத்தின் சித்தரிப்பு ஏனைய திரைப்படத் தயாரிப்பாளர்களை சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை ஆராயத் தூண்டியது, சுதந்திர சினிமாவின் எழுச்சிக்கு வழி வகுத்தது.
போரிற்கு முன்பு ஈழத்து சினிமா ஆரம்ப வளர்ச்சிநிலையில் நடை போட்டாலும், போர் அதன் வளர்ச்சிக்கு பெரிதும் தடைபோட்டது. போர்க் காலப்பகுதி பல ஆவண மற்றும் குறும் படங்களுக்கு பலமான அடித்தளம் இட்டது. புலம்பெயந்தோர் பலர் தமது தனித் திறமைகளை வெளிப்படுத்தினர்; ஊக்குவித்தனர். பலர் உலகத் தரம் வாய்ந்த சினிமாக்களில் கூட நடித்து புகழ் ஈட்டினார்கள். ஈழத்தின் சினிமாத் துறை இன்னும் வளர வேண்டும். இத்துறை சார்பாகக் கூடிய கவனமும் வாய்ப்புகளும் இன்னும் தேவை. ஆவணப்படங்கள் இன்னும் சிறப்பாக வர வாய்ப்புள்ளது. அதற்கு, நிதிவளமும் பலரின் பங்களிப்பும் முழுமையாகத் தேவை. ‘மந்தன்’ திரைப்படத் தயாரிப்பு அனுபவம் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். மக்கள் பங்களிப்பிலான ஒரு கூட்டு சினிமாவைத் தயாரிப்பதற்கு அது கற்றுத் தருகிறது. சிறுதுளி பெரும் வெள்ளம் என்பது போல்!
திரைப்படத்தின் கதை
டாக்டர் வர்கீஸ் குரியன், எப்படி ஆனந் போன்ற பால் கூட்டுறவு நிறுவனங்களுக்கு முன்னோடியாக இருந்தார் என்பதை ‘மந்தன்’ திரைப்படம் சொல்கிறது. இந்தியாவில் நடந்த வெண்மை புரட்சி தான் மந்தன் திரைப்படத்தின் கதைக்களம்; பால் உற்பத்தியை அதிகரிப்பதையும், பால் பண்ணையாளர்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. ‘வெள்ளைப் புரட்சியின் தந்தை’ என்று அன்புடன் அழைக்கப்படும் டாக்டர் வர்கீஸ் குரியன் தலைமையில், இந்திய விவசாயிகள் கூட்டுறவு மற்றும் பால் உற்பத்தித் தொழிலை மாற்றியமைக்கும் பிரம்மாண்டமான ஒரு புரட்சியின் கதையே அமுல் நிறுவனத்தின் ஆரம்பம். அதுவே இத் திரைப்படத்தின் கதையும் ஆகும்.
ஒரு கிராமத்திற்குச் சென்று பால் பண்ணையாளர்களின் போராட்டங்களைக் காணும் கால்நடை மருத்துவரான டாக்டர் ராவ் (கிரிஷ் கர்னாட்) படத்தின் மையப் பாத்திரமாக அமைகிறார். அவர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானித்து, பால் கூட்டுறவுச் சங்கத்தை தொடங்குகிறார். ஆனால் உள்ளூர் தொழிலதிபர் மிஷ்ராஜி (அம்ரிஷ் பூரி) மற்றும் சர்பாஞ்ச் (குல்பூஷன் கர்பண்டா) ஆகியோரின் எதிர்ப்பைச் சந்திக்கிறார். கூடுதலாக, கிராமத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட விவசாயிகளும் வெளியாட்கள் மீதான நம்பிக்கையின்மையால் கூட்டுறவு நிறுவனத்தை எதிர்க்கின்றனர். போலா (நசிருதீன் ஷா), ஒரு இளம் மற்றும் தைரியமான தலைவராக, அவர்களின் எதிர்ப்பின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். உள்ளூர் கிராமப் பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போலா மற்றும் பிந்து (ஸ்மிதா பாட்டீல்) ஆகியோரின் ஆதரவுடன், டாக்டர் ராவ் தற்போது அமுல் என்று அழைக்கப்படும் கூட்டுறவு நிறுவனத்தை வெற்றிகரமாக ஆரம்பிக்கிறார். இந்தப் படத்தை ஷியாம் பெனகல் மற்றும் பிரபல நாடக ஆசிரியர் விஜய் டெண்டுல்கர் இணைந்து எழுதியுள்ளனர். ‘மந்தன்’ என்ற தலைப்பு ஒரு பால் கூட்டுறவு நிறுவனத்தை நிறுவுவதற்கு ஒரு முழு கிராமத்தையும் அணிதிரட்டுவதைக் குறிக்கிறது.
‘மந்தனின்’ பெண்களின் எதிரொலியை கலைநயத்துடன் தருகிறது; பெண்கள் மீதான அதிகார அழுத்தங்களையும் படம் காட்டுகிறது; பொருத்தமான பிரச்சினைகளை எழுப்புகிறது. அமுலின் கலாசார பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இப்படம் அமைகிறது. கூட்டுறவுச் சங்கத்தில் சேரும் எவருக்கும் நாங்கள் முதலில் காண்பிக்கும் படம் மந்தன் தான். மக்களின் பிரச்சினைகளை மக்களின் பங்களிப்புடன் இருந்து ஆராய முற்படும் ‘மந்தன்’ திரைப்படத்தின் காட்சிகள் முக்கியமானவை. மக்களின் பங்களிப்பை படிப்படியாக பொறுமையுடன் சேகரிக்கும் இத் திரைப்படத்தின் காட்சிகள் சிறப்பானவை.
அன்றைய இந்தியக் கூட்டுறவாளர்களின் நிலையை விட எமது நிலை (ஈழம்) மிகவும் சரிந்து காணப்படுகிறது. உள்ளூர் விவசாயிகள், பண்ணையாளர்கள், உள்ளூர் உற்பத்தியாளர்களின் நிலை மிகவும் பின்தங்கி வருகின்றமை கண்கூடு. கூட்டுறவுத் துறையின் முக்கிய பிரச்சினையாக, அர்ப்பணிப்பான தலைமைத்துவம் இன்மையே காணப்படுகிறது. கூட்டுறவு ஒரு பலமான பொருளாதார இயக்கம். இன்று அதநை உயிர்ப்பிக்கும் தலைமைகள் இன்றி, அதன் மீதான மக்களின் கவனமும் குறைந்து வருகிறது. இதனை மீண்டும் எப்படிச் சாத்தியமாக்கலாம் எனும் படிப்பினையை ‘மந்தன்’ திரைப்படம் தருகிறது.
ப்ரீத்தி சாகரின் பாடலான ‘மேரோ காம் கதா பரே’, அந்த ஆண்டு ‘சிறந்த பெண் பின்னணிப் பாடகி’க்கான பிலிம்பேர் விருதைப் பெற்றது. இப் பாடலின் தலைப்பு நன்கு பிரபலமானது. ஏனெனில் இது பின்னர், அமுலின் சின்னமான தொலைக்காட்சி விளம்பரமாக மாறியது.
‘மந்தன்’ திரைப்படம் தற்போது 17 மாத காலப்பகுதியில் அதன் அசல் கேமராவிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு இந்த முயற்சிக்கு நிதியளித்தது. அமுலின் சர்வதேச வியாபார விரிவாக்கத்துக்கு ஒரு கூட்டுறவுத் தரிசனத்தை தரப்போகும் இப்படம் அண்மையில் கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
‘மந்தன்’ கூட்டுறவின் வலிமையைப் பறைசாற்றும் ஒரு சினிமா ஆவணம். படம் இரண்டு காரணங்களுக்காக மிக முக்கியமானது; ஒன்று, பிரச்சனைகளை பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பவர்கள் தான் தீர்வுகளை அடையவேண்டும் எனும் படிப்பினை; அடுத்தது, சூழ்நிலைகளை எப்படித் தம் வசப்படுத்தி, நல்ல சக்திகளை இனம் கண்டு, தமது நலன் சார் விடயங்களை கையாள்வது எனும் அனுபவம். புத்தாக்கங்களைப் புகுத்துவது, கிடைக்கும் சந்தர்ப்பங்களை தம் நோக்கங்களுக்கு வலுவூட்டத் திட்டமிடுவது என ‘மந்தன்’ நம்பிக்கை தரும் ஒரு மக்களின் சினிமாவாகத் திகழ்கிறது. பெரிய காரியங்களைச் செய்வதற்கு கூட்டு அணுகுமுறைதான் அவசியமானது. எமது கூட்டுறவுக்கும் இது தான் இன்று அவசியமாகத் தேவைப்படுகிறது.
உசாத்துணை
- ப்ரீத்தி சாகரின் தலைப்புப் பாடலான ‘மேரோ காம் கதா பரே’- https://www.youtube.com/watch?v=onhgE0-z1qM
- Dr. Kurian’s biography- https://drkurien.com/biography/
- “I Too Had a Dream”. Verghese Kurien, Book Amazon (available in Kindle)
- Operation Flood: one of the world’s largest rural development programmes- . https://www.nddb.coop/about/genesis/flood
தொடரும்.