நாக இனக் குழுவும் இலங்கைத் தமிழரும் - பகுதி 2
Arts
28 நிமிட வாசிப்பு

நாக இனக் குழுவும் இலங்கைத் தமிழரும் – பகுதி 2

May 16, 2024 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

கட்டுக்கரையைத் தொடர்ந்து வடஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு முக்கிய பெருங்கற்கால பண்பாட்டு மையமாக நாகபடுவான் என்ற இடம் காணப்படுகின்றது. இவ்விடம் பூநகரிப் பிராந்தியத்தில் முழங்காவிலுக்கு அண்மையில் காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் இலங்கையில் நாக வழிபாட்டு மரபு தோன்றி வளர்ந்த வரலாறு பற்றிய எதிர்கால ஆய்வுகளுக்குப் புதிய செய்திகளைக் கூறுவதாக இருக்கின்றன. எமது அறிவுக்கு எட்டியவரை இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சில வகையான சான்றுகள் தென்னாசியாவின் ஏனைய வட்டாரங்களில் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை. இதுவே இந்திய இலங்கைத் தொல்லியல் அறிஞர்களிள் பலரின் கருத்தாகவும் உள்ளது.

இங்கே நாகபடுவான் என்ற இடப்பெயரின் பழமை, அதன் பொருள் ஆய்வுக்கு உரியது. நாகபடுவான் என்ற பெயர் ஐரோப்பியர் ஆட்சியில் பூநகரியில் ஒரு பரந்த பிரதேசத்திற்குரிய பெயராக இருந்தது. காலப்போக்கில் இப்பிரதேசத்தின் ஒருபகுதி பயிர்ச்செய்கைக்கு பயன்படாது போனதால் அந் நிலப்பகுதி கரியலை நாகபடுவான் என தனியொரு கிராமத்தின் இடப்பெயராக அழைக்கப்படுகின்றது. பெருங்கற்காலப் பண்பாட்டின் முக்கிய பண்பாட்டு அம்சங்களில் ஒன்று குளத்தை மையப்படுத்திய கிராமக் குடியிருப்புகளின் தோற்றமாகும். பிராமிக் கல்வெட்டுகளிலும், சமகாலப் பாளி இலக்கியங்களிலும், பெருங்கற்கால மையங்களை அண்டிய இடப்பெயர்கள் குளத்தைக் குறிக்கும் ஆவி, வாவி, மடு, குளம், பழை, வேலி முதலான பின்னொட்டுச் சொற்களுடன் முடிவதற்கு இதுவே காரணமாகும். வடஇலங்கையில் அதிலும் குறிப்பாக வன்னியில் 2000 இற்கும் மேற்பட்ட இடப்பெயர்கள் குளம் என்ற பின்னொட்டுச் சொல்லைக் கொண்டுள்ளன. இதற்கு இவ்விடங்களில் பல, ஆதியில் பெருங்கற்காலக் குளக் குடியிருப்புகளைக் கொண்டிருந்ததே காரணமாகும். இங்கே நாகபடுவான் என்ற இடப்பெயர் நாககுளம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. படுவம், படுவான் என்பது பழமையான தமிழ்ச்சொல். இது சங்க இலக்கியத்தில் ஆழமான குளம், பெரிய குளம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாககுளம் என்ற பொருளைக் கொண்ட இடப்பெயரே இன்றும் மாற்றம் அடையாது நாகபடுவான் என்ற பண்டைய தமிழ்ச் சொல்லில் அழைக்கப்படுகிறது எனலாம். கலாநிதி இரகுபதி, நாகபடுவான் என்ற இடப்பெயர் ஆதியில் இங்கு நாகத்தைக் குல மரபாகக்க கொண்ட மக்கள்  வாழ்ந்ததன் காரணமாகத் தோன்றியது எனக் கூறுகிறார். நாகபடுவானில் அகழ்வாய்வுக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் கானமோட்டை என்ற பழைய குளத்தின் அழிபாடுகள் காணப்படுகின்றது. கானமோட்டை என்பதற்கு காட்டில் இருந்த குளம் அல்லது நீர்நிலை எனப் பொருள் கொள்ளலாம். பழந்தமிழ் இலக்கியத்தில் மோட்டை என்பதற்கு வயற் பரப்பிற்கு நீர் செல்லும் பாதை என்பது பொருள். இப்பழமையான பெயர்கள் இப்பிரதேசத்தில் புராதன  குளக் குடியிருப்புகள் தோன்றியிருந்ததை மேலும் உறுதிசெய்கின்றன.

ruins 1

நாகபடுவானில் ‘4X3’ மீற்றர் நீள அகலத்தில் ஆறு குழிகள் ஏற்படுத்தப்பட்டு அவற்றின் இயற்கை மண் அடையாளம் காணும்வரை அகழ்வு செய்யப்பட்டது. இவற்றின் கலாசார மண் அடுக்குகளின் எண்ணிக்கைகள் அகழ்வுக் குழிகளுக்கு இடையே வேறுபட்டுக் காணப்பட்டாலும் மூன்றாவது கலாசார மண் அடுக்குகளிலேயே அதிக அளவிலான தொல்லியற் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்குழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட புராதன மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள் (Iron Slakes), பெருங்கற்காலத் தாழிகளின் பாகங்கள் (4ஆம், 5ஆம் ஆய்வுக்குழியில் கண்டுபிடிக்கப்பட்டவை)  நாகபடுவானின் தொடக்ககால மக்கள், பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரியவர்கள் என்பதை உறுதிசெய்கின்றன. ஆயினும் கட்டுக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது போன்ற செறிவான ஆதாரங்கள் நாகபடுவானில் இதுவரை கிடைக்கவில்லை. தொடர்ந்து இவ்விடத்தில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் அதிக சான்றுகள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

நாகபடுவானில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் போது 1 ஆம், 2 ஆம், 3 ஆம் ஆய்வுக்குழிகளில் இருந்து பெருமளவு சமயச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இச்சின்னங்கள் இந்து மதத்திற்கு முன்னோடியாக (Proto hinduism) பெருங்கற்கால மக்களிடையே இருந்த சமய நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதாக உள்ளன. இச்சமயச் சின்னங்கள் பெரும்பாலும் கட்டுக்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட சின்னங்களைப் போல் களிமண், குருமணல், உமி அல்லது வைக்கோல் என்பன கலந்து செய்யப்பட்டு பின்னர் நெருப்பினால் சுடப்பட்டவையாகக் காணப்படுகின்றன. இவற்றின் வெளித்தோற்றம் முழுமையாகக் காணப்பட்டாலும் அவற்றின் உட்பகுதி வெறுமையாகவே காணப்படுகின்றது. இவ்வாறான கலைமரபு, தொழில்நுட்பம் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தோன்றியதற்கு தமிழகத்திலும், இலங்கையிலும் ஆதாரங்கள் காணப்படுகின்றன.

நாகபடுவான் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட 99 வீதமான சமயச் சின்னங்கள் இங்கு வாழ்ந்த மக்கள் நாக வழிபாட்டுடன் ஒன்றிணைந்திருந்ததைப் பட்டவர்த்தனமாக உறுதிப்படுத்துகின்றன. அச்சான்றுகள் 1 ஆம், 2 ஆம், 3 ஆம் அகழ்வாய்வுக் குழிகளில் மிகச் செறிவாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்குழிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ஆண் – பெண் தெய்வச் சிலைகள், சிற்பங்கள், அவற்றுடன் இணைந்திருந்த பீடங்கள், நாகக் கற்கள், பயன்படுத்தப்பட்ட  அடுப்புகள், தீபச் சட்டிகள், மண் தட்டுக்கள், பல அளவுகளில் செய்யப்பட்ட நாகச் சிற்பங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாதாரங்கள், இவ்விடத்தில் நாக வழிபாட்டு ஆலயம் ஒன்று இருந்திருக்கலாம் என எண்ணத் தூண்டுகின்றது. பெருங்கற்கால மக்கள் வைரமான கற்களில் துவாரங்களை இட்டு அவற்றில் மரங்களை நாட்டி மண், மரம், இலைகள் என்பன பயன்படுத்தித் தமக்குரிய இருப்பிடங்களை அமைத்து வாழ்ந்தவர்கள். 2011 ஆம் ஆண்டு இலங்கைத் தொல்லியற் திணைக்களத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் பிரிவினர் இணைந்து கந்தரோடையில் மேற்கொண்ட அகழ்வாய்வில் சமையல் அறையுடன் கூடிய பெருங்கற்கால மக்களது இருப்பிடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

ruins 2

பண்டைய இலக்கியங்கள் சங்க காலத்தில் இருந்த ஆலயங்கள், அவற்றில் வைத்து வழிபடப்பட்ட சிலைகள், சிற்பங்கள் பற்றிக் கூறுகின்றன. அதே இலக்கியங்கள் அக்கலை வடிவங்கள் அழியக் கூடிய மரம், மண், சுதை என்பன கொண்டு அமைக்கப்பட்டதாகக் கூறுகின்றன. தமிழகத்திலும் இலங்கையிலும் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் பெரும்பாலும் இக்கலை மரபே பின்பற்றப்பட்டு வந்துள்ளது. பல்லவ மன்னன் மகேந்திரவர்மனது மண்டகப்பட்டு கோவில் கல்வெட்டு, அவனது ஆட்சியில் இருந்தே அழியாத கற்களைக் கொண்டு ஆலயங்கள் கட்டப்பட்டதாகக் கூறுவதில் இருந்து, இது மேலும் உறுதியாகின்றது. இதே போல் நாகபடுவானில் இருந்த நாக வழிபாட்டு ஆலயமும் அழியக் கூடிய மண், மரம், சுதை கொண்டு கட்டப்பட்டதால் அவை காலப்போக்கில் அழிவடைந்து குறிப்பிட்ட இடத்தில் குவியலாகக் காணப்படக் காரணம் எனலாம். இச்சான்றுகளுடன்  அரிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம், கருடன், ஆமை முதலான சிற்பங்கள் என்பன நாக ஆலயத்தோடு இணைந்திருந்த பிற தெய்வங்களைக் குறிப்பதாக இருக்கலாம்.

இங்கு கண்டுபிடிக்கப்பட்ட நாக வழிபாட்டுச் சின்னங்களுள் ஆண், பெண் தெய்வச் சிலைகள் சிறப்பாக நோக்கத்தக்கது. இவை சுடுமண் சிலைகளாக இருப்பதால் அவை பெரிதும் சிதைவடைந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆயினும் சிதைவடைந்த சிலைகளின் தலைப்பாகங்கள், உடம்புப் பகுதிகள், கை – கால் உறுப்புகள், அவற்றில் அணியப்பட்ட கை வளையல்கள், கழுத்து மாலைகள், காற்சலங்கைகள், தலை முடிகள், காது அணிகலங்கள், ஆடை அமைப்புக்கள் என்பவற்றை ஆதாரங்களாகக் கொண்டு ஆண், பெண் சிலைகளை வேறுபடுத்தி அடையாளம் காண முடிகிறது. இச்சிலைகள் பெரும்பாலும் பீடத்தில் அமர்ந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதை சிலைகளுடன் காணப்பட்ட பீடங்கள் உறுதி செய்கின்றன. இப்பீடங்கள் பல அளவுகளில் சதுரமாகவும், வட்டமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பீடத்தில் அமர்ந்துள்ள தெய்வங்கள் வலது காலை மடித்து, இடது காலைத் தொங்கவிட்ட நிலையில் ஏதோ வரம் அளிப்பது போல் காணப்படுகின்றன. இதனால் இச்சிலைகளை நாக வழிபாட்டு ஆலயங்களில் காணப்படும் நாக, நாகினி தெய்வங்களாகக் கொள்ளலாம்.

பிற்காலத்தில் இலங்கைத் தமிழரிடையே மரநிழலின் கீழ் அல்லது சிறிய ஆலயங்களில் நாகக் கற்களை வைத்து வழிபடும் மரபு காணப்படுகின்றது. அக்கற்கள் பெரும்பாலும் கருங்கற்களை சதுரமாக அல்லது வட்டமாக வெட்டி கல்லின் மேற்பகுதியில் நாகபாம்பு படமெடுத்த நிலையிலும், கல்லின் கீழ்பகுதியில் அதன் உடற்பகுதி கல்லைச்சுற்றி வளையங்களாகவும் செதுக்கப்பட்டிருக்கும். இம்மரபு பெருங்கற்கால பண்பாட்டிலேயே தோன்றியிருக்கலாம் என்பதை நாகபடுவான் அகழ்வாய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இங்கு அதிக எண்ணிக்கையில் நாகக் கற்கள் கிடைத்துள்ளன. இவை கற்களுக்குப் பதிலாக மண்ணால் வட்டவடிவில் செய்யப்பட்டு பின்னர் நெருப்பில் சுடப்பட்டவையாகக் காணப்படுகின்றன. இச்சுடுமண் நாகக் கற்களில் நாகத்தின் உடற்பாகங்கள் வளையங்களாகச் செய்யப்பட்டு அதன் மேற்பாகம் வட்டவடிவில் அழகாக வடிமைக்கப்பட்டுக் காணப்படுகின்றன. இதன் மேற்பகுதியில் நாக பாம்பு இணைந்திருக்கும் நிலையில் இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை. ஆயினும் இந்நாகக் கற்களுக்கிடையே தனியாகப் படமெடுத்த நாகச் சிற்பங்கள் கிடைத்துள்ளன. அவை  நாகக் கற்களின் மேற்பகுதியில் வைக்கப்பட்ட நாகச் சிற்பங்களாக இருக்கலாம்.

ruins 3

பிற்கால நாக வழிபாட்டில் செப்புத்தட்டத்தில் அல்லது செப்புப் பாத்திரத்தில் நாகபாம்பை வைத்து வழிபடுதல் அல்லது நாகதோசம் நீங்குவதற்காக அதனை ஆலயங்களுக்கு கொடுக்கும் மரபு காணப்படுகிறது. சில ஆலயங்களில் நாகதோசம் நீங்குவதற்கு நாகபாம்பை மண் சட்டியில் வைத்துக் கொடுக்கும் மரபு இன்றும் காணப்படுகின்றது. இம்மரபு பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தோன்றியதை நாகபடுவான் அகழ்வாய்வு உறுதிப்படுத்துகின்றது. இங்கு அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்ட மூன்றாவது ஆய்வுக்குழியில் மண் சட்டிகளின் விளிம்புப் பகுதியில் நான்கு திசைகளை நோக்கியவாறு நாகபாம்பு படமெடுத்த நிலையில் இருக்க, அவற்றின் வால் பகுதிகள் சட்டிக்குள் இணைந்து சட்டியின் நடுமையத்தில் ஒரு வளையமாகக் காணப்படுகின்றது. இக்குழியின் இன்னொரு இடத்தில் சிறிய வாய்ப்பகுதி கொண்ட பானையும், பானையின் மேற்பகுதியில்  வாய்பபகுதியைச் சுற்றி மூடிய நிலையில் நான்கு சிறு கலசங்களும் காணப்படுகின்றன. பானையின் மூன்று திசைகளிலும் தெய்வங்கள் அமர்ந்திருக்கும் பீடங்கள் காணப்படுகின்றன. அவற்றில் அமர்ந்துள்ள தெய்வத்தின் இடது கால் பானையை முட்டியவாறு உள்ளது. நான்காவது திசையில் சட்டியின் விளிம்பில் படமெடுத்த நாக பாம்பு காணப்படுகிறது. இவ்வாறு வேறுபட்ட சின்னங்கள் ஒரேயிடத்தில் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்ட வகையில் வைக்கப்பட்டதற்கான பொருள் விளக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாக வழிபாடு பற்றிய ஆய்வில் புலமையுடைய தமிழக அறிஞர்களுக்கும் இது புதிய சான்றாகக் காணப்படுவதால் அவர்களும் மாறுபட்ட கருத்துக்களையே தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் இச்சின்னங்கள் நாகபாம்பை முதன்மைத் தெய்வமாகக் காட்டுவதற்காக செய்யப்பட்ட ஒரு அமைப்பாக  இருக்கலாம் எனக் கூறலாம். இதை இங்குள்ள பானையில் இருந்து எடுக்கப்பட்ட நாக உருவமும் உறுதிப்படுத்துகிறது.

தமிழரிடையே பாம்புப் புற்றை வழிபடும் மரபு மிகத் தொன்மையானது. இவ்வழிபாட்டு மரபு சமகாலத்திலும் முக்கியத்துவம் பெற்றிருப்பதற்கு வடஇலங்கை, கிழக்கிலங்கையிலுள்ள நாக வழிபாட்டு ஆலயங்களைச் சான்றாகக் காட்டலாம். மரநிழலின் கீழுள்ள பாம்புப் புற்றிற்குப் படையல் செய்து வழிபட்ட மக்கள் காலப்போக்கில் பாம்புப் புற்றை கர்ப்பக்கிருகத்தில் வைத்து அதற்கு ஆலயம் அமைத்து வழிபடுகின்றனர். இதற்கு யாழ்ப்பாணத்தில் எருவன், கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு ஆகிய இடங்களிலுள்ள நாக வழிபாட்டு ஆலயங்களைக் குறிப்பிடலாம். இப்பாம்புப் புற்று வழிபாட்டை பெருங்கற்கால மக்கள் மண் பானையில் செய்து வழிபட்டதை நாகபடுவானில் கண்டுபிடிக்கப்பட்ட மேற்கூறப்பட்ட பானை உறுதிசெய்கிறது. இப்பானையில் செய்யப்பட்ட சிறிய துவாரமும், அதைச் சுற்றி கவிழ்ந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய கலசங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால், முழுமையாக மண்ணுடன் அகழ்ந்து எமது அருங்காட்சியகத்திற்கு எடுத்து வந்தோம். இப்பானைக்குள் இருக்கக் கூடிய சின்னங்களை கண்டறியும் நோக்கில் தமிழகத் தொல்லியல் அறிஞர் வை. சுப்பராயலு அவர்களின் ஆலோசனையுடன் ஆராய்ந்த போது அதற்குள் அழகான நாகபாம்புச் சிலையைக் கண்டுபிடிக்க முடிந்தது. இதிலிருந்து, நிலத்தில் நாட்டப்பட்ட நாகபாம்புச் சிலையை அரைவட்ட வடிவில் செய்யப்பட்ட பானையால் மூடி, அக்கால மக்கள் வழிபட்டனர் என்பது தெரியவந்துள்ளது. இம்மரபே பிற்காலத்தில் புற்று வழிபாடு தோன்றக் காரணமாக இருந்துள்ளது. இதன் முக்கியத்துவம் தொடர்பாக கலாநிதி பொ. இரகுபதி கூறும்போது “பானையின் விளிம்பைச் சுற்றி கவிழ்ந்த வடிவில் உள்ள சிறிய கலசங்கள் பாம்புப் புற்றில் வரும் சிறிய துவாரங்களாகவும், பானையின் சிறிய வாய்ப்பகுதி பாம்புப் புற்றிலிருந்து பாம்பு வெளியேறும் வழியாகவும் உள்ளன. பிற்காலத்தில் பாம்புப் புற்றை நாக தெய்வத்தின் ஆலயமாக கொண்டு படையல் செய்து வழிபடும் மரபு தோன்றுவதற்கு முன்னோடியாக இருந்த பூர்வீக வழிபாட்டு மரபையே நாகபடுவானில் கண்டுபிடிக்கப்பட்ட வழிபாட்டு மையம் உறுதிப்படுத்துவதாகக் கொள்ள முடிகிறது.”

தென்னாசியா நாடுகளிடையே மத வழிபாட்டில் நாகபாம்பைக் குல தெய்வமாகக் கொண்டு வாழ்ந்த மக்களிடையே, அது காலப்போக்கில் இனம், தனிநபர், அம்மக்கள் வாழ்ந்த இடம், பிராந்தியம் என்பவற்றை அடையாளப்படுத்தும் பெயராக மாறியது வரலாறாகும். இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாட்டிலிருந்து நாகவழிபாட்டு மரபு தோன்றியதற்கு கட்டுக்கரை, நாகபடுவான் அகழ்வாய்வுகள் சான்றாகக் காணப்பட்டாலும் அம்மரபு காலப்போக்கில் தமிழரையும், தமிழர்கள் வாழ்ந்து வரும் பிராந்தியத்தையும் குறித்ததென்பதை இங்கே எடுத்துக்காட்டுவது இவ்வாய்வின் முக்கிய கருப்பொருளாகும். நீண்டகாலமாக “நாக” என்ற பெயரின் மூலமொழி பற்றி அறிஞர்கள் பலரும் ஆராய்ந்து வருகின்றனர். மொழியியல் அறிஞர்களில் ஒரு சாரார் இதன் மூல மொழி வடமொழி சார்ந்ததெனவும், குமார் சட்டர்ஜி, பரோ போன்ற மொழியியல் அறிஞர்கள் இது திராவிட மொழி சார்ந்ததெனவும் கூறுகின்றனர். ஆயினும் இலங்கையில் இப்பெயரை மொழி வேறுபாடின்றி பலதரப்பட்ட மக்களும் தனிநபர் பெயராகப் பயன்படுத்தியதற்கு பிராமிக் கல்வெட்டுக்களிலும், பாளி இலக்கியங்களிலும் ஆதாரங்கள் காணப்படுகின்றன. அக்காலத்தில் இருந்தே நாக என்ற பெயரில் தமிழ் மொழியின் செல்வாக்கு ஆரம்பமாகியுள்ளது.

inscription

தென்னாசியாவின் பல வட்டாரங்களில் சுதேச மொழிகள் இருந்தும், கி.பி. 3 ஆம் நூற்றாண்டுவரை (இற்றைக்கு 1700 ஆண்டுகளுக்கு முன்னர்) பௌத்த, சமண மதங்களின் மொழியான பிராகிருதமே கல்வெட்டு மொழியாக இருந்தது. சமகாலத்தில் தமிழகத்தில் கல்வெட்டு மொழியாக தமிழ் இருந்தாலும் அக் கல்வெட்டுகளில் 25 விழுக்காடுச் சொற்கள் பிராகிருதமாக உள்ளன. இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் பௌத்த மதம் சார்ந்த செய்திகளைக் கூறுகின்றன. ஆயினும் இக் கல்வெட்டுகளில் தமிழகப் பிராமிக் கல்வெட்டுகளில் வரும் தமிழ் மொழிக்கே உரிய சிறப்பான எழுத்துக்களும், தமிழ்பிராமி எழுத்தை ஒத்த வடிவங்களும், தமிழ்ப் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் பிராகிருத மொழியை எழுதுவதற்கு 40 எழுத்துக்கள் இருந்தும் கல்வெட்டுகளில் தமிழ்ப் பிராமி பயன்படுத்தப்பட்ட இருபது வகையான எழுத்துகளும், எழுத்து வடிவங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பாக நோக்கத்தக்கது. ஒரு எழுத்து தோன்றி பல ஆண்டுகள் கடந்த பின்னரே அவ்வெழுத்தின் வடிவம் மாற்றம் பெறுகின்றது. ஆனால் இலங்கையில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட தொடக்ககாலக் கல்வெட்டுகளிலேயே தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கலந்து எழுதப்பட்டுள்ளமையால், பிராகிருத மொழி வருவதற்கு முன்னரே இங்கு தமிழ் மொழியின் பயன்பாடு இருந்துள்ளமை தெரிகிறது. இவற்றைக் கருத்திற் கொண்டே சிங்கள எழுத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆராய்ந்த பேராசிரியர் சத்தமங்கல கருணாரட்ன, ஆரிய அபயசிங்கா, பெர்ணூந்தோ போன்ற அறிஞர்கள் பௌத்த மதத்துடன் வடஇந்தியப் பிராமி எழுத்து இலங்கைக்கு அறிமுகமாவதற்கு முன்னர் தென்னகப் பிராமி எழுத்து புழக்கத்தில் இருந்துள்ளது எனக் கூறுகின்றனர் (Ariyasinghe 1965, Karunaratne 1984).

பௌத்த மதம் பற்றிக் கூறும் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் நாக என்ற பெயர் பிராகிருத மொழியில் ‘நஹ’, ‘நஹஸ’, ‘நஹய’, ‘நஹலி’ என்றே எழுதப்பட்டுள்ளன. (Paranavitana 1970 : nos 1120,1998. 1982 : nos : 126,138,180, 267). ஆயினும் சில கல்வெட்டுகளில் தமிழகத்தைப் போல் இப்பெயர் ‘ந(h)க’, ‘நாக’, ‘ணாக’ எனத் தமிழ் மயப்படுத்தியும் எழுதப்பட்டுள்ளன (Mahadevan 1966 : no 33). இவ்வாதாரங்கள் நாக என்ற பெயரில் தமிழர்கள் இங்கு வாழ்ந்ததையும், அவர்கள் பௌத்தர்களாக அல்லது பௌத்த மதத்தை ஆதரித்தவர்களாக இருந்துள்ளனர் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.  அநுராதபுரத்திற்கு வடக்கே கண்டுபிடிக்கப்பட்ட கி.மு.1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமிக் கல்வெட்டு இங்கிருந்த ‘நாகநகர்’ பற்றிக் கூறுகிறது (Karunaratne 1984 : 82). இது நாகர்கள் வாழ்ந்த நகரம் என்ற பொருளில் அமைந்துள்ளது. பிராகிருத மொழியில் ‘நஹநஹர’ (Naganagara) என எழுதப்படும் இப்பெயர், இச்சாசனத்தில் தமிழில் ‘ந(h)கநகர்’ (Nakanakar) என எழுதப்பட்டுள்ளமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. கலாநிதி இரகுபதி, கல்வெட்டில் வரும் இந்த ‘நாகநகர்’ அக்காலத்தில் கந்தரோடையின் தலைநகராக இருந்திருக்கலாம் அல்லது கந்தரோடையைக் குறித்திருக்கலாம் எனக் கருதுகிறார் (Ragupathy 1991). ஆனால் நிக்லஷ் என்ற அறிஞர் கி.பி. 9 ஆம் நூற்றாண்டுக்குரிய சாசனமொன்றில் வரும் நாகநகரை ஆதாரம் காட்டி மேற்கூறப்பட்ட கல்வெட்டில் வரும் நாகநகரை வவுனியாவுக்கு வடக்கில் இருந்த ஒரு நகரம் என அடையாளப்படுத்துகிறார் (Nicholas 1963 : 81). இந்நகரம் எங்கு அமைந்திருந்தாலும் இந்ந நகரில் வாழ்ந்த நாகர்கள் தமிழர்களாக இருந்தனர் என்பதை இக்கல்வெட்டு  உறுதிப்படுத்துகின்றது என்பதில் ஐயமில்லை.

அண்மையில் தென்னிலங்கையில் அக்குறுகொட என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான பிராமி எழுத்துப் பொறித்த நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட  இந்நாணயங்கள் இலங்கைத் தமிழரின் தொன்மையையும், நாக மன்னர்களின் ஆட்சியையும் உறுதிப்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இங்கு கிடைத்த நாணயங்கள் சில தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் இரண்டு நாணயங்களில் ‘நாக’ மற்றும் ‘ணாக’ என்ற பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன (Bopearachchi 1999 : 51-60, Pushparatnam 2003 : 67-78). ஒரு நாணயத்தில் அதை வெளியிட்ட மன்னன் பெயர் ‘திஷபுர சடணாகராசன்’ என எழுதப்பட்டுள்ளது (Pushparatnam 2002 : 5-6). இதன் பொருள் ‘திஷபுரத்தில் ஆட்சி புரிந்த சடணாகராசன் என்ற மன்னன் வெளியிட்ட நாணயம்’ என்பதாகும். இதன் மூலம் இச் சிற்றரசனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தென்னிலங்கை மக்களில் ஒரு பிரிவினராவது தமிழ் மொழி பேசிய நாக இன மக்களாக இருந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. மேலும் இக்காலகட்ட அரசியல் வரலாற்றைக் கூறும் மகாவம்சம், துட்டகாமினி என்ற மன்னன் எல்லாளன் என்ற தமிழ் மன்னனை அநுராதபுரத்தில் வெற்றி கொள்வதற்கு முன்னர் தென்னிலங்கையில் அதிகாரம் செலுத்தி வந்த 32 தமிழ்ச் சிற்றரசர்களை ஆரம்பத்தில் வெற்றி கொள்ள வேண்டியிருந்ததாகக் கூறுகிறது. மகாவம்சத்தின் இக்கூற்று கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன்னரே தென்னிலங்கையில் தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சி இருந்ததற்கு மேலும் சான்றாகும்.

1990 களில் பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் உடுத்துறை என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாணயம் வடஇலங்கையிலும் தமிழ் மொழி பேசிய நாகரின் ஆட்சியிருந்ததற்கு முக்கிய சான்றாகக் காணப்படுகிறது. இந்நாணயத்தின் முன்பக்கத்தில் பொறிக்கப்பட்ட சாசனத்தை இந்திய அறிஞர் பேராசிரியர் சுப்பராயலு நாகவம்சம் எனவும், சாசனவியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன்  ‘நாகபூமி’ (Nākapūmi) எனவும் வாசித்துள்ளனர். இருவரின் வாசிப்புக்களிலும் சிறிய வேறுபாடு காணப்பட்டாலும் இந்நாணயம் நாகரின் ஆட்சியில் வெளியிடப்பட்டதென்பதை உறுதிப்படுத்தியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ சமகாலத்தில் அநுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த நாக மன்னர்களைப் பற்றியும் மகாவம்சம் கூறுகிறது. அவர்களுள் இளநாக மன்னனின் பட்டத்தரசியாக இருந்த தமிழாதேவி (தமிழ் அரசி) பற்றியும் இந்நூல் மேலும் கூறுகின்றது. இப்பெயரில் இருந்து இளநாகன் ஒரு தமிழ் மன்னனாக இருந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கூறுகின்றனர். மேற்கூறப்பட்ட ஆதாரங்களில் இருந்து தமிழ்மொழி பேசிய நாக மக்கள் வரலாற்றுத் தொடக்க காலத்தில் இலங்கையின் பல வட்டாரங்களில் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிகிறது. ஆயினும் தற்காலத்தில் நாகர் பற்றிய வரலாற்று நினைவுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களிடையே பெரிதும் காணப்படுகின்றன.

பேராசிரியர் இந்திரபாலா, தென்னிந்தியாவிலிருந்து பெருங்கற்காலப் பண்பாட்டை அறிமுகப்படுத்திய நாக இனக்குழுக்கள், அநுராதபுரத்திலும் தென்னிலங்கையின் ஏனைய பிராந்தியங்களிலும் பிராகிருத மொழி தழுவிய பேரினக் குழுவாக உருவாகிய போது, ஏனையோர் வடக்கில் தமிழ் இனக்குழுவுடன் கலந்து கொண்டனர் எனக் குறிப்பிடுகிறார் (Indrapala 2005 : 172-73). இந்த இனக்குழு வடக்கில் மட்டுமன்றி சமகாலத்தில் கிழக்கிலும் தோன்றியது எனக் கூறலாம். இலங்கையில் கி.மு. 3 ஆம், 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐந்து பிராமிக் கல்வெட்டுகள், தமிழர்கள் மொழியால் ஒரு இனக்குழுவாக வாழ்ந்ததை உறுதி செய்கின்றன. அவற்றுள் நான்கு கல்வெட்டுகளில் இரண்டு வடஇலங்கையில் வவுனியாவிலும், ஏனைய இரண்டு கல்வெட்டுகள் கிழக்கிலங்கையில் அம்பாறை (குடுவில்), திருகோணமலையில் சேருவில் ஆகிய இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் சிலவற்றில் நாகர் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றிருப்பது வரலாற்றுத் தொடக்கத்திலேயே நாக இனக்குழுவின் மொழியாகத் தமிழ் இருந்ததற்குச் சான்றாகும். இதை இப் பிராந்தியங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டச் சாசனங்கள் மேலும் உறுதிப்படுத்துகின்றன.

அண்மைக்காலங்களில் தமிழகத்திலும், இலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட மட்பாண்ட சாசனங்கள் (Brahmi Potsherds) தொடர்பான ஆய்வுகளும், நவீன காலக்கணிப்புகளும் இலங்கையில் தமிழ் மொழியின் தொன்மையை உறுதிப்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்ட சாசனங்கள் பெரும்பாலும் பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்களுடன் மங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டவையாக உள்ளன. இவற்றில் மட்பாண்டத்தை வனைந்தவர்களின் பெயர்கள் அல்லது அதைப் பயன்படுத்தியவர்களின் பெயர்களே பெரும்பாலும் காணப்படுகின்றன. இவ்வாறான பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டச் சாசனங்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. அநுராதபுர பெருங்கற்காலப் பண்பாட்டு அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துப் பொறித்த சாசனங்கள், நவீன காலக்கணிப்பில் கி.மு. 650 முதல் கி.மு. 700 வரை பயன்பாட்டிலிருந்தவை எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சாசனங்களின் காலம் ஏறத்தாழ கி.மு. 550 இற்கு முற்பட்டவை எனக் கணிப்பிடப்பட்டுள்ளன (Conigham, Robin 2002 : 99-107). இக்காலக்கணிப்புகள் பௌத்த மதத்துடன் பாளி, பிராகிருத மொழி இலங்கைக்கு அறிமுகமாவதற்கு ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் எழுத்தும், தமிழ் மொழியின் பயன்பாடும் புழக்கத்தில் இருந்துள்ளன என்பதை உறுதிப்படுத்துகின்றன. இவ்வகையான பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டச் சாசனங்கள் வடஇலங்கையில் கந்தரோடை, பூநகரி, இரணைமடு ஆகிய இடங்களிலும், மட்டக்களப்பில் வவுணதீவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூநகரி (ஈழவூர்), இரணைமடு ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களில் நாக என்ற பெயரும், வவுணதீவில் கிடைத்த மட்பாண்டங்களில் தம்பன், வண்ணக்கன் ஆகிய பெயர்களும், இருபது மட்பாண்டங்களில் ‘ணாகன்’ என்ற பெயரும் காணப்படுகின்றன. இப்பெயர், தமிழ் மொழிக்குரிய ‘அன்’ என்ற விகுதியுடன் முடிவது சிறப்பாக நோக்கத்தக்கது. இவ்வாதாரங்கள் மூலம், வடக்கு – கிழக்கின் பூர்வீக மக்கள் பெருங்கற்காலப் பண்பாட்டை அறிமுகப்படுத்திய நாக இனக்குழு எனவும், அவர்களில் பெரும்பான்மையோர் தமிழ் மொழிபேசும் மக்களாக வாழ்ந்து வந்துள்ளனர் எனவும் கூறலாம். இதற்கு மேலும் சில ஆதாரங்களைக் காட்டலாம். 

பாளி வரலாற்று ஏடுகளில் இலங்கையின் புராதன துறைமுகங்களின் பெயர்கள் தொட்ட, தொட என்ற விகுதியுடன் முடிகின்றன. ஆனால்  வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருந்த துறைமுக நகரங்கள் ‘பட்டன’ என்ற விகுதியோடு அழைக்கப்படுகிறது. இதற்கு ஜம்புக்கோலபட்டன (யாழ்ப்பாணம்) (Mahavamsa:xi.23,38, xviii:7, xix 23, 25, 60 xx:25), கோணகாமகபட்டன (திருகோணமலை மாவட்டம்) (Ibid:iii.24, Culavamsa xli: 79, xlviii.5. lxxi.18), மஹபட்டன (மன்னார் மாவட்டம்) (இந்திரபாலா 2006:180) ஆகிய துறைமுக நகரங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். இதில் பின்னொட்டு விகுதியாக வரும் ‘பட்டினம்’ என்பதை ஒரு திராவிடச் சொல்லாகக் குறிப்பிடும் மொழியியல் அறிஞர் பரோ இது பட், பட்டி என்ற சொல்லின் அடியாகப் பிறந்ததாகக் குறிப்பிடுகிறார் (Burrow 1968:211). இப்பெயர் மலையாள, கன்னட மொழிகளில் பட்டி எனவும், தெலுங்கில் பட்டு எனவும், சமஸ்கிருதத்தில் பட்டன எனவும் அழைக்கப்படுகிறது. இவை கடற்கரைசார்ந்த நகர், சிறுநகர், கிராமம், ஊர் போன்ற இடங்களைக் குறிக்கின்றன (Burrow & Emeneau 1961 : no.3199). சங்க நூல்களில் பட்டினம் என்பது பொதுவாக கடற்கரை சார்ந்த இடங்களுக்குரிய பெயராகக் குறிப்பிடப்படுகிறது. தமிழகத்தில், ஆந்திராவில் இருந்து கன்னியாகுமரி வரையுள்ள கடற்கரை சார்ந்த சமூகங்களை ‘பட்டினத்தார்’ என அழைக்கும் மரபு காணப்படுகின்றது (Veluppillai 2002:149). ஈழத் தமிழரிடம் நகரங்களில் வசிப்போரை ‘பட்டணத்தார்’ என அழைக்கும் மரபு இன்றும் காணப்படுகின்றது. பேராசிரியர் இந்திரபாலா, இலங்கையில் ஏனைய துறைமுகங்களுக்கு பட்டினம் என்ற விகுதி பயன்படுத்தப்படாது, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருந்த துறைமுகங்களுக்கு மட்டும் அப்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளமை, ஆதியிலும் இங்கு தமிழ்மொழி பேசுவோர் அல்லது திராவிட மொழிபேசுவோர் வாழ்ந்த இடங்கள் என்பதற்கான மறைமுக ஆதாரங்கள் எனக் குறிப்பிடுகிறார் (இந்திரபாலா 2006: 180).

பேராசிரியர் வேலுப்பிள்ளை, சம்பந்தர் தேவாரத்தில், திருகோணமலை பற்றி வரும் “குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றும்” என்ற சொற்றொடர் அங்கு தமிழர்கள் செறிந்து வாழ்ந்தமைக்குச் சான்றாக அமைகின்றதெனக் குறிப்பிடுகிறார் (வேலுப்பிள்ளை 1986). பேராசிரியர் கே.எம்.டீ. சில்வா, பக்தி இயக்கத்தின் செல்வாக்கே இலங்கையில் இந்து, பௌத்த என்ற சமய வேறுபாடு தோன்றி தமிழரும் சிங்களவரும் தமது இனத் தனித்துவத்தைப் பேணிப் பாதுகாப்பதில் முனைப்புப் பெற்றமைக்கும், அதன் விளைவால் தமிழர் வாழ்ந்த பிராந்தியங்கள் தென்னிந்தியப் படையெடுப்பாளருக்கு ஆதரவு வழங்கும் தளமாக மாறியதற்கும் காரணம் எனக் கூறுகிறார் (Silva 1981: 20-21). ஒன்பதாம் நூற்றாண்டில் (கி.பி. 835), பாண்டிய மன்னன் ஸ்ரீமாறஸ்ரீவல்லபன் அநுராதபுரத்திற்கு எதிராகப் படையெடுத்து வந்து வடஇலங்கையில் (உத்தரதேசத்தில்) தங்கியிருந்த போது, மாதோட்டத்தில் வாழ்ந்த தமிழர்களும் அவர்களுடன் இணைந்து அநுராதபுர அரசைத் தோற்கடித்தனர் என சூளவம்சம் கூறுவதும் இக்கூற்றை உறுதிப்படுத்துவதாக உள்ளது (Culavamsa 50:12-42).

பண்டுதொட்டு, திருகோணமலை உள்ளிட்ட அநுராதபுரத்திற்கு வடக்கில் உள்ள பிராந்தியம்  நாகதீப(ம்), நாகநாடு என வரலாற்று மூலங்களில் தனித்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இப்பெயர்களே கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தில் வன்னி, வன்னிப்பற்று என்ற பெயர்களும், 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணப் பட்டினம் என்ற பெயரும் தோன்றும் வரை தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்து வந்ததற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. பண்டைய இலங்கையில் நாக இனமக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் பல பிராந்தியங்களில் காணப்பட்டாலும், அது இலங்கையில் ஒரு பிராந்தியத்தின் பெயராக அடையாளப்படுத்திக் கூறப்பட்டு வருவது,  தற்காலத்தில் இப்பிராந்தியத்தில் வாழும் தமிழ் மக்களின் பூர்வீக வரலாறு பெருங்கற்காலப் பண்பாட்டை அறிமுகப்படுத்திய நாக இனக்குழுவோடு தோன்றி வளர்ந்ததைக் காட்டுகின்றது எனலாம். மகாவம்சம், கி.மு.6 ஆம் நூற்றாண்டில் புத்தர் இலங்கை வந்த போது, நாகதீபத்தில் இரு நாக மன்னர்களிடையே ஏற்பட்ட சிம்மாசனப் போராட்டத்தை தீர்த்துவைத்ததாகக் கூறுகிறது (Mahavamsa 8:54). மகாவம்சம் கூறும் புத்தர் வருகை ஒரு ஐதீகமாக இருப்பினும், இந்நூல் எழுதப்பட்ட கி.பி 6 ஆம் நூற்றாண்டில், அநுராதபுரத்திற்கு வடக்கில் இருந்த பிராந்தியம் நாகதீபம் என்ற பெயரால் அழைக்கப்பட்டதை இவ்வரலாற்றுச் செய்திகள் உறுதிப்படுத்துவதாகக் கொள்ளலாம்.

ஆதிகாலத்தில் இந்தியாவை அடுத்து இலங்கையுடன் அதிக அளவில் வணிக உறவை  ஏற்படுத்திக் கொண்ட வரலாறு கிரேக்க, உரோம நாட்டு வணிகர்களுக்கு உண்டு. இவ்வுறவுகள் பெரும்பாலும் வடஇலங்கைத் துறைமுகங்கள் ஊடாக நடைபெற்றதை மாதோட்டம், கந்தரோடை, யாழ்ப்பாணக் கோட்டை, பூநகரி, சாட்டி, அண்மையில் கட்டுக்கரை முதலான இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கிரேக்க, உரோம நாடுகளுக்குரிய பலவகை மட்பாண்டங்கள், மதுச்சாடிகள், நாணயங்கள் என்பன உறுதி செய்கின்றன. இவ்வணிக உறவுகள் பற்றிக் கூறும் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொலமியின் குறிப்பில், இலங்கையில் இருந்த முக்கிய கரையோரப் பட்டினங்களில் ஒன்றாக நாகதீபம் ‘நாகடிப’ என்ற இடம் கூறப்பட்டிருப்பதுடன், அவ்விடம் அவர் வரைந்த தேசப்படத்தில், இலங்கையின் வடபகுதியில் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது (Weerakkody 1997:87).

1936 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வல்லிபுரம் என்ற இடத்தில் பிராமி எழுத்துப் பொறித்த கி.பி.3 ஆம் நூற்றாண்டுக்குரிய பொற்சாசனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரேயொரு பொற்சாசனமாகும். இச்சாசனத்தில் ‘நகதிவ’ என்ற இடத்தில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரை பற்றிக் கூறப்படுகின்றது (Paranavitana 1982 : 79-80). இந்த ‘நாகதிவ’ என்ற பெயர் பாளி மொழியில் வடஇலங்கையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட நாகதீப(ம்) என்ற பெயரின் இன்னொரு வடிவமாகும். சாசனத்தில் பிராகிருத மொழியுடன் சில தமிழ்ச் சொற்களும் கலந்து எழுதப்பட்டுள்ளன என்பது இச்சாசனத்தில் காணக்கூடிய சிறப்பம்சம் ஆகும். உதாரணமாக, பிராகிருத மொழியில் ‘நாஹ’ என எழுதப்படும் பெயர் இச்சாசனத்தில் நாக என தமிழில் எழுதப்பட்டுள்ளது. இந்த வேறுபாடுகள், இச்சாசனத்தை நாகதீபத்தில் வாழ்ந்த தமிழ்ப் பௌத்தர்கள் எழுதியிருக்கலாம் எனக் காட்டுகிறது.

வடஇலங்கையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட நாகதீப(ம்) என்ற பெயர் சில இடங்களில்  நாகநாடு, உத்திரதேசம் (வடபகுதி) எனவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கி.பி. 6 ஆம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் தோன்றிய இருபெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை, தமிழகத்திற்கு அப்பால் கடல் கடந்து செல்ல வேண்டிய இடங்களில் ஒன்றாக நாக நாட்டைக் குறிக்கின்றது. இதன் சமகாலத்திற்குரிய வேலூர்ப்பாளைச் செப்பேட்டில், பல்லவ மன்னன் ஒருவன் நாககுல மகளை மணந்த செய்தி சொல்லப்படுகின்றது (பாலசுப்பிரமணியம்). இதன் பின்னர் தோன்றிய கலிங்கத்துப்பரணியில், சோழ வம்சத்துக் கிள்ளிவளவன் நாகநாட்டு இளவரசியை மணந்த கதை கூறப்படுகின்றது.

எட்டாம் நூற்றாண்டில், ஸ்ரீநாக என்பவன் தலைமையில் நாகதீபத்தில் (உத்தரதேசத்தில்) இருந்து அநுராதபுரத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பு பற்றிய செய்திகள் சூளவம்சத்தில் காணப்படுகின்றன (Culavamsa 44 : 70-73). சுவாமி ஞானப்பிரகாசர் இப்படையெடுப்பை மேற்கொண்ட  ஸ்ரீநாகன் ஒரு தமிழ் மன்னனாக இருக்கவேண்டும் எனக் கூறுகின்றார் (ஞானப்பிரகாசர் சுவாமி 1928 : 47-50). பக்தி இயக்கத்தை தலைமையேற்று நடாத்திய நாயன்மார்களுள் ஒருவரான சுந்தரர் தேவாரத்தில், தமிழகத்தை அடுத்து முதன்மை பெற்ற ஆலயங்களாக வடஇலங்கையில் மாதோட்டத்திலுள்ள திருக்கேதீஸ்வரத்தையும், கிழக்கிலங்கையில் திருகோணமலையிலுள்ள கோணேஸ்வரர் ஆலயத்தையும் போற்றிப்பாடுகிறார். பேராசிரியர் வேலுப்பிள்ளை மாதோட்டத்தில் உள்ள  ஆலயம் கேதீஸ்வரம் என்ற பெயரைப் பெற்றதற்கு அது நாகரின் ஆலயமாக இருந்ததே காரணம் எனக் குறிப்பிடுகின்றார் (Kētu is considered to be a cobra representing the Nagas. Veluppillai 2002:154).

கி.பி.10 ஆம் நூற்றாண்டில் தென்னிந்திய மன்னன் வல்லபன் என்பவன் நாகதீபத்தின் மீது படையெடுத்த செய்தி சூளவம்சத்தில் காணப்படுகிறது (Culavamsa 53 : 12-16). இப்படையெடுப்பு தோல்வியில் முடிந்திருக்கலாம் என்பதை வெசகிரியில் கிடைத்த சிங்களச் சாசனம் உறுதிப்படுத்துகின்றது (E. Z, I : 35-51). ஆனால் இதே காலப்பகுதியில் சோழ மன்னன் முதலாம் பராந்தகன் ஈழத்தின் மீது படையெடுத்து வெற்றி பெற்ற செய்திகளை அவன் வெளியிட்ட கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த வெற்றியின் நினைவாகப் பராந்தக சோழன் ‘ஈழமும் மதுரையும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்’ என்ற விருதைப் பெற்றதையும், அந்த வெற்றியின் நினைவாக ஈழக் காசு என்ற பெயரில் நாணயம் வெளியிட்டான் என்பதையும் அவன் ஆட்சிக்கால கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. நாணயவியல் அறிஞர்கள் வடமொழியில் ‘உரக’ என்ற பெயர் பொறித்த பொன் நாணயத்தையே பராந்தகசோழன் ஈழத்தை வெற்றி கொண்டதற்காக வெளியிட்டான் என அடையாளப்படுத்தியுள்ளனர். சோழ மன்னர்கள் கல்வெட்டுகளை தமிழில் வெளியிட்ட போது சர்வதேச வர்த்தகத்திற்காக தமது பெயர்களையும், நாடுகளையும் நாணயங்களில் வடமொழியில் வெளியிட்டனர். இங்கே நாணயத்தில் வரும் ‘உரக’ என்ற வடமொழிச் சொல் நாகர் அல்லது நாகநாடு எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த உதயணன் பெருங்கதையும், பிற்பட்ட மயிலநாதர் உரையும் தமிழகத்தைச் சுற்றியுள்ள நாடுகளாக ஈழத்தையும், சிங்களத்தையும் தனித்தனியாகக் கூறுகின்றன (வேலுப்பிள்ளை 1986:10). இவ்வாதாரங்களில் இருந்து பராந்தகச் சோழன், தான் வெற்றி கொண்ட நாக நாட்டைக் குறிக்க நாணயத்தில் வடமொழியில் ‘உரக’ என்ற பெயரையும், கல்வெட்டுகளில் தமிழில் ‘ஈழம்’ என்ற பெயரையும் பயன்படுத்தினான் எனக் கூற முடிகிறது. பாளி மொழியில் நாகதீப என அடையாளப்படுத்தப்பட்ட வடஇலங்கை கி.பி.13 ஆம் நூற்றாண்டில் எழுந்த ராஜாவலிய என்ற சிங்கள இலக்கியத்தில் ‘மணிநாகதீப’ என்ற பெயரால் அடையாளப்படுத்தப்படுகின்றது. கொடகும்புர என்ற அறிஞர் இப்பெயர் கந்தரோடையைக் குறித்திருக்கலாம் எனவும் கூறுகிறார் (Godakumbura 1968:7). ஏறத்தாழ இதே காலப்பகுதியில் தென்னிந்தியாவிலிருந்து வடஇலங்கை மீது படையெடுத்த கலிங்கமாகன் யாழ்ப்பாணத்தில் வந்திறங்கி அங்கு நாகர்குல அரசனைச் சந்தித்ததாக மட்டகளப்புமான்மியம் கூறுகின்றது (மட்டகளப்புமான்மியம் :54).

பண்டைய கால இலங்கையில் நாக மரபை நினைவுபடுத்தும் பெயர்களை பல மொழிபேசிய மக்களும் பயன்படுத்தியுள்ள போதிலும் அப்பெயர்கள் பிற்காலத்தில் படிப்படியாக மறைந்துவிட்டன. ஆனால் தமிழர் மத்தியில் அப்பெயர்கள் தற்காலம் வரை பயன்பாட்டிலுள்ளன. இதற்கு, வடக்கு – கிழக்கில் வாழும் தமிழர் சமூகத்தில் பயன்படுத்தப்படும் நாகன், நாகி, நாகதேவன், நாகராசன், நாகம்மாள், நாகவண்ணன், நாகநாதன், நாகமுத்து முதலான தனிநபர் பெயர்களையும், அவர்கள் வாழ்விடங்களில் புழக்கத்திலுள்ள  நாகர்கோயில், நாகமுனை, நாகபடுவான், நாகதேவன்துறை, நாகமலை, நாகதாழ்வு முதலான இடப் பெயர்களையும், கிராமங்கள் தோறும் காணப்படும் நாக வழிபாட்டு ஆலயங்களையும் உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இவ்வாதாரங்கள் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் உருவான நாக குலமரபுடன் தமிழருக்கிருந்த நீண்டகால உறவையும், தொடர்பையும் உறுதிப்படுத்துவதாக உள்ளன.

இலங்கையின் பூர்வீக மக்கள் தொடர்பாக ஆராய்ந்த  தொல்லியல், வரலாற்று அறிஞர்கள் பலரும் சிங்கள மக்களின் பூர்வீகத்தை வடஇந்தியாவுடனும், தமிழரின் பூர்வீகத்தை தமிழ்நாட்டுடனும் (தென்னிந்தியா) தொடர்புபடுத்தி அழுத்தமாக ஆராயும் அணுகுமுறையைப் பின்பற்றி வந்துள்ளனர். ஆயினும் சமீபகாலத் தொல்லியல், மானிடவியல், மொழியியல், சமூகவியல் ஆய்வுகள் தற்காலத் தமிழ், சிங்கள மக்களின் மூதாதையினர், தென்னிந்தியாவிலிருந்து – சிறப்பாக தென்தமிழகத்தில் இருந்து – புலம்பெயர்ந்து வந்த நுண்கற்கால, பெருங்கற்கால மக்களின் வழித்தோன்றல்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இதன் மூலம் தமிழ், சிங்கள மக்கள் ஒரே இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதையே பேராசிரியர் சேனக பண்டாரநாயக்காவின் ‘இலங்கை மக்களிடையே உடற்கூற்றியல் வேறுபாடுகள் இல்லை. பண்பாட்டு வேறுபாடுகளே உண்டு’ என்ற கூற்றும் உணர்த்துகின்றது. பௌத்த மதத்துடன் அறிமுகமான பாளி, பிராகிருத மொழிகள் இங்கிருந்த தமிழ், திராவிட, ஆதி ஒஸ்ரிக் மொழிகளுடன் கலந்ததன் விளைவாக இலங்கையில் மொழிவழிப் பண்பாடுகள் தோன்றின. அவற்றுள் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் உருவான நாக இனக்குழுவின் ஒரு பிரிவினர், பிராகிருத மொழியால் உள்வாங்கப்பட்டு பிராகிருத மொழி பேசும் பெரும்பான்மை இனக்குழு உருவாகி, அது காலப்போக்கில் சிங்கள மொழிபேசும் பௌத்தர்களாக மாறிய போது, நாக இனக்குழுவின் இன்னொரு பிரிவினர் தொடரந்தும் தமிழ் திராவிட மொழிகள் பேசும் மக்களாக இருந்தனர். இம்மக்கள் தொடக்க காலத்தில் இலங்கையின் முக்கிய நகரங்கள், துறைமுகங்களில் வாழ்ந்த போதும், பெரும்பான்மை மக்கள் வடஇலங்கையில் வாழ்ந்ததன் காரணமாகவே அப்பிராந்தியம் நாகதீபம் என்ற பெயரைப் பெற்றதெனலாம். இதற்கு, வடஇலங்கையில் வாழ்ந்த மக்கள் மொழி, மதம், பண்பாடு என்பவற்றால் தமிழகத்துடன் நெருங்கிய ஒற்றுமை கொண்டிருந்ததுடன், இலங்கை – தமிழக உறவில், வடஇலங்கை தமிழகத்தின் தொடக்க வாயிலாகவும், குறுக்கு நிலமாகவும் இருந்தமை, இன்னொரு முக்கிய காரணமாய் அமைந்திருக்கலாம். மேலும், பக்தி இயக்கத்தின் விளைவால் இலங்கையில் தோன்றிய இந்து – பௌத்த என்ற சமய வேறுபாடுகள் காலப்போக்கில் தமிழ், சிங்கள முரண்பாடாக உருவெடுத்த போது, இலங்கையின் ஏனைய இடங்களில் வாழ்ந்த தமிழரும் பாதுகாப்புக் கருதி வடக்கு – கிழக்கு மாகாணங்களில் குடியேறியமையும் இங்கு நாக இன மக்கள் செறிந்து வாழக் காரணம் எனலாம்.

பொதுவாக இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் இருந்து வர்த்தகர்களாக, படையெடுப்பாளர்களாக வந்து குடியேறியோரின் வழித்தோன்றல்கள் என்றே கூறப்பட்டு வந்துள்ளன. ஆனால் கட்டுக்கரை, நாகபடுவான் அகழ்வாய்வுகள், இலங்கைத் தமிழர் தமிழ்நாட்டிலிருந்து தமிழ் மொழி பேசும் மக்களாக வருவதற்கு முன்னரே, அவர்களின் மூதாதையினர் இலங்கையில் வாழ்ந்துள்ளனர் என்பதை எடுத்துக் காட்டுகின்றன. அதற்கு பெருங்கற்காலப் பண்பாட்டுடன் உருவான நாக மரபு காரணம் எனலாம். இப்பண்பாடு இலங்கையில் அறுபதுக்கு மேற்பட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டாலும், நாக மரபை அடையாளப்படுத்தும் விரிவான தொல்லியல் ஆதாரங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் கட்டுக்கரை, நாகபடுவான் அகழ்வாய்வுகளில் அதற்குரிய தொல்லியற் சான்றுகள் பல கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் தமிழரின் பூர்வீக வரலாறு பற்றிய எதிர்கால ஆய்வுகளில் இவ்விருவிடங்கள் தொடக்கப் புள்ளியாக இருக்கும் என நம்புகிறேன்.

உசாத்துணைகள்

  1. இந்திரபாலா, கா., 2006, இலங்கையில்  தமிழர்- ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு, குமரன் பத்தக இல்லம், கொழும்பு.
  2. இரகுபதி, பொ., 2006,வல்லியக்கனும் வல்லிபுரநாதரும், புலரி மறுபிரசுரம், யாழ்ப்பாணம்.
  3. சிற்றம்பலம், சி.க., 1996, ஈழத்து இந்து சமய வரலாறு, பாகம்.1, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, கொழும்பு.
  4. சேனக பண்டாரநாயக்கா.,1985, (தமிழாக்கம்) “இலங்கை மக்கள் வசிப்பிடமாதல், தேசிய பிரச்சினை, வரலாறு, இனம் தொடர்பான சில கேள்விகள்”இலங்கையில் இனத்துவமமும் சமூகமாற்றமும், சமூக விஞ்ஞான மன்றம், கொழும்பு:1-23.
  5. வேலுப்பிள்ளை, ஆ., 1986, ஈழத்து தொடக்க கால இலக்கியங்களும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, யாழ்ப்பாணம்.
  6. பத்மநாதன், சி., 2016, இலங்கைத் தமிழர் வரலாறு: கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் (கிமு.250-கி.பி.300), இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்துமத அலுவல்கள் அமைச்சு, கொழும்பு.
  7. பாலசுப்பிரமணியம், குடவாயில்., 1988,“ஈழத்து வெற்றியும் இராஜராஜன் காசும்”, தினமணி (செய்தி நாளிதழ் 9.12.1988), சென்னை.
  8. புஷ்பரட்ணம், ப., 1999, “வடஇலங்கைச் சமூகவழக்கில் பெருங்கற்காலக் குறியீடுகள்”வளர்தமிழியல் அறிவியல், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர்.
  9. புஷ்பரட்ணம், ப.,  1999, “தென்னிலங்கையில் கிடைத்த தமிழ் நாணயங்கள் – ஒரு வரலாற்று நோக்கு” நாவாவின் ஆராய்ச்சி, இதழ்.49, சென்னை:55-70.
  10. புஷ்பரட்ணம், ப.,  2003, “உடுத்துறையில் கிடைத்த அரிய தமிழர் நாணயங்கள்” ,ஆவணம், இதழ். 14, தமிழகத் தொல்லியற் கழகம், தஞ்சாவூர்:116-119.
  11. புஷ்பரட்ணம், ப.,  2007,இலங்கைத் தமிழர்-ஒரு சுருக்க வரலாறு, தமிழ்க் கல்விச் சேவை சுவிற்சர்லாந்து, மலேசியா.
  12. Bopearachchi, O. and Wickramesinhe, W., 1999, Ruhuna an Ancient Civilization Revisited, -Numismatic and Archaeological Evidence on Inland and Maritime Trade, Nugegoda – Colombo.
  13. Burrow, T. and Emeneau, M.B., 1961, Dravidian Etymological Dictionary, Oxford.
  14. Conigham,Robin.,2002, “Beyond and Before the Imperial Frontiers: EARLY Historic Sri Lanka and the Origins of Indian Ocean Trade” Man and Environment, Journal of the Indian Society for Prehistoric and Quaternary Studies;Vol.XXVII,No.1:99-107.
  15. Culavamsa, 1953, Geiger. W. [E.d], Ceylon Government Information Department, Colombo.
  16. Deraniyagala, S.U., 1992, The Prehistory of Sri Lanka: An Ecological Perspective, Department of Archaeological Survey, Colombo.
  17. Mahadevan, I., 1966, Corpus of the Tamil- Brahmi Inscriptions, Reprint of Seminar on Inscriptions, Department of Archaeology, Government of Tamil Nadu, Madras.
  18. Mahavamsa, 1950, (e.d) Geiger, W., The Ceylon Government Information Department, Colombo.
  19. Nicholas, C.W., 1963, Historical Topography of Ancient and Medieval Ceylon in Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society, Colombo, VI.
  20. Paranavitana, S., 1970, Inscription of Ceylon: Early Brahmi Inscriptions, The Department of Archaeology Ceylon, Colombo,I.
  21. Paranavitana, S., 1983, Inscription of Ceylon: Late Brahmi Inscriptions, The Department of Archaeology Sri Lanka, Moratuwa, and II [1].
  22. Pushparatnam, P. 2002, Naka Dynasty as Gleaned from the Archaeological Evidences in Sri Lanka” Jaffna Science Association Tenth Annual Session:1-34.
  23. Pushparatnam, P. 2000, Tamil Brahmi Graffiti from Northern Sri Lanka” Studies in Indian Epigraphy, Vol.XXVI, Mysore.  
  24. Ragupathy, P., 1991, The Language of the Early Brahmi Inscription in Sri Lanka, [Unpublished].
  25. Seneviratne, S., 1984, The Archaeology of the Megalithic-Black and Red Ware Complex in Sri Lanka in Ancient Ceylon, Journal of the Archaeological Survey of Sri Lanka, 5:237-307.
  26. Sittampalam, S.K., 1990, Proto Historic Sri Lanka: An Interdisciplinary Perspective in Journal of the Institute of Asian Studies, VIII [1]: 1-8.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

11856 பார்வைகள்

About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)