தமிழில் : த. சிவதாசன்
இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் ‘சுற்றுலாத் தளங்கள்’ என்ற வரைபடத்தின் படி, வடமாகாணத்தில் இருக்கக்கூடிய ஒரே ஒரு சுற்றுலாக் கவர்ச்சியாக யாழ். விமான நிலையம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. இவ்வரைபடம் யாழ். விமான நிலையத்தையாவது காட்டுகிறதே என நாம் பூரிப்படைய வேண்டும். விமான நிலையத்தைத் தவிர வடமாகாணத்தின் அனைத்துப் பகுதிகளுமே வறண்ட பிரயோசனமற்ற பிரதேசங்களெனவே இப்படம் காட்டுகிறது. வடக்கில் தங்கியிருக்கும் சுற்றுலாவாசிகள் பார்ப்பதற்கு எதுவுமே இல்லையென்பதால் விரைவில் வெளியேறுவதற்கு உதவி செய்வதற்காக விமான நிலையத்தை மட்டும் இச்சபை அப்படத்தில் காட்டியிருக்கலாம். வடக்கு ஒரு கைவிடப்பட்ட பிரதேசம் எனக் காட்டப்பட்டதை தவறென ஊகிக்கும் அதேவேளை அதனைச் சரியெனவும் எடுத்துக்கொள்ள முடியும். வட மாகாணத்தில் ரசிக்கக்கூடிய இடங்களை விட பயணம் செய்ய வேண்டிய தூரங்கள் அதிகம் என்பதும் ஒரு நியாயமான விடயம் தான்.
இங்கு வரும் பல நண்பர்களுடன் நான் பல தடவைகள் நயினாதீவுக்குச் சென்றிருக்கிறேன். அதற்குப் போகும் பாதைகளும் கடந்து செல்லும் தீவுகளும் குறிகாட்டுவான் துறைமுகமும், நயினாதீவுக் கோவிலை விடவும் கண்களை ஈர்ப்பவை. கடலைக் கடப்பதற்கு முன் போகும் பாதையில் காணக்கூடிய ரம்மியமான காட்சிகள், பறவைகள் ஆகியவற்றுக்காக மட்டுமே இப்பயணம் பலன் தருவதாக இருக்கும். யாழ்ப்பாணத்திலிருந்து துறைமுகத்திற்கு போக எடுக்கும் வாகனப் பயணத்திற்கு மட்டுமே சுமார் ஒரு மணித்தியாலம் எடுக்கிறது. கடற் பயணம் பெரிதென்றில்லை. புல் வெட்டும் இயந்திரம் போலொரு இயந்திரமொன்றினால் இயக்கப்படும் ஒரு பழைய படகில் 50 சக பயணிகளுடன் நெரிந்து நெகிழ்ந்து போய்த் திரும்புவது என்பது அனுபவித்துணர வேண்டிய ஒரு விடயம் தான்.
யாழ்ப்பாண நகரில் நான் வதியுமிடத்திலிருந்து பூநகரிக்கோ அல்லது இயக்கச்சிக்கோ அல்லது கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கோ வாகனத்தில் பயணம் செய்வதுகூட ஒரு சிறந்த அனுபவமே. நகரம், கிராமம், வயல் வெளிகள், குளம், கடற்கரை, தென்னை – பனஞ் சோலைகள் என மாறிவரும் நிலப்பரப்புகளை அனுபவித்துப் பயணம் செய்வது விபரிக்க முடியாதது. தளத்திற்குத் தளம் தாவும் ஒரு சுற்றுலாவாசிக்கு இப்பயணங்கள் பெரும் பலன்களைத தர முடியாதவையாக இருக்கலாம். ஆனால் எனக்கு எத்துணை தூரமான சுற்றுலாத் தளங்களுக்கும் மேற்கொள்ளும் இந்நீண்ட பயணங்கள் ரசிக்கக் கூடியவையாகவே இருக்கின்றன. இடையில் ருசியான உணவை வழங்கக்கூடிய உணவகங்களையோ அல்லது ருசியான கள்ளைப் பெறக்கூடிய இடங்களையோ வைத்திருக்கும் நண்பர்களை எனக்குத் தெரியும். ஆனால் நான் இடத்திற்கிடம் செல்லும் ஒரு சுற்றுலாவாசியாக இருந்திருப்பின் தெருவோரப் பெட்டிக் கடையொன்றில் வடை, தேநீருடன் தான் சமாளிக்க வேண்டி ஏற்பட்டிருக்கும். இப்படியான பெருஞ் செல்வங்களை நாம்தான் அறிந்து மதித்துப் போற்றவேண்டும்.
நல்லூர் கோவிலுக்கு அருகாமையில் துருப்பிடித்த திறந்த வாசற் கதவுகளுடன் பாழடைந்த கட்டிடமொன்றிருக்கிறது. ‘சங்கிலி அரசனின் மந்திரி மனை’ என அழைக்கப்படும் இவ்விடம் இப்போது தெரு நாய்களின் தங்குமிடமாக இருக்கிறது. ஓரளவு பரந்த நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இவ்விடத்தில் நல்லதொரு உணவகத்தையோ அல்லது வரலாற்றைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளையோ, அருங்காட்சியகத்தையோ அல்லது நாடக மேடையையோ நிறுவலாம். துர்ப்பாக்கியவசமாக, உங்களோடு வருபவர்களைத் தவிர வேறெந்த மனிதர்களையும் இவ்விடத்தில் பார்க்க முடியாது. அதன் புராதன சுவர்களில் காதல் இலக்கியங்களும் பாதுகாப்பின்மையின் அடையாளங்களுமே காட்சிப் பொருள்களாக இருக்கின்றன.
பிரமிக்க வைக்கும் யாழ்ப்பாணக் கோட்டையில் நினைவுப் பண்டங்களை விற்கும் ஒரு கடை மட்டும், அதுவும் வெறும் தட்டுகளோடு தூங்கிக் கொண்டிருக்கிறது. இங்கும் யாழ்ப்பாணத்தை அடையாளப்படுத்தும் பண்டங்களை விட தென்னிலங்கையின் நினைவுப் பொருட்களே அதிகம் காணப்படுகின்றன. பசியென்று வந்தால் இக்கோட்டைக்குள் உங்களால் எதுவித சிற்றுண்டியையும் வாங்கிக்கொள்ள முடியாது. அவற்றை நீங்களே உங்கள் பைகளில் கொண்டுவர வேண்டும். வாகனத் தரிப்பிடத்தில் நிற்கும் ஐஸ் கிரீம் வண்டியில் ஏதாவது வாங்கி அருந்த முடியாவிட்டால் உங்கள் அடுத்த இடம் வாடி வீடுதான்.
முல்லைத்தீவு, பருத்தித்துறை, காரைநகர், வேலணை ஆகிய அழகிய கடற்கரைகளில் நான் நடந்திருக்கிறேன். இங்கு வருமானத்திற்காக மீன் பிடிப்பவர்களைத் தவிர வேறெவரையும் நான் கண்டதில்லை. வேலணைத் தீவிலுள்ள சாட்டி கடற்கரையில் சில பெட்டிக் கடைகளில் சோடா போன்ற பானங்களையும் பிஸ்கட்களையும் விற்கிறார்கள். ஆனால் அங்கு வாங்குவதற்கென செல்பவர்கள் எவருமில்லை. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடுத்தர ஓட்டல் ஒன்று சாட்டியில் தனது கிளையொன்றை நிறுவியிருக்கிறது. ஆனால் பல சுவையான உணவுகளைத் தயாரிக்குமளவுக்கு அங்கு விருந்தினர்கள் வருவது குறைவு. அவ்வப்போது நான் எனது நண்பர்களுடன் இங்கு போவதுண்டு. அப்போதெல்லாம் நான் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பாகவே எனது வரவை அறிவித்து விடுவதனால் யாழ்ப்பாணப் பிரதான உணவகத்திலிருந்து தயாரிக்கப்பட்ட உணவை வாகனம் மூலம் சாட்டிக்கு கொண்டுவந்து பரிமாறுகிறார்கள்.
இங்கிருக்கும் ஆயிரமாயிரம் ஏக்கர்கள் திறந்தவெளி நிலங்களுக்கும், ஆயிரமாயிரம் சதுர அடிகள் புராதன, கலாசார நினைவுச் சின்னங்களுக்கும் அப்பால் ஒரு சதுர மீற்றர் குளியல் துவாய் (Beach Towel) ஈட்டிக் கொடுக்கவல்ல வருமானம் அபாரமானது. வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் சூரியனில் குளித்து விலையுயர்ந்த பானங்களையும் சிற்றுண்டிகளையும் வாங்குவதால் ஈட்டும் வருமானத்தை தெற்குவாசிகள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். பணக்கார வெளிநாட்டு வெள்ளைக்காரர் தம்மை நிறம் குறைப்பதற்காய் கடற்கரையில் புரண்டு, வெயிலில் குளித்து, சோம்பல் முறிப்பதை வணிகப்படுத்தும் சந்தர்ப்பங்களைவிட வேறு சிலவும் உண்டு. சுற்றுலாவாசிகள் படங்களை எடுப்பதற்காகவோ அல்லது வெயில் குளிப்பதற்காகவோ இடத்துக்கிடம் செல்வதில்லை. அவர்கள் உண்பதற்காகவும், குடிப்பதற்காவும், பண்டங்களை வாங்குவதற்காகவும் பலவிடங்களுக்கும் சென்று பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்கிறார்கள்.
2015 பிற்பகுதியில் நான் யாழ்ப்பாணத்திற்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்தபோது நல்ல உணவை உண்பதற்காய் சிறந்த உணவகங்களைத் தேடுவதில் பல மணித்தியாலங்களைச் செலவு செய்வேன். ‘அசல் யாழ்ப்பாணத் தமிழனாக’ இருந்தும் என்னால் தமிழையோ அல்லது சிங்களத்தையோ பேச முடியாதிருப்பது குறித்து எனக்கு வெட்கமாக இருப்பது உண்மையே. மொழிப்புலமை இல்லாமையால் நான் யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியிலுள்ள ஒரு சைவ உணவகத்தில் வேகாத வெங்காயத் தோசையை உண்ண வேண்டி ஏற்பட்டது. நான் கேட்டது பரிமாறுபவருக்கு விளங்கவில்லை. எனது ஏமாற்றத்தைப் பரிசாரகருக்குத் தெளிவுபடுத்த என்னால் முடியாதிருந்தது. பேசாமல் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினேன். மிகவும் சிறந்ததெனப் பரிந்துரைக்கப்பட்ட இந்த உணவகத்தில் உணவருந்தியது அதுவே முதலும் கடைசியுமாகும்.
நினைவுப் பொருட்களையோ (Souvenirs) அல்லது பரிசுகளையோ இங்கு வாங்குவது சிரமம். யாழ்ப்பாணத்தில் இரண்டு வருடங்களுக்கு மேலாக வாழ்ந்தும் கூட நான் கொழும்புக்கோ அல்லது இலண்டனுக்கோ போகும்போது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசுப் பொருட்களை வாங்கிச் செல்வதற்குகந்த நல்ல கடைகள் யாழ்ப்பாணத்தில் கிடையாது. அப்படியிருக்கும் போது நண்பர்களும் விருந்தினர்களும் இங்கு வரும்போது பரிசுப் பொருட்களை வாங்குவதற்கென நான் எப்படியான கடைகளைப் பரிந்துரைக்க முடியும்? அவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நான் அதிகம் அக்கறை காட்டவில்லை எனக் கூறுபவர்களுக்கு நான் கூறக்கூடியது பரிசுப் பொருட்களையும் நினைவுப் பொருட்களையும் வாங்குவதற்கனெப் பணத்துடன் அலையும் சுற்றுலாவாசிகளுக்கு உதவுவதற்கென வடக்கில் ஒரு சுற்றுலா வழிகாட்டி என்பது அவசியமான ஒன்று. ஒரு விடயத்தை அறிவதற்காக நான் எவ்வளவு தூரம் நடக்கிறேன் என்பது என்னை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். தமிழ் தெரியாமைக்காக வேண்டுமானால் என்னைக் குற்றஞ் சாட்டலாம். ஆனால் ஒரு சுற்றுலாவாசிக்கு அது பொருந்தாது. ஒரு வியாபாரியுடன் தொடர்பாடலை மேற்கொள்ள முடியாமையாலோ அல்லது ஒரு வியாபாரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதனாலோ எனது ஆயிரமாயிரம் ரூபாய்கள் செலவழிக்காமலே விடப்படுகின்றன. அதே போல வடக்கின் பல பண்டங்களையும், சேவைகளையும் வாங்க முடியாமல் உல்லாசப் பயணிகளின் பைகளிலும் பல மில்லியன் ரூபாய்கள் செலவாகாமல் தங்கிவிட நேரிடுகிறது. பல தசாப்த காலப் போர் ஆங்கில மொழி உட்பட, வடக்கின் பல சொத்துகளையும் திருடிவிட்டது.
2017 இல் ஒரு தடவை எனது மாலை நடையொன்றின் போது தெருநாய் ஒன்று என்னைக் கடித்துவிட்டது. இதானால் ‘றேபீஸ்’ நோய் தொற்றிவிடக் கூடுமோ என்ற அச்சத்தில் நான் மருத்துவமனைக்குச் சென்றேன். 2 வருடங்களுக்கு மேலான என் யாழ்ப்பாண வாழ்வில் நான் பல சந்துகளிலும் சிற்றொழுங்கைகளிலும் மாலை வேளைகளில் நடந்திருக்கிறேன். போரின் இடிபாடுகள், சிதைந்த கட்டிடங்கள் ஆங்காங்கே இருப்பினும் அவை யாழ்ப்பாணத்தின் அழகைக் குறைக்கவில்லை. ஏராளமான தெருநாய்களின் உறைவிடமாக இச் சந்துகள் இருப்பினும் ஒரே ஒரு தடவை தான் நான் நாய்க்கடிக்கு உள்ளாகினேன் என்பது யாழ்ப்பாணத்திற்குப் பெருமை சேர்ப்பது.
மருத்துவமனையில் வரவேற்பு மேசை போன்றதொரு மேசையில் இருந்தவருக்கு நான் கூறுவது என்னவென்றே புரியவில்லை அதனால் என்னை என் பாட்டிலேயே போக விட்டார். வேறு பல நோயாளிகள் வரவேற்பறையில் காத்திருக்கும்போது என்னை என் பாட்டில் போகவிட்டது நல்லதாகப் போய்விட்டது. அங்கிருந்த நோயாளிகள் சிலரின் உதவியுடன் நான் உள்ளே சென்றபோது அங்கிருந்த பணியாளர்கள் நல்ல ஆங்கிலத்தில் பேசினர். எனது கையில் ஏற்பட்ட காயத்தைப் பரிசோதித்துவிட்டு போடப்போகும் ஊசியின் விளைவுகளைப் பற்றி விளங்கப்படுத்தி, ஊசியையும் போட்டு காயத்துக்கு மருந்தையும் கட்டி விட்டார்கள். அவர்களது பணி மிகவும் சிறப்பாக இருந்தது. மருத்துவமனையின் சேவைகள் பற்றிக் குறை கூறுபவர்களும் பலர் உள்ளனர். “ஒளியை ஏற்றாமல் இருளைத் திட்டுபவர்களென” அவர்களை நான் கூறுவேன். இந்தியா, சீனா போன்ற நாடுகளின் உதவியுடன் நல்ல தெருக்களையும் ரயில்வே பாதைகளையும் அரசாங்கம் வடக்கிற்கு அமைத்துத் தந்திருக்கிறது. அரசாங்கம் இன்னும் பல காரியங்களைச் செய்ய வேண்டுமென்றாலும் அவற்றைச் செய்வதற்கான அவசரம் அதனிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
வடக்கிலோ அல்லது தெற்கிலுள்ள வறுமைப்பட்ட பிரதேசங்களிலோ முதலீடு செய்வது அரசாங்கத்தின் முன்னணித் திட்டங்களில் ஒன்றல்ல. இலங்கை மத்திய வங்கியின் ஆளுனரான இந்திரஜித் குமாரசாமி ஏப்ரல் 2018 இல் இப்படிக் கூறியிருந்தார்: “வறுமைக் கோட்டை (ஒரு நாள் வருமானம்) அமெரிக்க டொலர் $2.50 இற்கு (ரூ.400 இற்கும் குறைவு) அதிகரித்தால், இலங்கையின் சனத்தொகையின் கால்வாசிப்பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே போய்விடுவதோடு, அவர்களது வருமானம் நாளொன்றிற்கு $1.30 இற்கு சற்று மேல்தான் இருக்கும்”. தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் அனைத்தினதும் பொருளாதாரத் தோல்விகள் பெரும்பாலும் பாரபட்சமற்றவை. வடக்கின் பொருளாதார மந்த நிலை தொடர்வதற்கு நாம், தமிழர்கள் தான் பொறுப்பாளிகள். வடக்கின் மாகாண சபையும் தனியார் துறையும் இணைந்தே இதை நிவர்த்தி செய்ய வேண்டும். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான தொழில் முனைவர்கள் ஆடம்பரமானது முதல் மலிவானது வரையிலான ஓட்டல்களில் முதலீடு செய்திருந்தாலும் அது போதாது.
செழிப்பான சுற்றுலாத் துறை ஒன்றை உருவாக்குவதற்கு படுக்கைகளும் குளியலறைகளும் மட்டும் போதாது; செய்வதற்கெனப் பல விடயங்களும், பார்ப்பதற்குப் பலவிடங்களும், சாப்பிடுவதற்கும் குடிப்பதற்குமெனப் பலதரப்பட்ட இடங்களும், ஓய்வெடுக்கவும் பண்டங்களை வாங்கவுமெனப் பலவிடங்களும் சுற்றுலாத் துறைக்கு அவசியமானவை. கொழும்பிலுள்ள உணவகங்களிலும் கேளிக்கை விடுதிகளிலும், சுற்றுலாவாசிகளை விட உள்ளூர்வாசிகளே நிரம்பி வழிகிறார்கள். அங்குள்ள விளையாட்டரங்கங்களையும், தியேட்டர்களையும், குளியல் வசதிகளையும், வணிக வளாகங்களையும் உள்ளூர்வாசிகளே அதிகம் பயன்படுத்துகிறார்கள். வடக்கிற்கும் ஒரு செழிப்பான பொழுதுபோக்குத் துறை அவசியம்; அது உல்லாசப் பயணிகளுக்கு மட்டுமென்பதில்லை. போர் முடிந்ததிலிருந்து வடக்கில் உற்பத்தி மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்கள் தமது பிரசன்னத்தைக் கட்டியெழுப்பத் தவறிவிட்டன. கணனி மென்பொருள் துறையில் பல வருட அனுபவங்களைப் பெற்ற நல்ல ஊதியம் பெறும் வல்லுநர்களுக்கு எப்படியான பொழுதுபோக்கு அம்சங்கள் தேவை என்பது பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். பொழுதுபோக்கற்ற மனைவி, பிள்ளைகளின் எதிர்ப்பையும் தாண்டி படாடோபமான கொழும்பு நகரை விட்டு சிக்கனமான யாழ்ப்பாணத்திற்கு வருவதற்காக சிலர் தமது பெரிய பதவிகளையும் துறக்கத் தயாராகவிருக்கிறார்கள். வெறுமனே சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்ப்பதை விட்டுவிட்டு, பல பொழுதுபோக்கு அம்சங்களை வடக்கில் ஆரம்பித்தால் மட்டுமே உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், கட்டுமானம், பொறியியலாளர்கள் போன்ற உயர் பதவிகளைத் தரும் நிறுவனங்கள் வடக்கிற்கு வரும்.
அவ்வாறெனில், என்னதான் செய்யப்பட வேண்டும்? நான் சுற்றுலாத்துறை நிபுணன் இல்லை. பலவிதமான வசதிகள், வாய்ப்புகள், திறமைகள் இருந்தும் நிபுணர்கள், ஆலோசகர்கள், அமைச்சுகள் ஆகியோர் வடக்கிற்கு அனுப்பிய சுற்றுலாவசிகள் மிகச் சிலரே. இவ்விடயத்தில் அறிவோ அனுபவமோ இல்லாதிருந்தும் கூட இவர்களை விட நான் அதிகம் தீங்கைச் செய்துவிடப் போவதில்லை. எனவே இதுதான் எனது ஆலோசனை: பலாலி விமான நிலையத்தையும், காங்கேசந்துறை துறைமுகத்தையும் வெளிநாட்டாரின் நேரடிப் பயணத்திற்கெனத் திறந்து விடுவது (வடக்கின் உற்பத்திகளை நேரடியாக ஏற்றுமதி செய்ய இது உதவும் என்பது வேறு). இந்திய நிதி மற்றும் இதர உதவிகள் மற்றும் ஊக்குவிப்பைப் பெற்ற பின்னரும் இலங்கை அரசு இவ்விடயத்தில் பின்னடிக்கிறது. எனவே இதை எதிர்பார்த்து நாம் பொறுத்திருக்கத் தேவையில்லை. துணிகரமான சில முன்னோடிகள் தமது திறமைகளில் மட்டும் நம்பிக்கை வைத்து சுயாதீனமான தொழில்களை ஆரம்பித்திருக்கின்றனர்; ஜெற்விங்ஸ், திண்ணை, ரில்கோ, வலம்புரி, கிறீன் கிராஸ் ஆகிய ஓட்டல்கள் இவற்றில் சில. தமது நிதியையும், திறமைகளையும் நம்பிக்கையோடு கொண்டுவரக் கூடிய மேலும் பல முன்னோடிகள் நமக்குத் தேவை. உணவகங்கள், விளையாட்டுத் துறை, தியேட்டர்கள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், உள்ளூர் பண்பாடு மற்றும் வரலாற்றைப் பிரதிபலிக்கும் இடங்கள் எனப் பலவகையான மத்திய மற்றும் உயர்தர தொழில் முயற்சிகளைக் கொண்டுவரக் கூடிய முன்னோடிகள் நமக்குத் தேவை. ஆங்கிலம், சிங்களம், சீனம், ஜேர்மன் போன்ற சுற்றுலாவாசிகளின் மொழிகளைப் பேசக்கூடிய பணியாளர்களைக் கொண்டதாக இத்தொழில் முனைப்புகள் இருக்க வேண்டும். வெளிநாட்டார் தமது மொழிகளில் ‘நயினாதீவுக்குப் போவது எப்படி?’, ‘உறைப்பு அதிகமில்லாத கடலுணவு வேண்டும்’ எனச் சாட்டி கடற்கரையில் கேட்கும் போது அவர்களுக்கு பண்டங்களை நாம் விற்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
இவ்வருட ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள சர்வதேச குடிபெயர்வு அமைப்பு அலுவலகத்திற்கு நான் சென்றபோது பாரிஸ், சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து மீண்டு வரும் நூற்றுக்கணக்கான அகதிகள் சிறந்த மொழிப் புலமைகளுடன் வருகிறர்கள் என அங்குள்ளவர்கள் கூறினார்கள். யாழ்ப்பாணத்திலுள்ள சக – அழுத்தம் (Peer-Pressure) காரணமாக பொழுதுபோக்குத் துறைகளில் அவர்கள் பணிபுரிய மறுப்புத் தெரிவித்தாலும், அதிக வேதனமும் வேலை வாய்ப்புகளும் அவர்களைச் சம்மதிக்க வைக்கலாம். பொழுதுபோக்கு விரும்பிகளுக்கு விருந்தளிக்கும் போதுமானளவு நடவடிக்கைகள் இருப்பின் அவை இதர தோழமை தொழில் முனைப்புகளையும் கூடவே ஈர்க்கும் என்ற நம்பிக்கையில் முன்னோடிகள் களத்தில் இறங்க வேண்டும். இந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்வது மிகவும் தாமதமான இலாப மீட்டலாகவோ அல்லது விரைவாக நட்டமடையும் செயற்பாடுகளாகவோ இருக்கலாம். எனவே இம் முன்னோடிகள் போதுமான அளவு முதலீட்டு நிதியைக் கொண்டிருக்க வேண்டும்.
சுற்றுலாவாசிகளும், தொழில் வல்லுநர்களும், புலம்பெயர் தமிழர்களும் ஏன் வடக்கிற்கு வரவேண்டும் என்பதைக் கூறி நான் இக் கட்டுரையை முடிக்கிறேன். வடக்கு ஒரு அபாயகரமான பிரதேசம் என்ற ஒரு கருத்து இப்போதும் நிலவுகிறது. இரண்டு வருடங்களுக்கு மேல் யாழ்ப்பாணத்தில் வதியும் என் அநுபவங்களைக் கொண்டும், இலங்கை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரங்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வத் தரவுகளின் படியும் கொள்ளை, கடத்தல், கொலை ஆகிய குற்றங்கள் தொடர்பாக மிகவும் பாதுகாப்பான பிரதேசங்களில் வடக்கும் ஒன்று எனக் கூற முடியும். பொலிசார் மீது மக்களின் நம்பிக்கையீனத்தால் முறைப்பாடு செய்யப்படும் குற்றங்களின் எண்ணிக்கை வடக்கில் குறைவு எனச் சிலர் கூறலாம். அதேவேளை போதை வஸ்துகள் தேசிய கட்டுப்பாட்டுச் சபையின் அறிக்கையின் பிரகாரம், சனத்தொகை வீதத்தின்படி, போதை வஸ்துக் கைதுகளின் எண்ணிக்கை, இதர மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கில் குறைவு என்பது மேற்கூறிய கருத்துக்கு வலுச் சேர்க்கிறது. வடக்கிலுள்ள போதை வஸ்துக் கடத்தல்காரர் மீது பொலிசார் மெத்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்பதால் இக் குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பதில்லை. சாட்சியமளிக்க எத்தனை பேர் முன் வருகிறார்களோ அத்தனை விரைவில் வடக்கும் சாதாரண நிலைக்கு வரும். வடக்கில் வாழ்ந்து, படித்துப் பணிசெய்வது பாக்கியம் என்பதை உணர்ந்து மக்கள் நம்பிக்கையுடன் இங்கு வரவேண்டும். பல தசாப்தங்கள் நடைபெற்ற போரினாலும் தொடர்ந்த புறக்கணிப்பினாலும் வடக்கு இழந்த பொருளாதார, சமூக கட்டுமானங்களை மீள உருவாக்க இது ஒன்றேதான் வழி.
இக்கட்டுரை ஜூன் 28, 2018 அன்று வெளியான லங்கா பிஸினஸ் ஒன்லைன் பதிப்பில் பிரசுரமானது.