முஸ்லிம் குடிகள்
Arts
10 நிமிட வாசிப்பு

முஸ்லிம் குடிகள்

April 27, 2023 | Ezhuna

கிழக்கிலங்கை இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசமாகும். இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களின் பண்பாட்டுக்கூறுகள் மட்டக்களப்புத் தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளோடு பல விடயங்களில் ஒத்ததாகவும் வேறுப்பட்டும் காணப்படுவதோடு பிற முஸ்லிம் பிராந்திய கலாசாரகூறுகளிலிருந்தும் தனித்துவமாகக் காணப்படுகின்றன. கிழக்கிலங்கை முஸ்லிம்கள் கிழக்கின் பூர்வ பண்பாட்டுக்கூறுகளினை தமது மத நம்பிக்கைக்கு ஏற்ப மதத்தின் அடிப்படைக்கூறுகளில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பண்பாட்டுக்கட்டமைப்பை தகவமைத்துக் கொண்டனர். இப்பண்பாட்டுப் மறுமலர்ச்சியின் கூறுகளினை கலந்துரையாடுவதாக ‘கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள்’ என்ற இக்கட்டுரைத்தொடர் அமையும். இதன்படி, கிழக்கிலங்கை முஸ்லிம்களின் தாய்வழி குடிமரபு முறை, முஸ்லிம் குடிவழிமரபில் உள்ள மாற்றங்கள், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள் அவற்றில் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பாரம்பரிய பரிகார முறைகள், உறவுமுறைகள் மற்றும் குடும்ப அமைப்புகள், உணவுமுறைகள், ஆடை அணிகலன்களும் மரபுகள், வீடுகள் மற்றும் கட்டடக்கலை மரபுகள், பாரம்பரிய அனுஷ்டானங்கள், கலைகள் எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்தத் தொடர் பேசவுள்ளது.

GOSGODA-BANAGAMUWA

இந்தக்கட்டுரை முஸ்லிம்களிடம் வழக்கிலுள்ள சில குடிகளின் ஆரம்ப வரலாற்றை நோக்குகின்றது. கிழக்கிலங்கை முஸ்லிம்களின் குடிகளை நோக்கும் போது அவை ஒரே தடவையில் உருவாகியவையாக இராமல் காலத்திற்குக் காலம் புதிய குடிகள் தோற்றம் பெற்றே வந்துள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதிவரை புதிய குடிகளின் தோற்றம் நிகழ்ந்தே வந்திருக்கின்றது. இக்கட்டுரை இரு ஊர்ப்பெயர் கொண்ட குடிகளையும் சம்பானோட்டி குடியைப்பற்றியும் விபரிக்கிறது.

மாந்தறா குடி – மாந்திராவ குடி

இந்தக்குடியினர் சம்மாந்துறை, அக்கரைப்பற்று, சாய்ந்தமருது, கல்முனை, ஒலுவில், இறக்காமம், மருதமுனை போன்ற ஊர்களில் காணப்படுகின்றனர். எல்லா ஊர்களிலும் இந்தக்குடிப்பெயர் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே பயன்படுத்தப்படுகின்றது. இந்தக்குடிப்பெயர் ஒரு ஊரின் பெயராகும். இலங்கையின் வடமேல் மாகாணத்தில், குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பாணகமுவ என்ற கிராமமே இந்தப்பெயரால் அழைக்கப்படுகின்றது. தற்போது பாணகமுவ என்ற பெயர் பிரபல்யமானதால் மாந்திரவ என்று அழைக்கப்படுவது கைவிடப்பட்டுள்ளது.

இவ்வூரின் வரலாறு பற்றிக்குறிப்பிடும் போது இவ்வூர் கண்டிய அரசனொருவன் பிசோகள என்ற மலைமுகட்டில் தீபமொன்றை வைத்து அவ்வொளி தென்படுகின்ற பிரதேசத்தை நம்பிக்கைக்குரிய ஒரு அரேபிய இளைஞனுக்கு ‘ஸன்ஸனல’ அன்பளிப்பாக கொடுத்தமையினால் இவ்விடம் பஹணகம என்று பெயர் பெற்றதாகவும், இக்கிராமத்தில் அன்றைய காலங்களில் காணப்பட்ட ‘மாத்தாவெவ’ என்ற குளத்தின் பெயரே  இவ்வூரின் பெயர்த்தோன்ற காரணி எனவும் குறிப்பிடுகின்றார். மா-தத்-எத்தா-வெவ பெரிய தந்தங்களையுடைய யானைக்குளம் என்ற சிங்களத் தொடரில் இருந்தே மாந்தராவெவ என்ற பெயர் உருவானதாக குறிப்பிடுகின்றனர். இதற்கு ஆதாரமாக இவ்வூரிலுள்ள பல இடப்பெயர்கள் குளத்தோடு சம்பந்தமுடைய பெயர்களாக இருப்பதால், தெதுறு ஓயாவை அண்மித்து இக்கிராமம் காணப்படுவதனால் இந்தக்குளத்தின் பெயரே ஊரின்பெயராக மாற்றம்பெற்றது எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தக்கிராமங்களில் இருந்து வர்த்தக நோக்கத்திற்காக கிழக்கு மாகாணத்திற்கு வந்து குடியேறியவர்களின் தாய்வழிப்பரம்பரையே மாந்தறா குடி என அழைக்கப்படுகின்றனர். இக்குடியேற்றம் எப்போது நிகழ்ந்தது? எவ்வாறு வடமேல் மாகாணத்தில் இருந்து கிழக்கிற்கு வர்த்தகத்திற்கு வந்தனர்? இவர்களின் வியாபார பாதைமார்க்கம் எவ்வாறு இருந்தது?  என்பவை பற்றிய தகவல்கள் தெளிவாகக்கிடைக்கவில்லை. பாணகமுவ பகுதியில் மாடுகள் பட்டியாக வளர்க்கப்பட்டு தாவள முறை வர்த்தகம் நடைபெற்றதாக இடப்பெயர்களை ஆதாரமாக கொண்டு குறிப்பிடப்படுகின்றது. அதாவது பட்டியவளவு, கோபால கெதற பகுதி, குருவடம்பிட்டி, ஹோம்பளப்பிட்டி, அட்டிகுள்பிட்டி போன்ற இடங்களில் மாடுகள் பட்டியாக வளர்க்கப்பட்டு தூர்ந்துபோன மாந்திரவ குளத்தின் புற்தரைகளில் மேய்ச்சலுக்கு பயன்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றனர்.


இந்த மாந்திராவ என்ற ஊரிலிருந்து குடியேறியவர்கள் மாந்தறா குடியினர் என அழைக்கப்படுகின்றனர். இவர்களைக் குறிப்பிடும் பழமொழியொன்றும் கிழக்கிலங்கை முஸ்லிம்களிடையே பிரபல்யமாகக் காணப்படுகின்றது. ‘மாந்தறா குடியாள் மான்கொம்புலை நெருப்பெடுக்கிற ஆக்கள்’ என்று அவ்வூரவரின் விடாமுயற்சியையும் தீரத்தையும் குறிப்பிட்டுச் சொல்லப்படுகின்றது.

கொஸ்கொட குடி – கொஸ்கொட ராஜபாஷாவ முதலியார் குடி

உள்ளூர்-துறைகளில்-சம்மன்-படகுகள்-மூலம்-பொருட்களை-ஏற்றி-இறக்குதல்

பொதுவாகக் குடிகள் தாய்வழியில் மட்டுமே கடைபிடிக்கப்படுகின்றன. பெரும்பாலான குடிப் பெயர்கள் பெண்களின் பெயர்களைத் தழுவியாகக் காணப்படும் அதேவேளை தமிழ் பெயராகவும்  காணப்படும். ஆயினும் இந்தக்குடியின் பெயர்  சிங்கள மொழிச் சொல்லாலும், ஒரு ஆணின் பதவிவழி மற்றும் ஊரின் பெயரையும் கொண்டு காணப்படுகின்றது. இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் காணப்படுகின்ற கொஸ்கொட என்ற ஊரைச் சேர்ந்த இப்றாலெவ்வை முதலியார் என்பவர் பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் கிழக்கில் பணிக்கமர்த்தப்பட்டார்.

அரசமொழிபெயர்ப்பாளராக கடமையாற்றிய இவரின் பதவி இராஜ பாஷாவ முதலி என்பதாகும். இவர் தனது தாய் மற்றும் மூன்று சகோதரிகளுடன் கரைவாகுப்பற்றில் வாழ்ந்துவந்துள்ளார்.
அக்காலத்தில் கடமையாற்றிய எட்வேட் பேர்ட்ச் எனப்படும் வேட்சித்துரையினால் இப்றாலெவ்வை ராஜபாஷாவ முதலியாரின் தாய்க்கு ‘அவ்வாட வெளி’ என்ற நெற்காணி கொடுக்கப்பட்டது. அதனை அவர் தனது மூத்த இரு பெண்மக்களுக்கும் கொடுத்துள்ளார். அதே வேளை நிந்தவூரில் திருமணம் செய்த தனது மகளுக்கும் மகனுக்கும் நிந்தவூரில் காணப்பட்ட அவ்வாட வெளி என்ற நெற்காணியையும் வழங்கியுள்ளார். இவர்களின் தாய்வழிப் பரம்பரையினரே கிழக்கின் பல ஊர்களிலும் காணப்படுகின்றனர் என்று எஸ். எச். எம். றாஸிக் குறிப்பிடுகின்றார்.

MUSLIM-CHART

கொஸ்கொட்டைக்குடி, கொஸ்கொட்டான்குடி, கொஸ்கொட்ட குடி என ஊருக்குஊர் சிறிது மாறுபட்டு வழங்கப்படுகின்றது. 1940 ஆம் ஆண்டைய சம்மாந்துறை குடிமரைக்கார் சபை கூட்டக்குறிப்புகளில் இந்தக்குடி’ குறைசிக்குடி’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளை இந்தக்குடிக்கு ’தேன்முதலிக் குடி’ என்ற சிறப்புப்பெயரும் காணப்படுகின்றது.

அக்கால வணிக மொழியான ஆங்கிலத்தை சரளமாகவும் இனிமையாகவும் நளினமாகவும் நீதிபதியிடம் முன்வைத்தமையினால்  ராஜபாஷாவ முதலியார் தேன்முதலியார் என அழைக்கப்பட்டதாகவும் வாய்வழிக்கதைகள் குறிப்பிடுகின்றன. இதனால் கொஸ்கொட குடி தேன்முதலிக் குடி என சம்மாந்துறையில் நிலைக்கப்பெற்றுள்ளது.
அதேவேளை கரவாகுப்பற்றைச் சேர்ந்த காஸிம் ஜீ இந்தக்குடியினர் அபூபக்கர்(றழி) என்ற கலிபாவின் வம்சத்தில் வந்தவர்கள் என்றும் கொஸ்கொட கிராமத்தில் இருந்து குடியேறியுள்ளனர் என்றும் தனது நூலில் குறிப்பிடுகின்றார். அதேபோன்று சம்மாந்துறை குடிமரைக்கார் சங்கத்தின் 1940 ஆம் ஆண்டு கூட்டக்குறிப்பு புத்தகத்தில் இந்தக்குடி பட்டியலில் தேன்முதலிக் குடி எனவும் குடிமரைக்கார் கையொப்பத்தில் குறைஷிக்குடி எனவும் குறிக்கப்பட்டுள்ளனர்.

சம்மானோட்டி குடி

சம்மன்-படகுகள்-தரித்து-நிற்கும்-துறைப்பகுதி-1

இந்தக்குடியினர் சம்மாந்துறை மருதமுனை காத்தான்குடி, பொத்துவில், காங்கேயனோடை போன்ற ஊர்களில் காணப்படுகின்றனர். இந்தக்குடியினர் தென்னிந்திய வர்த்தகர்களாகவே காணப்பட்டுள்ளனர். இந்தக்குடியின் பெயர் சம்மாந்துறையில் சேருமுஹம்மது குடி என மாற்றி வழங்கப்படுகின்றது. அதே வேளை ஆரையம்பதியில் தமிழர்களிடையேயும் சப்பானோட்டி குடி காணப்படுகின்றது.  

“சம்பான்” என்பது தூய தமிழ்ச் சொல்லல்ல என்று தமிழறிஞர்களால் கூறப்படுகிறது. இது பஃறி, திமில், தோணி, படகு, நாவாய் போன்ற தமிழ்ச்சொற்களுக்கு சமனானது என அறிஞர்கள் கூறுகின்றனர். மற்றும் அவர்கள் சீன மொழியிலிருந்து தமிழுக்கு வந்துள்ள வேற்று மொழிச் சொல்லென இதைக் கூறுகின்றனர். ஆங்கில மொழிக்கு 1610-20 களில் சீன மொழியிலிருந்து வந்ததாக ஆங்கில அகராதிகளிற் காணப்படுகிறது. தூரகிழக்காசிய மொழிகளில் ஒன்றான மலாய் மொழியிலும் சம்பான் என்பதன் பொருள் தோணி அல்லது சிறு படகு என்றே அகராதிகளில் காணப்படுகிறது. இவ்வார்த்தை மலாய் மொழிக்கும் சீன மொழியிலிருந்தே சென்றுள்ளது.
தென்னிந்திய முஸ்லிம்களின் வர்த்தகமும் இலங்கையின் கிழக்குப் பகுதியிலே சிறப்பாகக் காணப்பட்டதற்கு பல வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. அவ்வாறான இந்திய முஸ்லிம் வர்த்தகர்களில் ஒரு பகுதியினர் சம்மன்காரர்கள் என அழைக்கப்படுகினறனர்.

19ஆம்-நூற்றாண்டின்-பிறபகுதியில்-புழக்கத்தில்-இருந்த-சம்மன்-படகுகள்-நீர்கொழும்பு

அதேவேளை ‘சம்பான்’ என்பது தமிழ்மொழியில் உருவானதொரு சொல்லன்று. எனினும் தமிழ் மொழியில் கலந்த வெளிநாட்டுச் சொல்லாகும். தமிழ் அகராதிகளிலும் காணப்படுகிறது. இது உண்மையில் கன்தோனீஸ் (Cantonese) மொழி மூலச் சொற்களிலிருந்து உருவான சொல்லாகும்.  இது அம்மொழியில் ‘சம்’, ‘பன்’ என்ற இரு வார்த்தைகளின் சேர்க்கையாகும். சம்(sam)-மூன்று என்றும், பன்(pan)- பலகை என்றும் பொருள்படும். ‘சம்பன்’ -மூன்று பெரும் பலகைகளால் ஆக்கப்பட்ட படகு அல்லது கப்பல் அல்லது சிறு கப்பல் எனப் பொருள்படும்.


இது சீன மொழிக்குள் சென்று படகு, கப்பல்களைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் தூர கிழக்காசிய மொழிகளிலும் அதே பொருள்படப் பயன்படுத்தப்பட்டது. மலேசியா, சீனா, சிங்கப்பூர், தாய்வான், ஹொங்கொங், போன்ற நாடுகளிலும் முப்பதுக்கும்  மேற்பட்ட பிறமொழிகளிலும் இதன் உச்சரிப்பு சம்பன் என்பதை ஒத்ததாகவே காணப்படுகிறது.
‘கடற்கரையோரங்களை அடுத்து கடலில் ஓடும் ஒரு சிறந்த ஓடமாக சம்பான் கருதப்படுகிறது. அதாவது ஆற்றிலும் கடலிலும் குறைந்த செலவில் நீண்ட தூரங்களுக்கு விரைவில் செல்லும் அரிய நீர்ப்போக்குவரத்து சாதனமாகும். இது இலேசான தோணியாகும். அதன் பகுதி தேளின் வாலைப் போல் இரு பக்கங்களிலும் உயர்ந்து நிற்கும். இத்தோணியின் இருபக்கங்களும் இரண்டு துடுப்புக்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இது கரடுமுரடாக சுழன்று எழும் அலைகளிலும் கலங்காது ஓடுகிறது. பண்டு தொட்டு இத்தகைய தோணிகள் வங்கத்திலும் தமிழகத்திலும் கேரளாவிலும் ஈழநாட்டிலும் ஏராளமாக ஓடிக் கொண்டிருந்தன. ….. ஹம்பாந்தோட்டை என்ற ஊரும் சம்மாந்துறை என்ற ஊரும் நிலரீதியாக தொடர்புபட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது’ என ஏ. பி. எம். இத்ரீஸ்   ’சோனக தேசம்’ எனும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார்.

ஹொங்கொங் துறைமுகத்தில் பயன்பாட்டில் இருந்த பெரிய சம்மன் படகுகள்

சம்மன்காரர்கள் என்ற இந்தச்சொல் சம்மான் படகுகளைப்பயன்படுத்திய தென்னிந்திய முஸ்லிம் வர்த்தகர்களை குறிக்கும்படியாக பயன்படுகிறது. இது சிங்கள மொழியில் ஹம்பன்காரயா என வழங்கப்படுகிறது. தமிழ் அகராதிகளில் சம்மான்காரர்கள், சம்மானோட்டிகள் எனவும் குறிப்பிடப்படுகின்றனர்.  இங்கு சம்பான்காரர்கள் என்று பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. இவர்களையே  கேரளத்தில் மரைக்காயர்கள் என்று அழைக்கின்றனர். மரக்கல ஆயர்கள் என்பதிலிருந்து இந்தச்சொல் தோன்றியதாக குறிப்பிடுவர். மரக்கலங்களுக்கு பொறுப்பான தலைவனைக்குறிக்க இந்தச்சொல் பயன்படுகின்றது. சிங்களத்தில் ’மரக்கல மினிஸ்ஸ’ என்றவாறும் இச்சொல் கையாளப்படுகின்றது.

சம்மன்காரர்களுடனான இலங்கை மக்களின் வர்த்தகம் நாட்டின் அனைத்துத் துறைகள் மூலமும் இடம்பெற்றது எனலாம். புராதன மட்டக்களப்புத் துறைமுகத்திற்கும் தென்னிந்தியத் துறைமுகங்களிற்குமான தொடர்பு நீடித்து நிலைத்த ஒன்றாகும் என பேராசிரியர் அரசரத்தினம் கூறுகிறார். இதே போன்றே கொழும்புத்துறைமுகத்தில் இடம்பெற்ற வர்த்தகத்திற்கச் சான்றாக Red Mosque என்றழைக்கப்படும் சம்மான் கோட்டுப்பள்ளி வாசல் காணப்படுகின்றது. அதே போன்று ஹம்பன்தோட்ட, சம்மாந்துறை போன்ற ஊர்களின் பெயர்களும் இத்தொடர்புகளினால் ஏற்பட்டதொன்றாகும்.

ஆரம்ப காலத்தில் இலங்கையின் உள்ளூர் போக்குவரத்தில் பயன்பட்ட சம்பன் படகு

ஆரம்ப காலங்களில் பல வகையான அளவுகளில் சம்பான் தோணிகள் காணப்பட்டன 8அடி முதல் 30அடி வரையான நீள அளவுகளிலும் இவை காணப்பட்டுள்ளன.  பொருட்களை ஏற்றிச் செல்லவும் உள்நாட்டு பிரயாணங்களுக்கும் இவை பெரிதும் பயன்பட்டன. இன்று இவற்றின் பயன்பாடும் சொல் வழக்கும் அருகிப் போயுள்ளது. தூர கிழக்காசிய நாடுகளில் ஓரு சில பகுதிகளில் இன்றும் சம்பான் தோணிகள் பயன்பாட்டில் உள்ளன.

மட்டக்களப்பின் துறைகளைப்பற்றி கூறும் போது வீ. சீ கந்தையா அவர்கள்
“மட்டக்களப்பு வாவி ஒரு காலத்தில் கிட்டங்கிக்கு அப்பால் நீண்டு கிடந்ததென்றும் அதன் தென்கோடியிலேதான் சம்பாந்துறை எனும் துறைமுகம் அமைந்து பெரிய வியாபாரத்தலமாக விளங்கிற்றென்றும் தெரிகிறது. இந்திய வியாபாரிகளாற் கொண்டு வரப்பட்டு நின்ற சம்பான் என்ற வள்ளங்களின் பெயரே அவ்விடத்திற்கும் வழங்கப்படுகின்றதென்ற குறிப்பு இத்துறைமுகச் சிறப்பினை நன்கு காட்டுகிறது” எனக் கூறுகிறார் இதையே. H.G. Nevoil donal Fergusion, எஸ். ஓ. கனகரத்தினம் வெல்லவூர்  கோபால் போன்றவர்களும் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு சம்பான்காரர்கள் குடியேறிய போது அவர்கள் சம்பானோட்டி குடி என்று அழைக்கப்பட்டனர். இந்திய உபகண்டத்தின் மேற்குகரையில் சேர நாட்டில் வர்த்தகத்தின் காரணமாக குடியேறிய அராபிய பாரசீக வம்சாவளியினரான மரைக்காயர்கள் என்று அழைக்கப்பட்ட மாப்பிள்ளா முஸ்லிம்கள் போன்று இலங்கையின் கிழக்குக்கரையில் தாய்வழிப் பாரம்பரியத்தைக் காட்டுவதாக காணப்படும் குடிவழிமுறையில் சம்பானோட்டி குடியையும் குறிப்பிடலாம்.

கப்பற்தலைவர்களை அழைக்கும் மரைக்காயர் என்ற பெயர் குடிகளின் தலைவர்களுக்கு குறிப்பிடப்படும் பதவிப்பெயராக நிலைத்தமை முஸ்லிம்களின் கடல்வழி வர்த்தகத்தின் கலாசார செல்வாக்காகவே காணப்படுகின்றது. அதே வேளை   சம்மான்தோணிகளை தென்னிந்திய வர்த்தகர்கள் மட்டுமன்றி மலாயர்கள், சீனர்கள், ஜாவா தேசத்தினர் போன்றோரும் பெருமளவு பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் சம்மான்காரர்கள் என பொதுவாக அழைக்கப்படுவதில்லை. இவ்வாறு குடியேறிய வசித்த தூர கிழக்காசியர்கள் அவர்களின் மொழியையும் பிராந்தியத்தையும் அடிப்படையாக கொண்டு ஜாவா குடியினர் என்று அழைக்கப்பட்டனர்.

உசாத்துணை

  1. பாணகமுவ எனும் மாந்திராவ முஸ்தபா, 2012 தகவல் முர்ஸித், ஷாஜஹான் (பாணகமுவ)
  2. றாஸிக். எஸ்.எச்.எம். (2012) முஸ்லிம்கள் மத்தியில் குடிவழிமுறை
  3. தில்லைநாதன். சா.( 2015) மட்டக்களப்புத் தமிழ்ர் பண்பாட்டு மரபுகள்
    Digital Dictionaries of South Asia
  4. இத்ரீஸ் ஏ.பி.எம்., 2011 சோனக தேசம் மிகச்சருக்கமான அறிமுகம் ப-105
    www.infopedia.nl.sg
  5. கந்தையா . வீ.சி., 1964 மட்டக்கழப்புத் தமிழ்கம் ப-428 Ferguson. D. , The Earliest Dutch Visit to Ceylon p 123

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

எம். ஐ. எம். சாக்கீர்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைச் சேர்ந்த முஹம்மட் சாக்கீர் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டம் பெற்றவர் தற்போது மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராக பணிபுரிகிறார்.

வரலாறு, பண்பாட்டு ஆய்வு, நாட்டாரியல், ஆவணப்படுத்தல் போன்ற துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். இவரது 21வது வயதில் 'சம்மாந்துறை பெயர் வரலாறு' என்ற ஆய்வு நூலை வெளியிட்டார், சம்மாந்துறை பெரியபள்ளிவாசல் வரலாற்று ஆவணப்படம் போன்றவற்றிற்கு வசனம் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் இன்கிலாப் சஞ்சிகை மீளுருவாக்க குழுவின் முன்னோடியான செயற்பாட்டாளரான இவர் 2019 இல் வெளியான சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும் எனும் நூலின் பதிப்பாசிரியர்களிலொருவரும் கட்டுரையாசிரியருமாவார். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, கலை, பண்பாடு, முதலான கருபொருள்களில் கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்