இலங்கை முஸ்லிம் உப மரபினங்களில் மற்றொரு பிரிவினர் மேமன்களாவர். இவர்கள் மேமன் சமூகம் எனவும் அழைக்கப்படுகின்றனர். மேமன்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து வணிக நடவடிக்கைகளுக்காக 1800 களின் தொடக்கத்தில் இலங்கை வந்தனர். காலனித்துவ காலத்தில் வர்த்தக நோக்கங்களுக்காகவே இவர்கள் இலங்கையில் குடியேறியதாக வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பெரும்பாலான மேமன்கள் போர்த்துக்கேயரின் ஆட்சிக்காலப்பகுதியிலேயே இலங்கை வந்ததாக விக்கிபீடியாத் தகவல் ஒன்று கூறுகிறது. 1947 இல் இந்தியப் பிரிவினையை அடுத்து அவர்கள் இலங்கையின் நிரந்தரக் குடிகளாக மாறினர். தற்போதைய நிலையில் இலங்கையில் இவர்களின் மொத்த சனத்தொகை 7000 – 10,000 வரை எனக் குறிப்பிடப்படுகிறது.[i]
இலங்கையில் மேமன்கள் குறித்து ஓரளவு குறிப்பிடத்தக்க ஆய்வை முன்வைத்தவர் எம்.எம்.எம். மஹ்ரூஃப் என்றே நினைக்கிறேன். இலங்கை முஸ்லிம்களின் உப மரபினங்களுள் ஆப்கனியர், பெங்காலிகள் போன்றோர் உழைக்கும் வர்க்கமாக இருக்க, மேமன்களை சமூக உயர் குழாத்தினர் (Elites) என மஹ்ரூஃப் மதிப்பிடுகிறார். மேமன் சமூகத்தினர் தங்களுக்குள் இரு சமூகப்பிரிவினராக கட்டமைந்துள்ளதையும் மஹ்ரூஃப் எடுத்துக்காட்டுகிறார்.
மேமன்கள் இரு சமூகக் குழுக்களாக உள்ளனர். Cutchi/ Kutchi Memons – கச்சி மேமன்கள் மற்றது ஹலாய் (Halai ) மேமன்கள். ஹலாய் மேமன்கள் பம்பாயைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இஸ்லாமிய சட்ட அடிப்படையில் ஹனஃபி மத்ஹபைப் பின்பற்றுபவர்கள். இன்னும் சொல்வதானால் சுன்னத் வல் ஜமாஅத் பிரிவினர். கச்சி மேமன்கள் கோஜாக்களைப் போன்று இந்து வர்த்தக சமூகத்திலிருந்து மதம் மாறியவர்கள்.[ii] இவர்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள கச்சி என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள். அல்லது கச்சி சாதிப் பிரிவினர் அல்லது இனக் குழுவினர் எனக் கருதப்படுகின்றனர். இவர்கள் கச்சி மொழியைப் பேசுபவர்கள்.
இலங்கை மேமன்கள் பெரும்பாலும் கச்சி மேமன்களாவர். அவர்களின் இனவியல், மற்றும் தோற்றம் குறித்து சில குழப்பங்கள் இருந்தாலும் உறுதியாக இஸ்லாமிய மத நம்பிக்கை சார்ந்து அவர்கள் சுன்னத் வல் ஜமாஅத் பிரிவினர் என மஹ்ரூஃப் உறுதியாகக் கூறுகிறார். மேமன்களைப் பொறுத்தவரை கொழும்பு, கண்டி, காலி, நீர்கொழும்பு போன்ற மிக முக்கியமான நகரங்களிலேயே வாழ்கின்றனர். பெரும்பாலும் உட்குழுத் திருமண உறவைப் பேணுபவர்கள். ஆயினும் சில மீறல்களும் நிகழ்வதுண்டு. மேமன் சமூகத்தினரிடையே இருக்கும் உருவ ஒற்றுமை, சமூக மற்றும் வரலாற்றுப் பின்னணி, மொழி போன்றவை இந்த உட்குழுத் திருமண உறவைப் பேணுவதில் பங்களிப்புச் செய்கின்றன.
அவர்கள் தங்களுக்கான தனியான பள்ளிவாசல்களை அமைத்து அங்குதான் தொழுகை நடத்துகின்றனர். தங்களுக்கான தனியான திருமணப்பதிவினையும், காஸி நீதிமன்றத்தையும் கொண்டுள்ளதாக மஹ்ரூஃப் குறிப்பிடுகிறார். ஆனால் இன்றுள்ள நிலையில் இந்த அமைப்புகள் அவர்களிடம் இருக்கிறதா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.
மேமன்கள் தொடக்கத்தில் தங்களது தாய்மொழியாக வேறு மொழியையே இங்கு பயன்படுத்தினர். அது சிந்தி இன மொழி எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த மொழியை மேமனிஸ் மொழி என அழைத்தனர். இதற்கு எழுத்து வழக்கில்லாத வெறும் பேச்சு வழக்கை மட்டுமே இம்மொழி கொண்டிருந்தது. 1956 இல் கொண்டு வரப்பட்ட மொழிச்சட்டம், கல்வி மொழி மாற்றம் என்பவற்றை அடுத்து மேமன்கள் சிங்களம் அல்லது தமிழ் போன்ற சுதேச மொழிகளுள் ஒன்றைத் தழுவ வேண்டி இருந்தது.
ஆயினும் சராசரி மேமன் சமூகத்துப் பையன் ஒருவன் தனது தந்தை அல்லது உறவினர் கடையில் பயிற்சி பெறுவதற்காக பள்ளியை இடைநடுவிலேயே விட்டுவிடுவதால் இலங்கைச் சுதேச மொழிகளைத் தழுவும் போக்கு குறைவாகவே நடந்தது.
மேமன்கள் வர்த்தக ரீதியாக மிகவும் உறுதியான நிலையில் இருந்தனர். அவர்கள் ஆடைத் தொழில் மீதே அதிக கவனம் செலுத்தினர். இந்தத் தொழில் மீதான அவர்களின் அக்கறை ஒரு நூற்றாண்டுக்கும் மேலானது என மஹ்ரூஃப் குறிப்பிடுகிறார்.
மேமன்களின் ஆடைத் தொழில் மிகவும் விரிவுபட்டதாக இருந்தது. இந்திய உப-கண்ட நாடுகளோடும், அதற்கு வெளியேயும் அவர்கள் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்தனர்.[iii]
மேமன்களின் ஆடைத் தொழில் துறை பற்றி மஹ்ரூஃபின் விரிவான விபரிப்பைத் தருகிறேன். “ஆடை (Textiles) வணிகத்துக்கு, குறிப்பாக அதன் சில்லறை வணிகத்துக்கு விரிவான மூலதனம் தேவைப்படுகிறது. இந்த தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய பல்வேறு விதமான ஆடைகளின் விற்பனை தேவையாகிறது. இலாப வரம்புகள் அதிகமாக இருந்தாலும், உடுப்புக் கடை மண்ணாகாமல் இருக்க சிறப்பு வழிமுறைகளை கட்டாயம் எடுத்தாக வேண்டும். வர்த்தகத்திற்கான மேமன்களின் நீண்ட கால அர்ப்பணிப்பு அவர்களை ஆடைகள் மற்றும் வாடிக்கையாளர் விருப்பங்களைப் புரிந்துகொள்ளும் நுணுக்கங்களில் நிபுணர்களாக ஆக்கியது. எல்லாவற்றிற்கும் மேலாக, 1939 முதல் 1970 வரை பயன்பாட்டில் இருந்த ஒதுக்கீட்டு முறை (Quota system), மேமன்களின் நீண்டகால வணிகம் பிழைத்திருப்பதை உறுதி செய்தது“.
The agent of Government of India in Ceylon 1943 ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் மேமன்களின் ஆடை வர்த்தகம் பற்றி இப்படி ஒரு விவரணம் வருகிறது. “இந்திய ஆடைகளின் இலங்கை வர்த்தகம் விஷேடமாக குறிப்பிடத்தக்கது, தீவில் உள்ள மேமன்கள், சிலோனியர்களுக்காக இந்தியாவில் இருந்து சாரன்கள் மற்றும் பிற கைத்தறி வகை துணிகளை இறக்குமதி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 44 மில்லியன் கெஜம் (Yards) ஆடைகள் ஏற்றுமதிக்கான ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டது“.
1960 களுக்குப் பின்னர் இலங்கை மேமன் சமூகத்தினரின் வாழ்க்கை முறை மற்றும் சிந்தனையிலும் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அப்போதைய இலங்கை அரசாங்கம் ஒரு கடுமையான இறக்குமதி மாற்றீட்டுக் கொள்கையை நிறுவியதே இதற்குக் காரணமாக அமைந்தது. இதன் விளைவாக, அவர்கள் நெசவு மற்றும் ஆடை உற்பத்தி வர்த்தகத்திலும் நுழைந்தனர். தைத்த ஆடைத் தொழிற்சாலைகள் (Ready-made garments) இலங்கை முழுவதும் பரவின. 1977 இல் அது இன்னொரு வடிவத்தை அடைந்தது. அக்காலப்பகுதியில் இலங்கையில் அமைந்த அரசாங்கம் உலகமயமாக்கல் செயன்முறையை ஏற்றுக்கொண்டு வர்த்தக வாய்ப்புகளைத் திறந்துவிட்டது. இதன் மூலம் மேமன்கள் மீண்டும் வர்த்தக வாய்ப்புகளை பெற்றனர். அவர்கள் தங்கள் உலகளாவிய தொடர்புகள் மூலம் அந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தினர். அதேநேரம், பொருளாதாரம் சில மேமன்களை உயர்கல்வி கற்க கட்டாயப்படுத்தியது. அதன் நிமித்தம் மேமன்கள் மத்தியிலிருந்து சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வைத்தியர்கள் போன்றோர் உருவாகினர். மேமன் சமூகத்திலுள்ள அதிகமான வைத்தியர்கள் பாகிஸ்தானியப் பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டம் பெற்றவர்கள் என மஹ்ரூஃப் குறிப்பிடுவார்.
இந்தியப் பிரிவினையை அடுத்தும் பல மேமன்கள் இலங்கையிலிருந்த மேமன்களாலும், தனவந்தர்களாலும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக மஹ்ரூஃப் குறிப்பிடுவார். அந்த நிகழ்வை மஹ்ரூஃப் பின்வருமாறு விபரிக்கிறார்.
“இந்தியத் துணைக்கண்டம் பிரிந்தபோது, பம்பாயிலிருந்து குறைந்த வருமானம் கொண்ட மேமன்கள் இடம்பெயர்ந்தனர். இந்த அகதிக் குடும்பங்களில் சிலர் மேமன் மற்றும் பிற தனவந்தர்களால் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர். மேமன்களின் இந்தக் குடும்பங்களில் நகைக் கலைஞர்கள், நகைப் பெட்டி தயாரிப்பாளர்கள், உடுப்பு ஒளிர்தகட்டுத் தொழிலாளர்கள் (sequin workers) மற்றும் மிட்டாய் தயாரிப்பவர்கள் போன்றோர் இருந்தனர். இந்தப் பகுதியின் ஏழை முஸ்லிம்களுடன் நேரடியாக இணைந்துகொள்வதன் மூலம், இலங்கை முஸ்லிம்களின் உள்நாட்டு மொழியான தமிழ் மொழியைப் பரிச்சயப்படுத்திக் கொண்டு, அவர்கள் இலங்கை முஸ்லிம்களுடன் முழுமையான ஒருங்கிணைப்பை நோக்கிச் சென்றார்கள்” என எழுதுகிறார்.
இன்று இலங்கை மேமன்கள் வர்த்தகத்தில் எந்தளவு தூரம் செல்வாக்குடன் இருக்கின்றனர் என்பது பரந்த ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய விடயமாகும். இன்றைய மேமன்கள் மத்தியில் சமூக ,கலாசாரப் பரிவர்த்தனையை மேற்கொள்ளக்கூடிய வகையில் மேமன் சங்கம் ஒன்றும் இயங்குவதாக அறிய முடிகிறது. மேமன்களில் சிலர் தமிழ் இலக்கியத்துக்கும் பங்களிப்புச்செய்துள்ளனர். அந்தவகையில் மேமன் கவி உடனடியாக நினைவுக்கு வருகிறார். அவர்தன் புனைபெயராக தன் மரபினத்தின் பெயரையே சூட்டி இருப்பதால் அவரை அடையாளம் காண்பது இலகுவாக இருக்கிறது.
அடிகுறிப்புகள்
[i] Wikipedia.org
[ii] M.M.M. Mahroof- The sub communities of the Muslims of SriLanka. (Exploring SriLankan Muslims: selected writing of MMM.Mahroof, edited by M.L.A. Cader, South Eastern University of Sri Lanka) p. 7
[iii] ibid, p.7