கிழக்கிலங்கை முஸ்லிம்களின் திருமண நடைமுறைகள் - பகுதி 1
Arts
16 நிமிட வாசிப்பு

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் திருமண நடைமுறைகள் – பகுதி 1

February 17, 2025 | Ezhuna

கிழக்கிலங்கை இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசமாகும். இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களின் பண்பாட்டுக்கூறுகள் மட்டக்களப்புத் தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளோடு பல விடயங்களில் ஒத்ததாகவும் வேறுப்பட்டும் காணப்படுவதோடு பிற முஸ்லிம் பிராந்திய கலாசாரகூறுகளிலிருந்தும் தனித்துவமாகக் காணப்படுகின்றன. கிழக்கிலங்கை முஸ்லிம்கள் கிழக்கின் பூர்வ பண்பாட்டுக்கூறுகளினை தமது மத நம்பிக்கைக்கு ஏற்ப மதத்தின் அடிப்படைக்கூறுகளில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பண்பாட்டுக்கட்டமைப்பை தகவமைத்துக் கொண்டனர். இப்பண்பாட்டுப் மறுமலர்ச்சியின் கூறுகளினை கலந்துரையாடுவதாக ‘கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள்’ என்ற இக்கட்டுரைத்தொடர் அமையும். இதன்படி, கிழக்கிலங்கை முஸ்லிம்களின் தாய்வழி குடிமரபு முறை, முஸ்லிம் குடிவழிமரபில் உள்ள மாற்றங்கள், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள் அவற்றில் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பாரம்பரிய பரிகார முறைகள், உறவுமுறைகள் மற்றும் குடும்ப அமைப்புகள், உணவுமுறைகள், ஆடை அணிகலன்களும் மரபுகள், வீடுகள் மற்றும் கட்டடக்கலை மரபுகள், பாரம்பரிய அனுஷ்டானங்கள், கலைகள் எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்தத் தொடர் பேசவுள்ளது.

பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் பண்பாடு பற்றிக் குறிப்பிடுகையில், “பண்பாடு என்பது உண்மையில் மானிடவியல், சமூகவியல் நிலைப்பட்ட ஒரு வாழ்வியற் களம். அன்றாட வாழ்க்கை உறவுமுறைகள், விவாகம், பிள்ளை வளர்ப்பு, மரணம், உணவுவகை, ஆடை – ஆபரணங்கள், வைபோகம், சடங்கு இவற்றினூடாகத் தோன்றுகின்ற ஒரு மனநிலை” என்பார்.

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டு அடிப்படைகளை இரண்டாகப் பகுக்கலாம்.

  1. உலகுதழுவிய இஸ்லாமிய மார்க்கத்தின் வாழ்வொழுங்கு சார்ந்த விடயங்கள் – இவை பண்பாடுக்கூறுகளிற்கான அடிப்படை விதிகளை வழங்குகின்றன.

எடுத்துக்காட்டாக: உண்ணும்போது, நகம் வெட்டும்போது, உறங்கும்போது பின்பற்றும் நடைமுறைகள் போன்று அனைத்து வாழ்வியலம்சங்களுக்குமான பொதுவான வரையறைகள்.

  1. பிராந்தியப் பண்பாட்டுக்கூறுகள் சார்ந்தவை – இவை தாம் வாழுகின்ற பிரதேசத்தின் காலநிலை, புவியியல் காரணிகளாலும் பின்பற்றும் நடைமுறைகளாலும் மரபாகப் பின்பற்றப்பட்டு வருபவை. 

இப்பண்பாட்டுக்கூறுகள் எவையும் பிறப்புச் சார்ந்து வருபவையன்றி; சமூகத்தின் ஒரு அங்கத்தவராகக் கற்றுக்கொள்வதாலும், பின்பற்றுவதாலும் பெறப்படுகின்ற விடயங்களும் நடத்தைகளுமாகும். கிழக்கிலங்கை முஸ்லிம்களின் திருமணப் பண்பாடுகள் சார்ந்து இக்கட்டுரைத் தொடரில் வரும் வழக்கங்களும் மேலுள்ளவாறாகவே காணப்படுகின்றன.

ஏனைய மனித சமுதாயங்களைப்போல இவர்களின் பண்பாட்டுப் படிமலர்ச்சியிலும் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே காணப்படுகின்றன. அதிபண்பட்ட இயல்புகளை (Ideal) நோக்கி நகர்வதே இலட்சியமான பண்பாட்டின் இலக்காகும். அதேவேளை இவ்வியல்புகளை பக்கச்சார்பான அளவுகோல்களால் அளவிடமுடியாது என்பதும் குறிப்பிடவேண்டியது.

இக்கட்டுரை, வழக்கொழிந்ததும் நடைமுறையிலிருப்பதுமான திருமண நடைமுறைகளைப் பற்றி உரையாடுகின்றது. இவற்றின் சரி – பிழை, மூடநம்பிக்கைகள் – மரபுகள் பற்றித் தீர்ப்பு வழங்குவதாக இது அமையாது; அன்றி, மூதாதையர்களின் வாழ்வொழுங்கிலிருந்து பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்ட நடைமுறைகளின் பதிவாகவே காணப்படும்.

இஸ்லாமியத் திருமண நடைமுறைகள்

“உங்களில் யார் பராமரிப்புச்செலவுக்குச் சக்தி பெற்றுள்ளாரோ அவர் திருமணம் செய்துகொள்ள வேண்டும். திருமணம், பார்வையைத் தாழ்த்துவதோடு, வெட்கத்தலங்களையும் பாதுகாக்கிறது” என்று முஹம்மது நபிகள் (ஸல்) போதித்துள்ளார்கள் (நூல்: புகாரி – 1905, 5065, 5066).

இஸ்லாம், திருமணத்தை வலியுறுத்துகின்ற அதேவேளை துறவறத்தை அனுமதிக்கவில்லை.

மணமகன், மணமகள், வலி (மணப்பெண்ணின் பொறுப்புதாரர்), ஈஜாப் – கபூல் (திருமண ஒப்பந்த மொழிதல்), இரு சாட்சிகள் ஆகியவை இஸ்லாமியத் திருமணத்திற்கான அவசியமான அம்சங்களாகும். திருமண ஒப்பந்தத்தின் பின்னர் மணமகன் மணமகளுக்கான மணக்கொடையை (மஹர்) வழங்குவதும் கட்டாயமானது. இவைதவிர திருமணம் எளிமையாக நடாத்தப்படுவதும், திருமண விருந்து (வலீமா) கொடுக்கப்படுவதும் விரும்பப்படுகின்றன.

முஸ்லிம் திருமணங்கள், இவற்றோடு பல்வேறு கலாசார அம்சங்களை இணைத்துக்கொண்டுள்ளன. இவை சுதேசியப் பண்பாடுகளுடன் அராபிய, பாரசீக, தென்னிந்தியப் பண்பாட்டுக்கூறுகள் பலவற்றினைக் கொண்டமைந்த செழுமையானதும் தனித்துவமானதுமான நடைமுறைகளாகும்.

திருமண நிகழ்வு பல்வேறு வழங்கங்களை கொண்ட ஒரு தொடர் வைபவமாகும். இவற்றைக் கீழ்வரும் உபதலைப்புகளில் ஒவ்வொன்றாக நோக்கலாம்:

  • கலியாணம் பேசுதல்
  • அடையாளம் போட்டு வைத்தல்
  • திட்டக்கட்டுதல்
  • பெண்பார்க்கப் போதல்
  • மதுரமொண்டி (மருதாணி) போடுதல்
  • கலியாண அழைப்பு
  • திருமண வீட்டு ஆயத்தங்கள்
  • காவின் எழுதுதல்
  • ஒலி (வலி) சொல்லுதல்
  • மாப்பிள்ளை அழைத்து வருதல்
  • தாலிகட்டுதல்
  • கூறை மாற்றுதல்
  • மறவணை அலங்காரம்
  • பஜா (திருமண வீட்டு இசை நிகழ்ச்சிகள்)
  • மறவணைச்சாப்பாடு
  • பச்சப்படி கொண்டுசெல்லல்
  • நாள்வட்டா கொண்டுபோதல்
  • வட்டா கொண்டுபோதல்
  • கால்மாறிப் போதல்
  • ஆறுமாதச் சோறு

கிழக்கிலங்கையில் முஸ்லிம்கள் திருமணத்தை ‘கலியாணம்’ என்றே அழைப்பர். திருமண அழைப்பிதழ்களில் ‘நிக்காஹ்’ என்ற அரபுச் சொல்லையும், ஆவணங்களில் ‘விவாகம்’ என்ற சொல்லையும் பயன்படுத்துகின்றனர். ஆயினும் தற்கால அழைப்பிதழ்களில் ‘திருமணம்’ என்ற சொல்லே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.

இஸ்லாமிய வரன்முறைகளுக்கு அமைவாக, உடன்பிறந்த சகோதர சகோதரிகளும் பால்குடிச் சகோதரர்களும் திருமணம் முடிக்கத் தடைசெய்யப்பட்டுள்ள அதேவேளை, தாயின் சகோதரர்களின் பிள்ளைகளையும், தந்தையின் சகோதரர்களின் பிள்ளைகளையும் திருமணம் முடிக்க அனுமதி உள்ளது. எனினும் கிழக்கிலங்கையில் தாயின் சகோதரியின் (பெரியம்மா – சின்னம்மா) பிள்ளைகளையும், தந்தையின் சகோதரனின் (பெரியப்பா – சித்தப்பா) பிள்ளைகளையும் திருமணம் முடிக்கும் வழக்கம் பொதுவாக இல்லை. மிக அரிதாக சில திருமணங்களே நடைபெற்றுள்ளன. இதைக்குறிக்கும் ‘மாச்சக்காரனுக்கு சாச்சாட்ட கலியாணமாம்’ என்ற பழமொழியொன்றும் கிழக்கிலங்கையில் வழக்கில் உள்ளது.

அதேவேளை முஸ்லிம் தாய்வழிக்குடிகளில் ஒரே குடிக்குள் திருமணம் முடிப்பதும் தவிர்க்கப்பட்டு வந்துள்ளது. ஒரே குடியினர் சகோதர உறவுக்காரர்களாகவே பழகி வந்துள்ளனர். மேலும், மணமகனின் சகோதரியை மணமகளின் சகோதரருக்கு திருமணம் செய்து வைத்தலை, அதாவது இரண்டு குடும்பங்களும் தங்களுக்குள் இன்னொரு திருமண உறவை ஏற்படுத்திக்கொள்ளுதலை ‘குண்டாமாத்து’ என்று அழைப்பர். இது அரிதாகச் சில குடும்பங்களில் நடந்தாலும், இவ்வகைத் திருமணங்களை மக்கள் பெரிதும் விரும்புவதில்லை.

மாமா, மாமியின் பிள்ளைகளை திருமணம் முடிக்கும் வழக்கம் அதிகமாகக் காணப்பட்டுள்ளது. இதனை, ‘வைக்கோலில் விளைந்ததை வைக்கோலில் கட்டுதல்’ என்பர். பரம்பரைச் சொத்துகள் குடும்பத்துக்குள்ளேயே பேணப்படவேண்டும் என்பதற்காக குடும்பத்திற்குள்ளேயே திருமணம் முடிப்பதை இவ்வாறு குறிப்புணர்த்துவார்கள்:

“கலியாணம் கேட்டு கனக்க இடம் வந்திரிக்கி
மாமி மகள நான் மணப்பதுதான் சத்தியங்கா!”

விவாக வயது பெரும்பாலும் குறைவாகவே காணப்பட்டுள்ளது. பெண்கள் 7 – 16 வயதிற்குள்ளும், ஆண்கள் 15 – 20 வயதிற்குள்ளும் திருமணம் செய்திருப்பார்கள்.

கலியாணம் பேசுதல்

திருமணப் பேச்சுவார்த்தைகள் சம்பந்தம் பேசுதல் என வழங்கப்படுவதோடு, மணமக்களின் பெற்றோருக்கிடையிலான உறவுமுறை ‘சம்பந்தி’ முறை என்றும் வழங்கப்படும். செல்வாக்கு, ஆதனபாதனங்கள், கைக்கூலிச் சீதனம், தாயதிகள், மந்தைகள் பற்றியும்; பெண்ணின் குணநலன்கள், கல்வி, மார்க்கப்பற்று, அழகு பற்றியும் தங்களுக்குத் தெரிந்த குடும்ப நண்பர்கள் மூலம் மாப்பிள்ளையின் வீட்டுக்குப் பெண்ணின் குடும்பம் செய்திகளை அனுப்பி திருமண ஒப்புதலுக்கானதும், முறைப்படி பேச்சுவார்த்தை நடத்துவதற்குமான அடியை முதலில் எடுப்பர். மாப்பிள்ளை வீட்டார் இரண்டு மூன்று நாட்கள் தாமதித்தபின் தங்களது முடிவையும் அறிவிப்பர்.

இந்தத் தாமதகாலத்தில் பெண் வீட்டையும், பெண்ணையும் பார்த்து வருவதற்காக மாப்பிள்ளை வீட்டார் சில பெண்களை அனுப்பிப் பரிசோதிப்பார்கள். அவர்கள் வீடு, வாசல், அடுக்களை, அங்க லட்சணங்கள், விருந்தோம்பல் என அத்தனையும் நோட்டமிட்டு மாப்பிள்ளை வீட்டுக்கு அறிவிப்பார்கள். இவற்றில் திருப்தியடைந்தால் மாப்பிள்ளை வீட்டார்கள் பெண் வீட்டாருக்கு செய்தி அனுப்பி, திட்டக்கட்டுவதற்கு நாள் சொல்லி அனுப்புவார்கள்.

திருமணத்தை சில மாதங்கள் தள்ளி நடத்துவதாக உத்தேசம் இருந்தால், மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் பெண்வீட்டுக்குச் சென்று ஒரு மோதிரம் அல்லது கைப்பட்டியை அணிவித்து சில பரிசுப் பொருட்களையும் வழங்கிவிட்டு உபசாரங்களின் பின்னர் விடைபெறுவார்கள். இது பெண்ணிற்கு அடையாளம் போடுதல் எனப்படும். இது, குறித்த பெண்ணின் வீட்டிற்கும் மாப்பிள்ளையின் வீட்டிற்கும், இதற்குப் பின்னர் யாரும் திருமணப் பேச்சுவார்த்தைகளை நடத்தச் செல்லத் தேவையில்லை என்பதை குறிப்புணர்த்துவதற்காக நடைபெறுவதாகும்.

திட்டக்கட்டுதல் (Engagement)

திட்டக்கட்டுதல்/ திட்டங்கட்டுதல் என்பது முறையாக திருமண நாளினை ஊருக்கு அறிவிக்கும் நிகழ்வாகும். இது ஆண்களின் வைபவமாகும். பெண்வீட்டிலிருந்து நெருங்கிய உறவினர்களும், அயலில் உள்ள ஆண்களுமாக மாப்பிள்ளை வீட்டிற்குத் திருமணம் பேசச்செல்லும் நிகழ்வாகும். இதேபோன்ற நடைமுறை மட்டக்களப்புத் தமிழர் திருமணங்களிலும் காணப்படுகின்றது (தில்லைநாதன் சா. 2015).

ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருப்பினும் ஊர் ஆண்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தைகளை நிகழ்த்திக்காட்டும் ஒருவகைப் பாவனையாக இதனைக் கொள்ளலாம். இவ்வைபவத்தில் ஆண்கள் வெறுங்கையுடன் செல்லாமல் இருக்க, செப்புப்பெட்டிகள் தயார் செய்யப்படும். இவற்றோடு பிரதானமாக வட்டா (வெற்றிலைத்தட்டம்) கொண்டு செல்லப்படும். இதில் பல மரபுகள் பின்பற்றப்படுவதுண்டு.

திட்டக்கட்டும் வட்டா

வட்டா என்ற வழக்குச் சொல் வெற்றிலைத்தட்டத்தைக் குறிப்பதாயினும் வைபவ வட்டாக்கள் வெற்றிலை, பாக்கோடு இன்னபிற பொருட்களையும் கொண்டு தயார் செய்யப்படும். செம்பிலான அரசிலைத் தூக்கங்களைக் கொண்டதான ஒற்றைக்கால் தாங்கியை உடைய வட்டா பெறப்பட்டு தேசிக்காய், சாம்பல் பூசிப் பளபளக்க மினுக்கப்படும். பெண்ணின் தாய்மாமன், மூத்த மச்சான் மற்றும் அனுபவமுள்ள வயதான நபர்கள் பெண்வீட்டின் பாய் விரிக்கப்பட்ட மண்டபத்தில், தரையில் இருந்து வட்டாக் கட்டுவார்கள்.

வட்டாவிற்காக அழுகாத பரந்த பெரிய இலைகளையுடைய நீர்வெற்றிலைப் பகளிகளை எடுப்பார்கள். நெட்டியுடன் (காம்பு), வெற்றிலை முகம் வெளித்தெரிய, காம்புகள் தட்டத்தின் வெளியில் நீட்டியிருக்கும் வண்ணம் பிஸ்மிச் சொல்லி வெற்றிலை அடுக்கப்படும். இவ்வெற்றிலைகளோடு, வைக்கப்படும் பாக்கு, திராட்சைக்கனி, வாழைப்பழம் உட்பட அனைத்தும் ஒற்றை எண்ணிக்கையில் வைக்கப்படும்.

வெற்றிலை அடுக்கியதன் பின்னர், பாக்கு 21, 21 கோழிச்சூடன் வாழைப்பழம் உள்ள பெரிய சீப்பு, ஏலக்காய், கறுவா, கராம்பு, சுக்கிரிப்பல்லி, கஸ்தூரி மஞ்சள், சாதிக்காய், சாதிப்பத்திரி, கற்கண்டு, உலர்ந்த திராட்சை, பேரீச்சை, சீனி, தேயிலை, மாதுளம்பழம், திராட்சை உள்ளிட்ட ஒற்றை எண்ணிக்கையிலான பொருட்களை வைத்து வெள்ளைச்சீலையினால் முடிந்து சணலினால் கட்டுவர்.

இந்த வட்டாவுடன் சேர்த்து ஒற்றைப்படையாக ஏழு, ஒன்பது, பதினொன்று, பதின்மூன்று அல்லது இருபத்தொரு செப்புப் பெட்டிகள் தயார் செய்யப்படும். அவற்றில் எண்ணைப் பணியாரம், இடியப்பப் பணியாரம், தேன்குழல், சோகி, அச்சுப் பணியாரம், பணத்தம்பலகாரம், வாரப்பன், வாழைப்பழம், துதள், மஸ்கட், கேக், திராட்சை, மாதுளை, அன்னாசி, தோடை போன்றவை பனையோலையால் இழைக்கப்பட்ட கடகங்களில் ஒற்றைப்படையாக அடுக்கப்பட்டு வெள்ளைச்சீலையால் சுற்றப்படும். இதற்காகப் புதிய கடகங்கள் சாயமூட்டிய ஓலைகளைக் கொண்டு கண்டாங்கி அலங்காரங்களுடன் தயார் செய்யப்படும்.

நற்பிட்டிமுனை பண்பாடு பற்றி அப்துல் கையூம் அவர்கள், மாப்பிள்ளைத் தரப்பார் விரும்புமிடத்து வெற்றிலை – பாக்கு ஒரு பெட்டியிலும், 101 வாழைப்பழம், 101 பலகாரம் இன்னொரு பெட்டியிலும் வைத்துக்கட்டி மூன்று பெட்டிகளாகக் கொடுப்பார்கள் என்று குறிப்பிடுகின்றார்.

இந்தச் செப்புப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு கூட்டுவண்டிலில் ஆண்கள் புறப்படுவார்கள். தாய்மாமனே வட்டாவைச் சுமந்து செல்வார். அவரில்லாத சந்தர்ப்பங்களில் மூத்த மச்சான், மூத்த சகோதரர் போன்றவர்கள் எடுத்துச் செல்வர். இந்நிகழ்வுகள் பெரும்பாலும் இரவின் கடைசி இஷாத் தொழுகை தொழுத பின்னரே நடைபெறும்.

பெண்வீட்டாரை மாப்பிள்ளை வீட்டார் வரவேற்றுத் தரையில் பாய்விரித்து அமர வைப்பார்கள்.

இரு குடும்பத்தார்களுக்கும் வைபவத்திற்கான காரணம் தெரியும் என்றாலும், பேச்சைத் துவங்குவதற்கு ஒருவரைத் தயார் செய்து வைத்திருப்பார்கள். அவர்களின் சம்பாசனை ஒவ்வொரு களரியிலும் வெவ்வேறாக அமையும்.

“சரி! ஊர்ல முக்கியமான ஆக்களெல்லாம் வந்திருக்கீங்க!

இன்ரம் என்ன விசயமா வந்திருக்கீங்கன்டு செல்லலாமா?

தம்பி தேத்தண்ணிய எடுத்துக்கு வா!” என்று ஆரம்பிப்பார் ஒருவர்.

அதற்குப் பெண்வீடு சார்பாக ஒருவர்,

“எங்கட பட்டியில ஒரு நாகு இருக்கு. உங்கட பட்டில ஒரு நாம்பன் இருக்கு. ரெண்டையும் சேர்த்துவிடுவமா என்டு கேக்கத்தான் வந்தம்” என்பார் (பட்டி – ஆநிரை).

“கொஞ்சம் தெளிவாச் செல்லுங்களன்” என்று மீண்டும் அவர்கள் கேட்டதும்,

“உங்களுடைய மகனுக்கு இன்னாருடைய மகள் இன்னாரைக் கலியாணம் கேட்டு வந்திருக்கம்” என்று சொல்வார்கள்.

மணமகனின் தகப்பனார் அதற்குச் சம்மதிப்பது போல சொல்லிவிட்டு, “எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல. மாப்பிள்ளைகிட்டயும் கேக்கத்தானே வேணும்” என்பார். பின்னர் நண்பர்கள் மாப்பிள்ளையைப் பந்திக்கு அழைத்து வருவார்கள். மாப்பிள்ளை சலாம் சொல்லிக்கொண்டு உள்ளே நுழைந்து தனது சம்மதத்தை அனைவருக்கும் தெரிவிப்பார். மணமகனின் தாயிடமும் சம்மதம் பெற்றுக்கொண்ட பின்னர் விருந்து பரிமாறப்படும்.

அதன்போது கூட்டத்திலிருந்து ஒருவர் “கொடுக்கல் வாங்கல்கள் ஏதும் இரிக்கா” என்று கேட்க, மாப்பிள்ளை தரப்பார் மஹர் (பெண்ணிற்கு வழங்கப்படும் மணக்கொடை) எவ்வளவு என்று கேட்டு, மாப்பிள்ளைக்கு அறிவிப்பார்கள். பின்னர் திருமணத்திற்கான நாள் குறிக்கப்படும்.

இந்த நேரத்திலேயே ஆதனபாதனம், கைக்கூலி சீதனம் போன்றவை எவ்வளவு, காணி – பூமி எவ்வளவு, ரொக்கம் எவ்வளவு, கைக்கூலி காவினுக்கு முன்பா, கல்யாண நேரத்திலா, காவினுக்கு பின்பா என்பதெல்லாம் பேசி முடிவெடுக்கப்படும். அத்தோடு காவின் எழுதுவது வீட்டிலா, பள்ளியிலா என்பதும் தீர்மானிக்கப்படும். திருமணத் தினத்தன்று காலையில் பெண்வீட்டிலிருந்து ஏழு பெட்டிச் சோறும் ஏழு கறியும் அனுப்பிவைக்க வேண்டும் என்று மாப்பிள்ளைச் சோறும் கேட்பார்கள்.

நாள் குறித்தல்

பொதுவாக சனி, செவ்வாய் தினங்கள் தவிர்த்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருமணத்தை நடத்துவதை விரும்புவார்கள். மேலும், அவை வளர்பிறை நாட்களாகவும், ஒற்றைப்படை பிறை தினங்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஒற்றைப்படை என்பது சகல விடயங்களிலும் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படும். இல்லாவிட்டால் மாப்பிள்ளை – பெண் பிரிந்து விடுவர் என்றும், மாப்பிள்ளைக்கு இரண்டு திருமணங்கள் நடைபெறும் என்றும் ஒரு நம்பிக்கை நிலவி வந்துள்ளது.

திருமணம், இஸ்லாமிய – அரபு நாட்காட்டிப்படி துல்கஹ்தா, துல்ஹஜ் மாதங்களில் நடப்பதையும், அது நோன்பு அல்லாத நாட்களாக இருப்பதையும் அதிகம் விரும்புவார்கள். இவற்றைக் கருத்தில்கொண்டு இரு தரப்பாருக்கும் உசிதமான ஒரு நாளைத் தீர்மானிப்பார்கள்.

பின்னர் மணமகளின் தந்தை அல்லது சகோதரர்களில் மூத்தவர் மாப்பிள்ளைக்கு வெள்ளி அல்லது தங்கத்திலான மோதிரத்தை அல்லது கைக்கடிகாரமொன்றை அணிவித்து அடையாளமிட்டுச் செல்வார். பின்னர் பிரார்த்தனையுடன் இந்த வைபவம் முடிவடையும். மாப்பிள்ளையை ஆரத்தழுவி வாழ்த்தி விடைபெறுவார்கள். இதன்பின்னர் திருமண நாள்வரையிலுள்ள பெருநாள், விசேட தினங்களில் செப்புகள் பரிமாறப்படும். இந்த நாட்களில் பெட்டிக்காசும் பேசித்தீர்மானிக்கப்படும்.

எவ்வாறாயினும் சீதனம் வழங்குவதும், பெறுவதும் அந்தஸ்தைக் குறிக்கும் ஒரு விடயமாக பின்பற்றப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பான சில கவிகளை நோக்கும் போது, சீதனத்திற்கெதிரான கிராமியக் குரல்களையும் நாம் கண்டு கொள்ளமுடியும்:

  • பத்தேக்கர் காணியும்

பால்மாடும் வேணுமெங்காய்   

இத்தினையும் தாறதுக்கு – ஒங்கட

உத்தியோகம் என்ன கிளி?

(சீதனத்திற்கு பெறுமதியில்லாத மாப்பிள்ளையைக் கிண்டலாகப் பாடுவது)

  • பட்ட மரத்தில்

பழமிருந்து என்ன செய்ய

இலையிருந்து காத்தடிச்சா – கிளி

எங்கரிந்தும் வந்து சேரும்.

(அழகான பெண்ணிருந்தாலும், பணமிருந்தால் தான் மாப்பிள்ளை கிடைக்கும் என்பதைக் குறிக்கும் கவி)

  • பாக்கு மரம் பாளை போட்டு

பதினாறு காய் காச்சி

எல்லாம் வெலப்பெய்த்து – என்ட

எசகா மட்டும் போகல்லியே?

(தன்னுடைய எல்லாப் பிள்ளைகளுக்கும் திருமணம் முடிந்தும், முதிர்கன்னியாகவுள்ள ஒரு பிள்ளைக்கு வரன் கிடைக்காததையிட்டு ஒரு தாய் கலங்கிப் பாடிய வரிகள்)

  • மாடு பெரிசோ? மானமுள்ள பொண் பெரிசோ

வீடு பெரிசோ – ஒரு விருப்பமான பெண் பெரிசோ?

  • மணி விளக்கப் போல், என்ட மகளிரிக்காள் குமராக

காசி பணமுமில்ல – அவள கண்ணெடுத்தும் பாராங்க

  • பாதி வளவும் பதினாறு தென்னமரமும்

கற்கிணறும் காத்திரிக்காங்கா லாத்தா காதருக்கு

  • பாதி வளவும் பதினாறு தென்னையும்

ரெட்டப்பெலாவும் ஒங்க உம்மா தந்த சீதனங்கா!

  • வெதச்சிக் கொடுப்பம் ஊடு வளவும் கொடுப்பம்

மாடும் கொடுப்பம் அவர் மனம் விரும்பி வந்தாரெண்டால்.

  • ஊடு கொத்திக் கட்டு எண்டால்; ஒசந்த வளை ஏத்துமெண்டால

ஓடடுக்கிக் தாவன் எண்டால் உள்ளவனா எம்புரிசன்.

  • ஊடு வாசல் ஈடு, வட்ட வடிச்சல் ஈடு

கேக்கிற சீதனத்தக் கேட்டாலே கிறுகிறுப்பு

  • குறிவெச்ச மாட்டினிலே குறிதெரிச்சி கேக்காருகா

குடுப்பனாகா லாத்தா – நம்மட கொமரழிஞ்சி போனாலும்.

  • தோட்டம் துரவுமில்ல தூரத்து ஒறவுமில்ல

தலவிதிதான் ஒண்டிரிக்கி தாறதுக்கு மருமகனே

பெண்பார்த்தல்

இது பெண்களின் வைபவமாகும். திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் பெண்ணிற்கு தேவையான ஆடைகள், துணிமணிகள், ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள், வாசனைத்திரவியங்கள் மற்றும் தின்பண்டங்களுடன் பெண்வீட்டிற்கு செப்புக் கொண்டு செல்வார்கள். அன்றைய தினம் தாங்கள் கொண்டுசென்ற ஆடைகளை அணிவித்துப் பெண்ணை அலங்காரம் செய்வார்கள். இந்நிகழ்விற்கு ஏழிற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் பலகாரங்கள் வைத்து விருந்தோம்பல் செய்வார்கள். இறுதியாக மணமகன் சில குடும்பத்து ஆண்களுடன் பெண்வீட்டுக்கு வந்து பெண்ணைப் பார்த்துச் செல்வதும் உண்டு.

மருதோன்றியிடும் நிகழ்வு

மருதோன்றி என்பதை மருதமொண்டி என்று வட்டார மொழியில் வழங்குகின்றனர். திருமண நாளன்று அதிகாலையில் அல்லது திருமணத்திற்கு முதல்நாளன்று மணமகளுக்கு மருதோன்றி அரைத்துச் செல்வார்கள். பெரும்பாலும் வளவுகளில், கிணற்றடிகளில் மருதோன்றிச்செடிகள் வளர்ந்து காணப்படும். அவற்றிலிருந்து இலைகளைப் பறித்து கழிம்பு போல அரைத்த மருதோன்றியை வெற்றிலையில் வைத்து அரசிலை வட்டாவில், நடுவில் வைப்பார்கள். அந்த வட்டாவில் 31 பாக்கு, 31 வெற்றிலைகள் மருதோன்றியைச் சூழ இருக்கத்தக்கதாக அடுக்கி, வெண் சீலையொன்றினால் மூடி, பெண்வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள்.

இந்நிகழ்வுக்காக பல பெண்கள் அழைக்கப்பட்டு, மணமகளின் மச்சி முறையானவர் (மாப்பிள்ளையின் மூத்த சகோதரி) வட்டாவைச் சுமக்க, இன்னொரு பெண் அவருக்குக் குடையொன்றைப் பிடிக்க, நடந்து செல்வார்கள். பறையர்கள் அழைக்கப்பட்டு பறை மேள இசையுடனும், பெண்களின் குலவை (குரவை) ஓசையுடனும், பட்டாசு வெடிகளுடனும் பரிவாரமாகச் செல்வார்கள்.

இவர்களை வரவேற்று அழைத்துவர நடுவழிக்கு மணப்பெண் தரப்பார் நடந்து செல்வார்கள். அவர்களும் குரவை, பட்டாசுச் சத்தங்களுடன் அவர்களை நோக்கிச் செல்வார்கள். இரு பகுதியினரும் யார், யாரை முந்துவது, அவர்கள் வரட்டும், இவர்கள் வரட்டும் என்று பாவனையாகச் சிறிது நேரம் தாமதித்து மகிழ்ந்த பின்னர், எல்லோருமாகச் சேர்ந்து மணமகளின் வீட்டை அடைவார்கள். அங்கு தயாராக விரித்து வைக்கப்பட்டுள்ள பாய்களில் அமர்ந்து மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் சகோதரிகள் மருதோன்றியிட்டதன் பின்னர் உபசாரங்கள் வழங்கி அவர்களை வழியனுப்புவார்கள். ஆரம்பகாலங்களில் மணமகனுக்கும் மருதோன்றியிடும் வழக்கமும் இருந்துள்ளது.

இதற்கும் பின்னரே திருமணப்பதிவு இடம்பெறும்.

உசாத்துணைகள்

  1. Jameel S.H.M. (2011) ‘The Muslim Heritage of Eastern Sri Lanka’
  2. கையூம் எம்.எல்.ஏ (2016), ‘நெற்பிட்டிமுனையின் வரலாறும் பண்பாட்டியலும்’
  3. சலீம் ஏ.ஆர்.எம். (1990), ‘அக்கரைப்பற்று வரலாறு’. ஹிறா பப்ளிகேசன்ஸ்
  4. சலீம் ஏ.ஆர்.எம். (1997), ‘அக்கரைப்பற்று வரலாறு’
  5. தில்லைநாதன், சா. (2015), ‘மட்டக்களப்புத் தமிழர் பண்பாட்டு மரபுகள்’
  6. லறீப் சுலைமான் (2015), ‘இறக்காமம் வரலாறு சமூகம் வாழ்வியல்’
  7. றமீஸ் அ. (2020), ‘சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும்’. சம்மாந்துறை வெளியீட்டுப் பணியகம்
  8. ஜெமீல் எஸ்.எச்.எம். (1995), ‘கிராமத்து இதயம்’, சாய்ந்தமருது
  9. ஹனீபா. இ (2020) ‘ஈழத்து நாட்டார் பாடல் மரபில் கவிகள்’, அக்கரைப்பற்று
  10. ஹனீபா. இ (2020), ‘கிழக்கிலங்கை கவி மரபு’, அக்கரைப்பற்று
  11. நற்பிட்டிமுனை முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும் (2023)
  12. நிந்தவூர் வரலாறும் வாழ்வியலும் (2021)

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

3172 பார்வைகள்

About the Author

எம். ஐ. எம். சாக்கீர்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைச் சேர்ந்த முஹம்மட் சாக்கீர் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டம் பெற்றவர் தற்போது மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராக பணிபுரிகிறார்.

வரலாறு, பண்பாட்டு ஆய்வு, நாட்டாரியல், ஆவணப்படுத்தல் போன்ற துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். இவரது 21வது வயதில் 'சம்மாந்துறை பெயர் வரலாறு' என்ற ஆய்வு நூலை வெளியிட்டார், சம்மாந்துறை பெரியபள்ளிவாசல் வரலாற்று ஆவணப்படம் போன்றவற்றிற்கு வசனம் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் இன்கிலாப் சஞ்சிகை மீளுருவாக்க குழுவின் முன்னோடியான செயற்பாட்டாளரான இவர் 2019 இல் வெளியான சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும் எனும் நூலின் பதிப்பாசிரியர்களிலொருவரும் கட்டுரையாசிரியருமாவார். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, கலை, பண்பாடு, முதலான கருபொருள்களில் கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்