திருமண அழைப்பு
ஆரம்பகாலங்களில் திருமண அழைப்பானது வாய்வழியாகவே சொல்லப்பட்டு வந்தது. இதனை விசேளம் சொல்லுதல் என்று அழைப்பர். நெருங்கிய சொந்தக்காரர்களுக்கு வட்டா வைத்து அழைக்கும் வழக்கமும் இருந்துள்ளது. குடும்பத்தினர்களுக்கு மணமகன், மணமகள் நேரடியாக அழைப்பு விடுப்பதும் உண்டு.
வட்டா வைத்து அழைத்தல்
வெண்கல வட்டா ஒன்றில் ஏழு வெற்றிலை, ஏழு பாக்கு வைத்து வட்டாவின் காலில் கட்டப்பட்ட வெள்ளைத்துணியால் அதை மூடிக்கொண்டு எடுத்துச் செல்வார்கள். பள்ளி மரைக்காயர்மார், லெப்பை, முஅத்தின், நெருங்கிய உறவுக்காரர்கள், நண்பர்களுக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் வட்டாவை உள்ளே கொண்டு சென்று வெற்றிலை, பாக்கை எடுத்துக்கொண்டு அழைப்பை ஏற்றதாகச்சொல்லி வட்டாவை திரும்பக் கொடுப்பார்கள்.
அதற்காக செம்புக்கடகங்களும் பயன்படும். இவ்வாறு செல்வதை வட்டாக்கொண்டு போதல் என்றும் சொல்வதுண்டு. இதுபற்றி தனது நூலில் குறிப்பிடும் சமீம் அவர்கள் ‘மட்டக்களப்பு பகுதியில் வேற்று மனிதர் வீட்டில் ஆண்கள் இல்லாத சமயம் வீட்டிற்குள் யாரும் நுழைவதில்லை. வட்டா கொண்டு போகிறவர்கள் மாத்திரம் வீட்டில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள் மறைவாக நின்று வட்டாவை வாங்குவார்கள். இருவீட்டார் அழைப்பாக இருந்தால் இரண்டு வட்டாக்கள் கொடுக்கப்படும்’ என்கிறார் (சமீம், 1997).
முக்கியமான பிரமுகர்களுக்கு அழைப்புக்கொடுக்க ஊரதிகாரியை அழைத்து பெயர்ப்பட்டியலும், வெண்கல வட்டாவும், இரு உமல்களில் கொட்டைப்பாக்கும், வெற்றிலையும் வைத்துக் கொடுத்துவிடுவார்கள் (கபூர் எஸ்.எச்.எல்.ஏ, 2015).
‘வாய்விசேளம்’ சொல்வதற்காக, ஊர்வாசிகள் பற்றி நன்கு பரிச்சயமுடைய வயதான பெண்மணிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு காசும், வெற்றிலை – பாக்கு, சுண்ணாம்பு என்பவையும் வாங்கிக்கொடுத்து அனுப்புவார்கள். அவர்கள் கால்நடையாகவே ஊர்முழுக்க சொந்தக்காரர்களுக்கு செய்தி சொல்லி வருவார்கள். வரும்போது அவர்களிடமிருந்து தகவல்களையும் கொண்டுவருவார்கள்.
சிலவீடுகளில் பெண்களால் பெண்களுக்கு தகவல் சொல்லப்பட்டால் மாத்திரமே (பொம்பளை விசேளம்) பெண்கள் சபைக்கு வருவார்கள். இதனால் நெருங்கிய உறவினர் வீடுகளுக்கு குடும்பப் பெண்களும் அழைப்பு விடுக்கச் செல்வார்கள்.
கிழக்கிலங்கையில் அச்சுக்கூடங்கள் அறிமுகமாகிய 18ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே அச்சிடப்பட்ட அழைப்பிதழ்கள் விநியோகிக்கப்படத் தொடங்கின. தூர இடங்களிலுள்ளவர்களுக்கு அழைப்பை தபாலில் கடிதத்துடன் அனுப்புவதும் உண்டு.

கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி 1934ஆம் ஆண்டு ஜூலை பொத்துவிலில் நடைபெற்ற திருமண அழைப்பிதழொன்று ஆவணப்படுத்தப்பட்டுள்ளது (சுவடிக்கூடம்). அதற்குப் பின்னர் அழைப்பிதழ்களில் ஏற்பட்ட மாற்றங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:
- அழைப்பிதழ்கள் ஆரம்பத்தில் தமிழ்மொழியில் மாத்திரம் காணப்பட்டுள்ளன.
- அழைப்பிதழின் தலைப்புகள் விவாகோற்சவ விஞ்ஞாபனம், திருமண அழைப்பு, கலியாண அழைப்பு என்று மாற்றமடைந்து தற்போது நிக்காஹ் அழைப்பிதழ் என்று பயன்பட்டு வருகின்றது.
- 1950களின் பின்னர் ஆங்கிலத்திலும், தமிழிலும் இருமொழி அழைப்பிதழ்கள் அச்சாகின. தற்காலத்தில் ஆங்கிலத்தில் மாத்திரம் அச்சாகும் போக்கும் வளர்ந்து வருகின்றது. அதேவேளை மணமக்களை வாழ்த்தும் பிரார்த்தனை, பிஸ்மில்லாஹ் ஆகிய அரபு எழுத்தணிகளும் இடம்பெறுகின்றன.
திருமண வீட்டின் ஆயத்தங்கள்
வீடுகளை மெழுகிச் சுத்தம்செய்து சுவர்களுக்கு சுண்ணாம்பு அடித்து அலங்கரிப்பார்கள். புதிய கிடுகுகளைக்கொண்டு தட்டுவேலிகளை அமைப்பார்கள். இது கலியாண வேலி எனப்படும். வாசல்களில் வண்டிலில் ஏற்றி வந்த கடற்கரை மணலைப் பரவுவார்கள்.
நெல் அவித்துக் காயவைத்து உரலிலே குற்றுவார்கள். இதற்காக அயலிலுள்ள பெண்களை உதவிக்கு அழைப்பார்கள். அரசிமா இடிப்பார்கள். வளந்து வைத்து புதிய களிமண் பாத்திரங்களை குறிவைத்துச் சூழையிடுவார்கள். மான் – மரை, காட்டுமாட்டிறைச்சிகளைப் பெற்றுக் காயவைப்பார்கள். பால், தயிர், தேன், வாழைக்குலைகள், தேங்காய் வாங்கி வைப்பார்கள். பாக்குச் சீவுதல், பலகாரங்கள் சுடுதல் என்பனவும் நடைபெறும்.
பந்தக்கால் நாட்டுதல்
திருமணத்திற்கு முதல்நாள் வளவில் பந்தல் போடப்படும். அப்பந்தலுக்காகச் சேலைகள் பயன்படும். மாப்பிள்ளை நுழையும் வாயிலுக்கருகில் நடப்படும் முதற் கணு, பந்தக்கால் (பந்தற்கால்) எனப்படும். இதனைக் குடிமரைக்காயரைக் கொண்டே நடுவார்கள் (இஸ்மாலெவ்வை ஏ.ஸி, 2019). இக்காலைச்சுற்றி சேலைகளால் அலங்கரிக்கப்படும். ஒவ்வொரு கணுக்களைச் சுற்றியும் சேலைகள் கட்டப்படும். இவை மாப்பிள்ளைக் கால் என்றும் அழைக்கப்படும் (லறீப் சுலைமான், 2015).
குழல் போன்ற பெரிய ஒலிபெருக்கிகள் வாடகைக்குப் பெறப்பட்டு நீண்ட தென்னைமரங்களில் பொருத்தப்பட்டு, இஸ்லாமியக் கீதங்களும், மெல்லிசைப்பாடல்களும் ஒலிபரப்பப்படும். இதனை ‘கோணகிறாப்’, ‘பூனைக்கிறாப்’ என்றும் அழைப்பர் (லறீப் சுலைமான், 2015).
அடுக்குப்பண்ணுதலும் இடம்பெறுவதாக நிந்தவூர் வழக்காறுகள் குறிப்பிடுகின்றன (கபூர் எஸ்.எச்.எல்.ஏ, 2015). கிடுகுகளைக் கொண்டு தற்காலிக மண்டபம் ஒன்று அமைத்தல், சோடிப்பதற்கு பல வண்ணப்பட்டுத்தாள்களில் குருத்து வெட்டுதல், எறிவெடி போன்றவை ஏற்பாடு செய்தல், மூப்பனார் (நட்டுமுட்டுக்காரர், நாதஸ்வரக் கலைஞர்கள்) ஏற்பாடு செய்தல் என்பனவும் இடம்பெறும். மேலும் தென்னம்பாளைகள் கொண்ட நிறைகுடம், குருத்தோலை அலங்காரங்கள், மாவிலை அலங்காரம் போன்றவற்றைக் கொண்டும் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
பந்தலின்கீழ் பன்பாய்கள் விரிக்கப்பட்டு அவற்றின்மீது வெள்ளைச்சீலைகள் விரிக்கப்பட்டிருக்கும். வெள்ளை விரித்தலைச் செய்ய குடும்ப வண்ணான்மார்களே அழைக்கப்படுவார்கள். இவர்களே வாசலில் மாரப்பும் கட்டிவைப்பார்கள்.
மாப்பிள்ளைக் குளிப்பு
திருமணநாள் அன்று திருமணப்பதிவு இடம்பெறும். இதற்கு முன்னதாக அன்றைய நாள் அதிகாலை மாப்பிள்ளையின் வீட்டில் மாப்பிள்ளையைக் குளிப்பாட்டுதல் இடம்பெறும். இதற்காக மணப்பெண்ணின் சகோதரர்கள் மாப்பிள்ளையின் வீட்டிற்குச் செல்வார்கள். வெள்ளைச்சீலை விரிக்கப்பட்டு அதன்மீது மாப்பிள்ளையை நிற்கச்செய்து மைத்துனர்கள் உட்பட சூழ நிற்பவர்கள் நீரூற்ற வேண்டும் (லறீப் சுலைமான், 2015) என்று இறக்காமத்தில் ஒரு நடைமுறையிருந்துள்ளது.
அதேவேளை, நள்ளிரவில் மைத்துனர்கள் துவாய், சாரன், சவர்க்காரம் உள்ளிட்ட பொருட்களுடன் வந்து மாப்பிள்ளையைக் குளிப்பாட்டிவிடும் வழக்கம் நிந்தவூரில் இருந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர் (கபூர் எஸ்.எச்.எல்.ஏ, 2015).
மாப்பிள்ளையைக் குளிப்பாட்டி முடித்ததும் அவரை வெள்ளைச்சீலையால் போர்த்தி மஞ்சள் நீரில் இரு திரியிட்டு ஆரத்தி எடுப்பார்கள். அதனைத் தொடர்ந்து அரிசிமாவில் மலர்கள் செய்து குண்டுமணிகள் பதித்து அதில் திரியிட்டு அதனையும் ஊதி அணைக்கச் செய்வார்கள். இதன் பின்னர் மாப்பிள்ளை அலங்காரம் இடம்பெறும்.
மாப்பிள்ளைச் சோறு
திருமண தினத்தன்று மாப்பிள்ளை வீட்டில் மௌலூது, தலைப்பாத்திஹா என்பன ஓதி விருந்தொன்று நடைபெறும். இதற்காக மணப்பெண்ணின் வீட்டிலிருந்தே சோறு, கறிகள் கொண்டு செல்லப்படும்.
மாப்பிள்ளை அலங்காரம்
மாப்பிள்ளைக்கு வெள்ளைச் சட்டை, வெள்ளைச்சாரன், பட்டுச்சால்வை, தோற்செருப்பு, இடுப்புப்பட்டி, துருக்கித்தொப்பி என்பவற்றுடன் கறுப்புக் கோட், வெள்ளி மோதிரம் என்பனவும் அணிவிக்கப்படும். பின்னர் மைத்துனரால் அழைத்துவரப்பட்டு, வெள்ளைத்துணி விரிப்பில் காவின் கலரியில் இருத்தப்படுவார்.

காவின் எழுதுதல்
முஸ்லிம்கள் திருமணப்பதிவை காவின் என்று அழைப்பார்கள். இது كاوين என்ற அரபு வார்த்தையிலிருந்து தோன்றியதாகும். இது மலாய் மற்றும் அரபு மொழியினூடாக இலங்கை முஸ்லிம்களின் வழக்கில் இடம்பெறுகின்றது. இதனை கடுத்தம் என்றும் அழைப்பார்கள். பொதுவாக காவின் எழுதுவது மணமகனின் வீட்டிலேயே நடைபெறும். இதேநேரத்தில் மாப்பிள்ளை அழைப்பிற்காக பெண்வீட்டார் மாப்பிள்ளையின் இல்லத்தை நோக்கிச் செல்வார்கள். இதன்போது காவின் வட்டாவும், மாப்பிள்ளைக்கான கூறையும் எடுத்துச் செல்லப்படும்.
இவர்கள் அனைவரும் உபசரிக்கப்பட்டு பாய்களில் அமர்த்தப்படுவார்கள். காவின் பதிவு வாசலில் அமைக்கப்பட்டுள்ள பந்தலின் கீழே நடைபெறும். மாப்பிள்ளை மாப்பிள்ளைத் தோழர்களினாலும், மைத்துனராலும் அழைக்கப்பட்டு காவின் கலரியில் அமர்த்தப்படுவார். தற்காலத்தில் திருமணப்பதிவுகள் பள்ளிவாசலில் நடைபெறுகின்றன. திருமணப்பதிவாளர், லெப்பை, மணப்பெண்ணின் தகப்பனார், மணமகன், சாட்சிகள், மணமகனின் தகப்பன் ஆகியோர் மத்தியில் அமர்ந்திருப்பர். இவர்களைச்சூழ உற்றார், உறவினர்கள், ஊரவர்கள் அமர்ந்திருப்பர்.
காவின் பதிவின் போது ‘இன்ன பெயருடைய என்னுடைய மகளை இன்னாருடைய மகனான இன்னாருக்குத் திருமணம் செய்துவைக்க ஒப்புக்கொள்கிறேன்’ என்று மணமகளின் தந்தை கூற, ‘இன்னாருடைய மகள் இன்னாரை இவ்வளவு மஹரினைக் கொடுத்து ஹலால் மனைவியாக ஏற்றுக்கொள்கின்றேன்’ என்று மணமகன் கூறி, கையொப்பமிட்டு திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப்படும். திருமணப்பதிவில் மணமகனும், பெண்சார்பாக அவரது பாதுகாவலரான ‘வொலி’யும் கையொப்பமிட்டு திருமண ஒப்பந்தத்தை நிறைவேற்றுவார்கள். பொதுவாக திருமண ஒப்பந்தங்கள் சுபஹ் தொழுகையின் பின்னர் இடம்பெறும். ஆயினும் மதிய விருந்தின் பின்னர் நடைபெறும் திருமணங்கள் ளுஹர் தொழுகையின் பின்னரும், மாலை சிற்றுண்டியுடன் நடைபெறும் திருமணங்கள் அஸர் தொழுகையின் பின்னரும் இடம்பெறும். இங்கு நிக்காஹ் பிரசங்கமும் இடம்பெறுவதுண்டு.
காவின் பதிவுகள் நடைபெற்றதன் பின்னர் பிரார்த்தனை இடம்பெறும். அதன்பின்னர் மணமகளின் தந்தை அல்லது மூத்த சகோதரனால் மாப்பிள்ளைக்கு மோதிரம் அணிவிக்கப்படும். அல்லது பெறுமதியான அன்பளிப்பொன்று வைக்கப்படும். அதனை ‘வொலி சொல்லி பரிசு வைத்தல்’ என்பார்கள். அதன் பின்னர் மாப்பிள்ளைக்கு, வந்திருக்கும் ஆண்கள் கைலாகு கொடுத்து முஸாபஹா செய்து அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துத் தெரிவிப்பார்கள். அன்பளிப்புகளாக தங்க நகைகள், சாரன், சால்வை, பணமுடிச்சு என்பன வழங்கப்படும். பின்னர் விருந்து அல்லது சிற்றுண்டி உபசாரம் செய்யப்படும்.
இவ்வேளையில் மைத்துனரும், மாப்பிள்ளைத் தோழர்களும் மாப்பிள்ளைக்கு கூறை அணிவிப்பார்கள். அவர்கள் கொண்டுவந்த புதிய சாரன், சட்டை, துருக்கித்தொப்பி என்பவற்றை அணிவித்து மாப்பிள்ளையை அலங்கரித்து அழைத்துச்செல்லத் தயாராக்குவார்கள். பின்னர் தாய், சகோதரிகள், பெண் உறவினர்களிடமிருந்து மணமகன் விடைபெற்றுவருவார்.
மாப்பிள்ளை அழைப்பு
மாப்பிள்ளை அழைத்து வருதல் என்பது மிக முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுகின்றது. இங்கு மாப்பிள்ளை உயர்ந்த கௌரவத்துடன் கவனிக்கப்படுவார். இரவாகிலும், பகலாகிலும், மழை இருந்தாலும், இல்லாவிட்டாலும் மாப்பிள்ளைக்குக் குடை பிடிக்கப்படும். பெரிய கறுப்புக்குடையின் மீது வெள்ளைத்துணியைப் போர்த்தி அக்குடையின்கீழ் மாப்பிள்ளை அழைத்துவரப்படுவார். மைத்துனர் ஒரு கையில் மாப்பிள்ளையின் பெட்டியும், மறுகையில் குடையுமாக மாப்பிள்ளையை அழைத்துவருவார். இவ்வூர்வலத்தில் மாப்பிள்ளைக்கு முன்னால் சீனடி, சிலம்படி வித்தைகளும், தீப்பந்தம், வாள்வீச்சு, பைத் பாடல்களும் இடம்பெறும். பெண்கள் குரவை ஓசை எழுப்பிக்கொண்டு வருவார்கள். மாப்பிள்ளை நடக்கும் பாதையெங்கும் வண்ணான் ஒருவரால் வெள்ளை விரிக்கப்படும். ஆண்கள் பரிவாரமாக மாப்பிள்ளையை அழைத்துவர பின்னால் மாப்பிள்ளையின் மூத்த சகோதரி பெண்ணின் கூறைப்பெட்டி, தாலிப்பெட்டியுடன் மற்றப் பெண்களையும் அழைத்துக்கொண்டு பின்தொடர்வார்.
‘யாநபி ஸலாம் அலைக்கும்
யா ரஸுல் ஸலாம் அலைக்கும்
யா ஹபீபி யா முஹையத்
யா முஹஜ்ஜத் ஸலாம் அலைக்கும்’ என்று முன்செல்பவர் ‘பைத்’ பாட,
‘லா இலாஹா இல்லல்லாஹு
லா இலாஹா இல்லல்லாஹு’ என்று பின்னே செல்பவர்கள் பாடி வருவார்கள்.
சில இடங்களில் மணமங்கலமாலைப் பாடல்களும் பாடப்படும். அத்தோடு கேரளத்தில் பிறந்து காத்தான்குடியில் வாழ்ந்த செய்குனா செய்யது முஹம்மது என்பவர் இயற்றிய மகுஷுக்கு மாலைப் பாடல்களும் பொல்லடி அண்ணாவியார்களால் பாடப்படும். அதன் சில வரிகள்:
‘முன்னே ஸலாம் சொல்லிவாடி என் அன்னமே
முறுஷிதைக் கண்டுதேடி
முன்னே ஸலாம் சொல்லிவாடி முறுஷிதைக் கண்டுதேடி
வானமறை வேதரடி வாக்கியம் பெறலாங்கோடி (முன்)
வாசனைவீசு மலராம் மிகுந்தமலை
யாளமவர்ரூர் பிறந்தவர்
தேசமெங்கும் தீனறிவித்துத் திருத்தவந்த
செய்யது முகம்மதென்பவர்
பாசபலணூனவழி நால்விதமுமேயறிந்த
நேசநேசரானவெங்கள் வாகசருக்கெங்கள் சலாம் (முன்)

கூறைப்பெட்டி மாற்றுதல்
கூறை என்பது பெறுமதிமிக்க வேலைப்பாடுகளையுடைய மணமகளின் புடவையாகும். அதனுடன் அஞ்சணம் (சுர்மா), ஆபரணங்கள், வாசனைத்திரவியங்கள் என்பனவும் எடுத்துச் செல்லப்படும். மாப்பிள்ளையின் வசதிக்கேற்ப கூறையுடன் ஐந்து அல்லது ஏழு புடவைகள் வைக்கப்பட்டிருக்கும். அவை அனைத்தும் வைக்கப்பட்ட மரத்தினாலான தைலாப்பெட்டியே கூறைப்பெட்டி எனப்படும்.
மணமகனின் சகோதரியிடம் கூறைப்பெட்டியைப் பெற, மணமகளின் வீட்டுப் பெண்கள் முன்னே நடந்து செல்வார்கள். இதன்போது சீதனப்பேச்சுகளில் தீர்மானிக்கப்பட்ட ‘பெட்டிக்காசு’ கொடுக்கப்படும். அதன்பின்னரே கூறைப்பெட்டியைக் கையளிப்பார்கள்.
வண்ணான் மறித்தல், அண்ணாவியார் கட்டியம் கூறுதல்
நடந்துவந்த மாப்பிள்ளை, மணமகள் இல்லத்து வாசலை அடைந்ததும் வெள்ளை விரித்த வண்ணான் ஒருவர் மறித்து நிற்பார். மாப்பிள்ளை அவருக்கு அன்பளிப்பு ஏதேனும் வழங்க அவர் வழிவிடுவார். அதன்பின்னர் பைத் பாடியவரும், பொல்லடி அண்ணாவியாரும் மறித்து நிற்பார்கள். இவர்களில் ஒருவர் மாப்பிள்ளை வாழ்த்துப் பாடுவார்கள். இதைக் கட்டியம் என்பர். கட்டியம் கூறுபவருக்கும் மாப்பிள்ளை அன்பளிப்புக்கொடுத்த பின்னர்தான் மாப்பிள்ளையை முன்செல்ல விடுவார்கள்.
கண்டி நகர், காலி, மாத்தறை
காவல் கண்டீர் நாகபட்டினம்
தொண்டியூர் திருஏரியா
திருகோணமலைச் சேரியும்
வண்டுலாவிய கிண்ணியா
வதுவிநாடறிய சதுரகிரிமலை
எங்கும் எங்குமே அவர் புகழ்
எங்கும் எங்குமே துதிக்க
சீர்புகழ் செழித்த மன்னவர்.
தென்பகுதிக் கிழக்கு
சிங்க மகராசா வன்னுமை
பார்புகழ் மீராலெவ்வைப்போடி வன்னுமை
நாலு திக்கும் பிரபல்யமாகினார்
சீர்புகழ் செழித்த மன்னவர்.
அறுபது பயினர் எல்லாம்
ஒருமாதம் உடைத்த கல்லை
ஒரு பத்து மணிக்குள்ளே வன்னுமை
உரிய இடத்துக்கு எடுத்தார்
அறுபத்து மூன்று வண்டில்
நூற்று இருபத்து ஆறு மாடும்
அறுபத்து மூன்று வண்டில்கள் கரகரவென்று ஓட
அங்குள்ள மாடுகள் இங்கிரதம்பாட
வழிதப்பி பயினர்கள்
திசைதப்பி ஓட
மன்னர் மீராலெவ்வை
வன்னுமை ராசனென்று
உவந்து கைகொடுத்து,
பின் புகழ்ந்து தழுவிக்கொண்டார்.
(மீராலெவ்வை வன்னுமைக்கான கட்டியம் – அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்)
மாப்பிள்ளை ஆரத்தி
மாப்பிள்ளை வீட்டுவாசலிற்குள் நுழைந்ததும் பெண்கள் மஞ்சள் ஆரத்தி, சுண்ணாம்பு ஆரத்தி, பால் ஆரத்தி ஆகியவற்றை மூன்றுமறை மாப்பிள்ளைக்குச் சுற்றி ஊதி அணைக்க வைத்துவிட்டு, அதனை தெருக்கோடியில் ஊற்றிவிட்டு, கண்ணூறு கழிப்பார்கள். இதன்போது பொரி வெடியான ஆரத்திக் குச்சும் காட்டப்படும்.
அதன்பின்னர் மைத்துனர் திண்ணையில் கால்வைக்கும் மாப்பிள்ளையின் காலுக்கு பாலாடை (வெண்ணிறச் சீலை) விரிப்பார். மாப்பிள்ளை கால்வைக்க வருகையில் அதனை எடுப்பார். இவ்வாறு மச்சான் – மச்சினன் ‘எத்தங்காட்டிய’ பின்னர் மாப்பிள்ளையை வெள்ளைத்துணி விரிக்கப்பட்ட இருக்கையில் அமரவைப்பார்கள். பின்னர் மைத்துனர் மாப்பிள்ளையின் கால்களை தண்ணீராலும் பாலாலும் கழுவுவார். அன்றைய காலங்களில் புழுதி வீதிகளில் நடந்துவந்த கால்களைச் சுத்தப்படுத்தி மாப்பிள்ளையைக் கௌரவிக்க இவ்வாறு செய்வார்கள். அதன்பின்னர் மாப்பிள்ளை மைத்துனருக்கு வெள்ளி மோதிரம் போன்ற அன்பளிப்பொன்றை வழங்குவார். தற்காலங்களில் கால்கழுவுவதற்குப் பதிலாக மாப்பிள்ளைக்கு மைத்துனர்கள் வாசனைத்திரவியம் அடித்து விடுவார்கள்.
தாலி கட்டுதல்
மணமகள் – மணமகள் ஆகிய இருவரும் சேவரக்கால் எனப்படும் செம்பாலான உரலைப் போன்ற இருக்கையில் அமரச்செய்யப்படுவார்கள். அவர்களுக்கு அருகில் தென்னம்பாளையினாலான நிறைகும்பம் வைக்கப்பட்டிருக்கும். மணமகளின் தகப்பனார் பெண்ணின் முந்நெற்றி முடியைப் பிடித்து மணமகனின் கையில் கொடுத்து பெண்ணை ஒப்படைப்பார். இதன் பின்னர் மாப்பிள்ளை பெண்ணுக்குத் தாலி கட்டுவார்.
தாலி கட்டுதல் என்பது கிழக்கிலங்கை முஸ்லிம்களின் திருமணத்தில் தவிர்க்கமுடியாத அம்சமாகும். திருமணமாலை அணிவிக்கிற வழக்கம், அல்லது திருமணத்தை நிச்சயப்படுத்த மணமகன் மணமகளுக்கு ஆபரணமொன்றை அணிவிக்கிற வழக்கம் பல்வேறு சமூகங்களிலும் நிலவிவந்துள்ளது. தமிழர்கள் அழைப்பதைப் போன்றே முஸ்லிம்களும் திருமணத்தின்போது அணியும் கழுத்துப்பட்டியை தாலி என்றே அழைக்கின்றனர். இது கேரளத்தில் ‘மின்னு’ என்றழைக்கப்படுகின்றது. ஆரம்பகாலத் தாலிகள், பிறை மற்றும் பிறைக்கொடி என்ற சங்கிலியைக் கொண்ட பொன்னாலான ஆபரணமாகும். பிற்காலத்தில் பிறைக்கொடி என்பது மருவி வெவ்வேறு வடிவமைப்புகளில் தாலிகள் செய்யப்படுகின்றன. தாலிகளின் அமைப்பில் கொடி, பூ அலங்காரங்கள், கற்கள் போன்றவை பதிக்கப்பட்டிருக்கும்.
தாலியை மாப்பிள்ளையின் சகோதரி எடுத்துக்கொடுக்க மாப்பிள்ளை மணப்பெண்ணுக்கு அணிவிப்பார். அதன்பின்னர் இருவருக்கும் ஒரே குவளையில் குளிர்பானமும் தண்ணீரும் மைத்துனிகளால் பருகக் கொடுக்கப்படும். பின்னர் மாப்பிள்ளையின் சகோதரிகளுக்கு மணப்பெண் வீட்டாரினால் நகைகள் அன்பளிப்புச் செய்யப்படும்.
இதன்பின்னர் மாப்பிள்ளை வீட்டாருக்கு விருந்துபசாரம் நடைபெறும். இதனைக் ‘காவின் சோறு’, ‘மறவணச்சோறு’, ‘மணவறைச்சோறு’ என்றழைப்பார்கள். இதன்பின்னர் மணமக்களை மணவறைக்கு அனுப்பிவிட்டு அனைவரும் கலைந்து செல்வார்கள். மாப்பிள்ளை வெளியில் வந்து அனைவரையும் வழியனுப்பிவிட்டு சாப்பிட உட்காருவார். இதன்போது மைத்துனரும் கூட இருந்து சாப்பிடவேண்டும்.
மணவறை
மணமக்களுக்காக ஒன்றன்மேல் ஒன்றாக ஏழு பாய்கள் அடுக்கப்பட்டு அதன்மீது வெள்ளைத்துணி விரிக்கப்பட்டு உறங்குவதற்கான கட்டில் தயார் செய்யப்பட்டிருக்கும். ஏழு நாட்களுக்கு மணமகனும் மணமகளும் வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஏதேனும் காரியங்களிற்காக வெளியே செல்வதாக இருந்தாலும் சிறு ஆணி அல்லது பாக்கு வெட்டியைக் கொண்டுசெல்லப் பணிக்கப்படுவார்கள். தீயசக்திகளின் பார்வைபடாமல் இருக்க இவ்வாறு செய்வதாக ஐதீகமுண்டு. இந்தக் காலப்பகுதியில் மணமக்களுக்கு ஏழு நாட்டுக் கோழிகள் அறுத்து தினமும் உணவு பரிமாறப்படும். விரால், கொக்கு, காட்டுமாட்டிறைச்சி, மானிறைச்சி என்பனவும் சமைத்துக் கொடுக்கப்படும்.
பச்சப்படி
திருமணத்திற்கு அடுத்தநாள் மணமகளின் இல்லத்திற்கு பச்சப்படி எனப்படும் உணவு சமைத்துக் கொண்டுசெல்லப்படும். அதற்காக மாப்பிள்ளை வீட்டாரிடம் ‘தண்ணில வெந்தது வேணுமா, எண்ணைல வெந்தது வேணுமா’ என்று செய்தி அனுப்புவார்கள். ‘தண்ணில வெந்தது’ என்றால் – இடியப்பம், லவரி, கொழுக்கட்டை போன்ற ஆவியில் வெந்த உணவுகளும்; ‘எண்ணைல வெந்தது’ என்றால் – எண்ணையில் பொரித்த பலகாரங்களும் கொடுத்தனுப்பப்படும்.
மாப்பிள்ளை தாய்வீடு செல்லுதல்
அன்றுமாலை மாப்பிள்ளை மைத்துனருடன் தாய்வீட்டிற்கு பழங்கள் கொண்டுசென்று தாய், தந்தையரைப் பார்த்து வருவார். ஏழு நாட்களுக்கு மாப்பிள்ளை வெளியில் செல்வதாயின் மைத்துனர் கூடவே செல்ல வேண்டும்.
மாப்பிள்ளைச் சோறு – வலீமா
திருமணமுடித்து ஏழு நாட்களுக்குள் மாப்பிள்ளை தன் தோழர்களுக்கும் ஏற்றவர்களுக்கும் விருந்தளிப்பார். இதனை மாப்பிள்ளைச் சோறு என்பார்கள். தற்காலத்தில் இது வலீமா என்ற பெயரில் தடல்புடலாக, பெருவிருந்தாக அரங்கேற்றப்படுகின்றது. இது மாப்பிள்ளை தனது மணவாழ்வுச் சடங்குகளைப் பூரணப்படுத்திவிட்டதை அறிவிக்கும் ஒரு நிகழ்வாகக் கணிக்கப்படுகின்றது. ஏழாம் நாள் இரவு பத்துமணியளவில் மாப்பிள்ளையையும் பெண்ணையும் நீராட்டுவார்கள். இது தண்ணிவார்த்தல் எனப்படுகின்றது. இதன்பின்னர் கால்மாறிச் செல்லுதல் இடம்பெறும்.
தொடரும்.