அசைவ உணவுகள் எனும்போது மிருகங்கள், பறவைகள் அவற்றின் முட்டைகள், கடல் உயிரினங்கள் போன்றன உள்ளடங்குகின்றன. சைவ உணவுகளுடன் ஒப்பிடும்போது பல நன்மை, தீமைகள் இருப்பினும் உணவில் உள்ள சத்துக்களின் செறிவு அசைவ உணவில் அதிகம் கிடைப்பது மறுக்கமுடியாத ஒன்றாகும்.
சைவ உணவுப்பழக்கம், அசைவ உணவுப்பழக்கம் என்பது அவரவர் நம்பிக்கைகளுக்குள்ளும் விருப்புக்களுக்குள்ளும் அடங்கிவிடுகின்றன. மனித சமூகத்திடம் அசைவ உணவுகளை உண்பது காலம் காலமாக இருந்துவருகின்ற ஓர் உணவுப் பழக்கமாகும்.
இறைச்சி வகைகள்
இறைச்சி வகைகள் புரதச் சத்தின் முதன்மை உணவுகளாகும். ஆனால் இவை தொடர்ச்சியாக அதிளவில் எடுக்கும்போது பல நோய்களையும் குறிப்பாக தொற்றா நோய்களான இதய நோய்கள், நீரிழிவு, புற்றுநோய்கள் (கூடுதலாக குடற் புற்றுநோய்கள்) போன்ற பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. இதனை சித்தமருத்துவமும் வலியுறுத்துகின்றது. அதேவேளை இதனை நவீன உணவு விஞ்ஞானமும் வலியுறுத்துகின்றது.
இதற்கு மேலதிகமாக உள்ளெடுக்கப்படும் புரதம், இறைச்சிவகைகளில் உள்ள கொழுப்புக்கள், சோடியத்தின் அளவு என்பனவும் காரணமாகின்றன. அதேவேளை சமைக்கும் வெப்பநிலை அதிகரிக்கும்போது உருவாகும் வேதியியற் பொருள் (Hydrocarbons) புற்று நோய்களை குறிப்பாக இரைப்பைப் புற்றுநோயை உருவாக்குகின்றது. அதிக நெருப்பில் இறைச்சியை வாட்டும்போது இவ்வாறான விளைவுகள் ஏற்படுகின்றன. இறைச்சியை வாட்டும்போது அதிகம் கருக விடக்கூடாது. இறைச்சி கருகும்போது புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன.
முக்கியமாக பெரும்பாலான பாலூட்டிகளின் இறைச்சிகள் தொடர்ச்சியாக அல்லது அதிகமாக உண்ணும்போது இவ்வாறான உபத்திரவங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக பாலூட்டிகளின் இறைச்சிகளில் கூடுதலான அளவு மயோகுளோபின் (Myoglobin) எனப்படும் புரதம் காணப்படுகின்றது. இப்புரதம் அதிகளவு இருப்பின் தசைகளுக்கு அதிகளவு ஒட்சிசன் தேவைப்படும். இதனால் கூடுதலான செங்குருதிச் சிறுதுணிக்கைகள் பாலூட்டிகளின் இறைச்சியில் காணப்படும். இதனால் மேற்படி புரதத்தை கொண்ட பாலுட்டிகளின் இறைச்சிகள் சிவப்பாக காணப்படும். இவ்வாறான இறைச்சிகள் விசேடமாக “RED MEAT” என அழைக்கப்படுகின்றன.
இங்கிலாந்தின் சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் பிரகாரம் சாதாரணமாக ஒருவரின் உடல் நிறையில் 1 கிலோகிராமுக்கு 0.75 கிராம் புரதம் தேவையாக உள்ளது. இதன் பிரகாரம் வளர்ந்த ஒருவருக்கு அவரவர் நிறைக்கு ஏற்ப சராசரியாக 45 – 55 கிராம் புரதம் போதுமானதாகும். பொதுவாக ஒருவரது உள்ளங்கையில் கொள்ளக்கூடிய உணவின் அளவு போதுமானதாகும். இது புரதத்தை முதன்மையாகக் கொண்ட உணவுகளுக்கே பொருந்தும். அதாவது 90 கிராம் இறைச்சி ஒரு நாளைக்கு போதுமானதாக இருக்கும். இதனைக்கூட இங்கிலாந்து சுகாதார நிறுவனம் 70 கிராமாகக் குறைப்பது நன்று என குறிப்பிடுகின்றது.
இறைச்சி வகைகளில் புரதச் சத்து, இரும்பு, செப்பு, நாகம் போன்ற கனிமங்களும் B வகை உயிர்ச்சத்துக்களும் குறிப்பாக B12 என்பன முதன்மையாகவும் அதிகமாகவும் காணப்படுகின்றன. அதேபோல் கொலஸ்திரோலும் அதிகளவு நிரம்பிய கொழுப்பும் காணப்படுகின்றன. இதனால் கொலஸ்திரோல் அதிகம் உள்ளவர்கள் இறைச்சி வகைகளைக் குறைப்பது நன்று. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை (Processed meat) தொடர்ச்சியாக உண்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் உண்டு.
அசைவ உணவுகளில் குறிப்பாக இறைச்சிவகைகளில் உள்ள இரும்புச் சத்தானது உடலால் நன்றாக அகத்துறிஞ்சக் கூடியதாக உள்ளதுடன் தானியங்கள் பருப்புவகைகளில் உள்ள இரும்புச்சத்தின் அகத்துறிஞ்சலையும் தூண்டுகின்றது. இதனால் இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் குருதிச்சோகை நிலையானது தவிர்க்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் வடமராட்சியில் உள்ள பாரம்பரிய உணவுப்பழக்கமான கோழிப்புக்கையானது மேற்படி குருதிச்சோகை ஏற்படாதவாறு நோயுற்ற நிலையில், நோய் மாறிய நிலையில் பத்திய உணவாக வழங்கப்பட்டு வருகின்றது.
இதனை சங்ககாலத்தில் பிறிதொரு வடிவத்தில் “ஊன்சோறு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் உணவு பற்றி கபிலரால் பாடப்பெற்ற புறநானூற்றின் 113 ஆவது பாடலில் குறிப்பிடப்படுகின்றது.
“மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்
அட்டுஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெரு வளம் பழுனி”
– பக்.93, சுவையான சங்ககால தமிழர் சமையல்
மன்னன் பாரி தன்னைத் தேடி வருபவர்களுக்கு ஆட்டுக்கிடாய் இறைச்சி கலந்த கொழுஞ்சோறு கொடுப்பானாம்.
ஊன் சோறு (Biriyani) – (சுவையான சங்ககால தமிழர் சமையல் நூலில் இருந்து)
தேவையான பொருட்கள்
- ஆட்டிறைச்சி – 250 கிராம்
- இஞ்சி – சிறு துண்டு
- மிளகு – 3 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
- நெய் – 75 மில்லிலீற்றர்
- ஏலக்காய் – 3
- கறுவா – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- கராம்பு – 3
- புதினா – 1 கைப்பிடி
- அரிசி – 300 கிராம்
- கொத்தமல்லி இலை – 2 மேசைக்கரண்டி (நறுக்கியது)
- தேங்காய்ப்பூ – 3 மேசைக்கரண்டி
- தண்ணீர் – தேவையான அளவு.
தாச்சியில் ஒன்றாகச் சேர்த்தரைத்த தேங்காய்ப்பூ, இஞ்சி, மிளகு, ஏலக்காய், கறுவா, கராம்புக் கலவையை நெய்விட்டு நன்றாக வதக்கவும். இவற்றுடன் நறுக்கிய மல்லித்தழை, புதினா, மஞ்சள்தூள், உப்பைச் சேர்த்து வதக்கவும். கூடவே ஆட்டிறைச்சித் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். சுமார் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, வதக்கிய இறைச்சி அரைப்பதம் வெந்தவுடன் கழுவிச் சுத்தம் செய்த அரிசியை இறைச்சியுடன் சேர்த்து பிரட்டவும். பின்னர் 750 மில்லிலீற்றர் தண்ணீர் விட்டு அரிசியை வேகவைத்து சோறு குழையாமல், அடிப்பிடிக்காமல் இறக்கி காரம் தேவையெனில் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து கொள்ளவும்.
பருப்பு வகைகள், கடல் உணவுகள் தேவையான அளவுக்கு மேலதிகமாக அவ்வப்போது அதிகமாக உண்ணலாம். ஆனால் இறைச்சி வகை முக்கியமாக பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகளில் உள்ள இறைச்சி வகைகள் 70 கிராமுக்கு மேலாகாமல் இருக்க வேண்டும்.
எனவே இறைச்சிவகைகளை தொடர்ச்சியாக உட்கொள்ளாது கிழமையில் 2 – 3 நாட்கள் உட்கொள்வது நன்று. மற்றைய நாட்களில் இறைச்சிக்கு பதில் வேறு பருப்புவகைகள், முட்டை, கடல் உணவுகள் என வேறு வேறு புரத உணவு மூலங்களைப் பயன்படுத்த வேண்டும்.
யாழ்ப்பாணப் பாரம்பரிய உணவுப்பழக்கங்களில் இது சரியாகவே காணப்படுகின்றது. பெரும்பாலானவர்கள் வெள்ளிக்கிழமை, செவ்வாய்கிழமைகளில் அசைவம் உண்ணமாட்டார்கள். அதேபோல் சில இடங்களில் குறிப்பாக வடமராட்சி, பொன்னாலை போன்ற பகுதிகளில் பெருமாள் கோயில்கள் காணப்படுவதால் அந்தப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமையும் அசைவம் உண்ணமாட்டார்கள். அதேபோல் புதன், சனி ஆகிய தினங்களிலேயே இறைச்சி சமைப்பதும் வழக்கமாக காணப்படுகின்றது. இவற்றைவிட யாழ்ப்பாண மக்களில் சைவ உணவுப்பழக்கங்கள், சதுர்த்தி, பிரதோசம், ஏகாதசி போன்ற திதிகள், கோவில் திருவிழாக்கள், சமயச்சடங்குகள் போன்றவற்றில் அசைவ உணவுகள் தவிர்க்கப்பட்டு வருவதன் மூலம் அசைவ உணவுகளில் உள்ள பிரதிகூலங்களில் இருந்து விடுபடக்கூடியவர்களாக உள்ளனர்.
எனவே அளவோடு உண்டு ஆரோக்கியம் பெற்றிடல் வேண்டும். இதனையே திருக்குறளில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக மாச்சத்துள்ள உணவுகள், மாமிச உணவுகளுக்கு இக்குறள் மிகப்பொருந்தும்.
“இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேரிரையான் கண் நோய்”
உணவு உண்ணும்போது எமது உடலுக்கு ஆகக் குறைந்த அளவு எவ்வளவு தேவை என அறிந்து அவ்வுணவினை உண்பவனிடத்தில் என்றும் இன்பம் இருக்கும். அவ்வாறில்லையேல் அவனிடத்தில் நோய்கள் குடிகொள்ளும்.
ஆட்டிறைச்சி
பொதுவாக ஆட்டிறைச்சி அசைவ உணவுப் பிரியர்களால் மிக விரும்பப்படும் ஓர் இறைச்சி ஆகும். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் வெள்ளாட்டு இன இறைச்சிகளே அதிகளவு உண்ணப்படுகின்றன. வெள்ளாட்டு இனங்களில் பொதுவானவை பள்ளை ஆடு, கொடி ஆடு என்பனவாகும்.
வெள்ளாட்டு இறைச்சியின் பொதுவான குணம்
பொதுவாக வெள்ளாட்டு இறைச்சியானது பத்தியத்துக்குரியதொன்றாக காணப்படுகின்றது. உடலின் பலவீனத்தை அகற்றி உடலுக்கு பலத்தைத் தரக்கூடியதொன்றாகவே கருதப்படுகின்றது. வெள்ளாட்டுத் தயிர் பலநோய்களை குறைக்கும் என்றும் நல்ல பசியை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. அதேவேளை வெள்ளாட்டு வெண்ணெய் நோய்கள் ஏற்படுவதை அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்படுகின்றது.
“அட்டிடு தயிர்க்கு வாத மருங்குன்மஞ் சேட காசம்
கெட்டிடும் பசியுண் டாகுங் கிளர்வெண்ணெய் நோய்க டீர்க்கும்
இட்டமா மிதனி றைச்சி யேற்றிடும் பத்தி யத்திற்
கெட்டியும் பாரா தைதா னிரும்பெல னுண்டாம் பின்னும்”
பக்.86, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி
“வெள்ளாட்டு நோயெல்லா மோடுமுடல் பருக்குந்
தள்ளாடு வாதபித்தஞ் சாந்தமா – வெள்ளாட்டி
னற்கறியை யுண்பார்க்கு நாடுகய ரோகமும்போ
மற்குரிய வன்பலனும் வாழ்த்து”
– பக். 342, பதார்த்த குணபாடம்
வெள்ளாட்டு இறைச்சிக்கு நோய்கள் குறைந்து உடல் பருக்கும், வாத பித்த தோசங்கள் சீரான நிலைக்கு வரும். உடலை மெலிவிக்க கூடிய நோய் நிலைகளில் உடலுக்கு நல்ல பலத்தினைத் தரக்கூடியது. இதனால் நோய்களின் தாக்கம் குறைந்துகொள்ளும்.
பள்ளை ஆட்டிறைச்சி – கொடி ஆட்டிறைச்சி
பள்ளை ஆடுகளும் கொடி ஆடுகளும் வெள்ளாட்டு இனங்களாகும். பள்ளை ஆடு என்பது கட்டையானது, நமது ஊர் வழக்கில் அரிக்கன் ஆடு எனக் குறிப்பிடப்படுவதுண்டு. கூடுதலாக யாழ்ப்பாணத்தில் உள்ள தீவுப்பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. கொடி ஆடு என்பது உயரமானது. ஆடுகளின் நிறங்களைக் கொண்டும் ஆடுகளை குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றது.
ஆட்டிறைச்சியைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாண அசைவப் பிரியர்களின் மிகவிருப்புக்குரிய உணவாகக் காணப்படுகின்றது. குறிப்பாக தீபாவளி அன்று ஆட்டிறைச்சி சமையல் விசேடம். பொதுவாக சித்தமருத்துவத்தில் “சனி நீராடு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரம்பரிய பழக்கவழக்கங்களில் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய்யை உடல் முழுதும் தேய்த்து மர்த்தனம் செய்து தலை முழுகுவார்கள். அன்றைய தினம் பெரும்பாலும் ஆட்டிறைச்சி சமையல் விசேடமாக சமையலில் இருக்கும்.
“பள்ளையாட் டிறைச்சி யுண்ணிற் பலமாதந் தாது வுண்டாம்
உள்ளமிக் கனலாம் வாயு வுதித்திடுங் கொடியாட் டின்றன்
தள்ளரு மிறைச்சி குன்மந் தவிர்த்திடும் வயிற்றி னோயும்
எள்ளரு மிடுப்பி னுற்ற விரணமும் வலியு மாற்றும்”
– பக். 86, அமிர்தசாகரம், பதார்த்த சூடாமணி.
பள்ளை ஆட்டிறைச்சியினை உண்ணில் உடல் தாதுக்கள் விருத்தியடைந்து பலமாதங்களுக்கு அவை தொடர்ச்சியாக பலமுடையதாகவிருக்கும். இதனால் உடலில் வாயு அதிரித்து மந்தம் உண்டாகும்.
பொதுவாக ஆட்டிறைச்சியை தொடர்ச்சியாக அதிகமாக உண்ணும்போது பல தொற்றா நோய்கள் ஏற்பட ஏதுவாகின்றது. இதனை சித்தமருத்துவ நூலான பதார்த்த குணபாடம் இவ்வாறு கூறுகின்றது.
“மந்தமிகுந் தீபனம்போ மாறாவ ரோசகமாந்
தொந்தநோ யெல்லாந் தொடருங்கா – ணிந்துநுதன்
மானே கபமுயரும் வன்பள்ளை யாட்டுக்குத்
தானே மிகும் வாயுதான்”
– பக்.343, பதார்த்த குணபாடம்.
மந்தம் அதிகரிக்கும், பசி அற்றுப்போகும் தொடர்ந்து உண்ணும்போது பசியின்மை, மந்தம் இவற்றுடன் இவற்றின் தொடர்ச்சியாக ஏற்படக்கூடிய நோய்கள் எல்லாம் ஏற்படும். கபம் அதிகரித்து அதனோடு ஒத்த நோய்களும் வாயு அதிகரிப்பதன் மூலம் அதனோடு எற்படக்கூடிய நோய்களும் ஏற்படும்.
கொடி ஆட்டிறைச்சியினை உண்ணில் குன்மம் எனப்படும் வயிற்றுப்புண் குறைத்திடும், வயற்றில் ஏற்பட்ட நோய்களும், இடுப்பு பகுதியினுள் உற்ற விரணமும் வலியையும் மாற்றக்கூடியது.
கொடி ஆட்டிறைச்சியினை நன்றாக சமைத்து காலை உணவுடன் உட்கொள்ளும்போது இடுப்புவலி, வறட்டிருமல், உடற்சூடு, வாத நோய்களும் குறையும் என சித்தமருத்துவ நூலான பதார்த்த குணபாடம் கூறுகின்றது.
“கொடியாடு நற்கறியாய் கொள்ளும் வகைகேளாய்
தடியாமற் பூப்போற் சமைத்து – விடிகாலே
கொண்டா விடுப்புவலி குற்றிருமல் வெட்டையும் போங்
கண்டாலும் வாதமறுங் காண்”
– பக்.342, பதார்த்த குணபாடம்.
பொதுவாக விலங்குப் பொருட்கள் உணவாகும்போது புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்துக்கள், கனிமங்கள் என்பன தாவர உணவுப் பொருட்களில் இருப்பதைவிட அதிகமாகவே காணப்படுகின்றன. அத்துடன் உடலினால் இலகுவாக அகத்துறிஞ்சக்கூடிய நிலையிலும் காணப்படுகின்றன.
அந்தவகையில் வெள்ளாட்டு இனங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் பொதுவாக சத்துக்கள் தொடர்பில் பார்க்கும்போது உடலை வளர்க்கக்கூடிய சத்துக்கள் அதிகமாகவே உள்ளன. ஆனால் இறைச்சி வகைகளை அதிகமாக தொடர்ச்சியாக உண்ணும் போது உடற்பருமன் அதிகரித்தலும் அதனால் தொடர்ந்து ஏற்படும் உபத்திரவங்கள், நோய்கள் என்பனவும், இரத்த மிகைகொழுப்பு (Cholesterol), உரத்தபித்தவாதம் (Hypertension) நீரிழிவு, கண்டகழலை போன்ற பல்வேறு தொற்றா நோய்கள் ஏற்படுகின்றன.
செம்மறி ஆட்டிறைச்சி
செம்மறியாட்டின் பாலுக்கு வாத நோய்கள், தோல் நோயான வாத கரப்பன் என்பன குணமானாலும் அதன் தயிர், இறைச்சிக்கு வாத, பித்த, கப தோசங்களால் ஏற்பட்ட நோய் எல்லாம் அதிகரிக்கும். குறிப்பாக கிரந்தி அதிகரிக்கும். ஏற்கனவே இல்லாத நோய்களும் ஏற்படும் என யாழ்ப்பாண நூலான அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணியில் குறிப்பிடப்ட்டுள்ளது.
“வாதம்வா யுக்க ரப்பன் மருவிடா நோய்கள் போகும்
ஏதமார் செம்ம றிப்பா லிதன்தயி ரிறைச்சி யாவும்
தீதுறு வாத பித்தஞ் சேட்டுமங் கிரந்தி மற்றும்
ஓதிய நோய்க ளெல்லா முற்றிடு மென்பர் நீத்தொர்”
-பக். 86, அமிர்தசாகரம் பதார்த்த சூடாமணி
செம்மறி ஆட்டிறைச்சி பற்றி சித்தமருத்துவ நூலான பதார்த்த குணபாடமும் இதனையே வலியுறுத்துகின்றது.
“அம்புவிந் செங்கரப்பானண்டுவது மாத்திரமோ
செம்மறி யாட்டுக்கறியைத் தின்றாக்காற் – கொப்பி
லிருந்து மதிப்பாற்போ லெப்பிணியு முண்டா
மருந்துயர நீங்கா தறி”
– பக்.343, பதார்த்த குணபாடம்.
செம்மறியாட்டு இறைச்சியை உட்கொண்டால் தோல்நோய்களில் ஒன்றான செங்கரப்பன் நோயும், உடலில் வேறு பல நோய்களும் ஏற்பட்டு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக உணவுப்பொருட்களின் குணங்களைக் குறிப்பிடுகையில் அவ்வுணவுப் பொருட்களின் தனியான குணங்களே குறிப்பிடப்படுகின்றன. இவற்றினை முறைப்படி சமைத்துண்ணும்போது அவற்றின் குணங்களில் சில மாறுபாடுகள் ஏற்படுகின்றன. அல்லது அவற்றின் ஒவ்வாமைகள் குறைகின்றன அல்லது இல்லாது போகின்றன. அதேபோல் பெரும்பாலும் அளவுக்கதிகமாக தொடர்ச்சியாக உண்ணும்போதே இக்குணங்களும் வலுப்பெறுகின்றன. தாவர உணவுகளை விட விலங்கு உணவுகள் விரைவாக விளைவுகளை ஏற்படுத்தக் கூடியன.
வெள்ளாட்டுடன் ஒப்பிடுகையில் செம்மறி ஆட்டில் கொழுப்பு அதிகம். இதனால் கொழுத்த செம்மறியாட்டு இறைச்சியினை இரும்புக்கம்பியில் கோர்த்து நெருப்பில் சுட்டு, சுடச் சுட தன்னை நாடி வந்தவர்க்கு உண்ணக் கொடுப்பாராம் கரிகாலச் சோழ மன்னன் என பொருநாராற்றுப்டையில் உள்ள பாடலில் 105 -106 வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது
“… காழில் சுட்ட கோழ்ஊன் கொழும்குறை
ஊழின் ஊழின் வாய்வெய்து ஒற்றி…”
– பக்.188, சுவையான சங்க காலத் தமிழர் சமையல்
சுட்ட செம்மறியாட்டு கறி (Barbecue) – சுவையான சங்க காலத் தமிழர் சமையல் நூலில் இருந்து.
தேவையான பொருட்கள்
- செம்மறி ஆட்டின் இறைச்சி – 500 கிராம்
- தயிர் – 100 மில்லி லீற்றர்
- உப்பு – தேவையான அளவு
- மிளகு – தெவையான அளவு
- இஞ்சி – 2 அங்குல அளவு
- கொத்தமல்லி – 1 மேசைக்கரண்டி
- சீரகம் – 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை – 1/2 கப்
- கொத்தமல்லி இலை – 1/2 கப்
கழுவிச் சுத்தம் செய்த இறைச்சியின் மேல் உள்ள தண்ணீரை நன்கு வடித்துக் கொள்ளவும். மிளகு, இஞ்சி, கொத்தமல்லி, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, உப்பு என்பவற்றை தயிருடன் சேர்த்து கலந்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய இறைச்சித்துண்டுகளின் மேல் அரைத்த விழுதினைத்தடவி சுமார் 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
ஊறிய இறைச்சித் துண்டுகளை கம்பியில் கோர்த்து மூட்டிய நெருப்பின் மேல் அதன் அனல் படும்படி கட்டிவிடவும். இறைச்சியின் எல்லாப்பகுதியும் வேகும் வண்ணம் கம்பியைத் திருப்பி திருப்பி விடவும். இறைச்சி வெந்தவுடன் கருகாமல் எடுத்துக்கொள்ளவும்.
யாழ்ப்பாணத்தில் மீன், கோழி, பன்றிக்கறி, முயல்கறி, உடும்புக்கறி என்பன இவ்வாறு சுட்டுச் சாப்பிடும் வழக்கம் இருந்துள்ளது.
தொடரும்.