அனுராதபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 431 பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 347 கல்வெட்டுகள் ஆங்கிலேயர் காலத்திலும், 84 கல்வெட்டுகள் அண்மையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம் மற்றும் இந்துத் தெய்வங்கள் தொடர்பான 116 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் நாகர் பற்றி 31 கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனுராதபுரம் நகரில் இருந்து திருகோணமலைக்குச் செல்லும் வீதியில் 15 கி.மீ தொலைவில் மிகுந்தலை என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு மலைப் பாறைகள் நிறைந்த பிரதேசத்தில் இயற்கையாக அமைந்த நூற்றுக்கணக்கான கற்குகைகளும், அவற்றில் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளும் மற்றும் பரந்த அளவில் பண்டைய கட்டிட இடிபாடுகளும் காணப்படுகின்றன. இங்கு சுமார் 2000 வருடங்களுக்கு முற்பட்ட காலங்களிலே நாக வழிபாடு நிலவியிருந்தமை தொடர்பான சான்றுகள் பல காணப்படுகின்றன.
மணிநாக மந்திரய எனும் மணிநாகன் பள்ளி
மிகுந்தலை மலையடிவாரத்தில் மலைக்கு ஏறிச் செல்லும் பிரதான வாயிலில், பிரசித்தி பெற்ற அகலமான கற்படிகளின் தொடக்கத்தில், அதன் இடது பக்கத்தில் ஒரு கட்டிட இடிபாடு காணப்படுகிறது. நீள் சதுர வடிவமுள்ள பாரிய கற்பாளங்களின் மூலம் கட்டப்பட்ட மதிற் சுவரினால் சூழப்பட்டுள்ள இக் கட்டிடத் தொகுதியில் மொத்தமாக ஐந்து கட்டிட இடிபாடுகள் காணப்படுகின்றன. சதுர வடிவமான இக் கட்டிடங்களின் அடித்தளமும், சில தூண்களும் மட்டுமே எஞ்சியுள்ளன.
இக் கட்டிடத் தொகுதிக்குச் செல்ல தூண்களுடன் கூடிய வாயில் அமைக்கப்பட்டுள்ளது. வாயிலைக் கடந்தவுடன் இடது பக்கமும், வலது பக்கமும் இரு கட்டிடங்கள் காணப்படுகின்றன. இவற்றைக் கடந்தவுடன் மத்தியில் ஒரு பெரிய கட்டிடம் உள்ளது. அதை அடுத்து இடது பக்கமும், வலது பக்கமும் இரு கட்டிடங்கள் காணப்படுகின்றன. இவற்றின் பின்பக்கம் மலைப் பாறைகள் இக் கட்டிடத் தொகுதிக்கு அரணாக அமைந்துள்ளன.
இக் கட்டிடத் தொகுதி “மணிநாக மந்திரய” எனப் பெயரிடப்பட்டுள்ளது. பேராசிரியர் எஸ். பத்மநாதன் தனது நூல்களில் குறிப்பிட்டுள்ள மணிநாகன் பள்ளிகளில் ஒன்றாக இது இருக்க வேண்டும். பண்டைய காலத்தில் கிழக்கிலங்கையில் நாகர் அமைத்த மணிநாகன் பள்ளிகள் பற்றி பேராசிரியர் எழுதிய இலங்கைத் தமிழர் வரலாறு எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கந்தக்க தூபியில் நாகராஜர் மற்றும் நாகச் சிற்பங்கள்
மிகுந்தலையில் உள்ள மிகப் பழமை வாய்ந்த தூபிகளில் ஒன்றே கந்தக்க தூபியாகும். மணிநாகன் பள்ளியைக் கடந்து அகலமான கற்படிகளில் ஏறிச் செல்லும்போது ஒரு சிறிய மேடை உள்ளது. இம் மேடையின் வலது பக்கத்தில், மேல் நோக்கிச் செல்ல கற்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக் கற்படிகள் மூலம் மேல் நோக்கிச் சென்றால் கந்தக்க தூபியை அடையலாம். இத் தூபியின் வாகல்கட என்றழைக்கப்படும் நான்கு பக்கங்களிலும் உள்ள வாயில்களில் அதிகளவில் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஒரு வாயிலின் இரண்டு பக்கங்களிலும் மூன்றரை அடி உயரமான ஐந்து தலை நாகத்தின் புடைப்புச் சிற்பங்கள் இரண்டு செதுக்கப்பட்டுள்ளன.
இன்னுமோர் வாயிலின் இரு பக்கங்களிலும் மூன்றரை அடி உயரமான கை கூப்பிய நிலையில் உள்ள ஏழு தலை நாகராஜனின் இரண்டு புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இத் தூபி யாரால், எந்தக் காலப் பகுதியில் அமைக்கப்பட்டது எனும் விபரங்கள் வரலாற்று நூல்களில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் பொ.ஆ.மு 59 – 50 காலப்பகுதியில் இலங்கை மன்னனாகவிருந்த லஜ்ஜிதிஸ்ஸ எனும் மன்னன் கந்தக்க தூபிக்கு பூஜைகள் நடத்தியது பற்றிய குறிப்புகள் மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளன.
எனவே இவனது காலத்திலோ அல்லது இதற்கு சற்று முந்திய காலத்திலோ கந்தக்க தூபி அமைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இதன்படி மிகுந்தலையில் கந்தக்க தூபி அமைக்கப்பட்ட காலத்தில் அதாவது சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு இங்கு நாக வழிபாடு செல்வாக்குடன் விளங்கியிருக்கும் என நம்பக்கூடியதாக உள்ளது. இத் தூபியில் வாகல்கட என்றழைக்கப்படும் வாயிலில் பிள்ளையாரின் வடிவமும் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கந்தக்க தூபியில் விநாயகர் மட்டுமல்லாது இரண்டு தூண்களில் அழகிய நந்தியின் சிற்பமும் காணப்படுகிறது. இது இப் பகுதியில் நிலவிய சிவ வழிபாட்டின் அடையாளமாகும்.
நாகச் சுனை
மிகுந்தலை மலை உச்சிக்குச் செல்லும் போது இடையில் காணப்படும் இடம் மெத மழுவ (மத்திய பகுதி) என அழைக்கப்படுகிறது. இங்கு தான் பிரசித்தி பெற்ற இரண்டு கற்பலகைக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவ்விடத்தில் இருந்து இடது பக்கமாக மலையின் உச்சிப் பகுதிக்குச் செல்லும் கற்படிகளில் சிறிது தூரம் சென்றதும் படிகளின் வலது பக்கமாக ஒரு ஒற்றையடிப் பாதை செல்கிறது. இப் பாதை வழியாகச் சிறிது தூரம் சென்றதும் இயற்கையாக அமைந்துள்ள ஒரு நீர்ச் சுனையைக் காணலாம். இதுவே நாக பொக்குன என்றழைக்கப்படும் நாகச் சுனையாகும்.
சுமார் 30 அடி உயரமும், 90 அடி நீளமும் கொண்ட ஒரு பாறையின் கீழ்ப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள உட்குழிவான பகுதியில் மழை நீர் தேங்கி நிற்பதனால் இச் சுனை உருவாகியுள்ளது. சுமார் 15 அடி ஆழமும், 20 அடி அகலமும், 80 அடி நீளமும் கொண்ட இச் சுனையின் பின்பக்கம் உள்ள செங்குத்தான கற்பாறையின் மத்திய பகுதியில் ஐந்து தலை நாகம் படமெடுத்த வண்ணம் இருக்கும் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. 15 அடி உயரமான இந் நாகத்தின் தலையுடன் கூடிய உடலின் பாதி நிலைக்குத்தாக நின்ற வண்ணமும், அடுத்த பாதி வாலுடன் பின்பக்கமாக பாறைக்குள் செல்வது போலவும் நாகத்தின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
மகாவம்சத்தில் மகிந்த தேரர் இலங்கைக்கு வருகை தந்தமை தொடர்பான வரலாற்றுச் செய்திகளில் “நாக சதுஷ்க” எனும் சுனை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மகிந்த தேரர் மிகுந்தலை மலையில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொ.ஆ. 575 – 608 காலப் பகுதியில் இலங்கையை ஆட்சி செய்த 1 ஆம் அக்ரபோதி மன்னன் “நாக சொந்தி” எனும் சுனையை அமைத்ததாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. இது இந்த நாகச் சுனையாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
பிராமிக் கல்வெட்டுகள்
மிகுந்தலையில் உள்ள மலைகளில் உள்ள குகைகளில் மொத்தமாக 82 பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் இந்து வழிபாட்டு பாரம்பரியம் சம்பந்தமான 11 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் நாகர் தொடர்பாக 5 கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மிகுந்தலையில் அதிகளவில் பிராமிக் கல்வெட்டுகள் காணப்படும் மலைப்பகுதி அட்டசட்ட லேன என அழைக்கப்படுகிறது. இதன் பொருள் அறுபத்தெட்டு கற்குகைகள் என்பதாகும். இயற்கையாக அமைந்த இக் கற்குகைகளில் கற்புருவங்கள் வெட்டப்பட்டு அவற்றின் கீழே பிராமி எழுத்துக்களில் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
மிகுந்தலையில் காணப்படும் நாகர் தொடர்பான கல்வெட்டுகளில் முதலாவது கல்வெட்டில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
“உபசிக மஹாநாகய ஜிதய உபசிக ரொனிய சகச”
இது ஆங்கிலத்தில் “The cave of the female lay devotee Roni [Rohini], daughter of the female lay devotee Mahanaga [is given]to the sangha” எனப் பொருள்படுகிறது. இதன் தமிழ் அர்த்தம் “பாமர பெண் பக்தையான மகாநாகவின் மகளான பாமர பெண் பக்தை ரொனியின் [ரோகிணியின்] கற்குகை” என்பதாகும்.
இரண்டாவது கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு:
“பருமக நாக புத்த அசலிய லேன அகட்ட அனகட்ட சட்டுதிசிக சகய”
இதன் கருத்து “பெருமகன் நாகனின் மகனான அசலியவின் கற்குகை, நாலா திசைகளிலும் உள்ள சங்கத்தார் வந்தாலும், வராவிட்டாலும் வழங்கப்பட்டுள்ளது” என்பதாகும். இது ஆங்கிலத்தில் “The cave of Asali, son of the chief Naga, [is given] to the sangha of the four quarters, present and absent” எனப் பொருள்படும்.
மூன்றாவது கல்வெட்டில் “உபசிக நாகமித்த பரியய உபசிக சிலய லேனே சகச” எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இது ஆங்கில மொழியில் “The cave of the female lay devotee Sila, wife of the lay devotee Nagamitta, [is given] to the sangha” எனவும், தமிழில் “பாமர பக்தன் நாகமித்தனின் மனைவியான பாமர பெண் பக்தை சிலாவின் கற்குகை சங்கத்தார்க்கு வழங்கப்பட்டது” எனவும் பொருள்படுகிறது.
நான்காவது கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு:
“பருமக நாக புத பருமக பிகல குதச லேனே அகட்ட அனகட்ட சடு திச சகச தினே”
இதன் பொருள் “பெருமகன் நாகனின் மகனான பெருமகன் பிங்கலகுத்தனின் குகை நாலா திசைகளிலும் உள்ள சங்கத்தார் வந்தாலும், வராவிட்டாலும் வழங்கப்பட்டுள்ளது” என்பதாகும். இது ஆங்கிலத்தில் “The cave of the chief Pingalagutta, son of the chief Naga, is given to the sangha of the four quarters, present and absent” எனப் பொருள்படும்.
மிகுந்தலையில் நாகர் பற்றிக் குறிப்பிடும் ஐந்தாவது கல்வெட்டு பிற்காலத்தில் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டாகும். இக்கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு:
“கமிக உடக புதஹ மேல நாகஹ லேன சட்டு திச சகச”
இதன் பொருள் “கிராம அதிகாரி உடவின் மகனான மேள நாகனின் குகை நாலா திசைகளிலும் இருந்து வரும் சங்கத்தாருக்கு வழங்கப்பட்டுள்ளது” என்பதாகும். ஆங்கிலத்தில் இது “The cave of Mela Naga, son of the village councillor Uda, is given to the sangha of the four quarters” எனப் பொருள்படும்.
மிகுந்தலையில் உள்ள மேற் குறிப்பிடப்பட்டுள்ள நாகம் தொடர்பான கல்வெட்டுகளில் பெண் பக்தை மகாநாக, பெருமகன் நாகன், பக்தன் நாக மித்தன், மேள நாகன் ஆகிய நாகரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மிகுந்தலைப் பகுதியில் நாகர் வாழ்ந்துள்ளனர் என்பது உறுதியாகத் தெரிகிறது.
மேலும் இப்பகுதியில் அமைந்திருந்த மணிநாகன் பள்ளி, நாகச் சுனை மற்றும் நாக சிற்பங்கள் ஆகியவை மிகுந்தலை மலைப் பகுதியில் 2000 வருடங்களுக்கு முன்பு நாகர் வாழ்ந்துள்ளதோடு, நாக வழிபாடுகளையும் மேற்கொண்டுள்ளனர் என்பதை உறுதி செய்யும் சான்றுகளாக அமைகின்றன.
தொடரும்.