இலங்கையில் தமிழ்க்குயர் சமூகத்தினர் பல்வேறுபட்ட மருத்துவ மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இப்பிரச்சினைகளுக்கு அடிப்படையாகச் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டுக் காரணிகள் முக்கிய பங்குகளை வகிக்கின்றன. குயர்மக்கள் மருத்துவமனைகளை நாடும்போது பாலின அடையாளத்தைக் கேட்கும் மருத்துவர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் அவர்களை மரியாதையின்றி அணுகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
“குயர் மக்கள் வைத்தியசாலைகளை நாடும்போது வெளிநோயாளர் பிரிவில் இருந்து பல்வேறு தரப்பினராலும் பாரபட்சங்களை எதிர்கொள்கிறார்கள்” எனச் செயற்பாட்டாளரான வரதாஸ் தியாகராஜா குறிப்பிடுகிறார். குயர் மக்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாத மற்றும் அதை ஏற்றுக்கொள்ளாத மருத்துவமுறைகளே இலங்கையில் அதிகமாக உள்ளன. உளநலப் பராமரிப்புகள், பாலியல் சுகாதார சேவைகள் போன்ற அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதிலும், எச்.ஐ.வி மற்றும் பாலியல் குறித்த நோய்களுக்கான விழிப்புணர்வு போன்றவற்றினை வழங்குவதிலும், இன்றுவரையில் இலங்கை பின்நிற்கின்றமையும் இதற்கான பிரதான காரணமாக அமையலாம். இலங்கையில் குயர் சமூகத்திற்கான காப்பகங்கள், சுகாதார மையங்கள் போன்றவை மிகவும் குறைவாகக் காணப்படுகின்றன.
இலங்கையின் சட்டம் LGBTIQA+ சமூகத்திற்கு இன்னும் சமத்துவமான உரிமைகளை வழங்கவில்லை. இதனால், தமக்குத் தேவையான மருத்துவ உதவிகளைக் கோருவதில் குயர்மக்கள் பின்தங்கியுள்ள அதேவேளை, மருத்துவர்களும், மருத்துவமனைகளும் பால்மாற்று அறுவைச்சிகிச்சை செய்யத் தயங்குகிறார்கள். தமிழ்ச் சமூகத்தில் பாலின அடையாள மாற்றம் புறக்கணிக்கப்படும் விதமாகவே பார்க்கப்படுகிறது. இது பால்நிலைப் பன்மைத்துவத்தைக் கேள்விக்குட்படுத்துகின்றது.
இலங்கையில் சமூக, பண்பாட்டு, அரசியல் காரணிகளால் குயர்மக்கள் குடும்பத்தினரிடமிருந்து விலகும்நிலை ஏற்படுகின்றது. மேலும் உளவியல் பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன. இது உளநல மற்றும் உடல் நலத்தினைப் பாதிக்கின்ற ஒரு விடயமாக இருக்கின்றது. இவ்வகையான பிரச்சினைகளைச் சரிசெய்ய, கல்வியறிவு ஏற்படுத்துதல், மருத்துவர்களுக்கும் நிபுணர்களுக்கும் பயிற்சிகள் வழங்குதல், சமுதாய ஆதரவைக் கட்டமைத்தல் ஆகியவை அத்தியாவசியமாகும்.
தமிழ்மொழி பேசும் குயர் சமூகத்தினர் சுகாதார சேவைகளைப் பெறுவதில் மொழித்தடைகளை எதிர்கொள்கிறார்கள். இலங்கையில் குயர்மக்கள் தமக்கான சிகிச்சைகளுக்காகக் கொழும்பு போன்ற நகரங்களுக்குச் செல்லும்போது, மொழிப்பிரச்சினை காரணமாகச் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
தமிழ்மொழியில் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் தகவல்கள் இல்லை. இதனால், தமிழ்க்குயர் சமூகத்தினர் தங்கள் தேவைகளைச் சரியாக விளக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரியத்திற்கும், குயர் அடையாளங்களுக்கும் இடையிலான முரண்பாடு மருத்துவர்களின் அணுகுமுறையிலும் எதிரொலிக்கிறது. ஆனாலும், தமிழ்ச் சூழலில் குயர் மக்களைப் பால்நிலை உணர்திறனுடன் நடத்தக்கூடிய உட்சுரப்பியல் (Endocrinologists) நிபுணர்கள் மற்றும் உளநல மருத்துவர்கள் ஒரு சிலரைக் குயர்மக்கள் குறிப்பிடுகின்றார்கள்.
பால்நிலையை அடையாளப்படுத்தும் சான்றிதழ் (GRC)
இலங்கையில் சுகாதார போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு, 2016 ஆம் ஆண்டின் பொதுச்சுற்றறிக்கை அடிப்படையில் பதினாறு வயதிற்கு மேற்பட்ட திருநர்களுக்குப் பால்நிலையை அடையாளப்படுத்தும் சான்றிதழ் (GRC) வழங்குகின்றது. இலங்கைத் தமிழ்ச்சூழலில் பால்நிலையை அடையாளப்படுத்தும் சான்றிதழ் (GRC) பெறுவதில் திருநர்கள் ஏராளமான சவால்களை எதிர்கொள்கிறார்கள். நீண்ட போராட்டங்களிற்கு மத்தியிலேயே அவர்களால் பால்நிலையை அடையாளப்படுத்தும் சான்றிதழைப் (GRC) பெறமுடிகின்றது.
குயர் மக்களுடைய மருத்துவ மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் செயற்பாட்டாளரான வரதாஸ் தியாகராஜா குறிப்பிடுகையில், “இலங்கையில் பால்நிலையை அடையாளப்படுத்தும் சான்றிதழ் (GRC) வழங்குதல் ஒரு முன்னேற்றகரமான விடயமாகப் பார்க்கப்படுகின்றது. இருந்தாலும் கருத்தியல் ரீதியில் நோக்கும்போது, ஆண் மற்றும் பெண் பால்நிலைகளை அரசாங்கத்திடம் உறுதிப்படுத்தவேண்டிய தேவை இல்லாதபோதும், திருநர்கள் தமது பால்நிலையை உறுதிப்படுத்தும்நிலை விவாதத்திற்குரியது. பால்நிலையை அடையாளப்படுத்தும் சான்றிதழ் (GRC) இல்லாமல் திருநர்களை அங்கிகரிக்கும்நிலை அவசியமானதாகும்” என்கிறார்.
திருநர்கள் தமக்குத் தேவையான கோமோன்களைப் பெறுவதிலும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கோமோன் சிகிச்சைக்கான மருந்துகளின் விலை அதிகமாகவும், இதனை வழங்கும் மருத்துவர்கள் பற்றாக்குறையாகவும் காணப்படுகின்றமையைத் திருநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இலங்கையில் திருநர்கள் மத்தியில் பால்மாற்று அறுவைச்சிகிச்சைக்குப் பின்னர் கோமோன் எடுப்பது குறைவாகக் காணப்படுகின்றது. இதற்குக் கோமோன்களினைப் பெற்றுக்கொள்ளமுடியாமல் இருக்கின்றமையும், விலையும் முக்கிய சிக்கல்களாகும்.
“இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளைப்போல் இலங்கையில் பொருத்தமான கோமோன்களைப் பெறமுடியாதுள்ளது. சரியான கோமோன்களைப் பயன்படுத்தாதபோது அவர்கள் ஏராளமான பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அரசாங்கம் குயர் மக்களுடைய பிரச்சினைகளை உள்வாங்கி அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஓசுசல போன்ற அரச மருந்தாக்கல் நிறுவனங்களில் நியாயமான விலையில் பொருத்தமான கோமோன்களை இறக்குமதிசெய்து வழங்கவேண்டும்” என வரதாஸ் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “இருமையற்றோர் (Non-binary), பால்நிலையை அடையாளப்படுத்தும் சான்றிதழ் (GRC) பெறுவதில் பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள” என்றார்.
மேலும், “யாழ்ப்பாணத்தில் திருநர்கள் சிகிச்சைக்குச் செல்லும்போது பெற்றோர்களின் அனுமதி அவசியமானதாக இருக்கின்றது. தமிழ்ச்சூழலில் தமது பிள்ளைகளைத் திருநர்களாக ஏற்றுக்கொள்வது பெரும்பாலான பெற்றோருக்குச் சிரமமானதாக இருக்கின்றது. தமது சிகிச்சைகளுக்காகப் பெற்றோரின் அனுமதியைப் பெறுவதிலும் திருநர்கள் சவால்களை எதிர்கொள்கின்றனர்” என்கிறார்.
இவர்கள் குறைந்தது 3 மாதங்கள் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றபின்னர் கோமோன் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. திருநர்கள் தமது பிறப்புச் சான்றிதழ், மற்றும் அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் தமது பால்நிலையை மாற்றுவதற்கு பால்நிலையை அடையாளப்படுத்தும் சான்றிதழ் (GRC), அவர்களை உறுதிப்படுத்தும் சத்தியக்கடதாசி மற்றும் பழைய பிறப்புச் சான்றிதழ் என்பன அவசியமாகும்.
பால்மாற்று அறுவைச்சிகிச்சை (Gender-Affirming Surgery)
இலங்கையில் தமிழ்க்குயர் சமூகத்தால் பால்மாற்று அறுவைச்சிகிச்சை (Gender-Affirming Surgery) மேற்கொள்வதில் எதிர்கொள்ளப்படும் மருத்துவ மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் பல்வேறு நிலைகளில் நிகழ்கின்றன. சமூகப் புறக்கணிப்பு, சுகாதாரச் சேவைகளின் குறைபாடு மற்றும் சட்டரீதியான சிக்கல்கள் போன்றன இந்தப் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்குகின்றன.
பால்மாற்று அறுவைச்சிகிச்சை, இலங்கையின் பொதுமருத்துவச் சேவைகளின்கீழ் இடம்பெறுவதில்லை. இதனால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. சிகிச்சைகளை வழங்கக்கூடிய முக்கிய மருத்துவமனைகள் பெரும்பாலும் கொழும்பு போன்ற நகரங்களில் மட்டுமே உள்ளன. இது கிராமப்புறங்களில் வசிக்கும் தமிழ்க்குயர் சமூகத்தினருக்கான சிகிச்சைகளுக்கான அணுகலை மேலும் சிக்கலாக்குகிறது.
இலங்கையில் பால்மாற்று அறுவைச்சிகிச்சை செய்யத் தகுதியான மற்றும் அனுபவமிக்க அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் மிகவும் குறைவாக உள்ளனர். இலங்கையில் பாதுகாப்பான முறையில் அறுவைச்சிகிச்சை செய்யத் தேவையான உபகரணங்கள் மற்றும் சிகிச்சை முறைமைகள் பின்தங்கியதாகக் காணப்படுகின்றமையை அவதானிக்கலாம். குயர் மக்களுக்குப் பால்மாற்று அறுவைச்சிகிச்சை முறையாக மேற்கொள்ளப்படாதபோது மரணங்கள் உட்பட்ட பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்படுகின்றது.
திருநர்கள் இலங்கையின் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமல்லாது இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் சிகிச்சைக்காகச் செல்கின்றனர். வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் குறைந்தது ஒரு மாதகாலமாவது அங்கு தங்கியிருந்து சிகிச்சைபெற வேண்டும். பால்மாற்று அறுவைச்சிகிச்சையின் செலவு மிக அதிகமாக உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இதற்கான செலவை மேற்கொள்ளுவதற்கு, தமிழ்க்குயர் சமூகத்தினர் பெரும்பாலும் பொருளாதார நிலையில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இலங்கையின் அரச கட்டமைப்பில் பால்மாற்று அறுவைச்சிகிச்சைக்கான ஆதரவோ அல்லது சலுகைகளோ பெரிய அளவில் இல்லாமை ஒரு குறையாகவே உள்ளது. குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு பால்மாற்று அறுவைச்சிகிச்சை ஒரு கனவாகவே இருக்கின்றது. மேலும் வெளிநாடுகளுக்குச் சிகிச்சைகளுக்காகச் செல்லவிரும்பும் குயர்மக்கள் மருத்துவ விசா பெறுவதிலும் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.
தமிழ்ச் சமூகத்தில் பால்மாற்று அறுவைச்சிகிச்சையைப் பற்றி அதிக அறிவும், புரிதலும் இல்லாததால், இதனை குடும்பங்கள் எதிர்க்கும்நிலை காணப்படுகின்றது. சமூக ஆதரவின்மையால் மன அழுத்தம் மற்றும் தனிமை அதிகரிக்கிறது. குயர் சமூகத்தினரின் பாலின அடையாளங்களை எதிர்மறையாக அணுகும் செயல்முறைகள் காணப்படுகின்றன. அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு உடல் சுகாதாரத்தையும், உள ஆரோக்கியத்தையும் சரியாகக் கவனிக்கத்தேவையான, அடிப்படை அமைப்புகள் இல்லாமை மிகப்பெரும் குறைபாடாகவிருக்கின்றது.
உளநலச் சிகிச்சை
இலங்கையில் LGBTIQA+ சமூகத்துக்கேற்ற உளநலச் சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடிய அமைப்புகள் குறைவாக உள்ளன. இதனால் இலங்கையில் குயர் சமூகத்திற்கான உளநலச் சிகிச்சை புறக்கணிக்கப்பட்டுள்ளது எனலாம். பால்மாற்று அறுவைச்சிகிச்சைக்கு முன்பும், பின்னும் உளநல ஆலோசனைகள் மிக அவசியமானது. மேலும் பால்நிலையை அடையாளப்படுத்தும் சான்றிதழ் (GRC) பெறும்போதும், இலங்கையில் உளநல மருத்துவரை நாடவேண்டியது அவசியமாகும். ஆனால், தமிழ்க்குயர் சமூகத்திற்கேற்ற உளநல ஆலோசனைகள் மற்றும் பராமரிப்பு என்பன இலங்கையில் சரியான முறையில் கிடைப்பதில்லை.
“நான் உளநலச் சிகிச்சைக்குச் செல்லும்போது, மேலும் மன உளைச்சலுக்கு உள்ளானேன். தவறான முடிவுக்குக்கூடச் சென்று மீண்டு வந்தேன். திருநர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் உளநலச் சிகிச்சைகளை நான் ஆதரிக்கவில்லை” எனத் திருநங்கை ஒருவர் குறிப்பிட்டார்.
பால்மாற்று அறுவைச்சிகிச்சைக்கு முன் உளநலச் சான்றிதழ் கட்டாயமாகும். உளநலச் சான்றிதழ்பெறச் செல்லும்போது, “பாலியல் தொழிலுக்குச் செல்லப்போகிறீர்களா?, அதற்காகவா பால்மாற்று அறுவைச்சிகிச்சை செய்கிறீர்கள்?” போன்ற கேள்விகள்கூடத் தன்னை நோக்கி எழுப்பப்பட்டதாகத் திருநங்கை ஒருவர் குறிப்பிட்டார். இதுபோன்ற கேள்விகள் திருநர்களை மேலும் உளப்பாதிப்புக்கு உள்ளாக்குவதுடன், அவர்களது அடையாளப்படுத்தல்களைக் கேள்விக்கும் உள்ளாக்குகின்றன. எனவே, குயர் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூடிய உளநல மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்களின் தேவை அவசியமானதாகும்.
பாதுகாப்பான மருத்துவச் சூழல்
இலங்கையில் பால்மாற்று அறுவைச்சிகிச்சை செய்யும் நிபுணர்களை உருவாக்கும் பயிற்சிகளை வழங்கல், பால்மாற்று அறுவைச்சிகிச்சைக்கு அரசாங்க ஆதரவுடன் நிதி உதவிகள் வழங்குதல், தமிழ்க்குயர் சமூகத்திற்கேற்ற உளநல ஆலோசனை மற்றும் சிகிச்சை மையங்களை உருவாக்கல், குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் பாலின அடையாளங்களைப் பற்றிய புரிதலை அதிகரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்தல், தமிழ்க்குயர் சமூகத்திற்கான உரிமைகளைச் சட்டரீதியாக உறுதிசெய்ய நடவடிக்கைகள் எடுத்தல் என்பன அவசியமாகும். இதன்மூலம் குயர் மக்களுக்கான பாதுகாப்பான, ஆரோக்கியமான மருத்துவ, சுகாதாரச் சூழல் உருவாகும். ஆனால் இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாட்டில், குயர் மக்களுக்கான விடயங்களை அமுல்படுத்துவதில் பல்வேறு காரணிகள் தடையாக உள்ளன.
“குயர் மக்களுக்குச் சம உரிமைகொண்ட சுகாதார, மருத்துவ அணுகல் அவசியமானதாகும்.”