நமது உணவுப் பாரம்பரியத்தில் சைவ உணவு, அசைவ உணவு என்ற வகைப்பாட்டுக்குள் சைவ உணவுப் பழக்கவழக்கங்களுள் பாலும் பால்சார்ந்த உணவுகளும் அடங்குகின்றன.
மேலைத்தேய உணவு வகைப்பாடுகளுள் பாலினை தாவர உணவுகளுடன் சேர்த்து உண்ணுபவர்களை லக்ரோ வெஜிரேறியன் (Lacto vegetarians) என்பார்கள். மேலைத்தேயத்தவர்கள் தனியே தாவர உணவுகளை உண்பவர்களுக்கு (Pure vegetarians) சில ஊட்டச்சத்து குறைபாடுகள் வரும் என குறிப்பிட்டுள்ளார்கள். உதாரணமாக உடலுக்குத் தேவையான ஆனால் மனித உடலினால் தொகுக்க முடியாத, தாவர உணவுகளில் இல்லாத சில புரதக்கூறுகளான அமினோ அமிலங்கள் (Essential Amino Acids), சில கொழுப்பின் கூறுகளான கொழுப்பமிலங்கள் (Essential Fatty Acids) என்பன இவ்வாறானவர்களுக்கு கிடைக்காது போகும். இவ்வாறான சத்துக்ககள் ஏனைய உயிரினங்களின் முட்டை, இறைச்சி, பால் என்பவற்றில் இருந்து மனிதனுக்கு கிடைக்கின்றன.
நமது பாரம்பரிய சைவ உணவுப்பழக்கத்தில் பால் மிகமுக்கியமான உள்ளடக்கமாக உள்ளது. உயிர்களைக் கொல்லாமல், அவற்றுக்கு தேவையானது போக மிகுதிப்பாலை நாம் பயன்படுத்திக் கொள்கின்றோம். இதன் மூலம் எமது பாரம்பரியத்தில் சைவபோசனத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு மேற்படி ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அரிது.
பால் எனும்போது பிரதானமாக பசுவின் பாலே கருத்திற் கொள்ளப்படுகின்றது. எனினும் ஆடு, எருமை போன்றவற்றின் பால்களும் எமது உணவுப்பழக்கத்தில் காணப்படுகின்றன.
பசுவின் பால்
“…………..வாசமார் பாற்குப் பித்தம் வரட்சியு மிருமன் மாறும்”
“கயமுதற் பிணிகளும் போங் காயத்திற் பெலனு முண்டாம்
நயமதாய்த் தாது விர்த்தி நாளுமுண் டாகு மென்ப
வியன்மிகு வெள்ளை யாப்பான் மெல்லிதா மெவர்க்கு மேற்கும்
கயமுறு கபிலை யின்பால் கனத்திடு மென்பர் மாதோ”
பக்.84, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி.
வாசமுள்ள பாலுக்கு பித்த தோசத்தினால் உடலில் ஏற்படும் வறட்சி, வறட்டிருமலும் மாறும். உடலை மெலிவடையச் செய்யும் பிணிகளும் குறைந்து உடலில் பலம் உண்டாகும். பாலினால் உடற்தாதுக்கள் (சாரம் -Serum, செந்நீர் – Blood, தசை – Muscle, மூளை – Brain, என்பு – Bone, கொழுப்பு – Fat, வெண்ணீர் – Sperm / சுரோணிதம் – Egg) விருத்தியடையும்.
குறிப்பாக பாலில் உள்ள சத்துக்களானவை உடலினால் உடனடியாகத் பயன்படுத்திக் கொள்ளமுடியும் என சித்தமருத்துவம் கூறுகின்றது. இதனால் உடல் நலிவுற்ற நிலையில் பால் சிறந்த ஆகாரமாகப் பயன்படுகின்றது.
பசுப்பால் தொடர்பில் சித்தமருத்துவ நூல்களில் பசுக்களின் நிறத்தை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் குணங்களும் மாறுபட்டுக் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றது. அதற்கமைய இந்தப்பாடலில் வெள்ளைநிறப் பசுவின் பால் அனைவருக்கும் பொருந்தக்கூடியது என்றும் ஒவ்வாமைகளை ஏற்படுத்தாது என்றும் குறிப்பிடப்படுவதுடன், நலிவுற்ற கபில நிறப் பசுவின் பால் அஜீரத்தை ஏற்படுத்தும் எனப்படுகின்றது.
ஆனால் தற்கால விஞ்ஞானரீதியிலான பார்வையில் இவைபற்றிய முடிவுகள் எதுவும் இல்லை. பாலானது அனைத்து வகையான சத்துக்களையும் கொண்ட நிறையுணவாகக் காணப்படுகின்றது. பாலில் காணப்படும் புரதம் வளரும் குழந்தைகள், சிறுவர்களுக்கு சிறந்ததொன்றாகக் காணப்படுகின்றது,
உயிர்ச்சத்துக்களில் B வகை உயிர்ச்சத்துக்களை அதிகமாகக் கொண்டது. குறிப்பாக B12 ஐ அதிகமாகக் கொண்டது. B12 ஆனது நரம்புக்கலங்கள், குருதிக்கலங்கள் ஆரோக்கியத்துக்கு அவசியமானதொன்றாகும்.
200 மி.லீற்றர் பாலில் இருந்து 1.9 மைக்றோகிராம் B12 கிடைக்கின்றது. பொதுவாக 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சிறுவர்களுக்கு ஒரு நாளைக்கு தேவையான B12 ஆனது, 0.4 – 1.8 மைக்கிறோ கிராமும், வயதுவந்தோருக்கு 2.4 மைக்றோ கிராமும், கர்ப்பிணித்தாய்மார், பாலூட்டும் தாய்மார் போன்றோருக்கு 2.8 மை.கிராமும் ஆகும்.
அதேபோல் சாதாரண ஒருவருக்கு ஒருநாளைக்குத் தேவையான சத்துக்களின் அளவுகளில், பின்வரும் வீதங்களில் 240 மி.லீ பாலில் இருந்து கிடைக்கின்றன.
- புரதம் – 16%
- மாப்பொருள் – 5%
- கொழுப்பு – 10% (நிரம்பிய கொழுப்பானது 25%, கொலஸ்திரோல் 12%)
- கல்சியம் – 23%
- சோடியம் – 5%
- உயிர்ச்சத்து A – 3.2%
பாலில் நிரம்பிய கொழுப்பமிலங்கள் மற்றும் கொலஸ்திரோல் குறிப்பிடத்தக்களவு காணப்படுவதால் அதிஉடற்பருமன், உடல்வலுப் பிரயோகமற்ற தொழில் உடையவர்கள், வயதானவர்கள், கொலஸ்திரோல், நீரிழிவு, இதய நோய் உடையவர்கள் பாலினை குறைப்பது நன்று. அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பாலினை பயன்படுத்துதல் சிறந்தது. அல்லது மோராக அருந்துதல் நன்று.
இதனாலேயே சாதாரணமாக பாலினை பயன்படுத்துவது தொடர்பில் சித்தமருத்துவ நோயில்லா நெறியானது பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“… பால்சுருக்கி நெய் உருக்கி, மோர்பெருக்கி …” உண்ண வேண்டும் என அறிவுறுத்துகின்றது.
இங்கு “பால் சுருக்கி” என்னும்போது பாலினை அடுப்பினில் குறைந்த நெருப்பில் காயவிடும்போது பாலின் மேல் ஆடை படரும். இவ்வாறு படரும் பால் ஆடையினை அகற்றி குடிக்கும்போது பாலில் உள்ள கொழுப்பானது குறைவடைகின்றது. இதனால் பால் கொழுப்புக்களினால் ஏற்படும் உபாதைகள் குறைவடைகின்றன.
சித்த மருத்துவத்தில் சுவைகளின் அடிப்படையில் எந்தெந்தச் சுவைகளை பாலுடன் கலந்து அருந்தலாம் என குணபாடம் சீவ வகுப்பு என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஆறின் முதன்டுவா காவரப்பாலை வளர்க்கு
பீறின் சுவையிரண்டேற்றென் பர்கார்ப் – பூறினுறுங்
கண்டோக்கு முண்ணென் களையொழிப்பாத் தோடருந்தப்
பண்டாக்கு முண்ணி பகர்”
பக்.512, குணபாடம் சீவ வகுப்பு
அறுசுவைகளில் பாலுடன் புளிப்பு, துவர்ப்பு, கைப்பு சுவைகளை பாலுடன் சேர்க்கக்கூடாது என்றும், கார்ப்பு, இனிப்புச் சுவைகளை சேர்த்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பசுவின் இளந்தயிர் – முதுதயிர்
“இளந்தயிர் கிருச்சி ரத்தோ டிளைப்பருந் தாகம் போக்கும்
வளர்ந்திடும் வாத மப்பால் வருமுது தயிர்க்கு ணத்தை
விளம்பிடின் மதுர மாகு மேம்படு பெலனுஞ் சாரும்
உளந்தனின் மகிழ்ச்சி யுண்டா முறுதிமிர் தீர்க்கு மன்றே”
பக்.85, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி
இளந்தயிர் (இரவு உறையிட்டு அடுத்தநாள் காலையில் பெற்றுக்கொள்ளும் தயிர்) – சிறுநீர்ப் பாதையில் குத்தல், எரிவு, வலி என்பவற்றுடன் முகத்தில் வீக்கத்தை உண்டுபண்ணி சிறுநீர் சொட்டுச் சொட்டாக வெளியேறும் நிலையான கிருச்சிரம் (சிறுநீர் சொட்டு சொட்டாக போகுதல்) களைப்பு, தாகம் என்பவற்றைப் போக்கும். வாததோசத்தை வளர்ப்பதன் மூலம் உடற்செயற்பாடுகளை சீராக்கும்.
முதுதயிர் – (இளந்தயிர் காலத்துக்கு பின்னர் பயன்படுத்தும் தயிர்) இனிப்புச் சுவையின் குணங்கள் மேம்பட்டு உடலுக்கு பலத்தைத் தரும். உள்ளத்தில் மகிழ்ச்சி உண்டாக்கும். கை கால் மரத்துப்போதலை நீக்கும்.
தயிரானது உடலுக்குச் சிறந்த உணவாகக் காணப்படுகின்றது. குளிர்ச்சித்தன்மையைக் கொண்டது. இதனால் இரவு உணவில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. அதேபோல் வாத நோய்களிலும் சேர்க்கப்படுவதில்லை.
தயிரில் உடலுக்கு நன்மையைத்தரும் நன்நுண்ணுயிரிகளான (Probiotics) பக்ரீரியாக்கள், மதுவம் (Yeast) என்பன காணப்படுகின்றன. இவை வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, வயிறு ஊதுதல், சமிபாடின்மை, மலக்கட்டு போன்ற உணவுக்கால்வாய் உபாதைகள் இல்லாது சமிபாட்டுச் செயற்பாடுகள் சீராக நடக்க உதவுகின்றன. பால் ஒவ்வாமையைக் குறைக்கின்றது.
மோர்
தயிரினை மத்தினால் கடைந்து கொள்ளும்போது பெறப்படுவது மோர் ஆகும். இங்கு வெண்ணெய் எடுத்த மோராகவும், வெண்ணெய் எடுக்காத மோராகவும் பயன்படுத்தப்படுகின்றது.
நமது பாரம்பரியத்தில் வெண்ணெய் எடுத்த மோரே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“கரைத்ததுடன் வெண்ணெய் தன்னைக் கவர்ந்திடு மோர்க்கு ணங்கேள்
செரித்திடு மன்னந் தானுஞ் செவ்வையாய் மலமும் போகும்
அருத்தியாய்ப் பசியுண் டாகு மவ்வெண்ணெ யெடாத மோராற்
சிரத்துநோய் கண்ணோய் காசஞ் செறிபிர மேகத் தோடே
உட்டணங் கிராணி பித்த முற்றநீர்க் கடுப்பு மாறும்
மட்டில்வெண் ணெய்க்குத் தாது வளர்ந்திடும் பெலனுண் டாகும்
வெட்டைமூ லம்போங் கண்ணு மிகவொளி யுண்டா மெய்யும்
திட்டமா யழகுண் டாகுந் தீர்ந்திடு மிரத்த பித்தம்”
– பக்.85, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி
வெண்ணெய் நீக்கப்பட்ட மோரினால் உணவு நன்றாகச் சமிபாடு அடையச் செய்திடுவதோடு மலத்தினையும் நன்றாகப் போகச் செய்யும். தொடர்ச்சியாக நல்ல பசியும் உண்டாகும்.
வெண்ணெய் நீக்கப்படாத மோரினால் சிரசில் ஏற்படும் நோய்கள், கண் நோய்கள், ஒவ்வாமைகள், நீரிழிவு, உடற்சூடு, நாட்பட்ட கழிச்சல், பித்த அதிகரிப்பினால் ஏற்பட்ட நீர்க்கடுப்பு என்பன குறைவடையும்.
நெய்யற்ற மோரினை மதுமேக நோயில் (நீரிழிவு) அருந்த வேண்டும் என மேகவாகடத் திரட்டு எனும் நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
“ஆரே ஆரே வருகின்றீர்
ஐயும் பித்தும் அகத்தடக்கி
நீரே நீரே ஆகிலும் கேள்
நெய்யற்ற மோரே மிகப்பருகி
பாரீர் பாரீர் முசுட்டையிலே
பறித்துப் பறித்து அவையின்தூறு
தூறே தூறே கொள்கின்றேல்
தோற்றீர் நீரே தோற்றீரே”
பக். 14, மேகவாகடத்திரட்டு.
கபம், பித்தம் ஆகிய குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு வருகின்ற மதுமேக நோயில் தயிரினைக் கடைந்து நெய்யினை எடுத்தபின், மோரினை பருகுவதுடன் முசுட்டை இலை, அதன் வேர் போன்றவற்றை முறையே பத்தியமாக மருந்தாக உட்கொள்ளின் மதுமேகநோய் கட்டுப்படும் எனக் குறிப்பிடப்படுகின்றது.
பாலில் உள்ள மாப்பொருள், கொழுப்பு என்பன மதுமேக நோய்நிலையில் அபத்தியமாகின்றன. மோரில் கொழுப்பின் அளவானது குறைக்கப்படுகின்றது. “மோர் பெருக்கி” என்னும் போதும், போதுமான அளவு நீர் சேர்த்து மோரினை நன்றாக ஐதாக்கிக் கொள்ளும்போது மோரில் உள்ள மாப்பொருளானது மேலும் ஐதாக்கப்படுகின்றது. இதனால் விரைவாக குளுக்கோஸ் அகத்துறிஞ்சப்பட்டு குருதியில் குளுக்கோஸ் செறிவாக்கப்படுவது (Glycemic load) குறைக்கப்படுகின்றது. இதனால் மோரானது சிறந்த பத்தியப்பொருளாகப் பயன்படுகின்றது.
பால், மோர் என்பவற்றுக்கிடையிலான மாப்போசணைக் கூறுகளில் புரதச்சத்து, மாப்பொருளில் மாற்றமிராது. ஆனால் கிடைக்கும் கலோரியில், கொழுப்பில் அதிகளவிலான மாற்றம் இருக்கும்.
வெண்ணெய்க்கு உடற்தாதுக்கள் வளர்ச்சி பெறும், பலமுண்டாகும், உடற்சூடு, அதனால் ஏற்படும் மூல நோய் என்பன குறையும். கண்ணுக்கு ஆரோக்கியத்தை வழங்கும். உடல் அழகுபெறும். மூலத்தில் இருந்து இரத்தம் வடிதல் போன்ற சிறு சிறு இரத்தக் கசிவு நிலைகளைக் குறைக்கும்.
நெய்
“வாதமை பித்தந் நாளும் வருந்திடா திருக்கு நெய்க்குச்
சீதமு மழகு முண்டாஞ் சிறப்புறக் குளிருங் கண்கள்
தாதுவர்த் திக்கும் பித்தந் தவிர்ந்திடு மிளமை யுண்டாம்
ஓதபல் லெலும்பு கண்ணோ யொழித்திடு மென்பர் சித்தர்”
பக்.85, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி
நெய்க்கு வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று முத்தோசங்களும் சமநிலை குழம்பாமல் இருக்கும். உடலில் குளிர்ச்சியும் அழகும் உண்டாகி கண்கள் ஆரோக்கியமடையும். இளமை உண்டாகும். பல், எலும்பு, கண்கள் தொடர்பான நோய்கள் குறைந்திடும்.
ஒரு நாளைக்கு உணவில் சேர்க்கக் கூடிய நெய்யின் சராசரி அளவு 1 தேக்கரண்டி – 1 மேசைக்கரண்டி ஆகும். ஒருநாளைக்கு சராசரியாக 13 கிராம் நிரம்பிய கொழுப்பு (Saturated fat) எமது உடலுக்கு போதுமானது. 1 மேசைக்கரண்டி நெய்யில் 9 கிராம் நிரம்பிய கொழுப்பு உள்ளது. எனவே இதனைக் கவனத்தில் கொள்வது சிறந்தது.
வெண்ணெய், நெய் என்பவற்றில் சத்துப் பெறுமானங்களில் அதிக மாற்றங்கள் இல்லையெனினும் வெண்ணெய்யினை நன்றாக உருக்கி நெய்யாக வைத்திருக்கும்போது நீண்டகாலம் வைத்திருக்கலாம். அத்துடன் வெண்ணெய்யில் உள்ள நீர் இல்லாதாக்கப்பட்டு நெய்யானது வெப்ப வீரியமுள்ள பசியைத் தூண்டக்கூடிய உணவாக மாற்றப்படுகின்றது. ஆனால் நெய்யில் நிரம்பிய கொழுப்பமிலங்கள் அதிகம் இருப்பதால் இலகுவாகச் சமிபாடு அடையமுடியாது தோலுக்குக்கீழ் சேமிக்கப்படுகின்றது. இந்தச் செயற்பாட்டில் கெட்ட கொழுப்பானது (LDL cholesterol) உடலில் அதிகம் உற்பத்தியாகின்றது. அத்துடன் நெய்யிலும் கணிசமான அளவு கெட்ட கொழுப்புக் காணப்படுவதால் ஆரோக்கியத்துக்குப் பாதகமாக அமைகின்றது. எனவே அளவுடன் எடுத்து ஆரோக்கியமாக வாழ்வோம்.
சில பால் சார் பாரம்பரிய உணவுகள்
01. பாலுடை அடிசில் / பாற்சோறு (அரிசிசார்ந்த உணவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது)
02. நெய்யுடை அடிசில் / நெய்ச்சோறு
“வெறுநெய்யுஞ் சோறுமுண்ணில் விருபல கண்ணுங்
கிறு கிறுத்த பித்தநோய் கிட்டா – தறிவிக்குங்
கண்ணுக்கு மாகுளிர்ச்சி கட்டுமிகச் சீரணமா
முண்ணற்குப் பத்தியமா முன்”
-பக்.389, பதார்த்தகுண சிந்தாமணி
நெய்யும் அன்னமும் கலந்துண்ணில் முதியோர், வறியோருக்கு பலமும், கண்ணுக்கு குளிர்ச்சியும், தலைச் சுற்றுடன் கூடிய பித்த நோய் ஏற்படாது. சமிபாடு சீராகும். நோய்களுக்கு சிறந்த பத்திய உணவாகும்.
வறுமையால் வயிறு ஒடுங்கி வயிற்றில் பல வரிகளைக் கொண்ட வாட்டமுடைய புலவர்களுக்கு அவர்கள் உடல் பலம்பெற நெய்யுடை அடிசில் கொடுத்தான் என பெருஞ்சித்திரனாரால் பாடப்பெற்ற புறநானூற்றுப்பாடல் கூறுகின்றது.
“…அவிழ்புகு வறியா தாகலின் வாடிய
நெறிகொள் வரிக்குடர் குளிப்பத் தண்ணெனக்
குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில்
மதிசேர் நாண்மீன் போல நவின்ற….”
பக்.41, சுவையான சங்ககால தமிழர் சமையல்.
தேவையான பொருட்கள்
- அரிசி – 200கிராம்
- கறுவா – சிறிதளவு
- கராம்பு – 2 – 3
- பொடியாக நறுக்கிய இஞ்சி – 1 மேசைக்கரண்டி
- ஏலக்காய் – 2
- சீரகம் – 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி இலை / கறிவேப்பிலை – தேவையான அளவு
- நெய் – 30 கிராம்
- தேங்காய்ப்பால் – 200மி.லீ
- தண்ணீர் – 200மி.லீ
- உப்பு – தேவையான அளவு
தாச்சியில் நெய்விட்டு கறுவா, கராம்பு, ஏலக்காய், சீரகம் என்பவற்றைச் சேர்த்து வதக்கவும். கூடவே நறுக்கிய இஞ்சியைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். சுமார் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறிய அரிசியினை நன்கு வடித்து இவற்றுடன் சேர்க்கவும். கொத்தமல்லி இலை / கறிவேப்பிலையை நறுக்கி சேர்த்து வதக்கவும்.தேங்காய்ப்பால், தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சிறிதாகச் சேர்த்து சோறு குழைந்து போகாமல் வேகவைத்து இறக்கி நன்கு பிரட்டிக்கொள்ளவும். இதனை இஞ்சிச் சம்பலுடன் உண்பார்கள்.
03. தயிருழுந்து வடை
“உளுந்தின் பருப்பை யுலர்ததி யூறச்செய்
தழுந்தா தரைத்து வடையாக்கிச் – செழுந்தேனிற்
கூட்டியுண வையபித்த சோபையறு மூதையிலை
தீட்டிவேர் கண்மாதே தேர்”
பக்.402, பதர்த்தகுண சிந்தாமணி.
உளுத்தம் பருப்பை புளித்த தயிரில் ஊற வைத்து பெரும்படியாக அரைத்து சுட்ட வடையை தேனில் தோய்த்து உண்ண கபம் பித்தம் சேர்க்கையால் ஏற்படும் உடல் வீக்கங்கள் குறையும்.
04. புளி தயிர்க்குழம்பு
தேவையான பொருட்கள்
- தயிர் – 200 மி.லீ
- தேங்காய் – 30 கிராம்
- மிளகு – 1 தேக்கரண்டி
- நெய் / தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
- புளிச்சாறு – 1 மேசைக்கரண்டி
- கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
- துவரம் பருப்பு – 2 தேக்கரண்டி
- மல்லி – 2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை – சிறிதளவு
- சீரகம் – 1 தேக்கரண்டி
- இஞ்சி – சிறு துண்டு
- உப்பு – 1 தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
ஊறவைத்த கடலைப்பருப்பு, துவரம் பருப்புடன் மல்லி, வெந்தயம், தேங்காய், இஞ்சி, மிளகைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். தாச்சியில் நெய் / தேங்காய் எண்ணெய் ஊற்றி சீரகம், நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், உப்பு, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். பச்சைவாடை போனபின்பு நெருப்பினைக் குறைத்துக்கொண்டு, தயிரை கடைந்து தாச்சியில் இட்டுக் கலக்கி, போதுமான தண்ணீரை விட்டுக் கலக்கி குழம்பைக் கொதிக்கவிடவும். குழம்பு கொதிக்கும்போது புளிச்சாற்றினை சேர்த்துக் கொள்ளவும்.
05. மோர் அருந்தும் விதம்
தேவையான பொருட்கள்
- மோர் – 300மிலீ
- உப்பு – தெவையான அளவு
- சீரகம் – 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை – சிறிதளவு
- இஞ்சி – 1/2 இஞ்ச்
மோருடன் தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து அதனுள் சீரகம், உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கி அருந்துதல் வேண்டும்.
06. பால் அவல்
தேவையான பொருட்கள்
- அவல் – 100 கிராம்
- பால் – 200மி.லீ
- ஏலக்காய் – 2
- சீனி / சர்க்கரை தூள் – 50 கிராம்.
கழுவிச் சுத்தம் செய்த அவலை சூடான பாலில் சேர்த்து கலக்கவும், கூடவே பொடித்த ஏலக்காய், சீனி / சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து அவல் பாலில் ஊறியபின் உண்ணவும்.
எருமைப்பால் – தயிர் – வெண்ணெய் – நெய் – மோர்
“மேதிப்பா றயிரே வெண்ணெய் மிகுவிக்குங் கிரந்தி மந்தம்
சீதத்தோ டரிய வாயு செப்புறு நெய்யு மிற்றே
ஏதுற்ற வெண்ணெய் தன்னை யெடுத்தமோர் கிராணி தாகம்
வாதைக்கா மாலை பாண்டு வன்சல ரோகம் போக்கும்”
பக்.85, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி
எருமை மாட்டின் பால், தயிர், வெண்ணெய் கிரந்தி, மந்தம், சோர்வு என்பவற்றை மிகுவிக்கும். நெய்யினால் குளிர்ச்சி அதிகமாகி வாயுவும் ஏற்படும். வெண்ணெய் எடுத்த எருமைப்பால் மோர் , நீண்டநாட் கழிச்சல், நாவரட்சி, காமாலை, பாண்டு (குருதிச்சோகை), சலரோகம் என்பவற்றைக் குறைக்கும்.
வெள்ளாட்டுப்பால்
“வெள்ளாட்டு நீர்க்குப் பேதி மிகவுண்டாங் கிருமி வீக்கம்
கள்ளமில் லாமற் றீருங் காசில்பா னோய்க ளுக்காம்
உள்ளுறு கிரந்தி வாத முறுசூலை மந்தம் வாயு
விள்ளரும் பழைய காய்ச்சன் மேவிய குணமும் போமே”
பக்.86, அமிர்தசாகரம் பதார்த்தசூடாமணி
இங்கு வெள்ளாட்டு நீர் என்பது வெள்ளாட்டின் சிறுநீர் ஆகும். இதனை அருந்தின் பேதி உண்டாகும். அத்துடன் கிருமிகளால் உடலில் உண்டாகும் வீக்கங்கள் குறையும்.
ஆட்டுப்பாலுக்கு கிரந்தி, வாதத்தினால் ஏற்படும் வலி, மந்தம் அதனால் ஏற்படும் வாய்வு, சொல்லமுடியாத அளவு இருக்கும் நீண்டநாள் காய்ச்சல் (கணை) அதனால் ஏற்படும் உபத்திரவங்களும் குறையும். ஊட்டச்சத்துக்களைப் பொறுத்தவரையில் பசுப்பாலினை விட ஆட்டுப்பால் சற்று சிறந்ததாகவே காணப்படுகின்றது.
உணவுடன் பால் வகைகள் அருந்துவதால் பல நன்மைகள் கிடைக்கும். இவ்வாறான பாலினை இரவு உணவுக்குப் பின்னர் நன்கு வற்றக்காய்ச்சி அருந்தவேண்டும் என யாழ்ப்பாண சித்தமருத்துவ நூலான பரராசசேகரம் கூறுகின்றது.
“மன்னிர வுண்ட பின்பு வற்றக்காய்ச் சிடுமா வின்பால்
நன்னய மாகக் கொள்ளி னயனநோய் நாடா தோடும்
பன்னுதீ பனங்களெல்லாஞ் சமித்திடும் பலநோய் மாறும்
வன்னமெய் தடித்து விம்மி வளர்ந்திடும் வடிவுண்டாமே
பக். 112, பரராசசேகர வைத்தியம்.
பால் காய்ச்சும்போது நீர் சேர்த்துக் காய்ச்சுதல் வேண்டும். வெள்ளாட்டுப்பால், பசுப்பால் ஆயின் எட்டில் ஒரு பங்கு நீரும், ஏனையவற்றின் பால்களுக்கு சமபங்கு நீரும் சேர்த்து காய்ச்சுதல் வேண்டும். அதேபோல் பாலின் தரத்தினை அதிகரிக்கவும் ஒவ்வாமைகளைக் குறைக்கவும் சுக்கு (வேர்க்கொம்பு) அல்லது சிறுகாஞ்சோன்றி வேர் சேர்த்துக் காய்ச்சுதல் வேண்டும். இவ்வாறு காய்ச்சும் பால் வெள்ளாட்டுப்பாலுக்கு ஒப்பாகும் என சித்தமருத்துவ நூலான குணபாடம் தாதுசீவ வகுப்பு கூறுகின்றது.
“ஆடுபசும் பால்காய்ச்சி லசடப்பா கம்புனலாம்
நீடெருமை செம்மறிக்கு நேர்நேராந் – தேடரிய
சுக்குசிறு காஞ்சோன்றிவேர் கூட்டிச் சுவறியபா
லொக்கும்வெள் ளாட்டுப் பாற் குரை”
பக்.525, தாதுசீவ வகுப்பு, குணபாடம்
தொடரும்.