தமிழர் தாயகத்தின் கால்நடை வளர்ப்பில் பெண்களும், சந்திக்கும் சவால்களும்
Arts
14 நிமிட வாசிப்பு

தமிழர் தாயகத்தின் கால்நடை வளர்ப்பில் பெண்களும், சந்திக்கும் சவால்களும்

June 13, 2024 | Ezhuna

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதனை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

இனப் பிரச்சினையும் அதனோடு இணைந்த யுத்தமும் எமது தமிழர் தாயகப் பகுதியின் பொருளாதார வளர்ச்சியை பல தசாப்தங்களுக்கு பின்தள்ளி விட்டது. குறிப்பாக விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி போன்றவற்றை சூனிய நிலைக்கு இறக்கியிருந்தது எனலாம். இந்தப் பின்னடைவு இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் (GDP) வடக்கு, கிழக்கின் பங்களிப்பை புறக்கணிக்கும் அளவுக்கு மாற்றி இருந்தது. கொடிய யுத்தம் மரணங்களை ஏற்படுத்தியதோடு ஏராளமான அங்கவீனர்களையும் உருவாக்கியுள்ளது. அத்துடன் பல ஆயிரம் பெண் தலைமைக் குடும்பங்களையும் (women headed families) ஏற்படுத்தியுள்ளது. அங்கவீனமுற்ற ஆண் குடும்பங்களை பெண்கள்தான் தலைமை ஏற்று நடத்த வேண்டிய நிலை. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை ஏறக்குறைய ஒரு இலட்சம் விதவைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை மேற்படி பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடிய நடைமுறைச் சாத்தியமான ஒரு விடயத்தை அவர்களின் பின்புலத்துடன் ஆராய முற்படுகிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் சில சமூக, பொருளாதரக் காரணிகளையும் கூறிச் செல்கிறது.

கால்நடை வளர்ப்பில் ஆண்களைப் போல பெண்களும் தமது காத்திரமான வகிபாகத்தைச் செய்கின்றனர். இலங்கை போன்ற வளர்முக நாடுகள் ஆடு, மாடு, கோழி வளர்ப்பை பல ஆயிரம் வருடங்களாக தமது வாழ்வியலின் ஒரு பகுதியாகச் செய்வதைக் காணமுடிகிறது. பொதுவாகக் கிராமியப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இவை அமைகின்றன. இந்த விலங்கு வேளாண்மையில் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆடு, மாடு, கோழி வளர்ப்பின் பெரும்பாலான வேலைகள் பெண்களாலே செய்யப்படுகிறது. குறிப்பாக விநியோகப்படுத்தல் போன்ற ஒரு சில வேலைகளைத் தவிர ஏனைய பெரும்பாலான வேலைகளை பெண்களே செய்கின்றனர்.

ஆணாதிக்கச் சமூகத்தை கொண்ட பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளில் ஆண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிப்பவர்களாகவும், பெண்கள் குழந்தை வளர்ப்பவர்களாகவும் கால்நடைகளைப் பராமரிப்பவர்களாகவும் இருப்பதைக் காணமுடிகிறது. உலகமயமாதலும் அதனுடன் அமைந்த கைத்தொழில் புரட்சியும் பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை ஓரளவு உருவாக்கிய போதும் அவை பெரும்பாலும் நகரங்களில்தான் சாத்தியமாகி இருக்கிறது. குறிப்பாக ஆடைத் தொழிற்சாலைகள் இந்த வாய்ப்புகளை வழங்குகின்றன. ஓரளவு அரச துறையிலும் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. எனினும் பெரும்பாலான கிராமங்களில் பெண்கள் இன்னும் வீடுகளில் இருப்பதும் ஆடு, மாடு போன்றவற்றை பராமரிப்பதையும் காணமுடிகிறது. இதுதான் பெரும்பாலான வடக்கு, கிழக்குக் கிராமங்களின் இன்றைய நிலையும் கூட. எனவே அவர்கள் சாதாரணமாகச் செய்யும் இந்தக் கால்நடை வளர்ப்பை மெருகூட்டிச் சிறப்புறச் செய்தால், மிகச் சிறந்த வருமானத்தை அவர்களால் பெற முடியும்.

பெரும்பாலான ஆடு, கோழி போன்ற சிறிய கால்நடைகள் பெண்களின் கட்டுப்பாட்டில்தான் வளர்க்கப்படுகின்றன. எனினும் மாடு, எருமை போன்ற பெரிய கால்நடைகள் ஆண், பெண் இரு பாலராலும் இணைந்தே பராமரிக்கப்படுகின்றன. எனினும் மாடு, எருமை வளர்ப்பில் பால் கறத்தல், பால் உற்பத்திகளைச் செய்தல், தொழுவப் பராமரிப்பு, கால்நடைகளுக்கான உணவூட்டல் போன்றவற்றை பெண்களே செய்கின்றனர். கோழி வளர்ப்பில் தீவனக் கையாளுகை, முட்டைகளைச் சேகரித்தல், அவற்றை அடை வைத்துக் குஞ்சு பொரித்தல் போன்ற செயன்முறைகளைப் பெண்களே  செய்யும் அதேவேளை, விற்றல் – வாங்கல் நடைமுறைகளும் பெண்களால் மேற்கொள்ளப்படுகின்றன. ஆடு வளர்ப்பில் அதிகளவு வேலைகளைப் பெண்களே செய்யும் அதேவேளை, விற்றல் – வாங்கல் செயன்முறைகள் ஆண்களை நம்பித்தான் பெரும்பாலும் நடைபெறுகிறது.

அதாவது குறிப்பாக வீடுகளுக்கு மிக அண்மையில் வளர்க்கக் கூடிய கோழி, ஆடு, செம்மறி ஆடு, கன்றுக் குட்டிகளை பெண்கள் கையாளுகின்றனர். வீட்டில் இருந்து தொலைவில் நடைபெறும், கால்நடைகளை விற்கும் – வாங்கும் விடயங்களுக்கு ஆண் துணை தேவைப்படுகிறது. 

பெரும்பாலான கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பெண்களுக்கு தொழில்நுட்பப் பின்புலம் மிக மிகக் குறைவாகக் காணப்படுகிறது. அவர்கள் வீட்டுச் சூழலை விட்டு அதிகம் வெளியே செல்வது குறைவு என்பதால் இந்த நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் சிறந்த பண்ணைகளை, புதிய தொழில்நுட்ப மாற்றத்தைக் காண்பது அரிது. அவர்களுக்குச் சிறப்பான தொழில்நுட்ப அறிவுக்கான பயிற்சிகளை, ஆலோசனைகளை வழங்கும் பட்சத்தில் அவர்களால்:  

  • பண்ணையின் உற்பத்தித் திறனை (productivity) அதிகரிக்க முடியும்.
  • அதிகரித்த வருமானம் மூலம் குடும்ப வறுமையைக் குறைக்க முடியும்.
  • குடும்ப உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.
  • கிராமிய நலன்கள் – குறிப்பாக பெண்கள், குழந்தைகளின் நலன்கள் மேம்படும்.
  • பெண்களின் குடும்பத்தை தாங்கும் வலுக் கூடும்/உறுதியடையும்.
  • முடிவு எடுக்கும் ஆற்றல் வலுப்படும்.
  • குடும்பத்துக்கு மேலதிக வருமானம் கிடைக்கும்.

கால்நடை வளர்ப்பு நிரந்தரமானது. வருடம் முழுதும் வருமானத்தைத் தொடர்ச்சியாகத் தர வல்லது. அவர்கள் சரியாக வழிநடத்தப்படும் பட்சத்தில் மிகச் சிறந்த வருமானத்தை தொடர்ச்சியாகப் பெற முடியும்.

இலங்கையைப் பொறுத்தவரை உள்ளூர்ப் பால் உற்பத்தி மிக மிகக் குறைவு. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாவையே அதிகம் நம்பி இருக்கும் நிலை இங்கு உள்ளது. எமக்கு அண்மைய நாடான இந்தியாவில் பால் மாவினை விட, திரவப் பால் பாவனையே அதிகம் காணப்படுகிறது. திரவப் பால் ஆரோக்கியமானது. உண்மையில் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் அதனை நடைமுறைப்படுத்துவதும் மிக இலகுவானது. இலங்கை மக்கள் பொதுவாக கோழி இறைச்சியை அதிகம் உண்ணும் அதேவேளை, தமிழ் பகுதிகளில் குறிப்பாக யாழ். குடாநாட்டில் ஆட்டிறைச்சியை அதிகம் விரும்பி உண்ணும் நிலை உள்ளது. கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு என்பனவற்றில் பெண்களின் பங்களிப்பு அதிகம் என்பதால் அவர்களுக்குச் சிறந்த பின்புலத்தை வழங்கும் பட்சத்தில், சிறந்த பிரதிபலனைப் பெற முடியும். இறக்குமதி செய்யும் பால் மாவிற்கான செலவைக் கணிசமாகக் குறைக்கலாம். இன்றைய பொருளாதார நெருக்கடியில் மக்களின் போசணைத் தேவைகளை நிறைவு செய்ய உள்நாட்டுக் கால்நடை உற்பத்தி மிக அவசியம். அதனை, அதிகளவு பெண்களின் ஈடுபாட்டுடன் அதிகரிக்க முடியும்.

இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு இலங்கையில் ஏராளமான திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. இதில் அரச மற்றும் தனியார் அமைப்புகள் பங்கு பெறுகின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு:

  • நல்லினக் கால்நடைகள் வழங்குதல்.
  • கால்நடை வாளர்ப்புக்கான உயர் உற்பத்திகளைப் பெறுவதற்கான தொழில்நுட்ப அறிவுரைகளை வழங்குதல், பயிற்சி வகுப்புகள் – விரிவுரைகள் நடத்துதல், கால்நடை வளர்ப்புடன் தொடர்புடைய புத்தகங்கள் வழங்குதல்.   
  • செயற்கைமுறைச் சினைப்படுத்தல், நோய்த் தடுப்பு முறைகள் – சிகிச்சை     முறைகளை வழங்குதல், தடையின்றிய மிருக வைத்திய சேவையை வழங்குதல்.
  • கால்நடைகளை வளர்ப்பதற்கான கூடுகள், கொட்டகைகளை இலவசமாக மற்றும் மானியமாக வழங்குதல்.
  • இலகு தவணைக் கடன்களை வழங்குதல்.
  • புதிய தொழில்நுட்ப மற்றும் சிறந்த பண்ணைகளுக்கு அவர்களை அழைத்துச் சென்று காட்டுதல்.

போன்றவற்றைச் செய்ய வேண்டும்.

மேற்கூறிய  நடைமுறைகள் அரச, மற்றும் தனியார் அமைப்புகளால் திணைக்களங்களால் தற்போது ஓரளவுக்கு மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, பெண் தலைமைக் குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன. எனினும் எமது சமூகத்தில் கால்நடை வளர்ப்பு தொடர்பான பாரம்பரிய நம்பிக்கைகள், அண்மைக் காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு முட்டுக்கட்டைகளைப் போடுகின்றன. அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கலால் மேற்படி உதவிகள் கணிசமாகக் குறைவடைந்துள்ளன. இந்த நிலையில், புலம்பெயர் அமைப்புகள் இந்த விடயத்தை கரிசனையுடன் அணுகி, மக்களின் முயற்சியைத் தோல்வியடைய விடாமல், உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும்.

கால்நடைகளுக்கு ஏற்படும் கால்வாய் நோய் போன்ற உயிர்கொல்லி நோய் நிலைமைகளை பெண்களால் தனியாகச் சமாளிக்க முடியாது. வெள்ளம், அதிக குளிர் போன்ற இயற்கை அனர்த்தங்களிலும் அவர்களுக்கு மிகவும் உறுதியான துணை தேவைப்படுகிறது. மேலும், மேய்ச்சல் நிலத்தின் பற்றாக்குறை காரணமாக நீண்ட தூரத்துக்கு கால்நடைகளை கொண்டு செல்ல வேண்டியும் ஏற்படுகிறது. இது கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பெண்களுக்குச் சவாலானது. சில வாழ்வாதார உதவிகள் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே நிலைத்திருக்கும். எனினும் கால்நடை வளர்ப்புக்குச் செய்யும் உதவிகள் நீண்ட காலத்துக்கு நிலைக்கும். புலம்பெயர் உறவுகள் இங்கு வாழும் மக்களுக்கு இது போன்ற உதவிகளைச் செய்வது, இந்த மக்கள் தமது சொந்தக் காலில் நிற்க வழி செய்யும்.

மிகச் சிறந்த தீவன மேலாண்மையை அவர்களுக்குச் சிபாரிசு செய்வது, புல் வளர்ப்பு – உள்ளக மற்றும் அரை உள்ளக வளர்ப்புக்கு ஏற்ற கால்நடைகளை வழங்குதல் போன்ற செயன்முறைகளை அவர்களுக்குச் செய்வதன் மூலம் மேலே கூறப்பட்ட சில பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். 

பெரும்பாலான பொருளாதாரச் சிக்கல்களை உடனடியாக முற்றாகத் தீர்க்க முடியாது. எனினும் சிறந்த திட்டங்களைச் சரியாக நடைமுறைப்படுத்துவதன் மூலம், இதன் பாதிப்புகளைப் படிப்படியாகச் சரி செய்ய முடியும். பெண் தலைமைக் குடும்பங்கள், முன்னாள் போராளிப் பெண்கள் என விசேட கவனிப்புத் தேவைப்படும் பெண்கள் எம் சமூகத்தில் இருக்கிறபடியால், அவர்களைக் கை கொடுத்து தூக்கிவிடும் பொறுப்பு அரசாங்கத்திற்கு மட்டுமல்லாது சமூகத்தில் வாழும் ஏனையவர்களுக்கும் உண்டு. அவர்கள் பலமடைந்தால் அவர்களின் முடிவெடுக்கும் வலு அதிகரிக்கும். மேற்படி, பெண்களின்  வலுவையும் இயலுமையையும் சரியாகப் பயன்படுத்தி, அவர்களுக்குச் சரியான வாய்ப்புகளை வழங்கும் போது, அவர்கள் முன்னேறுவதோடு எமது சமூகமும் தன்னிறைவு பெறும்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க


About the Author

சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்