பொருளாதார வகைப்பாட்டின் கீழ் உள்ளடங்கும் துறைசார் பகுதிகளில் முக்கியமானதான பொதுவசதிகள் துறையானது மின்சாரம், சக்திவளம், எரிபொருள், தொலைத்தொடர்பு, வீடமைப்பு வசதிகள், குடிநீர் வழங்கல் ஆகிய முக்கிய செயற்பாடுகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. இவை அனைத்தையும் உள்ளடக்கிய துறையாகவே பொதுவசதிகள் துறை காணப்படுகின்றது. இந்த வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணப்படும் வீடமைப்புத் துறையின் நிலையைப் பரிசீலிக்கும் போது, பிரதான பொதுவசதிகளில் முதன்மையானதாக வீட்டுவசதியே காணப்படுகிறது. அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உறைவிடம் என்பது சமூகத்தின் மிகப் பிரதான அலகாகக் காணப்படும் குடும்ப அமைப்பை இயக்கும் மூல சக்தியாகும். குடும்பம் என்பது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து வாழ்வதனைக் குறிக்கின்றது. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தனிமனித ஒன்றிணைவினூடாக குடும்பம் என்ற அலகு உருவாகிறது. இக் குடும்பங்களிலிருந்தே கிராமம், பிரதேசம், மாவட்டம், மாகாணம் என நிர்வாகப் பிரிவுகள் தோற்றம் பெறுகின்றன. இந்த வகையில் சமூக இயங்குதளத்தில் குடும்பாண்மை என்பதனை நிலைநிறுத்துவதில் வீட்டுவசதிகள் துறை முக்கிய பங்கைச் செலுத்துகிறது. குடும்பம் என்பது தனித்துச் செயற்படும் ஒரு சிறந்த நிறுவனமாகும். குடும்பங்களின் இலக்கு என்பது ஒன்றுக்கொன்று வேறுபட்டுக் காணப்படுவதாகவே பலரும் கருதுகின்றனர். எனினும், குடும்பங்களுக்கு அவ்வாறு வேறுபட்ட இலக்குகள் காணப்படுவதாகச் சிந்திப்பது, குடும்ப இலக்குகளை அடையும் பாதையிலுள்ள மாற்றுத் தந்திரோபாயமாகும்.

குடும்பங்களின் இலக்கு மகிழ்ச்சியாக வாழுதல் என்பதில் தங்கியுள்ளது. மகிழ்ச்சியான வாழ்வின் அளவும் அதன் அடைவு மட்டமும் மனரீதியிலான திருப்தியிலிருந்தே தோற்றம் பெறுகிறது. இருப்பவற்றைக் கொண்டு திருப்தியைப் பெற்றுக்கொள்ளும் நிலையை ஆன்மீகம் போதித்தாலும் பொருளாதாரம் அதனைக் கட்டுப்படுத்துவது கிடையாது. எல்லையற்ற விருப்பும் அதனை அடைவதற்கான முயற்சியுமே உலகம் இந்தளவு தூரத்துக்கு முன்னேறி உள்ளமைக்கான மூலம் என பொருளாதாரம் கருதுகிறது. இந்த வகையில் மகிழ்ச்சியான குடும்பம் ஒன்றின் மூல நிலையமாக அமைவது வீட்டு வசதியாகும். தரமும் சுகாதார ஏற்பாடுகளும் கொண்ட வீடுகள், மகிழ்ச்சியின் பிறப்பிடங்களாக இருப்பதனால், அவை குறித்த சிந்தனையும் ஆய்வுமே எமது குடும்பங்களின் உண்மை வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும். இந்த வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் காணப்பட்ட வீடுகள், மண் வீடுகளாகவும், கூரைகள் கிடுகுகளால் வேயப்பட்டவையாகவும், சிறிய அளவினதாகவுமே இருந்தன. இதனால் வீட்டில் கூடி வாழுதல் சாத்தியப்பட்டது. தனித்து இயங்குவதற்கான இடப்பரப்பு இல்லாமை காரணமாக, ஒரு விளக்கிலிருந்து எல்லோரும் படிப்பதும், அதே வீட்டில் அம்மா சமைப்பதும், வீட்டில் நிகழும் குடும்பச் சண்டைகளில் வீட்டிலுள்ள எல்லோரும் பங்கு கொள்வதுமான வாழ்க்கை முறையிலிருந்து படிப்படியாக சீமெந்திலான வீடுகள் அமைக்கப்பட்ட போது, ஒவ்வொருவரும் தனித்தனி அறைகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. இந்த வகையில் 2010 களில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வீட்டு வசதிகளில் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழத்தொடங்கின.
போருக்குப் பின்னரான அபிவிருத்தி முயற்சியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் ஆகிய இரு பெரும் முதலீட்டு வேலைத்திட்டங்களின் மூலம், பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டு வசதிகள் அதிகரிப்புச் செய்யப்பட்டன. இந்த வகையில் வடக்கு மாகாணத்தின் மாவட்டங்களின் சனத்தொகை அடிப்படையில் வீட்டு வசதிகளை ஆராயும் போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் வசிக்கும் 209,255 குடும்பங்களில் 13,345 குடும்பங்கள் மட்டுமே வீட்டுத் தேவையுடையவையாக உள்ளன. இதேபோல கிளிநொச்சி மாவட்டத்தில் வசிக்கும் 50,135 குடும்பங்களில் 46,420 குடும்பங்கள் வீட்டு வசதியற்றவையாக உள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிக்கும் 47,455 குடும்பங்களில் 5,634 குடும்பங்கள் இதுவரை வீட்டு வசதி மேம்படுத்தப்படாதவையாகக் காணப்படுகின்றன. மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் 49,116 குடும்பங்களில் 4,384 குடும்பங்கள் வீட்டு வசதி மேம்படுத்தப்படாதவையாகவும், வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் 59,030 குடும்பங்களில் 10,577 குடும்பங்கள் இதுவரை வீட்டு வசதியைப் பெற்றுக்கொள்ள முடியாதவையாகவும் காணப்படுகின்றன. இந்த வகையில் வடக்கு மாகாணத்தில் வசிக்கும் 414,991 குடும்பங்களில் 38,482 குடும்பங்கள் வீட்டு வசதிகள் அற்றவையாகக் காணப்படுகின்றன. இம்மாகாணத்தின் குடும்பங்களில் 9.3 சதவீதமான குடும்பங்கள் இன்னமும் வீட்டு வசதி பூர்த்தி செய்யப்படாதவையாக இருந்து வருகின்றன. 563,958 குடும்பங்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் 481,723 குடும்பங்கள் வீட்டு வசதிகளைப் பெற்றுள்ளன. அங்கு, இதுவரை வீட்டுத் தேவைகளைப் பெற்றுக்கொள்ளாத 52,362 குடும்பங்கள் காணப்படுகின்றன. இது மொத்த வீட்டு வசதிகளில் 4 சதவீதமாகும். மாவட்ட அடிப்படையில் வீட்டுத் தேவையினைப் பகுப்பாய்வு செய்யும் போது அம்பாறை மாவட்டத்தில் வசிக்கும் 235,905 குடும்பங்களில் 211,456 குடும்பங்கள் பாதுகாப்பான வீடுகளைக் கொண்டிருப்பதுடன், 19,622 குடும்பங்கள் வீட்டுத் தேவையுடையவையாகக் காணப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கும் 198,719 குடும்பங்களில் 174,588 குடும்பங்கள் பாதுகாப்பான வீடுகளைக் கொண்டிருப்பதுடன் 21,881 குடும்பங்கள் வீட்டுத்தேவைகளுக்காகக் காத்திருக்கும் குடும்பங்களாகவுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் வசிக்கும் 129,334 குடும்பங்களில் 95,679 குடும்பங்கள் வீட்டுத்தேவை பூர்த்திசெய்யப்பட்டவையாகவும், 10,859 குடும்பங்கள் இன்னமும் நிரந்தர வீடுகளைப் பெற்றுக்கொள்ளாத குடும்பங்களாகவும் காணப்படுகின்றன. இந்த அடிப்படையில் வட மாகாணத்தில் 9.3 சதவீத குடும்பங்களும், கிழக்கு மாகாணத்தில் 4 சதவீத குடும்பங்களுமாக, மொத்தமாக 13.3 சதவீத குடும்பங்கள் வடக்கு – கிழக்கில் வீட்டுத் தேவைகளுக்காகக் காத்திருக்கும் குடும்பங்களாக காணப்படுகின்றன. மேலெழுந்தவாரியாக நோக்கும் போது வீட்டு வசதி பெற்றோரது எண்ணிக்கை இவ்விரு மாகாணங்களிலும் திருப்தியாக இருப்பதாகக் காட்டப்படலாம்.

ஒற்றை வீடுகள், மாடி வீடுகள், இரட்டை வீடுகள், குடிசை வீடுகள் என வீடுகளை பாதுகாப்பு அடிப்படையில் தரவரிசைப்படுத்தலாம். மீள் குடியமர்வினைத் தொடர்ந்து, இவ்விரு மாகாணங்களிலும் அரச கருத்திட்டங்கள் மூலம் வீடுகளைக் கட்டி வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் காணப்பட்டது. யுத்தத்தினால் முழுமையான இடப்பெயர்விற்கு உட்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும், பகுதியளவில் இடம்பெயர்ந்த ஏனைய ஐந்து மாவட்டங்களிலும், பாதிப்படைந்த குடும்பங்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நிரந்தர வீடுகளைக் கட்டி வழங்கும் வடக்கு – கிழக்கு வீடமைப்பு அபிவிருத்திக் கருத்திட்டம் (NEHRP) ஆரம்பிக்கப்பட்டது. 540 சதுர அடிகளைக் கொண்ட இரண்டு அறைகள், விறாந்தை, குசினி ஆகியவற்றை உள்ளடக்கிய வீட்டுத்திட்டம் இவ்விரு மாகாணங்களிலும் ஆரம்பத்தில் வழங்கப்பட்டது. இவற்றைச் செலவுச் சுருக்கமான வீடுகளாக அமைப்பதற்கென, தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தினால் (NEAD) மாதிரி வீடுகளும் வடிவமைக்கப்பட்டன. 350,000 ரூபா பெறுமதியில் இந்த வீடுகளை அமைக்க நிதி வழங்கப்பட்டது. இதன்படி அமைக்கப்பட்ட வீடுகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய குடியிருப்பாளர்களாலும் 200,000 ரூபா வரையிலும் முதலிடப்பட்டு, இவ்வீடுகள் முழுமைப்படுத்தப்பட்டன. அதனை வழங்க முடியாத குடும்பங்கள், பாதுகாப்பான தாய் அறையுடன் குசினிகளை மட்டும் கொண்ட வீடுகளில் இன்றுவரை வாழ்ந்து வருகின்றன. வறுமையான குடும்பங்கள் தாமாகவே இதனை நிறைவேற்ற முடியாத நிலையினால், ஒப்பந்தக்காரர்களைக் கொண்டு வீடுகளை அமைப்பது பற்றிப் பரீசிலிக்கப்பட்டது. ஆயினும், வீட்டு உரிமையாளர்களின் பொறுப்பில் வீடுகளை அமைப்பது மட்டுமே உண்மையான வாழ்விடத் திருப்தியைப் பெற்றுக்கொடுக்கும் என்ற அடிப்படையில், உரிமையாளர்களே அதனை நிறைவேற்றும் கருத்திட்டம் (Owner Driven Project) முன்னெடுக்கப்பட்டு, பிரதேச செயலாளர்களால் நிதியும் மேற்பார்வையும் வழங்கப்பட்டு, வெற்றிகரமாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. இதன் மூலம் இவ்விரு மாகாணங்களிலும் யுத்தத்தினால் சேதமடைந்த 34,754 வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டப்பட்டன. இதனுடன் இணைந்து சுவிஸ் அபிவிருத்தி நிறுவனம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், கியுடெக் நிறுவனம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம், இந்திய நிதியுதவி வீட்டுத்திட்டம் என பல்வேறு நிதி மூலங்களினூடாக மேலும் 30,000 வரையிலான வீடுகள் அமைக்கப்பட்டன. 2010 தொடக்கம் இந்த ஆண்டு வரையிலுமான காலப்பகுதியில் அமைக்கப்பட்ட வீடுகளில், பயனாளிகளின் பங்களிப்பு சிறப்பாகக் கிடைத்திருந்த வீடுகள் முழுமையாக்கப்பட்டன. சில பயனாளிகளின் வீடுகள், வழங்கப்பட்ட அரச நிதியளவிற்குள் மட்டுமே வேலை நிறைவேறிய நிலையில் காணப்படுவதால், இந்த வீடுகள் பாதுகாப்பான வீட்டு வசதிகளுடன் காணப்படவில்லை என்பதே யதார்த்தமாகும். வீட்டு வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் இந்த இரு தசாப்த காலத்தில் பாரிய முன்னேற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது என்பதனை மறுக்க முடியாது. அதேவேளை வீட்டுத்திட்டங்களை குறித்த காலத்தில் முடிவுறுத்திக் கொண்டால் மட்டுமே அரச நிதியைப்பெற முடியுமென்பதால், பெருமளவு வீட்டுத்திட்டப் பயனாளிகள் வங்கிக்கடன் பெற்றமை, தங்களிடமிருந்த நகைகளை அடகு வைத்துப் பணம் பெற்றமை என்பன பெருமளவுக்கு இடம் பெற்றுள்ளன. இதனால் வீட்டு வசதியைப் பெற்றுக்கொண்ட பெரும்பாலான குடும்பங்கள் கடனாளிகளாக மாற்றப்பட்டன. 2010 ஆம் ஆண்டில் வீட்டுத்திட்டங்களுக்கு வழங்கப்பட்ட 350,000 ரூபா நிதியானது பின்னர் பணவீக்க மாறுதல்களுக்கேற்ப 500,000 ரூபாயாக உயர்த்தப்பட்டபோது, அந்த வீட்டைக் கட்டிமுடிப்பதற்கு 15 லட்சம் ரூபா தேவையாக இருந்தது. இப்போது இரு நபர்களுக்கான வீடுகளுக்கு 600,000 ரூபாவும் அதற்கு மேற்பட்ட அங்கத்தவர் கொண்ட குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்ட போதும், அதனைப் பெற்று ஒரு வீட்டை முழுமைசெய்ய முடியாது என்பதால் பல பயனாளிகள் இதனைப் பெற்றுக்கொள்ள மறுத்து விடுகின்றனர். இதனிடையே 2019 காலப்பகுதியில் வெள்ளப்பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்குப் பதிலாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மூலம் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள், ஒரு கட்டக் கொடுப்பனவு மாத்திரம் வழங்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதன்கீழ் வீடுகளைப் பெற்றுக்கொள்ள இணைப்புச் செய்யப்பட்டவர்கள், அதன்பின் வந்த எந்தவொரு வீட்டுத்திட்டத்திலும் பயனாளிகளாக இணைக்கப்பட முடியாது போனதால், வீடுகளைக் கட்டுவதற்காக தற்காலிக வீடுகளையும் அகற்றிவிட்டு அத்திவாரமிட்ட பலர், தற்போது தற்காலிக வீடுகளையும் இழந்த நிலையில், நிரந்தர வீடுகளையும் கட்டிமுடிக்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால் சுமார் 8000 வரையிலான வீட்டுத்திட்டப் பயனாளிகள் கடந்த 5 ஆண்டுகளாக அல்லற்பட்டு வருகின்றனர். சிலருக்கு இந்த வீடுகள் கிடைக்காமைக்கு, கொவிட் தொற்றும் அதன் விளைவான பொருளாதார மந்தமும் காரணமாகச் சொல்லப்பட்டது. எனவே, புதிய வீடமைப்புக் கருத்திட்டத்திலாவது தாங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என அம்மக்கள் கோரிவருகின்றனர்.
காணியற்ற குடும்பங்களும் வீட்டு வசதியும்
வீடமைப்பை வழங்குவது தொடர்பில், ஒருவர் சொந்தமாக வீட்டை அமைத்துக்கொள்ள வேண்டுமாயின், அவருக்குச் சொந்த நிலம் இருக்க வேண்டும். அவ்வாறான நிலத்தைக் கொண்டிராத ஒருவருக்கு, அரச காணிச் சட்டத்தின்கீழ் குடியிருப்பதற்கான நிலமொன்று வழங்கப்பட வேண்டும் என்ற ஏற்பாடு காணப்படுகிறது. நகர்ப்புறம் சார்ந்து 20 பேர்ச் காணியும், கிராமப்புறம் சார்ந்து ¼ ஏக்கர் காணியும் குடியிருப்புத் தேவைக்காக வழங்கப்படல் வேண்டும் என்ற சட்ட ஏற்பாடு காணப்பட்டாலும், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணிகளற்ற (Landless) குடும்பங்கள் இருந்தே வருகின்றன. வடக்கு மாகாணத்தில் 12,267 குடும்பங்கள் காணியற்றனவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இக்குடும்பங்களைச் சார்ந்து 41,936 அங்கத்தவர்கள் காணப்படுகின்றனர். இதனை மாவட்ட ரீதியாகக் காட்டும் அட்டவணை கீழே தரப்படுகிறது:
இல | மாவட்டம் | பிரதேச செயலர் பிரிவு | குடும்பங்கள் | மொத்த உறுப்பினர் |
01 | யாழ்ப்பாணம் | நெடுந்தீவு | 08 | 28 |
தீவகம் தெற்கு | 302 | 1057 | ||
தீவகம் வடக்கு | 243 | 851 | ||
காரைநகர் | 491 | 1544 | ||
நல்லூர் | 441 | 1544 | ||
வலிகாமம் மேற்கு | 495 | 1733 | ||
வலிகாமம் தெற்கு | 30 | 105 | ||
வலிகாமம் வடக்கு | 55 | 196 | ||
வலிகாமம் கிழக்கு | 1209 | 4232 | ||
தென்மராட்சி | 810 | 2835 | ||
வடமராட்சி தெற்கு | 675 | 2363 | ||
வடமராட்சி கிழக்கு | 61 | 214 | ||
4771 | 16,699 | |||
02 | கிளிநொச்சி | கரைச்சி | 1385 | 5545 |
கண்டாவளை | 1994 | 778 | ||
பூநகரி | 244 | 980 | ||
பச்சிலைப்பள்ளி | 200 | 820 | ||
2023 | 8123 | |||
03 | முல்லைத்தீவு | கரைத்துறைப்பற்று | 758 | 2168 |
புதுக்குடியிருப்பு | 255 | 638 | ||
ஒட்டிசுட்டான் | 252 | 685 | ||
துணுக்காய் | 391 | 994 | ||
மாந்தை கிழக்கு | 156 | 412 | ||
வெலி ஓயா | 101 | 244 | ||
1913 | 5141 | |||
04 | வவுனியா | வவுனியா | 2253 | 7173 |
வவுனியா தெற்கு | 108 | 432 | ||
வவுனியா வடக்கு | 260 | 920 | ||
வெங்கலச் செட்டிக்குளம் | 276 | 760 | ||
2897 | 9285 | |||
05 | மன்னார் | மன்னார் நகரம் | 20 | 120 |
நானாட்டான் | 108 | 670 | ||
முசலி | 140 | 543 | ||
மாந்தை கிழக்கு | 183 | 508 | ||
மடு | 206 | |||
657 | 2688 | |||
வடமாகாணம் | – | 12,267 | 41,936 |
மூலம் : Statistical Information (2024) – Northern Province
யாழ்ப்பாண மாவட்டத்திலேயே காணியற்ற குடும்பங்கள் அதிகம் காணப்படுகின்றன. அங்கு அரச காணிகள் மிகக் குறைவாகக் காணப்படுவதனாலும், அரச காணியுள்ள பகுதிகளை நோக்கி காணியற்ற குடும்பங்களைப் புலம்பெயர்ப்பதிலுமுள்ள சவால்கள் காரணமாகவும் இந்த நிலைமை காணப்பட்டு வருகிறது. அதேநேரம் ஏனைய நான்கு மாவட்டங்களை பொறுத்தவரை தாராளமாக அரச ஒதுக்கீட்டு நிலங்கள் காணப்படுவதுடன், வாழ்வாதாரத்துக்கு தேவையான நிலங்களை வழங்கக்கூடிய ஏனைய ஏற்பாடுகளும் காணப்படுவதனால், நிர்வாகிகள் இவர்களின் எண்ணிக்கையை முடிந்தவரை குறைப்புச் செய்வதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன. வாழ்விடத்துக்கான வீடுகளை அமைப்பதற்கு மட்டும் நிலத்தை வழங்குவதனூடாக வாழ்வாதார உறுதிப்பாட்டையோ உணவுப் பாதுகாப்பையோ உறுதி செய்துவிட முடியாது. வாழ்விடம் என்பது மகிழ்ச்சியாக அமைய வேண்டின் வாழ்வாதார தொழில் முயல்வுகள் இணைப்புச் செய்யப்படவேண்டும். உணவுப் பாதுகாப்பும் உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும். வாழ்வாதாரப் பயிர்ச்செய்கை, வீட்டுத் தோட்டம், பயன்தரு மரங்கள் என்பனவற்றை உண்டாக்கிக்கொள்ள ஒரு ஏக்கர் பரப்பளவு நிலம் சிபார்சு செய்யப்படுகிறது. எனவே, ஆகக் குறைந்தது அரை ஏக்கர் பரப்பளவிலாவது அரச காணிகள் வழங்கப்பட வேண்டும். வடக்கு – கிழக்கு மாகாணத்தில் காணப்படும் நிலவளத்தை அவதானிக்கும் போது அதன் உச்சப்பயன்பாடு என்பது எட்டப்படாத நிலையிலேயே உள்ளது. குடியேற்றத் திட்டங்களில் நிலங்கள் வழங்கப்பட்ட போது 5 ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரையும் நிலங்கள் தனிநபர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. அந்தக் காணிகளைப் பராமரிப்பதற்கு ஏற்படும் பராமரிப்பு மற்றும் பண்படுத்தல் செலவீனம் காரணமாக பகுதியளவான காணிகளே பயன்படுத்தப்படுகின்றன. மிகுதி தரிசாக விடப்பட்டிருப்பது, காணி உரிமையாளர் வேறு மாவட்டத்தில் வசித்துக்கொண்டு காணிகளைப் பராமரிக்காது விடுவது, செய்கையாளருக்கு வழங்கி குத்தகை பெற்றுக்கொள்வது போன்றன காரணமாக நிலத்தின் மெய்ப்பயன்பாடு அடையப்படாது உள்ளது. வளமான நீர் வழங்கும் பகுதிகளில் கூட, இந்த வினைத்திறனற்ற நடவடிக்கைகள் காரணமாக, நிலப்பயன்பாடு வீணடிக்கப்பட்டிருக்கின்றது.

வீட்டு வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் அரச கொள்கையானது நிலமற்றவரின் பிரச்சினையை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சானது 2009 ஆண்டுக்கு முன் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து சென்றவர்களை மட்டுமே உண்மையான இடம் பெயர்ந்தோர் (Original Displace People – ODP) எனக் கருதி அவர்களுக்கு மட்டுமே திட்டங்களை வழங்கி வருகிறது.
2010 ஆம் ஆண்டிலிருந்து கடந்த பதினைந்து ஆண்டுகளாக புதிய திருமணங்கள் மூலம் உருவாகிய குடும்பங்கள் (Extended Family) இதுவரை வீட்டு திட்டங்களின் கீழ் உள்வாங்கப்படவில்லை என்பதனால், வீட்டுத் தேவையுடைய, உறுப்பினர் தொகை அதிகரிக்கக் கூடிய இயலுமையுடைய அக்குடும்பங்கள் வீடுகளைப் பெற முடியாது, குடிசைகளில் வசித்து வருகின்றன. அங்கத்தவர்கள் குறைவடையும் நிலையிலுள்ள இடம்பெயர்ந்தோர் குடும்பங்கள், வீடுகளைப் பெறுவதும், பின்னர் பயன்படுத்தாது அதனைக் கைவிடுவதும், இம்முறைமையின் தவறினால் இடம்பெற்று வருகிறது. விஸ்தரிக்கப்பட்ட குடும்பங்கள், தவறான தகவல்களையும் உத்திகளையும் பாவித்தே, வீடுகளில் வசிக்க வேண்டியிருக்கிறது.
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வீட்டு வசதித்துறையின் அபிவிருத்திக்காக, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மூலம் வழங்கப்படும் கடன் தொகையானது, ஒரு வீட்டை முழுமைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கவில்லை. பகுதியளவிலான திருத்தங்களை மேற்கொள்பவர்களுக்கே இந்நிதிக்கடன் உதவியாக இருந்து வருகிறது. இவ்வகையில், வீட்டு வசதிகள் தொடர்பில், இவ்விரு மாகாணங்களிலும், இன்னமும் முழுமை செய்யப்பட வேண்டிய இடைவெளிகள் தெளிவாகவே இருந்து வருகின்றன.