இந்தத்தொடரில் முஸ்லிம்களிடம் வழக்கிலுள்ள மார்க்க உபன்யாசகர்கள் வழிவந்த குடிகளைப்பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
கோசப்பாகுடி
இந்தக்குடி சம்மாந்துறையில் காணப்படுகின்றது. குடிகள் தாய்வழியாகப் பின்பற்றப்படுவதால் பெண்பெயர்களில் மாத்திரம் காணப்படுவதில்லை. இந்தக்குடியின் பெயர் ஆண் பெயரில் காணப்படுகின்றது.
15 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் சம்மாந்துறைத் துறைமுகத்தை வந்தடைந்த சரக்குக் கப்பலொன்றில் மத்தியகிழக்கு அல்லது பாரசீகத்தைச் சேர்ந்த கோஸப்பா என்பவரும், அவருக்கு உதவியாளராக கோஸ்முகையதீன் கரியப்பா என்பவரும் அவர்களுடன் ஆறுவயது மதிக்கத்தக்க பெண்குழந்தையொன்றும் வருகை தந்தனர். இவர்கள் சம்மாந்துறையில் சிங்கிரிப்பற்றைகள் நிறைந்த காட்டுப் பகுதியொன்றில் குடிசை அமைத்து வாழ்ந்ததாகவும் வாய்வழிக்கதைகள் நிலவிவருகின்றன. கரியப்பா என்பவர் தென்னிந்தியாவின் தமிழ்நாட்டைச் சார்ந்தவர். இவ்விரு உபன்யாசகர்களின் மார்க்க போதனைகள் மற்றும் பரிகாரங்களுக்காக சம்மாந்துறைப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களும், தமிழ் முக்குவ மக்களும் இவர்களுக்கு மரியாதை செய்துவந்தனர். மேலும் அவர்களுக்கு ஒரு தங்குமிடத்தையும் அமைத்துக் கொடுத்தனர் என்றும் இவர்களின் மரணத்தின் பின்னர் அவர்களிருவரும் தற்போது சம்மாந்துறைப் பெரிய பள்ளிவசால் இருக்கும் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக பள்ளிவாசலில் வரலாறு தொடர்பில் கர்ணபரம்பரைக் கதைகள் நிலவுகின்றன. பிற்காலத்தில் அவ்விடத்தில் கோசப்பா பள்ளி என்ற பள்ளிவாசலும் உருவானது. இப்பள்ளிவாசலே கிழக்கிலங்கையின் முதலாவது மெத்தைப் பள்ளிவாசலாக 1950 களில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. இப்புனர்நிர்மாணத்தில் முன்னின்றவரும் இந்தியாவின் நீடுரைச் சேர்ந்த மௌலானா ஒருவரே.
கோசப்பா மற்றும் கரியாப்பா ஆகிய இறைநேசர்களோடு வருகை தந்த பெண்குழந்தையின் பெயர் உம்முகுல்தூம் (முக்குலுத்தும்மா). இவரை நல்லம்மா என்று அழைத்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. இவர் சம்மாந்துறையிலேயே திருமணம் செய்து வாழ்ந்த வந்தார் .அவரின் சந்ததிகள் அனைவரும் கோசப்பா குடியினர் என்று அழைக்கப்படலாயினர். இதிலிருந்தே இக்குடி தோற்றம் பெறலாயிற்று.
இதேபோன்று இந்தியாவின் மேற்குக் கரையிலிருந்து வருகைதந்த இறைநேசர்களிலிருந்தும் சம்மாந்துறையில் குடிகள் தோற்றம் பெற்றுள்ளன.
மலையாலத்துலெவ்வை குடி – அழகு வெற்றிலைக் குடி
தென்னிந்தியாவின் மலபார் பகுதியிலிருந்து, இன்றைய கேரளத்திலிருந்து சம்மாந்துறைக்கு வருகை தந்து மார்க்க உபன்யாசம் செய்த மௌலானா மௌலவி முஹம்மதிப்னு அப்துல்லாஹ் என்றழைக்கப்பட்டவரின் பரம்பரையினரே மலையாலத்து லெவ்வை குடியினராவார்கள். இவர் 18 ஆம் நூற்றாண்டளவில் சம்மாந்துறை சின்னப்பள்ளிவாசலில் கதீபாக கடமையாற்றியுள்ளதாக அறியக்கிடைக்கிறது. இவர் கண்வைத்தியம் செய்து வந்துள்ளார். குறிப்பாக கட்கட்டி போன்ற நோயுள்ளவர்களின் கண்களில் ஊசி போன்ற கருவியினால் குத்தி அவற்றைக் குணமாக்கி வந்துள்ளார். இதனால் இவரை கண்குத்திஅப்பா என்று அழைக்கலாயினர். இப்பெயர் பிற்காலத்தில் கங்கத்தியப்பா என்று மருவி வழங்கப்படுகின்றது. இவர் மரணத்தின் பின்னர் சம்மாந்துறை முகையதீன் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள வளவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரது அடக்கஸ்தலம் இன்றுவரை பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவரின் வளவில் மலையாளத்திலிருந்து கொண்டு வந்த வெற்றிலைக் கொடியொன்றை நட்டு வளர்த்ததாகவும் அதனால் அழகு வெற்றிலை குடியினர் என்று இந்தக்குடிக்கு இன்னுமொரு சிறப்புப்பெயரும் உண்டு. சுருக்கமாக இந்தக்குடி லெவ்வை குடி எனவும் அழைக்கப்படுகின்றது.
அதேவேளை இவரது சீடரான கையூம் லெவ்வை என்பவரின் சந்ததியினரே கையூம் மலையார் குடியினர் அல்லது கைமலயா குடியினர் அல்லது கையூம் லெவ்வைகுடியினர் என வழங்கப்படுகின்றனர். இவரும் மலையாளத்துலெவ்வை குடியின் ஆரம்பகர்த்தாவான மௌலானா மௌலவி முஹம்மதிப்னு அப்துல்லாஹ் அவர்களுடன் வருகை தந்தவராவார். அவரைத் தொடர்ந்து கண்வைத்தியம் செய்து வந்தமையினால் இவரும் கங்கத்தியப்பா என்றே அழைக்கப்பட்டுள்ளார். இதே போன்று இறை நேசர்களோடு தொடர்புபட்ட இன்னுமொரு குடியே உதுமான்பிள்ளை குடியாகும்
உதுமான்பிள்ளைகுடி – உத்துப்பிள்ளை குடி – உதமான்போடி குடி
காத்தான்குடியில் பிரதான வீதியில் காணப்படும் குழந்தையம்மா என்பவரின் சியாரம் அடக்கஸ்தலம் காணப்படுகின்றது. மஹ்மூதா மற்றும் உதுமானியா ஆகிய இருவரும் இவரின் சகோதரிகளாவர். இவர்களில் உதுமானியா என்பவரின் வழித்தோன்றல்களே உதுமான்பிள்ளை குடியினர் என்றழைக்கப்படுகின்றனர். இவரின் புதல்வர்களே காத்தான்குடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள புளியம்போக்கர் அப்பா என்பவரும், காத்தான்குடி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் நாகையடி அவ்லியா என்ற இறைநேசருமாவார்கள் என்று பரம்பரை வாய்வழிச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்தக்குடி கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய ஊர்களில் காணப்படுகின்றது.
வடக்கனாகுடி – லெவ்வை வடக்கனாகுடி – லெவ்வை குடி – இலவக்குடி – ஆலிம்குடி – மோதின்குடி
இந்தக்குடி அக்கரைப்பற்று, சாய்ந்தமருது, கல்முனை, ஒலுவில் சம்மாந்துறை, மருதமுனை ஆகிய ஊர்களில் காணப்படுகின்றது. இந்தக்குடியினரும் வடக்கிலிருந்து வருகைதந்த மார்க்க உபன்யாசகர் ஒருவரின் வழித்தோன்றல்கள் என்றே குறிப்பிடப்படுகின்றது. மேலும் இந்தக்குடியினர் தமது காரியங்களை ஆரம்பிப்பதற்காக வடக்குத் திசையைப் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளதாக பொத்துவில் பிரதேசத்தை மேற்கோள் காட்டி எஸ். அப்துல் றாஸிக் குறிப்பிடுகின்றார்.
இந்தக்குடியினரின் குடிவிருதுச் சின்னமாக ஆசாக்கோல் எனப்படும் முஸ்லிம்களின் வெள்ளிக்கிழமைகளில் பிரசங்கமேடையில் மார்க்க உபன்யாசம் செய்யும் கதீப்மார் பயன்படுத்தும் ஆசாக்கோல் காணப்படுகின்றது. சம்மாந்துறையில் இச்சின்னம் நிலைக்குத்தான ஆசாக்கோலாக பயன்படும் அதே வேளை சாய்ந்தமருதில் தலைகீழ் ஆசாகோலாக காணப்படுகின்றது. மேலும் ஆலிம்குடிக்கும் இதே சின்னமே பயன்படுத்தப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட குடிகளின் பெயர்களில் காணப்படும் லெப்பை என்ற பதம் தென்னிந்திய பிராந்தியத்தில் இஸ்லாத்தின் அறிமுகத்தின் பின்னர் உருவானது. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பின்னர் இஸ்லாத்தைத் தழுவியவர்களைக் குறிக்கின்றது. இவர்களில் பெரும்பாலானோர் அரபு, உர்து, அர்வி போன்ற மொழிகளில் பரிச்சயமும் பாண்டித்தியமும் கொண்டிருந்தமையினால் மார்க்க விடயங்களில் அதிகம் ஈடுபட்டுவந்துள்ளனர். பள்ளிவாசல் கடமைகளிலும் பங்கேற்றுள்ளனர். 17 ஆம் , பதினெட்டாம் நூற்றாண்டைய ஆட்பெயர்களில் லெப்பை என்ற பெயர் அல்லது பெயரீற்றுப்பகுதி பெரும் செல்வாக்கைக் கொண்டிருந்தது. அலிலெவ்வை, ஆதம்லெவ்வை, பக்கீர்லெவ்வை, மீராலெவ்வை, உதுமாலெவ்வை, இஸ்மாலெவ்வை, உமர்லெவ்வை என்று இஸ்லாத்தின் ஆரம்பகால கலிபாக்கள், நபிமார்களின் பெயர்களோடு இணைத்து பயன்பட்டுள்ளது. லெப்பை என்பது அரபிய வார்த்தையான ‘லப்பைக்’ என்பதிலிருந்து தோன்றியுள்ளது. மலபார்கரையில் உருவான மாப்பிள்ளா முஸ்லிம்களைப் போல சோழமண்டலக்கரையில் உருவான முஸ்லிம்கள் லெப்பைகள் என அழைக்கப்பட்டனர்.
மாப்பிள்ளைமரைக்கார் குடி – மரைக்காண்டி குடி
இவற்றை போன்றே கேரளத்துடனான கிழக்கிலங்கைத் தொடர்புகளை வெளிக்காட்டும் ஒரு குடியாக மாப்பிள்ளை மரைக்கார் குடியைக் குறிப்பிடலாம். இந்தக்குடியினர் மலபார் பகுதியைச் சேர்ந்த மாப்பிள்ளா முஸ்லிம்களின் வழித்தோன்றல்களாவர். இந்தக்குடி அக்கரைப்பற்று, சம்மாந்துறை, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் காணப்படுகின்றது. சாய்ந்தமருதில் மரைக்காண்டி குடி என்று அழைக்கப்படுகின்றது.
மரைக்கார் நெய்ந்தை குடி – பாஞ்ச நெய்ந்தை குடி
இக்குடியின் பெயரில் மரைக்கார், நெய்ந்தை என்ற இரு பெயர்கள் காணப்படுகின்றன. இந்த நெய்ந்தை என்ற பெயரில் சாய்ந்தமருதில் தம்பி நெய்ந்தை காரியப்பர் என்ற இஸ்லாமிய மக்களின் தலைவர் ஒருவர் வாழ்ந்துள்ளதைப் பற்றி அறியமுடிகின்றது இவர் நிந்தவூர் ஜென்னதல் முகையதீன் பள்ளிவாசலுக்கு நிலம் கொடுத்தாகவும் தகவல்கள் உள்ளன. இதே போல பாஞ்ச நெய்ந்த குடி என்ற ஒரு குடி நிந்தவூரில் காணப்படுகின்றது.
மரைக்காயர் என்ற பதம் ‘மரக்கலஆயர்கள்’ கப்பற்தலைவர்கள் என்ற பொருளில் வழங்கப்படுகின்றது. வியாபாரத்திற்காக வரும் ஒவ்வொரு கப்பல்களும் ஒரு தலைவரின் கீழ் நிருவகிக்கப்படும். வர்த்தக ஒப்பந்தங்களும் மரைக்காயர்கள் தலைமையிலேயே நடைபெறும். இந்த தொழிற்பெயர் நாளடைவில் பரம்பரையாகக் கடத்தப்பட்டு ஆட்பெயர்களில் வழக்கத்திற்கு வந்த அதேவேளை பள்ளிவாசல் நிருவாகத்தினருக்கு வழங்கும் பதவிப்பெயராகவும் மாறியது. இலங்கையைப்பொறுத்தவரை சிங்களத்தில் மரக்கலமினிஸ்சு, ஹம்பங்காரயா என்று இச்சொல் பிரதியீடாக அமைக்கப்பட்டாலும் முஸ்லிம்களின் வாழ்வியலில் மரைக்காயர் என்ற மலபார்கரைகளில் இருந்து வந்த பழந்தமிழ்ப் பெயரே பயன்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முதன்முதலில் கப்பற்போர்ப்படை அமைத்தவர்கள் என்று கூறப்படும் போர்த்துக்கேயர்களை எதிர்த்து சாமோரி மன்னனுக்கு பக்கபலமாக விளங்கிய குஞ்சாலிமரைக்காயர்கள் இலங்கையிலும் போர்த்துக்கேயருக்கெதிராக போருதவி புரிய வருகைதந்துள்ளனர். அடுத்த தொடரில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களிடையே பொதுவாக வழங்கப்படும் குடிகளைப் பார்க்கலாம்.
தொடரும்.