பீலிவளை புதல்வன் தொண்டைமான் இளந்திரையன்
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் நாகநாட்டை ஆண்ட அரசர்கள் பௌத்தமதத்தைத் தழுவியிருந்தார்கள். இம்மன்னர்களின் மாண்புகளை மணிமேகலை எடுத்துரைக்கிறது. நாகநாட்டை ஆட்சிபுரியும் மன்னன் ‘வளைவாணன்’ (வளை எறிவதில் வல்லவன்) என்ற பெயரைக் கொண்டவன். அவனது மனைவியான அரசியின் பெயர், வாசமயிலை. அவர்களுக்குப் பிறந்த பெண், பீலிவளை.
“நாக நாடு நடுக்கின் றாள்பவன்
வாகை வேலோன் வளைவணன் தேவி
வாச மயிலை வயிற்றுட் தோன்றிய
பீலிவளை என்போள் பிறந்த அந்நாள்”
(மணிமேகலை: காதை 24: வரி 54-57)
நெடுமுடிக்கிள்ளி
பீலிவளை வளர்ந்து பெரியவளாகிறாள். பூம்புகார் நகரத்திற்குப் பெற்றோர்களோடு இந்திரவிழாக் காணச்சென்ற சமயத்தில் ஒரு நாள் சோழ மன்னன் நெடுமுடிக்கிள்ளியைச் சந்திக்க நேரிடுகிறது. சோழ மன்னனுக்கும் நாக இளவரசிக்குமிடையே காதல் மலர்கிறது. ஒரு திங்கள் காலம், பீலிவளை சோழ அரசனுடனே கூடியிருந்து களித்திருந்தாள்.
“உப்பளம் தழீஇய உயர்மணல் நெடுங்கோட்டுப்,
பொங்குதிரை உலாவும் புன்னையங் கானல்
கிளர்மணி நெடுமுடிக் கிள்ளி முன்னா
இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற
பூநாறு சோலை யாருமில் ஒருசிறைத்
தானே தமியன் ஒருத்தி தோன்ற”
(மணிமேகலை: காதை 24: வரி 27-32)
உப்பளத்தினைச் சார்ந்ததும், மணல் உயர்ந்த நீண்ட கரையினை உடையதும், பொங்கிவரும் கடலலைகள் உலவிக்கொண்டிருக்கும் புன்னைமரங்களைக் கொண்ட அழகிய கானற் சோலையிடத்தே ஒளி கிளர்ந்துகொண்டிருந்த நெடிய முடியினையுடைய கிள்ளியின் முன்பாக, இளவேனிற் பருவமானது இறுமாப்பினை அடையுமாறு, வியக்கும்தன்மை வாய்ந்த மலர்கள் மணம் பரப்பிக்கொண்டிருக்கும் சோலையினுள்ளே, யாருமில்லாத ஒரு பக்கத்தே, தன்னந்தனியளாக ஒருத்தி வந்து தோன்றினாள்.
கிள்ளியின் காதலி
“இன்னல் ஆர்கொல் ஈங்கிவள்? என்று,
மன்னன் அறியான் மயக்கம் எய்திக்
கண்ட வண்ணினும், கேட்ட செவியினும்,
உண்ட வாயினும், உயிர்த்த மூக்கினும்,
உற்றுணர் உடம்பினும், வெற்றிச் சிலைக் காமன்
மயிலையும், செயலையும், மாவும் குவளையும்,
பயிலிதழ்க் கமலமும், பருவத் தர்ந்த
மலர்வாய் அம்பின் வாசங் கமழப்
பலர்புறங் கண்டோன் பணிந்து தொழில் கேட்ப
ஒருமதி யெல்லை கழிப்பினும் உரையாள்
பொருவரு பூங்கொடி போயின அந்நாள்”
(மணிமேகலை: காதை 24: வரி 33-43)
அவளது பேரழகில் மயங்கிய மன்னன் கிள்ளிவளவன், போரில் பலரின் புறங்கண்டவன், அவளைப் பணிந்து, அவள் ஏவலைக்கேட்டு, அவளோடு கூடியிருந்தான். ஒரு திங்களளவும் அவள் அவனுடன் கூடியிருந்தபோதிலும், தான் யாரென்று சொல்லாத ஒப்பற்ற பூங்கொடிபோன்ற அவள் ஒருநாள் அவனைவிட்டுப் பிரிந்து போனாள்.
பீலிவளை புதல்வன்
மணிபல்லவம் திரும்பிய பீலிவளை ஒரு ஆண்மகவைப் பெற்றெடுக்கிறாள். அந்த இளங்கிள்ளி வளர்ந்து பிள்ளைப் பருவத்தையடைந்த காலத்தில் நாகநாட்டின் பகைவர்கள் அங்கே படையெடுத்து வருகிறார்கள் எனக் கேள்விப்படுகிறாள். அரச குலத்து இளவலான அப்பிள்ளையைக் கண்டால் அவனைக் கொலைசெய்யத் தயங்கமாட்டார்கள் என்பதை உணர்ந்து அந்த இளங்கிள்ளியை சோழநாட்டிற்கு அவனது தந்தையிடம் அனுப்பிவைக்க முடிவு செய்கிறாள்.
“நாக நன்னாடு ஆள்வோன் தன் மகள்
பீலிவளை என்பாள், பெண்டிரில் மிக்கோள்
பனிப்பகை வானவன் வழியில் தோன்றிய
பற்றிளங் குழவியொடு பூங்கொடி பொருந்தி
இத் தீவகம் வலஞ்செய்து தேவர்கோன் இட்ட
மாபெரும் பீடிகை வலங்கொண்டே துழிக்
கம்பளச் செட்டி கலம் வந்து இறுப்ப
அங்கவன் பாற் சென்று, அவன் திறம் அறிந்து
‘கொற்றவன் மகனிவன் கொள்க’ எனக் கொடுத்தலும்
பேற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்திப்
பழுதில் காட்சிப் பைந்தொடி புதல்வனைத்
தொழுதனன் வாங்கித் துறை பிறக்கு ஒழிய”
(மணிமேகலை: காதை 25: வரி 178-189)
நன்மைகள் சிறந்த நாகநாட்டை ஆண்டுவந்த அரசனின் மகளான, பெண்களில் சிறந்த பண்புகளைக்கொண்ட பீலிவளை என்பவள், பனிக்குப் பகைவனான ஆதவனின் வம்சத்தில் தோன்றிய இளவயதுடைய ஒரு குழந்தையுடன் பூங்கொடிபோல இவ்விடம் வந்தாள். இத்தீவை வலம்செய்து, தேவர் கோமான் அமைத்துக்கொடுத்த பெருமைகொண்ட புத்தபீடிகையையும் வலம்வந்து வணங்கினாள்.
அப்படிப் போற்றுகின்ற காலத்தில் அத்துறையில் (சம்புத்துறையாக இருக்கலாம்) கம்பளச் செட்டி என்பவனின் மரக்கலம் வந்து சேர்ந்தது. பீலிவளை அவனிடத்தில் சென்று, அவனது நேர்மையையும், திறமையையும் அறிந்து, ‘உனது நாட்டு மன்னனின் மகன் இவன். இவனைக் கவனமாகக் கொண்டுபோய் உனது மன்னனிடம் சேர்ப்பிப்பாயாக’ என தனது மைந்தனது கழுத்தில் பைந்தொடியான தொண்டைமாலை அணிவித்து, அவனிடம் கொடுத்தாள்.
பழுதற்ற தோற்றத்தினையுடைய, பசுமையான தொண்டைமாலை அணிந்த அப்புதல்வனை பெருமகிழ்ச்சியுடனும், உவகையுடனும், வணக்கத்துடனும் பெற்றுக்கொண்ட கம்பளச் செட்டி, தனது மரக்கலத்துடன் அத்துறையைவிட்டுக் கலத்தை ஓட்டிச்சென்றான்.
உடைந்த கலம்
அம்மரக்கலம் புறப்பட்டு காரிருள் நேரத்தில் சோழநாட்டுக் கரையைச் சமீபித்த சமயம் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி உடைந்துபோனது. உடைந்துபோன கலத்திலிருந்து உயிர் தப்பியவர்கள் அரசன் கிள்ளிவளவனிடம் சென்று அப்புதல்வனை இழந்த செய்தியைத் தெரிவித்தார்கள்.
“கலங்கொண்டு பெயர்ந்த அன்றே, காரிருள்
இலங்கு நீர் அடைகரை அக்கலங் கெட்டது
கெடுகல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது
வடிவேற் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப
(மணிமேகலை: காதை 25: வரி 190-193)
மன்னனின் துயரம்
தனது மகன் கடலிலே இறந்து விட்டான் என எண்ணிய மன்னன் ஆற்றொணாத் துயரத்தில் இருந்தான். அந்த நாட்களில் அரண்மனைக்குவந்த ஒரு சோதிடன் “கவலை வேண்டாம் அரசே, உனது மகன் இறக்கவில்லை. பீலிவளையின் புதல்வன் உன்னிடம் சுகமாக வந்து சேருவான். அவனது தாயார்தான் உன்னிடம் வரமாட்டாள்” எனக் கூறினான்.
“ஆங்கப் புதல்வன் வரூஉம் அல்லது
பூங்கொடி வாராள்: புலம்பல் இதுகேள்”
(மணிமேகலை: காதை 24: வரி 60-61)
திரை கொணர்ந்த பிள்ளை
பெரும்பாணாற்றுப்படை, கடியலூர் உருத்தரங்கண்ணணார் எழுதிய சங்க இலக்கியம் ஆகும். மணிமேகலையில் கூறப்பட்ட கதை அதில் தொடர்கிறது. பெரும்பாணாற்றுப்படைக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியரின் கூற்று இது:
“கடலில் காவிரிப்பூம்பட்டினக் கரையருகே மீன்பிடிக்கச் சென்ற திரையர்கள் கடலில் ஒரு படகு மிதந்து வருவதையும், அப்படகில் தொண்டை மாலையணிந்த ஒரு குழந்தை இருப்பதையும் கண்டார்கள். அக்குழந்தையை மன்னன் கிள்ளிவளவனிடம் சேர்ப்பித்தார்கள். கிள்ளிவளவன் அப்பிள்ளை தனது புதல்வனே என அறிந்து அவனுக்கே அடுத்த அரசுரிமை எனக் கூறினான்.”
கடலில் எற்பட்ட சூறாவளியில் அவனது மரக்கலம் உடைந்தபோது, மரக்கலத்திலிருந்த ஒரு படகில் தனது மகனை அமர்த்திவிட்டு சூறாவளியில் சிக்கி உயிரிழந்த கம்பளச் செட்டிக்கு நன்றி தெரிவித்தான் மன்னன். கழுத்தில் தொண்டை மாலையுடன் வந்தமையால் ‘தொண்டைமான்’ என்றும், இளமையில் திரைகொண்டு வந்தமையால் ‘இளந்திரையன்’ எனவும் அம்மகன் பெயர் பெறுகிறான். ‘திரைதரு மரபின் உரவோன் உம்பன்’ என்கிறார் உருத்திரங் கண்ணணார்.
“இருநிலங் கடந்த திருமறு மார்பின்
முன்னீர் வண்ணன் பிறங்கடை யந்நீர்த்
திரைதரு மரபி னுரவோ னும்பன்
மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்
இலங்கு நீர்ப்பரப்பின் வளைமீக் கூறும்
வுலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பின்
அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்
பல்வேல் திரையன் படர்குவி ராயில்”
(பெரும்பாணாற்றுப்படை: வரி 29-37)
தொண்டைமான் தொடுவாய்
தொண்டைமான் இளந்திரையன் வளர்ந்து வாலிபப்பருவம் அடைகிறான். அவனுக்குத் தான் பிறந்த பூமியின் நினைவுகளும், அன்னையின் முகமும் பசுமையாக மனத்தில் பதிந்துவிட்டிருந்தன. அக்காலகட்டத்தில் தான் பிறந்த நாடான மணிபல்லவத்தைப் பகைவர்கள் கைப்பற்றி, அங்கே ஆட்சிபுரிந்த நாக அரசர்களைக் கொன்றுவிட்டு, மக்களை வருத்திக் கொடுங்கோலாட்சி நடத்துகிறார்கள் என்ற செய்தி அவனுக்குக் கிடைக்கிறது. தான் பிறந்த மண்ணுக்குச் செய்யவேண்டிய கடமை அவனை மணிபல்லவத்திற்கு அழைக்கிறது.
ஒருநாள், பூம்புகாரிலிருந்தும், நாகைப்பட்டினத்திலிருந்தும் போர் வீரர்களைத் தாங்கிய மரக்கலங்கள் மணிபல்லவத்தை நோக்கி வருகின்றன. அவற்றிற்குத் தலைமைதாங்கி வந்துகொண்டிருக்கிறான் தொண்டைமான். வரிசைவரிசையாக வேல்களைத் தாங்கி வரும் வீரர்களைக்கொண்ட கப்பல்களைக் கண்ட மணிபல்லவ மக்கள், பாற்கடலில் பள்ளிகொண்ட திருமால், ‘ஆழித்தேவனாக’ அவதாரமெடுத்து வருகிறாரோ என வியப்புடன் பார்க்கிறார்கள்.
பண்டைய கட்டுவனூரின் விசுவநாதக் கவிராயர், வல்லிபுரத்தில் கோயில்கொண்ட திருமாலைப் போற்றி ‘வல்லைப் பதிகம்’ என்றொரு பாடலைப் பாடியிருக்கிறார்.
“திரைகடல் மடிமிசை பலவே லேந்தி
தொடுவாய் தோண்டி நாவா யோட்டி
பகைவனை யொழித்துப் பல்லவ மீட்டி
புஞ்சம் நல்கிப் பஞ்சம் போக்கி
வல்லையம் பதியினி லாலயம் தோற்றி
விண்ணவன் கார்முகில் வண்ணனை யேற்றி
ஆயிரம் தலைவிரிப் பள்ளியான் தொழீஇ
ஆழித் தேவன் தொண்டைமான் வாழி !”
(வல்லைப்பதிகம்)
திரைகடல்மீது பல கலங்களில் வேல்களைத்தாங்கி வந்த தொண்டைமான், நிலப்பகுதியிலில் நீண்டிருந்த உள்நிலக் கடலுக்கும் வடகடலுக்குமிடையே இருந்த நிலத்தைத் தோண்டி, அதனூடே தனது கலங்களைச்செலுத்தி நாகநகருக்குச் சமீபமாகக் கொண்டு செல்கிறான். பகைவனுடன் போரிட்டு அவனை அழித்து, மணிபல்லவத்தை எதிரிகளிடமிருந்து மீட்டு, பஞ்சத்தால் வாடிய மக்களுக்கு உணவு கொடுத்து இன்னல் தீர்க்கிறான். பின்னர் வல்லையம்பதி என்ற வல்லிபுரத்தில் விண்ணவனான (விண்ணுஸ்ரீவிக்ஷ்ணு) கார்முகில் வண்ணனுக்கு கோயில் கட்டுவித்து, ஆயிரம் தலைகொண்ட ஆதிசேக்ஷன் மீது துயில்கொள்ளும் மாதவனை அங்கே அமர்த்தி, தொழுது வணங்கிய ஆழித்தேவனான தொண்டைமானே நீ வாழ்க என வாழ்த்துகிறார் புலவர் (இராசநாயகம், வ. 1950).
தொண்டைமான் கடற்தொடுவாய் அமைத்தபின்னர் ‘வல்லியாறு’என அழைக்கப்பட்ட உள்நிலக் கடற்கால்வாய் ‘தொண்டைமான் ஆறு’ என்ற பெயரால் வழங்கப்பட்டது.
விசுவநாதப் புலவரைத் தொடர்ந்து பாடல் உரைப்பவர் விநாசித்தம்பிப் புலவர். இவர் எழுதிய ‘ஆற்றுப்பாடல்’ செல்வச்சந்நிதி கந்தன் திருத்தலப் புராணத்தில் இடம் பெறுகிறது (விநாசித்தம்பிப் புலவர், 1978).
“பொன்னுயர் ஈழ நாட்டில் பொருந்திய வடபால் யாழூர்
மன்னிய விந்து வாரி மணிக்கரை வந்து சேர
உன்னிய செழுமையாற்றி ஒளி மயிலழகனாரின்
சொன்னல முழங்க ஓடும் தொழ வல்லியாறு சூழ்ந்தே”
(ஆற்றுப்பாடல்: 1)
மேலுள்ள பாடலில்வரும் ‘மணிக்கரை’ என்ற பதம் மணிபல்லவக்கரை என்ற கருத்தில் அமைந்திருக்கிறது. இக்கரைக்குச் சற்றுக் கிழக்கே வல்லிபுரத்தின் வடகரையில் ‘பல்லவத்துறை’ என்ற பெயரில் ஒரு துறைமுகம் இருந்தது.
“தாவலை வல்லியாற்றின் சார்நிலம் தன்னை யாண்ட
கோவெனும் தொண்டைமானைக் குரைகடல் நாட்டை கொள்ளத்
தீவினை புரிந்த வாற்றால் தெளி நன்னீர் யாறு பின்னர்
தூவல்லி நாம மாறித் தொண்டைமா னாறாயிற்றே.”
(ஆற்றுப்பாடல்: 2)
சிலகாலம் அப்பகுதியை தொண்டைமான் ஆட்சிபுரிந்தபடியினால் முதலில் ‘வல்லியாறு’ எனப் யெர் பெற்றிருந்த அந்த ஆறு பின்னர் ‘தொண்டைமானாறு’ எனப் பெயர் பெற்றது. அது மட்டுமல்ல முதலில் தெளிந்த நல்லநீரைக் கொண்டிருந்த அந்த ஆற்றை, தொண்டைமான் வடகடலுடன் இணைத்த தீவினையால் அந்த ஆறு உப்பாறாக ஆனதாகவும் புலவர் கூறுகிறார்.
மணிபல்லவத்திலிருந்து திரும்பிய தொண்டைமான் காஞ்சியில் புதியதொரு தலைநகர் அமைத்து ஆட்சிபுரிகிறான். அவன் ஆட்சிபுரிந்த சோழநாட்டின் வடபகுதி ‘தொண்டைமண்டலம்’ என அழைக்கப்பட்டது.
இக்கதையில் மணிமேகலை, பெரும்பாணாற்றுப்படை, வல்லைப்பதிகம், செல்வச்சந்நிதிக் கந்தன் திருத்தலப் புராணம் ஆகிய இலக்கியங்களில் கண்ட சம்பவங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் மணிமேகலையில் கண்ட செய்திகளையும், பெரும்பாணாற்றுப்படையில் கண்ட சம்பவங்களையும் இணைத்த பெருமை முதலியார் இராசநாயகத்திற்கு உரியது.
நாகநாட்டுத் துறைமுகங்கள்
வழுக்கை ஆறு, வடக்கே கட்டுவன் கிராமத்தில் ஆரம்பித்து தெல்லிப்பழை, அளவெட்டி, கந்தரோடை, ஆனைக்கோட்டை வழியாக மேற்கே யாழ்ப்பாணக் கடலேரியை அடைகிறது. இலங்கைத் தீவானது இந்து மாகடலின் நடுப்பகுதியில் இருப்பதாலும், பாரதக்கண்டத்திற்கு மிக அண்மையில் இருப்பதாலும் ஆசியாவில் உள்ள எல்லா நாடுகளிலும்பார்க்க அது சிறந்த கடல் வணிகநிலையமாய் விளங்கியது. இங்கு இலங்கையில் உண்டாகும் பொருட்கள் மட்டுமன்றி பல தேசத்துப் பொருட்களும் வந்துசேர்ந்தன. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வரும் வணிகர்கள் இங்குவந்து அப்பொருட்களைத் தத்தம் நாடுகளுக்கு எடுத்துச்சென்றனர். இதனால் அது ஒரு பண்டமாற்று நிலையமாய் இருந்தது. எகிப்திய ஆசிரியரான கொஸ்மஸ் என்பார், “பல நாட்டுப் பொருட்களையும் தன்னிடத்தே ஒருங்குசேர்த்து அவற்றை வேண்டிய நாடுகளுக்குப் பகிர்ந்து கொடுக்கும் பண்டமாற்றுநிலையம் இலங்கை” என்கிறார். பண்டைக்காலத்தில் வடஇலங்கையே இந்தப் பலநாட்டு வணிகநிலையமாய் விளங்கியது. பட்டு, பீங்கான் பொருட்கள் முதலியவற்றை கிழக்கு ஆபிரிக்கக் கரையில் உள்ள துறைமுகங்களுக்குக் கொண்டுசெல்லும் சீனதேசக் கப்பல்களும், கிழக்கிந்தியத் தீவுகளில் உண்டாகும் வாசனைப்பொருட்களை ஐரோப்பிய தேசங்களுக்கு ஏற்றப்போகும் அரேபியக் கப்பல்களும் இந்நாட்டிலுள்ள துறைமுகங்களில் வந்துதங்கின. சம்புகோளம், மாந்தை என்னும் இரு துறைமுகங்களும் பண்டைக்காலத்திலே கீர்த்தி வாய்ந்தனவாக இருந்தன (கணபதிப்பிள்னை, க. 1996: 97-98).

சம்புகோவளம் (சம்புகோளம், ஜம்புகோல, சம்புத்துறை)
வடஇந்தியாவிலிருந்து வணிகர், வணிகப் பொருட்களை வாங்குவதற்காக இலங்கைக்கு கப்பல்மூலம் வந்த செய்திகளை புத்த சாதகக்கதைகள் கூறுகின்றன. வங்காளத்திலுள்ள தாம்ரலிப்தி என்னும் துறைமுகத்திற்கும் சம்புகோளத்திற்கும் கடல்வாணிகத் தொடர்பு இருந்துவந்தது. சம்புகோளத்திலிருந்தே தேவநம்பியதீசனின் தூதர்கள் அசோகச் சக்கரவர்த்தியின் அரசவைக்குப் போகும்பொழுது கப்பலேறினார்கள். இப்பட்டினத்திலிருந்து அநுராதபுரம் வரையும் ஒரு பெருந்தெரு அக்காலத்தில் இருந்தது. இச்சம்புகோளப் பட்டினத்திலேயே புத்தபகவான் இருந்து தவம் செய்து மெய்யறிவு பெற்ற அரசமரத்தின் கிளையோடு சங்கமித்தை என்பவள் பாடலிபுரத்திலிருந்து மரக்கலம்மூலம் வந்திறங்கினாள். அவளை வரவேற்க அநுராதபுரத்து அரசன் தேவநம்பியதீசன் அங்கே வந்து பாடி போட்டிருந்தான் (கணபதிப்பிள்னை, க. 1996: 98).
‘ஜம்புத்வீப’ (Jambudvipa) என்ற பதம் வடமொழிப் புராணங்களில் அண்டவியல் பற்றிக் கூறப்படும், அண்டவெளியில் ஒன்றிற்கு மேல் ஒன்றாக இருக்கும் ஏழு கற்பனை உலகங்களிலுள்ள கண்டங்களில் ஒன்றைக் குறிப்பிட உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது (Sapta-dvipa vasumati – Jain Cosmology). அதன்பொருள் கடலால் சூழப்பட்ட ‘ஜம்புத்தீவு’ என்றிருந்தபோதிலும் அசோகச் சக்கரவர்த்தியின் பிராகிருதக் கல்வெட்டு ஒன்றும், மகாவம்சம் நூலும் (Mahavamsa III: 13), இந்தியா ஒரு தீவாக இல்லாத போதிலும், இந்தியத்துணைக் கண்டத்தைக் குறிப்பிட ‘ஜம்புத்வீப’ என்ற பதத்தை உபயோகித்திருக்கின்றன.


பண்டையகால தமிழ்நூல்கள் சில, இந்தியத்துணைக் கண்டத்தை ‘நாவலந்தீவு’ எனவும், யாழ்ப்பாணத் தீவகத்தை ‘சம்புத்தீவு’ எனவும் குறிப்பிடுகின்றன. ‘சம்பு’ என்ற பதம் நாவல் மரத்தையும் குறிக்கும். இத்தீவினில் உள்ள நாவல் மரங்களாலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். “தீங்கனி நாவல் ஓங்குமித் தீவு” என மணிமேகலை (காதை 9, வரி 17) கூறுகிறது.
இச்சம்புத்தீவை ‘ஜம்புத்வீப’வுடன் குழப்பாமல் இருக்கவே மேலேயுள்ள விளக்கம் தரப்பட்டுள்ளது. ‘கோவளம்’ என்றால் பெரியவழி எனப் பொருள்படும். ‘சம்புகோவளம்’ என்றால் சம்புத்தீவிற்கான பெருவழி எனப் பொருள் தரும். இச் ‘சம்புகோவளம்’ என்ற பெயரே பாளியில் ‘ஜம்புகோல’ (Mahavamsa XIX: 128-135) எனக் குறிப்பிடப்படுகிறது. ‘ஜம்புகோல’ என்ற மகாவம்சம் கூறும்பெயரை அடிப்படையாகக்கொண்டு நமது வரலாற்றாசிரியர்கள் இத்துறையை ‘சம்புகோள’ என அழைத்தார்கள். யாழ்ப்பாண மக்கள் இத்துறையை இன்று ‘சம்புத்துறை’ அல்லது ‘யம்புத்துறை’ ஆகிய பெயர்களால் அழைக்கிறார்கள்.
காயாத்துறை
நாகநாட்டின் வடகரையில் சம்புத்துறைக்குக் கிழக்கேயுள்ள இன்றைய காங்கேசன்துறை அக்காலத்தில் ‘காயாத்துறை’ என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அக்காலத்தில் இலங்கையிலிருந்து இந்தியாவின் ‘புத்தகாயா’வுக்கு யாத்திரை மேற்கொள்ளும் பௌத்த யாத்திரிகர்கள் எல்லாம் இத்துறைமுகத்திலிருந்து மரக்கலம் எடுத்துச் சென்றபடியினால் இத்துறை அப்பெயரைப் பெற்றது. இலங்கையின் பெருநிலப்பரப்பிலிருந்து புத்தகாயா செல்லும் யாத்திரிகர்கள் அநுராதபுரத்திலிருந்து வடஇலங்கையின் துறைகள் வரை வந்த பெருந்தெரு வழியாகவந்து கப்பலேறினார்கள். இப்பெருந்தெரு பற்றி மகாவம்சம் குறிப்பிடுகிறது.
கி.பி எட்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கந்தரோடை அரசனான உக்கிரசிங்கன் மாவிட்டபுரத்தில் கந்தவேளுக்காக ஒரு பெரியகோயில் கட்டியபொழுதில் சோழநாட்டிலிருந்து ‘காங்கேயன்’ (கந்தவேள்) விக்கிரகங்கள் இத்துறையில் வந்திறங்கியதைத் தொடர்ந்து இத்துறை ‘காங்கேயன் துறை’ என அக்கால மக்களால் வழங்கப்பட்டது. சாலிவாகன சகாப்தம் 721 இல் (கி.பி. 799 ஆம் ஆண்டு) ஆனிமாத உத்தரநாளில் இக்கோயில் கொடியேற்றத்துடன் பொதுமக்களுக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டது (‘மாவிட்டபுர ஆதீன கோயில் பதிவேடுகள்’- பிரம்மஸ்ரீ துரைசாமிக் குருக்கள்).
பல்லவத்துறை
நாகநாட்டின் வடகரையில் உள்ள பண்டைய நகரம் வல்லிபுரம். வல்லிபுரப்பெற்சாசனம் இந்த நகரத்தை ‘வடகரை ஆதனம்’ என்ற பொருளில் ‘Badakara – atanehi’ என பிராகிருதமயப்படுத்தப்பட்ட தமிழில் கூறுகிறது. பொதுயுகத்தின் ஆரம்பகாலங்களில் இந்தியாவின் ஆந்திரதேசத்து அமராவதியுடனும், மற்றைய மையங்களுடனும் இந்த நகரம் கொண்டிருந்த கடற்தொடர்புகளை வல்லிபுரப் புத்தர்சிலையும், வல்லிபுரப் பொற்சாசனமும், ஏனைய தொல்பொருட்களும் எடுத்துக்காட்டுகின்றன.
வல்லிபுரத்தின் வடகரையில் ‘பல்லவத்துறை’ என்ற பெயரில் ஒரு துறைமுகம் இருந்ததை அறியமுடிகிறது. இத்துறைமுகத்தை மகாவம்சம் ‘பல்லதித்த’ எனக் குறிப்பிடுகிறது. இத்துறைமுகம் இருந்த வடகிழக்கு யாழ்ப்பாணக் கடற்கரைக்கிராமம் இன்றைக்கு ‘பல்லப்பை’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
அநுராதபுரத்திலிருந்து வொகரிக்கதீசன் (கி.மு. 263-285) என்ற நாக மன்னன் அரசாண்டுகொண்டிருந்த காலத்தில் அவனது தம்பியான அபயநாகன் அரசனது மனைவி அரசியுடன் காதல் உறவு கொண்டிருந்தான். இதை அறிந்த அரசன், கோபங்கொண்டு தன்னைக் கொல்லவருகிறான் என்பதையறிந்த அபயநாகன் தனது நெருங்கிய சில நண்பர்களுடன் வடக்கே தனது இனத்தவரான நாகர்களின் உதவியுடன் பல்லதித்தவில் (பல்லவத்துறையில்) கப்பலெடுத்து இந்தியாவிற்குத் தப்பிச்சென்றான் (Mahavamsa XXVI: 42-44).
சிங்கைப்பட்டினம்
யாழ்ப்பாணத்துப் பழைய வரலாற்று நூல்கள் யாழ்ப்பாண அரசர்கள் நல்லூரில் இராசதானி அமைத்து அங்கிருந்து ஆட்சிபுரியுமுன்னர் ‘சிங்கைநகர்’ என்ற பட்டினத்திலிருந்து ஆட்சிபுரிந்ததாகக் குறிப்பிடுகின்றன. அது மட்டுமல்லாமல் நல்லூரிலிருந்து ஆட்சிபுரிந்த அரசர்களும் தங்களது முன்னோர்களிலிருந்து தொடர்ந்த பாரம்பரியத்தைப் பேணும்வகையில் தங்களை ‘சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகள்’ எனக் கூறிக்கொண்டார்கள். இதை மேலும் உறுதிசெய்யும் வகையில் பிரித்தானியர்களின் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் தெற்கே கேகாலை மாவட்டத்தில் ‘H.C.P. Bell’ என்பவரால் தமிழில் பொறித்த ஒரு கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கல்வெட்டு வடஇலங்கை அரசர்களை ‘பொங்கொலி நீர்ச் சிங்கைநகர் ஆரியர்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தது. இக்கல்வெட்டின் காலம் கி.பி. பதினான்காம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. இக்கல்வெட்டு கொழும்பு அருங்காட்சியகத்தில் உள்ளது (Spolia Zeylanica 1917: p. 159).
அக்காலத்திலிருந்து இச்சிங்கைநகர் எங்கே இருந்திருக்கிறது எனக் காண்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடையே பாரிய வேறுபாடுகள் காணப்பட்டன. முதலியார் இராசநாயகம் கடற்கரையிலிருந்த சிங்கைநகர் வல்லிபுரத்தில் இருந்திருக்க வேண்டும் எனக் கருதினார் (Rasanayagam. S. 1923). பேராசிரியர் இந்திரபாலா, சிங்கைநகர் (Lion City) என்ற பெயர், கலிங்கத்தின் சிங்கபுரத்தை நினைவுபடுத்தும் பொருட்டு அங்கிருந்து வந்த கலிங்கமாகனால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அந்த இடம் யாழ்நகரின் கடற்கரையில் இருந்திருக்கவேண்டும் என்றும் கருதினார் (Indrapala, K. 1972: 51-52). பேராசிரியர் பரணவிதான இப்பெயர் மலாயாவிருந்து இலங்கைக்கு வந்தவர்களால் கொடுக்கப்பட்ட பெயர் என்றார் (Paranavitana, S. 1966: 91). 1990 ஆம் ஆண்டுகளில் பூநகரியில் அகழாய்வுகளை மேற்கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பரமு புஷ்பரட்ணம் (பிந்நாள் பேராசிரியர்) சிங்கபுரம் பூநகரியில் இருந்திருக்க வேண்டும் எனக் கருதினார் (புஷ்பரட்ணம், ப. 1993).
இக்கருத்துகளுக்கெல்லாம் 2011-12, 2017-18 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணம் கோட்டையில் நடைபெற்ற அகழாய்வுகள் முற்றுப்புள்ளி வைத்தன. அந்த அகழாய்வுகளின் முடிவாக கீழ்க்காணும் வரலாற்று உண்மைகள் நிறுவப்பட்டன.
- பெருங்கற்காலப் பண்பாட்டைப் பேணிய மக்கள் இப்பிராந்தியத்தில் கி.மு.1000 ஆண்டுக் காலத்திலிருந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
- இப்பிராந்தியம் கி.மு. 500 ஆம் ஆண்டளவில் நகரமயமாக்கப்பட்டு, அன்றிலிருந்து அடுத்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு பெருந்துறைமுகமாக இயங்கிவந்திருக்கிறது.
- கி.மு. 500 ஆம் ஆண்டிலிருந்து இந்திய நகரங்களுடனும், தொடர்ந்து கிரேக்க – ரோமப் பேரரசுகளுடனும், அரேபியர்களுடனும், பாரசீக சஸானியப் பேரரசுடனும், சீனர்களுடனும் நீண்டகால வர்த்தக நடவடிக்கைகளிலும் யாழ்ப்பாணம் ஈடுபட்டு வந்திருக்கிறது.
- கி.மு. 500 ஆம் ஆண்டிலிருந்து கி.பி 16 ஆம் நூற்றாண்டு ஐரோப்பியரின் ஆக்கிரமிப்புவரை யாழ்ப்பாணம் ஒரு பெருந்துறையாக விளங்கியிருக்கிறது (இத்தொல்லியலாய்வு பின்னர் விவரமாகப் பேசப்படும்).
நாகநாட்டின் வன்னிப் பகுதியில் பெருங்கற் பண்பாடு
இலங்கையின் பெருநிலப் பகுதியிலுள்ள வன்னிப்பிராந்தியத்தில் பெருங்கற் பண்பாடும் அதனோடு தொடர்புடைய தமிழ்மொழியும் பரவியமையைப் புரிந்துகொள்வதற்கு பெருங்கற் பண்பாட்டின் சில சிறப்பம்சங்களை இங்கே குறிப்பிடுவது அவசியமாகும். முதன்முதலாக ஒழுங்கானமுறையில் வயல்நிலங்கள் உருவாக்கப்பட்டு நெல், குரக்கன், பயறு, உழுந்து முதலிய தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஆடு, மாடு, கோழி ஆகிய பிராணிகளின் பண்ணை வளர்ப்பு வழமையாகியது. மட்கலன்களை சக்கரம் மூலமாக வனையும் வழக்கம் ஏற்பட்டது. புழக்கத்தில் வந்த மட்கலங்களுள் கரும்-செம் மட்பாண்டங்கள் இப்பண்பாட்டின் தனிச் சிறப்பாக அமைந்தவை. வயல்களை உழுவதற்கு கொழுமுனை பொருத்திய கலப்பைகள் புழக்கத்தில் வந்தன. இரும்பு முதலான உலோகங்களிலான கருவிகள், ஆயுதங்கள், கொள்கலன்கள், அணிகலன்கள், புழக்கத்தில் வந்தன. இரும்பின் உபயோகம் இப்பண்பாட்டின் மூலம் அறிமுகமாகிப் பரவியது (பத்மநாதன், சி. 2014: 2).
நிலையான குடியிருப்புகள் ஏற்பட்டு ஊர்கள் தோன்றின. வாணிப மையங்கள் தோன்றின. கடல்வளங்களைப் பயன்படுத்தும்முறை விருத்தியடைந்தது. கப்பல் கட்டுதல், கப்பலோட்டுதல், கடல்வழி வாணிபம் ஆகியவற்றில் அப்பண்பாட்டுக்குரிய மக்கள் ஈடுபடத் தொடங்கினர். பருத்தியினைச் செய்கைபண்ணி பஞ்சினை நூலாக்கி ஆடைகளை நெய்யும் தொழில் உருவாகியது. இரும்பு, செம்பு, பொன், வெள்ளி முதலிய உலோக வார்ப்புகளிலும், வார்ப்பான உலோகத் தகடுகளை வெட்டியும், உருவாக்கியும் உபகரணங்கள், ஆயுதங்கள், கலன்கள் முதலியவற்றை உற்பத்தி செய்யும் தொழில்முறை விருத்தியடைந்தது. தொழில் வேற்றுமை காரணமாக அமைந்த தனித்தனிப் பிரிவுகளைக்கொண்ட சமூகக்கட்டமைப்புகள் உருவாகின. பல ஊர்களை உள்ளடக்கிய குறுநில அரசுகள், அரச உருவாக்கத்தின் வளர்ச்சியிலுள்ள முதலாவது படிநிலையாகும்.
வன்னி நிலரப்பரப்பில் இலங்கையின் ஏனைய பல பகுதிகளைப்போல ஆற்றுவழியாகவே பெருங்கற்பண்பாடு பரவியதென்று கருதலாம். மேற்கே அருவி ஆறு, பறங்கி ஆறு ஆகியவற்றின் வழியாகவும், வடக்கே கனகராயன் ஆறு வழியாகவும், கிழக்கே யன்ஓயா மூலமாகவும் அது பரவியதெனக் கொள்ளலாம். வடமேற்கிலே பூநகரியில் மண்ணித்தலை, கல்முனை, வெட்டுக்காடு, பள்ளிக்குடா ஆகிய இடங்களில் தமிழகத் தொடர்புடைய ஆதி இரும்புக்காலத் தொல்பொருட்கள் பரவலாகக் காணப்படுகின்றன. எனவே, அங்கிருந்தும் இப்பண்பாடு தரைவழியாகப் பரவியதென்றுங் கொள்ளலாம் (பத்மநாதன், சி. 2014: 3).
நாகநாட்டு வன்னியின் நாக அரசர்கள்
இலங்கையின் பெருநிலப்பகுதியில் உள்ள நாகநாட்டின் வன்னிப்பகுதியில் அக்காலத்தில் பல சிற்றரசுகள் இருந்திருக்கின்றன. வன்னியின் மலைப்பாறைகளில் வெட்டப்பட்ட ஐம்பத்து நான்கு பிராமிக்கல்வெட்டுகள் இதுவரை அடையாளங்காணப்பட்டுள்ளன. அவை மகாகச்சட்கோடி (4), எருப்பொத்தானை (12), பெரிய புளியங்குளம் (35), வெடுக்குநாறி மலை (3) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. அவையாவும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகள். (பத்மநாதன், சி. 2013: XXIII).
இலங்கையிலே காணப்படும் பிராமிக்கல்வெட்டுகளில் வவுனியா மாவட்டத்தில் உள்ளவற்றிலேதான் தமிழ்மொழியின் செல்வாக்கு மிகக்கூடுதலாகக் காணப்படுகிறது. அவற்றிலே வேள், வேலு, பருமக(ன்), பருமகள், அபி(அவ்வி) ஆகிய சொற்கள் வருகின்றன. அவற்றில் ஒரு கல்வெட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறது:
“பருமக அஸ அதேக வேளஸ ஜாயா திஸாய லெணெ”
இதன்வாசகம்: பருமகனும் குதிரைகளின் அதிபனுமாகிய வேளினது மனைவி திஸாவின் குகை.
சங்ககாலத் தமிழகத்தில் சிற்றரசர்களை ‘வேள்’, ‘வேளிர்’ என அழைப்பதுண்டு. அதேவழக்கம் இலங்கைத் தமிழரிடையிலும் இருந்திருக்கிறது. அந்தவகையில் இதில்வரும் வேள் ஒரு சிற்றரசனாக இருக்கலாம். அவன் சிற்றரசன் மட்டுமல்லாது குதிரைகளின் அதிபனாகவும் இருந்திருக்கிறான்.
பெரிய புளியங்குளத்திலுள்ள நான்கு கல்வெட்டுகளில் ராஜநாகன் என்ற அரசனைப்பற்றிய குறிப்புக் காணப்படுகிறது:
“ராஜநாக ஜிதா ராஜ உதி ஜாயா
அபி அநுரதி ச ராஜா உதி ச
காராபித ஸே இமே லெணே
சததிஸ ஸகாய”
இதன்வாசகம்: ராஜநாகனின் மகளும் ராஜா உதியின் மனைவியுமான அபி அநுரதியும் ராஜா உதியும் செய்வித்த இந்தக்குகை நாற்றிசைச் சங்கத்தாருக்கும் உரியது.
இச்சாசனத்தில் ராஜநாகன், உதி ஆகிய இரு அரசர்கள் ராஜா எனக் குறிப்பிடப்படுகிறார்கள். அரசனும் அரசியுமாக இணைந்து குகையினை பௌத்த சங்கத்திற்குத் தானம் செய்துள்ளார்கள். அரசகுலத்துப் பெண்களை அபி எனக் குறிப்பிடுவது சாசனவழக்கு. பௌத்தமதம் சார்ந்த கல்வெட்டுகள் அனைத்தும் பிராகிருத மொழியில் பிராமி எழுத்துகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
மற்றுமொரு பெரிய புளியங்குளத்துச் சாசனம் இது:
“த மராஜ புத மாதிஸ அய
ஜிதா அப ஸவேரா
அயப ய புத திஸ அய ஜாயா
அபி ஸவேராய தாநே ஸக ஸ
தி நே”
இதன்வாசகம்: தமராஜனின் மகனான மகாதிஸ அய்யனின் மகள் அபி ஸவேரா. அய்யன் அபயனின் மகன் திஸஅய்யனின் மனைவியான அபி ஸவேராவினால் சங்கத்தினருக்குத் தானம் வழங்கப்பட்டது.
இந்தச்சாசனம் அரசனின் மகனான மகாதிஸ என்னும் இளவரசனை அய் என்றும், அவனது மகளான ஸவேராவை அபி என்றும் குறிப்பிடுகிறது. ஸவேராவின் கணவன் திஸ அய்யன். திஸ அய்யன், அபயனின் மகன். அய், அபி என்பன திராவிடமொழிச் சொற்கள் என்பது குறிப்பிடத்தக்கது (பத்மநாதன், சி. 2013: XXX).
பெரிய புளியங்குளத்துச் சாசனம் ராஜா என்ற பதவிநிலையிலுள்ள இருவரைக் குறிப்பிடுகின்றது. அவர்கள் இரண்டு தலைமுறையைச் சேர்ந்தவர்கள். மாமன், மருமகன் என்ற உறவுமுறை கொண்டவர்கள். ராஜநாகனின் பின்பு அவனது மருமகனாகிய உதி, ராஜா என்னும் பதவியைப் பெறுகிறான். அவர்களின் பதவிப் பெயரான ராஜா என்பது சமகாலத் தமிழகத்து வேளிர் என்னும் பட்டத்தினைப் போன்றது. ஏறக்குறைய 2200 வருடங்களுக்குமுன்பே வன்னியில் குறுநில அரசுகள் தோன்றிவிட்டன. அவற்றில் ஒன்றைப் பற்றியே சாசனங்கள்மூலம் அறியமுடிகின்றது. நாகர் குலத்தவர் அதிகாரம் செலுத்திய அரசினைப்பற்றி பெரிய புளியங்குளத்துக் கல்வெட்டுகள் தெளிவுபடுத்துகின்றன. பிற்காலத்தைய வன்னி இராச்சியங்களுக்கு இவையே மூலமானவை. சமகாலத்தில் நாகர் அதிகாரம் செலுத்திய அரசுகள் யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்புத்தேசத்திலும் தோன்றியுள்ளன (பத்மநாதன், சி. 2013: XXX)
இனி வரவிருப்பது…
பொதுயுகத்திற்கு முற்பட்ட (கிறிஸ்தாப்தத்திற்கு முற்பட்ட) பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பெருங்கற்காலப் பண்பாட்டைப் பேணிய மக்களின் குடியேற்றங்கள் கந்தரோடையில் ஏற்பட்டு, கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து தமிழ்மொழி பேசிய மக்களைக்கொண்ட அரச உருவாக்கம் அங்கே ஆரம்பிக்கப்பட்டு, அதன்துணைச் சிற்றரசுகள் (Satellite chiefdoms) யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், வடஇலங்கையின் பெருநிலப்பரப்பான வன்னிப்பிரதேசத்திலும் எழுச்சிபெற்றமை இனிவரும் இயல்களில் தொல்லியல், கல்வெட்டியல், மானிடவியல் சான்றுகள்கொண்டு நிறுவப்படும்.
இலங்கைத் தமிழர்களின் பண்டைய வரலாற்றை ஆதாரபூர்வமாக வெளிக்கொணரக்கூடிய தொல்பொருட்சின்னங்கள் நிலத்தினுள்ளே புதைந்து கிடக்கின்றன. சமீபகாலங்களில்தான் அறிவியல்ரீதியான தொல்லியல் அகழாய்வுகள் கந்தரோடை, மாந்தை, யாழ்ப்பாணக் கோட்டை (1970, 1980-84, 2017-18) ஆகிய மையங்களில் இடம்பெற்று அதன்மூலம் புராதனகால இலங்கைத் தமிழர்பற்றிய பல புதிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. விவசாயம், கைத்தொழில், உலோகத்தொழில், கடற்தொழில் ஆகியவற்றின் வளர்ச்சியும், நிலையான குடியிருப்புகளின் விளைவாக ஊர்கள், நகரங்கள் என்பவற்றின் வளர்ச்சியும், துறைமுகங்களின் தோற்றம், நெடுங்கடல் வர்த்தகம், கடல்வழியான கப்பற்பிரயாணம் ஆகியனவும் பொதுயுகத்திற்கு முற்பட்ட ஆயிரத்தாண்டுகளில் தென்னிந்தியாவில் உருவான ஆதி இரும்புக்காலத்தைய பெருங்கற்பண்பாடு பரவியதன் விளைவே என்பதும் இனிவரும் இயல்களில் விரிவாக எடுத்துரைக்கப்படும்.
உசாத்துணை நூல்கள், சஞ்சிகைகள்
- BOPEARAACHCHI, Osmund & WICKREMESINHE (1999): Ruhuna – An Ancient Civilisation Re-Visited, Wickremesinhe Publishing, Sri Lanka.
- BUDDHAGHOSA (5th Century CE) Transl. A.P. Buddhadatta Thero (1980): SAMMOHAVINODANI, PTS Series 116, Pali Text Society, London. (According to a story in the text, the ruler of Nagadipa bore the title of ‘Diparāja’).
- CHANDLER, David P. (1983): A History of Cambodia, Westview Press, Colorado.
- DERANIYAGALA, S.U. (1992): Prehistory of Sri Lanka: An Ecological Perspective, Sri Lanka Department of Archaeological Survey, Colombo.
- GEIGER, Wilhelm (1960): Culture in Medieval Times, (ed.) Heinz Bechert Harrassowitz Publishing House, Germany.
- GODAKUMBURA, C. (1968): Kantarodai, Journal of the Royal Asiatic Society, Ceylon Branch Vol. XII, (New Series) Colombo.
- GUNASEKARA, B. Transl. (2015): The Rajavaliya (Line of Kings), Digital Library of India.
- MAHAVAMSA (1960 reprint): Ed. & Transl. by Wilhelm Geiger, Colombo.
- PARKER, H. (1909): Ancient Ceylon, Luzac & Co., London.
- PARANAVITANA, S. (1934-41): Vallipuram Gold Plate Inscription, Epigraphia Zeylanica, Vol. IV: 229-237.
- PARANAVITANA, Senarat (1961): A Concise History of Ceylon, Ceylon University Press, Colombo.
- PARANAVITANA, S. (1966): Ceylon and Malaysia, Lake House, Colombo.
- PIERIS, Paul E. (1919): Nagadipa and the Buddhist Remains in Jaffna, Journal of the Royal Asiatic Society (C.B), Vol. XVIII, No. 72: Part II, Colombo.
- PUSHPARATNAM, P. (2002): Nāka Dynasty as Gleaned from the Archaeological Evidence in Sri Lanka, Jaffna Science Association, Jaffna.
- PUSHPARATNAM, P. (2002): Ancient Coins of Sri Lankan Tamil Rulers, Bavani Pathippakam, Jaffna.
- RAGUPATHY, P. (1986): Tamil Social Formation in Sri Lanka, Madras.
- RAGUPATHY, P. (1987): Early Settlements in Jaffna, Mrs. Ragupathy, Madras.
- RASANAYAGAM, C. (1926): Ancient Jaffna, Everyman’s Publishers Ltd., Madras.
- SITRAMPALAM, S.K. (1983): Ancient Jaffna– An Archaeological Perspective, Journal of South Asian Studies, Vol. 3, No. 182.
- SPOLIA ZEYLANICA (1917): Proceedings of the Ceylon Natural History Society, Vol. 8-12, Colombo Museum, Colombo.
- SULAYMAN AL-TAJIR & ABU ZAYD – Transl. from Arabic by Fusebius Renaudot (1733): Ancient Accounts of India and China, Samuel Harding, London. (This book is available at the British Library, London).
- THIAGARAJAH, Siva (2011): Peoples and Cultures of Early Sri Lanka, Tamil Information Centre, Kingston, UK.
- WEERAKKODY, D.P.M. (1997): Taprobane: Ancient Sri Lanka as known to the Greeks and Romans, Brepols Publishers, Turnhout, Belgium.
- இராசநாயகம், செ. (1933), மறுபதிப்பு (1999): யாழ்ப்பாணச் சரித்திரம், ஏசியன் எடுகேக்ஷனல் சர்வீசஸ், புதுதில்லி.
- இராசநாயகம், வ. (பதிப்.) (1950): விசுவநாதப் புலவர்: தனிப்பாடல் திரட்டு, வசாவிளான்.
- இந்திரபாலா, கா. (1972): யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம், யாழ். தொல்பொருளியற் கழகம், கண்டி.
- இந்திரபாலா, கா. (2006): இலங்கையில் தமிழர் – ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு, குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
- உருத்திரங்கண்ணணார், கடியலூர் (பொ.யு. 100) (1960): பெரும்பாணாற்றுப்படை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.
- ஞானப்பிரகாசர், சுவாமி (1928): யாழ்ப்பாண வைபவ விமர்சனம், அச்சுவேலி.
- கணபதிப்பிள்ளை, க. (2ஆம் பதிப்பு, 1996): ஈழத்து வாழ்வும் வளமும், குமரன் பிரசுரம், சென்னை.
- தியாகராஜா, சிவ (2023): பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள், குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
- பத்மநாதன், சி. (2011): யாழ்ப்பாண இராச்சியம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
- பத்மநாதன், சி. (2013): இலங்கையின் வன்னி மாவட்டங்கள்: ஒரு கையேடு (ஜே.பி. லூயிஸ்) – வன்னி தமிழாக்கக் குழு: முன்னுரை IV–XXXII, சேமமடு பதிப்பகம், கொழும்பு.
- பத்மநாதன், சி. (2013): ‘வன்னியில் நாகர் உருவாக்கிய அரசு,’ in க. சுந்தரலிங்கம் (பதிப்.), வன்னி வரலாறும் பண்பாடும், குமரன் பப்ளிக்ஷர்ஸ், சென்னை.
- பத்மநாதன், சி. (2016): இலங்கைத் தமிழர் வரலாறு: கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும், இந்துசமய கலாசார அலுவலகத் திணைக்களம், கொழும்பு.
- பத்மநாதன், சி. (2011): யாழ்ப்பாண இராச்சியம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
- மணிமேகலை (பதிப்பு): சாமிநாதையர், உ. வே. (1965): ஆறாம் பதிப்பு, அறம் பதிப்பகம், சென்னை.
- மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் (பதிப்பு): வித்துவான் சா.இ. கமலநாதன், கமலா கமலநாதன் (2005): குமரன் புத்தக இல்லம், கொழும்பு–சென்னை.
- விநாசித்தம்பிப் புலவர் (1978): யாழ். தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதிக் கந்தன் திருத்தல புராணம், வீ. ஸ்ரீதரன் பதிப்பு, திருநந்தி, மல்லாகம்.