இஸ்ரேல் நாட்டின் பாலுற்பத்தி துறை சொல்லும் செய்தி
Arts
13 நிமிட வாசிப்பு

இஸ்ரேல் நாட்டின் பாலுற்பத்தி துறை சொல்லும் செய்தி

July 28, 2023 | Ezhuna

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதனை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

இஸ்ரேல் எனும்போது  எமக்கு உடனடியாக பல அரசியல் விடயங்கள் நினைவுக்கு வரும். நீண்டகால பலஸ்தீன – இஸ்ரேல் மோதல், ஹிட்லரின்  யூத இனச் சுத்திகரிப்பின் பின் உருவாகிய நாடு, பலம்மிக்க இஸ்ரேலிய இராணுவம் என பல விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றைவிட விவசாயத்தில், குறிப்பாக விலங்கு வேளாண்மையில் இஸ்ரேலியர் அடைந்திருக்கும் சாதனையை  எம்மில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இன்றைய நிலையில் ஒரு இஸ்ரேலியப் பசு, 305 நாட்களைக் கொண்ட பசுக்களின் வருடத்தில், 12000 – 14000 லீட்டர் பாலைச் சுரக்கிறது. ஒரு அமெரிக்கப் பசு 10000 லீட்டர் வரையிலும், ஒரு  அவுஸ்ரேலியப் பசு 6000 லீட்டர்  வரையிலும், ஒரு இலங்கைப்  பசு 600 லீட்டர் வரையிலும் கறப்பதை ஒப்பிட்டால் அதன் பிரம்மாண்டம் புரியும். 

holstein friesian

இஸ்ரேல், மத்திய கிழக்கில் அமைந்துள்ள மிகச் சிறிய நாடு. அதிக வெப்பமும் தண்ணீர் தட்டுப்பாடும்  வறண்ட நிலப்பரப்பும்  ( மூன்றில் இரண்டு பங்கு பாலைவனம் ) கொண்ட அந்தப் பிராந்தியத்தில், அதிக உற்பத்தியைக் கொண்ட கால்நடை வளர்ப்பு மிகக் குறைந்த சாத்தியத்தையே கொண்டிருந்தது. கால்நடைகளை சிறப்பாக வளர்க்கக் கூடிய புல் வெளிகளை அங்கு காண முடியாது என்பதுடன் வறட்சியைத் தாங்கக்கூடிய, உற்பத்தி குறைந்த உள்ளூர் கால்நடைகளே  ( டமாஸ்கஸ் இன பசுக்கள் ) வாழ்ந்திருந்தன. இந்நிலை நவீன இஸ்ரேலின் உருவாக்கம் நிகழ்ந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்  மாற்றமடையத் தொடங்கியது. யூதர்களின் நாட்டை உருவாக்குதல் எனும் எண்ணக் கருவுக்கு உயிர் கொடுக்கத் தொடங்கிய காலகட்டங்களில்  அந்தப் பிராந்தியத்தில் காணப்பட்ட வறட்சியை தாங்கும் டமாஸ்கஸ் இன மாடுகளுடன் நெதர்லாந்து  நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட Holstein friesian மாடுகள் கலப்பு செய்யப்பட்டு புதிய சந்ததிகள் உருவாகின. தொடர்ச்சியான  இனக்கலப்பு செயன்முறைகள் காரணமாக அதிக பாலுற்பத்தியையும் வறட்சியையும் தாங்கக் கூடிய ‘’இஸ்ரேலிய பிரீசியன்’’ இன மாடுகள் உருவாகின. இந்தக் கலப்பு இன உருவாக்கத்துக்கு கனடா, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட  Holstein friesion இன மாடுகளும் பயன்பட்டன.

உலக யுத்தத்தின் பின் ஐரோப்பிய நாடுகளிலிருந்து அகதிகளாக இஸ்ரேலுக்கு வரும் யூத மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அவர்களுக்கான பால் உற்பத்தித் தேவையும் கூடியது. இந்த நிலையில் இஸ்ரேலின் உருவாக்கத்துக்கு அமெரிக்கா வழங்கிய மீட்பு மற்றும் மீள் கட்டுமான நிதியில் கணிசமாக friesian இன மாடுகளை இறக்குமதி செய்து, மாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டனர். அதன்பின் தொடர்ச்சியான ஆய்வுகளையும் முறையான பாராமரிப்பையும் செய்து, இன்றைய திகதிக்கு உலகின் மிகச் சிறந்த மாடுகளை உருவாக் கியுள்ளனர். தமக்கு மாடுகளை வழங்கிய நெதர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மாடுகளின் உற்பத்தித் திறனையும் இஸ்ரேலின் மாடுகள் மிஞ்சியதுதான் சிறப்பானது.

old farm

இன்று இஸ்ரேலில் 750 வரையான பண்ணைகளில் 125000 வரையிலேயே மாடுகள் உள்ளன. இந்த மாடுகளைக் கொண்டுதான் பாரியளவில் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. (மாடுகளின் எண்ணிக்கையும் பண்ணைகளின் எண்ணிகையும் குறையும் அதே வேளை, ஒரு மாட்டின் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது.) இன்னுமின்னும அந்த மாடுகளின் அடுத்த சந்ததிகள் அதிக பால் உற்பத்தியை தரும் வகையில் தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்தப்பட்டு, அவற்றின் எண்ணிக்கை குறைக்கப்படும் வகையில், திட்டங்கள் தீட்டப் படுகின்றன. இலங்கை இந்திய நாடுகளில் மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகவும் உற்பத்தித் திறன் குறைவாகவும் உள்ளன.(இன்று உலகில் இந்தியா அதிக பால் உற்பத்தியை செய்கின்ற போதும், அவர்களின் ஒரு மாட்டின் பால் உற்பத்தி மிக மிகக் குறைவு. எண்ணிக்கை அடிப்படையில் தான் அவர்களின் உற்பத்தி தீர்மானிக்கப்படுகிறது. இது வினைத்திறன் அற்ற முறையாகும். இந்தியாவிலும், குறிப்பாக குஜராத் பகுதிகளில் இஸ்ரேல் வகையான பண்ணைகள் இஸ்ரேலின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளன.)

pedameter

இஸ்ரேலிய  மாட்டுப் பண்ணைகளின் சிறப்பு என்னவென்றால் அங்குள்ள பெரும்பாலான மாடுகள் கணணி மயப்படுத்தப்பட்டுள்ளதுதான். மாடுகளில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள், மத்திய வலையமைப்பில் தொடர்பில் இருப்பதால், ஒவ்வொரு மாடு தொடர்பான சகல விடயங்களும் அங்கு பதிவுசெய்யப்படும். பொதுவான விடயங்களான இனம், வயது, உரிமையாளர் விபரம் தவிர்ந்து இதயத் துடிப்பு, கர்ப்ப நிலை, சினை அறிகுறி, வெப்பநிலை மாற்றம், பாலின் அளவு, பாலின் தரம்  என மிக நுண்ணிய விடயங்களும் அளவிடப்பட்டு, மத்திய வலையமைப்புக்கு தெரியப்படுத்தப்படுவதனூடாக, அந்தந்தப் பகுதியின் கால்நடை வைத்தியர்கள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப அலுவலர்களுக்கு  தகவல் சென்றடையும். பின்னர், அவர்கள் தமது கடமையை சரிவரச் செய்வார்கள். இப்படியான வலையமைப்பு உலகில் வேறு எங்கும் இந்தளவு வினைத்திறனாகக்  கிடையாது.

இங்குள்ள மாடுகள் 100% செயற்கை முறைச் சினைப்படுத்தல் மூலமே சினைப்படுத்தப்படுகின்றன. மாடுகளைச் சினைப்படுத்த “sion” எனும் நிறுவனம் செற்படுகிறது. நவீன முறையான உபகரணங்களும் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பையும் இந்த நிறுவனம் கொண்டிருப்பதால் இனப்பெருக்க செயற்பாடுகள் பெரிதும் தோல்வியடைவதில்லை. மிகச் சிறந்த காளைகள் தேர்வு செய்யப்பட்டு தொடர்ச்சியான ஆய்வுகள் மற்றும் முறையான மேலாண்மை செயற்பாடுகளின் அடிப்படையில் மிக மிகப் பொருத்தமான காளைகளின் விந்தணுக்கள் மூலம் பசுக்கள் சினைப்படுத்தப் படுகின்றன. அடிக்கடி அந்த விந்தணுக்களின் தரம் சோதிக்கப்படுவதோடு தரம் குறைந்தவை நீக்கப்படும். கன்றுகளின் பால் உற்பத்தி, தரம், நோய் எதிர்ப்பு தன்மை என பல விடயங்கள் அவதானிக்கப்பட்டும் காளைகள் தேர்வுசெய்யப்பட்டு விந்தணுக்கள் சினைப்படுத்தலுக்கு பயன்படும்.  இங்குள்ள பசுக்கள், காளைகளின் விபரங்கள் “Israeli breeding and herd book” எனும் புத்தகமாக பதியப்பட்டு பராமரிக்கப்படும். அத்துடன் அந்தப் புத்கத்திலுள்ள விடயங்கள் அடிக்கடி செம்மை செய்யப்படும். இந்தப் புத்தகத்தை தயாரிக்கும் குழுவில் இஸ்ரேலிய அரசு நிறுவனங்கள், கூட்டுறவுகள், பால் பண்ணைச் சங்கங்கள், கால்நடை வைத்தியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், சினைப்படுத்தும் நிறுவனம் என பலர் இடம்பெற்றிருப்பார்கள். பால் மாடு வளர்ப்பின் முக்கிய நிறுவனமாக Israeli dairy board செயற்படும். மாடு வளர்ப்பு தொடர்பான சகல  விடயங்களையும் இந்த அமைப்பே கையாளுகிறது. பால் உற்பத்தி, மாடு வளர்ப்புத் தொடர்பான கொள்கைகள், தீர்மானங்களை இஸ்ரேலிய அரசு சார்பாக இந்த அமைப்பே கையாளும்.

பாலுற்பத்தி இங்கு அரசால் தீர்மானிக்கப்படும்  கோட்டா முறையிலேயே இடம்பெறுகிறது. ஒவ்வொரு பண்ணையும் வருடா வருடம் உற்பத்தி செய்யத்தக்க பாலின் அளவு நாட்டின் தேவைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும். இது மாதத்துக்கு கணிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். உற்சவ காலங்களில் இந்தக் கோட்டா அதிகரிக்கப்படும். பாலின் விலை சந்தையின் உற்பத்திச் செலவின் அடிப்படையில் அடிக்கடி மாற்றம் செய்யப்படும். இங்கு 100% முறைப்படுத்தப்பட்ட (Formal) பாலுற்பத்தியே நிகழ்கிறது. உற்பத்தியாகும் ஒரு துளி பாலும் முறையாக ஒழுங்கமைக்கப்பட்டது.

இஸ்ரேல் ஒரு வறண்ட நாடு. சகல பருவங்களிலும் தண்ணீர் கிடைப்பது அரிதெனும் நிலையில், குறைந்தளவில் தகுந்த பருவத்தில் பயிர் செய்யும் புற்களை, சைலேஜ் எனும் ஊறுகாய்  செய்தும் இறக்குமதி செய்தும் (பெரும்பாலும் வறட்சியான காலத்தில்) பயன்படுத்துகின்றனர். (இன்று இஸ்ரேல் நாடு 90% கடல் நீரை நன்னீராக மாற்றிப் பயன்படுத்துகிறது என்பதும், இதன் காரணமாக விவசாயம் மற்றும் புல் வளர்ப்பு மேம்பட்டுள்ளது). சைலேஜ், கோதுமை, சோளம், புற்கள்,பார்லி, பருத்திக் கொட்டை மற்றும் ஏனைய  வர்த்தகத் தீவனங்களைக் கலந்து நவீன  முறையான TMR (Total mixed ration) உணவூட்டலை இன்றைய மாடுகளுக்கு வழங்கி வருகின்றனர். மாடுகளின் உற்பத்தி, வயது, காலநிலை, உடற்பருமனுக்கு ஏற்ப உணவுத் தேவை கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 20 – 25 வரையான பிராந்திய உணவுக் கலவை நிலையங்கள் (Regional feed  mixed center) நிறுவப்பட்டு அவற்றின் மூலம் பண்ணைகளுக்கு தினமும் இரண்டு் தடவை உணவு வழங்கப்படுகிறது. பண்ணையாளர்களுக்கு உணவு பயிரிடல், உணவு தயாரித்தல் போன்ற பொறுப்புகள் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு நிலையம் 60 வரையான பண்ணைகளுக்கு உணவை கலந்து வழங்குகின்றது.

kibbutz

இன்று இஸ்ரேல் இந்த நிலைமைக்கு வருவதற்கு அவர்களின் பண்ணைகளின் செயற்பாடுகள் மிக முக்கிய காரணமாகும். Kibbutz  மற்றும் Moshav எனும் இரண்டு வகையான பண்ணை அமைப்புகள் அங்கு உள்ளன. 1910 களில் ஆரம்பிக்கப்பட்ட கால்நடைப் பண்ணைகள் kibbutz  முறையிலேயே தொடங்கின. இது ஒரு வகையான கூட்டுறவுப் பண்ணைகள். சியோனிச மற்றும் சோசலிச எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த வகைப் பண்ணைகள் இஸ்ரேலின் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்காற்றியவை. கால்நடை வளர்ப்பு மற்றும் பயிர் விவசாயம்  போன்றன இந்த முறையிலேயே அங்கு இடம்பெற்றன. நாடற்ற நிலையிலிருந்த உலகளாவிய யூதர்கள், ஒரு ஓர்மத்துடன் இணைந்து தமது உற்பத்திகளை கூட்டிணைவிலான kibbutz பண்ணைகள் மூலம் பெருக்கினர். அதுவும் வறண்ட , தண்ணீர் குறைந்த மண்ணில்.

பண்ணையில் குழுக்களாக இயங்கி உற்பத்திகளை பெறுவார்கள். சகலரும் இந்தப் பண்ணையில் ஏதாவது ஒருபணியைச் செய்வார்கள். குறித்தளவு உற்பத்திகளைப்  பகிர்ந்து கொள்வார்கள். பெற்றோர் பண்ணைகளில் வேலை செய்ய, குழந்தைகள் பொதுவான பிள்ளை மடுவங்களில் வைத்து பராமரிக்கப்பட்டார்கள். (வவுனியாவில் டேவிட் ஐயா, வைத்தியர் ராஜசுந்தரம், சந்ததியார்  போன்றோர்  உருவாக்கிய  காந்தீயம் போன்ற அமைப்புகள் இந்த எண்ணக்கருவ அடிப்படையாக கொண்டது. தெற்கு வன்செயல்களால் பாதிக்கப்பட்ட மலையக – தமிழ் மக்களை வவுனியாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் பாணியில் குடியமர்த்தி பண்ணைகளை தொடங்கியிருந்தனர்). இன்றைய நவீன காலத்துக்கு ஏற்ப இந்த kibbutz எண்ணக்கருவும் மாற்றமடைந்துள்ளது. இன்றைய திகதியில் இஸ்ரேலின்  40 – 45% கால்நடைப்பண்ணைகள் kibbutz வகையினவே. 

இன்னொரு பண்ணை முறையாக moshav அமைந்துள்ளது. இவை குடும்ப பண்ணைகள். எனினும் பொதுவான இயந்திர வளங்களை இவர்கள் பாவிக்க முடியும். இன்றைய திகதியில் 55% வரை இந்தவகை பண்ணைகள்தான். இந்த இரண்டு வகை பண்ணை வளர்ப்பு முறைகளும் சேர்ந்துதான் இஸ்ரேலின் பாலுற்பத்தியை இன்றைய வெற்றிகரமான நிலைக்கு கொண்டு வந்துள்ளன.

இயந்திர உற்பத்தி 

பெரும்பாலும் பால்கறத்தல் செயற்பாடு இயந்திரங்களைக் கொண்டுதான் இடம்பெறுகிறது. இஸ்ரேலில் பால்பண்ணைத்துறை தொடர்பான பல நவீன இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றின் உதவியின் மூலம் உச்சபட்ச பாலுற்பத்தியை வினைத்திறனாக பெற முடிகிறது. நேரவிரயம் குறைக்கப்படுகிறது. முக்கியமாக சுத்தமான பாலைப் பெறமுடிகிறது. பல இயந்திரங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இலங்கையின் மிகப்பெரிய பண்ணைகளில் பாவிக்கப்படும் பல நவீனரக இயந்திரங்கள் இஸ்ரேலிய நிறுவனங்களின் உற்பத்திகளே. உதாரணமாக, இஸ்ரேலின் “Afimilk” எனும் நிறுவனம் மாடுகளின் உடற் சுட்டிகளை அறியும் மென்பொருட்களையும் வன்பொருட்களையும் உலகம் முழுவதும் விற்கும் ஒரு முன்னோடி நிறுவனமாகும். நவீன Artificial intelligent தொழில்நுட்பத்தை கறவை மாட்டுப் பண்ணையத்தில் பிரயோகிக்கும் முன்னோடிகள் அவர்கள். அதிக பாலுற்பத்தி, குறைந்த செலவு, மாடுகளின் ஆரோக்கியம் மற்றும் குறைந்த கரியமில வாயு வெளியேற்றம் எனும் இலக்கை கொண்டு செயற்படுபவை. (உலக வெப்பமுறலுக்கு கறவை மாடுகள் முக்கிய  காரணம் என்றபடியால் முடிந்தவரை மாடுகளில் இருந்து வெளியேறும் பச்சை வீட்டு வாயுக்களின் அளவை குறைக்கும் படியான மேலாண்மையில் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர்). பண்ணைக் கழிவுகளைக் கொண்டு உயிர்வாயு முதலான சக்தி வகைகளை அதிகளவில் உருவாக்குகின்றனர். இஸ்ரேலியர்கள், ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கறவை மாடுகள் தொடர்பான தொடர்ச்சியான ஆய்வுகள், மிகச் சிறந்த மாடுகளையும் தொழில் நுட்பத்தையும் மேலாண்மை முறைகளையும் இயந்திரங்களையும் உருவாகியுள்ளது. ஆய்வுகளுக்கு அரசும் தனியாரும் அதிக முதலீடு செய்கின்றன. நிதி ஒதுக்குகின்றன.

modern farm

இஸ்ரேலின் பால் பண்ணை அனுபவத்தில் இருந்து இலங்கை பெறக் கூடிய விடயங்கள்

இலங்கையில் அதிகளவில் மாடுகள் உள்ள போதும் உற்பத்தி மிக மிக குறைவு. அதாவது இரண்டு மூன்று லீட்டர் வரையான உற்பத்தி. எனவே தொடர்ச்சியான இனக்கலப்பு முறை மூலம் அதி சிறந்த மாடுகளை உருவாக்கலாம். மாட்டுப் பண்ணைகளின் எண்ணிக்கை மிக அதிகம். அதனையும் குறைத்து, முடிந்தளவு சிறந்த பண்ணைகளை உருவாக்கலாம். இலங்கையைப் பொறுத்தவரை கால்நடை வளர்ப்புத் துறை அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதன் காரணமாக அதன் வினைத்திறன் மிக மிக குறைவு. இஸ்ரேலில், அவை அரசு – தனியார் என இரண்டு பக்கமும் இணைந்தது. அதனைப் போலவே சில செயற்பாடுகளை தனியார் மயப்படுத்தலாம். குறிப்பாக சினைப்படுத்துதல் செயன்முறையை. இலங்கையில் செயற்கைமுறைச் சினைப்படுத்துனர்கள் தமது பணிக்கு பதிலாக, சிகிச்சை அளித்து பணம் சேர்ப்பதில் தான் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர்.

இஸ்ரேலில் உள்ள மாடுகளின் சகல தரவுகளும் பதிவு செய்யப்பட்டு தனித்தனியாக அவதானிக்கப்படுகின்றன. இலங்கையில், மாடுகளின் எண்ணிக்கையே இன்னமும் சரிவரக் கணக்கிடப்படவில்லை. குத்துமதிப்பாகவே சொல்லப்படுகிறது. அதனை அறியக்கூடிய பணியாளர்களும் கால்நடை பராமரிப்புத் துறையில் இல்லை. உண்மையில், இலங்கையிலுள்ள மாடுகள் முறையாகக் கணக்கிடப்பட்டு அதற்கேற்ப சரியான திட்டங்கள் வகுக்கப்பட்டு  நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் மிகக் குறைந்த வசதியுடைய துறையாக கால்நடைத்துறையே உள்ளது. கால்நடைகளுக்கு தகுந்த மருத்துவம் பார்க்க கூடிய வசதிகள் கிடையாது. மருந்துகள் கிடையாது. வாகனங்கள் கிடையாது. எரிபொருள் கிடையாது. ஊழியர்கள் கிடையாது. முதலில் அந்தத் துறையை சிறப்பாகக் கட்டியெழுப்பினால் பல பிரச்சனைகள் தீர்க்கப்படும். இருபது – முப்பது வருடங்களுக்கு முன், வரையறுக்கப்பட்ட ஊழியர் அளவே இன்றும் இருக்கின்ற காரணத்தால் பல பணிகளை ஊழியர்களால் செய்யமுடியாத நிலை காணப்படுகிறது. வெறுமனே மாடுகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து மட்டுமே பால் உற்பத்தியைக் கூட்டமுடியாது. கால்நடைகளைக் கையாளும் துறையையும் நவீன மயப்படுத்த வேண்டும்.

இலங்கையில் இன்றும் மேய்ச்சல் பிரச்சனை அதிகளவில் உள்ளது. முறையான உணவு – ஊட்டம் கிடையாது. இலங்கையைவிட வறண்ட நாடான இஸ்ரேல், முறையாக தமது வளங்களை முகாமை செய்து வெற்றிகரமான கால்நடைவளர்ப்பைச் செய்கின்றது. இங்கு, தேவையற்ற விதத்தில் மாடு வளர்ப்புடன் மதத்தை இணைத்து அரசியல் செய்கின்றனர். உற்பத்தியற்ற மாடுகளைக் கழிக்க வேண்டும். அதனை செய்ய இங்கு மதம், அரசியல் குறுக்காக நிற்கிறது. இதனால், உற்பத்தியற்ற மாடுகள் உற்பத்திகூடிய மாடுகளுடன் போட்டி போட்டு உணவு வளங்களை குறைக்கின்றன. கால்நடை உணவு தொடர்பான முறையான மேலாண்மை செய்யப்பட்டால் இலங்கையின் கால்நடை வளர்ப்பின் பல பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

தொடர்ச்சியான ஆய்வுகள் அவசியம். கால்நடை வளர்ப்பின் நவீன முறைகள் உட்புகுத்தப்பட வேண்டும். இந்தப் பணிகளை பல்கலைக் கழகங்கள் சிறப்பாக செய்யலாம். இதற்குரிய நிதியை அரசு வழங்க வேண்டும். ஆய்வுகள், ஆராய்சிகள் தொடர்ச்சியாக செய்யாது போனால் பொருத்தமற்ற பழைய மேலாண்மை முறைகளே இந்தக் காலத்திலும் தொடரும்.

இலங்கையில் கறக்கும் பாலின் தரம் மிகக் குறைவு. விரயமாதல் அதிகம். பால் கறக்கும், சேமிக்கும், விநியோகிக்கும் முறைகளும் தரம் குறைந்தவை. பால், உயிர்த் திரவம். நேரம் செல்லச் செல்ல பழுதாகும் அளவும் அதிகம். இஸ்ரேலில் இவை மிகச் சிறப்பாக முகாமை செய்யப்படுகிறது. முடிந்தவரை மாடுகளுக்கு நோய்த் தடுப்பு செய்யப்பட்டு நோய்கள் வருமுன் காக்கப்படுகின்றன. பண்ணைகளின் சுகாதாரம் மிக சிறப்பாகப் பேணப்படுகிறது. இலங்கையின் பெரும்பாலான பண்ணைகள் சுகாதாரமற்றவை. பால் சேகரிக்கும் பாத்திரங்கள் தரமற்றவை. பண்ணைச் சுகாதாரத்தை மேம்படுத்தாது, நோய் நிலைகளுக்கு நுண்ணுயிர் கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இது இன்னும் பாலின் தரத்தை சீர்குலைப்பதோடு மனித சுகாதாரத்தையும் கடுமையாகப் பாதிப்புக்கு உட்படுத்துகிறது. 

இப்படியாக, பல விடயங்களை இஸ்ரேலின் பாலுற்பத்தித் துறையின் மூலம் அறிய முடியும். அந்த நடைமுறைகளில் சிலவற்றை இங்கு நடைமுறைப்படுத்தினாலே இலங்கையில் பால் உற்பத்தியை கணிசமாக உயர்த்த முடியும். தன்னிறைவும் காணமுடியும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10140 பார்வைகள்

About the Author

சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (15)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)