தமிழில்: த. சிவதாசன்
எனது வீட்டிலிருந்து யாழ்ப்பாண நகரம் நோக்கி நான் போகும்போதெல்லாம் அரசடி/ பலாலி வீதிகளின் சந்தியில் இருக்கும் SLITT வடக்குப் பல்கலைக்கழகத்தின் (SLIIT Northern Uni – NU) கட்டடத்தைக் கடந்து போவதுண்டு. சென்ற வருடம் (2023), இக்கட்டடத்திற்கான அத்திவாரம் இடப்பட்டதிலிருந்து, தூண்கள் நிறுவப்பட்டு, கண்ணாடி யன்னல்கள் பொருத்தப்படுவது என அதன் உருவாக்கத்தை மிகவும் ஆர்வமாக அவதானித்து வந்தவன். எதிர்காலக் கனவுகளைச் சுமந்துகொண்டு நம்பிக்கையோடு வந்து போகும் இளைய தலைமுறையினர் ஊடாடும் இடமாக இக்கட்டடம் பிரமிக்கத்தக்க வகையில் இப்போது எழுந்து நிற்பது மகிழ்வைத் தருகிறது. இயல்பாகவும், நிதானத்துடனும், மகிழ்ச்சியாகவும் ஊடாடும் இளங்கலை மாணவர்கள் உலகின் எந்தவொரு நாட்டிலுமுள்ள பல்கலைக்கழகத்திற்கும் சென்றிருக்க முடியும். ஆனால் அவர்கள் இந்த புராதனமான யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும், துலங்கும் புதிய கட்டடத்தில் ஒளிரவே விரும்பியிருக்கிறார்கள். யாழ். பல்கலைக்கழகம் உட்பட மதிப்புள்ள பல மூன்றாம் நிலைக்கல்வி நிலையங்கள் (டிப்ளோமா, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலைகள்) யாழ்ப்பாணத்தில் இருக்கின்றன. கனடாவைச் சேர்ந்த முதலீட்டாளரும் தமிழருமான இந்திரகுமார் (இந்தி) பத்மநாதன், இலங்கை SLIIT நிறுவனத்துடன் இணைந்து, வடக்குப் பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளார் (Northern Uni – NU). எனக்குத் தெரிந்த வரையில், யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக நிறுவப்பட்ட தனியார் பல்கலைக்கழகம் இதுவெனவே நான் கூறுவேன். பல ஏக்கர்கள் நிலத்தில் அவர்கள் நிறுவவிருக்கும் பல வளாகங்களிற்கான ஆரம்பமே இது.

இக்கட்டடத்தை நான் அடிக்கடி கடந்து போயிருந்துங்கூட, பீடாதிபதியின் பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ளும்படி அழைக்கப்படும்வரை, ஒரு நாளாவது உள்ளே எட்டிப் பார்த்திருக்கவில்லை. கலிஃபோர்னியா சிலிக்கன் பள்ளத்தாக்கில் தனது தொழிலை ஸ்தாபித்துக்கொண்டவரும், கனடாவைச் சேர்ந்தவரும், எனது நண்பருமான ராஜன் பாலா இந்நிகழ்விற்கு என்னை அழைத்திருந்தார். 40களில் உலவும் ராஜன் 4-5 வருடங்களை ‘வடக்கிற்குத்’ தானம் செய்யத் தீர்மானித்திருப்பவர். புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது பணத்தையும், முதலீடுகளையும் மட்டும்தான் நம் நாட்டிற்குத் தானம் செய்பவர்கள் என்றில்லை. தமது சொந்தநேரம், திறன்வளம், முக்கியமாகத் தமது தொடர்புகள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும் முதலீட்டாளர்களையும் வாடிக்கையாளர்களையும் பெற்றுக்கொடுக்க இவர்கள் ஏதுவாக இருக்கிறார்கள். தனது வடஅமெரிக்க வலையமைப்பின் மூலம் ராஜன் பல செயற்திட்டங்களை யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பெற்றுத்தந்திருக்கிறார். கனடிய தமிழரான ‘இந்தி’, வடக்குப் பல்கலைக்கழகத்திற்குத் தனது மூலதனத்தையும் பட்டறிவையும் கொண்டுவருகிறார். இங்குதான் புலம்பெயர் தமிழர்களின் உண்மையான திறமையையும் வலுவையும் காணக்கூடியதாக இருக்கிறது. இருந்தும் வடமாகாணத்தில் திறமையும், வலுவும் போதாமலே இருக்கின்றன.

கட்டடத்தின் வெளிப்புறப் பிரமாண்டத்தைவிட அதன் உட்புறமும் அங்கு காணக்கூடிய மனிதநடமாட்டமும் மேலும் பிரமிப்பைத் தருகின்றன. பிரமாண்டமான கண்ணாடிக் கட்டடத்தை எழுப்புவதற்குப் பணம் தேவை; நிலம் தேவை; கட்டடக் கலைஞருக்கு கட்டணம் செலுத்த வேண்டும்; ஒப்பந்தக்காரரைத் தேடவேண்டும். ஒரு பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்கு இதைவிட இன்னும் அதிகம் பணம் வேண்டும்.
ஒரு இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அங்குள்ள கழிப்பறைகளைப் பார்க்கவேண்டும் என்று என் தாயார் தனது மூன்று பிள்ளைகளுக்கும் அறிவுறுத்துவார். எங்களை இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகங்களில் தங்கிப் படிக்கவைப்பதற்கு முன், அவற்றையெல்லாம் எமது தாயார் தனது கண்களாலும் நாசியினாலும் முறையாகப் பரிசீலித்து விடுவார் (எவற்றையும் அவர் தொட்டுப் பார்ப்பதில்லை). அதிர்ஷ்டவசமாக, பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக, மத்தியகாலத்து ஆங்கிலேயப் பிரபுக்களால் கட்டப்பட்ட மதிப்பிற்குரிய கல்லூரிகள் எமது அன்னையாரின் சோதனைகளில் சித்திபெற்றுவிட்டன. எனது தாயாரை முன்னுதாரணமாக வைத்து வடக்குப் பல்கலைக்கழகத்தின் கழிப்பறைகளையும் நான் பார்த்தேன். அவை அனைத்தும் பரிசுத்தத்தின் அடையாளங்களாக இருந்தன. தீயணைப்புக் கருவிகளும் எச்சரிக்கை மணிகளும் கட்டடமெங்கும் பொருத்தப்பட்டிருந்தமையும், பொதுவிடங்கள் துப்புரவாக இருந்தமையும் ஆச்சரியமாக இருந்தது. வகுப்பறைகள் மிகவும் அமைதியான ஒழுங்கைப் பின்பற்றியிருந்தன. எனது வரவு மாணவர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படாத ஒன்றாக இருந்தமை இங்கு குறிப்பிடப்படவேண்டியது.
இந்திரகுமார் பத்மநாதனின் தொலைநோக்கு இலக்கின் சாத்தியமே வடக்குப் பல்கலைக்கழகம். யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்த இந்தி தனது மூன்று சகோதரர்களுடன் 1983ஆம் ஆண்டுப் போரின் ஆரம்பத்தில் புலம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களுடன் கனடாவுக்குச் சென்றவர். தொழில்முனைப்புகளை, தேவைக்காகவும் சூழல் காரணமாகவும் அல்லாது, விருப்பத் தேர்வாகக் கொண்டவர்களே உண்மையான தொழில்முனைவோராவர். நிர்வாக, நிபுணத்துவ வேலைகளை மட்டுமே தேடிப்போகும் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் வெகு அருமையாகக் காணப்படுவது இக்குணாதிசயம். இந்தி ஒரு உண்மையான தொழில்முகவர். ‘மஜிக்வூட்ஸ்’ (Magic Woods) என்னும் பெயரில் கனடாவில் ஒரு வெற்றிகரமான தளபாட உற்பத்தி நிலையத்தை நடத்திவருபவர். வடஅமெரிக்காவிலுள்ள பிரபல தளபாட விற்பனை நிறுவனங்களான ‘ஹோம் டிப்போ’ (Home Depot), ‘மேனார்ட்ஸ்’ (Menards), ‘லோவ்ஸ்’ (Lowes) போன்றவற்றிற்கு சமையலறை மற்றும் கழிப்பறைத் தளபாடங்களை விநியோகிக்கிறது ரொறொண்டோவைத் தளமாகக்கொண்ட ‘மஜிக்வூட்ஸ்’. ‘மஜிக்வூட்ஸ்’ இப்போது அமெரிக்கா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல உலகநாடுகளிலும் தமது உற்பத்தி ஆலைகளைத் ஸ்தாபித்துள்ளது.
வடமாகாணத்தில் தனது முதலீடுகளையும் திறமைகளையும் வழங்குவதன் மூலம் தாய்மண்ணிற்கான தனது கடனைத் திருப்பியளிக்க வேண்டுமென்பதே இந்தியின் இலக்கு. இது இலங்கைக்கும் பலன்தரும். இலங்கையில் அதிகம் பேசப்படும் குறைபாடுகளில் ஒன்று கல்வியின் போதாமை. இடப்போதாமை காரணமாக, ஏற்கெனவே இயங்கும் மூன்றாம் நிலைக்கல்வி (பாடசாலைக் கல்வி நெறிகளுக்கப்பால்) நிறுவனங்களால் போதியளவு தகமைசார் மாணவர்களை உள்ளீர்க்க முடியாமல் இருக்கிறது. சமகால உலகின் காலத் தேவைகளை அனுசரித்துப் போவதில் தயக்கம் காட்டும் கல்வித்திட்டதினால் பொருளாதார மேம்பாட்டுக்கான தேவைகளையோ அல்லது மாணவர்களது எதிர்காலத் தேவைகளையோ பூர்த்தி செய்யவல்ல கற்கைநெறிகளை முன்வைக்க முடியாமலிருக்கிறது. உணவைச் சமிபாடடையவிடாது மீட்டெடுக்கும் நடைமுறைபோல் பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகம் வரை ‘இரை மீட்கும்’ கல்வியைத்தான் எமது கல்விநெறிகள் புகட்டுகின்றன. இது தொழில்நுட்பத்துறையினருக்கு மட்டுமானதல்ல. அதி வேகமாகக் குதித்துக்கொண்டிருக்கும் நவீனங்களைச் சுவைத்துச் செரித்து விரும்பியதைக் கைப்பற்றக்கூடிய கல்வியே மாணவர்களுக்குப் புகட்டப்படவேண்டும். பழையவற்றை நினைவில் இருத்தி இரைமீட்கும் நடைமுறையால் மின்னல் வேகத்தில் நடைபெறும் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாது. ஆயிரமாயிரம் பக்கங்களை வாசித்துக் கிரகிக்கவேண்டிய தேவை வழக்காடிகளுக்கு இனிமேல் தேவையில்லை. பொறியியலாளர்களும் கட்டடக்கலைஞர்களும் இனிமேல் செயற்கை விவேகப் பொறிமுறைகளையே தமது தேவைகளுக்குப் பயன்படுத்துவார்கள். இரைமீட்கும் கல்விமுறைக்குப் பழகிப்போன மாணவர்களைப் புதிய தொழில்நுட்பங்கள் தேவையற்றவர்களாக்கிவிடும்.
வடக்குப் பல்கலை, இந்தியின் ‘மஜிக்குரூப்’ (MagickGroup) நிறுவனமும் சிறீலங்கா தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் (Sri Lanka Institute of Information Technology – SLIIT) இணைந்து உருவாக்கிய ஒன்று. 1999 இல் உருவாக்கப்பட்ட SLIIT, இலங்கையில் பட்டங்களை வழங்கும் நிறுவனமாக இலங்கை அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானிய ஆணையத்தினால் (University Grants Commission – UGC) அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. இதனால் அங்கீகரிக்கப்பட்ட மாணவர்களுக்கு தொழில்நுட்பத் துறையினர் மத்தியில் மிகுந்த செல்வாக்குமுண்டு. என்னிடம் வேலைக்கு விண்ணப்பிக்கும் ஒருவரின் அறிமுகப்பத்திரத்தில் SLIIT இன் பெயர் இருந்தால் அதை நான் முனைப்புடன் கையாள்வேன்.
வடமாகாணத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலுமுள்ள பாடசாலைகளில் கல்வி கற்று க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அதியுச்ச புள்ளிகளைப்பெற்ற தலா மூன்று மாணவர்களுக்கு வடக்குப் பல்கலைக்கழகம் (NU) தனது ‘YES Fund’ (Yarl Education Fund) நிதியத்தின் மூலம் மொத்தம் 5 புலமைப் பரிசில்களை வழங்குகிறது. பழமை பேணும் யாழ்ப்பாணத்துப் பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைகளைக் கொழும்பு போன்ற தூர நகரங்களுக்கு அனுப்பத் தயங்குகிறார்கள். வடக்குப் பல்கலை போன்ற பல்கலைக் கழகங்களிற்குச் செல்லும் இப்படியான மாணவர்கள் மாலையில் வீடு திரும்ப வசதியாகவிருக்கும். அம்மாவின் சமையலுக்கும் ஆடைச்சலவைக்கும் அம்மாவைச் சுற்றிவரும் யாழ்ப்பாணத்திலுள்ள ஆண் மாணவர்களுக்கும் NU மிகவும் வசதியானது.

யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் பல தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து பயிற்சிப் பணியாளர்களைப் (Interns) பெறுவதற்கென NU இந்நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. ராஜன் பாலாவின் தலைமையில் இயங்கும் புலம்பெயர் வலையமைப்பின் உதவியுடன் யாழ்ப்பாணத்து நிறுவனங்களுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம், இருதரப்பும் பரஸ்பர பலன் பெறுநர்களாக இருக்க முடிகிறது.
SLIIT ஒரு நாடு தழுவிய நிறுவனமாக இருப்பதால் தொழில்துறையுடன் நெருக்கமான உறவுகளைப் பேணிவருகிறது. குறிப்பாக SLIIT இன் பழைய மாணவர்கள் மூலம் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் வேலைகளைப் பெற்றுக்கொடுக்கக் கூடியதாகவுள்ளது. இந்நிறுவனங்களில் எத்துறைகளில் பணியாளர் தேவை, அவற்றின் தற்கால, எதிர்காலத் தேவைகள் ஆகியவற்றை அறிந்துகொள்வதன் மூலம் NU தனது கல்வித்திட்டங்களை நெறிப்படுத்துகிறது. 2024 ஆம் ஆண்டின் முடிவில் NU செயற்கை விவேகம் (AI), றோபோட்டிக்ஸ் (Robotics) போன்ற துறைகளில் டிப்ளோமா பட்டங்களை வழங்கத் தயாராகிவிடும். SLIIT இன் கொழும்பு வளாகத்தில் இவற்றுக்கான கற்கைநெறி தற்போது செயற்பாட்டில் இருக்கிறது.
வடக்கில் இப்போது மிக முக்கிய தேவைகளில் ஒன்றாக இருப்பது வணிக முகாமைத்துவம் (Business Management – BM). வடக்குப் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் இத்துறை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. யாழ். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் பி. நிர்மலதாசன் இரண்டு வருட விடுப்பில் வந்து இத்துறையை ஸ்தாபிக்கவிருக்கிறார். விடுப்பிற்கு முன்னர் அவர் யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் வர்த்தகக் கல்விப் பிரிவின் பீடாதிபதியாகப் பணியாற்றியிருந்தார்.
வடக்கிலிருக்கும் பல தொழில் ஸ்தாபனங்களும், கூட்டுறவுச் சங்கங்களும் ஒரு வகையில் அப்பாவிகள் என்றே கூறலாம். இங்கு பணியாற்றும் பலர் திறமைகளையும், தகமைகளையும் கொண்டிருந்தாலும், அனுபவம் குறைந்தவர்களாக உள்ளனர். சிறந்த உற்பத்திகளைத் தரும் இவர்களுக்கு அவற்றைத் திறமையாகச் சந்தைப்படுத்தவோ, பண்டங்களுக்கும் சேவைகளுக்கும் சரியான விலையை நிர்ணயம் செய்யவோ, விநியோகப் பாதைகளையும் நிதித் தேவைகளையும் நிர்வகிக்கவோ ஏற்ற நிபுணத்துவம் இல்லை. தமது முழுமையான திறன்களையும் வெளிப்படுத்துமளவிற்கு வளரவோ, விரியவோ, இசைவடைவதற்கோ ஏற்ற அனுபவம் அவர்களிடம் இருப்பதில்லை. இப்படியான திறன்களையுடையவர்கள் வடக்கிலிருப்பின் அவர்கள் வடக்கிற்கு வெளியே பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களாகவோ அல்லது புலம்பெயர் நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டவர்களாகவோதான் இருக்கிறார்கள். இவ்வகையான திறமைகளைக் கொண்டிராத நிறுவனங்களால் வடக்கிற்கு அத்தியாவசியமான வேலைகளையோ, செல்வத்தையோ, பொருளாதார அபிவிருத்தியையோ கொண்டுவர முடியாது. போர்க்காலத்தில் வடக்கிலிருந்த நிறுவனங்கள் தமது எல்லைகளுக்கு அப்பால் எட்டியே பார்த்திருக்கவில்லை; வணிக முகாமைத்துவம் என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. இப்போது, இந்த நாடும் உலகமுமே அவர்களது சந்தை. உலகம் முழுவதிலுமிருந்து வியாபாரிகள் அவர்களுக்கு எதிராக சந்தையில் போட்டிக்கு வருகிறார்கள். போர்க்காலத்தில் பொருளாதாரத் தடையினால் போட்டிகளின்றி ஏகபோக சந்தையை அனுபவித்த வடக்கின் நிறுவனங்கள் இப்போது தமது சுற்றங்களில்கூட வியாபாரம் செய்ய முடியாது நொருங்கிப்போய் விட்டன. நான் சென்று பார்வையிட்ட பல உணவு, பானம் மற்றும் ஆடையுற்பத்தி நிறுவனங்களில் சில மீண்டும் முகிழ்க்க முயன்றாலும் பல ஆபத்தான நிலையிலேயே உள்ளன.
யாழ்ப்பாணம், ஊவா வெல்லஸ, வவுனியா ஆகிய பல்கலைக்கழகப் பட்டதாரிகள் வடக்குப் பல்கலையில் பணியாற்றுகிறார்கள். அரைவாசிக்கு மேற்பட்டோர் SLIIT பட்டதாரிகள்; பலர் சில வருடத் தொழில்துறை அனுபவங்களைப் பெற்றுக்கொண்ட பிறகு கற்பிக்க வந்தவர்கள். மாணவர்கள் அனைவரும் தமிழ் பேசுபவர்களாக இருந்தாலும் அனைத்துப் பாடங்களும் ஆங்கிலமொழியில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன. பிரிட்டிஷ் கவுன்சில் அங்கீகாரம் பெற்றவர்களால் ஆங்கிலக்கல்வி போதிக்கப்படுகிறது. ஒரு பட்டத்தால் திறக்கமுடியாத கதவுகளை ஆங்கில அறிவு மட்டுமே திறந்துவிடக்கூடியதாக இருக்கிறது.
பல ஏக்கர்கள் நிலப்பரப்பில் அமைந்த வளாகத்தை உருவாக்குவது முதல் பாடசாலை மாணவர்களுடன் கரம் கோர்க்கும் திட்டங்கள் வரை, நீண்ட, மத்திம, குறுகிய திட்டங்களை வடக்குப் பல்கலை வைத்திருக்கிறது. க.பொ.த. உயர்தரப் பீடங்களிலேயே வணிக முகாமைத்துவத்தைக் கற்பிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தும் எண்ணம் வடக்குப் பல்கலையிடமுண்டு. தமது எதிர்காலக் கல்வியைத் தேர்ந்தெடுக்கும் முன்னரே மாணவர்களுக்கு முன்னால் இருக்கக்கூடிய பட்டப்படிப்புக்கான தேர்வுகள் பற்றி அவர்கள் அறிந்திருக்க வேண்டும். மருத்துவம், கணக்காண்மை, பொறியியல் துறைகளுக்கும் அப்பால் பெருமை தரும், வருமானத்தை அள்ளி இறைக்கும் வேறு துறைகளும் இருக்கின்றன என்பதை பெற்றோர்களும், உறவுகளும், வரப்போகும் சம்பந்திகளும் அறிந்திருக்க வேண்டும்.
இக்கட்டுரை நவம்பர் 27, 2024 லங்கா பிசினெஸ் ஒன்லைன் பத்திரிகையில் பிரசுரமானது.