பெருந்தோட்டங்களின் அரசுடமையாக்கம்
Arts
9 நிமிட வாசிப்பு

பெருந்தோட்டங்களின் அரசுடமையாக்கம்

October 3, 2023 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்த உடனேயே கடைசி பிரிட்டிஷ் பிரஜையையும் இலங்கையில் இருந்து விரட்டி விட வேண்டும் என்ற துடிப்பு பேரினவாதிகளிடமிருந்து ஒவ்வொன்றாக வரத் தொடங்கிவிட்டன. அதன் முதலாவது தோட்டா இலங்கையில் இருக்கும் பிரித்தானிய தேயிலை பெருந்தோட்ட உரிமையாளர்களிடம் இருந்து தேயிலைத் தோட்டங்களை பிடிங்கிக்கொண்டு அவர்களை இங்கிருந்து விரட்டி விட வேண்டும் என்பதாகும். அதன் முதல் நடவடிக்கையாக இலங்கையின் பெருந்தோட்ட கம்பனிகளை தேசிய உடமைகள் ஆகிவிடுவது என்று ஆலோசனை கூறப்பட்டது. இந்த செய்தி கசிந்து வெளிப்பட்ட உடனேயே “பிளான்டர்ஸ்” என்று சொல்லப்பட்ட பிரித்தானிய வெள்ளைக்கார தோட்ட சொந்தக்காரர்கள் தமது கஜானாக்களை இறுக்கிப் பூட்டத் தொடங்கிவிட்டார்கள். அதன் பின்னர் பச்சைப் பசேலென்று செழித்திருந்த தேயிலை பெருந்தோட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சோபை இழந்து பழுப்பு நிறமாக மாறத் தொடங்கின .

Planters

பெருந்தோட்ட தொழிலாளியின் கண்களிலும் ஒளி மங்கி கருவட்டம் சூழத் தொடங்கியது. படிப்படியாக வேலை நாட்கள் குறைக்கப்பட்டன. செலவைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தோட்டப் பராமரிப்பு குறைக்கப்பட்டது. முள்ளு குத்தி உரம் போடுவது, களைக்கொல்லி தெளிப்பது, கொந்தரப்பு கொடுத்தல், பாதைகள் – கான்கள் பராமரிப்பு, தவறணை பராமரிப்பு, புதுக் கன்று நடுதல் போன்றனவெல்லாம் குறைக்கப்பட்டன. இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் மாத வேலை நாட்கள் குறைக்கப்பட்டன.

இதனால், முதலாளி தொழிலாளி முரண்பாடுகள் முற்றத் தொடங்கின. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள நாள் பலமுறை தள்ளிப் போடப்பட்டது. தொழிலாளர்களதும் அவர்களது பிள்ளைகளதும் வயிறுகள் பல நாட்கள் காயப்போடப்பட்டன. அவர்கள் தமக்கு பிரஜாவுரிமை மறுக்கப்பட்ட நிலையில் கூட தொழிற்சங்க போராட்டத்தில் இறங்க வேண்டியவர்களானார்கள். பல தோட்டங்களில் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல மறுத்து வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டதன் விளைவாக தோட்டத்துரைமாரின் பாதுகாப்பு கருதி போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீசார்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் பல தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் அதிகரிக்கலாயின. இதற்கு மத்தியில் பல தோட்டச் சொந்தக்காரர்கள் தமது சொத்துக்களை எல்லாம் கிடைத்த தொகைக்கு விற்றுவிட்டு தமது தாய்நாடான பிரித்தானியாவை நோக்கிப் பயணப்பட்டனர்.

  1. 1971 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கண்டிப் பிரதேசத்தை சேர்ந்த கிரிந்தி எல்ல என்ற தோட்டத்தை  சேர்ந்த சுமார் 500 தொழிலாளர்கள் நமது தோட்டத்தை அதன் உரிமையாளர்கள் விற்று விட்டுப் போக தீர்மானித்திருக்கிறார்கள் என்பதை அறிந்து அதனை தடுக்கும் முகமாகவும் தமக்கு கிடைக்கவிருக்கும் சம்பள பாக்கி மற்றும் சேவைக்கால பணம்  மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதற்காகவும் வேலை நிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபட்டார்கள்.
  2. 1971அதே மாதம் 19 ஆம் தேதியன்று கண்டி தொடந்தலாவ தோட்டத்தை சேர்ந்த சகல தொழிலாளர்களும் தமது ஜனவரி மாத சம்பளப் பணத்தை உடனடியாக கொடுப்பனவு செய்யும்படி கேட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
  3. 1971 ஆம் ஆண்டு 22 பிப்ரவரி மாதம் 27 ஆம் திகதி மடுல்களை தோட்டத்தைச் சேர்ந்த 800 தொழிலாளர்கள் தமது ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான சம்பளப்பாக்கி தொகையை வழங்கும்படி கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  4. அதே ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி உட புசல்லாவையைச் சேர்ந்த சென். மார்கரெட் தோட்டத்தின் 300 தொழிலாளர்கள் தமக்கு கிடைக்கப் பெறாத வேதனத்தை உடனடியாக வழங்கும்படி கேட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
  5. அதே வருடம் மார்ச் 12 ஆம் திகதி டிக்கோயா நியூட்டன் தோட்டத்தைச் சேர்ந்த 200 தொழிலாளர்கள் நிலுவையில் இருக்கும் தமது கடந்தகால வேதனத்தை தோட்ட நிர்வாகம் வழங்க மறுத்து வருவதை தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபட்டார்கள்.
  6. அதே ஆண்டு அதே மாதத்தில் மாத்தளை வேலனை தோட்டத்தைச் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களும் அந்த தோட்டத்தில் வசித்து வந்த நிரந்தரத் தொழிலாளர்களை புறந்தள்ளிவிட்டு தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக வெளியிடங்களில் இருந்து வேலையாட்களை தருவித்தார்கள் என்பதை எதிர்த்து வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்கள்.
  7. 1971 பிப்ரவரி 17ஆம் திகதி நுவரெலியா சென். லெனாட்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த 75 தொழிலாளர்கள் தமது தோட்டத்தில், வயது வந்தும் தோட்டத்துச் செக்ரோலில் பதியப்படாமல் இருக்கும் தம் பிள்ளைகளின் பெயர்களை வேலைக்கு பதியும்படி கோரி வேலைநிறுத்தம் ஒன்று இடம்பெற்றது.

இக்காலப்பகுதியில்  இப்படி ஆங்காங்கே பல வேலை நிறுத்த போராட்டங்களும் எதிர்ப்பு ஊர்வலங்களும் நிகழ்ந்த வண்ணமே இருந்தன. இவற்றின் மீதான பொலிஸ் அடாவடித்தனங்கள்  வன்முறைகளும் கூட மிகக் கடுமையாக இருந்தன. போலீஸ்காரர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். இத்தகைய போராட்டங்கள் கீனாக்கல மற்றும் நாளந்தா ஆகிய தோட்டங்களில் இடம்பெற்றபோது துப்பாக்கி சூட்டினால் இறந்தவர்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் தொழிற்சங்க அமைப்புகளுக்கு இடையிலான கூட்டமொன்று 1971 பிப்ரவரி இரண்டாம் தேதி இடம்பெற்றது.  இக்கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன், மலையக மக்கள் தொழிலாளர் யூனியன், லங்கா மக்கள் தொழிலாளர் யூனியன், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்டத் தொழிலாளர் யூனியன் ஆகியவற்றின் தொழிலாளர்கள் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.

எனினும் இத்தகைய போக்குகளில் எந்தவிதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை. தோட்ட உரிமையாளர்களைப் பொறுத்த வரையில் தொழிலாளர்கள் தொடர்பாக அவர்கள் கடைபிடித்த கொள்கைகளில் எந்தவித விட்டுக்கொடுப்புகளையும் செய்யவில்லை. அவர்கள் பண விடயத்தில் கடுமையாகவும் தோட்டங்கள் தேசிய மயப்படுத்தல்களுக்கு முன்னர் எந்த அளவுக்கு உச்ச பயன்களைப் பெற்றுக் கொள்ள முடியுமோ அந்தளவுக்கு சுரண்டுதலில் ஈடுபட்டனர். இந்தப் போக்கு 1972 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தலைமையாகக் கொண்ட ஐக்கிய முன்னணி அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை நீடித்தது. இந்த அரசியலமைப்பு சட்டத்தில் மலையக பெருந்தோட்டங்கள் யாவும் தேசியமயப்படுத்தபட வேண்டும் என்றும் காணி சீர்திருத்த சட்டம் ஒன்றின் மூலம் தனியார் பெருந்தோட்டங்கள் துண்டாடப்பட்டு அவை பெரும்பான்மையினருக்கு வழங்கப்பட்டு அவர்களின் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் உள் நோக்கங்களாக கொண்டிருந்தன.

இதற்கு, 1971 ஆம் ஆண்டில் ஜே. வி. பி என்ற இயக்கத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இளைஞர் விரக்தியை மையமாகக் கொண்ட ஏப்ரல் கிளர்ச்சியையும் அவர்கள் ஒரு காரணமாக காட்டினர். அதேசமயம் அரசாங்கத்தில் அங்கம் வகித்த கலாநிதி என். எம். பெரேராவை தலைமையாகக் கொண்ட இலங்கை சமசமாஜக் கட்சியும் இது தொடர்பில் பல அழுத்தங்களை கொண்டு வந்திருந்தது. இதன் பிரகாரம் காணி சீர்திருத்த சட்டம் ஒன்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின் கீழ் தனியார் ஒருவருக்கு 50 ஏக்கர் காணியை மட்டுமே சொந்தமாக வைத்திருக்க முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அநேகமான தோட்ட உரிமையாளர்கள் தமது பெருந் தொகையான ஏக்கர் காணிகளை இழந்தனர். இதனைத்தொடர்ந்து 1975 ஆம் ஆண்டு, காணிச் சீர்திருத்த திருத்தச்சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டு இவ்விதம் கையகப்படுத்தப்பட்ட அனைத்துக் காணிகளும் தேசிய காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை ஆகிய இரண்டு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு நாற்பத்தி ஏழு சதவீதமான தோட்டங்கள் அவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.

தனியார் உடமைலிருந்த தோட்டங்கள் யாவும் அரசுடைமையாக்கப்பட்டதுடன் இனிமேல் தமக்கு விடிவுகாலம் வந்துவிடும் என்று அப்பாவி தோட்டத் தொழிலாளர்களும் அவர்களுடைய தொழிற்சங்க தலைமைகளும்கூட கனவு கண்டனர். ஆனால் வழக்கம் போலவே இந்த தடவையும்கூட அவர்களது கனவு பலிக்கவில்லை. மீண்டும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிலைமையே ஏற்பட்டது. வழக்கம் போலவே சம்பளம் வழங்கப்பட முடியாத நிலைமையும் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பல்வேறு வசதிகளும் துண்டிக்கப்பட்டன. ரேஷன் பொருட்களாக வழங்கப்பட்ட உணவுப்பொருட்கள், தானியங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது. தாராளமாகக் கிடைத்த கோதுமை மாவுக்குகூட ஒரு வாரத்திற்கு ஒரு கிலோ மட்டுமே என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மரவள்ளிக் கிழங்கும் வற்றாளை கிழங்கும் அவித்து சாப்பிட வேண்டிய ஒரு இருண்ட யுகம் மலையக மக்களை மாத்திரமல்ல முழு இலங்கையையும்  தம் இரும்புக் கரங்களால் இறுக்கிப் பிடித்தது.

(தொடரும்.)


ஒலிவடிவில் கேட்க


About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்