ஆங்கில மூலம்: – அலெய்ன் ஜி. கக்நொன் மற்றும் றிச்சார்ட் சிமியோன்
பன்மைத்துவத்தின் மத்தியில் ஒற்றுமையைப் பேணுதல் என்ற விடயம் கனடாவின் வரலாற்றின் ஆரம்பம் தொட்டு இன்று வரை அந்தத் தேசத்தினரது கவனத்தை ஈர்க்கும் ஒரு விடயமாக இருந்து வந்ததை ஆய்வு நூல்கள் எடுத்துக்காட்டுகின்றன. உதாரணமாகச் சில முக்கியமான நூல்கள் 1970 களின் பின்னர் பிரசுரிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம். சர்வதேச தராதரங்களின் படியான மதிப்பீட்டில் கனடா தேசம் பன்மைத்துவத்தின் மத்தியில் ஒற்றுமையை பேணுவதில் வெற்றிகண்டுள்ளது என்றே கூறவேண்டும். கனடா உலகின் சமஷ்டிகளுள் பழமையானது. அது உறுதியான ஒரு சமஷ்டியாக நிலைத்துள்ளது. பன்மைத்துவத்தின் பலபரிமாணங்களையும் ஒரே சமயத்தில் எதிர்கொள்ளும் வல்லமையுடைய சமஷ்டியாக அது விளங்குகிறது. கனடா பன்மைத் தேசியங்களின் நாடாக இருந்து வருவதோடு கியூபெக் பகுதியில் எழுந்த தனித்தேசியம் என்ற கோரிக்கை, பழங்குடிமக்களின் ‘முதலாவது தேசியங்கள்’ (First Nations) என்ற கருத்து என்ற இரண்டையும் நேர்முறையாக அணுகியது. கனடாவில் பிரதேச உணர்வும் பிராந்திய அடையாளமும் மிகுதியாக உள்ளன. அது ‘சமஷ்டியாக ஒன்று சேர்ந்த சமூகம்’ (Federal Society) என்ற தன்மை உடையது. குடிப்பரம்பல், சனத்தொகை, பொருளாதாரம், வளங்கள் என்பனவற்றில் அங்கு பிராந்திய வேறுபாடுகள் பெரிய அளவில் உள்ளன. அது குடியேறிகளால் உருவான நாடு. அங்கு பன்மைத்துவமும் வேறுபாடுகளும் மிகுதியாக உள்ளன. பன்மைப் பண்பாடுடைய சனத்தொகையைக் கொண்ட இந்நாட்டில் பால்நிலை, வர்க்கம் போன்ற ஏனைய வேறுபாடுகளும் ஒன்றிணைந்து சிக்கலான பரிமாணங்களைப் பெற்றுள்ளன.
புவியியல் இடப்பரப்பில் மிகவும் பெரியதான கனடாவில் (9,984,670 சதுர கிலோ மீற்றர்) சனத்தொகை அடர்த்தி மிகக் குறைவு. 2008 ஆம் ஆண்டில் ஒரு சதுர கி. மீற்றருக்கு 3.3 ஆட்கள் வதிந்தனர். அங்கு மொத்தம் 33.2 மில்லியன் மக்கள் வாழ்ந்தனர். சனத்தொகை வளர்ச்சி 0.8 வீதமாக உள்ளது. ஐக்கிய அமெரிக்கா – கனடா எல்லையோரமாகவும், சில பெருநகரங்களிலும் கனடாவின் மக்கள் செறிந்து வாழ்கின்றனர். கனடாவின் மக்களில் 59.3 வீதத்தினரின் தாய்மொழி ஆங்கிலம் ஆகும். 23.2 வீதத்தினரின் தாய்மொழி பிரஞ்சு ஆகும். ஏறக்குறைய 9.7 வீதத்தினர் வெளிநாடுகளில் பிறந்தோராவர். கத்தோலிக்க சமயத்தினர் 42.6 வீதமாகவும், புரட்டஸ்டாந்திய சமயத்தினர் 23.3 வீதமாகவும், பிற சமயங்களைச் சேர்ந்தோர் 4.4 வீதத்தினராயும் உள்ளனர். உலகின் பிற சமயங்கள் பலவற்றையும் பின்பற்றுவோர் கனடாவில் வாழ்கின்றனர்.
அரசியல் யாப்புக்குட்பட்ட வரம்புடைய முடியாட்சி, நாடாளுமன்ற ஜனநாயகம், சமஷ்டி அரசியல்முறை ஆகிய பண்புகளை ஒருங்கே கொண்ட அரசியல்முறை இங்கே உள்ளது. கனடாவின் நாடாளுமன்ற நிறுவனங்கள் பிரித்தானியாவில் இருந்து பெறப்பட்டவை. 1867 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி கனடா ஒரு ‘கொன்பெடரேசன்’ (Confederation) ஆக உருவாகியது. 1931 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட அரசியல் யாப்புச்சட்டம் (Constitution Act) கனடாவை பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்து விடுவித்தது. சுதந்திரம், சமத்துவம், வாழ்க்கைத் தரம் ஆகிய அளவுகோல்களைக் கொண்டு ஒப்பீட்டு மதிப்பீட்டைச் செய்யும் பொழுது கனடா உலகின் மிகச் சிறந்த ஜனநாயக நாடுகளில் ஒன்றாக உள்ளது. 2008 ஆம் ஆண்டில் கனடாவில் ஆளொருவருக்குரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 39,300 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும். ‘ப்பிரீடம் ஹவுஸ்’ (Freedom House) என்ற அமைப்பின் மதிப்பீடுகளின்படி கனடா அரசியல் உரிமைகள், சிவில் உரிமைகள் விடயத்தில் உயர் புள்ளிகளைப் பெறுகின்றது. ‘ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நஷனல்’ என்ற அமைப்பு ஊழல் பற்றிய கணிப்பில் உலக நாடுகளை தரவரிசைப்படுத்துகிறது. இத்தரவரிசையில் ஒப்பீட்டளவில் கனடா ஊழலில் மிகக் குறைந்த சுட்டியைக் கொண்ட நாடாகவும் (8.7 புள்ளி) உலக நாடுகளில் 9 ஆவது இடத்தைப் பெறுவதாகவும் உள்ளது .
பிராந்திய ரீதியாக சிறுபான்மை இனங்கள் செறிந்து வாழும் நாடுகளாகவுள்ள சமஷ்டிகளில் எதிர்நோக்கப்படும் பிரதான பிரச்சினை பன்மைத்துவத்தின் மத்தியில் ஒற்றுமையைப் பேணுவது (Unity in Diversity) எவ்வாறு? என்பதாகும். வேற்றுமைகளிடையே ஒற்றுமையைப் பேணும் இந்த விடயத்தில் கனடா முன்னணியில் நிற்கின்றது. கனடாவின் முன்னுதாரணம் மூன்று அம்சங்களில் வெளிப்பட்டுத் தெரிகிறது.
1. முதலாவதாக கனடாவில் வேற்றுமைகள் பற்றிய விவாதம் நடைபெற்றது. கியூபெக் தனிநாடாகப் பிரிந்து போக வேண்டுமா என்ற விடயத்தைக்கூட ஆரோக்கியமான முறையில் அங்கே விவாதித்தார்கள். இந்த விவாதம் அமைதி வழியில், மதிப்புமிக்க முறையில் ஜனநாயக விழுமியங்களை மதிக்கும் முறையில் நடத்தப்பட்டது.
2. இரண்டாவது அம்சம் அங்கே தொடர்ச்சியாக இடம்பெறும் ‘பேரம்பேசல்’ ஆகும். அந்நாடு புரட்சியொன்றினால் உருவானதன்று, அங்கே ஒற்றைப் பெரும்பான்மை ஆதிக்கம் இடம்பெறவும் இல்லை. கனடா ‘பேரம்பேசி’ உருவான நாடு என்ற தகுதியை உடையது. இந்தப் பேரம்பேசல் ஐரோப்பியர்கள் அங்கு குடியேறத் தொடங்கிய போது பழங்குடிச் சுதேசிகளுடன் ஆரம்பித்தது. பின்னர் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் பேரம்பேசல் மூலம் சிலவகை ஒழுங்கமைப்புக்களை ஏற்படுத்தினர். இதனால் 1867 இல் கனடா ஒரு ‘கொன்பெடரேசன்’ ஆகியது. இக்காலம் முதல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், நாணய ஒழுங்கமைப்பு ஆகிய விடயங்கள் பற்றி சமஷ்டி அரசுக்கும் மாநில அரசுகளிற்கும் இடையே பல உடன்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன. மிக அண்மைக்காலத்தில் கனடாவில் குடியேறுபவர்கள் தொடர்பான கொள்கை, அவர்களை நாட்டின் பிரஜைகளாக ஏற்று ஐக்கியப்படுத்தல், ‘முதலாவது தேசியங்கள்’ எனப்படும் பழங்குடி மக்களை சமத்துவமானவர்களாக ஏற்று அங்கீகரித்தல், உள்ளீர்த்தல் ஆகிய விடயங்களில் உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
3. மூன்றாவதாக கனடாவில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் வழி முறை பற்றிய அடிப்படை அனுமானம் அல்லது நம்பிக்கை ஒன்று உருவாகி உள்ளது. வேற்றுமைகளை (Difference) மதிப்பளித்து ஏற்றுக்கொள்ள வேண்டும், அவற்றுக்கு இணங்கி இடம்கொடுக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வேற்றுமைகளை நிராகரிப்பதோ அல்லது வேற்றுமைகள் இங்கே இல்லை என்று மறுப்பதோ (Rejection or Denial) சரியான வழியல்ல என்பதைக் கனடா ஏற்றுக் கொண்டுள்ளது.
1998 ஆம் ஆண்டில் பிரிவினை பற்றிய உயர்நீதிமன்ற வழக்கில் கனடாவின் மாதிரியின் (Canadian Model) அடிப்படை விழுமியங்களை நீதிமன்றம் எடுத்துக்கூறியது. முக்கியம் வாய்ந்த இந்த நீதித் தீர்ப்பில் கனடாவின் சமஷ்டியை வழிகாட்டி நடத்தும் கொள்கைகள் என்று பின்வருவனவற்றை நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது:
– ஐனநாயகம் சமஷ்டி (Federalism)
– அரசியல் யாப்புவாதமும் (Constitutionalism)
– சட்டத்தின் ஆட்சியும் (Rule of Law)
– சிறுபான்மையினர் உரிமைகளுக்கு மதிப்பளித்தல்
மேற்குறிப்பிட்ட விழுமியங்கள் 1867 ஆம் ஆண்டின் அரசியல் யாப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவை இன்று வரை யாப்புச் சட்டவிளக்கங்களில் வெளிப்பட்டு நிற்கும் விழுமியங்களாகவும் உள்ளன.
கனடா நாட்டினர் வேற்றுமைகளின் மத்தியில் ஒற்றுமையைத் தாம் பேணியுள்ளோம். அதில் வெற்றி கண்டுள்ளோம் என்பதையிட்டு பெருமிதம் கொள்கின்றனர். இருப்பினும் தலைகுனிவுக்குரிய சில விடயங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். அமைதியான கனடாவின் அரசியலில் இடைக்கிடையே மோதல்களும் இடம்பெற்றன. 1919 ஆம் ஆண்டின் பொது வேலைநிறுத்தம், ஐரோப்பியர் அல்லாத குடியேறிகள் குழுமங்கள் மீது காட்டப்பட்ட இனவாதமுறைப் பாரபட்சம் (சீனர்கள் மீதும் பின்னர் இரண்டாம் உலக யுத்தத்தின் போது குடிபுகுந்த ஜப்பானியர் மீதும் பாரபட்சம் காட்டப்பட்டது) பழங்குடி மக்களை மிக அண்மைக்காலம் வரை பாரபட்சம் காட்டியும், புறத்தொதுக்கியும் வைத்திருந்தமை, இரண்டு உலக யுத்தங்களின் போதும் இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்தமையால் ஏற்பட்ட நெருக்கடி, 1970 ஒக்டோபர் மாதத்தில் கியுபெக்கில் ஏற்பட்ட குறுங்காலம் தொடர்ந்த பிரிவினைவாதக் கிளர்ச்சியால் சிவில் உரிமைகளைத் தடைசெய்தமை போன்ற பல சம்பவங்கள் கனடாவில் நிகழ்ந்தன என்பதை மறக்கமுடியாது. பிரஞ்சுமொழி பேசுவோரான கியூபெக் மாகாணத்தினர் கனடாவின் சமஷ்டி தங்கள் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று கூறுகின்றனர். கியூபெக் தனித்த தேசியம் (Nation) அல்லது சமூகமாக அரசியல் யாப்பில் அங்கீகரிக்கப்பட வேண்டும் அல்லது கனடா சமஷ்டியுடன் பொருளாதார, அரசியல் தொடர்புகள் சிலவற்றை மட்டும் வைத்துக்கொண்டு தாம் தனிநாடாகப் பிரிந்து செல்லவேண்டும் என்று கியுபெக்கியர் கருதுகின்றனர். பழங்குடி மக்கள் கனடா சமூகத்தின் விளிம்புநிலை மக்களாக உள்ளதோடு, வறுமை, சுகாதாரம் போன்றவற்றில் மிக மோசமான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு வேறுபல சமூகப் பிரச்சினைகளும் உள்ளன. தமக்கு ஏதாவது வகையிலான சுயாட்சி வேண்டும் என்றும், தமக்கு ஏனைய கனேடிய மக்களைப் போன்று சமத்துவமாக வாழவும், பிறமக்களோடு நீதியான உறவுகளைப் பேணவும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர். ஏனைய மாநிலங்களிலும் பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக கனடாவின் மேற்குப் பகுதி மாநிலங்கள் தமது நலன்களை மத்திய சமஷ்டி அரசில் (ஒட்டாவோ நகரில்) பிரதிநிதித்துவம் செய்வதற்கு வாய்ப்புக்கள் அரிதாக உள்ளதாகக் கருதுகின்றனர். மேற்குப்பகுதி மாநிலங்களோடு அத்திலாந்திக் கனடாவும் பிரதேச ரீதியான பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டுள்ளது. பொருளாதார மீள்கட்டமைப்பு மூலமும் சமத்துவப்படுத்தும் செயற்திட்டங்கள் மூலமும் இக் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளன.
சிறுபான்மைப் பண்பாட்டுக் குழுமங்கள் பல, கனடாவின் முன்னைய குடிவரவுக் கொள்கையால் வரலாற்று அநீதிகள் சிலவற்றுக்கு உள்ளாயின. இவை இன்று கனடாவிலும், கியூபெக் மாகாணத்திலும் சமூக வாழ்வில் தம்மை வெற்றிகரமாக இணைத்துக் கொள்வதிலும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளன. மறுபுறத்தில் கனடா நாட்டின் ஆங்கிலம் பேசுவோரும், ‘பன்மைத்துவம் பற்றிப் பேசப்படுகின்றதேயன்றி, நாட்டில் ஒற்றுமையை வளர்க்கும் திட்டங்கள் இல்லை? சமுதாய ஒற்றுமையும் ஐக்கியமும் இல்லாமல் போகிறதே’ என்று கவலைப்படுகின்றனர். தனிநபர்களை சமுதாயத்துடன் ஒட்டவைக்கும் அம்சம் இங்கு இல்லையே. வித்தியாசங்களைப் போற்றும் இந்த நாட்டில் ஐக்கியத்திற்கான அடிப்படை என்று என்ன உள்ளது என்று கேள்வி எழுப்புகின்றனர்.
கனடா நாட்டு மக்கள் தமக்கிடையே உள்ள வித்தியாசங்களைக் கையாள்வதில் வெற்றிகண்டுள்ளனர், அதற்கான காரணம் அந்நாட்டில் சாதகமான பல விடயங்கள் இருப்பதுதான் என்று கிம்லிக்கா (Kymlica) என்ற அறிஞர் கூறுகிறார். சமூக உட்கட்டமைப்புக்கள் நன்றாக வியாபித்து வளர்ச்சியுற்று இருத்தல், உற்பத்தி விளைதிறன் உயர்வாக உள்ள பொருளாதார முறை இருத்தல், கல்வி விருத்தி உயர்மட்டத்தில் இருத்தல், நட்பு நாடான ஐக்கிய அமெரிக்கா அயலில் இருத்தல், ஜனநாயகப் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் நெடுங்காலமாகப் பேணிவரும் நாடாக இருத்தல் என்பன கிம்லிக்கா கூறும் சாதகமான விடயங்களாகும். இச்சாதகமான விடயங்கள் பெரும்பாலான வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இல்லை. ஐரோப்பாவினதும் ஐக்கிய அமெரிக்காவினதும் எல்லைகளில் மூன்றாம் உலக நாடுகள் உள்ளன. கனடா எந்தவொரு மூன்றாம் உலக நாட்டையும் எல்லையாகக் கொண்டிருக்கவில்லை. அதனால் கனடாவில் குடிவரவு பற்றிய பிரச்சினை ஒப்பீட்டளவில் பெரிய சவாலாக அமையவில்லை.
குறிப்பு : ‘Power Sharing : The International Experience’ என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலில் இருந்து, அலெய்ன் ஜி கக்னொன் மற்றும் றிச்சார்ட் சிமியோன் எழுதிய, ‘Addressing Multi Culturalism in Canada’ என்ற கட்டுரையின் மொழிப்பெயர்ப்பே இக்கட்டுரையாகும்.
தொடரும்.