1930 களை தொடர்ந்துவந்த உலகப் பொருளாதார பெருமந்த காலத்திலிருந்தே இந்திய வம்சாவழித் தமிழர்கள் மீதும் மலையாளிகள் மீதும் இந்த நாட்டு பெரும்பான்மை இன மக்கள் பெரும் துவேசத்தை கக்கி வந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அதன் தலைவர் டி.எஸ். சேனாநாயக்க, அப்போது நிதியமைச்சராக இருந்த ஜே.ஆர். ஜெயவர்தன, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆகியோரதும் மற்றும் பலரதும் இனவாதப் போக்குகள், 1948 இல் பாராளுமன்றத்தில் இவர்களின் பிரஜாவுரிமை பறிப்புச் சட்டம் தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பான விவாதத்தின்போது வெளிப்படையாகத் தெரிந்தன. அதன்பிறகு தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்களும் இந்த நாட்டில் இந்திய வம்சாவழித் தமிழர்களை அறவே துடைத்தெறிந்துவிட வேண்டும் என்று வெகுவாக முயற்சித்தன.
இப் போக்கு, 1970 களை அடுத்து வந்த காலப்பகுதியில் மிக உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. இலங்கை நாடு சோசலிச ஜனநாயக குடியரசு என்று நாமகரணம் சூட்டிக் கொண்டாலும் சோஷலிசக் கொள்கைகள் அவர்களிடம் மருந்துக்கும் காணப்படவில்லை. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் சமசமாஜக் கட்சியும் இந்த அரசாங்கத்துடன் இணைந்திருந்தபோதும் அவர்கள் முற்றிலும் சோசலிச விரோத, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளையே கடைப்பிடித்தனர். இத்தகைய இனவாத, மக்கள் விரோதக் கொள்கைகள் என்பவற்றுடன் இணைந்துவிட்ட மோசமான பொருளாதாரப் பிரச்சினை, உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, சிங்கள மக்களுக்கு மட்டும் காணி பகிர்ந்தளிக்கும் திட்டம் ஆகியன காரணமாக மலையகத் தமிழ் மக்கள், வாழ்வதற்கான பாதுகாப்பை முற்றிலும் இழந்துவிட்டதாக உணர்ந்தார்கள். தொழில் செய்த இடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதால் தொழில் பாதுகாப்பும் இல்லாமல் போனது. அவர்களது சந்ததியினரது எதிர்காலமும் சூனியமாகவே தெரிந்தது.
உலகில் அடிமைத்தொழில், அடிமை வியாபாரம் என்பன சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஒழித்துக்கட்டப்பட்டிருந்த போதும், அது ஒழியவில்லை என்றும், இப்போதும் உலவிக் கொண்டிருக்கிறது என்றும் அவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவத்தைக்கொண்டு உணர்ந்தார்கள். முன்பு கருப்பின அடிமைகளுக்கு வாழ்வதைத் தவிர பிற உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டிருந்தன. ஆனால் இவர்களுக்கோ வாழும் உரிமை கூட கொஞ்சம் கொஞ்சமாக மறுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. முன்பு திட்டமிட்டு பிரஜா உரிமைகளை பறித்தவர்கள் அவர்களை நாடற்றவர்களாக ஆக்கிவிட்டு, அவர்களது வாழ்விடங்களையும் காணிகளையும் பிடுங்கி சிங்கள மக்களிடம் ஒப்படைத்தார்கள். இது மலையக மக்களை தமது பிள்ளைகளை கையில் தூக்கிக் கொண்டு நாலா திசைகளிலும் சிதறியோட வழிசெய்தது. கம்பளைக்கு அண்மித்துள்ள புசல்லாவை என்ற இடத்திலிருந்த டெல்டா, சங்குவாரித் தோட்டங்கள் இதற்கு நல்ல உதாரணங்கள்.
இது தொடர்பில் ஆய்வாளர் மூ.சி. கந்தையா தனது ‘சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்’ என்ற நூலில் பின்வருமாறு கருத்துத் தெரிவிக்கின்றார் :
“பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டன என்று கூறப்பட்ட போதும் நடைமுறையில் அவை சிங்கள மயமாக்கப்பட்டன என்பதே யதார்த்தமாகும். தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டமை தொலைநோக்குத் திட்டத்தோடு மேற்கொள்ளப்படவில்லை. நிர்வாகச் செயல்களை அமுல்படுத்தும் வகையில் திட்டமிடல் உருவாக்கப்படவில்லை. போதிய அனுபவத்தைக் கொண்ட நிர்வாகம் இல்லாதபடியால் தோட்டங்கள் பல்வேறு நெருக்கடிகளையும் இழப்புகளையும் சந்தித்தன. தோட்டங்களை நடத்த திறமையான நிர்வாகம் இல்லாதிருந்ததால் சுமார் பதினைந்து ஆண்டுகளில் ரூ.5000 கோடி வருமானத்தை அரசாங்கம் இழக்க நேரிட்டது. அரசின் கீழ் இங்கிய பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், பெருந்தோட்ட அபிவிருத்தி சபை போன்ற நிறுவனங்களில் அதிகார வரம்பு மீறலும் ஊழலும் மலிந்துவிட்டிருந்ததால் அரசு கையகப்படுத்திய தோட்டங்கள் மீண்டும் 1992 ஆம் ஆண்டு தனியார் கம்பெனிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.”
1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய விவசாயப் பன்முகப்படுத்தல் குடியிருப்புகளுக்கான அதிகாரசபை, ஏறத்தாழ 26 ஆயிரம் ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு பகிர்ந்தளித்து அதில் பணப்பயிர்களை வளர்க்க ஊக்குவிக்கப்பட்டது. ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 25,000 பெறுமதியான மானியம் அரசால் வழங்கப்பட்டது. 12 வருட முயற்சியின் பின்னரும் எதுவித முன்னேற்றமும் இந்தத் தோட்டங்களில் ஏற்படவில்லை. சிங்களவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக தோட்ட நிலங்கள் பங்கீடு செய்யப்படுகிறது என்று தெரிந்த பின்னரும் இந் நிலங்களைப் பராமரிக்க அரசு, மானியம் வழங்கி ஊக்குவித்தது. உழைப்பவன் கையில் நிலங்கள் இருந்திருப்பின் அவனது உழைப்பால் நிலமும் மேம்பட்டிருக்கும் அவனும் மேம்பட்டிருப்பான். தோட்டங்களின் தேசிய மயமாக்கத்தால் நிகழ்ந்த மற்றுமோர் அவலமிது.
தேயிலைப் பெருந்தோட்ட உற்பத்தி தேசிய வருமானத்தின் முக்கிய தூணாக இருந்துவரும் ஒரு துறையாகும். இத்துறையை முறையாக பயன்படுத்தி வருமானத்தை அதிகரிக்கும் வகையில் தேசியமயம் அமைந்திருக்க வேண்டும். ஆனால் தேசியமயத்தை கொண்டு வந்தவர்களின் நோக்கம் அதுவாக இருக்கவில்லை. சில அரசியல்வாதிகளின் நீண்டநாள் எண்ணங்கள் தேசியமயத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டது. தனியாரிடம் தோட்டங்கள் இருந்த வரையும் அவர்களால் தலையிட முடியாத நிலைமை காணப்பட்டது. தேசியமயமாக்கம், அவர்களது சுயநலத் திட்டங்களை நிறைவேற்ற பாதை வகுத்தது.
இதற்குப் பின் :
- தோட்டங்கள் துண்டாடப்பட்டன.
- தோட்டப் பகுதிகளில் உள்ள நகரங்களின் விரிவாக்கம் என்ற பெயரில் நகரங்களிலும் பிரதான வீதியின் இருமருங்கிலும் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன.
- தோட்டங்களைச் சுற்றியும் சிங்களக் குடியேற்றங்கள் உருவாகின.
- தோட்டக் குடியிருப்புக்களின் மையப்பகுதியில் புத்த விகாரைகள் உருவாகின.
வரலாற்றில் எந்த ஒரு காலப்பகுதியிலும் அனுபவிக்காத துன்பங்களை இக்காலத்தில் ( 1970 – 1977 ) தோட்டத் தொழிலாளர்கள் அனுபவித்தனர். கிட்டத்தட்ட அடிமைகளின் நிலைக்கு கொண்டுவரப்பட்டார்கள். எல்லா வகையிலும் அரசியல், பொருளாதார, சமூக, இனரீதியான பாரபட்சங்களுக்கு உட்படுத்தப்பட்டார்கள். தொழிற்சங்க தலைவர்கள்கூட கையை விரித்தனர். அரசாங்கம், தீர்மானங்கள் எடுக்கும் போதும் தொழிற்சங்க தலைவர்களுடன் கலந்தாலோசிக்க விரும்பவில்லை. கொண்டுவரப்பட்ட சட்ட விதிகளும் நடைமுறைகளும் முற்றிலும் தொழிலாளரின் உரிமைகளுக்கு எதிரானவைகளாகவே இருந்தன. அவர்கள் வாழ்க்கையில் என்றுமே அனுபவித்திராத விரக்தியான மனநிலையை அடைந்தார்கள். இத்தகைய நிலையில்தான் 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வந்தது.
தொடரும்.