கிழக்கிலங்கை முஸ்லிம்களின் திருமண நடைமுறைகள் - பகுதி 3
Arts
11 நிமிட வாசிப்பு

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் திருமண நடைமுறைகள் – பகுதி 3

March 24, 2025 | Ezhuna

கிழக்கிலங்கை இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசமாகும். இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களின் பண்பாட்டுக்கூறுகள் மட்டக்களப்புத் தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளோடு பல விடயங்களில் ஒத்ததாகவும் வேறுப்பட்டும் காணப்படுவதோடு பிற முஸ்லிம் பிராந்திய கலாசாரகூறுகளிலிருந்தும் தனித்துவமாகக் காணப்படுகின்றன. கிழக்கிலங்கை முஸ்லிம்கள் கிழக்கின் பூர்வ பண்பாட்டுக்கூறுகளினை தமது மத நம்பிக்கைக்கு ஏற்ப மதத்தின் அடிப்படைக்கூறுகளில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பண்பாட்டுக்கட்டமைப்பை தகவமைத்துக் கொண்டனர். இப்பண்பாட்டுப் மறுமலர்ச்சியின் கூறுகளினை கலந்துரையாடுவதாக ‘கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள்’ என்ற இக்கட்டுரைத்தொடர் அமையும். இதன்படி, கிழக்கிலங்கை முஸ்லிம்களின் தாய்வழி குடிமரபு முறை, முஸ்லிம் குடிவழிமரபில் உள்ள மாற்றங்கள், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள் அவற்றில் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பாரம்பரிய பரிகார முறைகள், உறவுமுறைகள் மற்றும் குடும்ப அமைப்புகள், உணவுமுறைகள், ஆடை அணிகலன்களும் மரபுகள், வீடுகள் மற்றும் கட்டடக்கலை மரபுகள், பாரம்பரிய அனுஷ்டானங்கள், கலைகள் எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்தத் தொடர் பேசவுள்ளது.

உப்போடு புளியோடு முப்பத்து இரண்டு

திருமணமாகி அடுத்த நாள் மணமகன் சந்தைக்குச் சென்று சமையலுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் வீட்டுக்கு வாங்கி வருவார். இதனை உப்போடு புளியோடு முப்பத்திரெண்டும் வாங்கி வருதல் என்பார்கள். உப்பு, புளி, ஏலம், கறுவா, வாசனைத்திரவியங்கள், மீன், இறைச்சி, மாசி, கருவாடு, மரக்கறிகள், அரிசி, பருப்பு, சீனி, தேயிலை, வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு உள்ளிட்ட அத்தனை பொருட்களும் இதில் அடங்கியிருக்கும். இது மணமகனின் கௌரவத்தை வெளிப்படுத்துவதாக அமைகின்றது.

கால்மாறிச் செல்லுதல்

திருமணம் முடித்து ஏழாவது நாள் புதுமணத் தம்பதிகள் மாப்பிள்ளையின் வீட்டுக்குச் செல்வார்கள். இதனை கால்மாறிச் செல்லுதல் என்று அழைப்பார்கள். இந்நடைமுறை பிற்காலத்தில் மூன்றாம் நாளில் நடைபெற்றது. தற்காலத்தில் அதேநாள் நடைபெறும் வழக்கமும் உள்ளது.

மாப்பிள்ளை வீட்டார் கூட்டுவண்டி அல்லது வாகன ஏற்பாடு செய்து, சீர்வரிசைகளும் ஏற்பாடு செய்து வந்து பெண்ணுக்குப் புதிய ஆடைகள் அணிவித்து அழைத்துச் செல்வார்கள். பெண்வீட்டார் மாப்பிள்ளைக்கான புது ஆடைகளை ஏற்பாடு செய்வார்கள். இவ்வேளை இரு தரப்பினராலும் சீர்கள் செய்யப்படும். மாப்பிள்ளையின் தாயார் வீட்டுப் பாவனைப் பொருட்களுடன் பாய், தலையணை, சமையலறைப் பாவனைப் பொருட்கள், அலுமாரி போன்ற பொருட்களை வழங்கிவைப்பார் (கையூம்; 2016:145). பின்னர் மணமக்கள் பெண்வீட்டிற்கு உறவினர்கள் சகிதம் அழைத்துவரப்படுவார்கள். பொதுவாக தம்பதிகள் மூன்று நாட்களுக்கு மாப்பிள்ளையின் வீட்டில் தங்கி வருவதும் நடைமுறையில் இருந்துள்ளது. அப்போது பெண்கள் குரவை ஒலி எழுப்பி வரவேற்று ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்வார்கள். பின்னர் இனிப்புகளும், தேனீரும் பரிமாறப்படும். பின்னர் அனைவரும் கலைந்து செல்வார்கள்.

நாள்வட்டா கொண்டு வருதல்

இந்நடைமுறை பிற்காலத்தில் உருவாகியுள்ளது. அதாவது இது கால்மாறிச் சென்றவர்களின் சீர்களை மாப்பிள்ளையின் சகோதரிகள் பெண்வீட்டுக்கு கொண்டுவந்து கொடுக்கும் நிகழ்வாகும். இது கால்மாறிச் சென்று அடுத்தநாள் இடம்பெறும்.

ஆறுமாதச் சோறு

திருமணமாகி ஆறு மாதங்களுக்கு பெண்வீட்டாரே அவர்களுக்கு உணவளிப்பதைப் பொறுப்பேற்பார்கள். இது பெண் வீட்டாரின் கௌரவத்தை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. இதற்கான ஏற்பாடுகளை திருமணத்திற்கு முன்னரே ஏற்பாடு செய்துவிடுவார்கள்.

மணமக்களுக்கு விருந்து படைத்தல்

ஒவ்வொரு உறவினர்களும் மணமக்களை அழைத்து விருந்து கொடுப்பார்கள். இதற்காகச் செல்லும்போது இருவரும் கூறை ஆடைகளுடனும், தாலி உள்ளிட்ட அனைத்து ஆபரணங்களுடனும் செல்வது வழக்கமாகும். இவ்விருந்துகளில் நாட்டுக்கோழி, அமுக்கு முட்டை, புளியாணம், இறைச்சிக்கறி, கொக்கு, விரால் மீன், பொரியல் உள்ளிட்ட உயர்தரமான ஏழு கறியும் சோறும் வழங்கப்படும். சோறு பாற்சோறாகவே இருக்கும். இறுதியாகத் தயிரும் வாழைப்பழமும் கரையலுக்காக வழங்கப்படும். மாப்பிள்ளையும் பெண்ணும் விடைபெறும்போது விருந்தளித்தவர்கள், தங்கநகைகள் அல்லது பணமுடிச்சை அன்பளிப்பாக வழங்குவார்கள்.

வேறுபோதல்

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் மரபுப்படி பெண்பிள்ளைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பது பொது வழக்கமாக இருந்து வருகின்றது. ஆண்பிள்ளைகள் மணமுடித்த பெண்ணுக்குக் கட்டப்பட்ட வீட்டிலேயே வாழ்ந்து வருவார்கள்.

ஆறுமாதச்சோறு காலத்தின் பின்னர் மாப்பிள்ளை வீட்டார் ‘ஆக வேண்டிய அறுபத்திநாலும் உப்போடு கூடிய முப்பத்திரெண்டும்’ என்றவாறாக தனிக்குடுத்தனத்திற்கு தேவையான பண்டபாத்திரங்கள், உணவுப்பொருட்களைக் கொண்டுவந்து கொடுப்பார்கள். இதன்பின்னர் தம்பதிகள் தங்களுக்குத் தேவையானதைத் தாங்களே சமைத்து வாழ்வார்கள். பிற்காலத்தில் ஏற்பட்ட சமய சீர்திருத்த நடைமுறைகளின் பின்னர் பொதுவாக மாப்பிள்ளைமார் வீடு கட்டி, பெண் எடுக்கும் பண்பாடு வளர்ந்து வருகின்றது. அதேபோல கைக்கூலி சீதனமின்றி, மஹர் வழங்கி பெண் எடுக்கும் நடைமுறையும் அதிகரித்து வருகின்றது.

தலைப்பெருநாள் செப்பு

திருமணத்தின் பின் வருகின்ற முதலாவது பெருநாள் தலைப்பெருநாள் எனப்படும். தலைப்பெருநாளுக்கு பெண்வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்குச் செப்புப் பெட்டிகள் கொண்டு செல்வார்கள். இது பெருநாட் செப்பு எனப்படும். இதன் பின்னர் மணமக்கள் இரு குடும்பத்தினருக்கும் புத்தாடைகள் வாங்கிக் கொடுப்பார்கள்.

இவ்வாறு கிழக்கிலங்கையின் ஒரு திருமணமானது வருடம் முழுவதும் நடைபெறும் பல நிகழ்வுகளின் தொகுப்பாகக் காணப்பட்டுள்ளது.

கிழக்கிலங்கைத் தமிழர் – முஸ்லிம் திருமணப் பண்பாடுகள்

இலங்கையின் கீழைக்கரையின் மக்கள் பரம்பலை நோக்கும்போது தமிழர்களும், முஸ்லிம்களும் கலந்தே வாழ்ந்து வருகின்றனர். அதேவேளை தங்களது மார்க்கச் சிந்தனை வரம்புகளின் தனித்துவங்களையும் பேணி வருகின்றனர். இப்பண்பாட்டுக் கொடுக்கல் – வாங்கல் வரலாறு நெடுகிலும் இப்பிராந்தியத்தில் இடம்பெற்றே வருகின்றது.

திருமண நடைமுறைகளில் பல ஒத்த நடைமுறைகளை அவதானிக்க முடிகின்றது. அதேவேளை அவற்றிடையே நுண்ணிய வேறுபாடுகளும் தனித்துவங்களும் காணப்படுகின்றன. இரு இனங்களின் திருமணங்களிலும் திட்டக்கட்டுதல், பெண்பார்த்தல், நாள்குறித்தல், வட்டாவைத்து அழைத்தல், பால்தப்புதல் அல்லது மணமக்களுக்குத் தண்ணீர்வார்த்தல், பந்தக்கால் நடுதல் அல்லது கன்னிக்கால் நடுதல், தாலிகட்டுதல், கூறை மாற்றுதல், ஆரத்தி, குலவை, மாப்பிள்ளைக்குக் குடைபிடித்தல், கால்கழுவுதல், மைத்துனருக்குப் பரிசு வழங்குதல், கால்மாறிச் செல்லுதல், ஆறுமாதச்சோறு போன்ற அம்சங்கள் காணப்படுகின்றன.

சொத்துகள், ஆதனங்கள் முக்குவர்களின் வழமையைப் போன்று மருமக்கள் தாயமுறையின் பெண் வாரிசுகளுக்கே அதிகம் வழங்கப்படுகின்றன. மற்றும் ஒரு தாய்வழிக் குடிக்குள் திருமணங்கள் நடைபெறுவதில்லை.

இரு சமூகங்களிலும் சுப நிகழ்வுகளுக்காக வளர்பிறை பார்ப்பது தற்போதும் நடைமுறையில் உள்ளது. எனினும் நாள் கணிப்பதில் முஸ்லிம்களிடையே இஸ்லாமிய நாட்காட்டியும், தமிழர்களிடையே பஞ்சாங்கமும் நடைமுறையில் உள்ளது.

சாணைக்கூறை அல்லது சாணைக்குறித் திருமண வழக்கும் இரு இனத்தவர்களிடையேயும் இருந்து வந்துள்ளது. சகோதரனிற்குப் பிள்ளை பிறந்தவுடன் பிள்ளையைச் சுத்தம் செய்து மாமி முறையானவர் பிள்ளையின் வயிற்றுக்கு மேலே ஒரு வெள்ளைச்சீலையைப் போர்த்தி, இப் பெண்பிள்ளைக்கு எனது மகனே திருமணத்திற்கு முறையானவர் என்று கூறி, திருமண உரித்தைக் கோருவது சாணைக்குறித் திருமணம் எனப்படும். இந்நடைமுறை தற்காலத்தில் வழக்கத்தில் இல்லை. இரு சமூகங்களிலும் கடத்தல் திருமணங்கள், பெற்றோர் சம்மதமின்றிய திருமணங்கள், மதம்மாறித் திருமணம் செய்தல் என்பவை வெறுக்கப்பட்டவையாகவே காணப்பட்டுள்ளன. மற்றும் தாய்வழி மச்சான் அல்லது தந்தைவழி மச்சான் முறையானவரைத் திருமணம் செய்யும்முறையும் காணப்படுகின்றது. இரு சமூகங்களிலும் சித்தப்பா, பெரியப்பா, சித்தி, பெரியம்மா ஆகியோரின் பிள்ளைகளை மணமுடிப்பது தவிர்க்கப்பட்டே வந்துள்ளது. அதேபோல ஆணின் வயது பெண்ணின் வயதைவிட அதிகமாக அமையுமாறே மணமக்களைத் தேர்ந்து கொள்கின்றார்கள்.

திருமணப் பொருத்தம் பார்த்தலின் போது ஒருவருடைய பிறந்த நேரம், இடத்தை வைத்து கிரக நிலைகளின் கணக்கீட்டுடன் ஒவ்வொருவருக்கும் பிறந்த இராசி, நட்சத்திரம் என்பன தீர்மானிக்கப்பட்டு அவர்களுடைய வாழ்கைக்காலம் எதிர்வுகூறப்படும். இதை சாதகம், குறிப்பு என்றும் வழங்குவார்கள். ஆண் – பெண் இருவருடைய குறிப்புகளும் சோதிடர்களிடம் கொடுக்கப்பட்டு திருமணப் பொருத்தம் பார்க்கும் வழக்கம் தமிழர்களிடையே வழக்கத்தில் உள்ளது. கிரகப் பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம், இராசிப் பொருத்தம், யோனிப்பொருத்தம், கணப்பொருத்தம், இரச்சுப் பொருத்தம், வசியப்பொருத்தம் உள்ளிட்ட பதினான்கு பொருத்தங்களும் ஒருங்கே அமையப்பெறுவதையே அனைவரும் விரும்புவார்கள். இம்முறை ஆரம்பகாலத்தில் இல்லாதிருந்து பிற்காலத்தில் வழக்கத்திற்கு வந்ததாக தில்லைநாதன் குறிப்பிடுவார் (2015: 199). ஆனால் முஸ்லிம்களிடையே இவ்வாறான நடைமுறை இல்லை. இவர்களின் மார்க்க வழக்கத்தின்படி சோதிடம் பார்ப்பதும், குறி கேட்பதும் தவிர்க்கப்பட்டிருப்பதால், அவர்கள் பெண்ணின் குடும்ப விபரம், சொத்து விபரங்கள், தொழில், கல்வி, மார்க்க அறிவு, அழகு என்பவற்றை விசாரித்துப் பெண்களைத் தேர்வு செய்வார்கள்.

சாதிக் கட்டுப்பாடுகள் கிழக்கிலங்கைச் சோனகர்களின் முஸ்லிம் திருமணங்களில் காணப்படாது. எனினும் குடும்பத்தின் சொத்துகளைப் பேணும் பொருட்டு சில குடும்பங்கள் அகமண முறைகளைப் பேணி வந்துள்ளனர்.

முஸ்லிம் ஆண்கள் விருத்தசேதனம் செய்வது கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. இது பராயமடைவதற்கு முன்னதாகவே செய்யப்படுகிறது. ஆண் பராயமடைந்ததை வெளிக்காட்ட கடுக்கன் அணிதல், கன்னக் குடுமியை பின் குடுமியாக கட்டுதல் போன்ற நடைமுறைகள் மட்டக்களப்புத் தமிழர்களின் பாரம்பரிய மரபுகளில் காணப்பட்டுள்ளது. எனினும் இவ்வழக்கம் முஸ்லிம்களிடம் காணப்படவில்லை.

திட்டக்கட்டுதல் என்பதை தமிழர், திருமணம் கேட்டுப் போதல் என்பார்கள். இங்கு தங்க மோதிரமொன்று மாப்பிள்ளைக் கொழுக்கட்டைக்குள் வைத்து, மாப்பிள்ளைக்காக அவித்துக் கொண்டு செல்லப்படுவதுண்டு. இந்நடைமுறை முஸ்லிம்களிடம் இல்லை. ஆயினும் மாப்பிள்ளைக்கு அடையாளம் போடுவது இடம்பெறுவதுண்டு. இரு சமூகங்களிடையேயும் தாலி கட்டுவது வழக்கத்தில் இருக்கின்றது. எனினும் முஸ்லிம் திருமணங்களில் இது ஒரு அடையாள அணிகலனாக மட்டுமே கருதப்படுகின்றது. தமிழர் திருமணங்களில் காணப்படும் மாங்கல்யத்தாலி வடிவிலோ அல்லது புலிப்பல் தாலி வடிவிலோ தாலிகள் அணியப்படுவதில்லை. தாலிக்குப் பொன்னுருக்குதல் என்ற சடங்கும் முஸ்லிம்களிடம் வழக்கில் இல்லை.

சுமங்கலி பூசை, குலதெய்வ வழிபாடு, சுபமுகூர்த்தம் பார்த்தல், பொன்னுருக்குதல், சமாவர்த்தனம், கன்னி ஊஞ்சல், மாலைமாற்றுதல், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், பாணிக்கிரகணம், சப்தபதி, நலங்கு வைத்தல், ஸதாலிபாகம், தம்பதிபூசை, ஆசிர்வாதம், மெட்டி அணிவித்தல், கன்னிகாதனம் போன்றவை தமிழர் திருமணங்களில் மாத்திரம் காணப்படும் தற்கால நடைமுறைகளாகவுள்ளன.

இலங்கையின் பிறபகுதி முஸ்லிம் திருமண நடைமுறைகள்

வடமத்திய மாகாண திருமண நடைமுறைகள் கிராமத்திற்குக் கிராமம் வேறுபடுகின்றன. இவற்றில் சில அம்சங்கள் கிழக்கிலங்கைத் திருமணங்களை ஒத்ததாகவும், வேறுபட்டும் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக அனுராதபுர மாவட்டத்தில் மாப்பிள்ளை வேறுபோதல் (தனிக்குடுத்தனம்) செல்லும்போது அவருக்குத் தொழில் செய்து பிழைப்பதற்கான ஆயுதங்களையும் கருவிகளையும் பெண்வீட்டில் பெற்றுக்கொள்ளும் மரபு காணப்பட்டுள்ளது. கத்தி, கோடாரி, கருக்கத்தி, பாக்குவெட்டி, மண்வெட்டி, காடு வெட்டும் கத்தி என்பவற்றை பெற்றுச்செல்லும் நடைமுறை காணப்பட்டுள்ளது.

கிழக்கில் வெள்ளை நீத்துச் சுண்ணாம்பு அடிப்பது போல, அனுராதபுரப் பகுதிகளில் சிவப்புக் களி மண்ணால் மெழுகி அதில் அரிசி மாவைத் தோய்த்தெடுத்து அதன்மூலம் அலங்காரங்களை இடுவார்கள். இது மாலையடித்தல் எனப்படும். மணவறைச் சோடனையில் மாப்பிள்ளை, பெண் அமரும் சுவரில் இரு தென்னை மரங்களும் குத்துவிளக்கும் வரையப்பட்டிருக்கும். பந்தக்காலினை ‘மாப்பிள்ளைக் கப்பு’, ‘மாப்பிள்ளைத் தூண்’ என்று அழைப்பதாகவும் இதற்காக பால்வரக்கூடிய மரங்களின் கிளைகளைத் தேர்வு செய்து, அதனை நடுமிடங்களில் பாலும், வெள்ளிக்காசும், அறுகம்புல்லும் போட்டு கம்பை நட்ட பின்னர் சேலைகளால் அலங்கரிப்பதும் நடைமுறையில் இருந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது. கூறைச் சேலையுடன் மாமிக்கும் ஒரு சேலையும் பவுண் முடிச்சும் வைப்பது இங்கு வழக்கமாய் இருந்திருக்கின்றது. அதேபோல ஆரத்திகளிலும் அழகு ஆரத்தி, பால் ஆரத்தி, செம்புக்குட ஆரத்தி, பொன்மணி ஆரத்தி எனப் பலவகைகள் காணப்பட்டுள்ளன. இவைதவிர மோதிரக்காசு, காவின்பால், பிலால் விடுதல், மடிமாங்காய், புளிச்சோறு கொடுத்தல் என்பன இடம்பெற்றுள்ளன. இவை கிழக்கிலங்கைத் திருமணங்களிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றன.

தற்காலத் திருமண நடைமுறைகள்

முஸ்லிம்களின் தற்காலத் திருமண நடைமுறைகள் பாரம்பரிய நடைமுறைகளிலிருந்து பெரிதும் மாற்றம் கண்டுள்ளது. போக்குவரத்து வசதிகள், மின்சாரம் போன்ற வசதிகளின் வளர்ச்சியினாலும், பாரம்பரியத் தொழில்முறைகளிலிருந்து நிறுவனமயப்பட்ட தொழில்முறைகளில் மக்கள் அதிக கவனம் செலுத்துவதனாலும், மார்க்கக் கிரந்தங்கள் தாய்மொழியில் வெகுவாகக் கிடைப்பதனாலும் திருமண நடைமுறைகள் பண்பாட்டுப் படிமலர்ச்சியின் இன்னொரு கட்டத்தை அடைந்துள்ளன. பல்வேறு மரபான திருமண நடைமுறைகள் வழக்கிலிருந்து மறைந்துவிட்டன. குறித்த சில கிராமங்களில் மாத்திரமே இன்னும் கரிசனையோடு இவை பேணப்பட்டு வருகின்றன.

திருமணப்பேச்சு வார்த்தைகள், திட்டக்கட்டுதல் என்பன மிக எளிமையாக நடத்தப்படுவதுடன், அவை இரு குடும்பங்களுக்குள்ளாகவே குறுக்கப்பட்டு நடைபெறுகின்றன. மணப்பெண், மாப்பிள்ளையின் ஆடை அலங்காரங்கள் மேலைத்தேய, வடஇந்திய, அரேபியக் கலப்பில் நடைபெறுகின்றன. இவை முற்றுமுழுதாக இரு குடும்பங்களின் முடிவுகளிலுமே தீர்மானிக்கப்படுகின்றன. மாப்பிள்ளை துருக்கித் தொப்பி அணிதல் அரிதாகி வருகின்றது. சாரம் அணிவதும், செருப்பு அணிவதும் தவிர்க்கப்பட்டு, ‘கோட் சூட்’டுடன் சப்பாத்து, கழுத்துப்பட்டி அணிவது நடைமுறையில் உள்ளது.

மணப்பெண் கூறைச்சேலையாக காஞ்சிபுரம் பட்டு, மோகினிப்பட்டு, பட்டயச்சேலை என்பவற்றை அணிவதற்கு மாற்றாக ஹபாயா, காக்ரா சோளி, ராஜஸ்தானிய லெஹெங்கா உள்ளிட்ட ஆடைகளை அணிகின்றார். மணமேடை ஆடையாக மேலைத்தேயப் பாணியிலான நீளமான வெள்ளை ஆடைகளையும் அணிகின்றார். செப்புப்பெட்டிகள், அன்பளிப்புப் பொருட்கள் புதிய தற்கால உணவுப் பொருட்களாகவும், அவற்றைப் பொதிசெய்தல் ஒரு தொழிற்துறையாகவும் விருத்தி கண்டுள்ளது. அதேபோல பெண் – மாப்பிள்ளை வீடுகளிற்குப் பரிமாறப்படும் செப்புகளும் பாரம்பரியப் பலகார வகைகளும் மாறியுள்ளன. மணமேடை அலங்காரங்கள் விமரிசையாகச் செய்யப்படுகின்றன. இவை ஆரம்பகாலங்களில் மிக எளிமையானவையாக இருந்தன. தற்காலத்தில் வண்ண விளக்குகள், மலர்கள், பல்வண்ணத் துணிகளைக் கொண்டு அலங்கரிக்கின்றனர். ஆரம்பத்தில் திருமண நிகழ்வுகளை நிழற்படங்களில் பதிவு செய்தனர். பின்னர் காணொலிகளில் பதிவு செய்தனர். தற்காலத்தில் மீண்டும் நிழற்படங்கள் மாத்திரம் எடுக்கும் வழக்கமே நடைமுறைக்கு வந்துள்ளது. இதுவும் ஒரு புதிய தொழிற்துறையாக விருத்தி கண்டுள்ளது. திருமண அழைப்பிதழ் பண்பாடும் புதிய வடிவமைப்புகளிற்கு ஏற்றதாக துரிதமாக மாறி வருகின்றது.

சில குறிப்புகள்

ஆரம்ப காலங்களில் மஹர் தொகையாக 11, 101, 1001 ரூபாய்கள் அல்லது பத்தாயிரத்தொரு ரூபாய் ஆகியனவே வழங்கப்பட்டு வந்துள்ளன. தொகையில் ஒற்றைப்படையைப் பேணுவதற்காக இந்நடைமுறை தோன்றியது என்றும், நாணயத்தாள்கள் பறந்துவிடாமல் இருப்பதற்காக பாரத்திற்கு ஒரு ரூபா நாணயக்குற்றியை வைப்பதிலிருந்து இந்நடைமுறை தோன்றியது என்றும் இதற்கான இரு விதமான விளக்கங்களைக் கொடுப்பதைக் காணமுடிகின்றது.

திருமணப்பதிவுகள் கடுத்தங்களாகப் பதியப்பட்ட போதும், 1926ஆம் ஆண்டு விவாக, விவாகரத்துத் திருத்தச் சட்டத்தின் பின்னரே திருமணப்பதிவுகள் கட்டாயமாக்கப்பட்ட நடைமுறை தொடர்ந்து அமுலுக்கு வந்துள்ளது.

இமாம் ஹூஸைன் (ரழி) கொலை செய்யப்பட்ட மாதத்தை முஸ்லிம்கள் படுகள மாதமென்று அழைப்பதோடு அம்மாதங்களில் திருமணம், புதுமனைபுகுதல், கத்னா என்பவற்றைச் செய்வதைத் தவிர்த்துவரும் வழக்கம் காணப்படுகின்றது. திருமணம் முடித்த முதல்நாளிரவு மணமகனுக்கும் மணமகளுக்கும் ஒரே தட்டிலேயே உணவு வழங்கப்படும்.

முடிவுரை

இக்கட்டுரை கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகளில் திருமண நிகழ்வுகளின் அசைவினை எடுத்துக்காட்ட முயன்றுள்ளது. திருமணப் பண்பாட்டுப் படிமலர்ச்சியை, திருமணத்தின் ஒவ்வொரு அம்சங்களாக மேலும் நுணுகிப் பார்க்கமுடியும் என்பதையும், ஒவ்வொரு சடங்கினதும் குறியீட்டு ரீதியான தத்துவார்த்த விளக்கங்களையும் மேலும் ஆய்வுக்குட்படுத்த முடியும் என்பதனையும் குறிப்பிட விரும்புகின்றேன்.

இலங்கையின் பிற பாகங்களிலுள்ள முஸ்லிம் திருமண நடைமுறைகளின் அம்சங்களோடு ஒப்பிடுகையில், கிழக்கிலங்கை முஸ்லிம் திருமணங்கள் வேறுபட்டுத் தென்படுகின்றன. இப்பிரதேச மக்கள் தமிழர் திருமண அம்சங்களினையும், மத்தியகிழக்கு, இந்தியத் துணைக்கண்டத்தின் சேரநாடு, வடஇந்தியா, தென்னிந்தியா ஆகிய பிரதேசங்களின் பண்பாட்டம்சங்களினையும் பிரதிசெய்து, மார்க்கச் சிந்தனைகளினைக் கொண்டு தமக்கான திருமணக் கலாசாரத்தை வடிவமைத்துக் கொண்டுள்ளமையையும் காணமுடிகின்றது.

உசாத்துணைகள்

  1. Bawa, A., & Bawa, B. W. (1888). The Marriage Customs of the Moors of Ceylon. The Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society of Great Britain & Ireland, 10(36), 219–233. http://www.jstor.org/stable/45377244
  2. Chitty, S. C. (1836). An Essay Descriptive of the Manners and Customs of the Moors of Ceylon. The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, 3(2), 337–349. http://www.jstor.org/stable/44011993
  3. McGilvray, Dennis. (2014). Matrilocal Marriage and Women’s Property among the Moors of Sri Lanka. 10.1093/acprof:oso/9780198092063.003.0005.
  4. The Muslim Heritage of Eastern Sri Lanka. (2011). Sri Lanka: Muslim Women’s Research and Action Forum.
  5. அமீன், எம்.ஐ.எம். (2000). இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும் (1870-1915). அல் ஹஸனாத் பதிப்பகம், ஹெம்மாதகம.
  6. அனஸ், எஸ்.எஸ்.எம். (1999). வாழ்வியலும் பண்பாடும்: அநுராதபுர மாவட்ட முஸ்லிம்கள். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கொழும்பு.
  7. ஏறாவூர் வரலாறு. (2005). ஏறாவூர் வரலாற்று ஆய்வு மையம், ஏறாவூர்.
  8. கையூம், எம்.எல்.ஏ. (2016). நெற்பிட்டிமுனையின் வரலாறும் பண்பாட்டியலும்.
  9. சமீம், ஏ.எம். (1997). இலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள். கலகெதர.
  10. சலீம், ஏ.ஆர்.எம். (1990). அக்கரைப்பற்று வரலாறு. ஹிறா பள்ளிகேசன்ஸ்.
  11. சலீம், ஏ.ஆர்.எம். (1997). அக்கரைப்பற்று வரலாறு.
  12. தில்லைநாதன், சா. (2015). மட்டக்களப்புத் தமிழர் பண்பாட்டு மரபுகள்.
  13. மஜீட், ஏ. மத்தியகிழக்கு முதல் மட்டக்களப்பு வரை.
  14. மஜீட், ஏ. (2001). தென்கிழக்கு முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு.
  15. முத்துமீரான், எஸ். (2013). கிழக்கிலங்கை நாட்டுப்புற முஸ்லிம்களின் பூர்வீகமும் வாழ்வும் வாழ்வாதாரமும்.
  16. லறீப், சுலைமான். (2015). இறக்காமம் வரலாறு: சமூக வாழ்வியல்.
  17. நற்பிட்டிமுனை முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும். (2023).
  18. நிந்தவூர் வரலாறும் வாழ்வியலும். (20215).
  19. றமீஸ், அ. (2020). சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும். சம்மாந்துறை வெளியீட்டுப் பணியகம்.
  20. ஜெமீல், எஸ்.எச்.எம். (1995). கிராமத்து இதயம். சாய்ந்தமருது.
  21. ஹனீபா, இ. (2020). ஈழத்து நாட்டார் பாடல் மரபில் கவிகள். அக்கரைப்பற்று.
  22. ஹனீபா, இ. (2020). கிழக்கிலங்கை கவி மரபு. அக்கரைப்பற்று.
  23. ஸம்சுத்தீன், மௌலானா ஜே.எம். (1997). வாழ்வியலும் பண்பாடும்: அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கொழும்பு.

ஒலிவடிவில் கேட்க


About the Author

எம். ஐ. எம். சாக்கீர்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைச் சேர்ந்த முஹம்மட் சாக்கீர் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டம் பெற்றவர் தற்போது மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராக பணிபுரிகிறார்.

வரலாறு, பண்பாட்டு ஆய்வு, நாட்டாரியல், ஆவணப்படுத்தல் போன்ற துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். இவரது 21வது வயதில் 'சம்மாந்துறை பெயர் வரலாறு' என்ற ஆய்வு நூலை வெளியிட்டார், சம்மாந்துறை பெரியபள்ளிவாசல் வரலாற்று ஆவணப்படம் போன்றவற்றிற்கு வசனம் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் இன்கிலாப் சஞ்சிகை மீளுருவாக்க குழுவின் முன்னோடியான செயற்பாட்டாளரான இவர் 2019 இல் வெளியான சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும் எனும் நூலின் பதிப்பாசிரியர்களிலொருவரும் கட்டுரையாசிரியருமாவார். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, கலை, பண்பாடு, முதலான கருபொருள்களில் கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்